பாண்டிச்சேரி சித்தர்கள் பகுதியில் தொள்ளைக்காது சித்தர் பதிவினை பார்த்தோம். அதை தொடர்ந்து நாம இன்னிக்கு பார்க்கப்போறது சமீபத்தில் பிரச்சனையில் சிக்கிய அரவிந்தர் ஆசிரமம். அரவிந்தர் ஆசிரமத்தில் தற்போதைய நிகழ்வுகளை பற்றி பார்த்தால் 2 தலைமுறை சென்ற ஆன்மீகவாதிகளே இங்கு இருக்காங்க. அவர்களின் நிலை என்ன ஆன்மீகத்தில் அவர்களது பங்களிப்பு என்ன என்பது பற்றி பார்த்தால், தமிழ்நாட்டு அரசியல் மாதிரிதான். காமராஜர், கக்கன் மாதிரியான நேர்மையான அரசியல்வாதிகளுக்கும் தற்போது உள்ள ஊழல்வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்தான். அதற்காக நாம் நம் மாநிலத்தையோ இல்ல சட்டமன்றத்தையோ குறை சொல்லமுடியாது. அரசியல்வாதிகளைதான் நொந்துக்கனும். அதேப்போல்தான் அரவிந்தர் ஆசிரமும்... இதை தோற்றுவித்தவர் வாழ்ந்த முறை வேறு. அதனால், உள்குத்து விவகாரங்களை விட்டுட்டு அரவிந்தர் என்னும் மகானையும், ஆசிரமத்தை பத்தி மட்டும் பார்க்கலாம் .
மணக்குள விநாயகர் கோவிலிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் இருக்கிறது இந்த அரவிந்தர் ஆசிரமம். இந்த ஆசிரமத்தினுள் போட்டோ எடுக்க தடைவித்துள்ளனர். ஆசிரமத்தினை மிக தூய்மையாக பராமரிக்கின்றனர். பக்தர்கள் வரிசையாக செல்லும் வழியில் நாங்களும் சென்றுகொண்டிருந்தோம். நம்மூரு ஆட்களைவிட வெளிநாட்டு பக்தர்கள் அதிகமாக காணப்பட்டனர். அவர்களை பின்தொடர்ந்து சென்று ஒரு மண்டபத்தின்கீழ் இருக்கும் ஒரு மேடை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதன்மேல் எல்லோரும் தலைவைத்து பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தனர். அப்பொழுது நமக்கும் அப்படி செய்யவேண்டும்போல இருக்கிறது என தலைவைத்து திரும்பி பார்த்தால் பலர் அந்த மேடையை சுற்றி தியானத்தில் அமர்ந்திருந்தனர். சரி என்ன மேடை இது என்று பக்கத்தில் அமர்த்த பெண்மணியிடம் கேட்க அவர் அப்படி ஒரு பார்வை பார்த்துவிட்டு இதுதான் அரவிந்தர் ஜீவசமாதி என சொல்ல ,அட கடவுளே! இதுக்குதான் சுற்றுலா போகும்போது விவரமான ஆட்களுடன் போகனும், இல்லன்னா, போன இடத்தில் பராக்கு பார்க்காம அறிவிப்பு பலகையை படிக்கனும்ன்னு நினைச்சிக்கிட்டே பயபக்தியுடன் அந்த ஜீவ சமாதியில் ஓரத்தில் அமர்ந்து நாங்களும் தியானம் செய்தோம்.
தியானம்லாம் முடித்து, அங்க உள்ள அறைகளின் அரவிந்தர் மற்றும் அன்னையின் வாழ்க்கை வரலாறும், அவர் சார்ந்த புகைப்படங்களும் காட்சிக்கு வச்சிருக்காங்க. அவர் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா நகரில் ஆகஸ்ட் 15, 1872ம் ஆண்டு கிருஷ்ணதன கோஷுக்கும், ஸ்வர்ணலதாவிற்கும் மூன்றாவது குழந்தையாக பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அரவிந்த் அக்ராய்ட் கோஷ், அரவிந்தர், தன்னுடைய ஆரம்ப கல்வியை டார்ஜிலிங்கிலுள்ள “லோரெட்டோ கான்வென்ட்டில்” தொடர்ந்தார். பிறகு 1879 ஆம் ஆண்டு, சகோதரர்களுடன் இங்கிலாந்து சென்று , லண்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இளங்கலை பட்டம் பெற்றார். படித்துக் கொண்டிருக்கும்பொழுதே, புரட்சிகரமான சிந்தனையாளராக விளங்கிய அரவிந்த் அவர்கள், உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்திலும் தேர்ந்தவராக இருந்தார்.
