Showing posts with label பூண்டு. Show all posts
Showing posts with label பூண்டு. Show all posts

Tuesday, March 24, 2020

எல்லா வியாதியையும் போக்கும் பூண்டு சட்னி- கிச்சன் கார்னர்

செரிமானம், வாயுத்தொல்லை தொடங்கி இப்ப வந்திருக்கும் கொரோனா வைரசைக்கூட பூண்டு தீர்க்கும்ன்னு அடிக்கடி வசந்தி  பரவுறதுக்கு முன்னாடியே என் பிள்ளைகள் பூண்டை வெறுத்து ஒதுக்காம சாப்பிடுவாங்க. முக்கியமா புளிக்குழம்பில் ஊறிய பூண்டுக்கு அடிதடிலாம் நடந்த வரலாறுலாம் எங்க வீட்டில் உண்டு. அதுக்காகவே தலைக்கு இத்தனை பூண்டு பற்கள்ன்னு தட்டில் முதல்லியே எடுத்து வச்சதும் உண்டு.   அப்பேற்பட்ட பிள்ளைகளுக்கு பூண்டு சட்னின்னா சொல்லவா வேணும்?! சூடான இட்லி, அளவான காரத்தோடு சட்னி இருந்தால் அன்னிக்கு ஹாட் பாக்சில் இருக்கும் இட்லி காணாம போகும்.  தோசைக்கும் நல்லா இருக்கும். ஆனா, இட்லிக்குதான் செம மேட்சிங்கா இருக்கு

தேவையான பொருட்கள்..
தோல் உரித்த பூண்டு  பற்கள்
வெங்காயம்
காய்ந்த மிளகாய்
உப்பு
புளி
எண்ணெய்
கடுகு
ஒரு கடாயில் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் வெங்காயம் போட்டு வதக்குங்க..
அடுத்து பூண்டு போட்டு வதக்குங்க...
காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாயை போட்டு வதக்கனும்..


வெங்காயமும், பூண்டும் வதங்கினபின் தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கனும்..
புளி கொஞ்சம் சேர்த்து அடுப்பை அணைச்சுட்டு நல்லா ஆறினதும், முதல்ல மிளகாயை அரைச்சுட்டு பிறகு வதக்கின வெங்காயம், பூண்டினை சேர்த்து கொரகொரப்பா அரைங்க.  முதல்லியே எல்லாத்தையும் சேர்த்து அரைச்சா மிளகா முழுக்க மசியாது.  பூண்டும், வெங்காயமும் மசிஞ்சு பிசுபிசுன்னு இருக்கும். 
அரைச்ச சட்னியில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிச்சு கொட்டுங்க. சூப்பரான காரசாரமான பூண்டு சட்னி ரெடி.

பெரிய வெங்காயத்திற்கு பதிலா சின்ன வெங்காயத்தை சேர்த்துக்கிட்டா இன்னும் ருசி கூடும்.
நன்றியுடன்,
ராஜி

Monday, May 13, 2019

தி.நகர் உருவான கதை - ஐஞ்சுவை அவியல்

மாமா! வீட்டுக்கு தேவையான பொருட்கள் கொஞ்சம் வாங்கனும்.  பஜாருக்கு போகலாமா? 
என்னென்ன பொருள்கள் வாங்கனும்ன்னு சொன்னா  அதுக்கேத்தமாதிரி பிளான் பண்ணலாம்.
நம்ம ஊரிலும் டி.நகர் மாதிரி ஒரு இடம் இருந்தால் நல்லா இருக்கும்ல!
No photo description available.

