Friday, July 28, 2017

சிவரூபத்தையே எரித்த அங்காளபரமேஸ்வரி - ஆடி இரண்டாவது வெள்ளி


அம்மன் மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆடி மாதத்தின் அத்தனை செவ்வாய், வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பு வாய்ந்தது. ஆடி செவ்வாய் கிழமைகளில் அவ்வை நோன்பு இருப்பாங்க. ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சொர்ணாம்பிகையை வணங்கனும். அதனால, போனவாரம் வீட்டில் தங்க மழையை பொழிய வைக்கும் சக்திக்கொண்ட சொர்ணாம்பிகை வழிப்பாட்டை பத்தி பார்த்தோம். பார்க்காதவங்க பார்த்துட்டு  வந்துடுங்க. ஆடி மாசத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை அங்காளப்பரமேஸ்வரியை வழிப்படனும். இவளுக்கு அங்காளம்மன்னு இன்னொரு பேரும் இருக்கு. 


அங்காளம் என்ற சொல்லுக்கு இணைதல்ன்னு அர்த்தம். இணைதலை ரெண்டு வகையாய் எடுத்துக்கலாம். வல்லாள கண்டன் என்னும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருந்து  ஏழு பிறவி எடுத்த பெண்ணொருத்தியால், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாதெனவும், நினைத்த உருக்கொள்ளவேண்டுமெனவும்  2 வரம் வாங்கினான். வரம் வாங்கிய மமதையில் சகல லோகத்தையும் துன்புறுத்த ஆரம்பித்தான். கர்வத்தால்  வரம் கொடுத்த சிவனையும் மறந்தான். பூவுலகில் உள்ள கோவில்களில் உள்ள இறை சொரூபங்களை எடுத்துவிட்டு தன்னுடையை சொரூபத்தை வைத்து வழிப்பட வேண்டுமென கட்டளையிட்டான். யாகத்தின் அத்தனை அவிர்பாகத்தையும் அவனே எடுத்துக்கொண்டான். சகல லோகங்களும் அவனை கண்டுஅஞ்சின.  எல்லா வரங்களும் கைவரப்பட்டாலும் குழந்தை வரம் மட்டும் அவனுக்கு கிட்டவே இல்லை. அதனால் 108 மனைவிகளை மணந்தான். ஆனாலும், குழந்தை பிறந்தபாடில்லை...
குழந்தை இல்லாத துக்கத்தில் பார்க்கும் பெண்களை எல்லாம் பெண்டாள ஆரம்பித்தான்.  இவனின் ஆட்டத்துக்கு முடிவு கட்ட நினைத்த சிவப்பெருமான் பார்வதிதேவியை நோக்கி முதல் பிறவியில் மீனாட்சி, ரெண்டாவது காமாட்சி, மூன்றாவது விசாலாட்சி, நான்காவது காந்திமதி, ஐந்தாவது மாரியப்பன், ஆறாவதாக காளியாக அவதரித்துப் வா. ஏழாவது பிறவி பற்றி பிறகு சொல்கிறேன் என ஆணையிட்டார். பார்வதி தேவியும் அவ்வாறே ஐந்து பிறவிகளையும்  அவதரித்து முடித்து ஆறாவது பிறவியான காளிதேவியாய் அவதரித்தார்.  வல்லாள கண்டனின் அழிவுக்காலம் நெருங்கியது. 

