Wednesday, November 20, 2013

பேச்சிப்பாறை அணை - மௌனச் சாட்சிகள்

என்னதான் வீரம், காதல், சூது, பண்பாடு, நாகரீகம்லாம் சுமந்து மௌனமா நிற்கும் இடிந்த கோட்டைகள் மட்டுமே பார்க்குறது!? அதையெல்லாம் பார்த்து, படிச்சு, டைப்படிச்சு படுத்தா நைட்ல நெஞ்சம் மறப்பதில்லை, அது தன் நினைவை இழப்பதில்லை...,ன்னு ஒரு ஆவி வந்து பாடுற மாதிரி இருக்கு. இது கோவை ஆவியா இருந்தா பரவாயில்ல. நம்ம தம்பிதானேன்னு தாஜா பண்ணிடலாம். ஆனா, இது ஏதோ மன்னர், ராணி, தளபதியோட ஆவி போல. அதான் பயம் வந்திட்டு. அதனால, இந்த வாரம் நம்ம லொக்கேஷனை மாத்தியாச்சு.

கண்ணுக்கும், கருத்துக்கும் குளிர்ச்சியா இருக்கும் இடமான பேச்சிபாறை அணை பத்திதான் இன்னிக்கு மௌனசாட்சிகள்ல பார்க்க போறோம். போலாமா!? 

இந்த அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கு. இது கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கு. இது, மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணையாகும்.

நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் இருக்கு   இந்த அணை.  இங்கப் போறதுக்கு நாகர்கோவில்ல இருந்து நிறைய பஸ் வசதிகள் இருக்கு.  பேச்சிபாறை போற வழிலாம் மரங்களும், மலைகளும் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு.இங்க இருக்கும் மக்கள் கூட கேரள கலாச்சாரங்களையே பிரதிபலிக்குறாங்க. பேச்சிபாறையிலும்  சிறிய பஸ் ஸ்டான்ட் இருக்கு. இந்த அணை மாணவ மாணவியருக்கும் கல்வி சுற்றுலாகவும், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இது தொழிநுட்ப சுற்றுலாகவும் போறதுக்கு தகுந்த இடம்.


இந்த அணைக்கட்டு திருவிதாங்கூர் மகாராஜா  மூலம் திருநாள் காலத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் அவர்களால் 1897-1906 காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. இந்த அணை கட்ட செலவழிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாகதான் இருந்ததாம். . பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டி முடிக்கப்பட்டதாம்.

இந்த அணையை  கட்டிய ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் நினைவுச் சின்னமும், கல்லறையும் இங்க காணப்படுது. இவரது காலம் (பிறப்பு) 08.10.1868 -(இறப்பு)  25-09-1913 அவர் முதலில் சென்னை  பிரிட்டிஷ் மாகாணத்தில் மதுரை நகராட்சியில் நகராட்சி பொறியாளராக பணியாற்றினாராம். பின்னர், திருவிதாங்கூர் அரசாட்சியில் அணைகட்டுவதற்காக பணியில் அமர்த்தபட்டதாக கூறப்படுது. ஹம்ப்ரி மிஞ்சின் தனது 45 வயதில் 1913 ல் காலமானார். 

இந்த அணையின் கொள்ளளவு 207.19 சதுர கிலோமீட்டர்கள். ஆழம் 14.6 மீட்டர்கள் ( 48 அடி). அணையின் நீளம் 425.5 மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள். இந்த பகுதியில் காணப்படும் நீர்நிலைக்கு பின்புறம் இருக்கும் மலையில்  மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் படகுமூலம் தான் போக்குவரத்து செய்கின்றனர். 

இந்தமலையில் எல்லாவிதமான காட்டுமிருகங்களும் இருக்குறதா சொல்றாங்க இங்க வாழும்  மலைவாழ் மக்கள்.  இந்த இடம் முழுதும் பாரஸ்ட் துரையின் கட்டுபாட்டில்இருக்கு. இந்த பரந்த நீர்நிலையால் கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை மற்றும் ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றதாம்.


இங்கே இருக்கும் முக்கியமான இடம் பேச்சியம்மன். அதனாலதான் இந்த இடத்துக்கு பேச்சிபாறை ன்னு பேர் வந்ததாம். நாங்கள் அணையை பார்த்துக்கிட்டு கொண்டு இருந்தப்போ, அங்க இருந்த ஒரு பெரியவர்,  இப்ப நீங்க கரையில் பார்க்கும் இந்த பேச்சியம்மன் கோவில் இந்த தண்ணீர் பரப்பின் நடுவில் இருந்தது. அணை கட்டுவதற்கு இந்த கோவில் இடைஞ்சலா இருந்ததால ஹம்ப்ரி மிஞ்சின் இந்த கோவிலை இப்ப இருக்கும் இடத்திற்கு மாற்றினாராம்.

