Showing posts with label சுதந்திரம். Show all posts
Showing posts with label சுதந்திரம். Show all posts

Thursday, August 15, 2013

ராஜியின் சுதந்திர தின கொண்டாட்டங்கள்!!




எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை சொல்லிக்குறேன் சகோ’ஸ்,

பத்து வயதுல:
ஒரு வாரத்துக்கு முன்னயே ஸ்கூல் களை கட்ட ஆரம்பிசாலும், சுதந்திர தினத்தன்னிக்கு முதல் நாள் தான் கிளாஸ் ரூம்லாம் ஒட்டடை அடிச்சு பெருக்கி, கழுவி, பிளாக் போர்டுக்கு கோவை இலையும் கரியும்  சேர்த்து இடிச்சு பிழிஞ்ச சாறை தேய்ச்சு பளபளப்பாக்கி...,  சிவப்பு, வெள்ளை, பச்சை கலர் பேப்பர்களை சணல் கயிறில் பசை தடவி ஒட்டி காய வச்சு தோரணம் கட்டி முதல் நாள் வீட்டுக்கு போக மணி எட்டாகும். 

அப்படி போகும்போது..., 

ஏய் பிள்ளைகளா! நாளைக்கு வரும்போது துவைச்சு, நீட்டா இருக்குற யூனிஃபார்ம்லதான் வரனும். கொடி ஏத்த எல்லோரும் கண்டிப்பா வரனும். இல்லாட்டி 5ரூபா ஃபைன் கட்டனும் கூடவே ஒரு நாள் முழுக்க முட்டி போடனும்ன்னு சொல்லுவார்.

ஆனா, அவர் அப்படி செய்ய மாட்டார்ன்னு தெரிஞ்சும் கூட எல்லோரும் போவோம். அந்த ஊருல இருக்குற பெரிய ஆளுங்க யாரையாவது கூட்டி வந்து கொடியேத்த சொல்லுவாங்க. அவர் சுதந்திர போராட்ட தியாகின்னு நாங்கலாம் நினைச்சுக்கிட்டு இருப்போம். வளர்ந்தப்புறம்தான் தெரிஞ்சது அவர் ஹெட் மாஸ்டருக்கு கடன் கொடுக்குற பணக்காரர்ன்னு!!

பெட்டிக்குள்ள, காலன்டர்ல இருக்குற, காந்தி, நேரு, வ.ஊ.சி, பாரதியார் படத்தையெல்லாம் தேடி பிடிச்சு அழகா கட் பண்ணி ஸ்கூல்ல அங்கங்க ஒட்டுவோம். காலையிலேயே சீக்கிரம் வந்த டீச்சருங்களும் அக்காக்களும் கொடி பறக்குற கோலம் போட்டு பார்டர் கட்டுவாங்க. பிடி சார், கொடி கம்பத்துக்கு பக்கத்துல ஒரு மேஜை போட்டு வெள்ளை துணி விரிச்சு அதன் மேல  ஒரு தட்டுல ஆரஞ்ச் மிட்டாய், சந்தனம், பூ”லாம் போட்டு மேஜை மேல வைப்பார்.

நாங்கலாம் சார் சொல்லி தந்த எக்சசைஸ்லாம் செய்ய கைல, கலர் பேப்பர் ஒட்டுன எதாவது ஒண்ணை வெச்சுக்கிட்டு ரொம்ப டீப்பா டிஸ்கஸ் பண்ணிட்டு இருப்போம்!!  கலை நிகழ்ச்சி நடக்க காந்தி, நேரு, பாரத மாதான்னு கலர் பேப்பர், ஜிகினா உபயத்துல பசங்க ஜொலிப்பாங்க!!


அப்புறம் எல்லாரும் வருவாங்க. கொடி கம்பத்துக்கு பக்கத்துல அந்த பெரிய மனுசருக்கு பக்கத்துல ஹெட்மாஸ்டரும், பிடி சாரும் நிப்பாங்க.  மறுபக்கம் ஒரு ஸ்டூடண்ட் நிப்பார். அவர் அழகா லெஃப்ட், ரைட் போட்டுக்கிட்டு போய் அந்த பெரிய மனிதரை கூடி வந்து கொடி கட்டி இருக்கும் கயிறை பிடிச்சு கொடுப்பார்.

