Thursday, February 02, 2012

அப்பா...., நானிருக்கிறேன் உங்களுக்கு...,


                                   
        படிப்பு, வேலை, வேலையில நல்ல பேர், சரியான வயசுல திருமணம், பிள்ளைப்பேறு, பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள், உடன் பிறந்தோருக்கும், சொந்தங்களுக்கும், நன்பர்களுக்கும், இறைபக்தியும், எல்லா கடைமையும் முடிச்ச பின் பணியிலிருந்து ஓய்வு. இப்படி வரிசைப்படி உரிய காலத்துல தன்னோட கடமைகளை செய்து முடிக்கும் பாக்கியம்  எல்லாருக்கும் அமைஞ்சுடாது.

       ஆனால், என் அப்பாவுக்கு எல்லாமும் அமைஞ்சது.  பி.யூ.சி முடிச்சு, டீச்சர், போலீஸ்,  என பல துறைகளில் ட்ரெயினிங் போக வாய்ப்பு கிடைத்தும் தாத்தாவால் பல்வேறு காரணங்களுக்காக வேணாம்ன்னு சொல்லி, ”தொழுநோய் ஆய்வாளர் ” பயிற்சிக்கு போய் 23 வயசுல ராமநாதபுரம் மாவட்டத்துல உள்ள ஒரு கிராமத்துல வேலைக்கு சேர்ந்தார்.
     அப்பாவுக்கு ”ஃபீல்டு வொர்க்”.   ஊர் ஊரா போய், தொழுநோய் இருக்கான்னு  செக் பண்ணனும். அந்த ஊர்களில் பஸ் வசதி அவ்வளவா கிடையாது. சைக்கிள் வாங்ககூட வசதியில்லாம நடந்தே போவாராம். இன்னிக்கும் எதாவது ரெண்டு கிராமத்து பேர் சொல்லி எவ்வளவு தூரம்ன்னு கேட்டால் இத்தனை தரம் வலது கால் வைத்தால் வரும்ன்னு சொல்வார். பல பணி உயர்வு கிடைத்த பிறகும் அந்த ஆரம்ப கால பணிகளை நினைவு கூர்ந்து சொல்லுவதில் அவருக்கு அலாதி பிரியம்.

(யாரும் பசியோடு  இருக்க கூடாதுன்னு அப்பாவோட நினைப்பு. அதனால் பணி நிறைவு நிகழ்ச்சிக்கு வந்தவங்களுக்கு முதலில் மதிய உணவு...,)

   (அப்பாவும், அம்மாவும் வந்திருந்தவங்களை விசாரித்து பரிமாறுகின்றனர்...,)
                       
 
   அப்பா 300 ரூபாய் சம்பளத்துல வேலைக்கு சேர்ந்தார்.  என்ன காரணத்துக்காவோ தெரியலை, தன் பிள்ளைக்கிட்டயே, உன்னை படிக்க வைக்க ஆன செலவை  நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, 1000 ரூபாய் தந்துடனும்ன்னு கண்டிஷன் போட்டாராம் தாத்தா. நான்கு மாத சம்பளமான 1200ல் தாத்தாகிட்ட 1000 ரூபாய் கொடுத்துட்டால் வீட்டு செலவுக்கு பணமில்லாமல் திண்டாடுவாங்களாம். அதனால், வேலையிலிருந்து வந்து நெசவு தொழில் செஞ்சு சிக்கனமா குடும்ப செலவுகளை செய்ய கத்துக்கிட்டாராம் அப்பா. அந்த சிக்கனம் இன்றளவும் தொடருது.

        ”பொன் வைக்கும் இடத்தில் பூ வை” ன்னு எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி உண்டு. ஆனால், அப்பா ”பூ வைக்கும் இடத்தில் பொன்” வைத்து அழகு பார்க்கும் தாராள குணம் கொண்டவர். தன் சம்பாத்தியத்தில் தன் குடும்பத்தார் மட்டுமில்லாமல், உற்றார், உறவினர்களுக்கும் கொடுத்து உதவுவார். கோவில் நன்கொடைன்னு வந்தால் கொஞ்சமா கொடுப்பவர், பள்ளி, உதவும் கரங்கள் போன்ற விஷயங்களுக்கு நன்கொடைகள் நிறைய கொடுப்பார்.

