Wednesday, July 26, 2017

நெல்லை காந்திமதி அம்மன் ஏக்கம் தீர்ந்த நாள் - ஆடிப்பூரம்

ஒரு பொண்ணு பொறந்து, வளர்ந்து, பூத்து, காதலாகி கசிந்துருகி, கல்யாணம் கட்டி, தாயாகின்னு அத்தனை நிகழ்வும் விசேசமானது. கொண்டாடத்தக்கதும்கூட. சாதாரண மானுட பொண்ணுக்கே இப்படின்னா அகில உலகையும் உருவாக்கி, காக்க துணையாக நிற்கும் இறைவியின் அவதார நிகழ்வுகள் எத்தனை சிறப்பு வாய்ந்ததாய் இருக்கும்?! அத்தகைய சிறப்பு வாய்ந்த நாள்தான் இன்றைய ஆடிப்பூரம். 
நள வருடம்... ஆடி மாதம்... சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும்...., சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த  சுக்ல பட்சம், சதுர்த்தசி திதி, பூரம் நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று அவதரித்து துளசி மாடத்தின்கீழ் பொறுமைக்கு பேர்போன பூமாதேவி ஆண்டாளாய் அவதரித்தாள். பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு சீரும் சிறப்புமாய் வளர்க்கப்பாட்டாள். ஆண்டாளின் ஆதிப்பெயர் கோதை. வடமாநிலங்களில் இவள் பெயர் கோதாதேவி.  விஷ்ணு கையிலிருக்கும்   சங்கும், சக்கரமும், அரங்கனின் படுக்கையான ஆதிஷேசன்கூட ஆழ்வர்களாக அவதாரமெடுத்து அரங்கனை அடைந்ததைக்கண்டு பூமாதேவிக்கு மனக்கலக்கம் உண்டாயிற்று. அவள் கலக்கம் போக்க ஆண்டாளாய் அவதரிக்க அருள்புரிந்தார் எம்பெருமான். அவ்வாறே எழுந்தருளி அரங்கனை சேர்ந்தாள். ஆண்டாள் கதையை விரிவா வேற ஒரு பதிவில் பார்ப்போம்.. 
இந்த ஆடிப்பூர நாளில்  திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தேரோட்டம் நடைப்பெறும். மங்கலமான இந்நாளில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் சகல அம்மன் ஆலயங்களுக்கு சென்று மனதார வணங்கினால், மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்கும். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர் மாலையை தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் ஆண்டாள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். 
.பெண் பூப்பெய்தினால் மட்டுமே தாய்மை அடைய முடியும்.. பெண் தாய்மை அடைந்தல்தான் புது உயிர் படைக்கப்படும்.  இதுக்கு அம்பாளும் விதிவிலக்கல்ல. எத்தனை எத்தனையோ உயிர்களை படைக்க வேண்டிய அம்பாள் ருதுவானது இந்த ஆடிப்பூரத்தில்தான். ஆடி மாதத்தில்தான் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும். இந்நன்னாளில்தான் அன்னை பூப்பெய்தியாக புராணங்கள் கூறுகின்றது.  ருது சாந்தி செய்தாலும் அம்பாள் இன்று மட்டும் அழிக்கும் சக்தியாய் அவதாரமெடுக்கிறாள். அதனால், அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வந்தால் நலம் பயக்கும். அவ்வாறு கோவிலுக்கு செல்ல முடியாதவங்க  வேப்பிலையையே அம்மனாக பாவித்து, செம்பாலான குடத்தில் நீர் நிரப்பி வேப்பிலையை கொத்தாக சொருகி, குடத்தை சுற்றி மஞ்சள் துணியை சுற்றி, வாழை இலை விரித்து, அதில் பச்சரிசி பரப்பி, அதன் மேல் இக்குடத்தை வைத்து, பூமாலைகள் சூட்டி, வண்ண வளையல்கள்  கோர்த்து மாலையாக சூடலாம்...அம்மன் படம் வைத்து, நெய் தீபம் அருகில் இருபக்கமும் ஏற்றவும்..108 அம்மன் போற்றிகளை படித்து, நைவேத்தியம் படைத்து தேங்காய்,பழம் வைத்து கற்பூர தீபம் காட்டி 12 வயதுகுட்பட்ட குழந்தைகள், பெண்களை வைத்து வழிபட்டு பால் பாயசம் போன்ற நிவேதனத்தை வந்தவர்களுக்கு கொடுக்கலாம். பூஜித்த வளையல்கள் இரண்டை எடுத்து அணிந்துகொண்டால் கஷ்டங்கள் தீர்ந்து மங்களம் பெருகும்..