அந்த கயிறை பிடிச்சு அப்படி இப்படி அசைச்சா கொடி பறக்கும். அதுக்குள்ள இருக்கும் பூ பறக்கும்.  ”தாயின் மணிக்கொடி பறக்குது பாரீர்”ன்னு பத்து நாளா மனப்பாடம் பண்ண பாட்டை பாடி கொடுத்த  ஆரஞ்ச் மிட்டாயை சாப்பிட்டு கொண்டாடினேன்!!



15 வயதுல: 
காலண்டர் வந்ததும் முதல் வேலையா என்னிக்குலாம் லீவ் வருதுன்னு பர்ப்போம். சுதந்திர தினம் சனி, ஞாயிறுல வந்தா செம கடுப்பா இருக்கும். வெள்ளி, திங்கள்ல வந்தா கூடுதல் சந்தோசம். ஏன்னா, 3 நாள் லீவ் கிடைக்கும்ன்னு.

இன்னிக்கும் ஸ்கூல் போகனுமா?!ன்னு சலிச்சுக்கிட்டே போய் கொடி ஏத்தி மிட்டாய் வாங்கிக்கிட்டு, பசங்களோடு அரட்டை அடிச்சு முடிச்சு வீட்டுக்கு வந்து

யாராவது இது எத்தனையாவது சுதந்திரதினம்ன்னு கேட்டா கண்டிப்பா ஒண்ணு கூட்டி இல்லாடி ஒண்ணு குறைச்சுதான் சொல்லுவேன். அப்போல்லாம் டிவில சுதந்திர தினத்தன்னிக்கு ஜனாதிபதி டெல்லில கொடி ஏத்துறதை ”டிடி”ல வெச்ச கண்ணு வாங்காம பார்ப்போம். சிறப்பு பட்டி மன்றம் போடுவாங்க அதையும் பார்ப்போம்.

அன்னிக்குலாம் லீவ் நல்லா எஞ்சாய் பண்ணுவேன்!!


20 வயதுல: 
நாடு நமக்கு என்ன செஞ்சது?! ஏன் சுதந்திரம் கொண்டாடனும்?! எங்க பார்த்தாலும் குப்பை, சரியான கழிப்பிட வசதி இல்லை, சரியா வரி கட்டுறதில்லை. யாரும் வரிசை முறையை எங்கயும் கடைப்பிடிக்கறதில்லை, எங்க பார்த்தாலும் லஞ்சமும், அலட்சியமும் தலைவிரித்தாடுதுன்னு வீர வசனம் பேசிக்கிட்டே அதே தப்பை நாமும் செஞ்சுக்கிட்டே.., சட்டையில தலைக்கீழா கொடியை குத்தி நன்பர்கள் கூட, ரிலீசான  புது படத்தை பார்க்க போய்டுவேன்!!



25 வயசுல:
சேர்ந்தா மாதிரி 3 நாள் லீவ் வந்துட்டா ஹவுஸ்பாசை கூட்டிக்கிட்டு அம்மா வீடு இல்லாட்டி சின்னதா ஒரு டூர் அடிப்போம். அப்படி இல்லாட்டி ஹாயா டிவி முன்னாடி உக்காந்து சூர்யா, பரத், நமீதா, நஸ்ரியா பேட்டியும், ”வீட்டுக்கு அடங்காத பெண் யார்? வேலைக்கு போகும் பெண்ணா?! இல்லை வீட்டில் இருக்கும் பெண்ணா?!ன்னு பட்டி மன்றம் பார்த்துக்கிட்டு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையான அரைகுறை அழகிகள் நடிச்ச படத்தை பார்த்து கொண்டாடினேன்!!