          வேலை செய்யும் இடத்தில் தன்னோட வேலைகளை சரியா செய்வதோடு, சக பணியாளர்களுக்கும் உதவிகள் செய்வார். நன்பர்கள் வீட்டுல விசேஷங்களுக்கு முதல் ஆளா நின்னு எல்லா வேலையும் முடிச்சு குடுப்பார். சில சமயம் டாக்டர்களே அப்பாவிடம் ஆலோசனைகள் கேட்பர்.

(பேர  பிள்ளைங்க தாத்தாவோட நிகழ்ச்சிக்கு பொக்கேவும், கேக்கும் கிஃப்ட் பண்ணாங்க...,)
                                 

           (பசங்க குடுத்த கேக்கை அப்பா கட் பண்றார்...,)
                                 

       என்னோட டீன் ஏஜ்ல அப்பாவோட வெளி இடங்களுக்கு செல்லும்போது, அவரோட பேஷண்டுகளும், அவரால் குணமடந்தவங்களும் வணக்கம் சொல்வாங்க. சிலருக்கு நோயோட தீவிரம் அதிகமாகி கைவிரல்கள், கால்விரல்கள்லாம் மடங்கி புண்ணாகி இருக்கும். அதனால அப்பாவுடன் நிற்க   அசிங்கப்பட்டுக்கிட்டு, அப்பாவை விட்டு தூரமாய் போய் நிப்பேன். அன்று அப்பாவோட தொழில் எனக்கு அருவறுப்பா பட்டது.

     ஆனால், 92 ம் வருடம் தன் கடின உழைப்பால் சுமார் 5000 தொழுநோயாளிகளை கண்டறிந்து, சிகிச்சையளித்து, குணமாக்கி சிறந்த சேவைக்கான விருதை பெற்றபோது என் தவறான எண்ணத்திற்காக வெட்கி  அப்பாவிடம் மன்னிப்பு கேட்டது ஒரு நெகிழ்ச்சியான தருணம். அதன்பின் அப்பாவின் பணிகளுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். இதுவரை அப்பா 10,000க்கும் மேற்பட்ட நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளித்து குணமாக்கியுள்ளார் என்பதை இத்திருநாளில் பெருமையுடன் சொல்லி கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

      
(அப்பாவை வாழ்த்தி அவரோட மருத்துவ அலுவலர் பேசுறார்....,)
                                    

          (அப்பாவோட நண்பர் வாழ்த்தி பேசுறார்...,)
                                     
      அப்பா, எதற்கும் பொய் சொல்லி நான் அறிந்ததில்லை. பிள்ளைகளை சமாதானப்படுத்த பொய் சொல்லலாமேப்பா. அதனால் ஒரு கெடுதலும் வராதுன்னு நான் சொன்னாலும், அது தப்பும்மா, கெடுதல் இல்லாவிட்டாலும் பிள்ளைகள் ஏமாந்துடுவாங்க என பொய் சொல்றதை கண்டிப்பார்.
           
      மனசுக்கு தோணுவதை வார்த்தை ஜாலமின்றி அப்படியே சொல்வதால் அவரை முரட்டு மனிதர்ன்னு பலர்  நினைச்சுக்குவாங்க. ஆனால், பலாப்பழம் போன்றவர் என் அப்பா. பார்க்க பயமா இருந்தாலும், பழகினால் குழந்தை சுபாவம் கொண்டவர், ஈகோ துளியும் பார்க்காதவர்.

