Monday, April 15, 2019

உடல் தானத்தில் இத்தனை விசயமிருக்கா?! - ஐஞ்சுவை அவியல்

மாமா! என் அம்மா உடல் தானம் செய்யனும், அதுக்கு என்ன வழிமுறைன்னு கேட்டுக்கிட்டு இருக்கு?! உடல்தானம்ன்னா என்ன மாமா?! செத்த உடம்பை வச்சுக்கிட்டு என்ன செய்வாங்க?!


நம்ம உயிர் போனப்பின் நம்மோட உடல் பாகங்கள் மண்ணோடு மண்ணாய் எந்த பிரயோசனமும் இல்லாம போறதைவிட, டாக்டருக்கு படிக்குறவங்களுக்கு பயன்படட்டுமேன்னு, தான் இறந்தபின் தன்னோட உடல் அரசாங்கத்துக்கு சேரனும்ன்னு முன்கூட்டியே பதிவு பண்ணி வைக்கனும். இதுக்குன்னு தனியா விண்ணப்பம்லாம் எல்லா அரசு மருத்துவக் கல்லூரியிலும் கிடைக்குது. அரசு மருத்துவக்கல்லூரி டீனையோ அல்லது உடற்கூறியல் துறைத் தலைவரையோ (Anatomy HOD) அணுகினால் நம்ம சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லி  பதிவும் செஞ்சுப்பாங்க.


நாம உடல்தானம் செய்ய விருப்பம்ன்னு அட்ரஸ், போன் நம்பரோடு எழுதி, அதுக்கு சாட்சியா நெருங்கிய உறவினர்களான கணவன்/மனைவி/மகன்/மகள்/அம்மா/அப்பா நண்பர்கள்ன்னு கையெழுத்து போட்டு தரனும். அப்படி பதிஞ்சதுக்கு சாட்சியா அவங்க ஒரு ரசீது தருவாங்க.  அதை பத்திரமா வச்சுக்கனும்.உடல் தானம் செய்த நபர் இயற்கையா மரணமடைந்தால் மட்டுமே நம்ம உடம்பை வாங்கிப்பாங்க.  அதனால, தானம் செய்தவர் இயற்கையாக மரணம் அடைந்தார்ன்னு சர்ட்டிஃபிகேட் வாங்கி வச்சிருக்கனும் இல்லன்னா, அருகிலிருக்கும் மெடிக்கல் காலேஜுக்கு சொல்லிட்டா அவங்களே வந்து பரிசோதிச்சு  உடலை எடுத்துட்டு போவாங்க. வேலை நாட்களில் மெடிக்கல் காலேஜ்லயும், லீவ் நாள்ல பக்கத்திலிருக்கும் ஹாஸ்பிட்டலுக்கும் தகவல் சொல்லலாம்.

பதிவு பண்ணலைன்னா உடலை கொடுக்க முடியாதா மாமா?!

கொடுக்கலாம். ஒருத்தர் இறந்துட்டார், அவருடைய உடம்பை தானம் செய்யனும்ன்னா, இயற்கை மரணம்ன்னு சர்டிபிகேட் வாங்கி அல்லது  மெடிக்கல் காலேஜ்ல சொல்லிட்டா அவங்களே வந்து டெஸ்ட் பண்ணி உடலை எடுத்துட்டு போய்டுவாங்க. அப்படி தானம் செய்யும்முன் நம் மத சடங்குலாம் செய்துக்கலாம். அதுக்கு அனுமதி உண்டு

அப்படி எடுத்துட்டு போன உடலை என்ன பண்ணுவாங்க மாமா?!

தொடையில் துளை போட்டு உடலிலிருக்கும் ரத்தம்லாம் வெளிய எடுத்து, சில திரவத்தை உடலுக்குள் செலுத்தி உடலை பதப்படுத்துவாங்க. அதுக்கு எம்பார்மிங்க்ன்னு பேரு. இப்படி செஞ்சுட்டா எத்தனை நாள் ஆனாலும் உடல் கெடாது.  உடல்தானத்துக்குன்னு உடலை  கொடுத்தபின் எதாவது ஒரு சூழலில் திரும்ப வாங்கிக்கனும்ன்னு நினைச்சா எம்பார்மிங் பண்ணுறதுக்குள் திரும்ப வாங்கிடலாம். எம்பார்மிங் பண்ணிட்டா உடலை திரும்ப வாங்கவே முடியாது.  

என் அம்மா உடல்தானம் செய்ய ஆசைப்படுது மாமா. யார் யார்லாம் உடல்தானம் செய்யலாம்?! அம்மாக்கு வயசாகிட்டுதே! அது எப்படி உடல்தானம் செய்ய முடியும்?!

இதுக்கு வயது வரம்புலாம் கிடையாது.  ஆனா, சில கண்டிஷன்லாம் இருக்கு. எயிட்ஸ்னால செத்தவங்க உடம்பை வாங்க மாட்டாங்க. அதேமாதிரி,  மஞ்சக்காமாலை கேன்சர், டி.பி வந்து இறந்தவங்க உடலும் வாங்க மாட்டாங்க. தொழுநோய் பாதிச்சவங்க உடம்பை வாங்கிப்பாங்க. ஆனா, உறுப்புகள் சேதமில்லாம இருக்கனும். போதப்பாழக்கத்துக்கு அடிமையாகி உடல் உறுப்புகள் சேதமடைஞ்சிருந்தாலும் வாங்க மாட்டாங்க. ஏற்கனவே போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட உடலையும் வாங்க மாட்டாங்க.

