Wednesday, September 06, 2017

சீனாவில் ஒரு பர்வதமலை ...மௌனச்சாட்சிகள்

  நேரிலோ அல்லது சினிமா, ஆங்கில சேனல்களிலோ  நீங்கள் பார்த்த பாலங்களிலோ அல்லது   மலைப்பாதைகளிலோ இன்னிக்கு நாம பார்க்கப்போற பாதைதான் மிகவும் அபாயகரமானதாக இருக்கும்ன்னு நினைக்குறேன்.  பார்க்கும்போதே நமக்கு கைகால் உதறுது. ஹுன் - ஷான் மலைகளுக்கிடையில் ஆகாயத்தில், அதும் மரத்தாலான பாதையில் ஒருத்தர் பயணம் செஞ்சிருக்கார்ன்னா எத்தனை தில் வேணும்?!  இந்த ஆபத்தான மரப்பாதை பழைய  சீனாவின் தலைநகராக இருந்த ஷீ - .ஆன் நகரத்தின் அருகிலுள்ள ஹுன்- ஷான் மலையில் இருக்கு இந்த பாதை. சரியா சொல்லப்போனா,  அந்த நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது இதைப்பற்றி குறிப்பிடும்போது ஆகாயத்தில் ஒரு பாதைன்னே  சொல்றாங்க.
இந்த பாதையை பத்தி படிக்கும்போது   மிகைப்படுத்தி சொல்றாங்கன்னு நினைக்க தோணும்.  இந்த பாதையைவிட வேற  அபாயகரமான இடம் வேறெதுமில்லையா?!ன்னு நினைக்க தோணும். எனக்கும் அப்பிடிதான் தோணுச்சு. ஆனா,  இந்த பாதையை பத்தி    ஒரு ஆங்கில இணைய கட்டுரையை படித்தேன். பேட்ரிக் வாட்கின்ஸ் என்பவர் தன்னுடைய திகில் அனுபவத்தை அதில் எழுதியுள்ளார். என்னைப்போலவே  அவரும் இதெல்லாம் கட்டுக்கதைன்னுத்தான்  நினைச்சுக்கிட்டு போனாராம். பார்த்ததும் அப்படியே பயத்துல கைகால் எல்லாம் நடுநடுங்கி போனாராம்.  ஆகாயத்துல, ரெண்டு பலகையில, ஒத்தை சங்கிலிய பிடிச்சு நடந்தா எப்படி இருக்கும்?! மீண்டும் அதை கற்பனை செய்துக்கூட பார்க்கமுடியலன்னு பீதியில சொல்லுறாரு. அப்படி என்னதான் இருக்கும் இந்த மரப்பாதையில்?! தெரிஞ்சுக்கலாம். வாங்க! போய் பர்ர்க்கலாம்.....

