புதன், அக்டோபர் 11, 2017

கனவுகளைக் கற்களால் வடித்து வைத்த ஹம்பி - மௌனச்சாட்சிகள்

 
எப்பப்பாரு, தமிழ்நாட்டுக்குள் சுத்தி பார்த்து, அதை பத்தி பகிர்ந்துக்கிட்டதால, ராஜி வேற எங்கும் போனதில்லன்னு ஆரும் தப்பா நினைச்சுடாதீங்கப்பு.. நாங்களும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா,போய் இருக்கோமாக்கும்...அதனால, அதுபத்திய பதிவுகள் இனி வரும். அப்பவாவது நானும் தூர தேசத்துக்குலாம் போய் இருக்கேன்னு நம்புங்க. நம்புவீங்கதானே?!  முதல்ல, எனக்கு அருகாமை மாநிலமான கர்நாடகாக்கு விசிட் அடிப்போம். அப்புறம் படிப்படியா கேரளா, ஆந்திரா,இப்படி தூர தேசங்களுக்கும் பயணம் போவோம். கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி(பெல்லாரி வெங்காயத்துக்கும் இந்த ஊருக்கும் எதாவது சம்பந்தமிருக்கா?!) மாவட்டத்தில்      இருக்கும் துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்த ஹம்பி நகரம் . இன்னிக்கு பதிவுல இந்த ஊர் பத்திதான் பார்க்கப்போறோம்.  
 ஹரிஹரா, புக்கான்ற விஜயநகர மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நாயக்க மன்னரான கிருஷ்ணதேவராயராலும் கட்டப்பட்டு,  முகலாயர் படையெடுப்பால் சூறையாடப்பட்டு., சிதிலமடைந்த நகரங்களில் ஒன்று இந்த ஹம்பி நகரமாகும்.  முக்கிய நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத் போன்ற இடங்களில் இருந்து ஹம்பியில் இருந்து 14 கி மீ தொலைவில் இருக்கும் ஹொஸ்பெட் ரயில்நிலையத்தில் இருந்து காரின் மூலம் ஹம்பிக்கு செல்லலாம். ஹம்பியை பத்தி நிறைய கேள்விப்பட்டு இருந்ததால எப்படி இருக்குமோன்னு ஒரு கற்பனை மனசுக்குள் விரிந்திருந்தது. தனுஷ்கோடி மாதிரி இருக்கும்ன்னு நினைச்சுக்கிட்டு போனால், என் கற்பனைக்கு எதிர்மாறா பச்சை பசேலென வயல்வெளிகள், சிதிலமடைந்த சிறிய கோவில்கள் என எனது இனி எதுக்காவது உன் கற்பனையை அலைய விடுவியான்னு மூஞ்சியில் ஓங்கி குத்தியது ஹம்பி நகரம்.  குத்துப்பட்ட மூக்கை தேய்ச்சிக்கிட்டே ஹம்பியை சுத்தி பார்க்க ஆரம்பிச்சேன். 
முதலில் வினாயகரை கும்பிட்டுட்டுதான் எந்த காரியத்தையும் தொடங்குறது நம்ம வழக்கம். அதுக்கு தகுந்த மாதிரி முதல்ல,  கடலெகளு கணேசாவுல ஆரம்பிச்சு... அரச மண்டபம், ஹேமகூடா மலைகள்...பிறகுவிருபாட்சர்கோயில்,சசிவெகளு கணேசா அடுத்து  ஜலாந்தர சிவலிங்கம், ஹம்பி பஜார், லட்சுமி நரசிம்ஹர் அதனை தாண்டி  யானைக் கொட்டில், தாமரை மஹால் அதையும் தாண்டி ஹஜாரா ராமச்சந்த்ரா கோவில், அந்த கோவிலையும் தாண்டி  புஷ்கரிணி, விட்டலா கோவில் அடுத்தது ஹம்பி என நமது பயணத்தை பிளான் பண்ணிக்கனும். பிளான் பண்ணாம எதையும் செய்யக்கூடாதுன்னு நம்ம வடிவேலு கூட சொல்லி இருக்கார்.  கடலெகளு கணேசா சன்னிதியில்  ஒரு பெரிய பிள்ளையார் சிலை  சிதிலமடைந்த நிலையிலும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறார். இங்குள்ளவர்கள் இவரை கடலெகளு கணேசா என அழைக்கின்றனர். மதுரையில் இருக்கும் முக்குறுணி பிள்ளையார் போல இந்த பிள்ளையாரும் 12 அடி உயர ஒரே கல்லில் செதுக்கப்பட்டுளார். வியயநகர மன்னர்கள் ஆண்டபோது அவர்களது குடும்பத்தினர் வழிபடுவதற்காகவே பிரத்தியோகமாக கட்டப்பட்டது இக்கோவில் என சொல்லப்படுகிறது.  முகலாயர்கள் படை எடுப்பின் போது, சிதைக்கப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று .இந்த பிள்ளையாரின் தும்பிக்கையும், வயிற்றுப்பகுதியும் போரில் முகலாய படைகளால் சிதைக்கப்பட்டுள்ளன.
இந்த ஹம்பி நகர் முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய நகரமாக விஜய நகர பேரரசுகள் தங்களது தலைநகராக கொண்டு ஆண்டு வந்திருக்கின்றனர். ஆறு முகலாய சுல்தான்கள் ஒன்று சேர்ந்து பெரும்படையுடன் வந்து மிகவும் போராடித்தான் இந்த சாம்ராஜ்யத்தினை தோற்கடித்தனர். அவ்வளவு சிறப்புமிக்க இந்த ஹம்பி நகரம் வரலாறுகளில் இடம்பிடித்துவிடக்கூடாது என்று முகலாய படைகள் சுமார் ஆறுமாதம் இருந்து, இங்கிருந்த அரிய சிலைகள், கோவில்கள், அரண்மனைகள் எல்லாவற்றையும் மண்ணோடு மண்ணாகிவிட்டனர். அவர்கள் உடைத்து சிதிலமாக்கிய எச்சங்களைத்தான் நாம் இன்று வியந்து பாராட்டுகின்றோம். விநாயகரின் கோவிலின் அருகேயே அரண்மனை வளாகம் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. ஹேமகூடாமலைகளின்மேல் இருக்கும் கோவில்களும் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது.

