Monday, January 09, 2012

கண்ணாடி...,


புற அழகை காட்டும் கண்ணாடி,
அறியுமா மனித மனமும்
அதனுள் ஒளிந்திருக்கும் சூதும்??
அதை அறிய, 


கண்ணாடிக்கும் கூட,

கண்ணிரண்டு வேண்டும்,
அந்த கண்களும் போதாமல்,
கண்ணாடியும்(Mirror) கூட கண்ணாடி(Specs) போடும்.

Friday, January 06, 2012

நவக்கிரகம்



 மனிதர்கள் வாழ்வில் ஜோதிட ரீதியாக கிரகங்களின் பங்கு முக்கியமானதாம். அந்த கிரகங்களின் நாயகர்களின் பெயர்களும் அவர் பற்றிய விவரங்களும் தொகுத்திருக்கிறேன். . இனி வரும் வாரங்களில் ஒவ்வொரு கோள்களுக்குண்டான  கடவுள், கோயில் இடம் பெற்றிருக்கும் ஊர், அவற்றின் சிறப்பு, தல வரலாறு, பரிகாரங்கள்  பற்றி வரும் வாரங்களில் விரிவாக பார்ப்போம். 
கிரகம்: சூரியன்
ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி.
.

கிரகம்: சந்திரன்
ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
நாள்: திங்கள்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.

கிரகம்: குரு
ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
நாள்: வியாழன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி

கிரகம்: ராகு
ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
நிறம்: கரு நிறம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
மலர்: மந்தாரை
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: கோமேதகம்
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்

கிரகம்: புதன்
ஸ்தலம்: திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்: பித்தளை
நாள்: புதன்
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்

கிரகம்: சுக்கிரன்
ஸ்தலம்: கஞ்சனூர்
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
நாள்: வெள்ளி
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்

கிரகம்: கேது
ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
நிறம்: பல நிறம்
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வள்ளி
உலோகம்: கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: வைடூரியம்
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.

கிரகம்: சனி
ஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
நாள்: சனி
ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்

கிரகம்: செவ்வாய்
ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
நாள்: செவ்வாய்
ராசிகற்கள்: பவழம்
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்

Thursday, January 05, 2012

என்னோடு நீ மட்டுமே..,

 எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!??

சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !
உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!
 

Tuesday, January 03, 2012

மதுரை வாழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்


     என் அம்மா சில நாட்களுக்கு முன் ராஜ் டிவியில் ”அகட விகடம்” நிகழ்ச்சியை பார்த்திருக்காங்க. நிகழ்ச்சியின் கடைசி சில நிமிடங்களை மட்டுமே அம்மா பார்த்திருக்காங்க.  

     ஒரு கிளார்க்(கிளார்க்கான்னும் சரியா தெரியலை. ஆனால், அரசாங்க ஊழியர்)  ஒருத்தர் சில வருடங்களுக்கு முன் அலுவலகத்துக்கு செல்லும் வழியில் மனநலம் சரியில்லாத ஒரு பெண் மலத்தை தின்னும் காட்சியை கண்டு மனம் பதறி, அவளை தன்னோடு அழைத்து சென்று மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டு வந்திருக்கிறார். 

   வீட்டிற்கு வந்து யோசிக்கையில், இதுப்போல் மனநலம் பாதிக்கப்பட்டு.., ஏதோ காரணங்களுக்காக தெருவில் விடப்பட்ட பெண்களின் நிலையை யோசித்து பார்த்திருக்கிறார். அப்படிப்பட்ட பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகி, அதனால் சில பெண்கள் கர்ப்பிணியாய் அலையும் அவலங்கள்தானே அப்பெண்களுக்கு நேர்கிறது.
நாமே ஏன் அப்பெண்களுக்கு பாதுகாப்பாய் இருக்கக்கூடாது என்று எண்ணி, தன் அரசாங்க பணியிலிருந்து விலகி, மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட பெண்களுக்கான காப்பகத்தை தொடங்கியுள்ளார். சிறிய அளவில் தொடங்கப்பட்ட காப்பகம் இப்போது கிட்டத்தட்ட 300 பெண்களை அவர் பாதுகாத்து வருகிறாராம். 

