Showing posts with label பண்டிகை. Show all posts
Showing posts with label பண்டிகை. Show all posts

Friday, August 09, 2019

இந்தியாவின் ஹஸ்பண்ட் டேன்னு வரலட்சுமி விரதத்தை சொல்லலாமா?!


கல்யாணத்தப்போ என் கால்ல விழுந்தது. அதுக்கப்புறம் என் பொண்டாட்டி என் கால்ல விழவே இல்லன்னு  புலம்பும் ஆண்கள் நிறைய உண்டு. ஆனா, ஒருசில சமுகத்தாருக்கு இந்த ஏக்கம் வருடத்துக்கு ஒருமுறை தீரும். ஒரு சில ஆண்களின் ஏக்கத்தை தீர்க்கும் நாள் வரலட்சுமி விரதமாகும்.  இன்றைய தினம் , வீட்டுக்காரர், குழந்தை, குடும்பம்லாம் நல்லா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டு விரதமிருந்து அம்பாளை கும்பிட்டு வீட்டுக்காரர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் நன்னாளே இந்நாள். வெள்ளைக்காரன் பாதர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு கொண்டாடுனா கிண்டல் பண்ணுறோம். ஆனா, நாம புருசனுக்காக கொண்டாடும் இந்த பண்டிகையை கிண்டல் செய்யமாட்டோம். வரலட்சுமி நோன்பை இந்தியாவின் ஹஸ்பண்ட் டேன்னு சொல்லலாமோ?!
Raja Ravi Varma - Collections - Google+

பத்ரச்வரஸ்ன்ற மன்னன் சிறந்த விஷ்ணுபக்தன். அவன் மனைவி சுரசந்திரிகா, இவர்களின் மகள் சியாமபாலா. தங்கள் மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்து கொடுத்தனர். காலங்கள் ஓடின.   ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள். மூதாட்டியின் வடிவெடுத்து வந்தது அந்த மகாலட்சுமி தேவியே. வரலட்சுமி விரதத்தின் அருமை, பெருமைகளை சொன்ன மூதாட்டி, அந்த விரதத்தை கடைபிடிக்குமாறு சுரசந்திரிகாவிடம் சொன்னாள். வந்திருப்பது லட்சுமிதேவி என்பது அவளுக்கு தெரியவில்லை. ஏதோ பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாக கருதி அவமானப்படுத்தி விரட்டினாள் சுரசந்திரிகா. லட்சுமி தேவி ஒரு இடத்திற்கு வருவது சாமான்ய காரியமல்ல. அரண்மனையை தேடி வந்தவளை விரட்டினாள் அங்கு இருப்பாளா? அந்த இடத்தை விட்டு அகன்றாள் லட்சுமி தேவி. விளைவு? மணி மகுடத்தையும், செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா.
சுரசந்திரிகா அரண்மனையை  விட்டு அகன்ற மகாலட்சுமி நேராய் அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். தாயைப்போல உதாசீனப்படுத்தாமல்  கர்ம சிரத்தையுடன் கேட்டு, பயபக்தியுடன் வரலட்சுமி பூஜையை செய்து வழிப்பட்டாள். விரதத்தின் மகிமையால் மலைப்போல செல்வம் குவிய துவங்கியது.. பெற்றோர் வறுமையில் இருப்பதை அறிந்த சியாமபாலா ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அனுப்பித்தாள்.  அவள் அனுப்பி வைத்தாலும் அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே! அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம்,  அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே   ஒரு பானை தங்கமும் கரியாக மாறி விட்டது!! இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சியாமபாலா, வீடு தேடி வந்த லட்சுமிதேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொண்டாள். வரலட்சுமி விரதத்தின் மகிமைகளை தாய்க்கு எடுத்து சொன்னாள். தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து, அகம்பாவத்தை போக்குமாறு மகாலட்சுமியை மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகா. வரலட்சுமி விரதம் மேற்கொண்டு பூஜை, வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இதனால் இழந்த செல்வங்களை மட்டுமின்றி ஆட்சி, அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றது.