கோவிலை இடம் மாத்துறதுக்கு மலைவாழ் மக்கள் அதை எதிர்த்து இருக்காங்க. ஆனா, பெரும்பரப்பளவு கொண்ட அணையா இதை இடத்தை மாற்ற வேறு வழியில்லாமல மிஞ்சின் இந்த கோவிலை கரைக்கு மாறினாராம்.   அவர் மரணம், கொடிய விஷப்பாம்பு கடித்ததாலதான்ன்னு  சொல்றாங்க. அவர் மரணத்துக்கு காரணமானது இங்குள்ள அம்மனின் பாம்பு ன்னு இங்குள்ள மக்கள் இன்று வரை நம்புறாங்க.

இதுல எது நிஜம்? எது கதை? என்பதைச் சொல்ல மிஞ்சின்னும் இப்ப இல்லை. அவர்காலத்தில் வாழ்ந்த மலைவாழ்மக்களும் இல்லை. இதுலாம் நூற்றாண்டுகள் கடந்த வரலாறு.

சரி, இங்க கரையில் அமர்ந்து அருள்புரியும் பேச்சியம்மன் கோவிலுக்கு போலாம் வாங்க. இந்தக் கோவில் கேரளபாணி கட்டிடகலை அமைப்பில்  இருக்கு. பூஜை செய்பவர்கள் கூட நம்பூதிரி வகையினர் போலதான் இருக்காங்க. பசுமையான மரங்களுக்கு இடையில் கோவில் பார்க்க  ரொம்ப அழகா இருக்கு. சிலர் குழந்தைக்கு மொட்டை அடிக்கவும் வந்திருந்தனர். சிலர் பாயாசம் செய்து அம்மனுக்கு படைக்கவும்செய்தனர்.பார்பதற்கு பரவசமூட்டும் அம்மனின் சிலை கருணை வடிவாக அலங்காரத்துடன் இருந்தது. அம்மனை கும்பிட்டு அங்கே இருந்து கிளம்பலாம் வாங்க.  

போகும் வழிலாம் பச்சைபசேல்ன்னு மரங்களும், செடி கொடிகளும், மலை சூழ்ந்த இடங்களும் விடுமுறையில்  சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடம். இந்த அணை, தென்மாவட்டங்களுக்கு நீர்வளத்தையும் மின்சாரத்தையும் அளிக்கும் முக்கியமான அமைப்பாக இருக்கு. மேட்டூர் அணைக்கு அடுத்தபடியான பெரிய அணை இதுவே ஆகும். 

குடும்பத்தோடு படகு பயணம் வரலாம். குழந்தைகள் பொழுது போக்குறதுக்கு வசதியா பார்க், விளையாட்டு திடல்ன்னு இன்னும் கொஞ்சம் உருவாக்கலாம். அணைக்கட்டை சுத்தி பார்த்து கால் வலிக்குது. கொஞ்சம் ஓய்வெடுத்துக்குறேன்.

மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு இடத்தைப் பத்தி மௌனச்சாட்சிகள்ல பார்க்கலாம். 

Tuesday, November 19, 2013

சீரக காரக்குழம்பு - கிச்சன் கார்னர்

ரெண்டு நாள் ஜுரத்துல படுத்தெழுந்தா எதாவது காரசாரமா சாப்பிடத் தோணும். அதுக்காக, சிக்கன், மட்டன்னு வெளுத்து வாங்க முடியாது. சீக்கிரம் செரிமானம் ஆகாதுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி நேரத்துல காரமும், புளிப்பும் சேர்ந்த மாதிரி எதாவது செஞ்சுச் சாப்பிட்டா உடம்புக்கும் நல்லது, நாக்குக்கும் ருசி திரும்பக் கிடைக்கும்.

காரமும், புளிப்பும் சேர்ந்த சீரகக் காரக்குழம்பு எப்படிச் செய்யுறதுன்னு இன்னிய கிச்சன் கார்னர்ல பார்க்கலாம். 

தேவையானப் பொருட்கள்:
வெங்காயம் - 2
தக்காளி- 2
பூண்டு- 10 பல்
சீரகம் -1டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 2டீஸ்பூன்
தனியா தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
புளி- எலுமிச்சை அளவு.
தேங்காய் - 2 பத்தை
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கொஞ்சம்

புளியை ஊற வச்சுக்கோங்க. வெங்காயம், தக்காளி நறுக்கி வெச்சுக்கோங்க.  பூண்டை உரிச்சு நசுக்கி வச்சுக்கோங்க. 

