Wednesday, September 07, 2016

இராமருக்கு முன்னால் தசரத மகாராஜாவுக்கு வேறு குழந்தைகள் இருந்ததா-தெரிந்த கதை தெரியாத உண்மை

நம்முடைய தெரிந்த  கதை தெரியாத, உண்மையில் இன்று நமக்கு தெரியாத ஆனால், செவிவழியாக சொல்லப்பட்ட இராமாயணத்தின் சில கிளைகக்தைகளை பற்றி பார்க்கபோகிறோம். நம்முடைய வழக்கத்தில்  300 வகையான இராமாயணம் இருக்கிறது. ஆனால் இராமாயணம் முதன்முதலில் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டது. அதில் ஒரு மனிதன் தன் வாழ்வில் எப்படி வாழவேண்டும்?! எப்படியெல்லாம் வாழக்கூடாது என்று பல சம்பவங்களை எடுத்துக்காட்டி  நம்முடைய கலாச்சரத்தின் மையக்கருத்தை பிரதிபலிக்கும் ஒரு நூலாகவே இராமாயணம் இருந்து வந்துள்ளது. அப்படிப்பட்ட இராமாயணத்தில் காலபோக்கில் மறந்துவிட்ட அல்லது மறைக்கப்பட்ட சில கிளைக்கதைகள் பல வழக்கத்தில் இல்லாமலே போய்விட்டதன் காரணம் எல்லாம் செவிவழி கதைகளாய் இருந்ததினால்தான்!  அப்படிப்பட்ட ஒரு சுவாரஷ்யமான கதையைத்தான் நாம இப்ப பார்க்க போகிறோம் ....,
தசரத மகாராஜாவின் கதை பழம்பெரும் நகரமான அயோத்தியில் இருந்து தொடங்குகிறது. தசரத மன்னரால் ஆளப்பட்டு வந்த நாட்டின் அழகிய தலைநகர் புனித நதியான சரயுவின் கரையில் அமைந்திருந்தது. வரிசையான மரங்கள் அமைந்த தெருக்கள், திறமை வாய்ந்த கைவினைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் நிறைந்திருந்த சந்தைகள் என ஒரு ரம்மியாமான நகரம் அது. தசரத மகாராஜா கருணை மற்றும் ஈகை நிறைந்த தாராள மனமுடைய மன்னனாக திகழ்ந்தார். அவருடைய நாட்டு மக்கள் அவரை மிகவும் நேசித்ததுடன் அவரின் ராஜ்ஜியம் வளமையுடன் திகழ்ந்தது. அவருக்கு அன்பும், அழகும் நிறைந்த மூன்று மனைவிகள் இருந்தனர். அந்நகரம் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு அறிவை வளர்க்கவும், பகிரவும் விருப்பமுள்ள கல்வியாளர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையமாகவும் திகழ்ந்தது. அயோத்தியில் வாழ்ந்த மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையுணர்வுடனும் வாழ்ந்தனர். வளமையான பூமியும், செழிப்பான விளைச்சலையும் தரும் நிலங்களைக் கொண்ட நகரம் அது. அயோத்தியின் மக்கள் பசி அறிந்திராதவர்களாக இருந்தனர். மொத்தத்தில் அது ஒரு மகிழ்ச்சி நிறைந்த சொர்க்கம் என்றே சொல்லலாம்.
நம்ம எல்லோருக்கும் தெரியும் தசரத மகாராஜாவுக்கு, இராமர்,பரதன், லட்சுமணன், சத்ருக்னன் என நான்கு மகன்கள் உண்டென. ஆனால், இராமருக்கு முன்னால் தசரத மகராஜாவுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது என்பதுதான் நம்மில் பலருக்கும் தெரியாத ஆச்சர்யமான விஷயம். மனைவியரான கோசலை(கௌசல்யா),கைகேகி ,சுமித்திரை அதில் தசரத மகாராஜாவுக்கும் முதல் மனைவி கோசலைக்கும் பிறந்த சந்தா என்ற மகள் உண்டு . இதில் கோசலையின் மூத்த சகோதரியின் பெயர் வர்ஷினி. அவரது கணவர் அங்கதேசத்து மகாராஜாவான ராஜா ரோமபாதன், இவரும் தசரத மகாராஜாவும் பால்யம் தொட்டே நண்பர்கள். காரணம்,  ஒரே குருகுலத்தில் ஒன்றாக கல்வி பயின்றவர்கள். ராஜா ரோமபாதன்-வர்ஷினி தம்பதியினருக்கு மக்கட்பேறு இல்லை. அப்படி இருக்கையில் ஒருமுறை தசரத மகாராஜாவை இருவரும் பார்க்கவந்திருந்தனர்.  அந்த சமயத்தில்   அயோத்யாவில் தசரதனுடைய அரண்மனையில் வர்ஷினி அவருடன் உரையாடிகொண்டுருக்கும் போது விளையாட்டாக தசரதருடைய குழந்தையை  ஸ்வீகரமாக கேட்டாள். உடனே, தசரதரும் தன்னுடைய மகள் சந்தாவை  ரகுகுல வாரிசாகவே தத்தெடுத்து வளர்த்துக்கொள்  என ராஜா ரோமபாதன் -வர்ஷினி தம்பதியினருக்கு தன மகள் சந்தாவை தத்து கொடுத்தார்.
நாட்கள் மெல்லமெல்ல நகர்ந்துக்கொண்டு இருந்தன. சந்தாவும் அழகிய ராஜக்குமாரியாக வளர்ந்து வந்தாள். ஒருநாள்  ராஜா ரோமபாதன் அரண்மனையில் வீற்றிருக்கும்போது, ஒரு ஏழை அந்தணன் பருவமழை பொய்த்து இருந்ததால் விவசாயம் செய்யமுடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்ததால் அவன் ராஜாவை சந்தித்து உதவிப்பெற்று செல்லலாம் என வந்திருந்தான். அப்பொழுது ராஜா ரோமபாதன் தன்னுடைய வளர்ப்பு மகள் சந்தாவுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அதனால்  அவர் அந்தணனை கவனிக்காமல் அந்த அந்தணனை அலட்சியம் செய்தார். அந்த அந்தணனும் மனவேதனைக் கொண்டு அங்கிருந்து  தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சென்று முறையிட்டு என்னை அவமதித்த இந்த மன்னனுடைய நாட்டில் இருக்கமாட்டேன் என்று மனவேதனையுடன் அங்கதேசத்தை விட்டு சென்றுவிட்டான். 

