Saturday, May 19, 2018

வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி - கிராமத்து வாழ்க்கை 1

கோடை விடுமுறைன்னா  இப்பத்தி மாதிரி என்ன ஏன் லீவு விட்டாங்கன்னு அப்பா அம்மாக்கள் புலம்புறதும் கிடையாது. ஸ்கூலுக்கே போய் இருக்கலாம்.. வீட்டுல போர் அடிக்குது. ஐ மிஸ் மை ஃப்ரண்ட்ஸ்ன்னு பசங்களும் அலுத்துக்கிட்டது கிடையாது. ஏன்னா, வீட்டில் இருந்தாலும் பெத்தவங்களுக்கு உதவியா இருப்போம். இல்லன்னா, பாதுகாப்பா குளத்தங்கரை ஆத்தங்கரைன்னு வீதிகளில் விளையாடிக்கிட்டிருப்போம். உள்ளூரிலேயே படிச்சதால ஃப்ரெண்ட்ஸ்களையும் மிஸ் பண்ணதில்லை.  சின்ன பிள்ளையில் நான்(ம்) விளையாடிய விளையாட்டுகள் சில.. இப்பத்திய பிள்ளைகளுக்கு இதுலாம் தெரியுமான்னு தெரில...
ரெண்டு பிள்ளைங்க எதிரெதிரா உக்காந்துப்பாங்க. முதல்ல ஒரு காலை நீட்டுவாங்க அதை தாண்டனும். அப்புறம் ரெண்டு கால், அடுத்து கால்கள்மேல் கைகள்ன்னு உசரம் கூடிக்கிட்டே போகும்.  

ஸ்கூல் ஆண்டுவிழா விளையாட்டு போட்டில இந்த விளையாட்டு கண்டிப்பா இருக்கும். சாக்குபைக்குள் நுழைஞ்சுக்கிட்டு ஓடி முதல்ல வரனும். கீழ விழுந்து ஆடிக்கிட்டிருந்த பல்லை பேத்துக்கிட்ட வரலாறு என்னுது. 
கயிறு தாண்டுதல், ஆண், பெண்ன்னு பேதமில்லாம விளையாடும் விளையாட்டு. தனித்தனியா, குழுவான்னு எப்படி வேணும்ன்னாலும் விளையாடலாம். கத்திரின்னு இதில் ஒரு வகை உண்டு. கைகளை கிராஸ்ல கொண்டு போய் விளையாடுவோம், அதில்லாம எதிரில் ஒரு பிள்ளைய நிக்க வச்சுக்கிட்டு குதிக்குறதும் நடக்கும். ரெண்டு பேர் கயிறு ஆட்ட படத்திலிருப்பது போல் ஆட்ட வரிசையா பிள்ளைகள் போறதும் நடக்கும். 

கோலி ஆண்பிள்ளைகளுக்கான விளையாட்டு. ஆனாலும் சின்ன வயசு பொண்ணுங்களும் விளையாடுவாங்க.  எனக்கு ஆரம்பக்கட்ட விளையாட்டு மட்டுமே தெரியும். தோத்துட்டா நம்ம கைமுட்டிய தரையில் அழுத்தி ஒருத்தர் பிடிச்சுக்க, ஜெயிச்சவங்க கோலிய சுண்டி நம் முட்டில அடிப்பாங்க. அதான் இந்த விளையாட்டின் பந்தயம்.

 
y ஷேப்பில் இருக்கும் மரத்துண்டில் ட்யூப்பை ரப்பர் நீளத்துக்கு கட்டி, அதுக்குள் கல்லை வச்சு குறிபார்த்து மாங்கா, கொய்யான்னு அடிப்போம். ஓணான், தவளை, காக்காலாமும் அடிச்சிருக்கோம். அதுலாம் சொன்னா இப்ப அசிங்கம். இதுக்கு பேரு உண்டி வில்


ரெண்டு பனங்காய் நடுவில் குச்சிய வச்சி செஞ்ச பனங்காய் வண்டில நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம்ன்னு போய் இருக்கோம். இதுல ட்ரிபிள்ஸ் போன அனுபவமும் உண்டு. 
கல்லு மேல கல்லை அடுக்கி வச்சி பாலால் குறி பார்த்து அடிச்சு விழ வைக்கனும், இது நான் விளையாடியதில்லை. வேடிக்கை மட்டும் பார்த்திருக்கேன். 


தரையில் லேசா பள்ளம் பறிச்சு, சின்ன குச்சிய குறுக்கால வச்சு, கொஞ்சம் பெரிய சைஸ் குச்சியால சின்ன குச்சிய மேல பறக்க விட்டு தரையை தொடும்முன் மீண்டும் அடிச்சு விளையாடும் பில்லு கோட்டி அல்லது கோட்டி பில்லு
ஆண் பிள்ளைகளுக்கான விளையாட்டு பம்பரம். நூல் சுத்தி பம்பரம் விடத்தெரியும் எனக்கு.  சுத்துற பம்பரத்தை எடுக்கவோ இல்ல பந்தயம் கட்டி வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்தை அடிக்கவோ தெரியாது எனக்கு. 