முன் ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள்,  நீங்கி நாம் நலமோடு வாழ தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன. ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் செய்யும் . ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.
வீடு வாசலை சுத்தம் செய்து, வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு மண்டபம் அமைத்து, ஒரு மனையில் கோலம் போட்டு,  லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம்  வைத்து மலர் மாலை, கதம்ப பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சில வீடுகளில் தங்கம் அல்லது வெள்ளியில் வரலட்சுமி உருவம் வைத்திருப்பார்கள். கலசத்தின் மீது இதை வைத்து பூஜை செய்வார்கள். அவ்வாறு வைத்திருந்தால் கலசம் வைத்து அதன்மேல் தேங்காய் வைத்து பட்டுத்துணி, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் உள்ளே நீர்விட்டு ஏலக்காய், பச்சை கற்பூரம், வாசனை திரவியங்கள் சேர்க்க வேண்டும் அல்லது கலசத்தில் அரிசி, பருப்பு நிரப்பியும் செய்யலாம். அந்த தேங்காயில் வரலட்சுமி உருவத்தை பொருத்தி அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், சுண்டல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
ஒருமுறை பார்வதியும், பரமசிவனும் சொக்கட்டான் விளையாடி கொண்டிருந்தனர். அவ்விளையாட்டுக்கு பரமசிவனின் பணிப்பெண்ணான சித்திரநேமி என்ற தேவர்குலப்பெண் நடுவராய் இருந்தாள். ஆட்டத்தின் முடிவில் பரமசிவன் வெற்றி பெற்றதாய் அறிவித்தாள். தன் எஜமானுக்கு சாதகமாய் சிவன் வெற்றி பெற்றதாய் சித்திரநேமி மீது கோவம் கொண்ட பார்வதிதேவி, சித்திரநேமிக்கு தொழுநோய் வருமாறு சபித்தாள். தன்மீதுள்ள பாசத்தால் சித்திரநேமி அப்படி நடந்துகொண்டாள், அவளுக்கு சாபவிமோசனம் கொடு என பரமசிவன் பார்வதிதேவியை சாந்தப்படுத்தியபின், தேவ கன்னிகைகள், எப்போது குளக்கரையில் வரலட்சுமி விரதமிருப்பார்களோ, அப்போது உன் சாபம் நீங்குமென சொன்னாள். சித்திரநேமி பூமிக்கு வந்து, யாருமில்லாத ஒரு குளக்கரையில் தன் வாழ்நாளை கழித்து வந்தாள். அக்குளக்கரைக்கு தேவக்குல பெண்கள் வரலட்சுமி விரதமிருக்க வந்தனர். அவர்கள் வரலட்சுமி விரதமிருப்பதை கண்டதும் சித்திரநேமியின் சாபம் நீங்கியது. அன்றிலிருந்து சித்திரநேமியும் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்கலானாள். 

உற்றார், உறவினர்கள், அக்கம் பக்கம் இருக்கும் சுமங்கலி பெண்கள், குழந்தைகளை பூஜைக்கு அழைக்கலாம். அனைவரும் சேர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலா வல்லி மாலை, லலிதா சகஸ்ர நாமம், லட்சுமி காயத்ரி போன்றவற்றை சொல்லி விரதம் முடிக்கலாம். தீபாராதனை முடிந்ததும் வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நோன்பு கயிறு, முழு தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரித்து நைவேத்ய பிரசாதங்களை வழங்க வேண்டும்.

பக்தியோடு  நோன்பிருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே மனகசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் மாதிரியான அன்னதானம் செய்யலாம். . எளியோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தர, சாருமதி கனவில் தோன்றி, வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்க அறிவுறுத்தினாள். இறை வழிப்பாட்டோடு, கணவனையும், மாமனாரையும், மாமியாரையும் சேர்த்து வணங்கி நீண்ட ஆயுளோடு, செல்வ செழிப்புடனும், சுமங்கலியாய் வாழ்ந்தாள். சாருமதியின் செயல்பாட்டை பொருத்தே இன்றும் விரதமிருப்பவர்கள்  கணவன், மாமியார், மாமனார் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுவதும் உண்டானது..

வெறும் செல்வச்செழிப்புக்கு மட்டுமில்லாம மாமனார், மாமியார் உறவு மேம்படவும் இவ்விரதம் வழிவகை செய்யுது.  ஆன்மீக காரணங்களுக்காகவும், செல்வத்துக்காகவும் நோன்பு இருக்கோமோ இல்லியோ! மாமியார், மாமனார் மனசு மகிழவும், புகுந்த வீட்டாரின் அன்பு கிடைக்கவும், கணவன் நெஞ்சில் நீங்கா இடம்பிடிக்கவும் விரதம் இருக்கலாமே!

நன்றியுடன்,
ராஜி.