சிவனைபோன்றே தனக்கும் ஐந்து தலை உள்ளதால் சிவனுக்கு ஈடானவன் என பிரம்மன் கர்வம் கொண்டான். அவனின் கர்வம் போக்க சிவபெருமான் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளினார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. கைகளை உதற உதற மீண்டும் மீண்டும் சிவன் கையிலேயே வந்து ஒட்டிக்கொண்டது அத்தலை. இதுப்போல 99 முறை நடந்தது. சிறிது நேரம் அப்படியே வைத்திருங்கள் என்று பார்வதி சொன்னாள். சிவன் அவ்வாறே செய்ய அத்தலை கபாலமாக மாறியது. ஏற்கனவே கணவனின் தலை கொய்யப்பட்ட கோவத்திலிருந்த சரஸ்வதி, பிரம்மனின் தலை கபாலமாக மாற யோசனை சொன்ன பார்வதிமீது கோபம் கொண்டு   பூலோகத்தில் பிறந்து அலைந்து திரிவாயாக!என சாபமிட்டாள்.  சிவனின் உணவை அக்கபாலமே உண்டதால் சிவன் பிட்சை எடுக்கும் நிலைக்கு ஆளானார். அக்கபாலத்தையே திருவோடாக்கி பிட்சாடனர் கோலம் கொண்டு பிட்சை எடுத்து உலகை வலம் வந்தார். கொடிய உருவத்துடன் பார்வதிதேவியும், பிட்சாடணர் வேடம் கொண்ட சிவனும் எங்கெங்கோ சுற்றி இருவரும் தனித்தனியாக மேல்மலையனூர் வந்து சேர்ந்தனர்.
பார்வதிதேவியிடம் பிட்சை கேட்டார் சிவன். சுவைமிகுந்த உணவை தயார் செய்து சிவனுக்கு பிட்சையிட்டாள் தேவி. ஓரிரு முறை அன்னை இட்ட உணவை கபாலம் ருசித்தது. மூன்றாவது முறை வேண்டுமென்றே உணவை தவறவிட்டாள் தேவி. உணவின் ருசியால் கவரப்பட்ட கபாலம் உணவை உண்ணும் ஆவலில் சிவனின் கையை விட்டு அகன்றது. கையிலிருந்த உணவை வான் நோக்கி வீசிவிட்டு தேவி விஸ்வரூபமெடுத்து கபாலத்தை மீண்டும் வராதவாறு பூமியிலேயே போட்டு அழுத்திவிட்டாள். அத்தோடு இருவரின் சாபமும் அகன்றது. இதைத்தான் மயானக்கொள்ளை விழாவாக மாசிமாதத்தில் கொண்டாடுகின்றனர்.
இதற்கிடையில் வல்லாளகண்டனின் துன்பம் தாளாமல் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். சிவனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்க தேவி அங்காளபரமேஸ்வரியாய் அவதரிக்கும் நேரம் வந்துள்ளது. அவளால் உங்கள் துன்பம் தீருமென அருளினார்.  சிவனின் தோஷத்தை போக்கிய தேவிமீது கோபம் அதிகரித்த சரஸ்வதி தேவி.. சிவனின் சாபத்தை போக்கியவளே! மயானபூமிதான் உன் இருப்பிடம். , மயானக்கரிதான் உன் அலங்காரம், மயானத்தில் எரியும் பிணங்களே உனது உணவென சாபமிட்டாள். சாபம் பெற்ற தேவி மூன்று கண்களும், எடுப்பான பல்லும், இருண்ட மேனியோடு சுற்றியளைந்தாள்.
வல்லாள கண்டன் முன்னொரு முறை கைலாயத்தில் பார்வதிதேவியை கண்டு மோகமுற்றிருந்தான். பார்வதிதேவி சிவனை பிரிந்து மேல்மலையனூரில் காளியாய் பிறந்திருப்பதை அறிந்து சிவன் ரூபங்கொண்டு அன்னையை நெருங்கினான். அன்னை கோபங்கொண்டு விஸ்வரூபமெடுத்து சங்கு, வாள்,அம்பு, வில்,  வீச்சறிவாள், சூலம், கேடயம், கத்தி, பிரம்பு, கபாலம் ஆகியவற்றை கைக்கொன்றாய் ஏந்தி வல்லாள கண்டனோடு போரிட்டாள்.  ஒருக்கட்டத்தில் அத்தனை ஆயுதத்தை வீசியெறிந்து தன் கூரிய நகத்தால் அவன் குடலை கிழித்து மாலையாய் அணிந்து கொண்டு அவன் ரத்தத்தை உறிஞ்சி குடித்து அவனை சம்ஹாரம் செய்தாள். தங்கள் துன்பத்தை போக்கிய அன்னையினை பூமாரி பொழிந்து சாந்தப்படுத்தினர்.

