Friday, June 19, 2020

ஸ்ரீதட்ஷிணாமூர்த்தி சுவாமிகள், பள்ளிதென்னல்-பாண்டிச்சேரி சித்தர்கள்.

கடவுள் விசயத்தில் இருவேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும்,  இத்தனை சித்தர்கள் ஒரே இடத்தில் ஜீவசமாதியானது அதிசயத்திலும் அதிசயம்தான்.  நம்மை மிஞ்சிய சக்தியின் அருள் இல்லாமல் இது சாத்தியமில்லை என்பது புரியும்.  நேரமின்மை காரணமாக பல சித்தர்களின் ஜீவசமாதிகளை தரிசனம் செய்யமுடியவில்லைஇருந்தாலும் இறையருளும் குருவருளும் இருந்தால் விரைவில் மீதமுள்ள ஜீவசமாதி கோவில்களுக்கு சென்று அதைப்பற்றியும் ஒரு நீண்ட தொடர் எழுத ஆசை. போனவாரம் நாம ஸ்ரீ வண்ணாரபரதேசி சுவாமிகளின் ஜீவசமாதியை பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் தரிசித்தோம். அந்த வரிசையில் இந்த வாரம் நாம பார்க்கப்போவது பள்ளித்தென்னல்ல இருக்கிற ஸ்ரீதட்ஷிணாமூர்த்தி சுவாமிகளின் ஜீவசமாதியினை...

பாண்டிச்சேரி சித்தர்கள் அடங்கிய வழிகாட்டி கையேட்டில் குறிப்பிட்டிருந்த சித்தர்கள் ஜீவசமாதிகளில் நேரமும், வாய்ப்பும் கிடைக்கப்பெற்று ஜீவசமாதிகளை  தரிசித்து கடைசியில் எங்க குழுவுக்கு கொடுக்கப்பட்ட நேரம் கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் இருந்தது. இனியும் நிறைய ஜீவசமாதிகள் இருக்கே! அங்கெல்லாம் எப்படி சென்று தரிசனம் செய்வது என்று ஒருவித மனக்குறையுடன்தான் இந்த சித்தரின் ஜீவசமாதிக்கு வந்தோம். நாங்க போனபோது முன்பக்க மண்டபத்தினை பெரிசுப்படுத்தும் வேலை நடந்துக்கிட்டிருந்தது. எங்களுடன் வந்த சிவனடியார்கள் தேவாரப்பாடல்களை பாட ஆரம்பித்தனர்.  எல்லோரும் மனம் அந்த பாடல்களில் லயித்து,  மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த அதேவேளையில் என்மனத்திற்குள் ந்த இடங்களைலாம் தரிசனம் செய்ய என்ன புண்ணியம் செய்தேனோ?! எம் இறைவா! உன் அடியார்களை தரிசனம் செய்யவைத்து, பின் உன்னை தரிசனம் செய்து உன்னை வந்தடைய சொல்கிறாயோ என்று மனமுருக வேண்டி நின்றதில் நேரம் போனதே தெரியலை. இத்தோடு டூர் முடிஞ்சு போச்சே! வீட்டுக்கு போனால் சமைக்கனும், கூட்டனும், துவைக்கனும், அடுக்கனுமேன்ற நினைப்போ என்னமோ வழக்கமா பதிவுக்காக கதைக்கேட்கும் ஆவலும் இல்லை. அமைதியாக அந்த சித்தர் சமாதியில் சித்தரை தொழுதபடி நின்றிருந்தேன். எல்லோரும் வணங்கிவிட்டு எங்களை கூட்டிவந்த வாகனத்தில் ஏற ஆரம்பித்தனர். 

