Saturday, December 22, 2018

தனக்குள் இருக்கும் கடவுளை உணர்த்தும் சபரிமலை - ஐயப்பனின் அறுபடைவீடுகள்


சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்த அனைவருமே ஐயப்பன்கள்தான். அனைவருமே கடவுள்தான். மது, புகை, புலால், தகாத உடல்சேர்க்கை, பொய், களவு, சூது... என தீய குணங்களை விட்டொழித்தால் நீயும், நானும் கடவுளாகலாம்ன்ற அரிய தத்துவத்தை எடுத்துச்சொல்வதே ஐயப்பன் வழிபாடு. அதனால்தான் மாலை அணிஞ்சிருக்கும் ஐயப்ப பக்தர்களை வயசு வித்தியாசம், சாதி பேதமில்லாம பகை உணர்ச்சி பார்க்காம வணங்குவது. ஐயப்பனின் அவதாரமும், விரதமுறைகளுமென பல பதிவுகளை பார்த்தாச்சு. ஐயப்பனின் அறுபடை வீடுகளில் இன்னிக்கு பார்க்கவேண்டியது சபரிமலை. அதனால் தலவரலாறு,   கதைன்னு போரடிக்காம சபரிமலையின் சிறப்புகள் பத்தி பார்க்கலாம்.


சபரிமலை அய்யப்பன் கோவில் சுயம்புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமின்ற 7 சிறப்புகளைக் கொண்டது. ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா என உள்ளம் உருகி வேண்டினால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற அய்யப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள். அப்படி உள்ளமுருகி வேண்டுபவர்களின் 27 தலைமுறைக்கான பாவத்தை போக்கும். போக்குவேனென ஐயப்பனே பந்தள மகாராஜாவுக்கு வாக்கு கொடுத்திருக்க்கிறான். சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு. சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் அய்யப்பன் மனசாட்சியை தட்டிக்கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது என உணர்த்துகிறது.
அழுதாநதி.. கல்லிடுங்குன்று... 


மகிஷியை வதம் செய்த மணிகண்டன் வதம் செய்ததும், அவளை பூமிக்குள் அழுத்தி பெரிய கல்லை வைத்து அதன்மீது நின்றான்.  இதை மனதில் கொண்டுதான் அழுதா நதியில் எடுத்த கற்களை கல்லிடுங்குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள். அவளின் உடல்மீதேறி ஆனந்த நடனம் புரிந்தார். அப்படி ஐயனின் காலடிப்பட்டதும், மகிஷிக்கு ஞானம் வந்தது. தனது தவறை உணர்ந்து அழுதாள். அவளின் கண்ணீரே அழுதாநதியாய் ஓடுகிறது.  சபரிமலையை நெருங்கியதும், எருமேலியில் பேட்டை துள்ளி அழுதாநதியில் நீராடி, அங்கிருந்து சிறு கல்லை எடுத்துக்கொண்டு, 2மைல் கடந்து கல்லிடுங்குன்று பகுதியில் அந்த கல்லை சமர்ப்பிக்கனும்.

பதினெட்டாம்படி..
நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம்படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள். பதினெட்டாம்படியில் ஏறும்போது பக்தர்கள் தங்கள் கோரிக்கையை அய்யப்பனிடம் வைக்கவேண்டும் என்பது ஐதீகமாகும். படியில் ஏறும்போது, நெரிசல் ஏற்படும் பட்சத்தில் உங்கள் கவனம் சிதறிவிடக்கூடாது. எனவே பதினெட்டாம்படிகளில் இருமுடியுடன் ஏறும்போது, என்னதான் நெரிசல் ஏற்பட்டாலும் வேண்டுதலை விட்டு விடக்கூடாது. இது ரொம்ப முக்கியம். ஐயப்ப பக்தர்கள் புண்ணியமாய் கருதும் பதினெட்டு படிகளை சொர்க்கலோகத்தை வடிவமைத்த தேவலோக தச்சனான விஸ்வகர்மாவினால் கருங்கற்களைக்கொண்டு கட்டப்பட்டது. அதனால் அப்படிகளில் தேங்காய் உடைக்க தடை செய்யப்பட்டிருக்கு. பதினெட்டு படிகள்முழுக்க பிராணன் சக்தி அடங்கி இருக்கு. அதனால்தான் அவைகளுக்கு பூஜை, அபிஷேகமென செய்விக்கப்படுது. எந்த கோவிலின் படிகளுக்கு இப்படி பூஜைகள் செய்விக்கப்படுவதில்லை. 