ம்ம்ம் நல்லாதான் இருக்கும். இன்னிக்கு குண்டூசி முதல் வைர நகைகள் வரை வீட்டுக்கு, ஆபீசுக்கு, கட்டுமான பொருட்கள்ன்னு பாகுபாடில்லாம எல்லாமே கிடைக்கும்,  ஜன நெரிசலா இருக்கும் டி.நகர்  எனப்படும் தியாகராய நகர் முதல்ல  “லாங் லேக்” என சொல்லப்பட்ட நீள் தடாகமாக இருந்ததுன்னு சொன்னா நம்புவியா?!
அப்படியா?! பள்ளிக்கரணை, செம்பரப்பாக்கம், போரூர்லாம்தான் ஏரில உருவானதுன்னு பார்த்தா, டி. நகரும் அப்படி உருவானதுதானா?!
ஆமா, 1911-ம் வருசத்துல பிரிட்டீஷ் அரசு, வணிக நோக்கத்துக்காகவும், நிர்வாகப் போக்குவரத்து வசதிக்காகவும் மாம்பலம் ரயில் நிலையத்தை அமைத்த பிறகுதான் தியாகராய நகர் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. 1920-ம் ஆண்டில் பிரிட்டீஷ் அரசு மதராஸ் மாகாணத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், “மதராஸ் டவுன் ப்ளானிங் ஆக்ட்-1920“ எனும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டம்தான் நாம் இன்று பார்க்கும் இந்த தியாகராயய நகரின் வளர்ச்சிக்கான ஆரம்பப் புள்ளி.
1923 சென்னையை ஆட்சி செய்துக்கொண்டிருந்த நீதிக்கட்சியின் தலைவர்தான் பிட்டி தியாகராயர். கட்சிக்கு இவர் தலைவராக இருந்தாலும், முதல்வர் பதவியை ஏற்க மறுத்த இவருக்குச் சிறப்பு செய்யும் வகையில், அப்போதைய முதல்வராக இருந்த பனகல் அரசர்தான் இந்த இடத்துக்கு தியாகராயர் நகர்ன்னு பேர் வச்சார். நீதிக்கட்சியை சேர்ந்தவரும் சமூகப் போராளியுமான சௌந்தரபாண்டியனார் நினைவாகவே சென்னை நகரின் முக்கியக் கடைவீதிகள் இருக்கும் பாண்டி பஜார் பகுதிக்கு அந்தப்பெயர் சூட்டப்பட்டது. கடைத்தெருவின் நுழைவு வாயிலில், அவரது சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பனகல் அரசர் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார். அவரது நினைவாக தியாகராய நகரின் மையப் பகுதியில் உள்ள பூங்கா “பனகல் பூங்கா” என்றும் சைதாப்பேட்டையிலுள்ள வருவாய்த் துறை அலுவலகம் “பனகல் மாளிகை” என்றும் அழைக்கப்படுகின்றது. நீதிகட்சியின் பொருளாளராகவும், சென்னை மாநகராட்சி தலைவராகவும் பதவி வகித்தவர் இருந்தவர் கோபதி நாராயணசாமி செட்டி. இவர் பெயரை தாங்கி நிற்கும் சாலையே G.N Chetty சாலை.

இன்னிக்கு உஸ்மான் ரோடுன்னு சொல்லப்படும் இடத்துக்கான பெயர்க்காரணம் நீதிக்கட்சி ஆட்சி செய்தபோது அந்த அமைச்சரவையில் முகம்மது உஸ்மான் இடம்பெற்றிருந்தார். 1934ம் ஆண்டு மே 16ம் தேதி சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் *சென்னை மாஜிஸ்திரேட், *சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், சென்னை நகர செரீப், சென்னை மாநகராட்சி தலைவர், சென்னை மாகாண நிர்வாகக்குழு உறுப்பினர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், 1942 - 1946 பிரிட்டிஷ் வைசிராயின் நிர்வாகக்குழு உறுப்பினர் என பல பதவிகளை வகித்து வந்தார். 1925 - இந்திய மருத்துவக் கல்வி அமைப்பு உருவாக காரணமான அரசுக் குழுவுக்கு இவர் தலைவராக இருந்தார். இவர் அளித்த அறிக்கை உஸ்மான் அறிக்கைன்னே சொல்லப்பட்டது. இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் சுகாதார அறிக்கை அதுதான். உஸ்மானை யுனானி மருத்துவர்ன்னு மரியாதையாய் சொல்வாங்க. முகம்மது உஸ்மானை சிறப்பிக்கவே உஸ்மான் ரோடு என பெயர் சூட்டப்பட்டது.