விநாயகரை தரிசித்துவிட்டு அடுத்து நாம பார்க்கபோறது விருபாட்சர் கோவில். சுற்றுலா பயணிகளுக்கும் புகைப்பட கலைஞர்களுக்கும் அரிய பொக்கிஷமாக இருக்கிறது இந்த விருபாட்சர் கோவில்.   ஒன்பது நிலைகளும் 52  அடி உயரமும் கொண்டது.  இந்த கோபுரம் சோழ  மற்றும் ஹைசானர்களின் கட்டடக் கலவையாக இருக்கும் இந்த கோபுரம் சுண்ணாம்பு மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டு ராஜ கோபுரமாக உயர்ந்து நிற்கிறது. 13 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் துளுவ வம்சத்து அரசர்களால்  காட்டப்பட்டாலும்,  இந்த கோவில் பின்னர் வந்த விஜயநகர மன்னர்களாலும்  15 ம் நூற்றாண்டில்  புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சிதிலமடைந்த ஹம்பியில் 2 கோவில்களில் மட்டுமே பூஜைகள் நடைபெறுகிறது. அதில் ஒன்றுதான் இந்த விருபாட்சர்கோவில். இதேப்போல் நமது மௌன சாட்சிகள் பதிவில் செஞ்சியில் முகலாயர்களால் தரைமட்டம் ஆக்கப்பட்டு இன்று 2 கால பூஜை மட்டுமே நடைப்பெறும் வெங்கட்ரமணர் ஆலயம் இதுவும் நம்ம ஊர்ல பார்க்கவேண்டிய கோவில்களே!பார்க்கத்தவங்க இங்கே போய் பார்த்துட்டு வந்துடுங்க. துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோவில் ஹம்பி நகரின் மிக உயரமான ஒன்பது நிலைகளும் 52 அடி உயரமும் கொண்ட மிகப்பெரிய கோவிலாகும். வாயிலில் தசவராத சிற்பங்கள் அழகாக  வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் மூலவரின் பெயர் விருபாட்சேஸ்வரர்.  தாயார் பம்பா தேவிவிஜய நகர மன்னர்கள் தங்கள் குல தெய்வமான புவனேஸ்வரிக்கு தனி சன்னதி அமைத்திருக்கின்றனர் .
பிரதான கோபுரத்தை கடந்துதான் உள்பக்க மண்டபத்திற்கு செல்லவேண்டும். இங்கேதான் நாம் ஒரு அதிசயத்தை பார்க்கப்போறோம். இப்பொழுது அறிவியலில் அபார வளர்ச்சியடைந்து விட்டோம் என மார்தட்டி கொள்ளும் மேலைநாடுகள் கூட கண்டு வியக்கும் ஒரு விஷயம்தான் இப்ப நாம பார்க்கபோறது.... சுற்று பிரகார ஓரத்தில் இருள் நிறைந்த ஒரு பகுதி இருக்கிறது. இந்த கோபுரத்தின் நிழல் அங்கே தலைகீழாக விழுகிறது. கூட்டத்தில் இருந்த ஒரு சிவபக்தர்,  என்ன நடக்கிறது விருபாட்சரே?! உங்கள் கோபுர நிழல் தலைகீழாக விழுகிறதே! என கன்னத்தில் போட்டுக்கொண்டார். இதை காட்டும் விளக்கப்படம் இங்கே ...
இங்கே இருந்த பல  அறிய பொக்கிஷங்களை முகலாயர்கள் சிதைத்து விட்டார்கள். ஆனால், எத்தனை படையெடுப்புகள் வந்தாலும் இந்த கோயிலை எதும் செய்யமுடியவில்லையாம்!! 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் கம்பீரத்துடன் காட்சி தருகிறது என்றும் சொல்லப்படுகிறது. சிலர் அந்த சுவரில் ஏதோ மாயம் இருக்கிறது என விருபாட்சரையே  சோதித்து பார்த்தனர். தாங்கள்  கொண்டுவந்த வெள்ளை துணியை திரையாக பிடித்து பார்த்தனர்.  அப்பொழுது அந்த அறையில் எந்த வெளிச்சமும் வராத நிலையில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக இருந்தது. உங்களைப்போல் தான் நானும்....வாங்க அவரிடமே கேட்போம் ... இது என்ன ஆன்மீகமா?!  இல்லை அறிவியலா?! என.....
அவரும் எதிரே இருந்த ஒரு சுவரில் இருந்த துளையை காட்டினார். அந்த துளையின் வழியாக கோபுரத்தின் பிம்பம் தலைகீழாக அந்த சுவரில் விழுகிறது.  இந்த தொழில் நுட்ப்பம்தான் இன்றைய கேமரா மற்றும் சினிமா ப்ரொஜெக்ட்டர்களின் அடிப்படை தத்துவம். அதை 300  வருடங்களுக்கு முன்னமே கண்டுபிடித்து கோவிலில் அமைத்து இருப்பது வியப்பின் உச்சம். போதும்..  திறந்த வாயை மூடாம  பார்க்குறது. வாய்க்குள் ஈ போய்டப்போகுது. எனக்கும் ஆச்சர்யமாகதான் இருந்தது. ஆனாலும் பின்ஹோல் கேமெரா என்ற தற்கால அறிவியல் தொழில் நுட்பம் சற்றே வியப்பின் உச்சம் .

