Thursday, December 13, 2018

குழந்தைவடிவில் ஐயப்பன், குளத்துப்புழா - ஐயப்பனின் அறுபடை வீடுகள்


இப்ப மாலை போடுறவங்கள்ல பெரும்பான்மையானவங்களுக்கு எதுக்கு மாலை போடுறோம்??! இருமுடியின் தத்துவமென்ன?! பதினெட்டு படிக்கு என்ன அர்த்தம்?! சரங்குத்தின்னா என்ன?! எரிமேலியில் ஏன் வேசம் போடுறோம்ன்னு தெரியாமயே மாலை போட்டு கோவிலுக்கு போறாங்க. அவங்களை பொறுத்தவரை இது ஒரு சுற்றுலா அவ்வளவே! ஆனா, சபரிமலை ஐயப்பனின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் இருக்கு.  அதைலாம் நம் பதிவில் இனிவரும் காலங்களில் பார்ப்போம். முதலில் பதினெட்டாம்படி தத்துவம்...

பதினெட்டாம் படி ரகசியங்களில் ஒன்று ஐம்புலன்களை அடக்குவது.  அதாவது கண், காது, மூக்கு ,வாய், தோல் என ஐம்புலன்களை  அடக்குவது . காதுக்கு கெட்டதை கேக்காதே, கண்ணால் கெட்ட  விசயங்களை பாக்காதே. வாயால் புலால், மது, புகை சுவைக்காதே, அடுத்தவரை புண்படுத்தும் வார்த்தைகளை பேசாதே.  தோலினை இரண்டு வேளையும் குளித்து சுத்தபடுத்து. இப்படி ஐம்புலன்ங்களையும் அடக்கி,  அறுங்குணங்ககளையும் சீரமைத்து,  அறுங்குணம் என்றால் ஆறு குணம் . பேராசை,  கடும்பற்று, சினம், முறையற்ற பால் கவர்ச்சி(SEX), உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இந்த ஆறு குணங்களையும் சீரமைத்தல்.  நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களின் வழியாக ஏழு சக்கரம் என்றால் மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிப்பூரகம், அனகாதம்,விசுத்தி, ஆக்கினை, துரியம் என்னும் ஏழு சக்கரங்களை கடந்து குண்டலினி சக்தி மேலோங்கி  நிற்கும்.  அப்பொழுது  ஐந்து பூதங்களின் அப்பனான அய்யப்பனை கண்டு தரிசிக்கலாம் என்பதே இந்த பதினெட்டு படிகளின் தத்துவம்.  ஐம்புலன்களை அடக்கி, அறுங்குணங்களை சீரமைத்து , ஏழு சக்கரங்களை கடந்து இந்த பதினெட்டு விதிகளை கடைபிடித்தால் ஐந்து பூதங்களின் அப்பனான ஐயப்பனை காணலாம் என்பதே  பதினெட்டு படியின் தத்துவம். 

பொதுவாக இந்து கடவுளர்களை பற்றி புரிந்து கொள்வது மிக எளிதான விஷயமில்ல. இந்துமதத்தில் சில இடைச்சொருகல்கள் காரணமாக சில விஷயங்கள் விமர்சிக்கப்படுகின்றனவே தவிர, உண்மையில் கடவுளை புரிந்துக்கொள்ள வள்ளலார், ராமக்கிருஷ்ணர்  மற்றும் விவேகானந்தர் போன்ற ஆன்மீக ஹீரோக்களால் மட்டும்தான் முடியும்.. அப்படி புரிந்துக் கொண்ட விஷயங்கள் நான்குபுறமும் கூர்மையான கட்டாரி போன்ற ஆயுதமாகும். ஆகவே, அதை கையாள்பவருக்கு அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற அறிவு இருக்கவேண்டும்.  தகுதியானவர்களுக்கும்,  மனப்பக்குவம் உள்ளவர்களுக்கும் சென்றடைய வேண்டி எல்லாமே மறைப்பொருளாக வைத்தனர். அப்படிப்பட்ட சிலவிஷயங்களை நம்முடைய அறிவுக்கு எட்டியவரை முயற்சித்து பார்க்கலாம்..... 
அய்யப்பனை பல்வேறு வடிவங்களில், பல்வேறு நிலைகளில் பாலகனாக, வாலிபனாக  தரிசிக்கின்றோம்.  குளத்துப்புழா, அச்சன்கோவில், ஆரியங்காவு, எரிமேலி மற்றும் சபரிமலையில் உறைவது ஒரே இறைவன். வடிவங்கள்தான் வெவ்வேறு. ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உண்டு. ஆரியங்காவு, அச்சன்கோவிலை பார்த்து வந்திருக்கோம். அந்த வரிசையில் குளத்துப்புழா அய்யப்பனை பற்றி பார்க்கலாம் .