தியானம், யோகத்தில் கரைக்கண்டவர்களால்கூட குண்டலினி சக்தியை அடைவது கடினம். ஆனா, இருமுடியை தலைமேல் வைத்து, இருமுடியை கவனத்தில்கொண்டு, ஐயப்பனை புகழ்பாடிக்கொண்டிருந்தால் இந்த குண்டலினி சக்தி கைவரப்பெறும். இருமுடி கட்டி தலையில் அழுத்தம் கொடுத்தவண்ணம் தலையில் ப்ராணன் செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை அணுகினால் முழுமையான சக்திமாற்றம் ஏற்படும். இதையே நியதியாக்கினார் அந்த யோகி.  விரதமிருக்காமலும் இருமுடி கட்டாமலும் ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஆனா, இருமுடிகட்டாமல் பதினெட்டாம்படியை தொட அனுமதியில்லை. ஐயப்பனைவிட அந்த படிகள் அவ்வளவு உயர்ந்தது. ஏன்னா, அவற்றில்தான் பிராணன் சக்தி உள்ளது. 


சபரிமலை அய்யப்பன் கோவிலில் "தத்துவமசி" எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், "நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்" எனப் பொருள். அய்யப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த  கருப்பசாமி பதினெட்டுப்படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும். சபரிமலையில் உள்ள பஸ்மக்குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கரிமலைமேட்டில் கரிமலைக்கிணறு ஒன்று இருக்கு. இது ஒரு ஊற்று. இவ்வழியில் வரும் ஐயப்பன்மார்களின் தாகம் தீர்ப்பதற்காக ஐயப்பன் தன் சரத்தினை விட்டு ஒரு கிணறு உருவாக்கியதாக ஐதீகம். இங்கு தேங்காய் உடைத்து வெடி வழிபாடு செய்யலாம். அப்பாச்சிமேட்டில் வனதேவதைகளுக்கு வெல்லம், எள்ளு, பொரி உருண்டைகளைப் பள்ளத்தில் போடுவார்கள். இந்த இடத்திருந்து மகரஜோதியைப் பொன்னம்பலமேட்டில் நன்கு பார்க்கலாமாம். 
ந்தள மகாராஜாவுக்கு கோவில் கட்ட இடங்காட்டும் விதமாக  எய்த அம்பு விழுந்த இடம் சரங்குத்தி. அதனால், எருமேலியில் பேட்டைத்துள்ளலுக்காக வாங்கிய சரம், வாள்,போன்றவைகளை இங்க சேர்ப்பித்துவிட்டு போவாங்க. பதினெட்டு படிக்கு அருகிலிருக்கும் ஹோமக்குண்டத்தில் நெய்தேங்காய் போட்டுவிடுவர். மிச்சம்மீதி தேங்காய்களை தேவாம்சம் போர்டில் ஒப்படைச்சுட்டா அன்னதானத்துக்கு பயன்படுத்திப்பாங்க. திருப்பதியில் லட்டு, பழனியில் பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவனைப்பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப்பாயசம் தயாரிக்கப்படுகிறது.

சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும். அய்யப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களும் பூக்களை  கொடுக்கலாம். அய்யப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் எனப்பேரு.  சபரிமலை அய்யப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் அய்யப்ப உற்சவரை தரிசிக்கலாம்.

சபரிமலை செல்லும்முன் எருமேலியிலிருக்கும் வாபர்மசூதியில் தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம். ராமப்பிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாகக்கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 


ஆதிகாலத்தில் இருந்த கோவிலில் மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பரசுராமர் பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறுஅவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன்ன்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணைவதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும். வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.

ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியானக்கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவைப்போல் விழித்தநிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷம். ஐயப்பன் தன் வலதுக்கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடதுக்கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்துவிடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்குது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம். 


