பொங்கல் அன்னிக்கு ஓடி ஓடி போட்டோ எடுத்தியே பொங்கல் முடிஞ்சு இம்புட்டு நாளாச்சு அடுத்த பொங்கலே வரப்போகுதே நீ இன்னும் அதையெல்லாம் பதிவா போடலியே எப்போதான் போடப்போறேன்னு என் பொண்ணு தூயா என்னை கேட்டுக்கிட்டதால இம்புட்டு சீக்கிரமா இந்த பதிவு...,
(இதுவும் என் கைங்கர்யம்தான்....)
(இதுவும் நானே...... கலர் கொடுக்க பசங்க ஹெல்ப் பண்ணாங்க...,)
அதிகாலையில் எழுந்து குளிச்சு, ”ப” வடிவில களிமண்ணால வீடு கட்டி, பசு மாட்டின் சாணத்தில் பிள்ளையார் பிடிச்சு வைப்போம் அதுக்கு “ பிள்ளையார் மன”ன்னு பேர். காய்கறிகள், கரும்புலாம் வெச்சு பெரியவங்க நாங்க சாமி கும்புடுவோம். பொடுசுங்கலாம் எப்படா சாமி கும்பிட்டு முடிப்பாங்க. கரும்பு எப்போ திங்கலாம்ன்னு காத்து கிடப்பாங்க.
இதுதான் பிள்ளையார் மனை....,.
பொங்கல் அன்று வீடு வாசல்லாம் மொழுகி, குளிச்சு சுத்த பத்தமா ஒரு தட்டில் ஊற வெச்ச பச்சரிசி, பச்சரிசி மாவு, வெல்லம் தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், பூ, பானகம் என்று சொல்லப்படுகின்ற வெல்லம் தண்ணி ஒரு டம்ப்ளர், மஞ்சள் தண்ணி ஒரு டம்ப்ளர் எல்லாம் எடுத்துக்கிட்டு ஆண்கள், சின்ன பிள்ளைகள்லாம் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு போய் பூஜை பண்ணிட்டு வருவாங்க. அதுக்கு ,” பச்சை வைக்குறது”னு பேர்.
பச்சை வைக்க கோவில்ல தட்டு ரெடி....,
பங்காளிகள்ன்னு சொல்லப்படுகின்ற பெரியப்பா, சித்தப்பா, அண்ணன், தம்பி லாம் சேர்ந்து கோயிலுக்கு போய் பச்சை வச்சுக்கிட்டு வருவாங்க. .
கோயிலுக்கு போனவங்க வருவதற்குள் வீட்டில் இருக்கும் பெண்கள் வீடில் வாசல் இருக்குறவங்க வாசல்லயும், வாசல் இல்லாதவங்க மாடிலயும், மஞ்சள் தண்ணி தெளிச்ச்சு, தரையில் கோலம் போட்டு செங்கல் அடுக்கி, அதற்கு மேல் களிமண் உருண்டை வச்சு, ஈர மஞ்சளை கோர்த்து, அடுப்பு மேல வச்சு ரெடியா இருப்போம்.
அடுப்பு ரெடி, பொங்க பானை ரெடி...,
கோயில்ல இருந்து வந்ததும் கற்பூரம் ஏத்தி அதை பொங்கல் வைக்க போற அடுப்புல போட்டு துவரை மிளாறை எரிய வைப்போம். பொங்கல் பானை காய்ந்ததும் முதலில் விதை நெல் போடுவோம்.
கற்பூரம் போட்டு அடுப்பை பத்த வைக்குறாங்க...,
அது பொறிந்ததும், பால் ஊற்றி பால் பொங்கியதும் தண்ணி ஊத்தி பொங்கி வரும்போது , பொங்கலோ பொங்கல்ன்னு சொல்வோம். பொங்கி வந்ததும் கடைக்கு போய் உப்பு வாங்கி வருவோம் (பொங்கல் பொங்கியதும் முதல்ல உப்பு வாங்கனும்ன்னு ஐதீகம்.) கரும்பை வெட்டி துடுப்பாக்கி அதால கிளறுவோம். உப்பு போட்டு பொங்கி இறக்கி வைப்போம்.
பொங்கல் பொங்கி வருது..., பொங்கலோ பொங்கல்ன்னு நாங்க கூவியது மட்டும் மிஸ்ஸிங்க்... ....
பொங்கல் இறக்கியதும் அதே அடுப்புல பொங்கல் குழம்பு, வெந்தயக்கீரை மசியல் பிடி கருணை காரக்குழம்பு வைப்போம். சமையல் முடிந்ததும், பிள்ளையார் மனைலயும், பொங்கல் அடுப்புக்கும் செங்கல் பொடியால கோலம் போட்டு பூசணி இலையில் பொங்கல், பொங்கல் குழம்பு, கீரை மசியல்லாம் வச்சு சாமி கும்புடுவோம்.
பிள்ளையார் மனைல படையல் ரெடி...,பிள்ளைங்கலாம் பசியோடு காத்திருக்குதுங்க...,
அடுப்பு எதிரில் படையல்...
சொந்தம் பந்தம்லாம் கூடி கதிரவனை கும்புடுறோம்.......
டிஸ்கி: இது பொங்கல் அன்று கொண்டாட்டம். மாட்டு பொங்கல், காணும் பொங்கல் அன்றைய கொண்டாட்டங்கள் அடுத்த பதிவில் மொக்கை தாங்கதவங்க மன்னிச்சூ.

















