Friday, December 22, 2017

சனீஸ்வரன் யந்திராலயம் - ஏரிக்குப்பம். ஆரணி - புண்ணியம் தேடி


பொதுவா ஒருத்தங்களுக்கு கண்டகச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி  இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும்போது நவக்கிரக ஹோமம், சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது மிக  அவசியம். அஷ்டமத்தில் சனி இருக்கும்போது அல்லல்பட்டவர்கள் பலர். நளன், சிவப்பெருமான், அசுரகுருவான சுக்ராச்சாரியார், பாண்டவர்கள்,  ராவணன், சீதைன்னு தொடங்கி, நீங்க, நான்ன்னு இந்த பட்டியல் தொடரும். அதனால, இந்த மூன்று சனியால் பீடிக்கப்பட்டவங்க பரிகாரம் செஞ்சுக்க வேண்டியது அவசியம். சனீஸ்வர பகவான், அவருக்குண்டான பரிகாரம்ன்னாலே திருநள்ளாறுதான் நினைவுக்கு வரும். ஆனா, ஆரணில இருந்து சுமார் 12 கிமீ தூரத்தில் ஏரிக்குப்பம்ன்ற திருத்தலத்தில் யந்திர ரூபமாய் அருளும் சனீஸ்வர பகவான் ஆலயத்திலும்  பரிகார பூஜைகளை செய்யலாம். 


 எந்திரம்ன்னாலே அது செப்பு தகட்டில் செஞ்சதா இருக்கும். ஆனா, இந்த கோவிலில் சித்தர்களால்  கல்லில் எந்திரம் செஞ்சு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கு.    இக்கோவிலில் சனிபகவான் யந்திர வடிவில் 5 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட அறுகோண வடிவத்தில்  அருள்புரிகிறார். அதர்ன் போக்க  ஆறு முனைகளில் திரிசூலமும், அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமார் வடிவங்களும் இருக்கு.  யந்திர சிலையின் மேல்பக்கம் தென்புறமாக சூரியனும், நடுவில் ஸ்ரீசனீஸ்வரபகவானின் வாகனமான காகத்தின் உருவமும், வலப்புறமாக சந்திரனும் இருக்காங்க. அவற்றின் கீழே ஷட்கோண யந்திரமும் நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டிருக்கு.  மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்களும் இந்த யந்திரத்தில் பொறிக்கப்பட்டிருக்கு. ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்திருப்பது ஒரு சிறப்பு. . இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் பார்க்கவே முடியாது.
சனி பகவான் பணம், பதவின்னு எதையும் பாராமல் தராசு முள் மாதிரி நடுநிலையா நின்னு அவரவரக்கு நீதி வழங்குவார். மன்னாதி மன்னர்களும், தேவாதி தேவர்களும் இவர் பிடியில் துன்பப்பட்டபோது, அற்ப மானிடப்பிறவி நாம எம்மாத்திரம்?! தாளமுடியாத துன்பங்களை தந்தாலும், சனிபகவான் இளகிய மனம் கொண்டவர். அன்பாக வேண்டிக் கேட்டால், கேட்டதைத் தந்துவிடுவார். சனீஸ்வர அஷ்டோத்திர மந்திரத்தை ஜெபித்து சனி பகவானை சாந்தப்படுத்திய பிறகுதான் பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. சனீஸ்வர ஸ்தவராஜ ஸ்தோத்திரம் சொல்லித்தான் தனது நாட்டை திரும்பப் பெற்றான் நளன்.


பொண்டாட்டிங்கன்னாலே இம்சைங்கதான் போல! அதுக்கு சனிபகவானும் விதிவிலக்கல்ல. உலகத்தையே ஆட்டி படைக்கும் சனிபகவான் சிறந்த சிவ பக்தர். இருந்தாலும் விஷ்ணுவையும் வணங்குபவர், சனிபகவானுக்கு குழந்தை இல்லை. அதனால அவர் மனைவி தேஜஸ்வி மிகுந்த மனவேதனையில் இருந்தாள். ஒருமுறை சனிபகவான், பெருமாளை நோக்கி தவமிருந்த வேளையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், சனிபகவானை நெருங்கி அவர் எதிரில் காத்திருந்தாள். தவத்திலிருந்த சனிபகவான் அவள் காத்திருப்பை உணராததால், கோவங்கொண்டு, உன் பார்வை நேரடியாக யார்மீது பட்டாலும் அவர்கள் உருப்படாமல் போவார்கள் என சபித்து சென்றாள். அதனால், அன்றிலிருந்து, கீழ்ப்பார்வை குனிந்த தலை நிமிராமல் இருப்பார். அவருக்கு உதவும் பொருட்டு அவர் அருகிலேயே  அவரின் அன்னை சாயாதேவி எந்திர வடிவில் தரையில் புதைக்கப்பட்டு  மகனுக்கு அருள்பாலிக்கிறார்.  அம்மா பக்கத்திலிருந்தா எல்லாரும் கப்சிப்ன்னு இருக்குற மாதிரி இங்க சனிபகவானும் அமைதியா சாந்தமா இருக்கார். 