  இப்போது அப்பெண்கள் தங்க புதுசா கட்டிடம் கட்டி கொண்டிருக்கிறாராம். அதற்கு பொருளுதவி வேண்டி அகடவிகடத்தில் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். 

   அவருக்கு பொருளுதவி செய்யனும்ன்னு அம்மா ரொம்ப ஆவலா இருக்காங்க.  ஆனால், அவர் பெயரோ அவர் நடத்தும் காப்பகத்தின் பெயரோ, மற்ற  எந்த விவரமும் எங்களுக்கு தெரியாது. எனவே, இதை படிக்கு மதுரை வாழ் பதிவர்களுக்கு தெரிந்தாலோ அல்லது தங்கள் நண்பர்களிடத்தில் விசாரித்தோ முகவரியை அளித்தால் பேருதவியாய் இருக்கும்.

 உதவுவீர்களா நண்பர்களே?


Monday, January 02, 2012

புத்தாண்டில் கடவுளுக்கு நான் போட்ட அப்பிளிகேஷன்...,

         

ஹாய்! ஹலோ! .. எல்லாரும் எப்படி இருக்கீங்க?

புது வருஷம் உங்க எல்லாருக்கும் எப்படி ஆரம்பிச்சுது? 

     நான் ரொம்ப புத்திசாலி.......ன்னு எனக்கு நானே நினைச்சுக்கிட்டு,   நைட் 12 மணிக்கு எல்லா நெட்வொர்க்கும் பிசியாகிடுமே நாம எதுக்கு வேஸ்ட்டா  முழிசிருக்கணும்னு 9 மணிக்கெல்லாம் சமத்தா தூங்க போயிட்டேன்..  எனக்கு வாய்ச்ச ஃப்ரெண்ட்ஸ்லாம் ரொம்ப நல்லநல்லவங்க. 

     10  மணிக்கே ஒரு லூசு ஃப்ரெண்ட் எழுப்பி மொக்கை போட ஆரம்பிச்சுடுச்சு. ஹேய் நான் பீச்சுல இருக்கேன், ஹோட்டல்ல இருக்கேன், அலையடிக்குது, ஹோட்டல்ல சாண்ட்விச் விக்குறான்னு மொக்கை போட ஆரம்பிச்சது. இதுக்கு மேல நாம தூங்குன மாதிரிதான்னு நினைச்சு நானும் அதுகூட கொஞ்ச நெரம் மொக்கை போட்டுட்டு 11 மணிக்கு தூங்க போனேன்.
    நல்ல தூக்கம்... 12.00 மணியிலிருந்து அடுத்தடுத்து போன். தூக்க கலக்கத்துல யார்கிட்ட பேசறேன்னே தெரியாம  மாத்தி மாத்தி பேர் சொல்லி பேசி ஏகப்பட்ட பல்ப் வாங்கினேன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா?
   ஆக மொத்ததுல பல பல்ப்களுடன் எனது புத்தாண்டு ரொம்ப பிரகாசமா?! ஆரம்பிச்சிருக்கு. வருசப் பிறப்பு அன்னிக்கு என்ன கிடைக்குதோ! அதெல்லாம் வருஷம் ஃபுல்லா கிடைக்கும்ன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லும்.  

   அதனால ஆண்டவா! இந்த வருஷம் முழுக்க இது தொடராம(பல்ப் வாங்குறது) மத்தவங்களுக்கு நான் நிறைய பல்புகள் வாரி வழங்குற மாதிரி அமைஞ்சு நான் சந்தோஷமா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டேன்.

நான் வேண்டிக்கிட்டது கரெக்ட்தானே மக்களே?..