கோவிலின் உள்ளே இருக்கும் சிவலிங்கம் பார்ப்பதற்கு அழகாக உள்ளது. நாங்கள் சென்ற நேரம் விஷேஷ தினமோ என்னமோ .கூட்டமாக இருந்தது. சிவ பரம்பொருளை தரிசித்து வரும்போது எதிரே இருந்த குளத்தின் பெயர் மன்மத குளம் என்றார்கள். நம்மூர்லதான் ஒரு மறைவிடம் இருக்கக்கூடாதே.. ஜோடிஜோடியா உக்காந்து நம்பளை இம்சிப்பாங்களே! அதுமாதிரி இங்கேயும் ஜோடி ஜோடியா வருவாங்களோன்னு நினைச்சு எதற்காக இக்குளத்துக்கு இந்த பெயர் வந்துச்சுன்னு கேட்டா...சிவபெருமான் ஒருமுறை கோபம் கொண்டு மன்மதனை தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்தபோது அதிலிருந்து வந்த தீக்கதிர்கள் இந்த குளத்தில் பட்டுதான் அணைந்ததாம். அதற்காகத்தான் இந்த குளத்தின் பெயர் மன்மத குளம் ன்னு சொல்லப்படுது.  வருடம் தோறும் இங்கே தெப்ப திருவிழா நடக்குமாம்.
கோவிலின் எதிரே ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு நீண்ட பஜார் இருக்கு, இதுக்கு விருபாட்ச பஜார்ன்னு சொல்லப்படுது. புராதன கால பாரம்பரியம்மிக்க இந்த பஜாரில் அந்த காலத்தில், உள்ளூர் வியாபாரிகள் முதல் வெளிநாட்டு வியாபாரிகளும் தங்கம், முத்து, பவளம், வைரம், வாணிபம் செய்ததாகக் கூறப்படுகிறது..
அடுத்தது, விஸ்வரூபமாக நிற்கிறார் லட்சுமி நரசிம்ஹர். 6.7 மீட்டர் உயர நரசிம்மரின் கைகள் உடைந்து, லட்சுமி சிலையும் இல்லாதிருப்பதால் இப்பொழுது உக்ர நரசிம்மராக வழிபடுகின்றனர்.