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது வழக்கம்.  மறிகடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும், மாதிரக்கரி எட்டையும், மாநாகமானதையும், மாகூர்மமானதையும, மாமேரு என்பதையும், ஓர் பொறியரவு தாங்கி வரும் புவனமேழையும், புத்தேளிர் கூட்டத்தையும், பூமகளையும், திகிரி மாயவானையும், புலியாடை உடையானையும், படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு விநாயகன் மற்றும் முருகனை ஈன்றும் தனக்கு வளைகாப்பு நடக்கவில்லையே என கவலை உண்டாயிற்று. 
ஈரேழு லோகமும்,  மூவுலகையும் காக்கும் அம்பிகைக்கு இப்படி உண்டான கவலையை கண்ட தேவாதி தேவர்கள், ரிஷிகள், ரிஷிபத்தினிகள், முனிவர்கள், மும்மூர்த்திகள், லட்சுமி, சரஸ்வதி அனைவரும் சேர்ந்து வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தனர். வளைக்காப்பு செய்ய கரு  உருவாக வேண்டுமே என்ன செய்ய?! தட்டைப் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப்பயிறு, சோளம், கம்பு, பருத்தி விதைகளை முளைப்பாறியாக்கி, அம்பிகையின் வயிற்றில் வைத்து கட்டி கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி வளைகாப்பு நடத்தினர்.  விதை முளைத்து வரும் வேளையில் பார்த்தால் ஆண் உயிரணு போல தோணும். அந்த விதையை, பெண் அம்சமான பூமியில் விதைத்தால் ஒரு உயிர் வளரும்.  ஆண், பெண் சேர்க்கையால் வரும் உயிரைப்போலவே பயிரும் கொண்டாடப்படனும்ன்னுதான் இந்த ஒரு ஏற்பாடோ?!
சரி சரி விசயத்தை விட்டு எங்கயோ போய்ட்டோம்...  அம்மனுக்கு வளைகாப்பு செய்து வாய்க்கு ருசியாய் சமைத்து உணவு கொடுத்து அவளை சமாதானப்படுத்தினர்.  அந்நாளை நினைவுக்கூறும் விதமாய் இன்றும் பல அனேக அம்மன் கோவில்களில் அம்மனுக்க்கு வளைகாப்பு நடத்தப்படும். இதற்காகவே அவரவர் இல்லங்களை சுத்தப்படுத்தி நவதானியங்களை பதப்படுத்தப்பட்ட மண்ணில் விதைத்து  கோமியம், சாணம், பால், தயிர், நெய் கலந்து உருவாக்கப்பட்ட பஞ்சக்கவ்வியம் தெளித்து பாதுகாத்து வளர்த்து வருவர். அந்த ‘மூணு’ நாட்களில் உள்ள பெண்கள் இந்த வேலையிலிருந்து ஒதுங்கியிருந்து முளைப்பாரி தயார் செய்து ஆடிப்பூரத்தன்று அம்மன் சன்னிதியில் சேர்ப்பர். முளைப்பாரியின் வளர்ச்சியினை கண்டு வீடும் நாடும் எந்தளவுக்கு செழிப்பா இருக்கும்ன்னு கணிப்பர். 
அன்னை, அழகு ரூபம் கொண்டு பல்லாயிரக்கணக்கான கண்கள் கொண்டவளாகத் தோன்றியதால், சதாக்ஷீ (சத + அக்ஷம் – கண்) ஆனாள். ஆயிரமாயிரம் கண்களால் அருள்பார்வை நோக்கிய அம்பிகையின் திருவடிவில்,  அற்புதம் – தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், கனிகள், கீரைகள், மூலிகைகள் என்று பற்பல உணவுகளை, தமது திருமேனியெங்கும் நிறைத்தும் தாங்கியும் அன்னை காட்சி தந்தாள்.
சாகம்பரி (சாக – காய்கனி தொடர்பாக; அம்பரம் – ஆடை; காய் கனிகளையே ஆடையாகத் தரித்தவள்) ஆனாள். உலகின் தவிப்பைத் தீர்த்து உணவிடுவதற்காக, தாமே உணவுக் களஞ்சியமாக அன்னை அருள்பாலித்த வடிவமே, சாகம்பரி தேவி! பரதேவதை, சாகம்பரியாக ஆவிர்பவித்து,கோடி சூரியப் பிரகாசம் தன்னுள் ஐக்கியப்பட்ட அம்பிகை தன் கரத்தில் தாமரை ஏந்தியிருக்க அந்தத் தாமரையை வண்டுகள் சுற்றிச் சூழ்ந்திருப்பது போல் காய்கள், கனிகள், வேர்கள், கிழங்குகள் போன்றவற்றை அவளுடைய பற்பல கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும்அன்னை சாகம்பரி தேவி
திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறும். இந்த வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை. 
கல்மாஷபாதன்ன்ற சோழ மன்னனுக்கு கல்யாணமாகி ரொம்ப நாளாகியும் குழந்தை பாக்கியம் இல்லை.  இவன் சிறந்த சிவபக்தன். தனக்கு வாரிசு வேண்டுமென அகத்திய முனிவரிடம் யோசனை கேட்டான். மன்னனின் குறை தீர திருவரங்குளத்தில் மறைந்திருக்கும் சிவலிங்கத்தை த்தேடி  வணங்க சொன்னார். மன்னனும் அத்தலம் சென்று தேடி சிவலிங்கத்தை கண்டுப்பிடித்து  கோவில் கட்ட சென்று இறைவனை தேடினான். 