குளத்துப்புழா  ஐயப்பன் கோவிலில்  ஐயப்பன்  பாலகன் வடிவில் அருள்பாலிக்கிறார். அதனால், இந்த திருத்தலம் பாலா சாஸ்தா திருஸ்தலம் என சொல்லப்படுது. அதனால்தானோ என்னமோ இக்கோயிலின் வாசல், சிறு குழந்தைகள் நுழையும் அளவிலே இருக்கு!!   குளத்துப்புழா என்னும் கிராமம், தமிழ்நாடு -கேரளா எல்லைப்பகுதியில் இருக்கும் கொல்லம் மாவட்டத்தில் தேன்மலா மலைப்பிரதேசத்திற்கு அருகில் இருக்கு இந்த கிராமம்.  திருவனந்தபுரத்திலிருந்து 62 கி.மீ தூரத்திலும், கொல்லத்திலிருந்து 64 கி.மீ தூரத்திலும் உள்ளது.. செங்கோட்டையிலிருந்து சுமார் 40-50 கிமீ தொலைவிலிருக்கு. மதுரை - கொல்லம்  வழியாகவும் இக்கோவிலுக்கு போகலாம். இத்திருக்கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. மரத்தாலான கோவில். நடுவில் கருவறையும் சுற்றி மரத்தாலான கூரையுடன் கூடிய சதுர வடிவப் பிரகாரம்மும்,  கருவறையில்  ஐயப்பன் பாலகனாகக்  காட்சி தருகிறார். 

பிரகாரத்தின் வலப்புறத்தில் யட்சியம்மன் சன்னிதி இருக்கு. குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனுக்குத் தொட்டில் கட்டி வேண்டிக்கிட்டா குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தை வலம் வரும்போது தனியே பிரிந்து செல்லும் பாதை, திறந்தவெளிக் கோவிலாக அமைந்துள்ள நாகராஜர் கோவிலுக்கு இட்டுச் செல்லுகிறது. இவ்விரண்டு சன்னிதிகள் தவிர கோவிலைச் சுற்றி, விநாயகர், மாம்பழத்துறையம்மன், பூதத்தார் சன்னிதிகளும் அமைந்துள்ளன.

கொட்டாரக்கரை பகுதியை ஆண்ட ஒரு அரசரும், அவருடைய ஆட்களும் காட்டில் கல்லடையாற்றின் கரையில் ஒருமுறை தங்க நேர்ந்தது. அப்போது உணவு சமைப்பதற்காக அடுப்பு மூட்டக் கல் தேடினர். மூன்று கற்களும் ஒரே அளவில் கிடைக்கவில்லை. ஒரு கல் மட்டும் சற்றுப் பெரிதாக இருந்தது. அளவில் பெரிதாக இருந்த கல்லை அதைவிட பெரிதான ஒரு கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்தனர். உடைக்க நினைத்த கல் உடையாமல் ,உடைக்கப் பயன்படுத்திய கல் எட்டு துண்டுகளாக உடைந்தது. உடைந்த பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது. அரசரிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், சிதறிய கல் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் உருவமென தெரிய வந்தது. பரிகாரமாக அவ்விடத்தில் குழந்தை வடிவான ஐயப்பனுக்குக் கோவில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது என்பது மரபுவழிச் செய்தி. சிதறிய எட்டுத் துண்டுகளும் கருவறையுள் உள்ளன. பூசை சமயத்தில் இவை ஒன்றாக வைக்கப்பட்டு வழிபட்டபின் வழக்கமான நிலையில் இன்றும் வைக்கப்படுகின்றன.

