பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழையனவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாள் இது. அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரம்ன்னு நம்முடைய தீயகுணங்களை விட்டொழித்து புதுமனிதனாக மாறுவதன் அடையாளமாய், வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி “போகி” என்றானது. இதனால் வீட்டின் மீதான திருஷ்டி விலகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து வாங்கி வருவதுன்னு சகலரும் பிசியா இருப்பாங்க. விவசாயிகள் விளைப்பொருட்களின் அறுவடையிலும், நெசவாளர்கள், மண்பாண்டம் செய்வோர், நகை செய்வோர்ன்னு சகலரும் தங்கள் தொழிலை கூடுதல் நேரமெடுத்து செய்வதால் அவர்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். அந்தக்காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப்போனது.
போகிபண்டிகை கொண்டாடும் வழக்கம், நம்ம ஊர், ஆந்திரா, தெலுங்கானா, வடநாடுகளிலும் உண்டு. இன்றைய தினத்தில் வாசலில் வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூவை சொருகி வைப்பர். வைகறையில் 'நிலைப்பொங்கல்' வைப்பாங்க. வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றை நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வீட்டு தெய்வத்தை வணங்குவர். இதை வீட்டின் மூத்த சுமங்கலி பெண்கள் நடத்துவார். போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் செய்து படைப்பாங்க. ஒருசிலர் போகி அன்று இறந்தவர்களின் நினைவாக சர்க்கரை பொங்கல், கருவாட்டு குழம்பு வைத்தும் வழிபடுவாங்க. போகி எரிக்கும்போதும், நிலைப்பொங்கல் வைக்கும்போதும் சிறுவர்கள் பறை மாதிரியான மேளத்தை அடிப்பாங்க.
ஆனா, இன்னிக்கு பண்டிக்கைக்கான நோக்கம் மறைந்து வெறும் கொண்டாட்டமே மிச்சம் நிக்குது. போகி கொண்டாடுகிறேன்ன்னு சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துறது வழக்கமாகி போச்சு. இப்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் பழையன கழிந்து புதியவைகளுக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கம் முக்கியமானது. பழைய துணி, குப்பைகளை மட்டுமல்ல, மனதில் சேர்த்துள்ள தேவையற்ற வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி, ஈகோ இவைகளையும் போகி அன்று எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிக்கலாம். போகிப் பண்டிகையின் நிகழ்வுகளில் மாற்றம் வந்தாலும் அடிப்படை நோக்கம் மாறாம பார்த்துப்போம். நீங்கள் விரும்பினால், உபயோகப்படக் கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுக்கலாம். போனது போகட்டும். இனி வரும் காலம் நல்லதாய், சந்தோசமாய் அமையட்டும்.
சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் போகி பொங்கல் தின வாழ்த்துகள்.
வாழ்த்துகளுடன்,
அழகான போகிப் பண்டிகை சம்பிரதாயப் பதிவு.பழையன கழிதல்,புதியன புகுதல் .......தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற நம் முன்னோர் நம்பிக்கை..... நன்றி தங்கச்சி பதிவுக்கும்,படங்களுக்கும்....இனிய போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்,முற்கூட்டிய தைத் திரு நாள் வாழ்த்துக்களும்........
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிண்ணே
Deleteசென்ற வருடம் வரை காலை 7 மணிக்கு கூட சென்னையில் சாலையே கண்ணுக்குத் தெரியாத அளவு புகை மயமாக இருக்கும். எதிரில் நிற்பவர் யாரென்று தெரியாது... ஆனால் இன்று காலை ஆறு மணிக்குக் கூட புகை ரொம்பக் கம்மிதான்!
ReplyDeleteஎப்படியோ மாற்றம் வந்தால் நல்லதுதான். இந்த மாற்றத்தை இந்த பொங்கலில் இருந்து தொடங்குவது சிறப்புதான்
Deleteபோகியை குறித்து நிறைய விடயம் அறிந்தேன் நன்றி சகோ.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteவாழ்த்துகள் சகோதரி...
ReplyDelete