ஜூலை 1916, பிராமணர் அல்லாத மாணவர்கள் சென்னையில் தங்கி படிக்க விடுதிகள் கொடுக்க மறுத்த காலத்தில், திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் திராவிடர் விடுதி தொடங்கி மாணவர் தங்கி படிப்பதற்கு டாக்டர். நடேசன் துணை புரிந்தார். உணவு விடுதியோடு, நூலகமும் அங்கே அமைத்து தந்தார். வாரந்தோறும் நடேசனாரின் தோட்டத்தில் திராவிடர் சங்கத்தின் சார்பில், பார்ப்பனரல்லாதார் இன எழுச்சிக் கூட்டங்களும், இலக்கியக் கூட்டங்களும், இரவு நேரங்களில் முதியோர் கல்வியும் நடத்தப்பட்டது. அவரது சேவையினை பாராட்டி 18.09.08 அன்று டாக்டர் நடேசனார் அஞ்சல் தலை கலைஞரால் வெளியிடபட்டது. அவரது பெயரில் உருவானதுதான் நடேசன் சாலை...
டாக்டர் டி.எம் நாயர் ஒரு புரட்சி வீரர்; சுயமரியாதைகாரர், அவரை ஒரு "திராவிட லெனின்" என சொல்லலாம்ன்னு பெரியாரே சொல்லி இருக்கார். இவர் நீதிக்கட்சி தலைவர்களுள் ஒருவர். நீதிக்கட்சியை தோற்றுவித்தவர் நடேசனார் என்றாலும், நீதிக்கட்சியை வழிநடத்தியவர் டி.எம் நாயரே!. Justice பத்திரிக்கையின் ஆசிரியர், அயோத்திதாச பண்டிதரால் பாராட்டு பெற்றவர் இப்படி பல சிறப்புகளை பெற்ற இவரது பெயரை தாங்கி நிற்பதே டாக்டர் நாயர் சாலை.
Image result for அபிபுல்லா சாலை