Thursday, January 17, 2019

உழைப்பாளிகளை கௌரவிக்கும் காணும் பொங்கல்

பொங்கல் பண்டிகை மொத்தம் நாலு நாள் கொண்டாடப்படுது. முதல் நாள் போகின்னு சொல்லப்படும் இந்திரனுக்கான விழா, அடுத்த நாள் பொங்கல்ன்னு சொல்லப்படும் சூரியபகவானுக்கு நன்றி சொல்லும் நாள். அடுத்து மாட்டுப்பொங்கல்ன்னு சொல்லப்படும் உழவுக்கு பயன்படும் கால்நடைகளை சிறப்பிக்கவும், அதுக்கு நன்றி சொல்லவும்ன்னு பண்டிகை கொண்டாடி மகிழ்கின்றோம். அப்புறம் எதுக்கு காணும் பொங்கல்ன்னு கேட்டா, மூணு நாள் வேலை செஞ்சு டயர்டாகி இருப்போமே! அதுக்கு ரெஸ்ட் எடுக்கன்னு, குடும்ப இஸ்திரிகளும், ஊர் சுத்தி பார்க்கன்னு சிறுசுகளும், பொங்கல் செலவு என்னாச்சுன்னு கணக்கு பண்ணன்னு குடும்ப இஸ்திரன்களும் சொல்வாங்க. ஆனா, விவசாயத்துக்கு மூலாதாரணமான மழை, சூரியன், கால்நடைகள் மட்டுமல்ல, விவசாய நிலத்தில் இறங்கி வேலை செய்யும் வேலையாட்களும்தான்.

விவசாயம் செய்ய நிலமும், விதை, கடப்பாரை, மண்வெட்டி,உரம் மாதிரியான பொருட்கள் வாங்க பணமும் இருந்தாலும் சரியான, நம்பிக்கையான, உழைப்பாளி இல்லன்னா சரிவர விளையாது, அப்படியே விலைஞ்சாலும் விளைஞ்ச பொருட்கள் வீடுவந்து சேராது. அந்த உழைப்பாளிகளை சிறப்பிக்கும் விதமே இந்த காணும் பொங்கல். காணும் பொங்கல்ன்றது இன்றைய நாளில் நடப்பதுமாதிரி சினிமா, பீச்ன்னு சுத்துற பண்டிகையா முன்பு இருந்ததில்லை.
பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வதே “கனு’ பொங்கல். அன்றைய தினம் காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்டவெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்புலாம் வச்சு, சூரியனுக்கு அர்ப்பணிப்பார்கள். இதுவே, இன்னிக்கு காணும் பொங்கலாகிட்டு. இன்னிக்கு புத்தாடை அணிந்து, சொந்தங்களை சந்திச்சு மகிழ்ந்திருப்பாங்க, முன்னலாம் பண்டிகையின் முக்கியத்துவமே சொந்த பந்தங்களோடு கூடியிருப்பதே! இன்றைய சீரியல் உலகில் இதுலாம் மாறிட்டுது,

இந்த காணும் பொங்கல் பெண்களுக்கானதும்கூட, பொங்கலன்று பொங்கல் பானை உள்ளிட்ட 5 பானைகளில் கட்டப்பட்ட மஞ்சள் கிழங்கை வயசுல பெரிய 5 சுமங்கலிடம் கொடுத்து, அவங்க அதை கல்லில் இழைத்து தர நெற்றியில் பூசிக்கொள்வாங்க.   ஒருவேளை அப்படி 5 சுமங்கலிகள் கிடைக்கலைன்னா புருசன்கிட்டயே கொடுத்து இழைத்து வச்சுக்கலாம்.

இரண்டு மஞ்சள் இலைகள் (அல்லது) வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ (மொட்டை மாடியிலோ) கணுப்பிடி வைப்பாங்க. கணுப்பிடி வைக்குமிடத்தைக் கோலமிட்டு, செம்மண் பூசி வைப்பாங்க. முதல்நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம்ன்னு தனித்தனியே ரெடி செய்வாங்க.  சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக கணக்கில் எடுத்துப்பாங்க. ஒவ்வொரு வகை சாதத்திலயும் ஏழு இல்லன்னா ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைப்பாங்க.. வெற்றிலை-பாக்கு,பழம்,தேங் காய், கரும்புதுண்டு, மஞ்சள் அட்சதை  பூக்கள்லாம் ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் எடுத்து வச்சிக்கிட்டு 

காக்காப் பிடி வச்சேன்
கணுப்பிடி வச்சேன்
காக்கைக்குக் கல்யாணம்
கண்டவர்களுக்குச் சந்தோசம்
கூடப் பிறந்த சகோதரர்கள்
எந்நாளும் குறைவில்லாமல் சந்தோசமாய் வாழனும்..

