Saturday, November 19, 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் - மருத்துவம்

தாய்மை
வலியின் உச்சத்தில் 
உன்னைப் பெற்றெடுத்த  
உன் தாய், உயிர் கொடுத்து,
வலி மறந்து புன்னகைக்கச் செய்கிறாய் 
உன் விரல்களால் தீண்டியதுமே
அம்மா என்பது ஒவ்வருவருக்கும் நடமாடும் தெய்வமாகும் ,ஒரு நல்ல தாயால்தான் நல்ல குழந்தைகளை ஈன்றெடுக்க முடியும். அவர்கள் நனறாக வளர அந்த தாய் ,தாய்ப்பாலுடன் அன்பையும் ,பிற உயிர்கள் மேல்கருணை காட்டும்ப்பழக்கமும் ,.ஒழுக்கத்தையும் அதனூடே சேர்த்து ஊட்டுவதன் மூலம் தான் ஒரு நல்ல குழந்தையாக அவர்கள் வளரமுடியும். அதற்க்கு மாற்றாக கடையில் விற்கும் கண்ட கண்ட பாக்கெட் ,டின் பால் பவுடர்களை வாங்கி கொடுப்பது.  
அதை செய்யும் போதே அந்த வியாபாரிகள் வியாபார நோக்கோடு செய்வதால் செய்பவர்களின் வியாபார எண்ணமும் ,அடுத்தவர்களை ஏமாற்றியாவது நம்முடைய பொருளை விற்கவேண்டும் என்ற சுயநலமும் நிறைந்து இருப்பதால் ,அதையே குடித்து வளரும் குழைந்தைகள் ,அதுபோலவே வளரும் அதன் காரணமாக  அடுத்தவர்களை ஏமாற்றுதலும் ,திருட்டுத்தனமும் ,ஒழுக்கமின்மையும் கொண்டு வளர்ந்து ,கடைசியில் வியாபார நோக்கோடு ,பெற்றவர்களையே கூடேவே வைத்து இருந்தால் ,காசு செலவாகிவிடும் என வயதான காலத்தில் தனித்து விட்டு போய் விடுகின்ற்னர்.அது கொடிய பாவம்.
இந்த சமுதாய சீர்கேட்டிற்கு என்ன காரணம் .பிள்ளைகளுக்கு சரிவர ஒரு தாய் அன்பெனும் அமுதமாகிய தாய் பால் ஊட்டாமை தான் காரணம். அவர்கள் மேலும் குறை சொல்வதைக்கு ஒன்றும் இல்லை இன்றைய ,அவசரகால வாழ்க்கை ,அதனால் வாரங்களுக்கு முன் பேக்கிங் செய்யப்பட்டு ,தன்னுடைய சத்துக்களை எல்லாம் இழந்து வெறும் சக்கையான உணவுகளை உண்பது தான் கரணம் .இவற்றை எல்லாம் தவிர்த்து ,நம்முடைய குழந்தைகளுக்கு ,நாம் நல்லமுறையில் தாய்ப்பால் எனும் அமுதம் .ஊட்ட இந்த எளிய மருத்துவ முறை உதவும் ,இதை நமது தாய்மார்கள் தெரிந்து கொண்டு .தமது குழந்தைகளுக்கு .நல்ல தாய்களாக இருக்கட்டும் .
கர்ப்பகாலம் முதல் பாலூட்டும் காலம் வரை பெண்களுக்கான சத்துணவு சமையல்கள் பற்றிச் சொல்லிவரும் ஒரு உயர்ந்த நிலையில் இருக்கும் மக்கள் பயனடையவேண்டும் என நினைக்கும் ஒரு உயர்ந்த உள்ளத்திடம்  இருந்து மறைந்துவிட்ட இந்த  பாலூட்டும் பெண்களுக்கான பிரத்யேக சமையல்கள்! பற்றிய குறிப்புகளை தொகுத்து அளிக்கிறேன். இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
ரோஸ்டட் கார்லிக்
தேவையானவை:
பூண்டு - 4
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை 1:
பூண்டை உரித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி, உரித்த பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேகும்வரை வதக்கிப் பரிமாறவும். பூண்டு நன்கு வெந்துவிட்டால் லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

செய்முறை 2:
அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றாமல், உரிக்காத பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகும் வரை வறுத்து எடுத்து, பின்னர் உரித்துச் சாப்பிடவும். பூண்டின் தோல் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும்.