சீரகத்தை வெறும் வாணலில, சிவக்க வறுத்து எடுத்து வச்சுக்கோங்க. 


வாணலியை அடுப்பில வச்சு எண்ணெய் ஊத்தி சூடானதும் கடுகு போட்டு பொறிய விடுங்க. அடுத்து நசுக்கி வெச்சிருக்கும் பூண்டை போட்டு வதக்குங்க.

அடுத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமா மாறும் வரை வதக்குங்க.

அடுத்து வெட்டி வச்சிருக்கும் தக்காளியை போட்டு நல்லா வதக்குங்க. 

நறுக்கின கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்துக்கோங்க. 

அடுத்து மிளகாய் தூள், தனியாதூள் சேர்த்து வதக்கிக்கோங்க.

அடுத்து உப்பு சேர்த்து, கரைச்சு வச்ச புளித்தண்ணியை ஊத்தி நல்லா கொதிக்க விடுங்க. 
குழம்பு நல்லா கொதிச்சு மிளகாய்தூள், புளி வாசனை போனதும், வறுத்து வச்சிருக்கும் சீரகத்தையும், தேங்காய் பத்தையையும் தண்ணி விட்டு நைசா அரைச்சு குழம்புல சேர்த்து கொதிக்க விடுங்க.
சீரக வாசனையோடு காரக்குழமு ரெடி. சூடா சாதத்துல நெய் விட்டுக்கிட்டு இந்த காரக்குழம்பையும் கூடவே அப்பளத்தையும் சேர்த்து சாப்பிட்டா நாக்குக்கு ருசியாவும், உடம்புக்கு தெம்பாவும் இருக்கும். ஏன்னா, சீரகம் தலைசுத்தல், வாந்தி, மயக்கம், பித்தம், அஜீரணம், வாயுத்தொல்லையை சரியாக்கும் மருத்துவ குணம் கொண்டது. 

எங்க ஊர்லலாம் பெரிய வெங்காயம்தான் அதிகமா யூஸ் பண்ணுவோம். சின்ன வெங்காயத்தை கிடைச்சா அதையே போடுவேன். முழுசா சின்ன வெங்காயம், பூண்டை போட்டு செஞ்சா என் பையன் பூண்டு, வெங்காயத்தைலாம் அவனே சாப்பிட்டு வெறும் குழம்பை மட்டும் எங்களுக்கு வைப்பான்.

மொபைல்ல எடுத்த போட்டோக்கள். அதனால, படம் தெளிவில்லாமதான் இருக்கும். மன்னிச்சு.

மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட உங்களை சந்திக்குறேன். வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா!?

Monday, November 18, 2013

சச்சின் -ஐஞ்சுவை அவியல்




ஏனுங்க மாமா! டிவிப்பொட்டில கிரிக்கெட் போட்டிருக்காங்க போல! ஊர் பஞ்சாயத்து டிவி ரூம்ல எல்லாப் பயலுமே உக்காந்துப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. நீங்கப் போய் இருப்பீங்கன்னு நினைச்சேன். அங்கயும் போகலை. வீட்டுலயும் பார்க்கல. ஏன்? 

ம்ஹூம், கிரிக்கெட் பார்க்கவே புடிக்கல புள்ள!

ஏன்? என்னாச்சு மாமா!? 

நம்ம சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டில விளையாடுறதல இருந்து ரிட்டையர்மெண்ட் வாங்கிட்டார் இல்ல. அதான், அவரில்லாம கிரிக்கெட்டை பார்க்கவே வெறுப்பா இருக்கு. 16 வயசுல விளையாட வந்தாரு. 40 வயசு வரை விளையாடினார். இந்தியாவுக்காக பல போட்டிகள்ல விளையாடி சாதனை புரிஞ்சிருக்கார். மேட்ச் பிக்சிங், சினிமா நடிகைகள் தொடர்புன்னு எந்த விசயத்துலயும் மாட்டாம நல்லப்படியா விளையாடியவர். உனக்குதான் கிரிக்கெட் பிடிக்காதே இதெல்லாம் ஏன் கேக்குறே! சும்மாவா விளையாடுறாங்க!? பணம் வாங்கிட்டுதானே விளையாடுறாங்க? இதுவும் ஒரு தொழில்தான்னு திட்டுவே!? 

