புதன், செப்டம்பர் 14, 2016

கணவனால் கல்லாக சபிக்கப்பட்ட அகல்யா தேவி--தெரிந்தகதை தெரியாத உண்மை

இராமாயணத்தில் கணவனால் கல்லாக சபிக்கப்பட்ட அகல்யாதேவியின் கதையைத்தான் இன்று, தெரிந்த உண்மை தெரியாத கதையில் பார்க்கபோகிறோம்,தேவேந்திரன் எப்பொழுதும் சூழ்ச்சியின் வடிவானவன்,குறுக்கு வழியில் சக்திகளை அடைய ,அவன் முயற்சிசெய்வதால், பலமுறை பல முனிவர்களாலும்,தெய்வங்களாலும் சாபத்திற்கு உள்ளானவன். இதேபோல் ஒருசம்பவம் தான் அகல்யையின் வாழ்க்கையிலும் நடந்தது .அகல்யை ஏன் தேவேந்திரனால் ஏமாற்றபட்டார், இதனால் அகல்யை ஏன் .அவரது கணவர் கௌதம முனிவரால் கல்லாக சபிக்கப்பட்டார். என்பதில், உள்ள சூட்சுமங்களை தெரிந்து கொள்ள அறிவு மற்றும் ஆன்மீக சிந்தனையுள்ள இராமயணம் என்ற மகா காவியத்தை சிறிது பார்க்கலாம்,
இராம ,லக்ஷ்மண,மற்றும் விஸ்வாமித்திர முனிவர் ஆகிய மூவரும் ,யாகங்களை எல்லாம் வெற்றிகரமாய் முடித்துவிட்டு, செல்லும் வழியில் ,விசால நகரத்தில் ஒரு நாள் தங்கி, அடுத்த நாள் விடியற்காலை மிதிலை நோக்கிச் சென்றார்கள். அப்படி செல்கையில் ,ஜனகராஜனுடைய நகரத்துக்குக் கொஞ்ச தூரம் முன்பாக , மிக ரம்மியமான ஓர் ஆசிரமத்தைக் கண்டார்கள். முனிவர்களோ இல்லை ரிஷி பத்தினிகளோ ,வேறு யாருமே இல்லாமல், தனியாக  காணப்படும் இந்தப் புராதன ஆசிரமம் யாருடையது? ஏன் இந்த அழகான ஆசிரமம்ஆளே இல்லாமல் தனிமையாக இருக்கிறது,என மனதில் சிந்தித்துக்கொண்டே, வந்த இராமர், அங்கே ஒரு வித்தியாசமான ,கல்லை கண்டார். உடனே, விஸ்வாமித்திரரிடம், குருவே இந்த ஆஸ்ரமத்தில் அனைத்தும் தனித்தனியே பராமரிப்பில்லாமல் இருகிறதே,ஆனால், இந்த கல்லில் மட்டும் எப்படி தெய்வீக தன்மையுடன் ஒரு துளசி செடி முளைத்து  இருக்கிறது. இந்த கல்லில் தண்ணீர் ,ஊற்ற கூட ஆள் இல்லையே இது என்ன விந்தை என விஸ்வாமித்திரரிடம் கேட்டார் இராமர் .
அதற்கு விஸ்வாமித்திரர்,இராமா மற்றொரு ஆணால் ஏமாற்றப்பட்டதால், வேறொரு ஆணால் சபிக்கப்பட்ட ஒரு பெண்ணின் ஆத்மா இந்த கல்லினுள் உள்ளது.தவறான செய்கையை புரிந்தவரைகளை,எப்படியெல்லாம் அவதூறாக பேசமுடியுமா,அப்படி பேசியும்,எப்படி எல்லாம் தண்டிக்க முடியுமோ,அப்படிஎல்லாம் தண்டிக்க வேண்டும் என்பதும்,சாபம் கொடுப்பது என்பதும் , சாதாரண மனிதர்கள் அனைவருக்கும் தெரியும்.ஆனால் விசேஷ மனிதர்களால் மட்டுமே இத்தகைய சாபத்தை திருப்பி எடுக்கவும் ,அவர்களை மன்னித்து ,சாப விமோசனம் கொடுத்து அருள் புரிய முடியும்.இராமா நீ அப்படிப்பட்ட  விசேஷ மனிதன். உன் பாதங்களால்இந்த கல்லை நீ தொட்டால்,சாபத்தில் இருந்து இவள் மீள்வாள்.என விஸ்வாமித்திரர் கூறினார்.அதற்க்கு முன் நீ இந்த ஆஸ்ரமத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இந்த ஆசிரமம் ஒரு சாபத்துக்கு உட்பட்டிருக்கிறது. இது கௌதம மஹா முனிவருடைய ஆசிரமம்.பல ஆண்டுகளுக்கு முன் அவர் இங்கே தன மனைவி அகலிகையுடன் வசித்து வந்தார். 