கடைவீதியின் முடிவில் மாதங்க மலை உள்ளது. அதனடியில் ஒரு பெரிய நந்தி மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் இருக்கும் நந்தி விருபாக்ஷரை பார்த்தபடி இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை ஒட்டியபடி செல்லும் படிக்கட்டு வழியாக சென்றால் திருவேங்கல  நாதர் கோவிலைக் காணலாம். இந்த நகரின் மொத்த அழகும் இங்கிருக்கும் பாறையின்மேல் நின்று பார்த்தால் தெரியும். மூன்று பக்கமும் மலைகளையும் ஒருபக்கம் நதியாலும் பாதிக்கப்பட்ட நகரமாகவே அக்காலத்தில் ஹம்பி இருந்திருக்கிறது. விருபாட்சர்  கோயில் அருகில் இருக்கும் ஹேமகூடா மலைக் குன்றில் 40-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. இவையெல்லாமே சமணர்களின் கட்டடக்கலை வடிவத்தில் அமைந்துள்ளது. கோபுரங்கள் எல்லாம் பிரமிடை நினைவுப்படுத்துவதாக உள்ளது. இங்கு 17 கோயில்கள், 12 சன்னதிகள், 7 மண்டபங்கள், 2 நுளைவுவாயில்கள், 2 கேலரிகள் இருக்கின்றன. 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இவற்றின் வடிவமும் அழகும் காண்பவருக்கு நிச்சயம் விருந்தாக அமையும் .

முதலில் ஒரு விநாயகர் சிலையை பார்த்தோம். இங்கே, இனி ஒரு அழகான கலைநயம் மிக்க விநாயகர் சிலை இருக்கிறது. இவரை சுவேகளு கணேசான்னு சொல்றாங்க. இதுல என்ன விஷேசம்ன்னு பார்த்தீங்கன்னா சுமார் மூணு மீட்டர் உயரம் உள்ள இந்த விநாயகர், கால்களை பக்கவாட்டில் பரப்பி அர்தாசனா வடிவில் வீற்றிருக்கிறார். இதுப்போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை. இதில் ஒரே சிலையில் முன்பக்கம் கணேசர் போலவும், பின் பக்கம் பார்வதி  கணேசரைத்  தூக்கி வைத்திருப்பது போலவும் செதுக்கப்பட்டுள்ள இச்சிலை  பார்ப்பதற்கு கலைநயத்தோடு இருக்கிறது.