ஆமா மாமா! இப்பவும் இந்த நினைப்பு இருக்கு, ஆனா, சச்சினின் கடைசி ஆட்டத்தப்போ அவர் பேசுன பேச்சு பிடிச்சுப் போச்சு!தன்னுடைய வெற்றியில பெற்றோர், நண்பர்கள், ரசிகர்கள், மனைவி, பிள்ளைகள், தன் நாட்டோட பங்களிப்பு என்னன்னு தெளிவா சொன்னதோடு, இதுவரையிலான என் பார்டர்னர்ஷிப்ல தன் மனைவியோட பார்டர்னர்ஷிப்தான் சிறந்ததுன்னு சொல்லி தன் காதலையும் அழகா தெரியப்படுத்தினார். சச்சின் பேசப்பேச அவர் மனைவி கண்ணுல தண்ணி கொட்டுது. குழந்தைகளை அவர் ஆதரவா அணைச்சுக்கிட்டதும் பிடிச்சது. அவர் பேசும்போது துக்கமா இல்ல நெகிழ்ச்சிலயான்னு தெரியல. தொண்டை கம்மிக்கிட்டேப் போச்சு. அடிக்கடி தண்ணி குடிச்சு அதை சமாளிச்சார்.

ம்ம்ம்ம் விளையாட்டுடன் குடும்பத்தையும் எவ்வளவு நேசிச்சார்ன்னு இதிலிருந்து தெரியுது. நீதான் சீரியல், நியூஸ் எதும் பார்க்க மாட்டியே! ஏன் டிவிப் பொட்டியை ஆன் பண்றே!?

திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு விஜய் டிவில மகாபாரதம் போடுறாங்க. அதை பார்க்கப் போறேன். நல்லா ஃபாஸ்டாவும் கதை நகருது. ஒவ்வொரு கேரக்டருக்கும் அவ்வளவு பொருத்தமா ஆட்களை செலக்ட் பண்ணிப் போட்டிருக்காங்க. சகுனி வந்தாலே நமக்கே ஒரு மாதிரியா இருக்கு. மத்த தொடர்கள்ல திருதராஷ்டிரனை சும்மா பதவிக்கு ஆசைப்படும் ஆளாய்தான் காட்டுவாங்க. ஆனா, இதுல பதவி வெறி அவர் முகத்துல அப்பட்டமா தெரிந்தாலும், பதவிக்குண்டான போர்ப் பயிற்சிலாம் எடுத்துக்குற மாதிரி காட்டுறாங்க. 
அப்புறம், பாண்டு கேரக்டருக்கும் பொருத்தமான ஆள்தான் போட்டிருக்காங்க. எதுக்கும், சலனப்படாத சிரித்த முகத்துடன் இருக்குற ஆளைதான் போட்டிருக்காங்க. பீஷ்மர், நடப்பதை பார்த்து உள்ளுக்குள் புழுங்கி, வெளில சொல்ல முடியாம தவிக்கும் கேரக்டர்ல செம தூள். ஆனா, கிருஷ்ணர் போல ஒருத்தர் வர்றார். மயிலிறகும், புல்லாங்குழலை வச்சுதான் அவர் கிருஷ்ணர்ன்னு சொல்ல வேண்டி இருக்கு. கிருஷ்ணர்க்குண்டான குறும்பு சிரிப்பு, கள்ளப்பார்வை இவர்கிட்ட மிஸ்ஸிங். ம்ம்ம் பார்க்கலாம்.., இதே ஆள்தான் கிருஷ்ணரா தொடரப்போறாரான்னு பார்க்கலாம்.

ஆச்சர்யமா இருக்கு புள்ள! சீரியல்லாம் பார்க்காத நீயே இம்புட்டு விலாவரியா சொல்றியே! அப்ப நல்லாதான் இருக்கும்.

விளம்பரம் பண்ணும்போது சீரியல் பார்க்கனும்ன்னு ஆசை வரும். உக்காந்து பார்த்தா, ரெண்டு மூணு கல்யாணம், பொண்ணுங்கலாம் தீவிரவாதி போல வெடிக்குண்டு, விசம்லாம் எடுத்துக்கிட்டு சுத்துறதும், குழந்தைகள்லாம் வயசுக்கு மீறின பேச்சுகள்லாம் பேசுறதும் காண சகிக்கலை. சன் டிவில மாலை 5.30 மணிக்கு பிள்ளை நிலான்னு ஒரு சீரியல் போகுது, அதை ஒரே ஒரு நாள்தான் பார்த்தேன். ஐயோ கொடுமை..