குறிப்பு:
பூண்டு நன்றாக வெந்திருந்தால் மிருதுவாகவும் சுவையுடனும் இருக்கும். வேகாத பூண்டு காரமாக இருக்கும். வெந்த பூண்டுகளை தினமும் சாப்பிட்டு வர... பால் சுரப்பு நன்றாக இருக்கும்.

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் வரிசையில் அடுத்தது
 பத்தியக் குழம்பு
தேவையானவை:
பூண்டு - 5 பல்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க:
தேங்காய் - 2 சிறிய துண்டுகள்
பூண்டு - 5 பல்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
செய்முறை:
புளியைக் கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும். தேங்காயைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதனுடன் மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பிற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெந்தயம் தாளித்து, உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் புளிக் கரைசலைச் சேர்த்து பச்சை வாடை நீங்கும்வரை அடுப்பில் வைத்து, இடித்த வெல்லம் சேர்த்து சில நொடிகள் வைத்து பின்னர் இறக்கவும். விரும்பினால், கறிவேப்பிலையை சிறிது எண்ணெயில் தாளித்து இப்போது குழம்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு:
தேங்காய்க்கு பதிலாக ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை சேர்த்தும் பத்தியக் குழம்பு செய்யலாம். இதில், பூண்டுடன் சுண்டைக்காய் வற்றலையும் சேர்த்து வதக்கியும் செய்யலாம்.
மீண்டும் ஒரு மருத்துவ குறிப்பினூடே சந்திக்கலாம் நன்றி வணக்கம்

Friday, November 18, 2016

ஈசனின் அருளைப்பெற "சோமவார விரதம்

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பான விரதமாக கடைப்பிடிக்கப்படுவது "கார்த்திகை சோமவார விரதமாகும்".  சிவப்பெருமானை நினைத்து செய்யப்படும் இந்த விரதம், ஈசனின் அருளைப் பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும் விரத முறையாகும். 
திங்கட்கிழமை என்பது "சோமவாரம்" என்றழைக்கப்படுகிறது. சிவப்பெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது.இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கள்கிழமையிலிருந்து ஆரம்பித்து கார்த்திகை மாதம் வரும் திங்கள்கிழமை அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும்.நினைத்த வரம் கிடைக்க 1, 2, 3, 12, 14 ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் செய்து விரதத்தை தொடங்கலாம்.
சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில். அவன் வளர்ந்து பருவமெய்தியதும், ராஜசூய வேள்வி ஒன்றை நடத்தி பெரும் புகழை அடைந்தான். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது 27 நட்சத்திர பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். ஆனால் சந்திரன், 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள்.
பெண்களின் வருத்தத்தை அறிந்த தட்சன், சந்திரனை வரவழைத்து, ‘அனைத்து பெண்களிடமும் அன்பாக இரு’ என்று கூறினான். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்துக்கொண்டே போவாய்’ என்று சாபம் கொடுத்தான்.
தட்சனின் சாபத்தால், நாளுக்கு நாள் தான் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மாவிடம் சென்று முறையிட்டான். அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.
 சந்திரன், சிவப்பெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.
இனி, விரதம் இருக்கும் முறையை பார்க்கலாம்...

இந்து மத திருமணங்களில் " அருந்ததி பார்ப்பது" என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். கற்புக்கரசியாகிய அருந்ததியை வசிஷ்டர் தன் மனைவியாக அடைந்தது இந்த சோமவார விரதத்தை கடைபிடித்ததால்தான். பொதுவாக இந்த விரதத்தை பெண்களே கடைபிடிக்கின்றனர். இருந்தாலும் ஆண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை துணைவியை அடையலாம். சோம வாரத்தில் குற்றாலத்தில் நீராடி குற்றாலநாதர், குழல் வாய்மொழி அம்மையை தரிசிப்பது நல்லது. இதே போல சுசீந்திரம், தாணுமாலய சுவாமியை வணங்கி வருவதும் உத்தமம்.
சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிப்பட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூரதீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும். கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின்போது சிவநாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைத்துணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசிப்பெறவேண்டும்.இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.
சோமவார விரதம் தோன்றிய கதை....