நமக்கு ஒரு வருடமென்பது சூரியமண்டலத்திற்கு ஒருநாள் பூமியில் 24 மணிநேரம் ஒருநாள் என  கணக்கிடுகிறோம்.  சூரியக்குடும்பம் என்ற நம் சூரிய மண்டலத்திற்கு ஒருநாள் என்பது பூமியானது சூரியனை ஒருமுறை சுற்றிவருவதை குறிக்கும். அதாவது பூமி தன்னைத்தானே சுற்றினால் நமக்கு ஒருநாள். பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வந்தால் சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள். இந்த ஒருநாள் நமக்கு ஒரு வருடமென வானவியல் (astronomy) சாஸ்திரம் சொல்கிறது. இதற்கு நட்சத்திர மணி அல்லது சைடீரியல் டைம் என கூறுகிறார்கள். அதே போல் பகவான் விஷ்ணு பள்ளிகொண்ட திருப்பாற்கடல் Milkyway என்று ஆங்கிலத்தில் அறியப்படுகிறது. 

சூரிய மண்டலம் என்பதையே நம் புராணங்கள் தேவலோகம் என உருவகப்படுத்தி இருக்குது. இதனால் அவர்களின் ஒருநாள் நமக்கு ஒருவருடம் ஆகிறது. தேவர்களின் இந்த ஒருநாள் இரவு பகல் என இரண்டாக பிரிக்கலாம்.  நமக்கு 12 மணிநேரம் பிரிப்பதைப்போல இவர்களுக்கு 6 மாதம் பகல் , 6 மாதம் இரவு என பிரிக்கலாம். இத்தகைய தேவர்களின் இரவு பகல் என்பதையே உத்திராயணம், தட்ஷிணாயனம் என்கிறோம். நம் நாள் எப்படி சூரிய உதயத்திலிருந்து துவங்குகிறதோ அதுப்போல உத்திராயணம் என்ற தேவர்களின் பகல் சூரியன் குறிப்பிட்ட நிலைக்கு வருவதால் துவங்குகிறது. ராசி மண்டலத்தில் 12 ராசிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதில் 6 ராசிகள் பகல் வேளையும் 6 ராசிகள் இரவு வேளையும் குறிக்கும். பகல் வேளையை குறிக்கும் ராசிகளில் முதலில் ஆரம்பிக்கும் ராசி மகர ராசியாகும்.

மகரராசியில் சூரியன் நுழைந்து உத்திராயணக்காலத்தை துவக்கும் வேளையை மகர ஜோதி என்கிறார்கள். இது மகர ராசியில் ஜோதி சொரூபமாக இருக்கும் சூரியனை குறிப்பதாகும். இதை தவிர்த்து காந்தமலை என்ற இடத்தில் தெரியும் ஜோதியை அல்ல. மகர சங்கிரமம், மகர ஜோதி என்பது சூரியனின் நிலையையும், உத்திராயண காலத்தையும் குறிக்கும். மலையில் தெரியும் ஜோதி இயற்கையாக தெரியும் விஷயம் அல்ல. மனிதர்களால் உருவாக்கப்படும் விஷயமேன்னு சொல்லப்படுவதும் உண்டு.  அது ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய விசயமும்கூட... பிரபஞ்சத்தில் எந்த இடத்திலும் இறைவன் அதிசயத்தை நிகழ்த்தி தன்னை நிரூபணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. தன்னை நிரூபித்தால் அது இறைவனும் அல்ல..! திருவண்ணாமலையில் ஏற்றப்படுவதை போல சபரிமலையிலும் தை மாதம் ஒன்றாம் தேதி (உத்திராயண ஆரம்பம்) கோவில் நிர்வாக குழுவினரால் ஜோதி ஏற்றப்படுகிறது. இது எனது கருத்து மட்டுமே! நீங்கள் இது இயற்கையாக இறைவனே ஜோதியாக வருகிறான் என நினைத்தால் அப்படியே இருக்கட்டும். ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...!