இந்த மலையில் எதிரிகள் வருகையை கண்டறிய உயர்ந்த கோபுரம் போன்ற கோட்டை அமைப்புகளும் இருக்கின்றன. விருப்பாக்ஷா கோயில் அருகே துங்கபத்ரா நதி ஒரு மலையை சுற்றி வட்டவடிவில் வளைந்து செல்கிறது. அதனால், இந்த இடத்தை சக்கர தீர்த்தம்ன்னு புனிதமாக அழைக்கிறார்கள். இந்த இடத்தில் இருந்து நதியை பார்ப்பது மனதுக்கும் கண்ணுக்கும் இதமாக இருக்கிறது. ஜலாந்தர சிவலிங்கம்  மற்றும் யானை கொட்டில் எல்லாம் பார்க்கவேண்டிய இடங்கள் ..அடுத்து  பார்க்கவேண்டிய முக்கியமான இடம் லோட்டஸ் மஹால் ..
இதற்கு இந்திய பிரஜைகளுக்கு 10 ரூபாயும், அதேப்போல் வெளிநாட்டவருக்கு 250 ரூபாயும் வசூலிக்கிறார்கள். .இந்த மஹாலை பற்றி உள்ளூர்காரர் ஒருவர் சொன்னது..... ஹம்பியை ஆணட கிருஷ்ணதேவராயருக்கு , திருமலா தேவி, சென்னா தேவி மற்றும் ஜகன் மோஹினி என்று மூன்று ராணிகள் இருந்தாராம். அதில் சென்னாதேவி மிகவும் அழகும், நடனக்கலையில் சிறந்தும் விளங்கினார். அவருக்ககாக கட்டப்பட்டது இந்த மஹால் என்று கூறினார். தாமரை இதழ்கள் போன்று அலங்கரிக்கும் இந்த மாளிகையின் பகுதிகள் இரண்டு மாடி கட்டடமாக திறந்தவெளி அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. அதேப்போல் அந்தக்காலத்திலையே குளிரூட்டப்பட்ட தொழில்நுட்ப வசதி கொண்ட மாளிகை எனவும் சொல்லப்படுகிறது. தாமரை மஹால்சித்ரக்னி மஹால் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய -மொகலாய கட்டிட கலையின் கூட்டமைப்பில் 24 சதுர தூண்களின் மேல் தாமரைவடிவில் ,அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இது ராஜ குடும்பத்து பெண்களின் கேளிக்கை,  நடனம் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. 

அடுத்து நாம பார்க்கப்போற முக்கியமான கோவில்,  ஹஜாரா ராமச்சந்த்ரா கோவில். சித்தாந்த நிலையிலும் அந்த சிற்பங்கள் பார்ப்பதற்கு அவ்வளவு வேலைப்பாடுகள் கலைநயத்தோடு காணப்படுகின்றது. இராமாயண காட்சிகளை கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்று கல்லிலே செதுக்கி இருக்கும் பாங்கு மிகவும் அருமையா இருக்கு. அந்தியும் சாய தொடங்குகிறது. இரவின் மடியில் விளக்கின் ஒளியில் இந்த கோவிலை பார்ப்பதே ஒரு அழகு.  இயற்கை  ஒளியும், செயற்கை ஒளியும் சந்திக்கும் அந்திவேளை வந்துவிட்டது . இனியும் ஒன்றிரண்டு கோவில்களும் இடங்களும் நாம பார்க்கவேண்டியது இருக்கு.  வேகமாக பின் தொடர்ந்து வாங்க .
படித்துறை அமைந்த குளங்களை புஷ்காரிணி என்று சொல்வதுண்டு. அதில் அர்ச்சகர்களுக்கு தனி குளமும், அதனருகில் அரச குடும்பத்து குழந்தைகள் நீச்சல் பழகவும் குளிப்பதற்கும் ஒரு தனிக் குளமும், அதனை அடுத்து பொதுமக்கள் குளிப்பதற்கு என்று ஒரு குளமும், அதற்கான நீர்போக்குவரத்து பாதைகளும் நம்மை அசரவைக்கின்றன. அங்க காவல்புரியும் வீரர்களுக்கு சாப்பாடு தயாரிக்கும் இடம்,  கல்லிலால் ஆன தட்டுகள், அதை சுத்தம் செய்யும் முறைகள் என எல்லாமே தொழில்நுட்ப அறிவுடன் உருவாக்கப்பட்டுள்ளன .