சரி, நானும் சித்தர்களிடமிருந்து விடைபெறும் நேரம் வந்துட்டுதுன்னு நினைச்சுக்கிட்டு வண்டியில் ஏறும்முன் சித்தர் ஜீவசமாதியை ஒருமுறை வலம் வந்துட்டு கிளம்பலாம்ன்னு ஜீவசமாதியை சுற்றிவந்தேன்.  எல்லா ஜீவசமாதி கோவில்களிலும்  சித்தரை பற்றியும் அவரது சமாதியை பற்றியும் யாராவது ஒருவர் சொல்ல அதை கேட்டுதான் இங்கே பதிவுசெய்வேன். ஆனா, இங்க சித்தரே எனக்கு அவரது வரலாற்றை சொல்வதுப்போல அந்த இடத்தின் பக்கவாட்டில் ஒரு பிளெக்ஸ் போர்டில் பெரியதாக இந்த ஸ்ரீதட்ஷிணாமூர்த்தி சுவாமிகளின் வரலாறு வைக்கப்பட்டிருந்தது. அதை சித்தரே என் முன்வந்து சொல்வதுபோல் இருந்தது. .அதை முழுவதும் படித்து மனதில் பதிய வைத்து நாங்கள் வந்த வேனில் மகிழ்ச்சியாக சென்று அமர்ந்துகொண்டேன் .அப்பொழுது மெதுவாக இந்தசித்தரின் வரலாறு கண்முன்னே வந்து சென்றது.

புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் பாதையில் கண்டமங்கலம் அருகே  இயற்கை எழில் கொஞ்சும் தென்னல்ன்ற ஊரில் உள்ள அய்யனார் கோவில் குளத்தின் வலப்பக்கம் இந்த ஸ்ரீதட்ஷிணாமூர்த்தி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது. இந்த சித்தரின் பூர்வீகம் தாய், தந்தையர் யார்?எங்கிருந்து வந்தார் என அந்த ஃப்ளெக்ஸ் போர்டில் இல்ல. சுவாமியை தெரிஞ்ச  யாருக்கும்  அந்த விவரங்கள் தெரியாதுப்போல! ஒருநாள் தென்னல் கிராம மணியக்காரர் லட்சுமி நாராயண ரெட்டியார் என்பவர் தங்கள் ஊரில் பசியுடன் ஒருவர் அமர்ந்திருப்பதை கண்டார். அவர் உள்ளூர்காரர்  இல்லை. யாரோ ஒரு வெளியூர்க்காரர்  போல் இருக்கிறது அவர் பார்ப்பதற்கு மகான் போல் இருக்கிறார்ன்னு உணர்ந்து அவருக்கு வயிறார விருந்து படைத்தார். மகானும் இந்த லட்சுமி நாராயண ரெட்டியாரின் உபசரிப்பில் மனம்மகிழ்ந்தார். அவரது நண்பர்களுள் ஒருவரான வரதராஜ கவுண்டர் என்பவரும் இந்த மகானை பின்வரும் நாளில் நன்கு உபசரித்தார். அவர் தட்ஷிணாமூர்த்தி சுவாமிகளின் ஆன்ம நிலையைக்கண்டு அவருக்கு சேவைகள் செய்துவந்தார். அவரது சேவையை பாராட்டி சித்தரும் இந்த வரதராஜ கவுண்டரை தனது சிஷ்யராக ஏற்றுக்கொண்டார். தட்ஷிணாமூர்த்தி சுவாமிகளும் பெரும்பாலான நேரங்களில் வரதராஜ கவுண்டரின் வீட்டில்தான் தங்கி இருப்பார்.