தன்னுடைய பக்தனை ராஜா அவமதித்தால் தேவர்களின் தலைவனான இந்திரன் ராஜாவின் மீது கோபப்பட்டு அவரை தண்டிக்க முடிவு செய்து இனி உன் ராஜ்யத்தில் எந்த சமயத்திலும் மழை பெய்யாமல் இருக்கக்கடவது என சாபம் இட்டுவிட்டார். மழை பெய்யாததால் நாட்டில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பசியும் பட்டினியுமாக அவதியுற்றனர். மன்னனும் மழைக்காக என்னவெல்லாமோ செய்து பார்த்தான். ஆனால் அவனால் அந்த சாபத்திலிருந்து மீள முடியவில்லை.
இந்த சமயத்தில்தான் ரிஷ்யசிருங்கர் என்ற முனிக்குமாரன் இருந்தார் .இவரது காலடி எங்கு பட்டாலும் அந்த இடமெல்லாம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும்  என்று கேள்விப்பட்ட ராஜா, காட்டில் இருக்கும் அவரை நாட்டுக்கு எப்படியாவது அழைத்து வந்துவிடவேண்டும் என்று முயற்சி செய்தார். இவரது வரலாற்றை வால்மீகி முனிவர் சுவைப்படச் சொல்லியிருக்கிறார். யாக, ஹோம காரியங்களில் மிக மிக சிறந்தவர். விபண்டகர் என்ற முனிவர் மகாகீர்த்திமான். இவரது புதல்வன்தான் ரிஷ்யசிருங்கர்.  

