Thursday, February 21, 2013

அமிழ்தினினும் இனிய தமிழ்- சர்வதேசத் தாய்மொழி தினம்..!

                               
ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி இருக்கிறது. அதனை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது. இளம் பருவத்தில் கல்வி என்பது தாய்மொழியில் இருந்துதான் தொடங்க வேண்டும். கல்வி என்பது வெறும் படிப்பு இல்லை. அது பண்பாடு, கலாசாரம், நாகரிகம், கலைஇலக்கியம், தத்துவம், இசை, நாட்டியம் என்று பலவற்றோடும் தொடர்பு கொண்டது. அதனைத் தாய்மொழி மூலமாகத்தான் எளிதாக அறிந்துகொள்ள முடியும். எனவே, ஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் சர்வதேசத் தாய்மொழி தினத்தின் முக்கியமான நோக்கம்.

ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள், ஒருவருக்கு தெரிந்திருந்தால், எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும், என அறிஞர்கள் கூறுவர். ஆனால், தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால், இனவாதம் துவங்கியது, துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது."ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்' இத்தினம் வலியுறுத்துகிறது
 தமிழின் சிறப்புகளில் சில: 

 • உலகின் பழைய மொழிகள் ஏழு. அதில் இப்போதும் வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். அதில் ஒன்று தமிழ்.

• இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன. 

• இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. 

• தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன. இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது.

• திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந்தையது. ஆனால், அதில் உள்ள சொற்களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். 
உதாரணம்: ‘எப்பொருள் யார்யார்வாக் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’ 

‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்’

• தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன.

• கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத்தில் பத்து கோடி, நூறு கோடி என்றுதான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).

• தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்-இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் -மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுலவெபில் கருதுகிறார்.

• வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த-வல்லினம், மி- மெல்லினம், ழ்- இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. உலகில் பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது.

• இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.

• உலகில் நான்கு நாடுகளில் தமிழ் அரசின் அலுவல் மொழியாக இருக்கிறது.


டிஸ்கி: அவசர. அவசரமா ஃபேஸ்புக்குல சுட்டது.., இன்னிக்கு மதியம் ஃபேஸ்புக்குல உலாவும்போதுதான் இன்று ”சர்வதேச தாய் மொழி தினம்” ன்னு தெரியும்.முதல்லியே தெரிஞ்சிருந்தா எப்படி தமிழை கொலையா கொண்ணேன்னு பதிவு போட்டிருப்பேன்.

6 comments:

  1. உண்மையை மறைக்காமல் சொல்ல வைப்பதும் தமிழின் சிறப்பு...!

    ReplyDelete
  2. தமிழின் பெருமை அருமையாக .சொன்னிர்கள் . நன்றி

    ReplyDelete
  3. ”சர்வதேச தாய் மொழி தினம் வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. தமிழின் சிறப்பான ‘ழ’ --எத்தனை பேருக்கு உச்சரிக்க வருகிறது.ஒலி ஒளி ஊடகங்களில் ல,ள,ழ,குழப்பங்கள் கர்ண கடூரமாக ஒலிக்கின்றன அம்மா!

    ReplyDelete
  5. தமிழன் என்று சொல்லுவோம் தமிழை காப்போம் நல்ல பதிவு

    ReplyDelete