சென்னை மாகாண ஆளுனரின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும், திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகவும் பணியாற்றியவர்தான் நவாப் கான் பகதூர் சர் முகமது ஹபிபுல்லா . அவரின் பெயரை கொண்டுதான் சென்னை தியாகராய நகர் பகுதியின் பிரதான சாலைக்கு இவரின் பெயரின் ஒரு பகுதியினை பெயராய் வைத்து ஹபிபுல்லா சாலைன்னு அழைக்கப்படுது. சட்டமன்றத்தில் பார்ப்பனர் அல்லாதாருக்கு முழுமையாக பணிவாய்ப்பு கிட்டும்வரை பார்ப்பனர்களுக்கு எந்த ஒரு பணிவாய்ப்பும் வழங்கப்படக்கூடாது என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தவவர், 1925ல் சென்னை மாநகராட்சி தலைவராய் இருந்த திரு. தணிகாசலம். அவர்களது பெயரில் தணிகாசலம் தெரு அழைக்கப்படுது. 1920 -சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டியல் சமூக உறுப்பினர், சட்டமன்றத்தில் நீதிகட்சியின் துனைதலைவர், 1922ல் பறையர், பஞ்சமர் என்ற வார்த்தைக்கு பதிலாக ஆதிதிராவிடர் என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டுமென்ற தீர்மானத்தை கொண்டு வந்தவர். அவரது பெயரில் அழைக்கப்படுவதே எம்.சி.ராஜா சாலை..
ஏன் மாமா! அவங்க கட்சிக்காரங்க பேரையே டி.நகர் முழுக்க வச்சுக்கிட்டாங்க போல!
ம்ஹூம், இப்படி பெரிய பெரிய ஆட்களின் பெயரினை மட்டுமில்லாம, நம்மளை மாதிரி சாமானிய ஆட்களின் பேரையும் வச்சிருக்காங்க. ஜி.என்.செட்டி ரோடில் ஓட்டல் விருதுநகர்ன்னு இருக்கு. அதுக்கு ரெண்டு பக்கமும் இருக்கும் தெருக்களான நாதமுனி தெரு, கோவிந்து தெருன்னு ரெண்டு தெரு இருக்கும். இந்த ரெண்டு தெருவும், தியாகராய நகர் உருவான காலத்தில், வேலையில் இருந்த நேரத்தில் இறந்துப்போன கடைநிலை ஊழியர்களின் பெயர்களில் உருவானது. இன்றைக்கு பிரம்மாண்டமாய் ஜன நெரிசலுடன், மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களை கொண்டிருக்கும் தியாகராய நகரின் கதையாகும்.
இன்னிக்கு இருக்க மாதிரி சமூக வலைத்தளங்களும் ,படமெடுக்கும் கலாச்சாரமும் அன்னிக்கு இருந்திருந்தால் இதுலாம் நம்ம பசங்களுக்கு தெரிய வரும். இல்லன்னா, அந்தந்த இடத்தின் பாரம்பரியம் மறக்கப்பட்டுடும்தானே மாமா?!
ஆமா! இன்னிக்கு எல்லாமே படமெடுத்துக்குறோம். முதன்முதலாய் செல்பி எப்ப எடுத்தாங்கன்னு தெரியுமா?!
2000ஆண்டுக்கு அப்புறம்தான் கேமரா செல்போன் வந்துச்சு. அப்ப அதுக்கப்புறம்தான் இந்த செல்பி வந்திருக்கும்,..
ம்ஹூம். 1920ல எடுத்த இந்த படம்தான் முதல் செல்பின்னும், முதல் க்ரூப் செல்பின்னும் அதிகாரப்பூர்வமா சொல்லி இருக்காங்க.
நிமிசத்துக்கு நிமிசம் எதாவது ஒரு விபத்து நடக்குது.  நாம வண்டில எத்தனைக்கு எத்தனை வேகமா போறோமோ! அத்தனைக்கு அத்தனை நம்ம குடும்பத்தை விட்டு விலகிப்போறதை இந்த வீடியோ சொல்லாமல் சொல்லுது.. இதை பார்த்துட்டு வண்டில ஸ்பீடா போறதை குறைச்சுக்க புள்ள!!
உன்னைய மாதிரி ஒரு கூறுக்கெட்ட டாக்டரை கட்டுன என்னைய மாதிரி ஒரு பொண்டாட்டி அவசரத்துக்கு பூண்டு உரிச்சு கொடுக்க சொன்னா அந்தாளு எப்படி பூண்டு உரிக்கிறார்ன்னு பாரு மாமா... பார்த்துட்டு கொஞ்சமாச்சும் புத்தியோடு நடந்துக்க..

நன்றியுடன்,
ராஜி.

Wednesday, September 11, 2013

பூண்டு ஊறுகாய் - கிச்சன் கார்னர்

முன்னலாம் வெயில் காலம் வந்துட்டா நம்ம பாட்டி, அம்மா, சித்தி, பெரியம்மா. அத்தைலாம் மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய், கிச்சிலிக்காய், நெல்லிக்காய்லாம் வெட்டி, உப்பு போட்டு காய வச்சு வத்தலாக்கி எடுத்து வச்சுக்குவாங்க.

ஒரு மாசத்துக்கொரு முறை, வத்தல்ல கொஞ்சம் எடுத்து சுடுதண்ணில ஊற வச்சு, மிளகாய் தூள், பெருங்காயம்லாம் போட்டு தாளிச்சு, கடுகு வெந்தயம் வறுத்து போட்டு ஊறுகாய் செய்வாங்க. காலைல பழைய சாதத்துல தயிர் ஊத்தி ஒரு துண்டு ஊறுகாய் வச்சு சாப்பிட்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தேவாமிர்தமா இருக்கும். நான்லாம் கறிக்கொழம்புக்கு கூட ஊறுகாய் சாப்பிட்ட காலம்லாம் உண்டு!