ன்னு பாட்டு படிச்சு படையல் இடனும்..இவ்வாறு வைத்து முடித்ததும் தீபம் ஏற்றப்படும். கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம்லாம் இல்லாம பார்த்துக்கனும். அட்சதையையும் பூக்களையும் தூவி தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பாங்க. கணுப்பிடி வைத்த சாதத்தை, நாய், பூனைலாம் எச்சில் பண்ணாம பார்த்துக்கனும். காக்கா, குருவி மாதிரியான பறவைகளுக்கு இதை உணவா கொடுப்பாங்க.
மார்கழி மாசம் முழுக்க, அதிகாலையில் நீராடி வாசலில் கோலமிட்டு, அதன் நடுவே வைக்கும் கைப்பிடி சாணத்தை பிள்ளையார் ஆக்கி அதில் மஞ்சள் பூசணிப்பூ வைத்து வழிபட்டு வந்த பிள்ளையாரை, மதியம் 12க்குள் எடுத்து,  காயவச்சு பத்திரப்படுத்தி வருவாங்க. இதை காப்புக்கட்டு அன்னிக்கு ஒருகூடையில் எடுத்து வச்சிடுவான்க.காணும் பொங்கலன்னிக்கு வீட்டில் செய்த கலவை சாதம் முறுக்கு, பொரி, கரும்பு, பலகாரவகைகளுடன் குடும்பத்தோடு  ஆற்றங்கரை ஏரிக்கரை, கோவில், குளம், மலைன்னு போய் வருவாங்க. கோலாட்டம் ,கும்மி, டான்ஸ், பாட்டு..ன்னு அமர்களப்படும்.
Image may contain: one or more people, tree and outdoor
இப்படி கணுப்பிடி வைத்த பெண்கள் அன்னிக்கு நைட் சாப்பிட மாட்டாங்க.  இந்த கணுப்பிடி நோன்பு உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுது.கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ ன்னு ஒரு சொலவடையே இருக்கு. கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்னிக்கு சமைத்த சாதத்தை,  மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இந்த சொலவடையின் அர்த்தம். பிறந்த வீட்டுச் சீராகப் பெண்களுக்குப் பணமோ, துணியோ பிறந்த வீட்டில் தருவாங்க. வாய்ப்பு கிடைச்சா தாய்வீட்டுல மதிய உணவு சாப்பிடுவது வழக்கம்.
No photo description available.
காணும் பொங்கலை கன்னி பொங்கல், கன்று பொங்கல் ன்னும் சொல்வாங்க. திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும், ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகனும்ன்னு வேண்டிப்பாங்க. காணும் பொங்கல் பத்தி இத்தனை பார்த்தாச்சு. உழைப்பாளிகளை பத்தி ஆரம்பத்துல ஏதோ சொன்னியேம்மான்னு முணுமுணுக்காதீங்க.

நில உரிமையாளர்கள் காணும் பொங்கலன்னிக்கு தங்கள் வயலில் வேலை செய்த விவசாய கூலிகளுக்கு துணி, அரிசி, பருப்பு, பணம்ன்னு கொடுத்து, விருந்து வச்சு கௌரவிப்பது வழக்கம்.  இதுமாதிரியே, நெசவு, பானை செய்றவங்க, வண்டி ஓட்டுறவங்க, பாய்பின்னுறவங்கன்னு  எல்லா தொழில் முதலாளிகளும் தங்கள்கிட்ட வேலை செய்யும் தொழிலாளிகளை கௌரவிச்சாங்க. இதுவே இப்ப பொங்கல் இனாமா வந்தி நிக்குது. 
Image may contain: one or more people and people standing
என் தாத்தா காணும்பொங்கல் அன்னிக்கு காலைல புதுத்துணி உடுத்திக்கிட்டு வாசல் திண்ணைல உக்காந்துக்குவார்.  அவர் காலில் விழும் பெரியவங்களுக்கு நாலணா தருவார். அதைகூட உனக்கு மட்டும்தான் அதிகமா தரேன். மத்தவங்களுக்குலாம் கம்மிதான். அவங்கக்கிட்ட சொல்லிடாதன்னு சொல்வார். சின்னவங்களுக்கு  ஆரஞ்ச் புளிப்பு மிட்டாய் தருவார். இதுக்காகவே ரெண்டு மூணு பாக்கெட் மிட்டாய் வாங்கி வச்சுப்பார். வெள்ளை வேட்டி, காமராஜர் மாதிரி தொளதொளன்னு சட்டையும், அந்த மிட்டாயை வச்சிக்கிட்டு அவர் உக்காந்திருக்கும் தோரணையும் அடடா! 