அடுத்து நாம பார்க்கபோறது விட்டலா கோவில். இந்த கோவில் முகமதியரின் படையெடுப்பில் முற்றிலுமாக சிதைக்கப்பட்டது. முகைலாய வீரர்கள் இங்கே 6 மாதக்காலம் தங்கி இருந்து இந்த கோவிலை இங்குள்ள சிற்பங்களை சிதைத்தனர். அந்தச் சமயத்தில், இங்குள்ள மூலவரான பண்டரிநாதனை மீட்டு பண்டரிபுரம் கொண்டு சென்று நிறுவியதாக வரலாறுகள் சொல்கின்றன. இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பு , வாயிலின் பக்கம் நம்மை வரவேற்கும் பெரிய கல்லிலான ரதம். இதன் சிறப்பு என்னனா உண்மையிலையே சுழலும் கல்லினால் ஆன சக்கரங்களை கொண்டது. கல்லிலே இதெல்லாம் சாத்தியமா?! கற்பனைகளை கல்லிலும் வடிக்கமுடியும் என்று நிரூபிக்கும் இடம் இந்த ஹம்பி விட்டலா கோவில்.

சிதிலமடைந்த கட்டிடங்களும், சிற்பங்களும் தன்னுள்ளே எல்லா கதைகளையும் கொண்டு மெளனசாட்சியாக நிற்கின்றன.  இங்கு செல்ல சென்னையிலிருந்து நேரடியாக ட்ரெயின் வசதிகள் இல்லை. சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து ஹூப்ளி செல்லும் ஹம்பி எக்ஸ்பிஸ் வழியாக ஹோசபெட் ரயில் நிலையத்தில் இறங்கலாம் இந்த ரயில்நிலையத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது ஹம்பி.   ஹோசபெட்டில் இருந்து ஹம்பிக்கு  ரிக்‌ஷா, ஆட்டோ-ரிக்சா, கால் டாக்சி,  கவர்மெண்ட் பஸ் என நான்கு விதமாக செல்லலாம்.. நாம குளிர் காலத்தில் இங்கு வந்தா  ரிக்சாவில் செல்வது குளிர்ந்த காற்றுடன் துங்கபத்ரா நதியின் அழகை பசுமையான கிராமங்களை பார்த்துகிட்டே பயணிக்கலாம். ஆனா,  கோடைக்காலங்களில் ரிக்சாவை தவிர்ப்பது நலம் .

ஹோசபெட்டில் இருந்து ஹம்பிக்கு இரண்டு  வழியாக செல்லலாம். ஒன்று கட்டிராம்புரா வழி, மற்றொன்று கமலாபுரா வழி. கட்டிராம்புரா வழி விருப்பாக்ஷா கோயில், கடலெகளு கணேசா, அரச மண்டபம், ஹேமகூடா மலைகள் பகுதிக்கு செல்லும். கம்லாபுரா வழி குயின்ஸ் பாத் என்ற ராணிகள் குளிக்கும் இடம் வழியாக சென்று சேர்க்கும். இதில் கட்டிராம்புரா வழியாக செல்வதே நமக்கு நிறைய இடங்களை பார்க்கும் வாய்ப்புகளை கொடுக்கும் . இங்கே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உலகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதால் சாதாரண நிலையில் இருந்து ஸ்டார் ஹோட்டல்கள் வரை இருக்கின்றன.

ஒருநாள் பயணமாக இங்கு வருவதைவிட மூன்று நாட்கள் பயணமாக வந்தால் ஹம்பியை சுற்றி உள்ள எல்லா இடங்களையும் சுற்றி பார்க்கலாம் அத்தனை விதமான அற்புத கலைவண்ணங்கள் கல்லிலே வடிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நகரத்தை சுற்றி பார்க்க சைக்கிள், பைக் போன்றவைகள் வாடகைக்கு கிடைக்கும். அதிலும் 12 க்கு மேற்பட்டவர்கள் கொண்ட குழு என்றால் கர்நாடகா சுற்றுலாத்துறையின் வேனை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். ஒருநாளைக்கு 1500  வசூலிக்கிறார்கள் அதில் ஒரு சுற்றுலா கைடும் இருப்பார். அவர் எல்லா இடங்களுக்கும் கூட்டி சென்று விளக்கி சொல்லுவார். மற்றபடி தனியாக செல்லும் ஆர்வலர்கள் மோட்டார் பைக் ஏற்பாடு செய்து அதனுடன் ஒரு கைடு ஏற்பாடு செய்து கொண்டால் நிறைய இடங்கள் பார்க்கலாம் ..