அரவிந்தோ (அவரது தாய்க்கு அடுத்ததாக நடுவில் அமர்ந்திருப்பவர் ) மற்றும் அவரது குடும்பத்தினர். இங்கிலாந்தில், 1879 .
தன்னுடைய 21 வயது வரை, இங்கிலாந்தில் தங்கி, கல்வி பயின்ற ஸ்ரீ அரவிந்தர், 1893ம் ஆண்டு தாய்நாடு திரும்பினார். இந்தியா திரும்பிய அவர், பரோடா சமஸ்தானத்தில் அரசுப்பணியில் சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் அங்கு பணியாற்றியப்பிறகு, வங்காள தேசிய கல்லூரியில் முதல்வராக பணியைத் தொடர்ந்தார். இந்தியாவில் கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் ஏற்பட்ட வங்கப் பிரிவினையை கண்டு கொதித்துப்போன அரவிந்தர் அவர்கள், விடுதலைப் போராட்டாத்தில் தன்னை ஈடுபத்திக்கொண்டது மட்டுமல்லாமல், கர்சனின் வங்கப் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தார். தேச விடுதலைக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட அவர், “வந்தேமாதரம்” என்ற இதழை ஆரம்பித்தபின், சந்திரபாலுடன் இணைந்து பல்வேறு கூட்டங்களில் கலந்துக்கொண்டு, ஆங்கில அரசுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதனால், அரவிந்த் அவர்கள் ஆங்கில அரசால் 1907லும், 1908லும் இருமுறை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், “கர்மயோகி” என்ற ஆங்கிலப்பத்திரிக்கை மூலமும் “தர்மா” என்ற வங்காள மொழி பத்திரிக்கை மூலமும் மக்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டும் கட்டுரைகளை எழுதி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
செப்டம்பர் 1907-ல் வெளிவந்த பாண்டே மாதரத்தின் நகல்.
சிறையில் இருந்த நேரங்களில் அவர் கீதை, வேதங்கள் என ஆன்மீக நூல்களைப் படித்த அவருக்கு, யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது. 1904 இலேயே பிரணாயாமம் பயிலத் தொடங்கியபோதும் சிறை வாழ்க்கை, யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ளவைத்தது. ஸ்வராஜ் (விடுதலை) என்பதை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் பொருள் கொண்டார். பரமனின் ஆட்சியைப் பூமியில் நிலை நாட்டுவதற்கு விடுதலை முதற்படி என்று கருதினார்.
1909 சிறையிலிருந்து விடுதலைப்பெற்ற அரவிந்தர், தன்னுடைய முழு கவனத்தையும் யோக நெறியில் ஈடுபடுத்திக்கொண்டார். 1910ம் ஆண்டு, ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர்மேல் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், அங்கிருந்து தப்பித்து சந்திர நாகூருக்கு சென்று, அங்கிருந்து ஏப்ரலில் மாறுவேடத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்கு வந்தார். அவரை மகாகவி பாரதியார் தலைமையிலான தமிழர்கள் வரவேற்று, ஒரு செல்வந்தர் வீட்டில் தங்கவைத்தனர். இதையடுத்து, தனது அரசியல் நடவடிக்கைகளை முழுவதுமாகக் கைவிட்டு முழு ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பிறகு, அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும், யோகத்திலும் ஈடுபட்டார். அதுமட்டுமல்லால், தனது யோகத்தின் நோக்கத்தை விளக்கிடும் “சாவித்திரி” என்னும் மகா காவியத்தையும் ஸ்ரீஅரவிந்தர் படைத்தார்.
‘உலகத்தைத் துறந்து, இறைவனை அடையவேண்டும். யோகத்தினால் கிடைக்கும் வலிமையைக்கொண்டு நாட்டு மக்களை விடுவிக்க வேண்டுமென்பதோடு’ மட்டுமல்லாமல், தன் வளர்ச்சியின் பரிணாமப்படிகள் மனிதனின் பூவுலக வாழ்வினைத் தெய்வவடிவில் அமைக்கும் என்று நம்பினார். தன்னுடைய ஆன்மீக சிந்தனைகளை “ஆர்யா” என்ற ஆன்மீக இதழில், 1914 முதல் 1921 வரை எழுதினார். அவருடைய தத்துவங்கள், உண்மைகளை அடிப்படையாக கொண்டவையாக அமைந்தது.உயர்நிலை மனத்தை உருவாக்கும்போது மனித வாழ்வின் இயல்பே மாறிவிடும் என்றும் தெய்வீக நிலை தோன்றும் என்றும் வற்புறுத்தினார்.
அரவிந்தர் சனாதன தர்மத்தினை ஆழமாக நோக்கியவர். வேதம், உபநிடதம், கீதை பற்றியும் இந்தியப் பண்பாடு பற்றியும் தமது கருத்துக்களை தெளிவாக விளக்கினார். அரவிந்தர் தனது பெரும்பாலான நேரங்களை எழுத்து மற்றும் தியானத்தில் கழித்தார். 1910ம் ஆண்டில் பாண்டிச்சேரிக்கு வந்திருந்த மூன்று அல்லது நான்கு இளைஞர்கள் அவருடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து அவர்கள் சுதந்திரமாக இருந்தனர். அன்னை மற்றும் பிரஞ்சு எழுத்தாளர் பால் ரிச்சர்ட் 1914ம் ஆண்டில் ஸ்ரீஅரவிந்தரைச் சந்தித்து ஒரு மாதாந்திர ஆய்வுகளை வெளியிட்டனர். ஆனால், முதல் உலகப்போர் வெடித்த பிறகு, அவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதிலிருந்து ஸ்ரீஅரவிந்தரே தன் ஆய்வு முழுவதிலும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது. அவருடன் வசிக்கும் இளைஞர்களிடமிருந்து சிறிது உதவியைப் பெற்றார். ஏப்ரல் 1920ல், அன்னை பாண்டிச்சேரிக்குத் திரும்பினார்.1926 ஆம் ஆண்டு நவம்பர் 24, அன்று, ஸ்ரீ அரவிந்தர் ஒரு பெரிய ஆன்மீக உணர்தலுக்குப் பின்னர், ஆன்மீக வேலைகளில் ஈடுபட்டார். இந்த நேரத்தில் அவர் தனது ஆன்மீக ஒத்துழைப்பாளரான "அன்னை"க்கு ஆசிரம நிர்வாகத்திற்கான முழுப்பொறுப்புகளையும் வழங்கினார். அவர் முன்பு மிரா அல்ஃபாஸா என அழைக்கப்பட்டார்.
1927ம் ஆண்டின் தொடக்கத்தில் 24 ஆகவும் 1934 இல் 150க்கும் அதிகரித்தது. 1934ம் ஆண்டுகளில் தேவையான வசதிகள் இன்றியே ஆசிரமம் இருந்தது. இந்த ஆண்டுகளில் அன்னைக்கு ஒரு வழக்கமான பழக்கம் இருந்தது. அவர் தினமும் காலை 6 மணியளவில், பலகணியில் நின்று தனது ஆசீர்வாதத்தை பக்தர்களுக்கு வழங்கி தனது நாளை தினமும் துவங்கினார். ஆசிரமத்திலுள்ள பக்தர்கள் காலை அன்னையின் ஆசி பெற்று, பின் தியானம் உட்பட பல யோகாசனங்களைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஸ்ரீ அரவிந்தரின் பக்தர்கள் கீதையைப்போல சாவித்ரி காவியத்தைப் படித்தார்கள். 'இது கர்மவினை- அனுபவிக்க வேண்டும்', என்று சொல்லிய வினைகளைக்கூட, நம்பிக்கை வைத்து தியானித்து பிரார்த்தனை செய்யும்போது அவ்வினைகள் தீரும் அதிசயத்தைக் காண்பதாகவும் அவர்களது பார்வை பட்டாலே நெஞ்சும், ஆன்மாவும் நிறைவதை உணரலாம் என்று பக்தர்கள் உணர்ச்சிப்பெருக்கோடு கூறி, அலைப்பாயும் மனதை அடக்கி ஆளும் புகலிடமாக அரவிந்தர் ஆசிரமம் விளங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகிப்போனது.
அரவிந்தர் பக்தர்களுடன் தியானம் செய்யும்போதெல்லாம் அவரைச் சுற்றி ஒளிவெள்ளத்தைக் கண்டு உடலில் மின்சாரம் பாய்வதைப் போன்று உணர்ந்திருந்தார்கள். அரவிந்தர் தனது இறுதிக்காலத்தில் தனிமையை நாடியதால், தனது கடைசி 24 ஆண்டுகள் தனிமையும், மௌனமும் பூண்டிருந்தார். அதிமன சக்தியை உலகுக்கு கொண்டு வரும் முயற்சியில் தேவைப்பட்டால் நான் என் உடலை விட்டு நுண்ணுடலில் சென்று போராடுவேன் என்றார். 1950ம் வருடம் டிசம்பர் மாதம் 5ம் தேதி அன்று இறையாற்றலைப் புவிமீது இயக்கி மகாயோகி அரவிந்தர் மகாசமாதி ஆனார். அவர் மறைந்தும் அவரது உடலில் ஒளிவீசியது. அவர் சமாதியான 5 நாட்களுக்குப்பிறகே ஆசிரமத்தில் சர்வீஸ் மரத்தடியில் பக்தர்களின் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அதுவரை அவரது முகப்பொலிவும் குறையவில்லை. உடலும் வாடவில்லை.
