Tuesday, March 25, 2014

கஞ்சி வத்தல் - கிச்சன் கார்னர்

முன்னலாம் வெயில் காலம் தொடங்கிட்டாலே எல்லார் வீட்டுலயும் கூழ் வத்தல், முறுக்கு வத்தல்,  ஜவ்வரிசி வத்தல்,  கத்திரிக்காய் வத்தல்,  மாங்காய், எலுமிச்சை ஊறுகாய் வத்தல், வடகம்லாம் போட்டு பேக் பண்ணி எடுத்து வச்சுக்கிட்டு தேவைப்படும்போது வறுத்து சாப்பிடுவாங்க. இப்பலாம் அதெல்லாம் ரெடிமேடா கடையில கிடைக்குறதால அதெல்லாம் இப்ப செய்யுறதில்ல.

அம்மா வத்தல் விடப்போகும்போதுலாம் நானும் சேர்ந்து வத்தல் விடுவேன். வத்தல் விடக் காய்ச்சி வச்சிருக்கும் கஞ்சியை அம்மாக்கு தெரியாம குடிப்பேன். மிளகாய், இஞ்சி, சீரகம்லாம் போட்டு செம வாசனையா இருக்கும் அந்த வத்தல் கஞ்சி. காய்ஞ்ச வத்தலை துணில இருந்து எடுக்குறது இன்னும் சாதனை. லேசா தண்ணித் தெளிச்சி எடுக்கனும். கொஞ்சமா தெளிச்சா வத்தல் எடுக்க வராது. அதிகமா தண்ணி ஊத்தினா வத்தல் ஊசல் வாடை வந்துடும். இப்படிலாம் வத்தல் விட்ட அனுபவம் எனக்கு. இப்பலாம் கடைக்கு போனோமா அப்பள், வத்தல் பாக்கெட் வாங்கிப் போட்டோமா வந்து வறுத்துச் சாப்பிட்டோமான்னு இருக்குதுங்க என் புள்ளைங்க. அதனால, இந்த வருசம் வத்தல் விட்டே ஆகனும்ன்னு முடிவு பண்ணி பசங்கலாம் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும் சுப முகூர்த்த நாளில் கஞ்சி காய்ச்சி வத்தல் விட்டுட்டேன். அதை பதிவாவும் ஆக்கியாச்சு!

தேவையான அளவுகள்:
பச்சரிசி - ஒரு ஆழாக்கு
பச்சை மிளகாய் - 10
இஞ்சி - ஒரு துண்டு
சீரகம் - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

பச்சரிசியை ரெண்டு மணி நேரம் ஊற வச்சு கழுவி கிரைண்டர்ல போட்டு நைசா அரைச்சுக்கோங்க. அரைச்ச அரிசி மாவை தண்ணி விட்டு கரைச்சு வச்சுக்கோங்க.  அடுப்புல அடிக்கணமான பாத்திரத்தை வச்சு தண்ணி வச்சு கொதிக்க வைங்க. பச்சை மிளகாய், இஞ்சியை கழுவி நைசா அரைச்சுக்கோங்க.

தண்ணிக் கொதிச்சதும் கரைச்சு வச்சிருக்கும் அரிசி மாவை ஊத்தி கொதிக்க விடுங்க. அடிக்கடி கிளறி விடுங்க இல்லாட்டி அடிப்பிடிச்சுக்கும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடுங்க. 

கஞ்சி கொதிக்கும்போதே அரைச்சிருக்கும் பச்சைமிளகாய், இஞ்சி விழுதை சேர்த்து கொதிக்க விடுங்க.
அடுத்து சீரகம் சேர்த்து லேசா கொதிச்சதும் இறக்கிடுங்க. கஞ்சி ரொம்பவும் திக்காவும், இல்லாம தண்ணியாவும் இல்லாம இருக்கட்டும்.

தேவையில்லாத பாலியஸ்டர் புடவையை நல்லா துவைச்சி அலசி, ஈரத்தோட மாடில விரிச்சு சின்ன சின்ன அப்பளம் சைசுக்கு ஊத்திக்கோங்க. ஒரு நாள் முழுக்க வெயிலில் காய்ஞ்சதும், சாயந்தரம் லேசா தண்ணித் தெளிச்சு சேலைல இருந்து வத்தலை எடுத்து ஃபேன் காத்துல பரவலா காய விடுங்க. இல்லாட்டி ஊசல் வாசனை வரும்.

திரும்பவும் ரெண்டு இல்ல மூணு நாள் வத்தல்களை வெயிலில் காய வச்சு டப்பாவுல எடுத்து வச்சுக்கிட்டா தேவைப்படும்போது வறுத்து சாப்பிட்டுக்கலாம். கடையில வாங்குற அப்பளம், வத்தல்லாம் எந்த தண்ணில, எப்படி செய்யுறாங்களோ! ஆனா, இது நம் கைகளால் சுத்தம் பத்தமா செஞ்சு சாப்பிடுறதால உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது.