பிறந்தது முதல் தனது ஆசிரமத்திலேயே வளர்ந்து வந்த இவர் தனது தாய் முகம் பார்த்தது இல்லை, அவரது தந்தைதான் அவரை வளர்த்து வந்தார். அவரது நண்பர்களெல்லாம் காட்டில் வசிக்கும் சிங்கம், புலி, கரடி, மான்கள், மற்ற விலங்குகள் மட்டுமே. இதைத்தவிர வேறு எந்த உலகப் பொருளும் அவருக்கு தெரியாது தனது தந்தையைத் தவிர பிற மனித முகங்களை அவர் பார்த்ததே இல்லை.. தந்தைக்கு சேவை செய்வது மட்டுமே இவரது பணி.ரிஷ்யசிருங்கருக்கு யாகம், ஹோம முறைகளை  அவரது தந்தை கற்று கொடுத்தார்.  தந்தை கொடுக்கும் கனிவகைகள், எப்போதாவது தயாரிக்கும் பட்சண வகைகளைத் தவிர வேறு எந்த உணவையும் பற்றி தெரியாதவர். ஆசை என்ற சொல்லையே அறியாதவர். எனவே, பாவங்கள் செய்ய வழியே இல்லாத உத்தமராக இருந்தார். இப்படிப்பட்ட அப்பழுக்கற்றவரின் காலடிபட்டாலே போதும். வானம் பொத்துக் கொண்டு ஊற்றும்.
ஆனால், அங்கதேசத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, பத்தாண்டுகள் மழை தொடர்ந்து பொய்த்து விட்டது. குளங்களில் தேக்கி வைத்த தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தியும் வற்றி விட்டது. மக்கள் இடம் பெயர முடிவெடுத்தனர். ராஜா ரோமபாதன் என்னவெல்லாமோ யாகங்கள் நடத்திப் பார்த்தான். வருண பகவான் மசியவில்லை. நாட்டுமக்கள் வேதனையுருவதை கண்ட மன்னன், மழை பெய்ய வைக்க பூஜைகள் நடத்த முடிவுசெய்தான். அவ்வூரில் மிகச்சிறந்த பிராமணர்களையும், வேத விற்பன்னர்களையும் அழைத்து ஆலோசித்தான். அவர்கள் ரிஷ்யசிருங்கர் பற்றி தாங்கள் கேள்விப்பட்டதைக் கூறினர். அந்த மகான் நம் ஊருக்குள் நுழைந்தாலே, மழை கொட்டிவிடும். ஆனால், அதற்காக ஒரு பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்றனர். மழைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யகூடிய மனநிலையில் மன்னன் இருந்தான்.
மன்னா,  ரிஷ்ய சிருங்கரை எப்படியாவது  அழைத்து வருவது எங்கள் பொறுப்பு. ஆனால், அவருக்கு உங்கள் மகள் சந்தாவை கன்னிகாதானம் செய்து தர வேண்டும். சம்மதமா? என்றனர். காட்டுவாசியாக இதுவரை காலம் கழித்த முனிவருக்கு பெண் கொடுக்க எனக்கு எப்படி மனம் வரும்? அதிலும் நாட்டின் இளவரசியை மணம் செய்து கொடுப்பதென்றால் என்றெல்லாம் யோசித்த மன்னன் நாட்டு மக்களின் சுகம் தான் முக்கியம். என் குடும்ப சுகம் அதற்கு பிறகு, தான் சந்தாவை உறுதியாக முனிவருக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று, தசரத மன்னனை கலந்து ஆலோசித்தபின் அவர்களுக்கு சத்தியம் செய்தான் அரசன்.
இதன்பிறகு, முனிக்குமாரனை  அழைத்து வருவது என்ற சிக்கல் ஏற்பட்டது. பிற மனித முகங்களையே கண்டறியாத அந்த முனிக்குமாரன், தாங்கள் போய் அழைத்தால் வரமாட்டார் என அமைச்சர்களுக்கு தோன்றியது.. பிராமணர்களும் அவரை அழைத்து வரத் தயங்கினர். இவ்வுலகில் பெண்ணால் ஆகாதது எதுவுமில்லை. எனவே தாசிகளை அனுப்பி அவரை மயக்கி அழைத்து வருவதென்று முடிவு செய்யப்பட்டது. தாசிகள் காட்டிற்கு அனுப்பப்பட்டனர்,சந்தனம், அகில், வாசனைத் திரவியங்கள் பூசி, அலங்காரம் செய்து, மனதை மயக்கும் அழகுடன்,அந்நாட்டிலேயே மிகச்சிறந்த தாசிப் பெண்கள் காட்டிற்கு சென்றனர். அவர்கள் விதவிதமான பட்சணங்களையும் தயாரித்திருந்தனர்.காட்டிற்கு சென்ற தாசிகள் ரிஷ்யசிருங்கரின் தந்தை எங்காவது வெளியே போகட்டும் என காத்திருந்தனர்.அவர்கள் நினைத்தது போலவே, விபண்டகர் வெளியே சென்ற சமயம் அந்தப் பெண்கள் இதுதான் சமயமென்று ஆசிரமத்திற்குள் சென்று, முனிக்குமாரனை பணிவாக வணங்கினர்.
ரிஷ்யசிருங்கருக்கு ஆச்சரியம் உலகத்தில் இத்தனை அழகான ஜீவன்கள் இருக்கிறதா?! இவையெல்லாம் நம்மைப் போல் இல்லையே! கண், காது, மூக்கு, கை, கால்கள் அப்படியே இருக்கிறது. ஆனால், உடை மாறியிருக்கிறது. இன்னும் சில வேற்றுமைகள் தென்படுகின்றன. இவர்கள் உடலில் நறுமணம் கமழ்கிறது என ஆச்சரியப்பட்டார். அப்பெண்களை அவர் உபசரித்தார். ஆசிரமத்திலுள்ள கனிகள், கிழங்குகளைக் கொடுத்தார். அப்பெண்களும் பதிலுக்கு தாங்கள் கொண்டு வந்த பட்சணங்களைக் கொடுத்து சாப்பிடும்படி வேண்டினர். அவர் சாப்பிட்டுப் பார்த்தார். தினமும் ஒரே வகையான பழமும், கிழங்கும் தின்றவருக்கு இந்த பட்சணங்கள் தேனாய் சுவைத்தன. ருசியோ ருசி.