நம்ம ஊர்  கொல்லிமலை, பர்வதமலை, வெள்ளியங்கிரி, சதுரகிரி மாதிரி சீனாவில் புண்ணிய யாத்திரைக்கென்றே புகழ்பெற்ற ஐந்து மலைகள் இருக்கு. அவை முறையே, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, இவை நான்கிற்கும் இடையில் அமைந்த நடுப்புறப்பகுதி என புவியியல் அமைப்புப்படி  அமைந்துள்ளது. அதில் மேற்கு பக்கமாக அமைந்துள்ள இந்த ஹுன் - ஷான் மலை மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்த மலை அவர்களின் முன்னோர்கள் காலத்திலிருந்து பாரம்பரியமாக வணங்கிவந்த புனித மலையாகும். சீன வரலாற்றில் பல்வேறு மன்னர்களின் வழிபாடுகளுக்கும், சடங்குகளுக்கும், தியாகங்களுக்கும்  இந்த மலை பேர்போனது. 
பேட்ரிக் வாட்கின்ஸ் என்ன சொல்றாருன்னா, அவர் ஒருதடவை சீனா போயிருக்கும்போது    இந்த மலையை பற்றி கேள்விப்பட்டாராம். மூணு பலகையை சேர்த்து உருவாக்கிய பாதையில் மூவாயிரம் அடிக்கு மேலே நடந்து செல்லணும்ன்னு படிச்சபோது,  அதுபத்தி, தெரிஞ்சுக்க கூகுள்ல தேடி இருக்கார். ஆனா அவருக்கு போதுமான அளவு படம் கிடைக்கல. அதனால தானே அங்க போய் சாகசம் செய்து நிறைய படம்  எடுத்து ஊரு உலகத்துக்கு தெரியப்படுத்தலாம்ன்னு போயிருக்கார். இனி, அவர் வாமொழியா கேட்டாதான் இந்த பாலத்தின் பிரம்மாண்டம் நமக்கு புரியும்.    அப்படி என்னதான் இருக்குன்னு அவரோட இணைய பக்கத்துல போய் அங்கிருக்கும் படங்களை பார்த்தா எனக்கே மூச்சு நின்னுட்டுது. ஸ்டூல் மேல ஏறவே பயப்படும் ஆளு நானு :-( என்னையெல்லாம் இங்க கொண்டு போய் விட்டா பார்த்ததுமே ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். ..
இதுல பயணிக்குறது உயிருக்கு ஆபத்தா இருந்தாலும், இந்த இடத்தை பற்றிய செய்திகள், போட்டோக்கள் பொதுமக்களுக்கு போய் சேரணும்கிற ஒரு வெறி இருந்ததால, அதுக்கு முன்னாடி என்பயமும், எனக்கிருக்கும் ஆபத்துகளும் எனக்கு சிறுசா தோணிச்சு.  சரி, உரலுக்குள்ளே தலையை விட்டாச்சு ,இனி உலக்கை தலையில விழுமேன்னு பயப்படமுடியுமா?! அந்த ஆண்டவன் மேலே பாரத்தை போட்டு அந்த மலைப்பாதை பயணம் தொடங்கும் தொடக்க பாதையில் நின்றுகொண்டிருந்தேன். தொடக்கமே ஒரு குகைப்போல இருக்கு. அங்கதான் நம்ம பைகள், மற்ற பொருட்களைலாம்  டோக்கன் போட்டு கொடுத்திட்டு போகணும். நான்  திகிலோடு  நின்னுகிட்டு இருக்கும்போது, ஒரு பெண் தைரியமா என்னை தாண்டி போனாங்க. சரி,  இவங்க உள்ளூர்காரங்க போல! இவங்க பின்னாடியே போனா ஈஸியா போய்டலாம்ன்னு அவங்க பின்னாடி நின்னேன்.  ஆனா, அந்த புள்ளையோ  நீங்க முதலில போங்கன்னு வழி விட்டுட்டாங்க, பொம்பளை புள்ளை முன்னாடி பயப்படக்கூடாதுன்னு கண்ணுல  பயத்தை காட்டாம கெத்தா,   இனி எங்கே எல்லாம் விழபோறமோன்னு மனசுக்குள்ளே திகிலோடு பயணத்தை தொடங்கினேன். 
 நானே தத்தக்க பித்தக்கான்னு நடந்து போய்க்கிட்டிருக்கும்போது எவனோ சாப்பிட்டுப்போட்ட ஒரு பர்கர்ல தெரியாம காலைவச்சி ஒரு புள்ள வழுக்கி விழுந்திட்டா.  சூப்பர்மேன் கணக்கா பாய்ஞ்சு விழப்போன அவ  கையை நான் பிடிக்க, அவ என்னையும் சேர்த்து இழுத்துக்கிட்டு  விழுந்தா. தமிழ் சினிமாவுல ஹீரோ ஹீரோயின் இப்படி விழும்போது பின்னாடி லலலலலன்னு பாடுவாங்க, வயலின் கதறும். அப்படி எதாவது என்னை சுத்தி கேக்குதான்னு காதை தீட்டிக்கிட்டு கேட்டேன். ம்க்கூம், நமக்கு அப்படிலாம் நல்லது நடந்துட்டா எப்படின்னு மனசை தேத்திக்கிட்டு   சுதாரிச்சு எழும்போது, வடிவேலு கணக்கா கெத்தை விடாம முறைச்சுக்கிட்டே எழுந்தா அந்த பொண்ணு கண்ணுல தெரிஞ்ச பீதிய பார்த்து நான் அப்படியே ஷாக்காகிட்டேன்.  சரி முதல் கோணல் முற்றும் கோணல்ன்னு சொல்லுவாங்களே!  பாதையின் ஆரம்பத்தில விழுந்தால தப்பிச்சிட்டோம். பாதியில விழுந்தா நேரா பரலோகம்தான்னு நினைச்சு,  முதல் வேலையா உடல் எடையை தாங்கக்கூடிய அளவு உள்ள ஒரு கனமான பெல்ட் எடுத்து, அதன் நுனியில் உள்ள கொக்கி மூலம்,  பாதையில் இருக்கும் சங்கிலியில் பிணைத்து,  அதை எடுத்து உடலோடு கட்டிகிட்டேன்..
இந்த மாதிரி ஆகாயத்து பாதைல இருக்குற போட்டோக்கள் ஏன் நம் பார்வைக்கு வரலைன்ற நம் கேள்விக்கு அவனவன் உயிரை பிடிச்சுக்கிட்டு நடக்கவே கஷ்டப்படும்போது யார் போட்டோ எடுப்பாங்க??!! .அந்த பழையகாலத்து மரக்கட்டைகள் எந்தளவு உறுதியா இருக்கும்ன்னு  நினைப்பே  அதுல நடக்கும்போது ஹார்ட் பீட் எகிறவைக்குது. ஒரு செங்குத்து மலையின் குறுக்கே ஆகாயத்தில் துருப்பிடித்த சங்கிலியின் மீது நடக்குறதை யோசிச்சு பாருங்க... நான் கையில் இருக்கும் பெல்ட்டை பிடிச்சுக்கிட்டு மெதுவாக  நடப்பது மரணத்தின் விளிம்பில் இருந்தாலும், அந்த வெயிலிலும், மழையிலும் தாக்குப்பிடிக்கும் பழைய காலத்து கட்டைகளும், துருப்பிடித்த சங்கிலியும் நம்மளை பாதுகாக்கும் என்ற நம்பிக்கைதான் நம்மை மேலும் ,மேலும் முன்னேறி செல்ல தூண்டும். 
இங்கிருந்து பார்க்கும் பொழுது ,சூரியன் மலை உச்சியில் இருக்கிறதோ என்று எண்ணுமளவு இந்த மலை ஆகாயத்தை தொட்டு நிற்குது.  நான் இந்த மலைக்கு வருவதற்கு வழியில் சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. அந்த ஆகாய பாதையில் கவனமாகவும், அதேநேரம் வேகமாகவும் போகனும். ஏன்னா சூரியன் மறைந்தபிறகு 2,160மீ உயரமுள்ள அந்த மலையில் நடப்பது தற்கொலைக்கு சமமாகும். 
சில இடங்களில் மரபாலங்கள் இல்லாமல் வெறும் சங்கியிலியின் மேல் கம்பிகளின் துணைக்கொண்டு நடந்து கடக்கவேண்டும். அந்த அனுபவம் பயங்கர திகிலானது .
சில இடங்களில் அந்த சங்கிலிகள் கூட இல்லாமல் பாறைகளில் செலுத்தப்பட்ட ஓட்டைகளில் கவனமாக கால்களை வைத்து அடிமேல் அடி எடுத்து கடக்கவேண்டும். நான் அதில் நடந்துக்கிட்டே லேசா  திரும்பி பார்க்கும்போது ஒரு இளம்பெண் திகிலோடு முன்னேறிக்கொண்டு இருந்தார்.
ஒருவழியா ஆமைபோல நகர்ந்து மலை உச்சிக்கே வந்துவிட்டேன். மலைகளில் இருந்து பார்க்கும்போது சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். என் பின்னால்   ஒரு அழகான இளம் பெண் மலையேறி  வந்துகொண்டிருந்தார். பார்க்க கண்ண்க்கு குளிர்ச்சியா இருந்ததால சிரமம் தெரியல. 