பெத்த தாய்க்கும், வளர்ப்பு தாய்க்கும் இடையில இருக்கும் ஒரு பெண் குழந்தையின் கதை. ஒரு அம்மாக்கு உடம்புக்கு முடியல. இன்னொரு அம்மாக்கிட்ட கடைக்கு போய் மாத்திரை வாங்கிட்டு வரச்சொல்லுது. அப்ப, அம்மா கர்ப்பமா இருக்காங்க. இந்த நேரத்துல மாத்திரைலாம் அதிகம் சாப்பிடக்கூடாது. அதுக்கேத்த மாதிரி மாத்திரை வாங்கி வாங்கன்னு சொல்லிச்சு. அதைப்பார்த்ததும் நொந்துப் போய் வேற சேனல் மாத்திட்டு வந்திட்டேன்.

வெள்ளிக்கிழமை சேனல் மாத்திக்கிட்டு வரும்போது, மறுபடியும் இந்தச் சேனல் பார்த்தேன். ஒரு அம்மாவுக்கும், அவள் வீட்டுக்காரருக்கும் சண்டைப் போல! அதுக்கு, அந்த குட்டிப்பொண்ணு தன் அம்மாக்கிட்ட சாப்பாடு பையை கொடுத்து அப்பா ஆஃபீசுக்கு சாப்பாடு கொண்டுபோக சொல்லுது. கூடவே அப்படி நடந்துக்கோ, இப்படி நடந்துக்கோன்னு அட்வைஸ் வேற! என்னதான் புத்திசாலி குழந்தையா இருந்தாலும் இதுலாம் ஓவர் மாமா!!

நீ சொல்லுறதும் கரெக்ட்தான் புள்ள! ஓரளவுக்கு பிள்ளைகளை வச்சு எடுக்கப்படும் தொடர்கள்ல குட்டீஸ், சுட்டீஸ் பரவாயில்ல. அதுல இமான் அண்ணாச்சி, கேக்குற கேள்விகளுக்கு குழந்தைகள் சொல்லும் பதில் சிரிக்க வச்சாலும், சில சமயம் நம் பிள்ளைகளுக்கு சரியான பாதையைதான் நாம காட்டுறோமான்னு சந்தேகமா இருக்கு.

ஆமா மாமா! இமான் அண்ணாச்சி இதுப்போன்றா கேள்விகளை தவிர்த்தாலும், எதாவது ஒரு கேள்விக்கு, அப்பா அம்மாவை அடிக்குறது, அம்மா திட்டுறதுலாம் குழந்தைகள்கிட்ட இருந்து பதிலா வந்துடுது. ஒரு பாப்பாக்கிட்ட கெரசின்னா என்னன்னு இமான் அண்ணாச்சி கேக்க, மேல ஊத்திக்கிட்டு பத்த வச்சிக்குறதுன்னு பதில் சொல்லுது. அடுப்பெரிக்க, ஜெனரேட்டர்ல ஊத்த, பெயிண்ட்ல கலக்கன்னு எத்தனை நல்ல விசயம் அதுல இருக்கு. அதையெல்லாம் கத்துக்கொடுக்காம பத்த வச்சுக்குறதுக்குதான் கெரசின் யூஸ் ஆகுதுன்னு சின்ன புள்ளை மனசுல பதியுற மாதிரி நாம நடந்துக்குறோமேன்னு நினைச்சாதான் சங்கடமா இருக்கு மாமா.

கரெக்ட்தான் புள்ள! பசங்களுக்கு சரியான பாதையை நாம காட்டத் தவறிட்டோம்ன்னுதான் நினைக்குறேன். இப்படிலாம் சிந்திக்குறியே!  ஒரு விடுகதை கேக்குறேன் அதுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்!!

ம்ம்ம் சொல்லுங்க மாமா! தெரிஞ்சா சொல்றேன்.

ஐந்து முற்றத்துக்கு ஒரு வாசல். அது என்ன!?

ஹா! ஹா! எனக்குத் தெரியுமே!

இரு. இரு. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து விடையை கேட்டுக்குறேன்.




Sunday, November 17, 2013

கார்த்திகை தீபத் திருநாள் வரலாறும், விளக்கேற்றும் முறையும்

எல்லோருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்.  இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒண்ணு. இந்த பண்டிகை கொண்டாட பல்வேறு கதைகள் சொன்னாலும் ஒரு அறிவியல் காரணமும் இருக்கு. முதல்ல எனக்கு தெரிஞ்ச புராண காரணங்களை சொல்லிட்டு, அடுத்து அறிவியல் காரணத்தை சொல்றேன். 