பெண்கள் மத்தியில் மிகவும் ,அழகானவள் என பலரும்,வியந்து பாராட்டப்பட்டவளே அகல்யா.ஒருமுறை வானத்தில் சஞ்சாரம் செய்த இந்திரன்,அகல்யாவ்வின் அழகை பார்த்து மயங்கினான். அவளின்  அழகை பார்த்து வியந்து ,அவளை அடைய ஆசைப்பட்டான் இந்திரன். ராக்ஷசர்களிலுங்கூட ஒருசில அறிவாளிகளும் நல்லவர்களும் இருந்தார்கள். எந்த நல்ல குலத்திலும் சில தீயவர்கள் உண்டாவார்கள். அப்படியே எந்தக் கெட்ட குலத்திலும் சில சமயம் நல்லவர்களும் இருப்பதுண்டு. தேவர்கள் என்கிற கூட்டம் சாதாரணமாக அதர்மத்துக்கு அஞ்சும் சுபாவம் கொண்ட கூட்டம்.ஆனால்,சில சமயம் தருமத்துக்கு விரோதமான முறைகளிலும் தேவர்கள் இறங்கியதும் உண்டு. அவர்களிலும் பலர் தீய காரியங்களைச் செய்து, அதனால் கஷ்டமும் படுவார்கள். அப்படிச் செய்த அதர்மங்களின் பயனைத் தேவர்களும் அனுபவிப்பார்கள்.அப்படிப்பட்ட ஒருவன் தான் இந்திரன்.ஒரு நாள் விடியற்காலையில் கௌதம முனிவர் குளிப்பதற்காக நதிக்கு சென்ற சமயம், அந்த வாய்ப்பை இந்திரன் பயன்படுத்திக் கொண்டான். கௌதம முனியை போல் வேடமிட்டுக் கொண்டு வந்தான் இந்திரன். அகல்யா இருந்த குடிலுக்குள் சென்றான்.  
அகல்யாவை ஆசையோடு தழுவினான்,ஆனால் அகல்யாவுக்குக்கோ,திடீரென என் கணவன் என்னை ஆசை தீர தழுவுகிறாரே,இது அவரது குணாதிசயத்தை போல் தெரியவில்லையே,என மனதிற்குள் நினைத்து,ஏதோ ஒரு தவறு நடக்கிறது,என புரிந்து கொண்டாள்.வந்த வேலை முடிந்தவுடன் குடிலை விட்டு வெளியே வந்தான் இந்திரன்.அதே நேரம் கௌதம முனிவர் குளித்து விட்டு உள்ளே நுழைந்தார்.தன்னுடைய தோற்றத்தில் மற்றொரு மனிதரை கண்டவுடன், ஏதோ பித்தலாட்டம் நடந்துள்ளது என்பதை அவர் புரிந்து கொண்டார். தன் கையில் கொஞ்சம் நீரை எடுத்த அவர்,"உண்மையிலேயே நீ யார்?" என கேட்டார். உடனே இந்திரன் தன் சுய ரூபத்தை அடைந்தான். இதை கண்டு வெகுண்டெழுந்த கௌதம முனிவர் "நீ ஆண்மையற்றவனாக மாற சபிக்கிறேன்" என கூறி அவன் மீது நீரை தெளித்தார்.“சினங்கொண்ட முனிவர் இவ்வாறு சொன்ன அக்கணமே, இந்திரன் தன் ஆண்மை அங்கத்தை இழந்தான். தேவர்கள் பரிதவித்தார்கள்.
சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அகல்யா, ஒரே உருவத்தில் இரண்டு பேர்களை பார்த்தார்."நான் ஏமாற்றப்பட்டு விட்டேன்." என அவள் கூறினாள்.இதை கேட்டு கோபமுற்ற கௌதம முனிவர், "நீ ஏமாற்றப்பட போகிறாய் என அறிந்தும் ஏன் அவனை உள்ளே அனுமதித்தாய்?" என அவர் கேட்டார்."அவன் உங்களை போலவே இருந்தான்" என அவள் கூறினாள்."நீ உன் ஆழ்மனதால் கண்டிருக்க வேண்டும்.ஏனென்றால் அவனின் மனது ஒரு வஞ்சகமே. அதனால் உன்னையும் நான் சபிக்கிறேன்.நீ ஒரு கல்லாக மாற நான் சாபமிடுகிறேன்." என முனிவர் கூறினார்.பின் அவள் மேல் நீரை தெளித்தார்.உடனே கல்லாக மாறி போனாள் அகல்யா.பரிதவித்த அகல்யா,முனிவரிடம்,இது நன் அறிந்து செய்த தவறு இல்லை, இதற்கு பரிகாரம் என்ன என்று கேட்டாள். 