அந்த வழியாக வருவோரின் சிலரது முகத்தில் இனி இந்தமலைப்பக்கமே தல வச்சுக்கூட படுக்கக்கூடாதுன்ற எண்ணம் கண்டிப்பா இருந்திருக்கும். ஏன்னா, எனக்கும் அந்த மாதிரி ஒரு எண்ணம் இருந்துச்சு. 
அதே பாதையில் சிலர் சந்தோஷமாகவும், தங்களது பெண்தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டு கம்பிகளின்மேல் கவனமாக கால்வைத்து நடந்தனர்.  அதையெல்லாம் பார்த்துகொண்டுவந்த என் கண்கள், திடீரென ஓரிடத்தில் அகல   திறந்து விரிந்தது. அங்க ஒரு பெண் இந்திய யோகிகள் செய்வதுபோல் ஆகாயத்தில் ஒற்றை காலுடன் நிற்பது போன்று கும்பிட்டு நின்றார். இது ஒரு புனிதமான மலையென்பதால் அவரும் பக்தி நிலையோடு வந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன் .
ஒருவழியாக ஆமைபோல் நகர்ந்து மலைஉச்சிக்கே வந்துவிட்டேன். மலைகளில் இருந்து பார்க்கும்போது ,சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். 
என்னதான் இடுப்பில் பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தாலும்,  அந்த பள்ளத்தை பார்க்கும்பொழுது கால்கள் கிடுகிடுவென நடுங்கின .ஒருவழியாக மலையின் சமதள பாதைக்கு வந்துவிட்டேன்ன்ற நினைப்பே போன உயிரை திரும்ப கொண்டு வந்தது. 
சூரியனும் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். பாதையும் ஓரளவு சமதள பாதையாக இருந்தது. உடலை இணைக்கும் பெல்ட் தேவைப்படல. அங்கே தூரத்தில் ஒரு கோவில் தென்பட்டது .. 
சிவப்பு ரிப்பன்களால் கட்டப்பட்ட திண்டுக்கல் பூட்டுகள் போல இந்த மலையின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. என்னுடைய இந்தியப்பயணத்தின் போது ஒருமுறை தமிழ்நாட்டுக்கு சென்றிந்தபோது, கோயம்பேட்டுக்கு அருகிலிருக்கும் திருவேற்காடு அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்க,  கோவில் கம்பிகளில் நிறைய பூட்டுகள் தொங்கவிடப்பட்டு இருந்தன. அங்கிருப்பவர்களிடம் கேட்டபோது , மாமியார் ஓவரா பேசினாலோ  அல்லது பக்கத்துவீட்டுக்காரங்க அடிக்கடி நம்மகிட்ட சண்டை போட்டாலோ அவங்க வாயை அடைப்பதற்கு இங்கு வந்து பூட்டு காணிக்கை செய்து,ம் கம்பிகளில்  பூட்டிட்டு போவாங்களாம். வித்தியாசமா இருக்கேன்னு பார்க்கும்போது ,ஒரு வயசான அம்மா அங்கே ,பூட்டு போட்டுகொண்டு இருந்தார்.  இந்தவயதிலும் அவருக்கு மாமியார் தொல்லை இருக்குமான்னு ஆச்சர்யப்பட்டுக்கிட்டே என்கூட வந்த  கைடுக்கிட்ட அவர் ஏன் பூட்டை கோவில்ல மாட்டுறார்ன்னு கேட்க சொன்னேன். அவருடைய மருமகள் ரொம்ப வாய் பேசுறாங்களாம்.  அதுக்காக பூட்டுப்போட வந்தங்களாம்னு சொன்னார். எனக்கு ஆச்சர்யமாகவும், அதேசமயம் அந்த அம்மாவின் செயல் சிரிப்பை வரவைப்பதாக இருந்தாலும் , இதையும் தாண்டி நம்பிக்கை என்ற பூட்டு வலுவானது என்பதை அந்த இந்திய பயணத்தில் நான் கண்டுகொண்டேன். 
அந்த பூட்டு சின்னம் அன்பை வெளிக்காட்டும் சின்னமாகவே அவர்களது வழக்கில் இருந்துள்ளது. தனது காதலன், காதலி, குழந்தைகள், அம்மா,அப்பா இவர்களுக்கு இடையே அன்பு மலரவும், அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கவும் செய்யப்படுகிற  வேண்டுகோளின் அடையாளம்தான் இந்த சிவப்பு பிரார்த்தனை ரிப்பன். இது பூட்டுகளோடு சேர்த்து கட்டப்படும்போது  அவர்களுடைய பிரார்த்தனை இறைவனிடத்தில் வைக்கப்படுறது என்பது அவர்களுடைய நம்பிக்கை.  மலை உச்சியை அடைந்தபோது இருட்டிவிட்டதால் நான் அங்கேயே தூங்கிவிட்டேன். வானம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அந்த இறைவனின் கைவண்ணத்தில் எல்லாமே அழகுதான் என எண்ணிக்கொண்டு தங்குவதற்கு இடம் இருக்கிறதா என தேடினேன். அங்கே  2 அறைகள் கொண்ட ஒரு ஹோட்டல் இருந்தது. விலையும் மிக அதிகம். நான் மலையேறி வந்ததால் பசியோடு இருந்தேன். அங்கு சுவையான நூடுல்ஸ் கிடைத்தது. அங்கிருக்கும் படுக்கைகள் எல்லாம் அழுக்காக இருந்தன.  கடுங்குளிரில் அதையெல்லாம் பார்க்கமுடியாது என எண்ணி உறங்க சென்றேன்.
இவ்வளவு கஷ்டத்திலும் இரவில் அந்த மலையின்மேல் தங்குவது நல்லது என எல்லோரிடமும் நான் சொல்வேன். காரணம், காலையில் சூரிய உதயம் மலைகளுக்கு மேலே இருந்து காண்பது அவ்வளவு அழகு. அதைஅப்படியே என் காமிராவுக்குள் பிடித்துவிட்டேன் உங்களுக்காக ...
சூரியனும் மெல்ல மெல்ல பிரபஞ்சத்தில் தன்னுடைய இளங்கதிர்களை பரவச்செய்து பனிமலைகளுக்கிடையில் மஞ்சள் பழமாய் மேலெழுந்தான். அங்கு மலையின்மேலே ஒரு அழகான கோவில் இருக்கிறது .
கற்களாலும், மரங்களினாலும் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிற ஒரு வழிபட்டுதலம். இயற்கைச்சூழலோடு அழகாக காட்சிதருகிறது. காலையில் சூரிய  உதயத்திற்கு பிறகு வந்த முதல் பயணி நானாகத்தான் இருந்திருப்பேன் என நினைக்கிறேன்.  கோவில் மிக அழகாக இருந்தது .
புத்த மதத்தை பின்பற்றும் சீன மக்கள்,  இங்கு தியான நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு பௌத்த தெய்வத்தை வந்து வணங்கி செல்கின்றனர். 
 .
குகையினுள் இருக்கும் இந்த தெய்வத்தை இங்குள்ள மக்கள் வந்து வணங்கி செல்கின்றனர்.  காலையில் மீண்டும் பக்தர்கள் வழிப்பட வருவதால் திரும்பி செல்லுவதற்கு கஷ்டமாக இருக்கலாம். நானும் மலையில் இருந்து மெல்ல  மெல்ல கீழே இறங்கத்தொடங்கினேன் . 
திரும்பி வரும் வழியில் சிலர் மும்மரமாக போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர். மலையேறுபவர்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை வைத்துக்கொள்வது நலம்.  ஏனெனில் அங்கே எதுவும் கிடைக்காது. அபாயகரமான மலையாக இருந்ததாலும் எனது பயணம் திரில்லாகவும் இனிமையாகவும் இருந்தது என  பேட்ரிக் வாட்கின்ஸ் தனது கட்டுரையில் சொல்லி முடிக்கிறார்.   நம்ம ஊர்ல இருக்கும் கொல்லிமலை, சதுரகிரி, பர்வதமலைக்கே நம்மாளுங்களுக்கு நாக்கு தள்ளுதே! இதுமாதிரியான இடங்களுக்கு போனால்?!