சிவபெருமான், தேவி! எனது பிரம்மஹத்தி தோஷம் போக்க முயன்று சாபம் பெற்று கொடூர உருவமாய் மாறிய உன் உடலெங்கும் நான் லிங்க ரூபமாய் வீற்றிருப்பேன். எங்கள் துயர் தீர்த்த நீ இங்கேயே அங்காள பரமேஸ்வரி எனப்பெயர்கொண்டு உன்னை நாடி வரும் பக்தர்களை வாட்டும் தீயசக்திகளை விரட்டி அவர்களை நலமோடு வாழவைக்க வேண்டுமென அருளினார். அவ்வாறே, அம்பாள் அங்கிருக்கும் ஏரிக்கரையின்மீது கோவில் கொண்டு பக்தர்களின் துயரினை போக்கி வந்தாள்.
ஒருசமயம் கடும் மழைக்காலத்தில் அந்த ஏரி நிரம்பி உடைப்பெடுத்து ஊரே அடித்து செல்லும் சூழல் ஏற்பட்டது. ஏரிக்கரையில் வசிக்கும் செம்பட இனத்தவர் அம்மனை வேண்ட, அன்னை விஸ்வரூபமெடுத்து ஏரிக்கரையில் படுத்து ஏரி தண்ணீர் ஊருக்குள் வராமல் தடுத்து காத்தாள். பெரிய+ஆயி=பெரியாயியாய் திறந்தவெளியில் கோவிலுக்கு வெளியில் படுத்து அருள்புரியும் அன்னைக்கு சேலை சாற்றுவது நல்ல பலனை தரும். தோல் நீக்கிய வாழைப்பழம் ஒரு பங்கு, அதைவிட இரண்டு மடங்கு தேன், வாழைப்பழத்தைவிட மூன்று மடங்கு பசும்பால் கொண்டு தயாரிக்கப்படும் திரிகடுகம்தான் இங்கு நைவேத்தியம்.  இளநீர், மாவிலக்கு, பொங்கல், பானகமும் இங்கு படைக்கப்படுது. உயிர்பலி இங்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று.
அமாவாச, பௌர்ணமி தினங்களில் இங்கு தங்கினால் பேய், காத்து, கருப்பினால் பாதிக்கப்பட்டோரும், மனநிலை பாதிக்கப்பட்டோரும் குணமடைவர். கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு கருவறையில் இருக்கும் புற்றுக்கு ஒரு மண்டலம் பால் ஊத்தி வந்தால் திருமணம் கைக்கூடும். கருவறைக்கு அருகில் சிறு குன்றளவு புத்து உள்ளது. நாகர்கோவில் நாகராஜன் கோவில் போல இங்கும் இந்த புற்று மண்தான் பிரசாதம்.  அமாவாசை அன்று இக்கோவிலில் அம்மன் ஊஞ்சலாட்டு நடக்கும். எல்லா அம்மன் கோவில்களிலும் ஓம் சக்தி பராசக்தின்னுதான் கோஷமிடுவாங்க.இந்த கோவிலில் மட்டும் கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தாவென கோஷமிடுவர். 

அங்காளபரமேஸ்வரிதான் எங்க குலதெய்வம்.. இங்குதான் எனக்கு முதல் மொட்டை எடுத்ததா அம்மா சொல்வாங்க. இந்த கோவிலில் பூசாரிக்கிடையாது. செம்படவ இனத்தவர்தான் இங்கு பூசாரிகள், குறி சொல்வர், பேயோட்டுபவர்ன்னு இருக்காங்க. சைவ பக்தர்கள் இந்த கோவிலுக்கு போக கொஞ்சம் மனதைரியமும் , சகிப்புத்தன்மையும் வேணும்.  ஏன்னா எங்க பார்த்தாலும் உயிர்பலியும், அசைவம் சமைத்தல், அதுக்கான கடைகள்ன்னு இருக்கும்.
அங்காளப்பரமேஸ்வரியின் மூல மந்திரம்.....