படைப்புக் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்னுவுக்கும் யார் பெரியவங்கன்ற ஈகோவுல சண்டை.  விடை தெரிய அழிக்கும் கடவுளான சிவன்கிட்ட வந்திருக்காங்க. சிவன், என்னோட முடி இல்லாட்டி அடியை யார் முதல்ல பார்க்குறாங்களோ அவங்கதான் பெரியவங்கன்னு சொல்லி வானுக்கும், மண்ணுக்கும் விஸ்வரூபமெடுத்தாராம்.

விஷ்ணு வராக(பன்றி) ரூபமெடுத்து சிவப்பெருமானின் பாதத்தைக் காண பூமியைத் தோண்டிக்கிட்டு போனாராம்.  படைக்கும் கடவுள் நான், பாதத்தைக் பார்க்கப் போவதா!?ன்னு நினைச்சுக்கிட்ட பிரம்மா, சிவனின் முடியைக் காண மேல்நோக்கி பறவை ரூபமெடுத்து போனாராம், நாட்கள் கடந்ததே ஒழிய, இருவராலும் முடிவை எட்ட முடியல. விஷ்ணு தன்னோட தோல்வியை ஒத்துக்கிட்டு சிவப்பெருமானிடம் சரணடந்தாராம்

முடியை நோக்கி போய்க்கிட்ட இருந்த பிரம்மன் கண்ணில், சிவப்பெருமான் கூந்தலிலிருந்து விழுந்த தாழம்பூ பூமியை நோக்கி வந்துட்டு இருந்துச்சாம்.  சிவனின் முடி எவ்வளவு தூரம் இருக்கும்ன்னு தாழம்பூவை விசாரித்தாராம் பிரம்மன். சிவனின் முடில இருந்து விழுந்து 40000 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பூமியை எட்டலைன்னு சொன்னதும், பிரம்மனுக்கு ஒரு யோசனை வந்தது. சரி, நான் சிவனின் முடியை பார்த்துட்டதா சொல்றேன். நீயும் ஆமாம்ன்னு சொல்லுன்னு கேட்டதுக்கு சரின்னு சொல்லி ரெண்டு பேரும் பூமிக்கு வந்தாங்க. 

தோல்வியை ஒத்துக்கிட்ட விஷ்ணுவும், பொய்ச்சாட்சியோடு நின்ன பிரம்மனையும் கண்ட சிவன், இனி பிரம்மனுக்கு எங்கயும் கோவில் கூடாதுன்னும், சிவப் பூகைக்கு இனி தாழம்பூ கூடாதுன்னும் சாபம் அளித்தாராம். பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் அகந்தை நீங்கி உலகுக்கு உணர்த்த அக்னிப் பிழம்பாய் காட்சி தந்த  இடம்தான் திருவண்ணாமலை. அந்த நாளையே கார்த்திகை தீபம்ன்னு கொண்டாடுறோம்.
அசுரனை அழிக்க சிவப்பெருமானின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து தாமரை மலர்களில் ஆறு பிள்ளைகள் அவதரித்தது. அந்தப் பிள்ளைகளை கார்த்திகை பெண்கள் பாராட்டி வளர்த்து வந்தனர். பிள்ளைகளை காண வந்த பார்வதி தேவி அறுவரையும் சேர்த்து அணைக்க, ஆறு முகத்தோடும், பன்னிருக் கையோடும், ஒற்றைப் பிள்ளையாய் முருகன் தோன்றினார். அப்படி ஆறு பிள்ளையும், ஆறுமுகம் தெய்வமாய் மாறின நாளும் இதே கார்த்திகை தீபத்தன்றுதான். அப்பனுக்கும், பிள்ளைக்கும் சேர்த்துதான் தீபத்திருநாளை இந்துக்கள் கொண்டாடுறாங்க. 

புராண காரணங்களைப் பார்த்துட்டோம். இனி அறிவியல் காரணம் பார்ப்போம்!! ஐப்பசி மாசம்ங்குறது மழைக்காலம் முடியுற நேரம். இந்தக்காலக் கட்டத்துல கொசுவோடு வைரஸ் லாம் சேர்ந்து நோய் பரப்பும். அதனல, வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் சேர்த்து காட்டன் திரில விளக்கேத்தும்போது அதில் இருந்து வரும் நெடியால நோய்க் கிருமிகள் வள்ர்ச்சியை முற்றிலும் அழிக்குதுங்குறதாலயும் கார்த்திகை மாசத்துல காலையும், மாலையும் விளக்கெத்துற பழக்கம் வந்துச்சாம்!!.