            தனக்கு தன் சம்பாத்தியம் மட்டுமே போதுமானது என்று எண்ணி பல லட்சம் மதிப்புள்ள பூர்வீக வீட்டை தன் உடன்பிறந்தோருக்கு தூக்கி கொடுத்த நல்ல மனதுக்காரர் என் அப்பா. பேர பிள்ளைகள் மேல் உயிரையே வைத்திருக்கும் பாசக்காரர். பாசத்துடன் கண்டிப்போடும் இருப்பார்.   என்னை பொறுத்த மட்டில் சந்தோஷ் சுப்ரமண்யம் படத்தில் வரும் கதாநாயகனின் அப்பா    பாத்திரத்தை போன்றவர். ரொம்ப பாசம் அதே நேரத்தில் தன் பெண்ணுக்கு தன்னால் கொடுக்கப்படுகிற எல்லாமே சிறப்பா கொடுக்கனும்ன்னு     நினைப்பு. அவர் சொல்றது எனக்கு பிடிக்காம போச்சுன்னா, டிவிடில அந்த படத்தை போட்டு பார்க்க சொல்வேன். அதனால் கோவமாகி அப்பா கத்தி பேச இருந்து சில மணித்துளிகளில் மீண்டும் பேசிக்கொள்ளும் அதிசயத்தை அம்மா பார்த்து கிண்டல் செய்வாங்க..

(அப்பாவோட ஏற்புரை....,)

(நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள்...)
                            

(அப்பவோட ஆபீசுல இருந்து வீட்டுக்கே கொண்டு வந்து விட்டுட்டு போனார்கள்..,)
                              

                இருபத்தி மூன்று வயதில் ஓட துவங்கிய ஓட்டம்
காசு பணம் தேடி ஓடி,
கல்யாணத்திற்கு ஓடி..,
மனைவி சொல்லுக்காக ஓடி...,

பிள்ளைக்காக ஓடி...,
பெற்றோருக்காக ஓடி...,
உடன்பிறந்தோர்,உற்றார், 
உறவினர்களுக்காகவும் ஓடி...,

மூப்பும் வந்தது!?
உடன் பணி மூப்பும் வந்தது...,
நோய்க்காக  மருத்துவமனை ஓடி,
புண்ணியத்தை சேர்க்க புண்ணிய தளங்களுக்கு ஓடி...,

பேர பிள்ளைகளுக்காய் ஓடி.., என
தங்கள் கடமை சுமைக்காக
இனியும் ஓடும் ஓட்டத்திற்கு பஞ்சமில்லை...,
இருந்தாலும்...,

சர்க்கரை, ரத்த அழுத்த நோய்...,
போன்றவற்றிலிருந்து தப்பிக்க
மருத்துவர் ஆலோசனைப்படி
ஓட வேண்டியுள்ளது...,

அந்த ஓட்டத்தினை நீங்கள் தொடருங்கள்...,
உங்கள் கடமையை தங்கள்
வழிக்காட்டுதலோடு..., செய்து முடிக்க
அப்பா! நானிருக்கிறேன் உங்களுக்கு...,
டிஸ்கி: எல்லாருக்கும் அவங்கவங்க அப்பாதான் முதல் ஹீரோ. எனக்கும் அதுப்போலதான். இருந்தாலும் என் அப்பா ரொம்ப ஸ்பெஷல் எனக்கு. அந்த ஹீரோ, ஜனவரி 31 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்காக இந்த பதிவு. பதிவு கொஞ்சம் நீளமாகியிருந்தால் மன்னிச்சுக்கோங்க. 

     அப்பா சொந்தங்களைவிட நண்பர்களை நம்புவர். எனக்காக சொத்துக்களை சேர்த்ததைவிட அதிகமாக , துயரங்களில் தோள் கொடுக்கும் நல்ல மனிதர்களை அதிகமாக சேர்த்துள்ளார். அதேப்போல் அவர்களுக்கு தோள் கொடுக்க முதல் ஆளாய் போய் நிற்பார். அப்பாவினால் குணமடைந்தவர்களின் வாழ்த்தும், அவர் அன்பால் சேகரித்த நல் உள்ளங்களின் ஆதரவும், பெற்றோரின் ஆசியும் இருக்கும் வரை எனக்கேது கவலை இவ்வுலகில்...,