அதன்பிறகு அன்னை ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு பரிபூரண அருளையும் நிம்மதியும் தரும் தாயாக மாறினார். இவர் வேறு உலகங்கட்குச் செல்வார். சூட்சும லோகத்தில் போய், பகவானை சந்திப்பார். அன்னை வலியுறுத்திய, விழுவதற்கு முன் என்னைக் கூப்பிட்டால் ஓடி வந்து காப்பாற்றுவேன் என்ற அன்னை சொல்லை பக்தர்கள் நடைமுறையில் உணர்ந்திருக்கிறார்கள். 1973ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அன்னை உயிர் துறந்தார். மலருக்கும் ஆற்றல் உண்டு என்று கூறிய அன்னையின் சமாதி இயற்கை சூழலில் நறுமணமிக்க மலர்கள் பூத்துக்குலுங்கும் செடிகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. ஸ்ரீஅரவிந்தரின் மகிமையை பத்தி நிறைய அற்புதங்கள் பல்வேறு பக்தர்களின் வாழ்வில் அனுதினமும் நடந்துவந்துள்ளன. நாங்களும் அன்னையையும் ஸ்ரீஅரவிந்தரின் ஜீவ சமாதியையும் தரிசித்தோம். இனி அடுத்தவாரம் மீண்டும் வேறு ஒரு சித்தரின் ஜீவ சமாதியில் இருந்து உங்களை தரிசிக்கிறேன்.
நன்றியுடன்ராஜி
//செப்டம்பர் 1907-ல் வெளிவந்த பாண்டே மாதரத்தின் நகல். //
ReplyDeleteஅடடா... அது பாண்டே இல்லைம்மா.... வந்தே என்பதை பெங்காலியில் Bபந்தே என்று தான் சொல்வார்கள். அதை அப்படியே ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறது! ”பாண்டே மாதரம்” அல்ல ”Bபந்தே மாதரம்” - தமிழில் சொன்னால் வந்தே மாதரம்!
நானும் இந்த இடத்திற்குச் சென்றதுண்டு.
//தேச விடுதலைக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட அவர், “வந்தேமாதரம்” என்ற இதழை ஆரம்பித்தபின்,// இந்த இடத்தில சரியாக குறிப்பிட்டு இருந்தேன்.ஆனா அது ஆங்கிலத்தில் இருந்ததுனால பாண்டேவாக இருக்குமான்னு நினைச்சேன் .தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிண்ணே ...ஹிந்தி படிக்கவே போராட்டம் பண்ணுறாங்க,இனி பதிவு எழுதணும்ன்னா பெங்காலி வேறே படிக்கணும் போல...இருங்க நானும் 30 நாட்களில் பெங்காலி படிப்பதெப்படி,இதோ புக் வாங்கிட்டேன்....
Deleteதகவல்கள் தொகுப்பு அருமை சகோதரி...
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிண்ணே ...
Deleteமுக்கியமான பிழை ஒன்று உண்டு. அரவிந்த ஆசிரமம், மணக்குள விநாயகர் ஆலயத்தில் இருந்து மூன்றே நிமிட தூரத்தில் தான் உள்ளது. தாங்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் என்று எழுதியிருக்கிறீர்கள். திருத்தி விடுங்கள். நன்றி.
ReplyDeleteஉண்மையாகவா,எங்களை கூட்டி சென்ற ஆட்டோகாரர் அப்படி சொல்லித்தான் சுத்தி கொண்டு போய்விட்டார்.இதுதெரியாம போச்சே,அடுத்த முறை மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து நடந்தே சென்று பார்க்கிறேன்.மணக்குள விநாயகர்ல இருந்து அரவிந்தர் ஆஸ்ரமம் ஒரு நடைபயணம்,அப்டின்னு ஒரு பதிவு எழுதி தெளிவாக சொல்லிடுகிறேனுங்கப்பா...
Delete//1927ம் ஆண்டின் தொடக்கத்தில் 24 ஆகவும் 1934 இல் 150க்கும் அதிகரித்தது.//
ReplyDeleteஎது?