 ஒரு சமயம் திருக்கயிலாய மலையில் சிவபெருமான் தனியாக அமர்ந்திருக்கச் சுற்றிலும் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், கின்னரர், கிம்புருஷர்கள் அமர்ந்திருந்தனர். அந்த நேரத்தில் பார்வதி தேவி அங்கே வந்து பரமனை வணங்கி நின்றார். அப்போது பரமன் யாரும் அறியாதபடி தனது ஜடாமுடியை அசைத்துப் பார்த்தார். அதில் சந்திரன் அமர்ந்திருப்பதைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். பார்வதி தேவியார் இறை வனிடம், “சுவாமி என்ன இது? சந்திரனைத் தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறீர்?” என்று கேட்டார். அதற்கு ஈசன், “தேவியே, எனக்கு மிகவும் பிடித்த சோமவார விரதத்தை இந்தச் சந்திரன் முறையாகக் கடைப்பிடித்துச் செய்து இந்தப் பேறினைப் பெற்றுள்ளான்” என்றார். உடனே தேவி, “சுவாமி அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த விரதத்தை எனக்கும் உபதேசித்து அருள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். பார்வதி தேவியும், மற்றவரும் பயன்பெறும் பொருட்டு சோமவார விரதத்தை இறைவன் கூறி அருளினார்.
 வசிஷ்டர், சோமசர்மன், தன்மவீரியன், கற்கர் ஆகியோர் இதைக் கடைபிடித்து முறையே அருந்ததி, செல்வம், நற்கதி, குழந்தைப் பேறு ஆகியவற்றைப் பெற்று மகிழ்ந்தனர்.
சீமந்தினி பெற்ற மறுவாழ்வு...

சித்திரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி. அவள் தனது 14 வயது முதல் சோமவார விரதத்தைச் செய்து வந்தாள். சந்திராங்கதன் என்ற இளவரசனை மணந்தாள். அவன் நண்பர்களுடன் படகில் யமுனை நதியில் பயணித்தபோது படகு கவிழ்ந்து அனைவரும் உயிர் நீத்தனர். நண்பர்களோடு நாகர் உலகம் சென்று அங்குள்ள நாக மன்னனால் ஆதரிக்கப்பட்டு வந்தான். இதற்கிடையில் சந்திராங்கதன் இறந்துவிட்ட செய்தி கேட்டு அவனுக்கு ஈமக்கிரியைகள் செய்தனர். சீமந்தினி விதவைக் கோலத்தில் இருந்தவாறே யமுனை நதிக்கரையில் சோமவார விரதத்தைச் செய்தாள்
கணவன் சந்திராங்கதன் நாக மன்னனிடம் முறையாக நடந்து நல்லபெயர் பரிசுப் பொருட்களை பெற்றுத் திரும்பும்போது மனைவியைக் கண்டு அதிர்ந்துவிட நடந்ததைக் கூறி அவளை மீண்டும் திருமணம் செய்து கொண்டு இறைப்பணியில் ஈடுபட்டான். காசி மாநகர் அருகே ஆட்சி புரிந்து வந்த மன்னன் ஒருவன் சீமந்தினியின் மனதிடத்தைச் சோதித்து அறிய விரும்பி, இரண்டு பிரம்மச்சாரிகளை அனுப்பி ஒருவனை பெண்வடிவாகச் சென்று போகச் செய்தான். அவள் இருவரையும் பார்வதி பரமேஸ்வர வடிவங்களாகத் தியானித்தாள். அப்போது பெண் உருவம் ஏற்றவன் உண்மையான பெண் வடிவமாகவே மாறிவிட்டான் என்பது புராணக் கருத்து.
சோமவார நாளில் இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் எல்லா பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் கார்த்திகை சோமவார விரதம் தரும்.
வரும்  21.11.2016 அன்று இந்த வருடத்திய கார்த்திகை மாத முதல் திங்கள்கிழமை வருது. நான் சோமவார விரதமிருக்க ஆரம்பிக்கப்போறேன்.... நீங்க?!
சிவார்ப்பணம்.