    என் பெற்றோர்கள் நோய் நொடியின்றி வாழ்ந்து, தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்து, என்னை நல்வழி நடத்தி, சிறிதும் வலியின்றி   தூக்கத்திலேயே இறவனடி சேரனும்ன்னு நான் ஆண்டவனை வேண்டிக்குறேன். நீங்களும் வேண்டிக்கோங்க ப்ளீஸ்....,

33 comments:

 1. இன்னொருத்ரின் திறமையை பாராட்டுவதே பெரிய விசயம் அதிலும் மிகுந்த அக்கறை எடுத்து 10,000க்கும் மேற்பட்ட நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளித்து குணமாக்கிய அவரின் சுயநலமற்ற தன்மையையின் மீது மிகுந்த மதிப்பு வந்ததுள்ளது. இந்த அற்புத மனிதரான உங்கள் அப்பா பற்றி வாசிக்க வாசிக்க மனம் நெகிழ்ந்தது இவர்கள்தான் சமுதாயத்தின் தலைகள். இவர்களைப் போன்றோர் இல்லாதிருந்தால் அந்தச் சமுதாயம் ஒரு முண்டத்தைப் போலத்தான். 10,000க்கும் மேற்பட்ட நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளித்து குணமாக்கிய பல குடும்பங்களில் தீபங்களை ஏற்றிவைத்த அவருக்கு என் நன்றியை நம் பதிவர்கள் அனைவரின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 2. //தூக்கத்திலேயே இறவனடி சேரனும்ன்னு நான் ஆண்டவனை வேண்டிக்குறேன். நீங்களும் வேண்டிக்கோங்க ப்ளீஸ்....,//

  இந்த வரிகளை நிக்கினால் நன்றாக இருக்கும் என் நான் நினைக்கிறேன். அதற்கு பதிலாக கடினமாக உழைத்த என் அப்பா இன்னும் அதிக நாள் நோய்களுக்குள் சிக்காமல் நல்லபடியாக அமைதியாக இருந்து பேரன் பேத்திகளோடு சந்தோஷமாக இருக்கு வேண்டிக் கோள்ளூங்கள் என்று போடவும். அவருடைய பணிதான் நிறைவு பெற்றுள்ளது அதனால் வாழ்வு ஓன்றும் முடிந்துவிடவில்லை என்பது என் கருத்து. நான் சொன்னது தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும்.

  ReplyDelete
 3. ////ஆனால், 92 ம் வருடம் தன் கடின உழைப்பால் சுமார் 5000 தொழுநோயாளிகளை கண்டறிந்து, சிகிச்சையளித்து, குணமாக்கி சிறந்த சேவைக்கான விருதை பெற்றபோது என் தவறான எண்ணத்திற்காக வெட்கி அப்பாவிடம் மன்னிப்பு கேட்டது ஒரு நெகிழ்ச்சியான தருணம். அதன்பின் அப்பாவின் பணிகளுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். இதுவரை அப்பா 10,000க்கும் மேற்பட்ட நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளித்து குணமாக்கியுள்ளார் என்பதை இத்திருநாளில் பெருமையுடன் சொல்லி கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
  ////

  வணக்கம் அக்கா
  பிறகுக்கு சேவை செய்வதற்கு ஒரு மனசு வேணும் அது உங்கள் தந்தையிடம் நிறையவே இருந்திருக்கின்றது.அந்த நல்ல உள்ளத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அப்பாவின் பெருமையை கூறும் மிக நல்ல பதிவு.

  உங்கப்பாவின் சேவையே உங்கள் குடும்பத்தை காக்கும்.அப்பாவிற்கு என் வணக்கங்கள்.