அன்னை என்னை ஒருமுக்கிய தருணத்தில் காத்தருளினார். சட்டைப்பையில் அவர் படம் எப்போதும் உண்டு.
24-லில் இருந்த அவரது முக்கியமான சீடர்களின் எண்ணிக்கை,என்பதை தெளிவாக எழுத மறந்துவிட்டேன்.ஆனால் கிளைகளின் எண்ணிக்கை என்று பார்த்தால், டெல்லியில் ஒரு கிளை இருக்கிறது என்று சொன்னாலும்,உண்மையில் அந்த ஆஸ்ரமம் ,தனித்தே இயங்குகிறது.அந்த டெல்லி ஆஸ்ரமத்திற்கும்,பாண்டிச்சேரிக்கு ம் ,எந்த தொடர்பும் இல்லை என்றே சொல்லப்படுகிறது.அதை தெளிவாக எழுத மறந்துவிட்டேன்.தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.அன்னையின் அருளை பற்றியும் அவரது அற்புதங்களையும் பற்றியும்,நாம் எழுத ஆரம்பித்தால்,நிறைய எழுதவேண்டியது வரும்.அவ்வுளவு அற்புதங்கள் இருக்கின்றன.பலரது வாழ்வில் கண்கூடாக நடந்த விஷயங்கள்,உங்களுக்கும் அன்னையின் கிடைத்து இருக்கிறது என்பது மிகவும் சந்தோஷமுங்கண்ணே...
Deleteமுக்கியமாக டில்லி, கல்கத்தா, பெங்களூர் நகரங்களில் அரவிந்தர் சொசைட்டி இயங்கிவருகிறது.இவற்றை சாதாரண மக்கள், ஆசிரமத்தின் கிளை கள் என்று கருதுவது. அப்படியில்லை.
Deleteநீங்கள் சொல்வது போல் நாட்டில் பல இடங்களில் அரவிந்த ஆஸ்ரமம் உள்ளனப்பா ,ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை போலும் ,ஒரு அரவிந்தர் ஆசிரமம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், வடோதரா நகரத்தில் உள்ள தாண்டியா பசாரில் இருக்கிறது. இதுவே தெற்குப் பகுதியில் பிரபலமாக இருந்த முதலாவது ஆசிரமம்ன்னு சொல்லுறாங்க ,இங்கே
Deleteஅரவிந்தரின் நினைவுச் சின்னம் இருக்கு ,அனைவரும் தியானம் செய்வதற்காக இவ்வாசிரமம் திறந்தே இருக்கும். அங்கே நூலகம்,படிப்பு அறை மற்றும் விற்பனை சென்டர் இருக்கு ,இங்கே அரவிந்தரும் அன்னையும் எழுதிய நூல்கள் அனைத்தும் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும் ,1894-1906 காலத்தில் அரவிந்தர் பரோடாவில் தங்கியிருந்த சமயத்தில் இப்பங்களாவில் குடியிருந்தார். அப்போது பரோடாவின் மகாராஜா மூன்றாம் எச்.எச். சாயாசி இராவ் கெயிக்வாட்டின் தனிச் செயலராக அரவிந்தர் இருந்தார். பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், சகோதரி நிவேதிதை, சகாரம் கணேஸ் தியுவேசுகர் மற்றும் சில மராத்தி யோகிகள் முதலியவர்கள் இப்பங்களாவுக்கு வருகை புரிந்திருக்கின்றனர்.அரவிந்தரின் மனைவி மிர்ணாளி தேவி, சகோதரி சரோஜினி தேவி மற்றும் இளைய சகோதரரும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரருமான பாரிந்தர் குமார் கோஸ் முதலியவர்கள் அடிக்கடி இங்கு வந்து செல்வார்கள். இப்பங்களாவில் 23 பெரிய மற்றும் சிறிய அறைகளும், 55000 சதுர அடிகளில் திறந்தவெளியும் இருக்கு .அந்த ஆஸ்ரமம் கூட தனித்தே இயங்குகிறது.
அருமையான பதிவு
ReplyDeleteநான் ஜீவசமாதியில் கைவைத்து பிரார்த்தனை செய்திருக்கிறேன்.
அதிர்வை உணர்ந்திருக்கிறேன்.
நானும் உணர்ந்தேன் சகோ,அரவிந்தருக்கு விவேகானந்தர் அரூபமாக சிறையில் உபதேசம் செய்ததை ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்,உண்மையில் அரவிந்தரின் சக்தி அளப்பறியதுதான்....நன்றி சகோ
Delete