மீண்டும் வேறொரு மௌன சாட்சிகளில் சந்திப்போம்..
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1474413
நன்றியுடன்,
ராஜி.

16 கருத்துகள்:

 1. அழகா ஹம்பிக்கு கூட்டிட்டு போய் காண்பித்துவிட்டீர்கள்.. எப்போதும் போல் படங்கள் அருமை... போர்தான் செய் வந்தான் செய்துவிட்டு போயிருக்க வேண்டியது தானே ஆக்கங்களை அழிக்கும் என்று ஏன் தான் தோன்றியதோ இந்த படையெடுக்கிறவனுக்கெல்லாம்.... அன்று இருந்த சூட்சம அறிவு இன்று கட்டிடத்தை பற்றி படித்தால் கூட வருகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது அன்றைய சின்னங்கள் ..பகிர்வு அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொந்த ஊர், மக்கள், வீடு, மனைவி, பிள்ளைகள் குடும்பத்தார்ன்னு விட்டு பிரிஞ்சிருக்கும் வெறி. இப்படிலாம் செய்ய தோணும்ன்னு படிச்சிருக்கேன்.

   நீக்கு

 2. யக்கோவ் எப்ப பார்த்தாலும் அங்கே போனேன் இங்கே போனேன் அந்த கோயிலை பார்த்தேன் இந்த கோயிலை பார்த்தேன் என்று பதிவு போடுறீங்க ஆனால் ஒரு நாளும் வீட்டில் இருந்தேன் என்ற மாதிரியான பதிவுகளும் என் கண்ணில் படவே இல்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுக்குதான் கிச்சன் கார்னர், கிராஃப்ட் கார்னர், கேபிள் கலாட்டான்னு பதிவு போடுறேனே. இதுலாம் ஊருக்கு போகும்போது செய்ய முடியுமா?! கொஞ்சமாவது மூளைய யூஸ் பண்ணு தம்பி

   நீக்கு
 3. எச்சங்கள் மட்டுமே இவ்வளவு ரசிக்க முடிகிறது என்றால் மற்றவை எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்கும்?

  படங்கள் கவர்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம் ராஜராஜ சோழன் படத்துல ஒரு வசனம் வரும்.. இந்த காலத்துக்கு எது தேவையோ அது மட்டுமே இறைவனால் மிச்சம் வைக்கப்பட்டிருக்கு

   நீக்கு
 4. உலகின் மிகப்பெரிய திறந்தவெளி அருங்காட்சியகம் என்று ஹம்பியைக் கூறுவர். குடும்பத்துடன் சென்றுள்ளோம். ரசித்துள்ளோம். பார்க்கவேண்டிய இடம்.

  பதிலளிநீக்கு
 5. மிக...மிக அழகான இடம் ராஜிக்கா...

  தகவல்களும்...படங்களும் சிறப்பு...

  எங்க டூர் லிஸ்ட் ல உள்ள முக்கியமான இடம்...

  பதிலளிநீக்கு
 6. சுற்றுலா சென்று வந்த து போல் உணர்வு பாராட்டுகள் த.ம. வாக்குடன்

  பதிலளிநீக்கு
 7. நாங்களும் ஹம்பி சென்றிருக்கிறோம் ஆனால் நான் எடுத்தபடங்கள் இவ்வளவு துல்லியமாக வரவில்லை ஹம்பியில் ஒரு ம்யூசியம் மாதிரி வைத்திருக்கிறார்கள் பெரும்பாலான விஷயங்கள் காணொளியாகக் காட்டுகிறார்கள் சுழலும் கல் ரதம் பார்த்தோம் ஆனால் சக்கரம் சுழலுமா இல்லை சொல்லிக் கேள்விதானா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுழலும் சக்கரம் என்று சொல்லப்பட்டாலும் ,அதில் கல்லினால் ஆனா பெரிய துவாரம்இருக்கிறது .அதை சுற்றுமளவு யாருக்கு தெம்பு இருக்கிறதுப்பா ...

   நீக்கு
 8. படங்கள் அழகு! விளக்கமும் நன்று! த ம 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   நீக்கு