  ReplyDelete
 5. ராஜி.. இப்படி ஒரு அப்பா கிடைக்க என்ன தவம் செய்தனை நீ... கடைசியில் முடித்திருக்கும் வரிகள் கண்ணீரை வரவழைத்தது. அப்பாவை எண்ணி பெருமையால் பூரிக்கிறேன். நலமாய் அவர்கள் வாழவும் என்றேனும் ஒரு தினம் வாழ்க்கை முடியும் போது நீ சொன்னது போல் துன்பமின்றி அமைதியாய் முடியவும் நானும் இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 6. மனதை கசக்கும் அருமையான பதிவு

  ReplyDelete
 7. மிகவும் அருமையான பதிவு இது. இனிமேல்தான் அவரை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் 'வேலை' ஆக்கிரமித்திருந்த, இப்போது விலகிப்போன அந்த 'வெற்றிடம்' மிகப் பெரியது. அது கிட்டத்தட்ட மனைவியின் இடத்துக்கு அடுத்தபடியான (சிலருக்கு சமமாக)இடம். அதனால் கலங்கித்தான் போவார்கள்.வெளியே தெரியாது.

  அவரை மெதுவாக வேறு ஏதாவது அவருக்குப் பிடித்த விஷயங்களில் கவனத்தை திருப்புவது நல்லது. வாராந்திர உள்ளூர் சங்க நடவடிக்கைகளில் கலந்துகொள்வது,தினசரி போன் செய்து வாக்கிங் போனீர்களா என்று கேட்பது,மாதம் தோறும் சந்திப்பது, என்று ஒரு routine கக்கு அவரை சில மாதங்களுக்குள் கொண்டு வந்துவிட்டார் மிக நல்லது.

  முதியவர்கள் பெரும்பாலோர் அதிலும் ரிடையர்ட் ஆன சம்பளக்காரர்கள் உடைந்து போகிற நிலைமை வந்ததுண்டு. நீங்கள் இருக்கிறீர்கள் பார்த்துக் கொள்வீர்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. உணர்ச்சிகரமான நல்ல பதிவு.touched. வேலை அல்லாத நல்ல செயல்பாடுகள் நல்ல நாட்களை கடைசி காலத்தில் தரும்.இது நேரடி அனுபவம்.இந்த மாதிரியான செயல்கள் தொடர்ந்து அவர்களுக்கு வாய்க்க இறைவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
 9. அப்பா...
  அப்பப்பா என்று மலைத்து நின்று பார்த்தது ஒரு பருவம்..
  எந்த ஒரு செயலிலும் அவரின் சாயலை சற்றேனும் காட்டத்
  துடித்தது ஒரு பருவம்..
  இன்றோ அவராக மாறத் துடிக்கிறது...

  வாழ்வில் ஓடி ஓடி ..
  நான் திரும்பிப் பார்க்கையில் என் தந்தை
  என்னை விட்டு எட்டாத தூரத்தில்...
  மனம் கசிந்தேன்.. கசிந்து கொண்டிருக்கிறேன்...

  தங்களின் தந்தையாரைப் பற்றிய பதிவு என்னை
  நெகிழச் செய்தது சகோதரி...
  பெரிய பெரிய காரியங்கள் செய்த
  உங்கள் தந்தையாருக்கு இறைவன்
  அருள் கிட்டட்டும்..


  நோய் நொடியின்றி இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து
  உங்கள் அருகில் இருக்கட்ட உங்கள் தந்தையார்.
  என் மனப்பூர்வமான பிரார்த்தனைகள் சகோதரி.

  ReplyDelete
 10. மனம் நெகிழ்வான பதிவு ராஜி.
  அப்பாவின் ஆசீர்வாதம் மட்டுமே கேட்க நினைக்கிறேன்.அதிஷ்டக்காரி நீங்கள் !

  ReplyDelete
 11. கடைசி வரிகள் தவறானவை. தயவு செய்து நீக்கவும். அவர் மேலும் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்.

  ReplyDelete
 12. அப்பாவுக்கு வாழ்த்துகள், மிக உருக்கமான பதிவு

  பை த பை நீங்க எப்போ ரிட்டயர்? ஹி ஹி

  ReplyDelete
 13. என்னங்க கடைசி பத்தியில் இப்படி சொல்லிட்டீங்க.

  அந்த பத்திக்கு அவர்கள் உண்மைகள் அவர்களின் கருத்தையே நானும் சொல்ல விரும்புகிறேன்.

  ReplyDelete
 14. மகளாக இருந்து அப்பாவுக்காக போட்டிருக்கும் பதிவு உண்மையிலயே நெகிழ வைக்கிறது.