தன்னை மறந்த நிலையில் இருந்த சிருங்கரிடம், முனிக்குமாரனே  தாங்கள் எங்களுடன் எங்கள் ஆசிரமத்திற்கு வந்தால், வித விதமான பட்சணங்கள் கிடைக்கும் என்றனர். ரிஷ்யசிருங்கர் ஒரு வித்தியாசமான உலகம் எங்கோ இருப்பதைப் புரிந்து கொண்டார். தந்தை வரும் முன் கிளம்புவது உசிதமென அப்பெண்கள் தூபம் போட, அவர் அங்கதேசத்துக்கு கிளம்பினார். அந்நாட்டு எல்லையில் நுழைந்தாரோ, இல்லையோ, மழை ஊற்றித் தள்ளியது. பத்து ஆண்டுகளாக தலைமறைவான மழை, ஒரே நாளில் கொட்டி தீர்த்து விட்டது.
அந்நாட்டு மக்களும், மன்னனும் மகிழ்ச்சியுற்றனர். மன்னன் தன் மகள் சந்தாவை  ரிஷ்யசிருங்கருக்கு மனம் முடித்து வைத்தான். நீண்ட நாட்களாக முனிக்குமாரன் அந்நாட்டில் தங்கிருந்தார். அந்நாடும் செழித்திருந்தது. சந்தாவை தத்து கொடுத்தப்பிறகு தசரத மகாராஜாவுக்கு வாரிசுகளே பிறக்கவில்லை. அதன்பிறகு, தசரதமகராஜா ரிஷ்யசிருங்கவிடம் தனக்கு வாரிசு பிறக்கவேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வேண்டினார். யாகத்தில் ரிஷ்ய சிருங்கர் பிரதான ஆஹுதி செய்தார். அதன்பயனாக, பிரம்மதூதன் தோன்றியதும், திவ்யபாயஸம் வழங்கியதும், புத்திர பாக்யம் பெற்றதும், இராம, லட்சுமண, பரத, சத்ருக்கனன் ஆகிய நால்வர் அவதரித்ததும் இராமாயண காவியம் தெரிவிக்கிற செய்திகளாகும். இனி, வேறொரு சுவாரஷ்யமான கதையை நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில் அடுத்தவாரம் பார்க்கலாம் .


9 comments:

  1. இந்தக் கதை ராஜாஜி எழுதிய மஹா பாரதம் புத்தகத்திலே
    இருக்குங்க.

    பார்க்கப்போனா, மெயின் கதையைக் காட்டிலும் உப கதைகளுக்கு சுவாரசியம் அதிகம்.

    சரி.
    இந்த மாதிரி வாரத்துக்கு ஒரு உப கதையா எழுதுங்க.

    உங்க எழுத்து பாணி நன்றாக இருக்கிறது.
    மொத்தமா ஒரு அம்பது எழுதிய உடனே ஒரு புத்தகம் வெளியிடுங்க.

    அடுத்த பதிவர் மா நாட்டிலே வெளியிட்டு விழா வெச்சுடலாம் .

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  2. முன்பு,வாரம்தோறும்,ஒரு கதை என எழுதிவந்தேன்இ.டையில் சிறிது நேரமின்மையால் எழுத முடியவில்லை.இனி தொடந்து வரும்.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ..ஐயா ...

    ReplyDelete
  3. நன்றிங்க சகோ ..உங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் .

    ReplyDelete
  4. சுவாரஸ்யம்.....

    பல உபகதைகள் மஹாபாரதத்தில் உண்டு. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிறைய உபகதைகள் உண்டு ,அவையெல்லாமே செவிவழி கதையாக ,மட்டுமே ,பேசப்பட்டு ,அழிந்துவிட்டன.அவைகளை மீண்டும் ,நம்மக்கள் முன்பு ,கொண்டுவருவதே இந்த பதிவின் நோக்கம் அண்ணா.ஏற்கனவே நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில் வெளிவந்த ,மயில்இராவணன் கதைகூட இப்படித்தான் ,செவிவழியாக கேட்கப்பட்ட கதை ..சுவாரஸ்யம் தொடரும் ..வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் ..நன்றி அண்ணா .

      Delete
  5. அருமை.
    இனி தொடரும் என கேட்டவுடன் மகிழ்ச்சி. படங்கள் எல்லாம் விஜய் தொலைக்காட்சியில் வரும் இராமயாண தொடர் படமா?

    ReplyDelete
  6. உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ...படங்கள் சில,வைசாலி என்ற மலையாள படத்தில் இருந்து எடுக்கப்பட்டவை...உங்கள் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
  7. படித்த கதைதான். மீண்டும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ,உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ,

      Delete