“முனிவர் தம் மனைவிக்கு பிராயச்சித்தம் விதித்தார். அகலிகையே, நீ இங்கே நீண்டகாலம் காற்றே உணவாக,வேறு   ஆகாரமுமின்றிச் சாம்பல்மேல் படுத்து,யார் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்து வசிப்பாயாக. பல காலம் கழித்து இவ்விடம் தசரதன் மகன், அவதார புருஷன் இராமன் ஒருநாள் வருவான்.அந்த வீரன் இந்த ஆசிரமத்தில் கால் வைக்கும்போது உன் சாபம் நீங்கும். நீ அவனை அதிதியாக வரவேற்று உபசரிப்பாய். அப்போது உன்னுடைய இயற்கைக் குணத்தையும் காந்தியையும் மறுபடியும் அடைந்து என்னுடன் வாழ்வாய்”இவ்வாறு, சொல்லிவிட்டுக் கெளதமர்  மனைவியை விட்டு விலகி,இமயமலை சென்றுவிட்டார். 
விசுவாமித்திர முனிவர் உடனே, இராமனிடம்,இராமா, நீ இந்த 
“ஆசிரமத்துக்குள் செல்வாயாக,திக்கற்ற இந்த அகலிகைக்கு முனிவர் சொல்லியபடி நீ விமோசனம் கொடுப்பாயாக என்றார்” விசுவாமித்திர முனிவர்.அவ்வாறே ஆசிரமத்துக்குள் சென்றனர் மூவரும். இராமன் உள்ளே கால் வைத்ததும், அகலிகையின் பாவம் தீர்ந்தது. பாவம் தீர்ந்து காந்தியுடன் விளங்கிய அகலிகையைக் கண்டான் இராமன்.அகலிகை உலகத்திலுள்ள எல்லா ஸ்திரீகளுடைய அழகையும் ஒன்று சேர்த்து, பிரம்மாவால் படைக்கப்பட்ட தனி அழகை கொண்டவள்.இலைகளிலும் கொடிகளிலும் மறைந்து யாருக்கும் தென்படாமல் பல்லாண்டுகள் விரதம் காத்து வந்த அவள்,அன்று,ராமன்,பொற்பாதங்கள் பட்டு பாவ விமோசனம் பெற்றதும், பனியால் மூடப்பட்ட சந்திரனைப் போலும், புகையால் மறைக்கப்பட்ட அக்கினி ஜவாலையைப் போலும், அசையும் ஜலத்தில் காணப்படும் சூரிய பிம்பம் போலும் பிரகாசமாக காணப்பட்டாள்.
இராமனும் லக்ஷ்மணனும் முனி பத்தினியின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தார்கள்.நெடுங்காலம் காத்திருந்த அகலிகை, தன்னுடைய விமோசன காலம் வந்துவிட்டதென்று மகிழ்ந்து, சக்கரவர்த்தித் திருமகனுக்கு அர்க்கியம், பாத்தியம், முதலியன தந்து உபசாரம் செய்தாள். இராமனும் அங்கீகரித்தான்.ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பெய்ய அவளுடைய கொடிய பாவம் தீர்ந்து, தேவகன்னிகை போல் பிரகாசித்தாள். கெளதமரும் அச்சமயம் அங்கே வந்து சேர்ந்தார்.
இது வால்மீகி ராமாயணத்தில் உள்ள அகலிகை கதை. எவ்வளவு பெரிய பாபத்தைச் செய்துவிட்டாலும், பச்சாதாபப்பட்டு, தண்டனையைப் பொறுத்துத் தவமிருந்தால் விடுதலை அடையலாம்,என்பது அகலிகை நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு சொல்லப்படுகிறது. சமுதாயத்தில்  பாபம் செய்த எவரும் மற்றவர்களை இகழாமல்,அவரவர்கள் தத்தம் உள்ளங்களில் உண்டாகும் தோஷங்களை அகற்றுவதில் முயற்சி செலுத்த வேண்டும்.எவ்வளவு சுத்தமான,உயர்வான,நிலையிலிருந்தாலும் சதா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், என்பதை வலியுறுத்தும் ஒரு கதையாகும்,இந்த அகல்யையின் கதை.மற்ற புராணங்களிலும் கதைகளிலும் சில விஷயங்கள் வேறுவிதமாக சொல்லப்பட்டு இருக்கின்றன.ஆனால், பின்னர் ,நடந்தவைகளையும்,அதில் உள்ள தத்துவங்களும்,யாரும் அறியாத ,ஒன்று.அதைப்பற்றி இங்கே,பார்க்கலாம்.  