Sunday, November 13, 2016

ஜூஸ் கார்னர் கவனிக்க வேண்டிய விஷயம் - ஆரோக்கியம்

இப்ப எல்லாம்  ஜூஸ் குடிக்கிறது ,மருத்துவத்திற்காகவும் பேஷன்- -னாகவும் போய்டுச்சு,ஆனாஒரு சிலருக்கு பழங்களாக கூட சாப்பிட நேரமில்லாமல், ஜூஸாக குடிப்பதையே விரும்புகின்றனர். உண்மையில் நார்சத்து அதிகம் இருக்கும் பழங்களை அதன் இயல்பு நிலையில் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.அவைகளை ஜூஸ்ஸாக குடிக்கும் போது,அந்த நார்சத்து  எல்லாம் குறைந்து விடும். அதிக வேலை செய்பவர்கள்,விளையாடுபவர்கள், மலை ஏறுபவர்கள்,மட்டுமே  ஜூஸாக குடிப்பது நல்லது ஏன்னா,அது அவர்களுக்கு தண்ணீர் இழப்பை சமன் செய்யும். மற்றபடி இருப்பவர்கள் பழமாக சாப்பிடுவது நலம்..இல்லை சிலருக்கு ஜூஸ்களாக குடிப்பதே பிடிக்கும் என்றால் அந்த ஜூஸ்களை குடிப்பதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய, கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை நம்முடைய ஆரோக்கியம் பகுதியில் இன்று பார்க்கலாம். 