 சகோதரர்களின் நல்வாழ்வுக்கும், உழைப்பாளிகளை கௌரவிக்கவும் கொண்டாடப்படும் இந்த விழா இப்ப வெறும் பொழுதுபோக்கா மட்டுமே இருக்குறது வேதனை. காணும் பொங்கல்ன்னா ஊர் சுத்தி பார்க்குறதுன்னு ஆகிப்போச்சு. இந்த நாளில்,  இறைவனை, சொந்தங்களை, உழைப்பாளிகளை, சகோதரனை காணும் நாள்ன்னு இனிவரும் தலைமுறைக்கு எப்படி புரிய வைக்க போறோம்ன்னுதான் தெரில!!


என் வலையுக சகோதரர்கள் அனைவரும் நல்லா இருக்கனும்ன்னு நானும் வேண்டிக்குறேன். 
நன்றியுடன்,
ராஜி

Monday, January 14, 2019

தள்ளவேண்டியதை தள்ளி, கொள்ளவேண்டியதை கொண்டு...

பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழையனவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாள் இது.  அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரம்ன்னு நம்முடைய தீயகுணங்களை விட்டொழித்து புதுமனிதனாக மாறுவதன் அடையாளமாய், வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  “போகி” என்றானது.  இதனால் வீட்டின் மீதான திருஷ்டி விலகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. 

போகியன்னிக்கு நம்மோட பித்ருக்கள் நம்ம வீட்டுக்கு வருவதா சாஸ்திரம் சொல்லுது. அதனால, அவர்களுக்குப் பிடித்த உணவைப்   படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீபாராதனைச் செய்து வணங்கனும்.  இதுவே அன்றைய காலங்களில் பின்பற்றப்பட்ட வழக்கம். ஆனா, இப்ப அதிகாலையில் எழுந்து குப்பைகளை கொளுத்துவதோடு முடிஞ்சு போச்சுது. வெறும் குப்பைகளை மட்டும் எரிக்குறதில்லை இந்த பண்டிகையின் நோக்கம்.   இன்றைய தினத்தில் நம் தீய எண்ணங்கள், குணங்கள், நடத்தைகளை எரித்து,   தை பிறக்கும் நாள் புதிய எண்ணங்களுடன் ஒரு புதிய மனிதனாக உருவெடுக்க வேண்டும் என்பதே இப்பண்டிகையின் நோக்கம். 
இந்திரனுக்கு 'போகி' என்றொரு பேரு இருக்கு. இந்திரன் மழைக்குரிய கடவுளா நம் புராணங்கள் சொல்லுது. அதனால,  அவரை வழிப்பட்டால், மழை பொழிந்து பயிர்கள் செழிக்குமென  மக்கள் நம்பினர். நீரின்றி அமையாது உலகுங்குறதால, உலக இயக்கத்துக்கு முக்கிய காரணியான வருணபகவானுக்கு முதல்நாள் நன்றி சொல்லி கொண்டாடுகின்றனர். 

பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து வாங்கி வருவதுன்னு சகலரும்  பிசியா இருப்பாங்க. விவசாயிகள் விளைப்பொருட்களின் அறுவடையிலும், நெசவாளர்கள், மண்பாண்டம் செய்வோர், நகை செய்வோர்ன்னு சகலரும் தங்கள் தொழிலை கூடுதல் நேரமெடுத்து செய்வதால் அவர்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். அந்தக்காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப்போனது. 
போகிபண்டிகை கொண்டாடும் வழக்கம், நம்ம ஊர், ஆந்திரா, தெலுங்கானா, வடநாடுகளிலும் உண்டு. இன்றைய தினத்தில் வாசலில் வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூவை சொருகி வைப்பர். வைகறையில் 'நிலைப்பொங்கல்' வைப்பாங்க.  வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றை நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வீட்டு தெய்வத்தை வணங்குவர். இதை வீட்டின் மூத்த சுமங்கலி பெண்கள் நடத்துவார். போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் செய்து படைப்பாங்க. ஒருசிலர் போகி அன்று இறந்தவர்களின் நினைவாக சர்க்கரை பொங்கல், கருவாட்டு குழம்பு வைத்தும் வழிபடுவாங்க.  போகி எரிக்கும்போதும், நிலைப்பொங்கல் வைக்கும்போதும் சிறுவர்கள் பறை மாதிரியான மேளத்தை அடிப்பாங்க. 