ஆனா, இப்போ இருக்குறவங்களுக்கு அந்த பொறுமை இல்ல(எனக்கும் சேர்த்துதான்). கடைக்கு போனா விதம், விதமா ஊறுகாய்கள் நாக்கில் எச்சி வர வைக்க வரிசைக்கட்டி நிக்குதுங்க. என்னதான் அந்த ஊறுகாய்கள் ருசிச்சாலும், விநிகர் மற்றும் கெமிக்கல் வாசனை போகாம அப்படியே இருக்கு.

அதனால, நான் அந்த ஊறுகாய்களை வாங்குறது இல்ல. வீட்டுலயே செஞ்சுக்கிடுவேன். பூண்டு ஊறுகாய்ன்னா என் பசங்களுக்கு முக்கியமா பெரியவளுக்கு பிடிக்கும். அவளை பார்க்க எப்ப போனாலும், இதை ஒரு பாட்டில் கொண்டு போனாதான் அவளுக்கு ஒரு திருப்தி. அரை கிலோ ஊறுகாயை இட்லி, சப்பாத்தி, சாதம், சும்மான்னு ரெண்டே நாள்ல காலி பண்ணிட்டு ஊறுகாய் காலின்னு சொல்வா!

பூண்டு உரிக்கும்போது பட்ட கஷ்டம் அவ சொல்லும் வார்த்தைல காணாம போய்டும்.ஈசியான பூண்டு ஊறுகாய் செய்யுறது எப்படின்னு இன்னிக்கு பார்க்கலாம்!!

தேவையான பொருட்கள்:
பூண்டு - 1/2 கி
மிளகாய் - 25
புளி, - 200 கிராம்
உப்பு- தேவையான அளவு,
கடுகு - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு,வெந்தயம் வறுத்து அரைத்த பொடி - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 100மிலி
மஞ்சப்பொடி -சிறிது,


பூண்டை உரிச்சு, கழுவிக்கோங்க.

மிளகாயை காம்பு கிள்ளி எடுத்து வச்சுக்கோங்க!

புளில நார், கொட்டை, மண் இல்லாம சுத்தம் பண்ணிக்கோங்க! புளி, மிளகாய் ரெண்டையும் கொஞ்சம் நேரம் தண்ணில ஊற வைங்க.அப்பதான் மிக்சில போட்டு அரைக்கும்போது மிளகாய் விதைகள் அரைப்படும்.  

மிக்சில முதல்ல மிளகாய், புளி போட்டு கொஞ்ச நேரம் அரைச்சுட்டு கழுவி வெச்ச பூண்டை போட்டு நைசா அரைச்சுக்கோங்க! 

வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு போட்டு பொறிய விடுங்க!

அரைச்சு வச்சை பூண்டு விழுதை சேர்த்து வதக்கிக்கோங்க. மிக்சில லேசா தண்ணி விட்டு கழுவி ஊத்திக்கோங்க. ஊறுகாய் கெட்டு போகாது! 


உப்பு சேர்த்துக்கோங்க!

மஞ்சப்பொடி சேர்த்துக்கோங்க.

பெருங்காய பொடி சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. அடிக்கடி கிளறி விடுங்க. இல்லாட்டி அடிப்பிடிச்சுக்கும். ஊறுகாய்ல இருந்து எண்ணெய் பிரிஞ்சு வர ஆரம்பிக்கும்போது அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இறக்கிடுங்க.


பொடி செஞ்சு வச்ச கடுகு, வெந்தயப்பொடியை சேர்த்து கிளறி விடுங்க.

