Friday, July 21, 2017

தங்க மழை பொழிய சொர்ணாம்பிகை வழிபாடு -ஆடி முதல் வெள்ளி


சுப பலன்களை அள்ளி அள்ளி கொடுக்கும் சுக்கிர பகவானை வழிபட ஏத்த கிழமை வெள்ளிக்கிழமையாகும்.  வெள்ளி அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்தது. அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அனைத்துமே மங்களகரமானது. இந்நாள் எல்லா அம்பிகைக்கும் உகந்த நாள். அதிலும் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைன்னா இன்னமும் சிறப்பு வாய்ந்தது. கூழ் வார்த்தல், பால்குடம் ஏந்துதல், தீமிதித்தல்ன்னு அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கோலமா இருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.  சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள்  அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.

பூமாதேவி அம்மனாக அவதரித்தது இந்த ஆடி மாதத்தில் என்பதால்தான் இம்மாதம் அத்தனை சிறப்புகள் வாய்ந்தது. திருமணமாகாத பெண்கள் ஆடி செவ்வாய், வெள்ளிகளில் விரதமிருந்து அம்மனை வழிப்பட்டால் நல்ல கணவன் அமைவான். வீடுகளில் கூழ்வார்த்து அம்பிகையை வழிப்பட்டால் ஆண்டு முழுவதும் அம்மனை வணங்கியதன் பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும்.  ஆடிமாதங்களில் அம்மனுக்கு நடக்கும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு அம்மனுக்கு அணிவித்த வளையலை அணிந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டுமென்பது ஐதீகம்.

காற்றும், மழையும் ஆடிமாதத்தில் அதிகம். காற்றை காளியும், மழையை மாரியம்மனும் கட்டுப்படுத்துகின்றனர். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும்விதமாக இந்த மாதங்களில் கூழ்வார்த்து வழிபடுகின்றனர்.  அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். காற்றின் வேகம் குறையவும், மழை வேண்டியும் இத்திருவிழாக்களை நடத்துகின்றனர்.  
சமூக காரணம்....
அதுமட்டுமில்லாம சித்திரையில் அறுவடை முடிந்து  வைகாசி, ஆனிமாதம் வரை தானியங்கள் இருப்பு இருக்கும். ஆடி மாதத்தில் கையிருப்பு குறைய ஆரம்பித்து ஏழைத்தொழிலாளர்கள் உணவுக்கு தடுமாறும் நிலை ஏற்பட்டு பஞ்சமும் ஏற்படும். அப்படி பஞ்சம் ஏற்படாம இருக்கவும் இவ்வழிபாடு உதவும். அப்பத்திய மனிதர்களின் பிரதான தானியம் கேழ்வரகுதான். கேழ்வரகுக்கு பின்தான் அரிசி, கம்புலாம்... பஞ்சக்காலங்களில் ஏழைகளுக்கு கூழ் காய்ச்சி கொடுக்கலாம்ன்னு சொன்னா எல்லாருக்கும் மனசு வராது. அதனாலதான் அம்மன் பேர்சொல்லி கூழ்வார்த்து ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தனர். இப்ப மாதிரி வெறும் கேழ்வரகு மாவும், அரிசியும் கொண்டு கூழ் காய்ச்சுவதில்லை.  அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னி வேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்லாம் அரைகுறையாய் ஒரு வெள்ளைத்துணியில் மூட்டையாய் கட்டிக்கனும். அரிசியை கஞ்சியாய் காய்ச்சனும். அப்படி காய்ச்சும்போது மூலிகை மூட்டையை போட்டு 15 நிமிடம் விட்டு அந்த மூட்டையை எடுத்திடனும். அதில் புளிச்ச கேழ்வரகு மாவுக்கரைசலை ஊற்றி கிளறி இறக்கி அம்மனுக்கு கூழ் வார்த்தனர். இந்த கூழ் இருமல், காய்ச்சல், காலரா, அம்மைகள் மாதிரியான வெம்மை நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.
இனி ஆன்மீக காரணம்...
ஜமத்கனி முனிவர்ன்னு ஒருத்தர் இருந்தார். சகல கலைகளும் கைவரப்பட்டு, சிறந்த சிவபக்தராகவும், அழகும், சிறந்த குணவதியான ரேணுகாம்பாளை மனைவியாய் கொண்டும், தந்தை சொல் தவறாத பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாய் வாழ்வதை கண்டு அவர்பால் பொறாமைக்கொண்ட கார்த்த வீரியாச்சுனனின் மகன்கள் ஜமத்கனி முனிவரை கொன்றுவிடுகின்றனர்.  இந்த துக்கம் தாளாமல் அவர் மனைவி ரேணுகா தேவி தீயை மூட்டி  உயிரைவிட  அதில் இறங்கினார்.  அப்போது இந்திரன் மழையாய் மாறி அத்தீயை அணைத்தான். தீ அணைந்தாலும் ரேணுகாதேவி உடல் முழுக்க தீக்காயம் ஏற்பட்டது. தன் வெற்றுடலை மறைக்கவும், தீக்காயத்தின் சீற்றம் குறையவும் அருகிலிருந்த வேப்பமரத்தின் இலைகளை பறித்து ஆடையாய் அணிந்துக்கொண்டார். 
 ரேணுகாதேவிக்கு பசி அதிகமாக அருகிலிருந்த வீடுகளுக்கு சென்று உணவு கேட்டார். அது ஏழை குடியானவங்க வீடு என்பதால் தங்களிடமிருந்த பச்சரிசிமாவும், வெல்லமும்,இளநீரும் கொடுத்தனர். அவற்றைக்கொண்டு கூழ் காய்ச்சி பருகி பசியாறினார் ரேணுகாதேவி. அப்போது சிவப்பெருமான் தோன்றி, உலக மக்கள் வெம்மை நோய் நீங்க நீ ஆடையாய் அணிந்த வேப்பிலையே சிறந்த மருந்தாகும். நீ குடித்த கூழே சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என வரமளித்து மறைந்தார்.  இந்த சம்பவத்தினை முன்னிட்டே அம்மனுக்கு கூழ்வார்த்தல் தொடங்கியது. 
ஆடி வெள்ளியின் சிறப்புகள்...

ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகள் அனைத்துமே விசேஷமானது. பொதுவா ஒரு மாசத்துக்கு நாலு வெள்ளி வரும். சில சமயம் அஞ்சு வெள்ளிக்கிழமை வரும்.  ஆடி முதல் வெள்ளி சொர்ணாம்பிகைக்கும், இரண்டாவது வெள்ளி அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும், மூன்றாவது காளிகாம்பாளுக்கும், நாலாவது வெள்ளி காமாட்சி அம்மனுக்கும் உகந்தது. ஒருவேளை அஞ்சாவது வெள்ளிக்கிழமை அமைந்தால் அன்று வரலட்சுமிக்கு உகந்த நாள். அன்றைய தினம் எந்த அம்மனுக்கு உகந்ததோ அந்த அம்மனை ஆவாகணம் செய்து வழிப்படுதல் கூடுதல் நலம்.....
சொர்ணாம்பிகை
சிவனை தரிசிக்க 16 வருடங்கள் கடுந்தவம் புரிந்தார் காகபுஜண்டர். அவரின் தவத்தினை மெச்சி 16 முகங்களோடு சிவப்பெருமான் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டுமென கேட்டபோது எனக்கு காட்சியளித்த இத்தலத்தில் தாங்கள் எழுந்தருளி மக்களுக்கு பொன், பொருள்ன்னு அனைத்து செல்வங்களையும் அள்ளித்தருமாறு வேண்டினார். அவ்வாறே வரமளித்த இறைவன் அங்கேயே எழுந்தருளினார். அங்கு அவருக்கு பெயர் சுவர்ணபுரீச்வரர் என்றும், அம்மனுக்கு சொர்ணாம்பிகைன்னும், சிவனின் காவல்தெய்வமான காலபைரவருக்கு சுவர்ண பைரவர் என்றும் பெயர். சகல செல்வங்களையும் அள்ளித்தரும் இந்த ஆலயம் பொன்பரப்பின்ற ஊரில் இருக்கு. அந்த அம்மனைதான் இன்று நம் இல்லங்களில் ஆவகணப்படுத்தி வழிப்பட வேண்டும்.  
இன்றைய தினம் வீடு வாசலை சுத்தப்படுத்தி, கோலமிட்டு, பூஜை அறையில் குத்துவிளக்கை அம்பாளய் பாவித்து, அதற்கு புதுத்துணி அணிவித்து வீட்டிலிருக்கும் நகைகளை பூட்டி அழகுப்படுத்தி, மஞ்சள் பொடியால் கோலமிட்டு, அதன்மீது பச்சரிசி பரப்பி அதன்மீது குத்துவிளக்கை வைத்து அம்பாளாய் ஆவகனப்படுத்த வேண்டும்.  சிறு பெண்குழந்தைகளை அம்மனாய் பாவித்து வணங்கி சர்க்கரை பொங்கல் அல்லது பால்பாயாசம் நைவேத்தியம் செய்து வழிப்பட்டு சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, வளையல் , சீப்பு, ஜாக்கட் துணி, கண்ணாடி... என அவரவர் வசதிக்கேற்ப தானமாய் தரலாம். 
சொர்ணாம்பிகையின் மூலமந்திரம். 
வேதாந்த வேத்யை விதுசேகராயை
வித்யுத் ஸஹஸ்ர கோடி ரவி ப்ரகாஸிகாயை
ஸுகவன ஷேத்ர நிவாஸிகாயை
ஜெய ஜெய ஸ்ரீ மாதா சொர்ணாம்பிகாயை ! ,