சரி, இந்த உடல்களையெல்லாம் என்ன செய்வாங்க?!

நம்மக்கிட்ட வாங்கின உடலை எம்பார்மிங் செய்து மெடிக்கல் காலேஜுக்கு அனுப்பிடுவாங்க. அந்த உடல் பெறப்பட்ட உடல்களை மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து பிரித்து கொடுப்பாங்க.  ஒரு வகுப்புல 100 பிள்ளைங்க படிக்குறாங்கன்னு வச்சுக்க.  5 உடல்தான் அந்த காலேஜ்ல இருந்தா, ஒரு உடம்புக்கு 20 பிள்ளைகள்ன்னு பிரிச்சு விட்டுடுவாங்க.  நம்ம உடலுக்குள் இருக்கும் பாகங்கள், அதுல நோய் தாக்கினா எப்படி மாறும்ன்னுலாம் நம்ம உடலை வச்சு  பிள்ளைக படிப்பாங்க. இப்ப உடல்தானத்தை பத்தி சரியான விழிப்புணர்வு இல்லாததால் உடல்களை கொடுப்பதில்லை. அதனால் ஒரு உடலை 10க்கும் மேற்பட்ட பிள்ளைகள் சூழ்ந்து நின்று படிக்கும் சூழல் இருக்கு. சில நேரத்தில் உடல் கிடைக்காம பிளாஸ்டிக்னால செய்த செயற்கையான உடலினை வைத்து பிள்ளைக பாடம் படிக்கும் சூழலும் உண்டு.  இந்த நிலை மாறனும். 

சரி, அப்படி படிச்சபின் அந்த உடல் என்ன பண்ணுவாங்க மாமா?!

குறிப்பிட்ட காலம் வரை ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்ட உடல், பின்னர், அரசு மின்சார தகன மையத்தில் வச்சு எரிச்சுடுவாங்க. அந்த வசதி இல்லைன்னா இடுகாட்டில் புதைச்சுடுவாங்க. 

ஓ! இம்புட்டு விசயம் இருக்கா?! இதுலாம் விட அம்மாவுக்கு ஒரே ஒரு கவலைதான். துணியெல்லாம் எடுத்துடுவாங்களேன்னுதான் உடல்தானம் செய்ய அம்மா யோசிக்குது.

ம்ம்ம் அவங்கவங்க கவலை அவங்களுக்கு.. நீயா இருந்தால்  இப்படிதான் கவலைப்படுவே! அங்க போயும் போஸ்ட் போடனும், பேஸ்புக் பார்க்கனும்ன்னு... 

மண்ணோடு மண்ணாய் மக்கி போற உடம்பு, மொபைல் நோண்டிக்கிட்டு சந்தோசமா இருந்தால்தான் என்ன?!
Image may contain: text
உடம்பு மட்டுமில்ல எல்லாமே மக்கி மண்ணோட மண்ணாய்தான் போகும். ஆனா, அதுக்கான கால அளவு மாறுபடும்.  என்னென்ன பொருள் எந்தெந்த காலத்துக்குள் மக்கிப்போகும்ன்னு இந்த அட்டவணையில் இருக்கு பாரு..
தமிழ் புத்தாண்டு என்னிக்குன்னு நாம அடிச்சிக்கிட்டிருக்கும் அதேவேளையில் கிரிக்கெட் பிளேயர்ஸ்லாம் அழகா தமிழை எழுதி வாழ்த்தும் சொல்றாங்க. அவங்க சொல்லும் அழகுக்காகவே என்னிக்கு புத்தாண்டாய் இருந்தால் என்ன??!! கொஞ்சு தமிழில் வாழ்த்து கேட்பதே ஒரு சுகம்.

நன்றியுடன்,
ராஜி


11 comments:

  1. தகவல்கள் சிறப்பு...

    காணொளி அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. உடல் உறுப்பு தானம்/உடல் தானம் இன்னும் அத்தனை பரவலாக மக்களுக்குத் தெரியவில்லை. சமீப வருடங்களில் இதற்கான முயற்சிகள் கொஞ்சம் அதிகம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் பரவலாக வேண்டும். மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    காணொளி பார்த்தேன் - ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரத்த தானம், கண் தானம் அளவுக்கு உறுப்பு தான, உடல் தானத்தை பற்றிய விழிப்புணர்வு ஏதுமில்லை. அரசாங்கமும் முன் எடுத்த மாதிரி தெரில

      Delete
  3. உடல் தானம் பற்றிய அறியாச் செய்திகளை அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. அம்மாவூஇன் ஆசைக்காக தேடினேன். அது பதிவாகிட்டுதுண்ணே

      Delete
  4. சுவையான, உபயோகமான தகவல்கள். காணொளியை ரசித்தேன்.

    ReplyDelete
  5. அறியாத் தகவல்கள்...காணொளி பிரமாதம்..

    ReplyDelete
  6. அருமையான தொகுப்பு.
    செத்ததுக்கு பிறகு ..... சூப்பர்

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள தகவல்கள் சகோதரி/ ராஜி.
    உடல் தானம் விழிப்புணர்வு இன்னும் பரவ வேண்டும்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  8. உடல்தானம் பற்றிய பயனுள்ள தகவல்கள். உடலைத் தானம் தர முன்வரும் பலருக்கும் ஏற்படும் நியாயமான சந்தேகங்களை தெளிவாக தீர்த்துவைக்கும் பதிவு. பாராட்டுகள் ராஜி.

    ReplyDelete