இந்த சமயத்தில் வரதராஜ கவுண்டரின் பக்கத்து வீட்டில் அய்யாசாமி என்பவர் வசித்துவந்தார். அவரின் குருநாதர் சேமங்கல சுவாமிகள். சேமங்கல சுவாமிக்கு தன்னைவிட கல்வியில் சிறந்தவர் யாருமில்லை என்கிற அகங்காரம் உண்டு. வழியில் யார் சென்றாலும் அவர்களை வலியச்சென்று வம்புக்கு இழுத்து, எதாவது கேட்டுக்கொண்டே இருப்பார். ஒருநாள் அய்யாசாமி அவரது வீட்டிற்கு அவரது குரு சேமங்கல சுவாமிகள் வருவதாக சொல்லி தடபுடலாக ஏற்பாடு செய்துக்கொண்டிருந்தார். இதைகேள்விப்பட்ட வரதராஜ கவுண்டர்சேமங்கல சுவாமிகள் எப்படியும் தட்ஷிணாமூர்த்தி சுவாமிகளிடம் வம்புக்கு இழுத்து வீண்வாதம் செய்வார் என்று நினைத்துதட்ஷிணாமூர்த்தி சுவாமிகளை கோவிலுக்கு செல்லலாம் என அவசரப்படுத்தி அழைத்தார். அவரின் பதட்டத்தை உணர்ந்த சுவாமிகள் நீ ஒன்றும் பயப்படாதே! நீ நினைப்பது போலவே சேமங்கலம் சுவாமிகள் இங்கு வரத்தான் போகிறார். என்னிடம் கேள்விகளை கேட்பார்வாக்குவாதம் நடக்கும். உனக்கு ஒரு பிரச்சனையும் வராது எனக்கூறி வரதராஜ கவுண்டரை சமாதானப்படுத்தினார். இதற்குள்ளாகவே சேமங்கலம் சுவாமிகள் அங்கு வந்துவிட்டார். அவர் தட்ஷிணாமூர்த்தி சுவாமிகளின் துறவுக்கோலத்தை பார்த்து எள்ளி நகையாடினார்அவர் சித்தரை அவமதிக்கும்  வண்ணம் சீண்டிப்பார்க்க எண்ணி, நீர் எந்த ஊர்?! எங்கிருந்து வருகிறீர்?! என ஆணவமாக கேட்டார். சித்தரும் அதற்கேற்ப நீரும் நானும் ஒரே ஊரில் இருந்துதானே கிளம்பினோம். அதற்குள் மறந்துவிட்டதா என்று எடைக்கு மூடாக்காக பதிலளித்தார் இதை கேட்ட சேமங்கலம் சுவாமிகளுக்கு கோபம் வந்துவிட்டது.

உடனே தத்துவம் சார்ந்த கேள்விகளை கணையாக தொடுத்தார். அவை அனைத்திற்கும் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் அமைதியாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனாலும் சேமங்கலம் சுவாமிகளுக்கு ஆணவம் அடங்கவில்லைஎப்படியும் சித்தரை அடிபணிய வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் குதர்க்கமாக பலகேள்விகளை கேட்கத் தொடங்கினார். இவரின் ஆணவத்திற்கு நாம் தேவை இல்லாமல் பதில்சொல்லி கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த சித்தர்இனியும் இவருடன் வாதிடுவது வீண் என எண்ணி அந்த வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். அதன்பின் அவர் எங்கு சென்றார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவரது சீடர்களும் பக்தர்களும் அவரை தேடி அலைந்தனர்.

இந்த நிலையில் சித்தரை வம்புக்கு இழுத்த சேமங்கலம் சுவாமிகளுக்கு பாரிசவாயு நோய் தாக்கியது. தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு தான் செய்த வம்பினால்தான் எனக்கு இந்த நோய் தண்டனையாக வந்தது என்று வேதனையடைந்தார். தான் செய்த தவறுக்கு மானசீகமாக மன்னிப்பு கோரினார் சேமங்கலம் சுவாமிகள். இவரது மனமாற்றத்தை உணர்ந்த  தட்சிணாமூர்த்தி சுவாமிகள் திடீரென தோன்றினார். இதுவரை காணாமல் போன சித்தர் அவர்முன் காட்சியளித்தது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.. மேலும் நோயினால் பாதிக்கப்பட்ட உடலை சித்தர் அன்போடு தடவிக்கொடுத்தார். உடனே சேமங்கலம் சுவாமிகளின் உடலில் உள்ள நோய் குணமாகியது. செய்த தவறை உணர்ந்த அவர் உடனே தடாலென சித்தரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கோரினார். அவரை சித்தர் மன்னித்து தன சீடர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்.  