இடையர்கள் கொண்டுச்செல்லும் பூஜைப்பொருட்கள் குறிப்பிட்ட இடத்தில் இடறி விழுவதை கண்ட மன்னன் அந்த இடத்தில் தன் வாளால் கீறிப்பார்த்தான். அப்போது பூமியிலிருந்த சிவலிங்கத்தின் தலைமீது வாள்பட்டு ரத்தம் பீய்ச்சி அடித்தது. இதைக்கண்டு பயந்த மன்னன்... மாபெரும் தவறு செய்துவிட்டேனென உயிரை மாய்த்துக்கொள்ள சென்றான். மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதிதேவியுடன் திருமணக்கோலத்தில் காட்சிதந்ததோடு பிள்ளைச்செல்வமும் அருளினார். இந்த நிகழ்வு ஆடிப்பூரத்தன்று நிகழ்ந்தது. இறைவன் அருளால் மன்னன் குலம் விளங்க ஆண்குழந்தை பிறந்தது. 
இதுமட்டுமில்லாம பெரும்பாலும் எல்லா அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. இந்த மாதிரி பத்துநாள் பிரம்மோற்சவம்  திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு விரைமலர் குழல்வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை எனுமளவுக்கு அத்தனை கோலாகலம். 
எல்லா கோவில்களிலும் அம்மன் வளைக்காப்புக்கென பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு, அதையே பிரசாதமாக பக்தர்களுக்கு தருவர். இதை வாங்கி அணிந்துக்கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அப்பாக்கியம் கிட்டுமென்பது நம்பிக்கை...  இன்னாளில் ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. இன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பர். ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்யம், செல்வ செழிப்பு உண்டாகும். இந்நாளில் சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் பெற அவள் பாதம் பணிவோமாக.
ஆடிப்பூர தேரோட்டம்....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467411

தமிழ்மணம் ஓட்டு பட்டை...
Godess Durgaநன்றியுடன்,
ராஜி.

21 comments:

  1. காணொளி பிறகு காண்பேன்
    த.ம.1

    ReplyDelete
  2. அருமையான,அழகான அம்மன் திருவுருவக் காட்சிகளுடன் கூடிய பதிவு....... நன்றி,அருமையான விளக்கத்துக்கு...........

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  3. appo tiruvatiraik kalikku enna artham

    ReplyDelete
    Replies
    1. சிதம்பரத்தில் வாழ்ந்த சேந்தனார்ன்ற விறகுவெட்டி தினமும் இறைவனுக்கு உணவை படைத்து, அதை சிவனடியார்களுக்கு கொடுத்துதான் சாப்பிடுவார். மழைக்காலமாதலால் வேலைக்கு செல்லமுடியாம வறுமை வாட்ட பகவானுக்கு படைக்க அரிசி வாங்கக்கூட பணமில்லாததால மனம் நொந்து வீட்டிலேயே பட்டினியாய் இருந்தார். அப்போது சிவனே அடியார் கோலம் பூண்டு சேந்தனார் வீட்டுக்கு வந்து பிட்சை கேட்டார். வீட்டில் அரிசி இல்லாததால் இருந்த கேழ்வரகு மாவைக்கொண்டு களி செய்து பரிமாறினார். களி மிக ருசியாய் உள்ளதென கூறி களியை விரும்பி உண்டதோடு இரவு உணவுக்கென கேட்டு மிச்ச களியையும் கொண்டு சென்றார்.