தமிழ்மணம் ஓட்டு பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471116

நன்றியுடன்,
ராஜி

Tuesday, September 05, 2017

நாம் அனைவரும் ஆசிரியர்களே!

ஆசிரியர்ன்னா  புனிதம்ன்னு அர்த்தம். வருங்கால சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்குவது ஆசிரியர்கள்தான்.  அதனாலதான் ஆசிரியர்களை ஆண்டவனுக்கு சமமா வச்சிருக்கோம். .  ஒருசில இழி ஜென்மங்களால் அந்த ஆசிரிர் தொழிலுக்கே இழுக்குன்னாலும் குழந்தையின்மீது பெற்றோர்கள் காட்டும் அக்கறையைப்போலவே, தானும்,    அக்கறை காட்டும் ஆசிரியர்கள் இன்னிக்கும் நம்மோடு இருக்காங்க. பள்ளிக்கூடத்து ஆசிரியர்கள் மட்டுமில்லாம நம்மோடவே இருக்கவுங்க, போனவங்களாலதான் வாழ்க்கைன்னா என்னன்னு நாம பாடத்தை கத்துக்குறோம்.  என் வாழ்க்கைல வந்த சில ஆசிரியர்களை பத்தி இன்னிக்கு பார்ப்போம். 

”ராமசாமி ஐயா”
தத்தக்க பித்தக்கன்னு நடக்கும் வயசில்,  பக்கத்து வீட்டு அண்ணாவோடு மஞ்சப்பையில், கைக்கு கிடைத்த குமுதம், கல்யாண பத்திரிகைகளை போட்டுக்கிட்டு போன என்னை ச்ச்சீ போன்னு விரட்டி அடிக்காம, வா தாயி!!ன்னு வகுப்புக்குள்ள கூட்டிக்கிட்டு போனவர்.


 “அப்பா”
பள்ளியில் சேர்த்ததும் தன் கடமை முடிந்தது என எண்ணாமல், பக்கத்தில் அமர்ந்து எழுத்துக்களையும், எண்களையும் கற்று தந்ததோடு விளையாட்டுக்கு கூட பொய் சொல்ல கூடாது, வழ வழன்னு குழைய கூடாது,  (மன்னிச்சு அப்பா! உன் பேச்சை மீறிட்டேன், நான் பிளாக்கராகிட்டேன்!!)

”அம்மா”
எல்லாருக்குமே அப்பா தைரியத்தையும், அம்மா அன்பையும் சொல்லி தருவாங்க. ஆனா, வித்தியாசமா பெண்ணாய் பொறந்ததால அழனும்ன்னு அவசியமில்லை. தைரியமா இரு. எதிரியே வீடு தேடி வந்தாலும் அவமானப்படுத்தக்கூடாது,யாரையும் பசியோடு இருக்க விடக்கூடாது ன்னு கற்று தந்தவள்.  வைராக்கியம், ரோஷத்துக்கு சொந்தக்காரி. ஒரு ஆணால் வரும் தைரியத்தை விட, ஒரு பெண்ணால் வரும் தைரியத்துக்கு மதிப்பதிகம்ன்னு அடிக்கடி உணர வைப்பவள்.. 

”கமலா டீச்சர்”
அன்னையும், பிதாவும் மட்டுமில்ல நானும் கத்து தருவேன்ன்னு ரெண்டும் ரெண்டும் நாலுன்னு கைப்பிடிச்சு கத்து தந்தவள்.

“மூர்த்தி சார்”
உயிர் மெய் எழுத்துக்கள் மட்டுமில்லை, தேமாவும், புளிமாவும் சேர்ந்ததுதான் தமிழ்ன்னு சொல்லி தந்து, எதாவது தப்பா சொன்னால், காதை திருகி அப்புறம் பச்சை பச்சையாய் திட்டிப்புடுவேன்னு பயமுறித்தி வெண்டைக்காய், மாங்காய், சுண்டைக்கா, முருங்கைக்காய், பீர்க்கங்காய்ன்னு சொல்லி சிரிக்க வைத்து, தப்பு தப்பா எழுதிய என்னைக்கூட தமிழில் மாணவர் மன்றத்தேர்வில் முதல் வகுப்பில் தேற வைத்தவர்.

”கணக்கு நாகரத்தினம் சார்”:
ஜியாமெண்ட்ரி பாக்சில் இருக்கும் காம்பஸ் வம்பு சண்டைக்கு வரும் கதிரேசனை குத்துறதுக்கு மட்டுமே யூஸ்ன்னு நினச்சுக்கிட்டு இருந்த என்னை, மகளாய் நினைத்து கிஸான் ஜாம் கொடுத்து, ஜியாமெண்ட்ரி வரைய கத்து கொடுத்து 81 மார்க் எடுக்க வைத்தவர்.


“வடிவேலு சார்”
9 வகுப்பில் அடி எடுத்து வைத்த முதல் நாள்..., கிளாசுக்குள் நுழைந்தவர், எங்கள் பேரை வரிசையா சொல்லிட்டு வர சொன்னார். என் பேரை சொல்லிட்டு அமைதியா உக்காந்திருந்தா பிரச்சனையே வந்திருக்காது.  கடைசி பெஞ்ச் அரட்டை கேர்ள்ன்னு பேரெடுத்ததை நிரூபிக்கனுமேன்னு எங்க பேரையே கேட்டிட்டு இருக்கீங்களே! உங்க பேர் என்னன்னு கேட்டதுக்கு..,இங்க வா! இதோ என் பாக்கட்டுல இருக்குற பேட்ச்ல என் பேர் இருக்கு படின்னார். vadiveluன்னு இருந்துச்சு, என் நாக்குல இருந்த சனி பகவான் கதகளி ஆட வாடிவாலுன்னு படிச்சு தொலைச்சேன், அன்னில இருந்து ரொம்ப ரொம்ப டிரை பண்ணி ஆங்கிலத்தை எழுத்து கூட்டி படிக்க வச்ச புண்ணியவான். அதுக்கு அவர் எடுத்துக்கிட்ட காலம் மூணு வருசம்.

“மீனாட்சி டீச்சர்”
தமிழ் -தகராறு, ஆங்கிலம்- ஆகாது, புவியியல் -புரியாது, வரலாறு- வராது, கணக்கு - கசக்கும்ன்னு ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு புது அகராதி போட்டு வச்சிருந்த என்னை நம்பி!!  அப்பா 11 வகுப்பில் ஃபர்ஸ்ட் க்ரூப்பில் கொண்டு போய் போட அங்க விலங்கியல், இயற்பியல், வேதியியல்ன்னு விதம், விதமா, கலர் கலரா பூதங்கள் வந்து மிரட்டுச்சு. அதுலயும் விலங்கியல் பாடம் இருக்கே! ஐயோ! நைட் கனவுல கரப்பான் மூச்சி மல்லாந்து படுத்து வயித்தை காட்டும், சாப்பிட போனால் தவளை வந்து சாப்பாட்டு தட்டுல டான்ஸ் ஆடும். அட, போனா போகுது இதெல்லாம் மறக்கலாம்ன்னு டிவி பொட்டி முன்னாடி உக்காந்தா மண்புழு நெளியும், பிராக்டிக்கல் எக்சாம் காலை வரை கூட ரெக்கார்ட் முடிக்காம தில்லா நின்ன என்னை, விட்டா மறுபடியும் இதே கிளாசுல உக்காந்து நம்ம உயிரை வாங்குவான்னு முழு மார்க் போட்டு 12வது கிளாசோடு மூட்டை முடிச்சு கட்டி அனுப்பியவர்.

ரவி சார்:
படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு எம்ப்ராய்டரி, பொம்மைகள், வொயர் கூட பின்ன கத்து கொடுத்தவர்,ஒரே வாரிசானதால் பொத்தி பொத்தி வளர்த்ததால், வேகமா நடக்கவே பயப்படும் என்னை விளையாட்டுக்களில் கலந்துக்க வைத்தவர்.

நட்புகள்:
பள்ளிக்கூடத்துல பாடம் மட்டுமல்ல, குறும்புத்தனம், சண்டை, அழுகை, சமாதானம், பகிர்தலும் கூட கத்துக்கலாம்ன்னு கத்துக்கொடுத்த மாலதி, சுஜாதா, செல்வி, தெய்வநாயகி, நசீமா, ஜெயலட்சுமி, உமா, கமலகண்ணன், வில்வநாதன், அருணகிரி, கார்த்தி....,

லவ்ஸ்:
பதின்ம வயதில் பாடமும், நட்பும், குறும்புத்தனமும் மட்டுமல்ல, காதலும் கூட வரும்ன்னு சொல்லி தந்த செல்ல இம்சை. 

வூட்டுக்காரர்:
ஏழுக்கழுதை வயசாச்சு! இன்னும் பொறுப்பில்லாம இருக்காளேன்னு பொறுப்பா வாழ்க்கை பாடத்தை கத்து தரும் தியாகி!!

மூத்த பெண்: 
தாய்மையை கற்று தந்தவள், கூடவே, இலவச இணைப்பாக கம்ப்யூட்டரையும்...,

இளைய மகள்: 
அச்சச்சோ! ரெண்டாவதும் பெண்ணாகிடுச்சே!ன்னு ஒதுக்கிய சொந்தங்களையும், அதைலாம் எதிர்த்து போராட வேண்டி இருக்கும்ன்னு உலகத்தை பற்றி கற்று கொடுக்க ஆரம்பித்தவள்.

கடைக்குட்டி:
தொலைத்த என் குழந்தை தனத்தையும், குறும்புத் தனத்தையும் மீண்டும் நினைவு படுத்திய என் ஆசான்.

பதிவர்கள்:
எல்லாவற்றையும் கற்று தர ஆளிருந்த எனக்கு சகோதர பாசத்தை காட்ட ஆளில்லாமல் தவித்த காலங்களில் சகோதர பாசத்தை அறிய வைத்தவர்கள்.

முகம் அறியாத ஆசான்கள்:
பிள்ளை பேறு முடிந்த பதினைந்தாவது நாளே ரெண்டாவது மாடிக்கு கற்களை சுமந்து உழைப்பை கற்று தந்த கட்டிட தொழிலாளி.., 

அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நேரத்திலும் கவனக்குறைவாய் தந்த அதிகமான நூறு ரூபாயை திருப்பி தந்த பால்கார ஐயா! 

கையில் காசில்லாம போய் ஒரு முழம் பூ கேட்டு பர்சை வீட்டுலயே வச்சுட்டு வந்ததை உணர்ந்து, கையில் வாங்கிய பூவை, வேணாம் பாட்டின்னு திருப்பி தர, வெள்ளிக்கிழமை அதுமா பூவை திருப்பி தராதம்மா, அப்பாலிக்கா வரும்போது காசு கொடுன்னு நம்பி கடன் கொடுத்ததள்ளாத வயதிலும் பூ விற்கும் பாட்டி.

கடையை காலி பண்ணிட்டு, கடைசியாய் இருந்த நாலு இட்டிலியை தட்டில் வைத்து சாப்பிட, அமரும்போது அக்கா வீட்டுக்கு விருந்தாளி ஒருத்தர் வந்துட்டாங்க. அவங்க பையன் பசிக்கு அழுகுறான். வீட்டில் மாவு எதுமில்ல. டிஃபன் இருக்கான்னு கேக்க, 11 மணி ஆகியும், சாப்பிடாத போதும், எச்சில் விழுங்கியப் படியே தன் சாப்பாட்டை தரும் ஹோட்டல் கார அக்கா!!

இப்படி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், வாழ்க்கை பாடத்தை கற்று தரும் அனைத்து விதமான ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.



அ, ஆ, இ, ஈ..... 1,2,3,.... A,B,C,D..... கத்துக்கொடுக்குறவங்க மட்டும் ஆசிரியர்கள் இல்ல. நாம சந்திக்கும் அத்தனை பேரும் நமக்கு ஆசிரியர்கள்தான். அன்பு, கோவம், பழி, துரோகம், பாசம், இரக்கம், பக்தின்னு அவரவருக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு விசயத்தை கத்துக்கொடுத்துட்டுதான் போறாங்க.  அதனால, நமக்கே தெரியாம நமக்கு வாழ்க்கை பாடத்தை கத்து தரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துகள்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471043

நன்றியுடன்,
ராஜி.

Monday, September 04, 2017

கடவுளே மனிதனிடம் தானம் கேட்ட கதை - ஓணம் பண்டிகை



தமிழ்நாட்டுக்கு உழவர் திருவிழா, அறுவடை திருவிழான்னு சொல்ற பொங்கல் திருவிழா மாதிரி மலையாளத்தவருக்கு  ஓணம் பண்டிகை. கடவுளின் தேசம்ன்னு சொல்லப்படும் கேரளா மக்களின் முக்கிய பண்டிகைகளில் இது முதன்மையானது.  பொதுவா , கடவுள்கிட்டதான் எல்லாரும் நமக்கு வேணுங்குறதை கேட்போம். ஆனா, கடவுளே மனிதன்கிட்ட தனக்கு வேணுங்குறதை கேட்டதன் நினைவாதான் இந்த பண்டிகை கொண்டாடப்படுது. அது என்ன கதைன்னு தெரிஞ்சுக்கலாம்... 


விஷ்ணு அவதரித்ததும், விஷ்ணுவின் அம்சமான வாமணன் அவதரித்ததும் இந்நாளில்தான்னு சங்கக்கால ஏடுகள் சொல்லுது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பண்டிகை கொண்டாடப்படுத்தா கிபி 861 ம் தேதியிட்ட செப்புத்தகடு சொல்லுது.  இந்த பண்டிகை சாதி, மத, பேதமின்றி கொண்டாடப்படுது.  கேரள மக்கள் மட்டுமின்றி கன்யாக்குமரி, கோவை, மார்த்தாண்டம் மாதிரியான கேரள, தமிழக எல்லையோரத்து மக்களும் இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். இப்ப, சென்னையிலும், மற்ற ஊர்களிலும் ( சில அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளிலும்) கொண்டாடப்படுது. 