சபரிமலை பயணத்தில் கரிமலை ஏற்றம் என்ற இடத்தை போல கடினமான பாதை ஏதுமில்லை. கரிமலை இறக்கமும் அப்படியே! அதாவது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்த நிலைக்கு சென்றாலும் இறக்கமுண்டு என்பதை மனதில் இருத்தி தலைக்கணம் கொள்ளாமல் நடக்கவேண்டும். எத்தனை கஷ்டமான காலக்கட்டத்தில் வாழ்ந்தபோதிலும், கஷ்டப்பட்டு உழைத்தால் ஏற்றமுண்டு என்பதையே இந்த பாதை காட்டுது. பம்பையிலிருந்து புறப்பட்டால் அடுத்து வருவது நீலிமலையாகும். நீலிமலை சற்று கடினமாகவே இருக்கும் ஏன்னா, இப்பாதை  மிகவும் செங்குத்தாக இருக்கும். மலை ஏற்றம் முடியும் இடத்திற்கு அப்பாச்சிமேடு என்று பெயர். அப்பாச்சிமேடு வந்தவுடன் இருபுறமும் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் வெல்லக்கட்டி வீசி வணங்கனும். கடூரவனையும், துர்தேவதைகளையும் திருப்பதிப்படுத்த வேண்டி இச்சடங்குகள் நடத்தி வழிபாடு செய்வது வழக்கம்.

நீலிமலையில் சுப்பிரமணியர் பாதை: 
ஐயப்பன்வாசம் செய்யும் சபரியை அடையும்முன்பு கால்முட்டி, தரையில் உரசுமளவுக்கு பக்தர்கள் ஏறும் மூன்றாவது மலை இது. நீலிமலையில் வசித்த மாதங்க மகரிஷி, தன் மகள் நீலியுடன் சிவனை நோக்கி தவம் செய்ததாகவும், அவளது பெயரில் இம்மலை விளங்குவதாகவும் சொல்லப்படுது. இம்மலைப்பாதை துவங்குமிடத்தின், வலதுபக்கமாக ஒரு பாதை பிரியுது. இதை "சுப்பிரமணியர் பாதை' ன்னு சொல்வாங்க. இந்த வழியாகத்தான் ஐயப்பன் கோயிலுக்கு தேவையான சாமான்கள் கழுதை மூலமாக கொண்டு செல்லப்படுது. நீலிமலை ஏற்றத்தில் அப்பாச்சிமேடு, இப்பாச்சிக்குழின்ற சமதளப்பகுதி வருகிறது. அப்பாச்சிமேட்டில் பச்சரிசி மாவு உருண்டையை கன்னிசுவாமிகள் வீசி எறிவார்கள். வனதேவதையை திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுது.


சபரிபீடம்
நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் இருக்கு. இந்த பீடம் இருக்கும் பகுதியில்தான் "சபரிமலை' என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள்.  மதங்க முனிவர் என்னும் முனிவர், மதங்கொண்டலையும் ஐம்புலன்களையும் அடக்கி தவம் செய்த தவத்தின் வலிமையால் தனது சீடர்களுடன் பிரமலோகம் செல்லும் பாக்கியம் பெற தவம் செய்த இடம் இதுதான். மதங்க முனிவரின் முதல் சீடரான "சபரி" மதங்க முனிவரோடு பிரம்மலோகம் செல்லும் பாக்கியம் கிடைத்தும் இராமபிரான்மீது கொண்ட பக்தியால் அவரைப் பூலோகத்தில் பூசிப்பதற்கும் அதன் பின்னர் பிரம்மலோகம் செல்வதற்கும் பிரம்மதேவனிடம் வரத்தினைப் பெற்று  இராமபிரானைச் தரிசித்த இடமும் இதுதான். 


சரங்குத்தி ஆல்சபரிபீடத்திற்கு அடுத்து வருவது சரங்குத்தி ஆல். கன்னி ஐயப்பன்மார்கள் தங்களுடைய கன்னி யாத்திரையை உறுதி செய்து கொள்ளும் கட்டம் இதுதான். இந்த இடத்தில் தங்களுக்கு குருசாமியால் எருமேலிப்பேட்டையில் கொடுக்கப்பட்ட தங்களுடன் அதிஜாக்கிரதையாய் காட்டுவழித்துணையாய் கொண்டுவந்த சரத்தை அந்த சரங்குத்தி ஆல் என்ற இடத்தில் விடுக்க வேண்டும். எந்த வருசம் கன்னிச்சாமி யாரும் வரவில்லையோ அந்த வருசம் சரங்குத்தி ஆல் வெறுமையாய் காட்சியளிப்பதைக் கண்டு மஞ்சமாதா வெளியில் வந்து  ஐயப்பனை திருமணம் செய்துக்கொள்வாள் என்பது ஐயப்பன் மகிஷிக்கு கொடுத்த வாக்கு