  ReplyDelete
 15. அருமையான கவித்துவமான பதிவு
  எத்தனைபேருக்கு இப்படி ஒரு அப்பா கிடைப்பார்கள்
  எத்தனை பேருக்கு இப்படி அப்பா அருமை தெரிந்த
  பெண்கள் கிடைப்பார்கள்
  ஆசிர்வதிக்கப் பட்டிருந்தால் ஒழிய சாத்தியமே இல்லை
  தங்கள் பெற்றோர்கள் பல்லாண்டு இதேபோல்
  சீரும் சிறப்புமாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. வணக்கம் ராஜி!இப்படி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வைத்திருந்திருக்க வேண்டும்!வாழ்த்துக்கள் அப்பாவுக்கும்,மகளுக்கும் குடும்பத்தினருக்கும்!

  ReplyDelete
 17. உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் அப்பா கிடைத்திருக்கிறார் ராஜி...

  அவர் சேவை மனப்பான்மையோடு பணி செய்தது உங்கள் எழுத்தில் தெரிகிறது...

  அவர் நீண்ட நாள் வாழ நான் பிரார்த்திக்கிறேன்...

  ReplyDelete
 18. நெகிழ்ந்து விட்டோம்.
  உங்களது அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நெஞ்சார வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 19. ஒரு உதாரணபுருஷராய் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவுக்கு என் பணிவான வணக்கம். அவரது சேவையை பெரிதும் மதித்துப் போற்றுகிறேன். நோய் நொடியின்றி நெடுநாள் வாழ்ந்து இன்னும் பலரது வாழ்வில் ஒளியேற்ற பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 20. படித்து விட்டு மனம் நெகிழ்ந்தது சகோதரி !
  தங்கள் பெற்றோர்கள் பல்லாண்டு இதேபோல் சீரும் சிறப்புமாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் ! நன்றி !

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. தொழுநோயாளிகளை கண்டாலே வெறுத்து ஒதுக்கும் சமூகத்தில் 5000க்கும் மேற்பட்டவர்களை நல்வழிகாட்டி குணப்படுத்தியிருப்பது கடமையே என்றாலும் போற்றுதலுக்குரியது.நெகிழ்ச்சியான பதிவு சகோதரி..!!உங்கள் பெற்றோர் மனநிறைவுடன் வாழ வாழ்த்துகள்..!!

  ReplyDelete
 23. Vazhthukkal...sago.....
  Nalla vishayam.....
  Convey my regards....
  To ur family.....

  ReplyDelete
 24. Appavai vaaztha vayathillai, vanangukiren.

  ReplyDelete
 25. அன்புத் தங்கையை என் இந்தப் பதிவுக்கு உடன் வருகை தரும்படி அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

  http://www.minnalvarigal.blogspot.in/2012/02/blog-post.html

  ReplyDelete
 26. மனது நெகிழ்கிறது. நானும் அப்பாவின் பெருமையை அறிவேன். பணி நிறைவு பெறும்போது அவர்களுக்குள் ஒரு வெறுமை இருக்கும்.அதை நாம்தான் கவனமுடன் வெறுமையை போக்கவேண்டும். அவர்களைப் பெருமைப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 27. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..

  http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.html

  ReplyDelete
 29. பதிவு உருக்கமா இருந்தது..அப்பவுக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 30. அப்பாவிற்கு மரியாதைக்குரிய வணக்கங்கள்..
  உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..!:)

  ReplyDelete
 31. இன்றைய வலைச்சத்தில் தங்களின் பதிவு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_14.html

  ReplyDelete
 32. இந்த பதிவை இப்போதுதான் படிக்க நேர்ந்தது..

  அப்பா என்பது வெறும் உறவல்ல அது உயிரின் பினைப்பு.

  ReplyDelete
 33. அன்பின் ராஜி - தந்தையைப் பற்றிய பதிவு நன்று - பணி நிறைவு செய்து வீட்டிற்கு வந்து ஓய்வெடுக்கும் போது - அவரைப் பற்றிய பதிவெழுதியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete