முன்னலாம் வெயில் காலம் தொடங்கிட்டாலே எல்லார் வீட்டுலயும் கூழ் வத்தல், முறுக்கு வத்தல், ஜவ்வரிசி வத்தல், கத்திரிக்காய் வத்தல், மாங்காய், எலுமிச்சை ஊறுகாய் வத்தல், வடகம்லாம் போட்டு பேக் பண்ணி எடுத்து வச்சுக்கிட்டு தேவைப்படும்போது வறுத்து சாப்பிடுவாங்க. இப்பலாம் அதெல்லாம் ரெடிமேடா கடையில கிடைக்குறதால அதெல்லாம் இப்ப செய்யுறதில்ல.
அம்மா வத்தல் விடப்போகும்போதுலாம் நானும் சேர்ந்து வத்தல் விடுவேன். வத்தல் விடக் காய்ச்சி வச்சிருக்கும் கஞ்சியை அம்மாக்கு தெரியாம குடிப்பேன். மிளகாய், இஞ்சி, சீரகம்லாம் போட்டு செம வாசனையா இருக்கும் அந்த வத்தல் கஞ்சி. காய்ஞ்ச வத்தலை துணில இருந்து எடுக்குறது இன்னும் சாதனை. லேசா தண்ணித் தெளிச்சி எடுக்கனும். கொஞ்சமா தெளிச்சா வத்தல் எடுக்க வராது. அதிகமா தண்ணி ஊத்தினா வத்தல் ஊசல் வாடை வந்துடும். இப்படிலாம் வத்தல் விட்ட அனுபவம் எனக்கு. இப்பலாம் கடைக்கு போனோமா அப்பள், வத்தல் பாக்கெட் வாங்கிப் போட்டோமா வந்து வறுத்துச் சாப்பிட்டோமான்னு இருக்குதுங்க என் புள்ளைங்க. அதனால, இந்த வருசம் வத்தல் விட்டே ஆகனும்ன்னு முடிவு பண்ணி பசங்கலாம் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும் சுப முகூர்த்த நாளில் கஞ்சி காய்ச்சி வத்தல் விட்டுட்டேன். அதை பதிவாவும் ஆக்கியாச்சு!
தேவையான அளவுகள்:
பச்சரிசி - ஒரு ஆழாக்கு
பச்சை மிளகாய் - 10
இஞ்சி - ஒரு துண்டு
சீரகம் - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
பச்சரிசியை ரெண்டு மணி நேரம் ஊற வச்சு கழுவி கிரைண்டர்ல போட்டு நைசா அரைச்சுக்கோங்க. அரைச்ச அரிசி மாவை தண்ணி விட்டு கரைச்சு வச்சுக்கோங்க. அடுப்புல அடிக்கணமான பாத்திரத்தை வச்சு தண்ணி வச்சு கொதிக்க வைங்க. பச்சை மிளகாய், இஞ்சியை கழுவி நைசா அரைச்சுக்கோங்க.
தண்ணிக் கொதிச்சதும் கரைச்சு வச்சிருக்கும் அரிசி மாவை ஊத்தி கொதிக்க விடுங்க. அடிக்கடி கிளறி விடுங்க இல்லாட்டி அடிப்பிடிச்சுக்கும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடுங்க.
கஞ்சி கொதிக்கும்போதே அரைச்சிருக்கும் பச்சைமிளகாய், இஞ்சி விழுதை சேர்த்து கொதிக்க விடுங்க.
அடுத்து சீரகம் சேர்த்து லேசா கொதிச்சதும் இறக்கிடுங்க. கஞ்சி ரொம்பவும் திக்காவும், இல்லாம தண்ணியாவும் இல்லாம இருக்கட்டும்.
தேவையில்லாத பாலியஸ்டர் புடவையை நல்லா துவைச்சி அலசி, ஈரத்தோட மாடில விரிச்சு சின்ன சின்ன அப்பளம் சைசுக்கு ஊத்திக்கோங்க. ஒரு நாள் முழுக்க வெயிலில் காய்ஞ்சதும், சாயந்தரம் லேசா தண்ணித் தெளிச்சு சேலைல இருந்து வத்தலை எடுத்து ஃபேன் காத்துல பரவலா காய விடுங்க. இல்லாட்டி ஊசல் வாசனை வரும்.
திரும்பவும் ரெண்டு இல்ல மூணு நாள் வத்தல்களை வெயிலில் காய வச்சு டப்பாவுல எடுத்து வச்சுக்கிட்டா தேவைப்படும்போது வறுத்து சாப்பிட்டுக்கலாம். கடையில வாங்குற அப்பளம், வத்தல்லாம் எந்த தண்ணில, எப்படி செய்யுறாங்களோ! ஆனா, இது நம் கைகளால் சுத்தம் பத்தமா செஞ்சு சாப்பிடுறதால உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது.
குழந்தைங்க இருக்கும் வீடுகள்ன்னா கஞ்சில கலர் கலரான கேசரிப் பவுடரை கலந்து சிவப்பு, பச்சை, மஞ்சள்ன்னு வறுத்துக் கொடுத்தால் பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.


.jpg)