பூண்டு ஊறுகாய் ரெடி. டப்பாவை முழுசா மூடி வைக்காம லேசா காத்து போற மாதிரி வச்ச இருபது நாட்கள் வரை நல்லா இருக்கும். ஃப்ரிட்ஜ்ல வச்சு யூஸ் பண்ணா ஒரு மாசம் வரை வரும் .

விநிகர், கெமிக்கல், கல்ர்லாம் கலக்காம ஒரு ஊறுகாய் ரெடி! பூண்டு உடம்புக்கும் நல்லது, லேசான, இனிப்பும் புளிப்பும், காரமுமா இந்த ஊறுகாய் நல்லா இருக்கும், சாதம், இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி, வெரைட்டி ரைஸ்ன்னு எல்லாத்துக்கும் சைட் டிஷ் இதான் எங்க வீட்டில்.நீங்களும் செஞ்சு பாருங்க.

டிஸ்கி: ஊறுகாய் செய்ய முக்கியமான ஒரு பொருளை சொல்ல மறந்துட்டேன். அது என்னன்னா ஊறுகாய் செய்ய பூண்டு உரிக்க ஏமாந்த ஆண் முக்கியமா வேணும் (அது, அப்பாவா, தம்பியா, காதலனா, கணவனா இல்ல மகனா இருக்கலாம்). ஊறுகா செய்ய போறது ஆணாய் இருந்தால் சாரி, நீங்களே உரிச்சுக்கோங்க!!

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான டிஷ்ஷோட வர்றேன்!!


Wednesday, August 07, 2013

சோயா உருண்டை பொறியல் - கிச்சன் கார்னர்

”சோயா உருண்டை” 1980 களில்   கல்யாண பந்திகளில் வெஜ் பிரியாணிகளில் தென்பட்டது. ருசி பிடிச்சு  போய் அப்பா, அம்மா இலைகளில் இருப்பதையும் வாங்கி சாப்பிட்டதால அப்பா தேடி பிடிச்சு வாங்கி வந்தார். அப்போலாம் அதன் பேர் கூட தெரியாது, அது தயாரிச்சு வித்த கம்பெனி பெயராலேயே “மீல் மேக்கர்”ன்னுதான் சொல்லிட்டு இருந்தேன். வெஜ் பிரியாணி செய்யும்போது பீன்ஸ், கேரட், பட்டாணி கூட இது கண்டிப்பா இருக்கும்.

சில சமயம் காய் எதும் இல்லாட்டி கூட இந்த சோயா உருண்டையை போட்டு கூட சமைச்சிருக்கோம். டிவில பார்த்து செஞ்சாங்களா?! இல்ல தானா செஞ்சாங்களா?!ன்னு தெரியலை..,  இப்போலாம் காய் எதும் இல்லாட்டி டக்குன்னு இதை பத்து நிமிசத்துல பொறியலா செஞ்சுடுவோம். என் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

சோயாவை சாப்பிடுறதால வரும் நன்மைகள் என்னன்னா, இதெல்லாம் தெரியாமதான் சாப்பிட பழகினேன். ஆனா, பதிவு போடுறதுக்காகதான் தேடினேன். ஏன்னா, சமைக்குறது நல்லா இல்லைன்னாலும் இப்படி டிப்ஸ் குடுக்குறதால கொஞ்சம் தப்பிச்சுக்கலாமே அதனால்தான்!!

*சோயாவை சாப்பிட்டுல சேர்த்துக்கிட்டா எலும்புலாம் உறுதியாகும். சோயாவுல கால்சியம் குறைவா இருந்தாலும் இதுல இருக்குற தாவர ஹார்மோன் எலும்புகள் தேய்மானத்தையும், உதிர்வையும் தடுக்கும் சக்தி கொண்டதாம்.

* மெனோபாஸ் (Menopause) பிரச்னைகளைத் தடுக்குற ஆற்றல் சோயாவுக்கு இருக்கு. . இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ்ன்ற பொருள்  பெண் ஹார்மோனான ”ஈஸ்ட்ரோஜன்” போல செயல்படும் சக்தி கொண்டது. இது  மெனோபாஸ் நிலையின்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கும் சக்தி கொண்டதாம்.

2. இருதயத்தின் சக்தியைக் கூட்டுதாம். இரத்தக் குழாய்களின் இளகுத் தன்மையை அதிகரித்து, கொலஸ்டிரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்குமாம்.

4. சோயா சில வகை புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாம். ஆரோக்கியமான உடல் நிலை இருக்குறவங்க தினமும் 25கி. சாப்பாட்டுல சேர்த்துக்கலாம். ரிஸ்க் இருக்கிறது என்றால், 50 கி. எடுத்துக்கொள்ளுங்கள். இது ப்ராஸ்டேட் கான்ஸர் உருவாக்குகிற என்ஸைமைத் தடுக்கும் சக்தி கொண்டது. பெண்களுக்கு கர்ப்பப்பை கான்ஸர் வராமல் தடுக்குமாம்.

5. சோயாவின் உணவுப்பொருள் தகுதி மற்றவற்றைவிட அதிகம். இயற்கையாகவே இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் "ஈ" லெசித்தின் போன்றவை கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றதாம்.

சோயாவில் இருக்கும் சத்துகள்: 

தானிய வகைகளிலேயே சோயாவில்தான் அதிக புரோட்டின் இருக்குதாம். 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் கிடைக்குதாம். இந்த புரோட்டினில் நம் உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்குதாம். (இந்த அமினோ அமிலங்களை நம் உடல் தானாகவே உருவாக்கிக்கொள்ள முடியாது). மாமிச புரோட்டினுக்கு இணையாக வரக்கூடிய ஒரே ஒரு சைவ புரோட்டின் சோயா பீன்ஸ்தான். அப்படி இருந்தாலும் சோயாவில் கொழுப்பு குறைவாகவே இருக்குது. 100 கிராமில் 20 கிராம் கொழுப்புதான் இருக்குது. சோயாவில் கார்போஹைட்ரேட் (Carbohydrate) அளவும் குறைவுதான். 100 கிராமில் 30 கிராம்தான். சோயாவில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த சோர்வடைந்த இருதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது. சோயா ஒரு இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட். இதில் லெசித்தினும், வைட்டமின் "ஈ" யும் சேர்ந்து இருக்கிறது. மினரல்கள் சோயாவில் நிறைய இருக்கின்றன.மக்னீஷியம் (magnesium) 280 மி.கி.,கால்சியம் (calcium) 277 மி.கி., பாஸ்பரஸ் 704 மி.கி. இருக்கிறது. இதனால் சோயா சுலபமாக எலும்புகளுக்கும், பற்களுக்கும் பாதுகாப்பு வழங்கும். தவிர, சோயாவில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ம்ம்ம்ம் போதும் லெக்சர். என்ன சமைக்குறேன்னு பார்க்கலாம்ன்னு நீங்க சொல்றதுக்குள்ள....,

4 பேர் கொண்ட குடும்பத்துக்கு சமைக்க தேவையான பொருட்கள்:
சோயா உருண்டை - 25
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு 10 பல்
மிளகு - சிறிது
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
பட்டை- 1 
சோம்பு- சிறிது
கிராம்பு- 2 
கரம் மசாலா பவுடர்  - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  
கடலை பருப்பு - 1டீஸ்பூன்  
வாசனைக்கு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இலை


வாணலில கொஞ்சம் தண்ணி ஊத்தி கொஞ்சம் உப்பு போட்டு கொதிக்க வைங்க. ரெண்டு கொதி வந்ததும் சோயா உருண்டையை கொட்டி ஒரு கொதி வந்ததும், அடுப்பை ஆஃப் பண்ணி 5 நிமிசம் வாணலியை மூடி வைங்க.