கொல்லவர்ஷம்ன்னு சொல்லுற மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் அஸ்தம் தொடங்கி திருவோணம் வரை இப்பண்டிகை கொண்டாடப்படுது.  விஷ்ணு பகவான் அவதரித்ததால் திருவோணம் நட்சத்திரம் விஷ்ணுவுக்கு உகந்தது. இந்நாளில் இவரை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிடைக்கும்,  பேரோடும், புகழோடும் வாழ்வர்.



ஒருமுறை சிவன் கோவிலில் இருந்த விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. அந்த வழியே சென்ற எலியின் வால் பட்டு விளக்கின் திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமாய் எரிந்தது, எலி அறியாமல் செய்த இந்த புண்ணிய காரியத்துக்காக மறுபிறவியில் அரசனாய் பிறந்தது. அந்த அரசன் தான் இன்றைய கேரளா உள்ளிட்ட மலையாள தேசத்தை ஆண்டு வந்த , மகாபலி சக்ரவர்த்தி. 


மகாபலி சக்ரவர்த்தி தன் நாட்டு மக்கள்மீது மிகுந்த அன்பு கொண்டு, அசுர குருவான சுக்ராச்சாரியார்  வழிக்காட்டுதலின்படி  நாட்டை மிகச்சிறப்பாய் ஆண்டு வந்தான். சிறந்த கொடையாளியாகவும் இருந்தான்.   அவனின் ஆட்சியில் மக்கள்  மகிழ்ச்சியோடு இருந்தனர். இதனால், மகாபலி சக்ரவர்த்திக்கு லேசாய் தலைக்கணம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. தன்னால் தானமாய் கொடுக்க முடியாதது எதுமில்லை என அகங்காரம் கொண்டார். இதனை அறிந்த மகாவிஷ்ணு  வாமணன் என்ற சிறுவனாய் அவதரித்து மகாபலி அரண்மனை நோக்கி சென்றார். அந்த நேரத்தில் மகாபலி சக்ரவர்த்தி யாகம் ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். யாகத்தின் ஒருபகுதியாக மக்கள் விரும்பியவற்றை அவர்கள்  விருப்பப்படி தானதர்மங்களை செய்து வந்தார். 


வந்திருப்பது அந்த மகாவிஷ்ணு என்பதை  சுக்ராச்சாரியார் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்துகொண்டார். மகாபலியிடம் சென்று வந்திருப்பது அந்த மாயவன். அதனால, எந்த வாக்கையும் கொடுத்துவிடாதே! அதனால,  உன் ராஜ்ஜியம் உட்பட உன் உயிருக்கேகூட ஆபத்தாக முடியும் என எச்சரித்தார். 


குருவே! எல்லாரும் கடவுளிடம் வரம் கேட்பர். ஆனால், கடவுளே என்னிடம் வரம் கேட்பதென்றால் எத்தனை சிறந்த பாக்கியம்!!  அதனை இழக்க நான் விரும்பவில்லை எனக்கூறி வாமணனை வரவேற்க சென்றான் மகாபலி. வாமணனை வரவேற்று, தாங்கள் வேண்டி வந்தது யாதென வணங்கி நின்றான். எனக்கு மூன்றே மூன்றடி நிலம் வேண்டுமென வாமணன்  கூறினான். சிறுவன்தானே!  மூன்றடி நிலம் எவ்வளவு இருந்திடுமென்ற அலட்சியத்தோடு அப்படியே ஆகட்டுமென வாக்களித்தார் மகாபலி. ம்ஹூம். நீர் விட்டு வாக்களிக்க வேண்டுமென வாமணன் பிடிவாதம் பிடித்தான். 



இப்போதும் மனம் கேட்காத சுக்ராச்சாரியார், மகாபலியை தடுத்தார். இதை எதையும் காதில் வார்க்காத மகாபலி நீரூற்ற கமண்டலத்தை எடுத்தார். சுக்ராச்சாரியார் வண்டாய் மாறி கமண்டலத்தின் நீர் வரும் வாயிலை அடைத்துக்கொண்டார்.  எத்தனை முயன்றும் நீர் வெளிவரவில்லை.  சுக்ராச்சாரியாரின் செயலை உணர்ந்த வாமணன் அருகிலிருந்த  தர்ப்பைப்புல்லை கொண்டு வாயிலை குத்த சுக்ராச்சாரியாரின் பார்வை பறிபோனதோடு நீரும் வந்தது. மகாபலியும் வாமணன் கேட்ட வரத்தை தந்தார். 


உடனே, வானுக்கும், மண்ணுக்குமாய் உயர்ந்து நின்ற வாமணன், ஓரடியில் நிலத்தையும், இரண்டாமடியில் ஆகாயத்தையும் அளந்து மூன்றாவது அடிக்கு என்ன செய்யவென மகாபலியிடம் கேட்டான். ஐயனே! மூன்றாம் அடியை என் தலையில் வையுங்கள் எனக்கூறி தன் தலையைக்காட்டி பணிந்து நின்றார். வாமணனும் மூன்றாவது அடியை மகாபலி தலையில்  வைக்க,  மகாபலி பாதாளலோகம் சென்றார்.  அங்கிருந்தபடியே, ஐயனே! எந்நாட்டு மக்களை பிரிந்து என்னால் இருக்க இயலாது அதனால், வருடம் ஒருமுறை எம்மக்களை சந்திக்க வரம் கொடுங்கள் என வேண்டி நிற்க விஷ்ணுவும் அவ்வாறே அருளி மகாபலியை ஆட்கொண்டார். 

மகாபலி சக்ரவத்தி வருடமொரு முறை வரும் நாளையே ஓணம் பண்டிகை என கேரள மக்கள் கொண்டாடுகின்றனர். புத்தம் புது ஆடை, அணிகலன் அணிந்து, வீட்டு அழகூட்டி, வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, சுவையான உணவு உண்டு தாங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதை மகாபலி சக்ரவர்த்திக்கு உணர்த்துகின்றனர்.  படகு போட்டி, மேள , தாளம் உட்பட பல கலை நிகழ்ச்சிகளோடு இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். 

அத்தப்பூ கோலம்...

ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதனால் ஓணத்தையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுறாங்க. ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வரனும். பூக்கோலத்தில் அதைதான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவார்கள். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் இந்த அத்தப்பூக் கோலம் அழகுபடுத்தப்படும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூக்களுக்கு முதலிடம் கொடுப்பாங்க. பத்தாம் நாள் கோலம் பத்துவகையான பூக்கள் இருக்குறதால மிகப்பெரியதாய் இருக்கும். 

ஓண சத்யா....