வரதராஜ கவுண்டர் வைத்திய தொழில் செய்பவர். ஒருமுறை அவர் ஒரு ஜமீன்தாருக்கு வைத்தியம் செய்ய புறப்பட்டார். அந்த சமயத்தில் வரதராஜ கவுண்டருக்கு உடல்நிலை சரியில்லை. அவரை வைத்தியத்திற்கு போகவேண்டாமென அவரது மனைவி தடுத்தார். அவர் பேச்சையும்மீறி வரதராஜ கவுண்டர் கிளம்பினார். அப்பொழுது நான் திரும்ப வரும்வரை தனது வீட்டிற்கு காவலாக இருக்குமாறு தட்சிணாமூர்த்தி சித்தரிடம் கேட்டுக்கொண்டார். தட்சிணாமூர்த்தி சுவாமிகளும் சரியென்று தலையசைத்து அந்தவீட்டின் திண்ணையில் அமர்ந்துக்கொண்டார். வரதராஜ கவுண்டரின் மனைவி, தனது கணவர் பத்திரமாக சென்றாரா? என்ன செய்கிறாரோ என புலம்பிக்கொண்டிருந்தார்.  ஒவ்வொரு செயலையும் அவரின் மனைவிக்கு சொல்லிக்கொண்டிருந்தார். வீட்டிற்கு வந்த வரதராஜகவுண்டரிடம் அவரது மனைவி சுவாமிகள், ஜமீந்தார் வீட்டில் நடந்த நிகழ்வுகளை சொல்லி, இதெல்லாம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் சொன்னதாக சொல்லி, இது நடந்ததா எனக் கேட்டார்.  ஆமாம், அவர் சொன்னது எல்லாமே சரிதான். அவர் இங்கிருந்தபடியே எல்லாவற்றையும் பார்க்கும் சக்திகொண்டவர் என்று அவருடைய பெருமையைக்கண்டு ஆச்சரியமடைந்தார்.

ஒருநாள் வேலூர் கொண்டாரெட்டியார் என்பவர் சித்தரை விருந்துக்கு அழைத்தார். சுவாமிகளுக்கு திருவோட்டில் உணவு பரிமாறப்பட்டது. கொண்டாரெட்டியாருக்கு வாழை இலையில் பரிமாறப்பட்டது. இரண்டுபேரும் ஒன்றாக சாப்பிட்டனர். அப்பொழுது கொண்டாரெட்டியாரின் மனைவி ,சித்தரின் தோற்றத்தையும் திருவோட்டில் அவர் உணவு உண்ணுவதையும் பார்த்து அவரை தரக்குறைவாக மதிப்பிட்டார். இந்த சாமியார் எந்த சாதியோஎந்த குலமோஎங்கெல்லாம் பிச்சை எடுத்து உண்டுகொண்டு திரிபவரோஇவர் என் கணவருக்கு சரிசமமாக உட்கார்ந்து உணவருந்துகிறாரே என ஏளனமாக மனதிற்குள் கருவிக்கொண்டிருந்தார். அந்தப்பெண் மனதில் நினைத்ததை அறிந்த சித்தர் தனக்குள் சிரித்துக்கொண்டார். விருந்து முடிந்ததும் அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது எதற்காக சிரித்துக்கொண்டிருந்தீர் என கொண்டாரெட்டி கேட்டார்.  கொண்டாரெட்டியாரின் மனைவி எண்ணியதை அப்படியே சொல்லி சிரித்தார். இதைக்கேட்டு திடுக்கிட்ட கொண்டாரெட்டியாரின் மனைவி மனம் வருந்தி சித்தரின் பாதங்களில் விழுந்து தன்னை மணிக்கும்படி பணிந்து நின்றார்.