பொதுவாக கொளுத்தும் வெயிலில், கோடை வெம்மையை தணிக்கபெரும்பாலும் மக்கள் நாடுவது தெருவோர கடைகளையும், மோர் ,பழச்சாறு மற்றும் கூழ் போன்றவற்றை விற்கும் திடீர் கடைகளை நோக்கித்தான்.இதன் மூலம் இவர்களது தாகம் உடனடியாக தணிந்துவிடும், ஒரு புத்துணர்ச்சியும் கிடைக்கும். ஆனால்,அதன் பின்னனியில் நமக்கு கிடைப்பது,ஆபத்து தான் பொதுவாக வெயிலில் நீண்டநேரம் வைக்கப்படும் எல்லா விதமான உணவுகளிலும் கெட்டுப்போகும் தன்மை விரைவாக நடைபெறும்.அவைகளை அவர்கள் ஒப்புக்கு ஒரு கம்பிவலை மூலம் மூடிவைத்தாலும் ,அவைகளை பொதுவாகவே ஈக்கள் மொய்க்கும் தன்மை அதிகமாக இருக்க வாய்புகள் அதிகம் உண்டு.சிலர் பேப்பரால் மூடி வைத்தாலும்.பெரும்பான்மையான இடங்களில் திறந்தே இருக்கும்.    
தள்ளுவண்டியில் ஜூஸ்,ஐஸ்கிரீம் ,லஸ்ஸி போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் அதிக விலை கொடுத்து கேன்வாட்டர் வாங்கி உபயோக படுத்துவது இல்லை.தெருக்குழாய் மற்றும் லாரிகளில் கொண்டுவரும் தண்ணீரையே உபயோக படுத்துவார்கள்.சிலர் தெருவோரம்இல்லை சாலை ஓரங்களில் இருக்கும் பெரிய பிளாஸ்டிக் டாங்குகளில் இருக்கும் தண்ணீரை கூட பயன்படுத்துவார்கள்.அதுபோல ஜூஸ் பிழிய பயன்படுத்தும் கத்தி போன்றவற்றை ஒவ்வருமுறையும் கழுவ வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்வது  இல்லை.
 ஜூஸ், லஸ்ஸி தயாரிக்க பயன்படுத்துகின்ற மிக்ஸி, பழங்களை அறுக்கிற கத்தி போன்றவற்றை ஒவ்வொரு தடவையும் நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை மிக்ஸியில் போட்டு அரைக்கும் முன் சுத்தமான நீரில் நன்றாக கழுவ வேண்டும். கேழ்வரகுக் கூழ், ஜூஸ் ஆகியவற்றை ஊற்றி கொடுக்கும் டம்ளர் போன்ற பாத்திரங்களை சுத்தமாக கழுவிய பின்னரே, அடுத்த முறை பயன்படுத்த வேண்டும். பெரும்பாலானோர் அவ்வாறு செய்வது கிடையாது. மிக்ஸி, டம்ளர் போன்றவற்றை திறந்தவெளியில் வைப்பதால், அவற்றில் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை, தூசு, நோயைப் பரப்புகின்ற கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் போன்றவை நிரந்தரமாக தங்ககூடிய வாய்ப்புகள் அதிகம்.
இதேபோல் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ரோட்டு ஓர கடைகளில் இருக்கும் ஜூஸ் ,மற்றும் மிக்சட் புரூட் ஜூஸ் போன்றவை அவர்கள் காலையிலயே வெட்டி அதை ஒரு ஒரு கலனில் கலக்கி வைப்பார்கள்.பொதுவாக வெட்டப்பட்டு வெகுநேரமான பழங்களில் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் உற்பத்தியாகிவிடும்.இதனால்  தொற்று நோய்கள் வர கூட வாய்ப்புகள் அதிகம் .ஆகவே முடிந்தவரை அவற்றை தவிர்ப்பது நலம்.
அதுபோல பழங்களுடன் சேர்த்து மில்க் ஷேக் குடிப்பதையும் தவிர்க்கவேண்டும். பொதுவாக பார்த்தோம்னா , எல்லா ஜூஸ் கடைகளிலும் ,ஜூஸ் அடிப்பதற்கு முன்பு பால் கலக்குவார்கள் .மேலும் எல்லா விதமான பழங்களுடன் சேர்த்து மில்க் ஷேக் தயாரிக்கிறார்கள். இது தவறு. பாலில் எலுமிச்சை கலந்தால் என்னாகும். திரிந்துவிடும்தானே? அப்படிதான் சிலவகை பழங்கள் அவைகளில் இருக்கும் அமிலங்கள் பாலை திரிய வைத்துவிடும் தன்மை கொண்டவை ,அவை நம்முடைய வயிறுக்கு நல்லதல்ல.. மிகவும் இனிப்பான பழுத்த பழங்களுடன் பால் கலந்து ஜூஸ் தயாரிக்கலாமே தவிர  மற்ற பழங்களுக்கு தேவை இல்லை .உதாரணமாக மாம்பழம், ஆப்பிள் போன்றவற்றில் பால்கலந்து குடிக்கலாம். ஆனால் திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றில் குடிக்கக் கூடாது. ஸ்ட்ரா பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் இனிப்பாக இருந்தாலும் அவற்றில் புளிப்பு சுவையும் உள்ளது. 
ஆகவே ஸ்ட்ரா பெர்ரி, அன்னாசி ஆகியவை பாலுடன் கலந்து குடிக்கக் கூடாது..அப்படியே மில்க் நிறைய இருந்தா கொஞ்சம் முகத்திலயும் தேய்ச்சுகிட்டா முகமும் பளப்பாகிவிடும்.
எந்த விதமான பழசாறுகளோ ,இல்லை காய்கறி போன்றவற்றில் சாறு தயாரிக்கும் போதோ ,அவைகளை நன்றாக கழுவி உபயோகிக்கவேண்டும். .ஏன்னா பழங்களை தாக்குகிற பூச்சிகளை கொல்கிறதுக்கும்,தடுக்கிறதுக்கும் .அடிக்கப்படுகிற மருந்து மற்றும் இரசாயனங்களும்,பழங்கள் பழக்க வைப்பதற்கு பயன்படுத்தும் இரசாயன கலவைகளும் ,அவற்றின் மேல் காணப்படுவதால் அவற்றை நன்றாக கழுவி உபயோகிக்க வேண்டும் .இல்லையெனில் அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளாக மாறிவிடும் .
காய்கறி ஜூஸ் குடிக்கும்போது எல்லா காய்களையும் அப்படியே பச்சையாக ஜூஸ் தயாரிக்கக் கூடாது. சில காய்களை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்க வேண்டும். புருக்கோலி, காலிஃப்ளவர் ஆகியவை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்கலாம். தக்காளி, கேரட், வெள்ளரி ஆகியவற்றை அப்படியே தயாரிக்கலாம்..பீட்ருட் சாறு பச்சையாக குடிப்பதால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தலாம் .மேலும் எலுமிச்சை ஜூஸில் சிறிது தேன் கலந்து,அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை குறையவும் வாய்ப்புக்கள் அதிகம் .இப்படி ஒவ்வரு காய்கறியிலையும் ஒவ்வொரு வைகையான சத்துக்கள் உள்ளன அவைகள் யாவையும் இங்கே தொகுத்து அளித்தால் நமது பதிவின் நீளம் அதிகரித்துவிடும்.இனி உலகில் உள்ளசில  வினோதமான உணவு பழக்கவழங்களை நமது ஆரோகியம் பகுதியில் அடுத்தவாரம்  பார்க்கலாம். நன்றி. 