ஆனா, இன்னிக்கு பண்டிக்கைக்கான நோக்கம் மறைந்து வெறும் கொண்டாட்டமே மிச்சம் நிக்குது. போகி கொண்டாடுகிறேன்ன்னு சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துறது வழக்கமாகி போச்சு. இப்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் பழையன கழிந்து புதியவைகளுக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கம் முக்கியமானது. பழைய துணி, குப்பைகளை மட்டுமல்ல, மனதில் சேர்த்துள்ள தேவையற்ற வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி, ஈகோ இவைகளையும் போகி அன்று எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிக்கலாம்.   போகிப் பண்டிகையின் நிகழ்வுகளில் மாற்றம் வந்தாலும் அடிப்படை நோக்கம் மாறாம பார்த்துப்போம்.  நீங்கள் விரும்பினால், உபயோகப்படக் கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுக்கலாம்.  போனது போகட்டும். இனி வரும் காலம் நல்லதாய், சந்தோசமாய் அமையட்டும். 

சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் போகி பொங்கல் தின வாழ்த்துகள்.

வாழ்த்துகளுடன்,
 
.

Wednesday, October 18, 2017

தேசிய ஒருமைப்பாட்டு சான்றுகளில் தீபாவளியை இணைச்சுடலாமா?!


என்னதான் சுற்றுச்சூழல் மாசு, வடநாட்டு பண்டிகை, அது இதுன்னு சொன்னாலும் ஆங்கிலப்புத்தாண்டு, காதலர்தினம், நண்பர்கள்தினம்ன்னு அயல்நாட்டு பண்டிகைகளை  கொண்டாடும்போது வடநாட்டு பண்டிகையை கொண்டாடுவதில் தப்பில்ல. தீபாவளின்னாலே மதம், மொழி, இனம் கடந்து மகிழ்ச்சி கொடுக்கும் பண்டிகை எதுமில்ல. தமிழர்கள் அளவுக்கு தீபாவளியை சிறப்புடன் கொண்டாடுபவர்  இல்ல. தீபாவளி இந்துக்கள் மட்டுமில்லாம சமண, சீக்கிய மதத்தினரும் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுறாங்க. இப்பலாம் மத்த மதத்துக்காரங்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்குறாங்க நாமும் அவர்களுக்கு தீபாவளி பலகாரம் முதலில் கொடுத்து மகிழ்கிறோம்.  தேசிய ஒருமைப்பாடு எதுல இருக்கோ இல்லியோ கிரிக்கெட், தீபாவளில மட்டும்தான் இருக்குன்னு நான் சொல்வேன்., இனி தீபாவளி பண்டிகை கொண்டாட காரணமான புராண கதைகளை பார்க்கலாம்...



ஒரு பொருள் இருக்கும்வரை அதன் மதிப்பு தெரியாது. அது இல்லாதபோது தவிப்போம். கதறுவோம்.  அதேமாதிரிதான் வெளிச்சத்தோட அருமை இருட்டில்தான் தெரியும். இருட்டில் தவிக்கும்போது, எங்கிருந்தாவது சிறு வெளிச்சம் வராதான்னு ஏங்கி தவிப்போம். இதுமாதிரியான ஒரு சூழல் தீர்க்கதமஸ்ன்ற முனிவருக்கும் வந்துச்சாம்.   இருள் சூழ்ந்த காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்து வந்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். ஒருமுறை சனாதன முனிவர் அங்கு வந்தார்.  அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம்  கேட்டார். மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத்தான் இருக்கு. இதுலாம் மேலும் அவனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார்.



இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டும்தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை. தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடி, அடுத்தவர்களையும் மகிழ வைத்தும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார். இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்க, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும்.






மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்கனும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்யனும்.  எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், பூக்களில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்புமருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப்பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்று கூறினார். தீபாவளி உருவாக இதும் ஒரு காரணம்.... 


நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.

அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவதுபோல் கீழே விழுந்தார். மாயக்கண்ணனுக்கு நடிக்க சொல்லியா தரனும்?! இதை பார்த்த சத்தயபாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்தியபாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான். 
அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது,

இனி மற்ற காரணங்களை பார்க்கலாம்....

இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வரும்போது அந்நாட்டு மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்ற நாள்ன்னு சொல்லப்படுது...

சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக்கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக உருவெடுத்த நாள் தீபாவளியாக  கொண்டாடப்படுவதாக , ஸ்கந்த புராணம் சொல்லுது..

சீக்கியர்களின் தீபாவளி...

1577- இல் இத்தினத்தில் தங்கக்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் .

சமணர்களின் தீமாவளி
சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி.

  
திபாவளி கொண்டாடும் முறை...

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து. இல்லத்தின் மூத்தஉறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு ( மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டுமகிழ்வர் . தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள்.தீபாவளி அன்று எண்ணை தேய்த்து தான் குளிக்க வேண்டும். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம் . மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். ஏன்ன்னா நரகாசுரனின் நினைவு நாள் அதனால் தீட்டு கழிக்கிறோம்.

சகோதரிகளுக்கு பரிசு:

தமிழகத்தில், நீர்நிலைகளில் தீபம் விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள். வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான். தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள் வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர் . அன்று அநேக பெண்கள் புடவையும் ( குறிப்பாக பட்டுப்புடவை ) ஆண்கள் வேட்டியும் உடுப்பர் . தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும் . அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர் . பரிசுகள் தந்து மகிழ்வர் . பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர் . தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு. தீபாவளியன்று நீராடுவதை மட்டும் கங்கா ஸ்நானம் என்று சொல்வதற்கு காரணம்  அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும் , எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் , குங்குமத்தில் கௌரியும் , சந்தனத்தில் பூமாதேவியும் , புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக ஐதீகம்.

அந்த நீராடலைத்தான் ” கங்கா ஸ்நானம் ஆச்சா ” என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம் எல்லா  நீர்நிலைகளிலும் கங்கா தேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம். தீபாவளி  பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகை. காமத்துக்கு சாத்திரம் எழுதிய  வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் 'யட்ஷ ராத்திரி' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை 'சுகராத்திரி' என்றும் சொல்வதுண்டு. விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது. கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.



பட்டாசு வெடிக்குறவங்க கவனமா வெடிங்க. கொண்டாடி மகிழத்தான் பண்டிகை.. அதனால, அடுத்த உயிர்களை காயப்படுத்திடாம கொண்டாடுங்க. கழுதை, மாடு, நாய் வால்ல பட்டாசு கட்டுறதுலாம் வேணாம். அக்கம் பக்கம் சிறு குழந்தைங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள்லாம் இருந்தா  பெரிய வெடி வெடிக்குறதா இருந்தா இன்ஃபார்ம் பண்ணுங்க. அதிர்ந்துட போறாங்க... 

பட்டாசாய் கவலைகள் வெடித்து சிதறட்டும், மத்தாப்பாய் வாழ்க்கை ஒளி வீசட்டும், ராக்கெட்டாய் சந்தோஷங்கள் உயரட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி.

Tuesday, October 17, 2017

வெல்ல அதிரசம் - கிச்சன் கார்னர்

தீபாவளி பலகாரம்ன்னாலே எங்க ஊர் பக்கம் அதிரசத்துக்குதான் முதலிடம். மத்ததுலாம் அதுக்கடுத்துதான். தீபாவளிக்கு மறுநாள் நோன்பு எடுப்போம். இப்ப அது விசயம்ல்ல.  அந்த நோன்புக்கு அதிரசம் அதுலயும் குறிப்பா வெல்ல அதிரசம்தான் செய்வோம்.  எண்ணி வச்சது, அப்படியே வச்சது, பாகு எடுத்தது, பாகு எடுக்காததுன்னு விதம் விதமா அதிரசம் சுடுவாங்க. என் அம்மா வீட்டில் நெய்ல செஞ்ச அதிரசம்தான் நோன்புக்கு. முன்னலாம் நார்மல் சைசுக்கு செஞ்ச அதிரசம் இப்ப பத்து ரூபா காயின் அளவுக்கு சுருங்கிடுச்சு. கேட்டா ஆயிலாம்.. உடம்புக்கு சேராதாம்.  என் மாமியார் வீட்டில் பாகு எடுக்காம அதிரசம் செய்வாங்க. இதை நாலு நாள் கழிச்சுதான் சாப்பிட முடியும். என் அம்மா கைப்பக்குவம் எனக்கு அதிரசத்துலதான் வந்திருக்கு. பெருமைக்கு சொல்லலீங்கோ. அதிரசம் நான் நல்லாவே செய்வேனாக்கும்....

தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - 1 கிலோ
வெல்லம் - 1கி
சுக்கு - 10கிராம்
ஏலக்காய் - 5 
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

அரிசியை தண்ணில 2 மணி நேரம் ஊற வெச்சு, தண்ணி நல்லா வடிச்சு, ஒரு காட்டன் துணில மூட்டை கட்டி வைங்க. அரை மணி நேரம் கழிச்சு, லேசா ஆற வச்சு, மெஷின்ல இல்ல மிக்சில போட்டு அரைச்சுக்கோங்க. அரிசி லேசான ஈரப்பதத்துல இருக்கனும், ரொம்ப காய்ஞ்சுட்டாலும் அதிரசம் நல்லா இருக்காது. மிக்சிலயும் அரைச்சுக்கலாம்
அரைச்சு வந்த மாவை நல்லா ’சலிச்சுக்காம’ சலிச்சுக்கனும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணிய பொடிச்ச வெல்லத்தை போட்டு வெல்லம் முங்குற அளவுக்கு தண்ணிய ஊத்தி வெல்லம் கரைஞ்சதும் வேற ஒரு பாத்திரத்துல வடிக்கட்டி கொதிக்க விடனும். எஃப்.பில அப்டேட் பண்றேன்ன்னு பொங்க விடாதீங்க. அடிக்கடி கிளறி விடுங்க.
சுக்கு, ஏலக்காயை பொடிச்சு சலிச்சுக்கோங்க.. கசகசாவை வண்டு, பூச்சி இல்லாம பார்த்துக்கோங்க. ஏன்னா அதிரசம் சைவ ஜாதி...
பாகு வந்திடுச்சான்னு பார்க்கலாமா?! ஒரு தட்டுல தண்ணி ஊத்தி, அதுல கொதிக்குற பாகுல சொட்டு விட்டா கரையாம நிக்கனும். அதுக்கு பேரு முத்து பதம். அதான் சரியான ஸ்டேஜ்.
அடுப்பை சிம்ல வச்சிட்டு கொஞ்சம் கொஞ்சமா வெல்லப்பாகில் மாவை சேர்த்து கிளறி விடுங்க..
அடிப்பிடிச்சுடாம நல்லா கிளறி விடுங்க...
சுக்கு, ஏலக்காய், கசகசா, வெள்ளை எள்ளை சேர்த்துக்கோங்க...
கொஞ்சம் நெய் சேர்த்துக்கோங்க...
மாவை சின்ன, சின்ன உருண்டையாக்கி,  வாழை இலை இல்லாட்டி பாலிதீன் பேப்பர்ல எண்ணெய் தொட்டு தட்டிக்கோங்க.
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் ஒண்ணொண்ணா போட்டு, ரெண்டு பக்கமும் நல்லா சிவந்ததும் எடுங்க. வடை போல வாணலி ஃபுல்லா அதிரசம் போடாதீங்க. ஒண்ணு இல்ல ரெண்டு போட்டு சுடுங்க.
ரெண்டு பக்கமும் பொன்னிறமா வெந்ததும்,  அதிரசம் அமுக்கும் கட்டையில வச்சு அழுத்தி எடுத்தா, அதிரத்துல இருக்கும் அதிகப்படியான எண்ணெய் வெளில வந்துடும். இந்த மாதிரி கட்டை இல்லாட்டி பூரி அழுத்துறதுல வச்சு லேசா அழுத்தலாம். இல்லாட்டி ஒரு கிண்ணத்தை திருப்பி போட்டு அது மேல அதிரசம் வச்சு ஒரு தட்டால அழுத்தி எடுத்தாலும் எண்ணெய் வந்திரும்.
சூடான, சுவையான அதிரசம் ரெடி. குறைஞ்சது பதினைந்து நாள் வச்சு சாப்பிடலாம். சுக்கு, கசகசா, எள் சேர்த்திருக்கிறதால உடம்புக்கும் ஒண்ணும் பண்ணாது. சூடா இருக்கும்போதே அதிரசம் சாப்பிட சூப்பரா இருக்கும். 

அக்கம் பக்கம் முஸ்லீம் வீடுக இருக்கு. இந்த அதிரசத்துக்காகவே வெயிட்டிங்க்.. தீபாவளி காலைல கொடுத்தாகனும். கொஞ்சம் லேட்டானாலும் சண்டை பிடிப்பாங்க. பகிர்ந்து மகிழத்தானே பண்டிகை?!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1474990
நன்றியுடன்,
ராஜி.