கட+உள்=கடவுள், அதாவது காமம், குரோதம்,பகை, பழி, ஆசைகள்ன்ற உணர்ச்சிகளை கடந்து சென்றால், நமக்குள் இருக்கும் கடவுளை உணரலாம். இதைத்தான் இந்த வாசகம் சொல்லுது. அதைவிட்டு கடவுளை வெளியிடத்தில் தேடினால் கிடைக்காது. ஏன்னா, கடவுள் வெளியில் இல்லை. நமக்குள் இருக்கின்றான். மனிதன் தன் மதிநுட்பத்தால் விளங்கிக்கொள்ள முடியாதவற்றையெல்லாம் அதிசயம், கடவுள் என நம்புகிறான்.  அப்புறம் எதுக்கு பூஜை, அர்ச்சனை, தியானம்ன்னு கேட்டால் மனிதனை நெறிப்படுத்தவே இதெல்லாம். மனிதன் அடங்குவது ரெண்டு விசயங்களுக்கு.. ஒன்னு பயம், இன்னொன்னு அன்பு,  கடவுளின்பால் அன்பெனும் பக்தியை கொண்டு நெறிப்பட வாழமுடியாதவர்களை பயமென்னும் சாட்டைக்கொண்டு நெறிப்படுத்த முயற்சிப்பதே விரதம், பூஜை முறைகள். 40 நாட்கள் முழுமையாக விரதமிருந்து எளிமையாக வாழ்ந்து இறைவனைக் காண செல்லும்போது ஜோதி வெளியே தெரிய வேண்டுமா அல்லது உள்ளே தெரிய வேண்டுமா என நாம் தான் முடிவு செய்ய வேண்டும்...!?


அப்பா சொன்ன விவரங்களோடு, முகநூலில் சுட்ட படங்களுடனானது இப்பதிவு.. பேரூர்தோடு, வண்டிபெரியாறு, சாலக்காயம், பம்பாநதின்னு அப்பா இன்னும் விவரங்களை சொன்னார். அதுலாம் மனசுல பதியல:-( 


சாமியே சரணம் ஐயப்பா!
நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. ஐயப்பனுக்கு அறுபடை வீடுகளா
    அறியாத செய்தி
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. இதேமாதிரி வினாயகருக்கும் அறுபடை வீடுகள் இருக்குண்ணே.

      Delete
  2. முடிவில் கட+உள்=கடவுள் பத்(க்)தி சிறப்பு...!

    ReplyDelete
  3. எத்தனை எத்தனையோ கதைகள் எதைத்தான் நம்புவது சில நாட்களுக்கு முன் ஒரு திரைப்படத்துக்காக பதினெட்டாம் படிகளில் ஆடியும் பாடியும் படமெடுத்தார்களாம்

    ReplyDelete
    Replies
    1. பணம் படுத்தும் பாடு.. கடவுளையுமா விட்டு வைக்கும்?!

      Delete
  4. சகோதரி நானும் அடிக்கடி சொல்வது கட+உள் கடவுள். பதிவு கூட போட்ட நினைவு. (துளசிதரன்)

    நிறைய கதைகள் தகவல்கள். அறுபடை வீடு என்ற சொல் இப்போதுதான் கேள்விப்படுகிறோம். (இருவரின் கருத்தும்)

    மகர ஜோதி வரை ஐயப்பன் பதிவுகள் தொடருமோ ராஜி. ஹா ஹா ஹா..எங்கூர்ப்பக்கம் இந்த அரவனை பாயாஸம்தான் செய்வாங்க. எங்க பிறந்த வீட்டுலயும் செய்யறதுண்டு. கோயிலுக்கும் பிரசாதம் வழங்க காசு கொடுப்பதுண்டு. நானும் வீட்டுலயே அரவனை செய்யறதுண்டு. சம்பா பச்சரி/உடைச்சது இருந்தா நல்லாருக்கும் இல்லைனா முழுசுல..(கீதா)



    ReplyDelete
    Replies
    1. பயப்படாதீங்க. ஐயப்பன் பத்தி இப்போதைக்கு இன்னும் இரு பதிவுகள் மட்டுமே வரும் கீதாக்கா/ துளசி சார்.

      Delete