கானம் விற்றாவது ஓணம் உண்’ என்ற பழமொழி ஓணம் பண்டிகையை முன்னிட்டு சமைக்கப்படும் அறுசுவை உணவான  ‘ஓண சத்யா’வின் சிறப்பை உணர்த்துது. இதில் அறுசுவையில் ஒன்றானா கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகை உணவு தயாரிக்கப்படும். புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர்நிறைய சேர்த்துக்குவர்.  வகை வகையாக செய்யப்படும் உணவு செரிமானம் ஆவதற்காகத்தான் உணவில் இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி போன்றவை சேர்க்கப்படுது.

புலிக்களி ஆட்டம்


மலையாளத்தில் ‘களி’ ன்னா நடனம்ன்னு பொருள். ‘புலிக்களி’ அல்லது ‘கடுவக்களி’ ன்னு சொல்லப்படுற இந்த  நடனம் ஓணம் பண்டிகையின் 4–ம் நாள் விழாவில் நடைபெறும். இந்த நாளில் சிவப்பு, கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தால புலி வேஷமிட்டு நடனம் ஆடி ஊர்வலமாக வருவார்கள். புலிக்களி நடனம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்பவரால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.

கசவு, நேரியல்ன்னு சொல்லப்படுற வெண்ணிறமும், ஜரிகையும் சேர்ந்த புடவை, வேட்டியையையே இந்நாளில் அணிகின்றனர். வயதான பெண்கள் முண்டுன்னு சொல்லப்படுற இரண்டு துண்டுகளால் ஆன புடவையை கட்டி கொள்வர்.  ஓணம்  பண்டிகையன்று,  வயது வித்தியாசமில்லாம அனைத்து பெண்களும் "கைகொட்டுக்களி”ன்ற நடனத்தை ஆடுவர். 



படகுபோட்டி, பல்வேறு கலைநிகழ்ச்சிகள்ன்னு ஒன்பது நாட்கள் கொண்டாட்டமாய் போகும் இத்திருவிழாவை இன்னும் சிறப்பாக மாற்றுவது யானைத் திருவிழாவால் தான். பண்டிகை என்றாலே பண்டங்களை ஈகை செய்வது தானே! கேரள மக்கள், தங்கள் சக மனிதர்கள் மட்டுமல்லாமல், சக உயிர்களுக்கும் ஈகை புரிந்து கொண்டாடும் திருவிழா இந்த ஓணம்.  யானைகளுக்கு பொன், மணிகளாலான தங்க கவசம் இட்டு, பூத்தோரணங்களால் அலங்கரித்து யானைகளுக்கு என தயாரித்த சிறப்பு உணவுகளை அளித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். பார்க்கும் அனைவரும் பரவசமாய் கும்மாளமிட்டபடி தொடருவர். 


கோவில் முழுவதும் சுற்றிவரும் யானை, மகாபலி மண்டபத்தில் சிறிது நேரம் நிற்கும். ஸ்ரீவாமனமூர்த்தி, மகாபலியை பாதாள லோகத்துக்கு திரும்ப அனுப்புவதற்கான அவகாசம்.  பத்து நாட்களின் விருந்து,கலை நிகழ்ச்சிகள், உணவு படையல், போட்டி என அனைத்தையும் கண்டுகளித்து, தாம் விட்டு வந்த தம் நாட்டு மக்கள் எல்லா செல்வங்களுடனும், வளத்துடனும் மகிழ்ச்சியாக நிம்மதியாகவே வாழ்கின்றனர் என்கிற மனநிறைவுடன் மகாபலி மன்னர் பாதாள லோகத்திற்கு திரும்பி செல்வதாய் ஐதீகம். 




மகாபலி மன்னன் எத்தனை உயர்ந்த குணமிருந்தாலும் ஆணவம், அகங்காரம் கொண்டதால் அழிந்துபோனான். அதனால, ஆணவம், அகங்காரம், ஈகோவை ஒழித்து நலமாய் வாழ்வோம்....


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்,’
ராஜி.

Friday, September 01, 2017

குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் ஒன்றா?!


குரு பார்க்க கோடி நன்மை, குருவை போல கொடுப்பார் யாருமில்லை....ன்னு சொல்ல கேள்விப்பட்டிருப்போம். கோவிந்தன் கைவிட்டால்கூட பிழைத்து கொள்ளலாம். ஆனா, குரு கைவிட்டவன் பிழைக்க வழியே இல்லைன்னு கபீர்தாசர்கூட சொல்லி இருக்கார்.  ’குரு’ன்னா இருட்டைப் போக்குபவர், கனமானவர்ன்னு பொருள். குருபகவான் நவக்கிரகங்களில் ஒருவர். இவருக்கு தாரை என்ற மனைவியும், எமகண்டன், கசன் என்ற இரண்டு மகன்களும் இவருக்குண்டு. இவர் நான்கு வேதங்களையும், அறுபத்தி நாலு கலைகளையும் கற்று தேர்ந்தவர். கடுமையான தவத்தினால் திட்டை வசிஷ்டேஸ்வரரிடம் தேவர்களுக்கு தலைவராகும் வரம் பெற்றார்.  இத்தனை புகழ்வாய்ந்த குரு யார்?! இவருக்கும் தட்சிணாமூர்த்திக்கும் என்ன தொடர்பு?! குருபெயர்ச்சின்னா என்ன?! அன்னிக்கு தட்சிணாமூர்த்தி பகவானை கும்பிடுவது சரியான்னு இன்னிக்கு பதிவுல பார்க்கலாம்...

இந்த குருவுக்கு  வியாழ பகவான், பிரகஸ்பதின்னும் பேரு.  இவரே தேவர்களுக்கெல்லாம் குரு. இந்த தேவகுருக்கு குருவாக, ஆதி குருவாக தட்சிணாமூர்த்தி விளங்குகிறார். இதனை நன்கு தெரிந்துக்கொண்ட நம்ம பெரியவங்க , மாணவனை வணங்குவதற்கு பதிலா நேரா ஆசிரியரை வணங்கினா பலன் கிடைக்கும்ன்னு நம்புறாங்க.  நவக்கிரக குருவிற்கு உண்டான மஞ்சள்நிற ஆடையையும், கொண்டைக்கடலை நிவேதனம் உள்ளிட்ட சகல பரிகாரங்களையும் தட்சிணாமூர்த்திக்கே செய்கின்றனர். இது சரியான்னு தெரியாம நடந்துக்குறாங்க. குரு பகவான் வேற. தட்சிணாமூர்த்தி வேறன்னு புரியாம இந்த வேலையில் ஈடுபடுறாங்க.