ஒருநாள் வெளியே சென்றிருந்த சித்தர் திடீரென வரதராஜ கவுண்டர் வீட்டிற்கு வந்தார். தான் பிச்சை எடுத்துக்கொண்டு வந்த உணவை உருண்டை உருட்டி வரதராஜ கவுண்டருக்கும், அவரது மனைவிக்கும் உருண்டையாக உருட்டிக் கொடுத்தார். நீங்கள் இருவரும் ஜீவன் முக்தி அடைவீர்கள் என்று மனதார வாழ்த்தினார். கணவனும் -மனைவியும் சித்தரின் இந்த திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணம் என தெரியாமல் குழம்பி நின்றனர். இதுபற்றி அவர்கள் சித்தரிடம் கேட்டதற்குநாளைக்கு நான் எங்கிருந்து வந்தேனோ அந்த ஊருக்கு திரும்பி செல்ல வேண்டும்அதற்கான ஏற்பாட்டை செய் எனக் கூறிவிட்டு வரதராஜ கவுண்டரின் வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுவனிடம் நாளைக்கு எனக்கு 108 குடம் தண்ணீர் ஊற்றுவாயா?! எனக்கேட்டார் சித்தர்அவர் எதற்காக கேட்கிறார் என்று  புரியாத சிறுவன் சரி சாமி என தலையாட்டிவிட்டு சென்றுவிட்டான்.

 மறுநாள் பொழுது புலர்ந்தது. அந்த சிறுவன் சொன்னபடி 108  குடங்கள் தண்ணீர் கொண்டுவந்து வைத்துவிட்டு, தட்சிணாமூர்த்தி சித்தரை குளிப்பாட்டினான். பிற்பகல் உணவை அங்கு தம்மை காணவந்த அனைவருடனும் அமர்ந்து உண்டார். பிறகு எல்லோரிடமும் பேசிட்டு தவத்தில் அமர்ந்தார். நேரம் நகர்ந்துகொண்டே இருந்தது. சித்தர் கண்களை திறக்கவே இல்லை. அவரது ஆன்மா இறைவனை தேடிச்சென்றது சுவாமிகள் முக்தியடைந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட வரதராஜகவுண்டர், மனதை தேற்றிக்கொண்டு மிகுந்த மனவருத்தத்துடன் சித்தரின் இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று தயாரிக்கப்பட்டு அதில் அமர்ந்த நிலையில் சித்தரின் உடல் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தட்சிணாமூர்த்தி சித்தர் மறைந்துவிட்டார் என்பது அந்த கிராமத்தில் மாடு மேய்க்கும் சிறுவனான செங்கேணி என்ற சிறுவனின் காதுகளுக்கு எட்டியதுமாடுகளை அப்படியே விட்டுவிட்டு சித்தரின் உடலை காண ஓடிச்சென்றான். அவன் பசியோடு இருக்கும் நாட்களில் சுவாமிகள் பிச்சை எடுத்து வந்த உணவை அவனுக்கு கொடுத்து அவனது பசியை போக்குவார்இதனால் வேதனையுடன் சித்தரின் உடலை  பார்த்து ரதத்தின் அருகே சென்று ஐயா என்னிடம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டீர்களே என கதறி அழுதான். 

அப்பொழுதுதான் ஒரு அதிசயம் நடந்ததுரதத்தில் இறுதி ஊர்வலம் சென்றுக்கொண்டிருந்த சித்தரின் ஆன்மா உடலில் மீண்டும் புகுந்துசித்தர் கண்விழித்து முகத்தை திருப்பி சிறுவன் செங்கேணியை பார்த்து சிரித்தபடி "தம்பி போகிறேன் "என்றார்அந்த அதிசய காட்சியை பார்த்து அனைவரும் பரவசமடைந்தனர். மீண்டும் சித்தரின் ஆன்மா அவரது உடலைவிட்டு பிரிந்து சித்தர் சமாதி நிலைக்கு சென்றார். இந்த தட்சிணாமூர்த்தி சுவாமிகள் சவுமிய வருடம் ஆனி மாதம் 26ம் தேதி (07-07-1909-)ம் ஆண்டு  வெள்ளிக்கிழமை பிற்பகல் 2  மணிக்கு முக்தியடைந்ததாக கூறப்படுகிறது. தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் பூத உடலை பள்ளித்தென்னல் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு வடக்கே உள்ள குளக்கரையில் சமாதி செய்து அங்கு ஒரு சிறிய கோவிலும் கட்டப்பட்டது. தினசரி அவரது ஜீவசமாதியில் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இவரை தரிசனம் செய்ய வந்துக்கொண்டே இருக்கிறார்கள். 