Sunday, November 06, 2016

ஆறாவது படை வீடு - பழமுதிர்சோலை

அறுபடை வீடுகளில் ஆறாவது வீடான பழமுதிர் சோலை பற்றி பார்க்கலாம்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்ங்குறதுக்கு ஏத்தமாதிரி அழகானதொரு இடத்துல இக்கோவில் அமைந்திருக்கு..  தனது, தமிழ் புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் தலை தூக்க ஆரம்பித்தது. அந்த அகங்காரம் தமிழுக்கும், தமிழன்னைக்கும் நல்லதில்லைன்னு உணர்ந்த முருகன் சிறு விளையாட்டை நடத்த விரும்பினான்.
அவ்வைப்பாட்டி நடந்து செல்லும் இவ்வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக மாறி அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவ்வைக்கு களைப்பும், பசியும் வரவே, சிறிது ஓய்வெடுக்க நாவல் மரத்தின் நிழலில் வந்து ஓய்வு எடுத்தார் அவ்வை பாட்டி.
அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், "குழந்தாய்... எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?"
என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? "
என்று கேட்டார்.

சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர்,
விளையாட்டாக "சுட்டப் பழத்தையே கொடுப்பா..." என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுக்க, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. 

அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால்,அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா?" என்று கேட்டார்.
சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வை பாட்டியின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான்,

தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.


இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இருக்கிறது.
திருத்தணி, திருச்செந்தூர், பழனிப் போல இக்கோவில் ஆடம்பரமில்லாம மிக எளிமையாய் இருக்கு. முன்னலாம் இக்கோவிலில் முருகனின் வேலுக்கு மட்டுமே அபிஷேக ஆராதனை உண்டாம். சமீபக்காலங்களில்தான் முருகனின் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்றாங்களாம். அந்த வழிபாடுகள் கூட வேடுவர்கள், குறிஞ்சி நில மக்களின் வழிபாட்டு முறைப்படிதான் இன்றும் நடக்குதாம்
ரொம்ப நாட்களுக்கு முன், முருகனுக்கு இத்தலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அரிசி சோற்றை வேடர் குலத்தவங்க படையல் போட்டதா சொல்றாங்க. அதுக்கு ஆதாரம். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில் ” கொழுவிடைக் குருதி விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து ” என்ற அடியே சான்று. சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்குமாம். ஆனால், இத்திருதலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில்தான் பழுக்குமாம் இதற்கு திருமலிருஞ்சோலை குலமலை கொற்றை மலை என்ற பெயர்களும் உண்டு.
பழமுதிர்சோலை முருகன் கோவிலிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கு. வேட்டுவர் குலத்தெய்வமான ராக்காயி கோவில் இங்கு நூபுரக கங்கை தீர்த்தம் விழுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் உற்பத்தியிடம் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்த போதிலும் இன்றுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.யானை துதிக்கைப் போல பருமனாக கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது, இத்தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. இத்தீர்த்தத்தில் நீராடினால் நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதாக இத்தீர்த்தம் விளங்குது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது சிலம்பாறுன்னு பேர் பெறுகிறது.
அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்று நீரின் ருசியும், ஆற்று நீரால் விளையும் தானியங்களின் ருசியும் மிகுந்திருப்பதால் இதற்கு தேனாறு என்றும் பெயர் இங்கிருக்கும் “மாதவி மண்டபத்தில் அமர்ந்துதான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியதாக செவிவழி சேதியும் உண்டு. இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.
இங்கிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது அனுமார் தீர்த்தம். இங்க ஓர் அநுமார் கோயில் இருக்கிறது. இதற்குச் சற்று மேல், கருட தீர்த்தம், கருடர் கோயில் இரண்டும் இருக்கின்றன. அதன் பக்கத்தில் பாண்டவ தீர்த்தமும் கோயிலும் இருக்கு. மலையில் வட பக்க சரிவில், பார்த்த உடனேயே பாபத்தை போக்கக் கூடிய பெரிய அருவி தீர்த்தம் இருக்கிறது. அழகர் கோயிலுக்குச் சிறிது வடக்கே போனால் இருக்கும் உத்தர நாராயண வாவி என்னும் தீர்த்ததினால் தான் கோயில் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும். சைத்ரோற் சவ காலத்தில் அழகர் மதுரைக்கும் வண்டியூருக்கும் போய்த் தங்கி இருக்கும் போது கூட இந்தத் தீர்த்தமே கொண்டு வரப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் அழகரை நீராட்டினால் அவர் உருவம் கருத்து விடுகிறது என்பதாலேயே இப்படி செய்யப்படுகிறது. இந்த விநோதத்தின் ரகசியம் இன்றுவரை ஒருவருக்கும் புலப்படவில்லை.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்து தடபுடலாக தயாராகிக் கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்து பற்றி மீனாட்சி சிவனிடம் பெருமையடித்துக் கொண்டிருந்தாள். “ உங்களோடு வந்திருப்பவர்களை உடனடியாய் சாப்பிடச் சொல்லுங்க. இங்கு பல்வேறு உணவுகள் கொட்டிக் கிடக்கின்றது. நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் அனைத்தும் வீணாகி விடுமே!ன்னு கிண்டலடிக்க..., இப்போது எங்கள் யாருக்கும் பசியில்லை. எனது கணங்களில் ஒன்றான குண்டோதரனுக்கு மட்டும் பசிக்கின்றதாம். அவனுக்கு மட்டும் விருந்து வைங்கள் என்று சுந்தரேஸ்வரர் சொல்லி இருக்கிறார்.
மலையளவு இருந்த விருந்து சாப்பாட்டை ஒரு நொடியில் விழுங்கி இன்னும் கொண்டா” வென வாய் பிளந்து நிற்கும் குண்டோதரனை கண்டு மீனாட்சி திக்கித்து நின்று, தன் தவறை உணர்ந்து சுந்தரேஸ்வரரிடம் தஞ்சம் புகுந்தாள். ஐயனும் அன்னப்பூரணியை அழைத்து அவன் பசியை தீர்க்கச் சொன்னார். அன்னை அளித்த உணவுகளை சாப்பிட்டு, ஏரி, குளம், வாய்க்காலில் இருந்த தண்ணீரை குடித்தும் அவன் தாகம் அடங்காமல் ஈசனிடம் முறையிட்டான்
உடனே, தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறாது. நீ அங்கு செல் என கட்டளையிட்டார். குண்டோதரனிடம்..., "" நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள் ,'' என்றார். இதுவே "வைகை' ஆனது. இப்படித்தான் வைகை உருவானது. நதிநீர் இணைப்பை அன்றே சிவப்பெருமான் துவக்கி வைத்துவிட்டார். நாம்தான் அதை தொடரவில்லை. காற்றுக்கு போட்டிப்போடும் வகையில் பாய்ந்து வந்ததால் இதற்கு வேகவதின்னும் பேர் உண்டு.வைகையை பாழ்படுத்தியதோடு அழகரையே செயற்கை ஊற்றில் இறக்கி விட்டு தீராத இன்னல்களுக்கு ஆளாகிவிட்டோம். கீழிருக்கும் மாமனிடமும், மருமகனிடமும் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வைகையில் நீர் கொணறச் செய்வோம்.
மதுரை மாடுத்தவனியிலிருந்தும் ,பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும்  ,நிறைய பேருந்துகள் அழகர் கோவிலுக்கு இயக்கப்படுகின்றன.அங்கிருந்து தேவசம் போர்டு வேனில் 10 ரூபாய் கட்டணமாக ஏற்றி செல்கிறார்கள் .நடைப்பயணமாகவும் செல்லலாம் ஆனால் குரங்குகள் தொல்லை அதிகமாக இருக்கும் .தனியே நடைபயணம் செல்வது அவ்வுளவு உசிதமல்ல.
மீண்டும் வேறு ஒரு பக்தி பதிவுகளோடே மீண்டும் சந்திக்கலாம் ..நன்றி