Saturday, March 11, 2017

சைவமும், வைணவமும் கொண்டாடும் மாசிமகம்


மகத்தில் பிறந்தால் ஜெகத்தினை ஆளலாம்ன்னு ஒரு பழமொழி உண்டு. மகம் நட்சத்திரத்தில் பிறந்தாலே அச்சிறப்புன்னா அந்நன்னாளில் இறை பக்தியோடு தானங்களை செய்தால்  அதன் நன்மைகளை அளவிட முடியுமா?!  எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும்  மகம் நட்சத்திரத்திற்கென்று தனிச் சிறப்புண்டு... மூலோகத்திலும் செய்யும் பாவங்கள் அனைத்தும் காசிக்கு சென்று கங்கையில் சென்று நீராடினால் போகும்.. அவ்வாறு மக்கள் கழுவிய பாவங்களால் பீடிக்கப்பட்ட கங்கை மற்றும் யமுனை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி  உட்பட பனிரெண்டு நதிகள் கும்பகோணத்திற்கு வந்து புனிதமாகும் நாளே இம்மாசி மகம்.  

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.  கோவில்களில் வெகுவான  திருவிழாக்கள் நடப்பது பௌர்ணமி .. பௌர்ணமி எந்த திதியில் வருதோ அத்திதியை கொண்டே தமிழ்மாத பெயர்கள் அமையும்.  மாசி மாத பௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் வருவதால் ’மாக மாதம்’ என்றும் அழைக்கப்படுது.  உமாதேவி பிறந்தது மாசி மாதத்தில்...
 பராசக்தியே தன் மகளாய் அவதரிக்கவேண்டும் என சிவப்பெருமானை நோக்கி தவமிருந்தார். அந்த தவத்தின் பயனாய்  மாசிமாத மகம் நட்சத்திரத்தில் தட்சனின் மகளாய் தாட்சாயணி அவதரித்தாள்.மக நட்சத்திற்கு அதிபதி கேது பகவான். இவர் செல்வம்  ஞானம், முக்தியை தருபவர்.

வருண பகவானுக்கு அருளல்...
வருணபகவானைப் பீடித்த பிரமஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது.வருணபகவான் சிறைப்பட்டிருந்ததால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. நீரின்றி உயிர்களனைத்தும் தவித்தன. வருண பகவானை வேண்டி மக்கள் இறைவனை வேண்ட,  சிறையிலிருந்தே தன்னை விடுவிக்கும்படி வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணபகவான் சிவப்பெருமானிடம், அன்றைய  தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருளும்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.
பித்ரு கடன் செய்ய...
மக நட்சத்திரத்தை ”பித்ருதேவதா நட்சத்திரம்” என்றும் அழைப்பர். உலகத்தை உருவாக்கும்முன் இந்த பித்ருதேவனை படைத்தப்பின்தான் அனைத்து ஜீவராசிகளையும் இறைவன் படைத்தான்.  இந்த பித்ருதேவாதான் எல்லா உயிர்களுக்கும் ஆத்ம சாந்தியை அருள்கிறது. நம் முன்னோர்கள் ஆத்ம சாந்தியுடன் இருந்தால்தான் நம் குலம் தழைக்கும். இந்நாளில் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்குவதோடு, பித்ரு கடனையும் செய்யலாம். 

வல்லாள மகாராஜா....
திருவண்ணாமலையை வல்லாளன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். அவனுக்கு குழந்தையில்லாததால் தனது இறுதிச் சடங்கினை நடத்த சிவனை வேண்டினான். சிவனும் ஒப்புக் கொண்டார். வல்லாளன் மாசி மகத்தன்று இயற்கை எய்தினான். சிவனும் சிறுவனாக வந்து மன்னனின் இறுதிச் சடங்கினைச் செய்து மோட்சத்தை அருளினார். மேலும் மாசி மகத்தன்று நீர்நிலைகளில் புனித நீராடுவோருக்கு மோட்சம் அளிப்பதாகவும் அருளினார்.

சிவப்பெருமானின் திருவிளையாடல்...
பராசக்தி ஒருமுறை  திருவேட்டக்குடி என்ற இடத்தில் மீனவக்குலத்தில் மீனவர் தலைவன் மகளாய் பிறக்க,  திருமணப்பருவம் வந்ததும், அவளை மணக்கவேண்டி, மீனவன் வேடத்தில் சிவப்பெருமான் தோன்றி, கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு தொல்லை தந்த  தன்னால் உருவாக்கப்பட்ட ராட்சத திமிங்கலத்தை அடக்கி பார்வதிதேவியை மணந்தார். அப்போது மீனவர் தலைவன் தங்கள் தரிசனம் அடிக்கடி கிடைக்கவேண்டுமென வேண்ட, ஒவ்வொரு மாசிமகத்தன்று நீராட வருவேன் என வாக்கு கொடுத்தார்.  மாசிமகத்தில் திருவேட்டக்குடியில் அம்பிகை மீனவபெண் வடிவத்திலும், ஐயன் வேடமூர்த்தி அலங்காரத்தில் தீர்த்தவாரியில் கலந்து கொள்வர்.

சமுத்திரராஜனுக்கு கொடுத்த வரம்...
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டபோது மகாலட்சுமி தோன்றினாள். அவளை மகாவிஷ்ணு மணந்து சமுத்திர ராஜனுக்கு மருமகனானார்.  மகா விஷ்ணுவை மருமகனாய் அடைந்த மகிழ்ச்சியைவிட மகளும், மருமகனும் வைகுந்தம் சென்றுவிட்டால் பார்க்க இயலாதே என வருத்தம் கொண்டார் சமுத்திரராஜன்.  தந்தையின் வருத்தத்தினை கணவரிடம் மகாலட்சுமி சொல்ல..... வருடத்திற்கொரு முறை தானே கடற்கரைக்கு வந்து காட்சி தருவதாக சமுத்திரராஜனுக்கு வாக்களித்தார். அவ்வாறு வாக்களித்த தினம் மாசிமகம்.
  