இனி விளக்கேத்துற முறைகள் பற்றி பார்ப்போம்..., 

வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேத்தனும்.  அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் ளும், மாலை ஆறு மணிக்குள்ளும் விளக்கேத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம். விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. பூ இல்லாட்டி ஊதுவத்தி இல்லாட்டி வத்திக்குச்சி கொண்டு விளக்கை குளிர்விக்கலாம். 
 
விளக்கேற்றும் பலன்: 
குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால்   நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும், நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும், ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மையும் உண்டாகும்ங்குறது ஐதீகம். 

அதேப்போல கிழக்கு நோக்கி விளக்கேத்தினால்  துன்பம் நீங்குவதோடு குடும்ப அபிவிருத்தி அடையும்.மேற்கு நோக்கி விளக்கேத்தினால் கடன், தோஷம் நீங்கும், வடக்கு நோக்கி விளக்கேத்தினால் திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாதாம். 


திருவிளக்கின் சிறப்பு:
தினமும் நாம வீட்டில் ஏத்தி கும்பிடும் காமாட்சி அம்மன் விளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாம தடுக்குது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

எண்ணெயின் பலன்:
எல்லா எண்ணெயிலும் விளக்கேற்ற முடியாது.  தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயினைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். நெய் விளக்கு செல்வத்தையும், நினைத்தை நடத்திக் கொடுக்கும் ஆற்றல் உடையது. நல்லெண்ணெய் ஆரோக்கியத்தையும், தேங்காய் எண்ணெய் வசீகரத்தையும், இலுப்பை எண்ணெய் சகல காரிய வெற்றியையும், விளக்கெண்ணெய் புகழையும், இந்த ஐந்து எண்ணேயும் சேர்த்து விளக்கேற்றினால் அம்மனின் அருளும் கிட்டும். கடலை எண்ணெய் க்டனையும், குடும்பத்துக்கு தீமையும் சேர்க்கும்ன்னும் சொல்லப்படுது.
 திருவிளக்கில் வாசம் செய்யும் தெய்வங்கள்: 
திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைத்து ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகிய தெய்வங்களை தியானிக்கனும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்” ன்ற ஐந்து பூதங்களையும், சூரியன், சந்திரன் ன்ற கண்கண்ட தெய்வங்களையும், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றதாம்.

இனி, எந்த தெய்வங்களுக்கு எந்த எண்ணெய் உகந்ததுன்னு பார்க்கலாம்..., 

விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வங்களுக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்,பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கும் நல்லெண்ணெய்யினால் விளக்கேற்றுவது சிறப்பு.

படங்கள் கூகுள்ள சுட்டது.

Saturday, November 16, 2013

மாவளி - கார்த்திகை ஸ்பெஷல்


தீபாவளிக்கு பட்டாசு, பொங்கலுக்கு கரும்பு, ரம்ஜானுக்கு பிரியாணி, கிறிஸ்துமஸ்க்கு கேக் போல கார்த்திகை பண்டிகைக்கு எங்க ஊருல “மாவளி” தான் ஸ்பெஷல்.  தோட்டத்துல அரை அடி அகலம் ஒரு அடி ஆழம் அளவுக்கு குழி தோண்டுவாங்க. அப்படி தோண்டின பள்ளத்து ஈரம் போக அதுல கொஞ்சம் தவிடு தூவி, அதன்மேல் பனம்பூக்களை அடுக்கி, மேலேயும் கொஞ்சம் தவிடு தூவி, விறக‌டுப்பில் கனன்றுக்கிட்டிருக்கும் கட்டை நெருப்பில் ஒன்றிரண்டு எடுத்துட்டு வ‌ந்து அதுல தூவி விடுவாங்க. எல்லா பனை மரப்பூவும் மாவளி செய்ய பயன்படாது. ஒரு சில மரத்துல பூ பூக்கும். ஆனா, அது காயாகாது. அப்படிப்பட்ட மரத்தை ஆண் மரம்ன்னு சொல்லுவாங்க.  இது எல்லா வகை மரத்துலயும் உண்டு.  இதை வச்சு கே.பாக்கியராஜ் இது நம்ம ஆளு படத்துல ஒரு விடுகதை வச்சு அதுக்கு பரிசுலாம் கொடுத்த கதை உண்டு.


