Showing posts with label தட்டை. Show all posts
Showing posts with label தட்டை. Show all posts

Tuesday, March 03, 2020

மாலை நேர காஃபிக்கு ஜோடி இந்த தட்டடை - கிச்சன் கார்னர்..

சமையலில் புலி இல்லதான். ஆனா, ஒருமுறைக்கு நாலுமுறை செய்தா எந்த பலகாரமும் செய்ய பழகிடும். ஆனா, இந்த எள்ளடை, தட்டடைன்னு சொல்லப்படும் தட்டை செய்ய மட்டும் எனக்கு இன்னும் கைவரல. மாவை ஆவில வச்சு பார்த்தாச்சு, வறுத்து பார்த்தாச்சு.. ஆனாலும் கைகூடாம இழுத்துக்கிட்டே இருந்துச்சு. கடைசியா ஒரு நாலைஞ்சு முறைதான் நல்லா வர ஆரம்பிச்சிருக்கு. பார்ப்போம் இந்நிலை தொடருதான்னு...

பச்சரிசியை ஊறவச்சு அரைச்சு மாவாக்கி சிலர் வறுத்தும், சிலர் ஆவியில் வேக வச்சு, மிளகாய் பூண்டை அரைச்சு அதில் சேர்த்து, பெருங்காயம், வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து தட்டை செய்வாங்க. ஆனா, நான் இப்பவும் கல் உரலில்  மாவு ஆட்டிதான் செய்வேன். 
தேவையான பொருட்கள்..
புழுங்கலரிசி - கால் படி
காய்ந்த மிளகாய்- காரத்திற்கேற்ப
பூண்டு - பத்து பல்
ஊறவைத்த கடலை பருப்பு  - ஒரு கப்
எள் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம்- தேவைக்கேற்ப
பொடித்த வேர்க்கடலை - சிறிது
கருவேப்பிலை கொஞ்சம்
உப்பு
எண்ணெய்


அரிசியை 2 மணிநேரம் ஊறவச்சு, அத்தோடு மிளகாய், பூண்டு, பெருங்காயம் உப்பு சேர்த்து அரைக்கனும்.  மிக்சிலயும் போட்டுக்கலாம்..
அரைச்ச மாவோடு ஊற வச்ச கடலை பருப்பு, எள், கறிவேப்பிலை, வேர்க்கடலை பொடி சேர்த்துக்கனும்..
கூடவே பொடித்த பொட்டுக்கடலை மாவு சேர்த்துக்கனும்..
நல்லா பிசைஞ்சுக்கனும்..

ஒரு சுத்தமான பருத்தி துணில தேவையான அளவில் தட்டை தட்டிக்கனும்.. அதிகப்படியான தண்ணியை துணி இழுத்துக்கும்.  அரிசி காய வைக்க, தானியங்கள் முளைக்கட்ட இப்படி பயன்படுத்த ஒரு காட்டன் லுங்கியை தனியா வச்சுக்குறது நல்லது. இல்லன்னா காடா துணியையும் இதுக்கு பயன்படுத்தலாம்.
எண்ணெயில் போட்டு இருபக்கமும் திருப்பி விட்டு சிவக்க விட்டு எடுத்தால் தட்டை ரெடி..
வாங்களேன்! தட்டையோடு கொஞ்சம் காஃபி, நிறைய கதைன்னு இந்த மாலைப்பொழுதை கழிக்கலாம்!!

நன்றியுடன்,
ராஜி

Tuesday, November 14, 2017

தீபாவளி சீர் செய்ய தட்டடை - கிச்சன் கார்னர்

எங்க ஊர்ல தீபாவளி கழிச்சு, கார்த்திகை தீபத்துக்குள் கல்யாணம் ஆகிப்போன சகோதரி, மகள், அத்தைகளுக்கு தீபாவளி பலகாரம் கொடுப்பது வழக்கம். முன்னலாம், இட்லி, வடை, அதிரசம், முறுக்கு, தட்டை இதுலாம்தான் கொடுப்பாங்க. அப்புறம் கால மாற்றத்துல ஜாங்கிரி, மைசூர்பாக், லட்டுன்னு செஞ்சு 100, 50ன்ற எண்ணிக்கைல பலகாரமும், மஞ்சள், குங்குமம், வெத்தலை, பாக்கு, பூ, பழம், வளையல்ன்னு வாங்கிட்டு தங்கள் வீட்டு பொறந்த பொண்ணுங்களுக்கு கொண்ட்டுட்டு போய் கொடுப்பாங்க. வர்றவங்களுக்கு விருந்து வச்சு, துணிமணி எடுத்து கொடுத்து பதில் சீர் செஞ்சு அனுப்புவாங்க.  அம்மா வீட்டிலிருந்து வரும் பலகாரத்தை தெரு முழுக்கவும், தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க, கீரைக்காரம்மா, கோலமாவு விற்பவர்ன்னு எல்லாருக்கும் என் அம்மா வீட்டு பலகாரம்ன்னு கொடுப்போம்.  தீபாவளி கழிச்சு பஸ்ல ஏறினா மஞ்சத்துணி சுத்துன அண்டா, அன்னக்கூடை, பக்கெட்ன்னு இருக்கும். இம்சைகளா! உசுரை வாங்குறீங்கன்னு கண்டக்டர் திட்டுவார்.  