சனிபகவான், யந்திர வடிவில் அதும் கல்லால் ஆன யந்திரத்தில் அருள்பாலிக்க காரணம், கல் எதுக்கும் அசைந்துக்கொடுக்காது. அதுமாதிரி உறுதியாக சனிபகவான் தன் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்ன்னும்,    ” நேத்திரத்தைக் காகம் போல் நிச்சயமாய்க் காக்க, ஆத்துமத்தில் ஆனந்தமாய் “  ன்ற ஔவையாரின் வாக்கிற்கேற்ப,   இரு பக்கங்களிலும் சூரிய சந்திரர்களை வைத்து நடுவில் காகத்தை வச்சிருக்காங்க. சூரியனாகிய வலதுவிழி நாட்டத்தையும், சந்திரனாகிய இடதுவிழி நாட்டத்தையும் புருவ மத்தியாகிய முத்தித் தலத்தில் வைக்க (காகம் பார்ப்பதைப் போல் ஒரு மனநிலையில்) ஆறுமுகப்பட்டையான ஸ்ரீமுருகப் பெருமான் ஜோதி  தரிசனம் கிடைத்திடும். இந்த ஆறாவது அவதாரத்தைத் தாண்டி ஏழாவது ஆதாரத்திற்கு சென்றால், சிவனைத் தரிசனம் செய்யலாம். அங்கிருந்து வழியும் யோக -சோம பானத்தை இந்திரன்போல அனுபவித்து மகிழலாம். இதன்மூலம் ஸ்ரீஆஞ்சனேயர்போல் நம் உடலை கல்போல காயகற்பம் செய்து காயசித்திக்கான வழியைப் பெற பரிபாஷையாக இந்த யந்திரத்தை ஸ்தாபித்து சித்தர்கள் வழிபட்டிருக்காங்க.


இனி கோவில் அமைந்த வரலாற்றை பார்க்கலாம்..

நீர் வளமும் ,நில வளமும் நிறைந்து செழிப்புடன் விளங்கிய ஏரிக்குப்பத்தை 1535-ம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்துவந்த ராஜநாராயண சம்புவராய மன்னரின் படைத்தளபதிகளில் ஒருவராக விளங்கிய வையாபுரி என்பவர் இவ்வழியாக குதிரையில் சென்றுகொண்டிருந்தபோது, குதிரை நிலை தடுமாறி கீழே விழுந்ததால், வையாபுரிக்கு இடதுகாலில் முறிவு ஏற்பட்டு, குதிரைக்கும் பலத்த அடி ஏற்பட்டது. அச்சமயம் ஒரு பெண் சாமியாடி, இங்கு, தான் இருப்பதாகவும் தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறும் சனிபகவான் கூற்றை வெளிப்படுத்த,  உடனே வையாபுரி பிரார்த்தனையில் ஈடுபட்டார். அவருடைய எலும்புமுறிவு குணமடைந்தது. பிறகு அந்த கிராமத்தில் ஸ்ரீசனீஸ்வரபகவானுக்கு கோவில் எழுப்பிட முனைந்தார். அப்போதைய இறையருள் வல்லுனர்கள் சனிபகவானுக்கு யந்திர , பீஜாட்சர வடிவில் சிலை செய்ய ஆலோசனை கூறினர். அதன்படி, 6 சாஸ்திரங்கள், 4 வேதங்கள் மற்றும் 64 கலைகளும் கற்று இறைமார்க்கமாக  வாழ்வை செலுத்தும் வேத விற்பன்ன சிவாச்சாரியர்களின் மந்திர யந்திர வடிவங்களால், ஸ்ரீசனீஸ்வரருக்கு பிரத்தியேக சிலா ரூபம் உருவாக்கப்பட்டு , ஸ்தாபனம் செய்யப்பட்டு , 4 கால பூஜைகளும் நித்திய ஹோம அனுஷ்டானங்களும், செய்யப்பட்டு , அந்த யந்திர ரூபத்திற்கு பலமூட்டி , அதன் தேஜஸினால், அனைத்து மக்களின் வினைகளும் நீங்கி செழிப்புற செய்தனர்.