கௌதமாரால் சபிக்கப்பட்ட அகலிகை,இராமனின் பாதங்கள் பட்டு சாபவிமோசனம் பெற்றது வரையிலான இதிஹாசம் தான்  நம் எல்லோருக்கும் தெரியும்.ஆனால்,அகலிகை கௌதமருக்குக் கொடுத்த சாபம் நம்மில் பலரும் கேள்விப் பட்டிராத ஒன்று .சமஸ்க்ருதத்தில் உள்ள திருசூலபுர மாகாத்மியத்தில் கூட இந்த குறிப்பு இல்லை,ஆனால் தமிழில் உள்ள திருச்சுழித் தல புராணத்தில் இதுபற்றி சொல்லப்பட்டு இருக்கிறது.இந்திரன் கௌதமரைப் போல உருமாறி, அவர் ஆஸ்ரமத்தில் இல்லாத சமயத்தில்  அகல்யையை தழுவியபோது ,இந்திரனை தன் கணவனென்றே கருதி ஏமாறித் தழுவியதை உணராது இருந்த  முனிவர் வெகுள்வதைக் கண்ட அகல்யை, "அறிவற்ற முனியே! நிலமையையுணர்ந்து அதற்கேற்ற பரிகாரஞ் செய்யாது இங்ஙனம் சபித்தீரே! எப்போது எவ்வாறு எனக்கு விமோசனம்?" என்று கௌதம முனிவரை நோக்கி கேட்க, "ஸ்ரீராமாவதாரத்தின் போது பரந்தாமனின் பாததூளியின் ஸ்பரிசத்தால் உனக்கு விமோசனம் உண்டாகும்" என்று முனிவர் அருளினார். அகல்யை உடனே கல்லாய் மாறினார் . 
உடனே ,கௌதம முனிவர் அங்கிருந்து சென்று , அவரது தினசரி பூஜை மற்றும் ,வேறுகாரியங்களில் ,ஈடுபட சென்றுவிட்டார். அப்படி ஈடுபடும் போது,புத்தி நிலைகொள்ளாது பலவாறு தடுமாறத் தொடங்கியது.அத்தடுமாற்றம் மேன்மேலும் அதிகமாவதைக் கண்ட முனிவர் சிறிது ஆலோசித்து பார்த்தபோது,அதன் காரணம் அவருக்கு புரிந்தது. உண்மையில் நடந்தது அறியாமல் ,குற்றம் செய்த தன், மனைவியை,அவர் சபித்தபோது, தபஸ்வினியான அகல்யை  "அறிவற்ற முனியே" என்றழைத்ததே, சாபம் போலாயிற்று என்றுணர்ந்து,அதற்குப் பரிகாரம் ஈசனது தாண்டவ தரிசனத்தை காண்பது மட்டுமே ,என்று தெரிந்து கொண்ட கௌதமர், சிதம்பரம் சென்றார்.அங்கே "திருச்சுழியலில் ஆடல் காண்பிப்போம்" என்னும் அசரீரியைக் கேட்ட முனிவர், அவ்வாறே அத்தலத்தை நாடிச் சென்றார். சுழியற்பதியைக் கண்டதுமே கௌதமரின் உள்ளம் தெளியத் தொடங்கியது. அத்தலத்தில் அவர் நீண்ட காலம் தவத்திலாழ்ந்தார்.இறைவனும் அவரது தவத்திற்கு, மனமிரங்கி, மார்கழித் திருவாதிரையன்று தனது திவ்யானந்த தாண்டவக் கோலத்தை அவருக்குக் காண்பித்தருளினார் ஈசன் .கௌதமர் அவரை மனமாரத் துதித்து மகிழ்ந்து புத்தி தடுமாற்றத்தில் இருந்து விமோசனம் பெற்றார்,கௌதம முனிவர்.