30 வயசுல: 
வேலை வெட்டி இல்லாம அந்த காந்தியும், நேருவும் சுதந்திரத்தை வாங்கி கொடுத்துட்டு, அதுக்கு ஒரு நாள் லீவையும் கொடுத்து, ஒரு புரோகிராமை ஒழுங்க பார்க்க விடாம, உங்ககிட்ட என்னை அல்லாட வைக்குற  இந்த சுதந்திர தினத்தை கொண்டாடத்தான் வேணுமா?!ன்னு வூட்டுக்காரரை திட்டிக்கிட்டே கொண்டாடினேன்!!

இப்போ: 
சுதந்திர தினம் வருதே!! அதுக்கு பதிவு போடனுமே!! இதுங்களுக்குலாம் லீவாச்சே!! வீட்டுல இருந்துக்கிட்டு உயிரை எடுக்குமே! அதனால, இப்பவே ரெடி பண்ணி வச்சுடனும்ன்னு ஒரு வாரத்துக்கு முன்னாடியே படம்லாம் தேடி கண்டுப்பிடிச்சு அட்டாச் பண்ணி,  டைப் பண்ணி டிராஃப்ட்ல வச்சுட்டு...,

காலையில கண் விழிச்சு மூஞ்சி புக்குல, ட்விட்டர்ல  ஒரு ஸ்டேட்டசும், இங்க ஒரு பதிவும் போட்டு, நேரத்துக்கு சோறு பொங்கி டைனிங் டேபிள் மேல வச்சுட்டு, எத்தனை ஓட்டு , கமெண்ட் விழுந்துச்சு, இன்னிக்கு போஸ்ட் ஹிட்டாச்சா?!

இல்லியா?! இன்னிக்கு லீவாச்சே!! அதான் ஹிட்டாகலைன்னு என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டு மத்த பிளாக்குக்கு போய் கமெண்ட் போட்டு, மறுநாளுக்கு பதிவு தேத்தி...,

ஒரு வழியா இந்த சுதந்திர தினத்தையும்கொண்டாடிக்கிட்டு இருக்கேன்!!


Tuesday, October 02, 2012

தெரிந்த மனிதர்..., தெரியாத தகவல்



                                  
                                                                    
 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக 1869 அக்டோபர் 2-ல் பிறந்தார். மகாத்மா காந்தியாக 1948 ஜனவரி 30-ல் மறைந்தார். காந்தியின் பிறந்தநாள் உலகம் எங்கும் சர்வதேச அகிம்சை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது!

காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாட்டின் மூன்றாவது மற்றும் இறுதி தேசிய விடுமுறை, குடியரசு தினம், சுதந்திரம் தினம் ஆகியவை மற்ற இரண்டு விடுமுறைகள்!

முதன்முதலில் `தேசத் தந்தை’ என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், `மகாத்மா’ என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்!

காந்தி தொடங்கிய `இந்தியன் ஒப்பீனியன்’ குஜராத்தி. இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியானது!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர்தான் `ஹரிஜன்’ என்பது , அதன் பொருள், `கடவுளின் குழந்தைள்’!

உடற் பயிற்சியின் அரசன் நடைப் பயிற்சி’ என்று சொன்ன காந்தி, லண்டனில் சட்டம் பயிலும்போது, ஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று காசை மிச்சப்படுத்திப் படித்தார்!

காந்தி ஒரு துறவியைப் போன்றவர்தான், அனால், அவரிடம் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை. 1931-ல் லண்டனுக்குச் சென்றபோது, பிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாகச் சந்தித்தார் காந்தி. ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்துவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோது, அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒருவர், இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா’ என்று கேட்டார். `எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து மன்னரே அணிந்திருந்தார்’ என்று பதில் அளித்தார் காந்தி!

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது, காந்தி சொன்ன வாக்கியம்தான்..... `செய் அல்லது செத்து மடி!’

கொள்கை இல்லாத அரசியல் வேலை செய்யாமல் வரும் செல்வம், மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம், பண்பு இல்லாத அறிவு, நியாயம் இல்லாத வணிகம், மனிதம் மறந்த அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு’. இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூகப் பாவச் செயல்கள்!

தபால் அட்டைகள்தான் உள்ளதிலேயே மிகவும் சிக்கனமான தகவல் தொடர்புச் சாதனம் என்று கருதியவர் காந்தி’!

கடிதங்கள் மிக நேர்த்தியாக மடிக்கப்பட்ட பின்பே உறையில் இட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார். காரணம், கடிதம் மடிக்கப்பட்டு இருக்கும் முறையிலேயே உங்களைப்பற்றிய அபிப்ராயம் தோன்றிவிடும் என்பார்!’

யாருக்குக் கடிதம் எழுதினாலும் `தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்’ என்று எழுதியே கடிதத்தை முடிப்பார்!

கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார். எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும், உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார். அதை அவரும் கடைப்பிடித்தார்!


ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்கொண்டவராக இருந்தார். அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது!.

`சட்ட மறுப்பு இயக்கப் போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று வெள்ளையர்கள் சொன்னபோது, அதற்கு காந்தி, தன் 11 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். அதில் 11-வதாக இருந்த திட்டம், `சுய பாதுகாப்புக்குத் தேவையான வெடி பொருட்களையும் ஆயுதங்களையும் தயாரித்துக்கொள்வதற்கான உரிமம் வழங்குதல்.’ அகிம்சையைப் போதித்தவருக்குள் எப்படி இந்த எண்ணம் உதித்தது என்பது இன்று வரை பலரின் கேள்வி!

எந்த நிலையிலும் ஆங்கிலேயரை உடல் அளவில் காயப்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. `நாம் அவர்களை எதிர்த்துப் போராடவில்லை. அவர்கள் நம் மீது திணிக்கும் அதிகாரத்தைத்தான் எதிர்க்கிறோம்’ என்று அதற்கு விளக்கமும் அளித்தார்!

தான் தவறு செய்தால், அதற்காக மெளன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால், அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக்கொண்டு இருந்தார். இந்த குணம், அவர் தாய் புத்தலிபாயிடம் இருந்து வந்ததாகும்!.

ஆரம்ப காலங்களில், ஆசிரமத்தில் நடக்கும் தினசரி பிராத்தனைக் கூட்டங்களில், `கடவுள் உண்மையானவர்!’ என்று சொல்லிவந்தார். விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, `உண்மையே கடவுள்’ என்று மாற்றிக்கொண்டார்!.  

இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் காந்தியின் தபால் தலையை வெளியிட்ட நாடு எது தெரியுமா? அவர் தன் வாழ்நாளியில் மிதிக்காத நாடான அமெரிக்காதான் அது. இது நடந்தது 1961 ஜனவரி 26-ல்!.

ராட்டைச் சக்கரத்துக்கு முன் காந்தி அமர்ந்து இருப்பதுபோல இருக்கும் புகழ்பெற்ற புகைப்படம், மார்கேட் பூர்க் ஒயிட் என்பவரால் பிரபல லைஃப் இதழுக்காக எடுக்கப்பட்டது!.

`என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு’ என்று காந்தி அழைத்து வினோபா பாவேவைத்தான்!.  

மார்டின் லூதர்கிங், தலாய் லாமா, ஆங் சான் சூகி, நெல்சன் மண்டேலா,அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கியக் காரணம், காந்திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஆனால், காந்திக்கு நோபல் பரிசு தரவில்லை!.

இந்தியா சுகந்திரம் அடைந்தபோது, அதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் காந்தி, இன்னொருவர் தந்தை பெரியார்!.

போர்பந்தரில் பிறந்த காந்தி ஆரம்பித்த சபர்மதி ஆஸ்ரமத்தின் நினைவாகத்தான் `சபர்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில் விடப்பட்டது.ஆனால், 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தில் இந்த ரயில் எரிக்கப்பட்டு, குஜராத் கலவரத்துக்கு வித்திடப்பட்டது.காலத்தின் முரண்களில் இதுவும் ஒன்று!.

`கனவில் இருந்து நிஜத்துக்கு, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, மரணத்தில் இருந்து அமரத்துவத்துக்கு!’- காந்தி நினைவு மண்டபத்தில் எழுதிவைக்கப்பட்டு இருக்கும் வாசகம் இது!. 

நன்றி: ஆனந்த விகடன்