கும்பக்கோணம் மாசிமகம்;
மாசிமகம் பற்றிய பதிவில் கும்பக்கோணத்தை தவிர்க்க முடியுமா?! ஒருசமயம் யுகமொன்று  வெள்ளத்தால் அழிய இருந்தது.  மீண்டும் உயிர்களை படைக்கும்’‘பீஜம்” தாங்கிய அமுத கும்பத்தை வெள்ளத்தில் மிதக்கவிட்டார் பிரம்மா.  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கிய இடம் கும்பக்கோணம்.  வேடுவன் ரூபத்தில் வந்த சிவப்பெருமானால் அம்பினால் துளைக்கப்பட்டு  கும்பம் உடைந்து உயிர்கள் உருவான  நாள் மாசி மகம். இங்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் கும்பேஸ்வரர் கோவிலே முதன்மையானது. இதன் தீர்த்தமே மகாமக தீர்த்தக்குளம்.

ஒருமுறை அனைத்து புண்ணிய நதிகளும் சிவப்பெருமானிடம் சென்று, மக்கள்  தங்கள் பாவங்கள் தீர எங்களில் மூழ்குவதால் அவர்களின் பாவச்சுமை தங்களை அழுத்தி பாரம் தாங்க இயலவில்லை என முறையிட மாசிமகத்தன்று, கும்பக்கோணத்தில் உள்ள மகா மக குளத்தில் நீராடினால் உங்கள் மீதுள்ள பாவங்கள் போகுமென அருளினார். 
குந்திதேவி பாவம் போக்கிய மாசி மகம்:
கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் போக குந்திதேவி கண்ணனை வேண்டி நின்றாள். ஒரே நாளில் ஏழு கடலில் நீராடவேண்டும் என சொன்னான். ஒரே நாளில் ஏழு கடலிலா என மலைத்து நின்ற குந்திதேவிக்கு திருநல்லூர் கோவிலின் பின் உள்ள கிணற்றில் உனக்காக ஏழு கடலையும் வரவைக்கிறேன், மாசி மகத்தன்று நீராடு உன் பாவம் போகும்  என அருளினான். அத்தீர்த்தம தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், திருநல்லூர் பஞ்சவர்ணேஷ்வரர் ஆலயத்தில் உள்ள சப்த சாகர தீர்த்தம் ஆகும்.



முருகனுக்கும் உகந்த மாசிமகம்;
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முருகன் சிவபெருமானுக்கு சுவாமி மலையில் உபதேசித்ததும் மாசி மகம் நாளில்தான். எனவே, சுவாமிமலை, திருத்தணி , திருச்செந்தூர் முருகன் கோவில்களில் மாசிமகம் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுது.


இனி விரதமிருக்கும் முறை;
அதிகாலையில்  எழுந்து அருகில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடவேண்டும். அவ்வாறு நீராடும்போது ஒரே ஒரு ஆடையை உடுத்தாமல், மற்றொரு ஆடைய அணிந்து நீராட வேண்டும். புண்ணிய தீர்த்தங்களுக்கு செல்ல இயலாதவர்கள்  குளிக்கும் நீரில் கங்கை உள்ளிட்ட  புண்ணிய தீர்த்தளை ஆவகப்படுத்தி நீராடுதல் நலம். பின்பு உலர்ந்த ஆடைகளை உடுத்தி அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறை சிந்தனையுடன் வணங்கி தான தர்மங்கள் செய்ய வேண்டும்.  மதியம் ஒருவேளை மட்டும் உணவுண்டு, இரவு பால் பழம் அருந்தி விரதமிருக்கலாம். தேவாரம், திருவாசத்தையும் படித்தல் வேண்டும்.    வீட்டிலேயே குளிப்பவர்கள் கீழ்க்காணும் பாடலை பாராயாணம் செய்து குளித்தால் புண்ணிய நதிகளில் குளித்த பலன் கிடைக்கும்.
ஏவி, இடர்க்கடல் இடைப் பட்டு இளைக்கின்றேனை

            இப் பிறவி அறுத்து ஏற வாங்கி, ஆங்கே 

கூவி, அமருலகு அனைத்தும் உருவிப் போக,

   குறியில் அறுகுணத்து ஆண்டு கொண்டார் போலும் 

தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி,

                பொற்றாமரைப் புட்கரணி, தெண்நீர்க் 
கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக்
                   கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.


மாசிமகத்தன்று அதிகாலையில் நீராடி துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.  குங்குமத்தால் அம்பிகையை அர்ச்சித்தால் இன்பமும், வெற்றியும் கிட்டும். சரஸ்வதி தேவியை நறுமண மலர்களால் அர்ச்சித்தி வழிப்பட கல்வியில் சிறப்புற்று விளங்கலாம்.

இப்படி சைவமும், வைணவமும்.. வடநாடும், தென்னாடும் கொண்டாடும் சிறப்புவாந்த மாசிமகம் இன்று... இறைவனை வழிப்படுவதோடு தன்னால் இயன்ற தர்மங்களை செய்து இறைவன் அருள் பெறுவோம்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை...
நன்றியுடன்,
ராஜி.

4 comments:

  1. மாசிமகம் பற்றிய
    அருமையான விளக்கம் படித்தேன்.
    பாராட்டுகள்

    ReplyDelete
  2. விளக்கங்களுக்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
  3. விரிவான விளக்கங்கள்...

    ReplyDelete
  4. புதிய விளக்கங்கள்....இதுவரை தெரியாத தகவல்கள்

    ReplyDelete