உரிய காலத்தில் அகல்யையும் ஸ்ரீராமனது பாத தூளியால் மீண்டும் கன்னிவடிவுற்று கௌதமரை வந்தடைந்தாள். முனிவர் மகிழ்ச்சியுடன் அவளை நோக்கி, "கண்ணுதலின் மணக் கோலத்தை நாமிருவரும் கண்டு களி கூர்ந்து இல்லறந் தொடங்குவோம்" என கூறி ,அகல்யையுடன் சுழியலுற்றுத் திருமேனிநாதனை வேண்ட,  சிவபெருமான் அவ்வாறே அவ்விருவர்க்கும் தனது திருமணக் கோலக்காட்சியை அளித்தருளினான். கௌதமர் ஈசனைப் புகழ்ந்து பூஜித்து விடைபெற்று, இடர் யாவும் விலகப் பெற்றவராய்த் தமது மனையாளுடன் என்றும் போல் அமைதியாய்த் தவவாழ்வு தொடர்ந்தார்."இந்த பரஸ்பர சாபக்கதை திருச்சுழித் தலபுராணத்தில் மாத்திரம்தான் இருக்கிறது.அகலிகை உடம்பாலும், மனதாலும் மாசுபட்டு இருந்தாலும்,அதற்காக அவள் புகழ் அழிக்கப்படவில்லை. மாறாக, கற்புக்கரசிகளில் முதன்மை தகுதி பெற்றாள்.புராணங்களில் பேசப்படும் ஐந்து பதிவிரதைகளில் முதலில் வணங்கப்படுபவள் இந்த அகல்யை.இதுவே பெண்மைக்கும் கற்புக்கும் சனாதன புராணம் காட்டும் நியதி. கற்பு சாஸ்திரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.இவள் கதை ராமாயணத்தில் மிகச்சிறிதாக பேசப்படுகிறது.வால்மீகி ராமாயணத்தில், ஒரு நாற்பது ஸ்லோகங்களில் இந்த நிகழ்ச்சி அடங்குகிறது. ஆனாலும், அகலிகை மிகப் பெரிய சக்தியாக பேசப்படுகிறாள்.அகலிகை கதை பாடாமல் ராமாயண கதை பேசப்படுவதில்லை.இதுபோன்ற கதைகளில்,நம்மால் பின்பற்றக்கூடிய நல்ல உபதேசத்தை இவைகளின் மூலம் நாம்  பெறலாம். நாம் உணர்ந்து நடக்கக்கூடிய வழிமுறைகளையும்  கண்டு பயன் பெறலாம் .மீண்டும் ஒரு சுவாரஸ்யமான கதையுடன் ,அடுத்தவாரம்  சந்திக்கலாம் ...வணக்கம் . 

11 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி ..உங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் மேலும், பல சுவாரஸ்யங்கள் தொடரும் ...

   நீக்கு
 2. கதையின் இன்னொரு வெர்ஷனை அறிந்தேன். அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய கதைகளுக்கு ,செவிவழி கதை ,வழக்கத்தில் உள்ள கதை என ,இரண்டுவிதமான கருத்துக்கள் ,உள்ளன ..அப்படிப்பட்ட சில கதைகளில் ..செவிவழியாக நமக்கு கிடைக்கப்பட்ட .இல்லை மறக்கப்பட்ட ,சம்பவங்களை,அடிப்படையாக வைத்து ,எழுத பட்டதே ..இந்த பதிவு ...நன்றி..உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ...

   நீக்கு
 3. கதையின் மற்றொரு வடிவைக் கண்டேன். அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறக்கபட்ட கடவுள்களில்,ஒருவன் இந்திரன்,,அவனது சூழ்ச்சி பல இடங்களில் அறியப்பட்டாலும்,அந்த சூழ்ச்சி நிலைமைக்கு தள்ளப்பட்ட அகல்யை கதை நிறைய மறைபொருட்களை கொண்டது ,சிலவற்றை ,முழுவதுமாக சொல்ல நம்மிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை ,காரணம் எல்லாமே செவிவழி கதைகள். தொடர்ந்து வரும் ,உங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றி சகோ ...

   நீக்கு
 4. முழுமையான கதை அறிந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. கதையில் இனியும் நிறைய திருப்பு முனைகள் உண்டு அண்ணா ,பதிவின் நீளம் கருதி ,சுக்கமாக என்னுடைய சிற்றுரையை முடித்து கொள்கிறேன் .

   நீக்கு
 5. அகலிகையின் முழுக்கதையையும் அறியத் தந்தீர்கள் அக்கா...
  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கலையை மட்டுமில்லாது ,அங்கோர்வார்ட் கதை கூட விரைவில் முழு பதிவாக..இந்த பாச தம்பிக்கவே பதிவு செய்வேன் .நன்றி உங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் தம்பி .

   நீக்கு