முப்பதாண்டுகள் வாழ்ந்தவருமில்லை. முப்பதாண்டுகள் வீழ்ந்தவரில்லைன்னு சனிப்பெயர்ச்சியினை மனதில் வைத்து ஒரு சொலவடை இருக்கு. அது மனித வாழ்க்கைக்கு மட்டுமின்றி, இந்த கோவிலுக்கும்தான் போல!! சிறப்பாய் நடைப்பெற்று வந்த சனீஸ்வர யந்திர வழிபாடு  நாளடைவில் மன்னர்களின் போர், , ஆட்சி மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால் கவனிப்பாரற்றுப் போயிடுச்சு. வழிபாடு இல்லாததால் மக்களும் இக்கோவிலுக்கு வருவதில்லை. அதனால், கோவில் இடிந்து யந்திரச்சிலையும் மண்ணுள் புதையுண்டது.சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் ஆடு மேய்க்கும் சிறுவர்களால் இந்த யந்திரம் வெளிப்பட்டது. உடனே, கிராம அலுவலருக்கு விவரம் சொல்ல, அவர்  தொல்பொருள் நிபுணர்கள் வரவைத்து ஆராய்ந்ததில் 15-ம் நூற்றாண்டில் இருந்த யந்திர சனிபகவான் என அறியப்பட்டது.  அகழ்வாய்வாளர்களும் இதை ஆய்வு செய்து அதன் தொன்மையை உறுதி செய்தாங்க.  அந்த யந்திர சிலையை அவ்வூரிலேயே பழைய இடத்தில் சிறிய கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு  நித்திய அனுஷ்டான பூஜைகளும், சனிக் கிழமைகளில் சிறப்பு ஹோமம் மற்றும்  அபிஷேக ஆராதனைக்ளும் நடைபெற்று வருது.

திருமணப் பிராப்தி, குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, லக்ஷ்மி கடாட்சம், சனீஸ்வர ப்ரீத்தி மற்றும் சகல தோஷ நிவர்த்தி வேண்டி பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து , அபிஷேக அர்ச்சனைகள் புரிகின்றனர். எள் முடிச்சிட்ட தீபம் , நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றி வேண்டுதல் புரிகின்றனர். 9 வாரங்கள் தொடர்ந்து இங்கு வந்து வழிபாடு செய்து, வேண்டும் வரங்களை பெற்றுச் செல்கின்றனர்.  பக்தகோடிகள் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள ‘ பாஸ்கர தீர்த்தம் ‘ என்ற தீர்த்தக் குளத்தில் நீராடி தலத்தில் வழிபட்டு செல்கின்றனர். இந்த பாஸ்கர தீர்த்தம் நளன் தீர்த்தத்துக்கு ஒப்பானது.
சனி பகவானை சந்தோஷப்படுத்த,  சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், எண்ணெய் தானம் செய்தல்,  எள் தானம், நீல நிற வஸ்திர தானம், சனி பகவானுக்கு எள்சாதம் நைவேத்தியம் செய்தல், தர்மசாஸ்த்தா ஐயப்பனை  வழிபடுதல் , ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம  பாராயணம் செய்தல், ராமாயண பாராயணம், சுந்தரகாண்ட பாராயணம், அரச மரத்தை வலம் வருதல்,  ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ன்னு லிஸ்ட் நீளுது.  இதுபோன்ற நல்ல காரியங்களைச் செய்பவர்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்  என சனி பகவான் சத்தியம் செய்துள்ளதாக சாஸ்திரங்கள் சொல்லுது.