குருப்பெயர்ச்சியின்போது அனைத்து சிவாலயங்களிலும் அபிஷேகம், ஆராதனைன்னு நடக்கும். ஆனாலும்,  ஆலங்குடி, தென்குடித்திட்டை, சென்னை-பாடி, திருப்புலிவனம், தக்கோலம் ஜலநாதீஸ்வரர், கோவிந்தவாடி மாதிரியான ஊர்களில் குருபகவான் தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார்.  மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான ஶ்ரீ வாமனருக்கு ஆசிரியராய் குருபகவான் இருந்திருக்கிறார். குருவிடமிருந்து  வேதங்கள், அதன் அங்கங்கள், உப அங்கங்கள், ஆறு சாஸ்திரங்கள், ஸ்மிருதி மற்றும் ஆகமம் ஆகிய அனைத்தையும் ஸ்ரீவாமணன்  கற்றறிந்தார் என சொல்கிறது ப்ருஹத் தர்ம புராணம். குருபகவான் பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர்.  



பிரம்மனின்  புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவர்தான் இந்த குருபகவான். இவர் அறிவில் சிறந்தவர் என்பதால் ‘பிரகஸ்பதி’ என்று அழைக்கப்பட்டார். பிரகஸ்பதின்னா  ‘ஞானத் தலைவன்’ன்னு  பொருள். குருபகவான் காசியில் பல காலம் தங்கி சிவபெருமானை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார். இதன்காரணமாகவே அவர், தேவர்களுக்கு குருவாக விளங்கும் பதவியும், கிரக பதத்தில் வீற்றிருக்கும் பேறும் பெற்றார்.. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக்கிரகர் ஆவார். மூன்று குணங்களில், சாத்வீக குணத்தைக் கொண்டவர். மஞ்சள் நிறம் உடையவர். அதனால் இவரை ‘பொன்னன்’ என்றும், ‘வியாழன்’ என்றும் கூறுவார்கள். தயாள சிந்தனை கொண்டவர். குரு பகவானின் 5, 7-ம் பார்வை சகல நன்மைகளையும் தரும். ஒருவரின் திருமண யோகத்திற்கு குரு பலம் மிகவும் அவசியம். தன்னை வழிபடுபவர்களுக்கு உயர்வான பதவியையும், மன மகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம், சுகம் ஆகியவற்றையும் கொடுப்பவர். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவானின் அருள் பூரணமாக இருந்தால், அவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும். கடல் கடந்து சென்று செல்வம் தேடி செல்வந்தர் ஆகும் சூழ்நிலையும் ஏற்படும். 





வியாழ பகவான் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவார். கமண்டலம், அட்சமாலை, யோக தண்டத்தை தாங்கி, அபய முத்திரையுடன் அருள்புரிவார். இவருக்கு பிடித்த உலோகம் தங்கம். யானையை வாகனமாக கொண்ட இவருக்கு, பிடித்த உணவு கொண்டைக் கடலை தானியம். இதனால்தான் வியாழ பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டி வழிபாடு செய்கிறார்கள். நவரத்தினங்களில் புஷ்பராகத்தை அணிந்திருப்பவர். அரசமரம் இவருக்கு பிடித்தமான மரம். இனிப்பு சுவை பிடிக்கும். நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளி இருப்பார். ரதத்தின் ஓரத்தில் வில்லும், மீனும் அடையாளமாக இருக்கும். தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் இவர் அதிபதி என்பதை எடுத்துக் காட்டும் அடையாளம் அவை. நீதி சாஸ்திரங்களை அறிந்த குருபகவான் ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம்ன்னு இவரே நிர்ணயம் செய்வார்.


தெட்சிணம்ன்னா தெற்குன்னும், ஞானம்ன்னும் பொருள். ஞானத்தின் திருவுருவமாக நின்று தன்னை வணங்குபவர்களுக்கு ஞானத்தை அள்ளி வணங்குபவதால் அவருக்கு இந்த பேரு உண்டாச்சு. ஞானமானது இவரது சன்னிதியில் இவர் முன்னிலையில் அவரின் ஆணைக்காக காத்திருக்கு. யோகம், ஞானம், வீணா, வியாக்யண நிலையில் தட்சிணாமூர்த்தி வழிப்படப்படுகிறார். பெரும்பாலான கோவில்களில் வியாக்யண தட்சிணாமூர்த்தியே வழிப்படப்படுகிறார். வேதங்களின் நுணுக்கங்களை இவரே மற்றவர்களுக்கு  எடுத்துரைப்பவர். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர். சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, அவனை அழித்து, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அறியாமையை அழிக்கும் இத்தகைய வாழ்க்கை கல்வியை அளித்தவர் என்பதால், இவர் குருவாக மதிக்கப்படுகிறார்.



இவர் வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள். இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்.




குருவிற்கும், தட்சிணாமூர்த்திக்குமான வேறுபாடு...

தட்சிணாமூர்த்தி - சிவவடிவம், குரு பகவான்-கிரக வடிவம். இவர் சிவன், அவர் பிரகஸ்பதி. தட்சிணாமூர்த்தி-முதலாளி, குரு-அதிகாரி. தெட்சிணாமூர்த்தி-சிவகுரு, குரு-தேவகுரு. தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர். குருபகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர். தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன் அம்சமான தட்சிணாமூர்த்தி சிவனைப்போன்றே தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர், குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர். முன்னவருக்கு முல்லை மலரும், பின்னவருக்கு மஞ்சள் நிற மலரும் பிடித்தமானது.  முன்னவரின் திசை தெற்கு, பின்னவரின் திசையோ நவக்கிரக சன்னிதியின் வடக்கு.  இத்தனை வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லையும், இருவருக்கும் உகந்த மஞ்சள் நிற ஆடையையும், வெள்ளை கொண்டைக்கடலை மாலையையும் வைத்துக்கொண்டு  அவர்தான் இவர் இவர்தான் அவர்ன்னு வாதிடுவது சரியல்ல... தெட்சிணாமூர்த்தியை தெட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.

பொதுவா  தட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள். அவருக்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருப்பெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள். இவையெல்லாம் தவறுன்ன்னு நாம என்னதான் சொன்னாலும் எதிர்கருத்திட ஒரு சிலர் இருப்பாங்கதானே1? அவங்க வாதத்தையும் பார்ப்போம். 
குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும்தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லைன்னும் சொல்றாங்க. அதுவும் தவறு. குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல ஆதாரங்கள் இருக்கு. அதனால, தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றேன்னு நம்மை நாமே குழப்பிக்கக்கூடாது. நாளைக்கு(2/9/2017) குருப்பெயர்ச்சி. அதனால, பரிகார பூஜைகளை குருபகவானுக்கே செய்வோம். கூடவே தட்சிணாமூர்த்தியை வழிபடுவோம்.  ஞானம் பெறுவோம்..

நாளைக்கு குருபெயர்ச்சின்னா என்ன?! குருபெயர்ச்சி பலன், மற்றும் தட்சிணாமூர்த்தி, குருபகவான் கோவில் கொண்டுள்ள வித்தியாசமான கோவில்களை பார்க்கலாம்.. 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470752

நன்றியுடன்,
ராஜி.