நெருப்பை ஊதக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அப்படி ஊதினா ஊமக்காத்தி ஆகிடும்ன்னு சொல்லுவாங்க. நெருப்பு கனன்றுக்கிட்டே இருக்கனுமாம். தீப்பிடித்து எறியக் கூடாது.   பனம்பூ எரிஞ்சுட்டா சாம்பல் ஆகிடும். அதை வச்சு மாவளி செய்ய முடியாதாம். பனம்பூ முழுசும் நெருப்பு மாதிரி வந்தவுடன் தோட்டத்தில் இருக்கும் பூவரசு இலைகளைப் பறித்து குழியை மூடி அதன்மேல் மண் போட்டு மூடிடுவாங்க.
சாயந்தரத்துக்குள்ள நெருப்பு ஆறிப்போயிருக்கும். மண், இலைலாம் தள்ளிட்டு பனம்பூ கரியை மட்டும் புதுப்பொண்டாட்டிப்போல பக்குவமா எடுத்து அம்மில வச்சு அரைப்பாங்க. அப்படி அரைச்சு வர்ற கரியை பழைய லுங்கித்துணில தேவையான அளவு சுருட்டி கட்டி வைப்பாங்க. கிருத்திகை, நாட்டுக்கிருதிகைன்னு ரெண்டு நாளைக்கு வர்ற மாதிரி வீட்டுல எத்தனை பசங்க இருக்காங்களோ அவங்களுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணி வச்சுப்பாங்க.



பனை மட்டைகளை வெட்டி, கத்தியால சீவி, மூணு மட்டைகளுக்கிடையில் துணில வச்சு சுருட்டிய பனம்பூவை வச்சு மேலயும், கீழயும் வச்சு கட்டிடுவாங்க. தலைக்கு மேல சுத்துறதுக்கு வசதியா ஒரு கயிறும் கட்டி ரெடி பண்ணி வைப்பாங்க.  சாமிக்கு படைச்சு சாப்பிட்டப் பின் இந்த மாவளியை சுத்துறதுக்கு அப்பா ரெடி பண்ணித் தருவார். அந்த மருந்து மேல அடுப்புக் கரி வச்சு லேசா தீப்பிடிக்க வைப்பாங்க. இதுவும் எரியக்கூடாது. நெருப்பு கனன்றுதான் தீப்பிடிக்கனும். 


சாப்பாடே இறங்காது. மனசு முழுக்க மாவளி மேலதான் இருக்கும். ஒரு வழியா அப்பா மாவளியை ரெடிப் பண்ணித் தருவார்.  தலைக்கு மேல மாவளியை சுத்துசுத்துன்னு சுத்தும்போது, அதிலிருந்து நெருப்பு பொறிகள் கொட்டுறது பார்க்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கும். ஊர் முழுக்கவும் இதே காட்சிதான்!



அதுலயும் அக்காக்கள் சுத்தும்போது அண்ணாக்கள் அந்த பக்கம் போய்ட்டா போதும். அக்காக்கள் போடும் சீன் இருக்கே! அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா. சொல்லி மாளாது. எங்க தெருவுல யார் வீட்டு மாவளி நல்லா பொறி பறக்குதுன்னு மினி சர்வே எடுத்து வருவோம். அப்படி நல்லா செஞ்சவங்க வீட்டுக்கு போய் வாங்கி ரெண்டு மூணு சுத்து சுத்துவோம். 

அண்ணன்கள், மாமா, சித்தப்பா,அக்காக்கள்லாம் விதவிதமாக தலைக்குமேல், பக்கவாட்டுலன்னு விதவிதமா சுத்துவாங்க. கூடவே தங்களோட வீட்டு குழந்தைகளை வச்சும் சுத்துவாங்க. அதைப் பார்க்கும்போதே பொறாமையா இருக்கும்.   சில சமயம் மாவளி சுத்தும்போது கயிறு அறுந்து சுத்துறவங்க முதுகையும், பக்கத்துல நிக்குறவங்களையும் பதம் பார்க்குறதும் நடக்கும்.


சின்னவங்க முதற்கொண்டு பெரியவங்க வரை இந்த மாவளியை சுத்தனுமாம். அப்படி சுத்தினால் நம்மை பிடிச்சிருக்கும் கெட்டதுலாம் விலகிடும்ன்னு ஒரு ஐதீகம். சுத்டி முடிச்சதும் அந்த பனமட்டைகளை வீட்டு கூரை மேல போட்டு வைப்பாங்க. காய்ஞ்சதும் அடுப்புல வச்சு எரிப்பாங்க. இந்த மகிழ்ச்சி கிடைக்க அடுத்த வருசம் வரை காத்திருக்கனும்! காத்திருப்பேன்!

படங்கள் கூகுள்ள்ல சுட்டது.