அஞ்சு நிமிசம் கழிச்சு, வெந்த சோயா உருண்டைகளை  வடிகட்டி, மீண்டும் நல்ல தண்ணி ஊத்தி ரெண்டு முறை அலசிக்கோங்க. ஏன்னா, அப்படியே சேர்த்துக்கிட்டா ஒரு சிலருக்கு அந்த சோயா வாசனை பிடிக்குறது இல்ல. அதுக்காக.

அப்படி 2 முறை அலசி, தணி வடிக்கட்டுன சோயா உருண்டையை ரெண்டா மூணா பிச்சுக்கோங்க.

ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துக்கோங்க.


கடுகு பொறிஞ்சதும், சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்துக்கோங்க.


அவையும் பொறிஞ்சதும் வெங்காயம் சேர்த்துக்கோங்க.

கூடவே கொஞ்சம் உப்பு சேர்த்துக்கோங்க. உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் வேகும், பச்சை வாசமும் சீக்கிரம் போகும்..,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கும்போது அடிப்பிடிக்காது.

வெங்காயம் பொன்னிறமா வதங்கினதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் இருந்தா சேர்த்துக்கோங்க இல்லன்னாலும் பரவாயில்லை.


தக்காளி நல்லா வெந்து மசிஞ்சதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு   சேர்த்துக்கோங்க. 


மிளகாய் தூள்லாம் லேசா எண்ணெய்ல வதக்கி கொஞ்சமா தண்ணி ஊத்தி கொதிக்க வைங்க.

மிளகாய் தூள் வாசனை போனதும் சோயா உருண்டையை கொட்டிவச்சு  மிதமான தீயில  கிளறுங்க. 

 
அப்படி வதக்கும்போது கொஞ்சம் கரம் மசாலா தூள் சேர்த்துக்கோங்க.


 கடைசியா மிளகை கரகரப்பா இடிச்சு பூண்டை பஞ்சு போல நசுக்கி சேர்த்துக்கொங்க. கடைசியா வாசனைக்கு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இலை கிளறி பறிமாறுங்க.

 டிஸ்கி: மிளகு போட்டிருப்பதால சின்ன குழந்தைங்க காரம்ன்னு சொல்லலாம். அதனால, சின்ன பிள்ளைங்க இருந்தா மிளகு கொஞ்சமா சேர்த்துக்கோங்க.  நாலஞ்சு நாளா வெளியூருக்கு போய்ட்டு வந்து ஹோட்டல் சாப்பாட்டுனால நாக்கை அடக்கம் பண்ணி வச்சிருந்தா சாதம், ஒரு பருப்பு சாம்பாரோடு சேர்த்து இதை சாப்பிட்டா அடக்கமான நாக்குக்கு ருசி தெரியும்.

சாம்பார்சாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதத்துக்கு தொட்டுக்க நல்லா இருக்கும். அதுமட்டுமில்லாம “அந்த” மெயின் டிஷ்சுக்கு இது நல்ல சைடு டிஷ்சா இருக்கும்.  அது எப்படி உங்களுக்கு தெரியும் அக்கான்னு வந்து பாசமா கேட்டாலும் கம்பெனி ரகசியங்கள் வெளியே சொல்வதற்கில்லை.

சமைச்சுக்கிட்டே பதிவை தேத்த போட்டோ எடுக்கும்போது என் வீட்டு சின்ன அம்மிணி வந்து எதுக்குன்னு கேட்டுச்சு. இதுப்போல பதிவு போடறதுக்குன்னு சொன்னா,,, ஆமாமா! ரொம்ப கஷ்டமான டிஷ் பாரு. யாருக்கும் தெரியாது பாரு. போம்மா போய் உருப்படியா சமைச்சு எங்களுக்கும் போட்டு, பதிவையும் போடுன்னு சொல்லுச்சு. பார்ப்போம் பதிவுக்கு என்ன ரெஸ்பான்ஸ்ன்னு!!??

அடுத்த புதன் வேறொரு ஈசியான அதாவது எனக்கு ஈசியான சமையற்குறிப்போடு வரேன்.