கோவிலை ஒட்டி கல்லடையாறு ஓடுகிறது. குளத்துப்புழை ஐயப்பனின் அழகில் மயங்கிய மச்சக்கன்னி ஒருத்தி, அவரைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டு கேட்க, ஐயப்பன் மறுத்து விட்டார். அதனால் அவள் அவரைப் பார்த்துக்கொண்டே அப்பகுதியில் வாழும் வரத்தையாவது தனக்குத் தர வேண்டுமென ஐயப்பனிடம் வேண்ட அவரும் தனது தலத்தில் ஓடும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருளினாராம். மச்சக்கன்னியும் அவள் தோழியரும் கல்லடையாற்றின் இப்பகுதியில் மீன்களாக வாழ்வதாக நம்பிக்கை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலுக்காக இங்குள்ள மீன்களுக்குப் பொரி போடுகின்றனர். ஆற்றின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவில் இங்கு மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இக்கோவிலில் ஐயப்பன் பாலகனாக அமைந்துள்ளதால், சிறுவர்களின் கல்விக்கு உகந்த இடமான இங்கு விஜய தசமி மற்றும் சில குறிப்பிட்ட நாட்களில் இங்கு நடைபெறும் வித்யாரம்பம் சிறப்பானது. ஏப்ரல்/மே மாதத்தில் நடைபெறும் விஷு மகோத்சவம் இங்கு நடைபெறும் முக்கியமான திருவிழா.  பரவலாக அறியப்பட்ட ஐயப்பனின் கோவில்களில் குளத்துப்புழா ஐயப்பன் கோவிலும் ஒன்று.  ஆரியங்காவு, அச்சன்கோவில், எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகியவை ஐயப்பனின் பிற முக்கியமான கோவில்கள். [சபரிமலை]க்குச் செல்லும் பக்தர்கள் செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவு, குளத்துப்புழா சென்று ஐயப்பனை வழிபட்டபின் பந்தளம் சென்று பின் அங்கிருந்து சபரிமலைக்குச் செல்வது வழக்கம். திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள குளத்தூர் ஐயன் கோவில் இந்தக் கோவிலில் இருந்து பிடிமண் மற்றும் நீர் எடுத்துவந்து கட்டப்பட்டது. இன்றைக்கும் இந்தக் கோவில் திருவிழாவின் போது குளத்துபுழா சென்று நீர் எடுத்து திரும்புவது வழக்கத்தில் உள்ளது. 

அடுத்தவாரம் எரிமேலியிலிருந்து சந்திக்கலாம்..

நன்றியுடன்
ராஜி

10 comments:

 1. தரிசனத்துக்கு நன்றி. பாலசாஸ்தா திருத்தலம் ஏதோ பழசாகி இடிந்து விழுவது போல இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. படத்தினை பார்த்தா அப்பிடித்தான் போல!!

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 2. ஸ்வாமியே ஸரணம் ஐயப்பா.

  சிறப்பான தரிசனம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 3. சபரிமலை பயணத்தின்போத குளத்துப்புழா சென்றுள்ளேன். இன்று இப்பதிவு மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நான் எப்பவோ சின்ன வயசில் போனதுப்பா.. ஆனா, இந்த ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் போகலாம்.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 4. விளக்கம் இன்னமும் இருக்கிறது... ஏன் சுருக்கமாக...? இருந்தாலும் அருமை சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் பிசிண்ணே. அதான்.

   Delete