ஓங்கார உருவினளே ஓம்சக்தி ஆனவளே 
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே 
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே 
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை,
நன்றியுடன்,
ராஜி..

17 comments:

  1. அங்காள பரமேஸ்வரி விரிவான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. என் அம்மா வீட்டு குலதெய்வமாக்கும்.... அங்கதான் எனக்கு முதல் மொட்டை போட்டது. அதுக்கப்புறம் பல மொட்டை வரிசையாய் விழுந்ததெல்லாம் தனிக்கதை... அதான் கூடுதல் அர்ப்பணிப்பு. பொங்கல் கழிச்சு போய்வருவோம்.

      Delete
  2. பிரம்மஹத்தி தோஷம் பற்றிய கதை சுவாரஸ்யமாக உள்ளது.

    கீதா: கதைகள் எல்லாம் ஓகே.பதிவு அருமை... உயிர் பலி யை மனம் ஏற்க மறுக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மேல்மலையனூர், திருவள்ளூர் அருகிலிருக்கும் பெரிய பாளையத்து கோவில்லயும் உயிர் பலி உண்டு.... இதை என்ன சொல்லுறதுன்னு புரில. ஒரு உயிரை வருத்திதான் இன்னொரு உயிரை வாழ வைக்குற கடவுளை என்ன சொல்ல?!

      Delete
    2. கடவுள் எந்த உயிரையும் பலிகொடுக்க சொல்லவே இல்லை ,உயிர்களை படைத்த கடவுள் அதன் மேல் அவ்வுளவு அன்பு செலுத்துகிறார் .எந்த உயிரையும் ,யாருக்கும் பறிக்க அனுமதி இல்லை ,உங்கள் தவறுதலான புரிதகுக்கு கடவுள் என்ன செய்வார் .

      Delete
    3. கடவுளுக்கு பிடிக்கும்ன்னுதானே செய்யுறோம். எத்தனையோ பேர்க்கு காட்சியளிக்குற கடவுள் எனக்கு உயிர் பலி வேணாம்ன்னு சொல்லலாம். இல்ல, எல்லார் மனசையும் மாத்தலாமே. இது ஈசியாச்சே?!

      Delete
  3. இந்த வருடத்தில் 1௦௦ வது பதிவு இது ராஜிக்கா ...

    வாழ்த்துக்கள்....செம ஸ்பீட்...


    நாங்க ஊருக்கு போற வழியில 2, 3 அம்மன் இந்த மாதரி படுத்த வாக்குல அருள் தருவாங்க..
    நான் அங்க போனதும் இல்ல ..ஆன யோசுச்சது உண்டு என்ன காரணமா இருக்கும்னு...


    இப்போ பெரியாயியாய் பத்தி உங்க மூலமா அறிந்துக் கொண்டேன் ...நன்றி அக்கா

    ReplyDelete
    Replies
    1. 100வது பதிவா?! பார்க்கலைப்பா. வருசத்துல 200 நாள் கழிஞ்சிருக்கு.... அதுல 100தான் போட்டிருக்கேன். 365 நாளும் பதிவு போடனும்ப்பா அனு

      Delete
  4. தகவல்கள் சிறப்பு. படங்களும் அருமை.

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. தான் திங்க உயிர்பலி கொடுத்து விட்டு,(இல்லாத)கடவுள் கேட்டார்ன்னு சொல்றது நம்பும் படியாவா இருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. நாம திங்க ஒரு சான்ஸ் அவ்வளவ்தான். அதுக்கு முன் இப்படி ஒரு காரணம். இப்பதான் தெருவுக்கு நாலு கடை இருக்கு. அப்பயும் ஏன் இந்த உயிர்பலின்னு புரில

      Delete
  6. சொர்ணாம்பிகை என்பதை ஒருநொடி சொர்ணாக்கா என்று படித்து விட்டேன். ஹிஹிஹிஹி... உபன்யாசம் போல சுவாரஸ்யமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. சொர்ணாக்கான்னு என்ன்னை சொல்லலியே

      Delete