      காலையில் கோவிலை திறந்த குருக்கள்கள் கருவறையில் களி சிந்தியிருப்பதை கண்டு மன்னனுக்கு சொல்ல்லி அனுப்பினர். அதேவேளையில் மன்னனின் கனவில் அடியார் ஒருவர் வீட்டில் களியுண்டதை சொன்னார். கோவிலுக்கு வந்த மன்னன் கனவில் வந்ததை கூறி அடியவரை தேடிக்கண்டுப்பிடிக்க தேர்திருவிழாவை ஏற்பாடு செய்தார். அத்திருவிழாவுக்கு சேந்தனாரும் வந்து சேர்ந்தார். மன்னனுக்கு சேந்தனாரை அறிமுகப்படுத்த எண்ணிய பெருமான் திருவிழா தேரை பள்ளத்தில் அமிழச்செய்தார். சேந்தனாரை பதிகம்பாடி தேர்க்காலை பள்ளத்திலிருந்து எழும்பசொல்லி அசரீரி பணித்தது. அவ்வாறே சேந்தனார் பதிகம் பாடி தேர் பள்ளத்திலிருந்து எழும்பி ஓடத்தொடங்கியது. சேந்தனார் புகழ் பரவியது.

      இந்நிகழ்வு நிகழ்ந்தது மார்கழிமாத திருவாதிரை நட்சத்திரத்தில் . அதனால்தான் களி செய்து படைக்கின்றனர். காலப்போக்கில் கேழ்வரகு மாவு உளுந்து மாவானது. இதான் சகோ திருவாதிரைக்களியின் வரலாறு

      Delete
  4. ஆடிப்பூரம் பற்றிய அனைத்து செய்திகளும் சிறப்பு...

    எங்கிருந்து தான் இத்தனை செய்திகளை பெறுகீர்களோ...அருமை ராஜிக்கா..

    ReplyDelete
    Replies
    1. வார வழிப்பாட்டில், அங்கிருக்கும் புத்தகங்கள், தினசரி நாளிதழ், நம்ம கூகுளார்ன்னு அங்கங்க கொஞ்சம் கொஞ்சம் சேர்ந்து பதிவாகுது

      Delete
  5. அறிந்தேன் வரலாறு! த ம 3

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  6. ஆடிப் பூரம் பற்றி அறிந்து கொண்டோம். நன்றி

    ReplyDelete
  7. ஆடிப்பூரம் சிறப்புத் தகவல்கள் நன்று.

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  8. சுவாரஸ்யமான தகவல்கள். பக்திப்பதிவு. ஆறாவது வாக்கு என்னுது!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும், ஓட்டுக்கும் நன்றி சகோ

      Delete
  9. எல்லாமே நம்பிக்கைதான் ஆதாரம் எதுவுமில்லை :)

    ReplyDelete
    Replies
    1. உணர்வுகளுக்கு எப்படிண்ணே ஆதாரம் காட்டமுடியும். கடவுள் என்பது ஒரு உணர்வு. உணரும்வரை மட்டுமேதான் அது கடவுள். இல்லன்னா அது வெறும் மரம், கல், சாணம், மஞ்சள், புற்று.....

      Delete
  10. ஆடிப்பூரம் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  11. ஆடிப்பூரம் முடிந்த பின் மெதுவா வந்து வாசிக்கிறோம்...இருந்தாலும் நல்ல தகவல்கள். அருமையாருக்கு சகோ/ராஜி!!

    ReplyDelete
  12. விதை - பூமி - பயிர் - நல்ல உவமாணம்

    சதாக்ஷி- நூறுகண்ணுடையாள் (சதம் - நூறு) சச்சின் சதம் அடித்தார்னு சொல்றோமே அதே மாதிரி

    ஸஹஸ்ராக்ஷி - ஆயிரம் கண்ணுடையாள் (ஸஹஸ்ரம் - ஆயிரம்)

    ReplyDelete