கால மாற்றத்துல  கடைல ஆர்டர் செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சாங்க.  இப்ப காலம் இன்னும் முன்னேறிட்டுது பலகாரத்துக்கு பதிலா பைசாவா வாங்கிக்குறாங்க. ஆனா, பொண்ணுக்கு பிடிக்கும்ன்னு அம்மா பலகாரம் செய்ய.... என் அண்ணன் வரான் மட்டன் எடுத்து வாங்கன்னு தங்கச்சி சொல்ல....  ராஜி வீட்டுல அவங்க அண்ணன் மகன் கொண்டுட்டு வந்து கொடுத்த பலகாரம்ன்னு தெரு முழுக்க வீசுன பலகார வாசனையோடு கூடிய பேச்சுகள்..... அந்த காலம் திரும்ப வருமா?! அவசர யுகத்தில் அன்பும், பாசமும், காதலுக்கும் வேலை இல்ல போல....

தட்டை, எள்ளடை, தட்டடைன்னு சொல்லப்பட்டாலும் எங்க ஊர்ல இதுக்கு பேரு ஓட்டவடை. ஆனா, இதுல ஓட்டையே போடமாட்டாங்க. ஆனா, இதுக்கு ஏன் அப்படி பேர் வந்துச்சுன்னு தெரியாது. 

தேவையான பொருட்கள்...
 பச்சரிசி
மிளகாய்,
பூண்டு
மிளகு,
பெருங்காயம்,
கடலைப்பருப்பு,
வேர்கடலை,
உப்பு,
எண்ணெய்,
பொட்டுக்கடலை,
எள்
கறிவேப்பிலை

அரிசியை ரெண்டு மணிநேரம் ஊறவச்சுக்கனும். பச்சரிசியா இருந்தா தண்ணி வடிகட்டி  ஈரம் போக காய வச்சு மாவாக்கிக்கனும். அந்த மாவை ஆவில வேக வச்சுக்கனும்.  வேக வச்செடுத்த மாவை ஆற வச்சு கட்டியில்லாம உதிர்த்துக்கனும்.   மிளகாய், பூண்டை விழுதா அரைச்சுக்கனும். 

மாவில், மிளகாய், பூண்டு அரைச்ச விழுதை சேர்த்துக்கனும்...

எள் சேர்த்துக்கனும்...

தேவையான அளவு உப்பு சேர்த்துக்கனும்...

 ஊற வச்ச கடலை பருப்பை தண்ணியெல்லாம் வடிச்சு சேர்த்துக்கனும்...

 மிளகை ஒன்னிரண்டா தட்டி சேர்த்துக்கனும்...

 பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக்கனும். வறுத்து தோல் நீக்கி, ஒன்னிரண்டா பொடிச்ச வேர்க்கடலை, பொட்டுக்கடலையை நைசா பொடிச்சு சேர்த்து நல்லா பிசைஞ்சுக்கனும்.

சுத்தமான பருத்தி துணியில் வட்டமா  மெல்லிசா தட்டிக்கனும்...


எண்ணெய் நல்லா காய்ஞ்சதும் போட்டு ரெண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கனும். 


சுவையான காரசாரமான தட்டை ரெடி.. இதை புழுங்கலரிச்யிலயும் செய்யலாம்... புழுங்கலரிசியா இருந்தா மிளகாய், பூண்டு, உப்பு, பெருங்காயம் போட்டு நைசா அரைச்சுக்கனும். கடலைப்பருப்பை ஊற வச்சுக்கனும், உடைச்ச கடலையை நைசா   கெட்டியா அரைச்சுக்கனும்.  அரைச்செடுத்து மாவில் ஊற வச்ச கடலை பருப்பு,  பொடிச்ச உடைச்ச கடலை, வறுத்து தோல் நீக்கி, ஒன்னிரண்டா பொடிச்ச வேர்கடலை சேர்த்து பிசைஞ்சு தட்டி எண்ணெய்ல போட்டு பொரிச்சு எடுக்கனும்.

மெல்லிசா ஒரு இடம் போல தட்டனும். இல்லன்னா கடக் முடக்குன்னு இருக்கும். 

நன்றியுடன், 
ராஜி.