குழந்தைங்க இருக்கும் வீடுகள்ன்னா கஞ்சில கலர் கலரான கேசரிப் பவுடரை கலந்து சிவப்பு, பச்சை, மஞ்சள்ன்னு வறுத்துக் கொடுத்தால் பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்.

13 comments:

  1. மேடம் எங்களுக்கு அப்படியே ஒரு வத்தல் பேக்கட் பார்சல் பண்ணுங்கோ.......

    ReplyDelete
  2. யக்கா நீங்க வத்தல்லாம் விடுவீங்களா ...? நாங்கல்லாம் கப்பல் தான் விட்டுருக்கோம் :) ...

    வறுத்தெடுக்குற வெயிலுக்கு வறுத்த வத்தல் - அட்டடே காம்பினேசன் பேஷா இருக்கே ....

    இன்சூரன்ஸ் ல போடுற கண்டிசன் அப்ளைஸ் மாதிரிதான் , சமையல் குறிப்புல போடுற தேவையான அளவு உப்பும் - தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் புரியாது .... :)

    ReplyDelete
  3. விடுமுறை என்றாலே பிள்ளைகளை இந்த வேலை தான் செய்யவிடுவது நம்ம ஊர் பழக்கமாகி விட்டது. எங்க அம்மா இருந்த வரை செய்தோம்.

    ReplyDelete
  4. இலங்கையில் சில காய்கறிகள் அதிகமாகக் கிடைக்கும் போது வற்றல் போடும் பழக்கமுண்டு. பனங்கிழங்கு ஒடியல், மரவள்ளிச் சீவல், பலாக் கொட்டை வற்றல் உண்டு. ஆனால் இந்த கஞ்சி வற்றல்
    கேள்விப்படவேயில்லை. தெரியாது.
    அதன் சேர்க்கைகளைப் பார்க்கும் போது, மணம் குணமாக இருக்குமென்பதில் ஐயமில்லை.
    நற்சீரகம் சேர்ப்பதால் மருத்துவக் குணமும் இருக்கும்.
    இங்கு பிரான்சில் காய்கறி வற்றலாகக் கிடைப்பதில்லை. ஆனால் பழவற்றல், காளான் வற்றல், இறைச்சி வற்றலுக்குக் குறைவேயில்லை. அத்துடன் அரேபியர், யூதர்கள் விரும்பி உண்ணும் அச்சாறுகளுக்குக் குறைவில்லை.
    காய்கறிகள்,அவித்து உப்பில், வினாகிரியில் ஊறவைத்தது கிடைக்கிறது.

    ReplyDelete
  5. பயனுள்ள அருமையான சமையற் குறிபிற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும் சகோதரி .த.ம 3

    ReplyDelete
  6. எனக்கு அம்மா போட்டு கொடுத்து விடுவதால் நான் இன்னும் முயற்சிக்கவே இல்லை தோழி.

    இந்த வெயில் காலத்தில் செய்து பார்த்து விடுகிறேன். இங்கே வெயில் ஜீலை ஆகஸ்ட் தான் வரும்...

    ReplyDelete
  7. எங்க வீட்டுல அம்மா ஜவ்வரிசி வத்தலும் அரிசி வத்தலும் செஞ்சிட்டாங்க! செய்முறைதான் கொஞ்சம் மாத்தம்! இந்த வருச வத்தலை ருசித்தும் பார்த்துவிட்டோம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. நல்லா இருக்கு..... இப்போதெல்லாம் கடையிலேயே கிடைத்து விடுகிறது.... அதுவும் தில்லி போன்ற நகரங்களில் கூட கிடைக்கிறது!

    ReplyDelete
  9. அருமையான சமையல் குறிப்பு அக்கா...

    ReplyDelete
  10. உங்களின் செய்முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி சகோ...

    ReplyDelete
  11. எங்கம்மா கையால் கூழ் வடாம் சாப்பிட்டது. ஆச்சு பத்து வருடங்களுக்கும் மேல்.... இங்க மாமியார் ஜவ்வரிசி வடாமும், பிழியற வடாமும் தான் செய்வாங்க... சிறு வயது முதலே இந்த வடாம் போட எடுபிடி வேலை செய்தே, இப்போதும் செய்து கொண்டிருக்கிறோம்...:)) புடவையை விட பிளாஸ்டிக் ஷீட் சுலபமாக இருக்கே...

    ReplyDelete
  12. செஞ்சு பாக்குறேன்..நன்றி ராஜி..என் பையன் நீங்க வச்சுருக்குற drums விளையாடினான்..அதுக்கும் நன்றி :)

    ReplyDelete
  13. அக்க பியானோவை இசைத்தாலும் டிரம்ஸ் இசையே கேட்க்கிறதே?

    ReplyDelete