இப்படிப்பட்ட சனிபகவான் ஒவ்வொரு ராசியும் உயிர்வாழ்வதற்குக் காரணமான ஜீவநாடியாகும். எனவே சனிபகவானை ஆயுள்காரகன்ன்னும் உயிர்காரகன்ன்னும் சொல்றாங்க. ஒரு குழந்தை பிறந்தால், அதற்குண்டான அற்பாயுள்- மந்திம ஆயுள்- பூர்ணாயுள் என்பன போன்ற ஆயுள் பலத்திற்கு  ஆயுள்காரகனாகிய சனிபகவானே  ஒருவரது  ஆயுளுக்கு  அதிபதியாக அமைகிறார்.  இப்படிப்பட்ட சனி அந்தக் குழந்தையின் ஜாதகத்தில் நல்லவிதமாகவல்லவா அமைந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால், ஆயுள்  பலத்திற்கு எப்படி உத்தரவாதம் அளிக்கமுடியும்? ஆகவே இப்படிப்பட்ட சனிபகவனை வணங்காமல் எப்படி இருப்பதாம்?!இங்கு துலாபாரம் செலுத்தும் வழக்கமும் உண்டு. குழந்தை வரம் வேண்டி, நிறைவேறியவர்கள்  நெல், சர்க்கரை, பணம்ன்னு அவரவர் வசதிப்படி வேண்டிக்கிட்டு இங்கு துலாப்பாரம் இடுறாங்க. பொதுவா சனிபகவான் கோவிலில் நேருக்கு நேர் நின்னு கும்பிட மாட்டாங்க. அதேமாதிரி கோவில் பிரசாதமான விபூதி, குங்குமம் உள்ளிட்ட அர்ச்சனை பொருட்களை வீட்டுக்கு கொண்டு போகமாட்டாங்க., ஆனா, இங்க அப்படி எதும் கண்டிசன் இல்ல. காரணம் இறைவன் இங்கு யந்திர வடிவில் இருப்பதால்தான். 
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் வட்டத்தில் இந்த ஆலயம் இருக்கு. திருவண்ணாமலை வழியா வர்றவங்க திருவண்ணாமலை டூ வேலூர் அல்லது போளூர் போகும் பஸ்சில் ஏறி, சந்தைவாசலில் இறங்கி அங்கிருந்து ஆட்டோக்களில் வரலாம். அதேப்போல வேலூரிலிருந்து வர்றவங்க, வேலூர் டூ திருவண்ணாமலை, படைவேடு செல்லும் பஸ்சில் ஏறி சந்தைவாசலில் இறங்கி வரலாம். சென்னைல இருந்து வர்றவங்க, நேரா ஆரணி பஸ் பிடிங்க. எங்க வீட்டுக்கு வாங்க விருந்து சாப்பிடுங்க. அங்கிருந்து 12கிமீ தூரம்தான் இந்த கோவில். வண்டி, ஆட்டோ, பஸ்சுன்னு போயிடலாம். மெயின்ரோட்டிலிருந்து ஒரு கிமீ தூரம் வயல்வெளிகள் சூழ்ந்த பாதையில் நடந்து கோவிலை அடையலாம்.  ஆரணி மற்றும் போளூரிலிருந்துதான் நேரடி பேருந்து இருக்கு.


ஏரிக்குப்பம் ஸ்ரீ சனிபகவான் துணை:

ங்கடம் தீர்க்கும் சனி பகவானே

மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவு இன்றி சனீஸ்வரத் தேவே
இச் சகம் வாழ இன்னருள் தருவீரே!
ஏரிக்குப்பம் சனீஸ்வரா போற்றி
ஏரிக்குப்பம் சனீஸ்வரனே போற்றி
ஏரிக்குப்பம் பொங்கும் சனிபகவானே போற்றி
ஏரிக்குப்பம் அஷ்டம சனி சாந்தம் போற்றி
ஏரிக்குப்பம் ஏழரைநாட்டு சனிபகவானே போற்றி
ஏரிக்குப்பம் நளதீர்த்தம் உடைய சனி பகவானே போற்றி
ஏரிக்குப்பம் வன்னிபுத்ர அர்ச்சனைபிரிய சனிபகவானே போற்றி
ஏரிக்குப்பம் எல்லோருக்கும் நல்லருள் தரும் சனிபகவானே போற்றிபோற்றி!
இதை அனைவரும் பாராயணம் செய்ய அனைத்து நன்மைகளும் உண்டாகும். சனிபகவான் நல்லருள் எப்போதும் கிடைக்கும்!!!


முகவரி :
ஸ்ரீசனீஸ்வரர் பகவான் கோவில்,
திருஏரிக்குப்பம் கிராமம்,
களம்பூர் அஞ்சல்,
திருவண்ணாமலை மாவட்டம்,
தொலைப்பேசி எண்: 04181 248224/248424

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்,
ராஜி.

9 comments:

 1. நேரத்துக்கேற்ற பதிவு. சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 2. ஏரிக்குப்பம் ஸ்ரீ சனிபகவான் பற்றி அறிந்து கொண்டேன்

  ReplyDelete
  Replies
  1. சக்தி வாய்ந்த கோவில்ப்பா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 3. புதிய தகவல். நன்றி.

  ReplyDelete
 4. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 5. தங்கள் மொபைல் எண் தேவை

  என் மொபைல் எண் 9688316613

  அழைக்கவும்

  மிக்க நன்றி

  ReplyDelete