 இதன் பொருள்..
வேதாந்தத்தின் வேரென விளங்கும் வேத பொருளானவளும் ,  அமிர்த மயமான சந்திரனை சிரசில் சூடிக்கொண்டவளும் , ஆயிரம் கோடி சூரியர்கள் ஒன்றாய் சேர்ந்த மின்னல் வெட்டு போல் ஒளிர்பவளும் , சுகவன ஷேத்ரத்தை வாசஸ்தலமாக கொண்டவளுமான
அன்னை ஸ்ரீ சொர்ணாம்பிகைக்கு வெற்றி உண்டாவதாக!

சொர்ணாம்பிகையை வழிப்படுவோம்... அனைத்து நலனும் பெறுவோம். 


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467037
Mangalya Dosha Nivarthi :  Official Website of Arulmigu Devi Karumariamman Temple, Thiruverkadu
நன்றியுடன்,
ராஜி.

11 comments:

  1. இனியெனும் அனைவர் வாழ்விலும் தங்கமழை பொழியட்டும்.
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. முதல்ல மழை பொழியட்டும்ண்ணே

      Delete
  2. வெள்ளிக் கிழமையில் நல்ல அருமையான காட்சிகள்

    ReplyDelete
    Replies
    1. படங்களை தேடித்தேடி எடுத்து போட்டேன் சகோ

      Delete
  3. படங்க்களுடன் செய்திகள் அருமை.
    உங்கள் பதிவை பார்க்கும் போது எனக்கு திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.
    பண்டிகைகள் அனைத்துக்கும் அழகிய படங்களுடன் பதிவிடுவார்கள்.


    எல்லோர் இல்லங்க்களிலும், சொர்ணமழை பொழியட்டும்.
    எல்லா உயிர்களும் மகிழ வான் மழையை பொழியவைக்கட்டும் மாரியம்மா.

    வாழ்த்துக்கள் ராஜி.

    ReplyDelete
    Replies
    1. ராஜேஸ்வரி அம்மாதான் இந்த மாதிரி பதிவுகள் போட காரணம். எந்த பண்டிகை என்னிக்குன்னு வார வழிபாட்டில் கேட்டு ராஜேஸ்வரி அம்மா பதிவில் பார்த்துதான் பதிவிடுவேன்.
      அவர் சாயலில்லாம இந்த ஆன்மீக பதிவுகள் இல்லை. அம்மாவை மறக்க முடியுமா?!

      Delete
  4. தங்க மழை....

    மழைக்கே வழியில்லையே சகோ.... தங்க மழை வேறு வேண்டுமா!

    ReplyDelete
  5. உங்கள் கருத்தையும் வெங்கட்ஜியின் கருத்தையும் வழி மொழிகிறோம். ..0

    ReplyDelete
  6. சமூகக் காரணங்களை ஒப்புநோக்கி அறிவியல் பூர்வமாக தெளிவு தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. எனக்கும் ராஜராஜேஸ்வரி அம்மா நினைவுக்கு வருவார்கள்.

    ஆடி மாதம் பக்திக்கான மாதம்!

    தம +1

    ReplyDelete
    Replies
    1. அவங்க சாயலில்லாம பக்தி பதிவா?! அவங்க இடத்தை நிரப்பலாமான்னு ஒரு ஐடியா

      Delete