இந்த சித்தர் சமாதி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளித்தென்னல் என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. இந்த ஊர் பாண்டிச்சேரிக்கு மிக அருகில் இருக்கிறது. பள்ளித்தென்னல் பஸ் ஸ்டாப்பிலிலிருந்து 100 மீட்டர் தொலைவிலும், கண்டமங்கலத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் திருவாண்டர் கோயிலிலிருந்து 8 கிமீ தொலைவிலும், வில்லியனூரிலிருந்து 4 கி.மீ, தொலைவிலும் சின்னா பாபு சமுத்திரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 5 கிமீ தொலைவிலும், புதுச்சேரி மெயின் பஸ் ஸ்டாண்டிலிருந்து 13 கிமீ தொலைவிலும், புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 14 கிமீ தொலைவிலும், புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து 16 கி.மீ., தொலைவிலும், வில்லியனூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், விழுப்புரம் மெயின் பஸ்ஸ்டாண்டிலிருந்து 26 கி.மீ.தொலைவிலும், விழுப்புரம்  ரயில் நிலையத்திலிருந்து 27 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 164 கிமீ தொலைவிலும், சென்னை ஏர்போர்ட்டிலிருந்து 153கிமீ தொலைவிலும் இந்த சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. 

தட்சிணாமூர்த்தி சுவாமிகள் முக்தியடைந்த தினமான ஆனி மாதம் 26 -ம் தேதி  ஒவ்வொரு வருடத்திலும் அவரது குருபூஜையாக சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்த ஜீவசமாதி கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் தட்சிணாமூர்த்தி சித்தர் வழிபட்டதாக கூறப்படும் லிங்கம் ஒன்று சுவாமிகளின் சமாதிக்கு அருகிலேயே இருக்கு. இந்த லிங்கத்தின் ஆவுடையார் சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. ஆத்ம ஞான தீப ஒளி சன்மார்க்க சங்க சபையினரால் இந்த தட்சிணாமூர்த்தி சித்தரின் ஜீவசமாதி பரமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சித்தரை மனதார வழிபடுபவர்களுக்கு தங்களது நியாமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுவது இங்கு வந்து சித்தரை வணங்கிவிட்டு செல்பவர்களது அனுபவபூர்வமான உண்மை. ஃபிளெக்சில் படித்த இந்த வரலாற்றை மனதுக்குள் அசைப்போட்டபடியே சித்தரை மனதார தொழுது வண்டியில் ஏறி அமர்ந்தேன்வண்டி பாண்டிச்சேரியின் ECR ரோடுவழியாக பாண்டிச்சேரியை விட்டு மெதுவாக எங்கள் ஊர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. எத்தனை எத்தனை சித்தர்கள் இந்த மண்ணில்?! அவர்கள் எல்லாரையும் பார்க்கும் புண்ணியம் கிடைக்காவிட்டாலும்முடிந்த அளவு சில சித்தர்களை தரிசனம் செய்த திருப்தியுடனும், மீதி இருக்கும் சித்தர்களையும் விரைவில் வந்து வணங்கி அவர்களைப் பற்றியும் பதிவு செய்யவேண்டும் என்று எனது பிரார்த்தனையையும் இந்த புதுவை மண்ணில் விட்டு செல்கிறேன். இத்துடன் பாண்டிச்சேரி சித்தர் சமாதிகளுக்கான பயணம் நிறைவுற்றது. மீண்டும் விடுபட்ட சித்தர்களின் ஜீவ சமாதியை வணங்கியபிறகு, தொடர்வேன்.

படங்கள் கூகுள்ல சுட்டது.’

நன்றியுடன், 

ராஜி  

6 comments:

  1. சித்தரின் வரலாறு சிறப்பு...

    ReplyDelete
  2. வணங்குகிறேன்.

    ReplyDelete
  3. நன்று.

    நம்பிக்கை இருந்தால் எல்லாம் நலமே....

    ReplyDelete
  4. நன்றி, குரு சரணம் 🙏🏽🙏🏽🙏🏽

    ReplyDelete
  5. Thanks குருவே சரணம் குருவே போற்றி நன்றிகள் கோடி

    ReplyDelete