கயிறின் நடுவே துணியை கட்டி  கயிறின் முனையை ரெண்டு குரூப் இழுக்குறதுக்கு பேரு கயிறு இழுத்தல்.  நாங்க, கொய்யாப்பழம், எலந்தை பழம்லாம் துணிக்கு பதிலா கட்டி இழுப்போம். ஜெயிச்சவங்களுக்கு அதான் பரிசு. இப்பத்திய சினிமாக்கள் மூலமா இது பசங்களுக்கு தெரியும். ஸ்கூல்ல நடக்கும் விளையாட்டு போட்டில இதும் இருக்கும். 
காய்ந்த பனை அல்லதுதென்னை  ஓலைல செஞ்ச காத்தாடியை  ஒரு குச்சில முள்ளைக்கொண்டு சொருகி வச்சு,  தெருதெருவா ஓடி இருக்கேன்.
சாலை வசதி இல்லாததால் அடிக்கடி சைக்கிள் டயர் பஞ்சர் ஆகும். பெரும்பாலும் அது எல்லார் வீட்டிலயும் இருக்கும்.  சின்ன குச்சியை வச்சி தட்டிக்கிட்டே ஓட்டிய டயர் வண்டி. கைகால்லாம் டயர் கருப்பு ஒட்டி வீட்டில் வெளக்கு மாத்தடி வாங்குனதுலாம் மறக்கமுடியுமா?!

ரெண்டு பேர்  எதிரெதிரே நின்னுக்கிட்டு கைகளை  தூக்கிக் கோர்த்துக்கிட்டு நிக்க,  முன்னாடி அந்த கைகளுக்குள் போய், கைதூக்கி  நிக்குறவங்களை  எட்டு மாதிரி சுத்தி வரனும்.  அப்படிசுத்தி வரும்போது ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்ததாம்... ன்னு பாடுவாங்க. எட்டு  இல்ல பத்து பூ வரைக்கும் சொல்லிட்டு பாட்டு முடிஞ்சதும் டப்புன்னு கையை இறக்க கைகளுக்குள் நுழைஞ்சவங்க மாட்டிப்பாங்க. அப்படி மாட்டிக்கிட்டவங்க. இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கான்னு கொஞ்சூண்டு கைகாட்டுவாங்க. இவங்க மாட்டேன்னு சொல்லி பேரம் பேசி கைகளை பெருசா விரிப்பாங்க. 
அப்படியும் பேரம் படியாம உன் பொண்டாட்டி பேரென்னன்னு பையன்கிட்டயும், உன் புருசன் பேர் என்னன்னு பொண்ணுக்கிட்டயும் கேட்டு அவங்க சொல்லும் பேர் உள்ள ஆளையும்(குழுவில் இருக்கும் ஆளு பேரைதான் சொல்லனும், நம்ம ஆளு பேர்லாம் சொல்லப்படாது), அவங்களையும் கைக்கோர்த்து நிக்க சொல்லிட்டு மத்தவங்க விளையாட்டை தொடர்வாங்க. 
ட்ரெயின் விளையாட்டு. ஒருத்தர் பின்னாடி ஒருத்தர்ன்னு விளையாடியது. இது எல்.கே.ஜி லெவல்  விளையாட்டு. 
தென்னந்துடைப்ப குச்சியில் நியூஸ் பேப்பர் ஒட்டி காத்தாடி செஞ்சு ரெண்டு மூணு மீட்டர் நூல் கொண்டு இணைச்சு பட்டம் பறக்கவிட்டு  படத்துல காட்டுற மாதிரி வானளாவ ஏன் பறக்கலைன்னு செல்லூர் ராஜுக்கே டஃப் காம்பெட்டீஷன் கொடுத்த ஆட்கள் நாங்க. 

பரிட்சைல முட்டைதான் வாங்கபோறோம்ன்னு சொல்லாம சொல்லி வீட்டினரை அலர்ட் செய்ய ஊதிய பப்பிள்ஸ். சோப்பு தண்ணி கரைக்குறோம்ன்னு சொல்லி, அம்மா ஈடுப்பு நோக கிணத்துல இருந்து கொண்டு வந்த தண்ணிலாம் சோப்பாக்கி பாடாய் படுத்தி இருக்கேன். ஊதுற முட்டை பெருசாவும், சீக்கிரத்திலும் உடையாம இருக்க, துளி எண்ணெய் சேர்க்க ஆலோசனை கொடுத்த ஆட்களும் உண்டு. 

கிராமத்து வாழ்க்கை இன்னமும் தொடரும்...

நன்றியுடன்,
ராஜி (காந்திமதி)

11 comments:

  1. நிறைய நினைவலைகளை மீட்டி விட்டீர்கள். இதில் கோலி, கிட்டி விளையாட்டில் நான் சூரன்.

    ReplyDelete
    Replies
    1. நான் ரெண்டுத்துலயுமே ஆரம்பக்கட்ட பிளேயர்தான்.

      Delete
  2. பழைய நினைவுகளை மீட்டெடுத்த பதிவு. எங்களுக்கு அதிகம் பிடித்து விளையாடியது கிட்டிப்புல்தான்.

    ReplyDelete
    Replies
    1. நல்லதுப்பா. அதான் இன்றைய கிரிக்கெட்டின் முன்னோடின்னு சொல்றாங்க

      Delete
  3. ஒருகணம் இருபதாண்டு பின்னோக்கி போய் வந்தாகிவிட்டது சகோதரியாரே.. புளிய முத்துக்களை வைத்துக்கொண்டு செதுக்கு முத்து விளையாடுவதை விட்டுவிட்டீர்களே.. டயர் வண்டி ஓசியில் வாங்கி நாலு ரவுண்டு அடித்ததை நினைவுகூர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பதிவு தொடரும்ன்னு போட்டிருக்கேனே! கவனிக்கலையோ?!

      செதுக்கு முத்துன்னா பல்லாங்குழியா?!

      Delete
  4. ​சுவாரஸ்யமான நினைவலைகள். இது பற்றி முன்னரே எழுதி இருக்கிறீர்களோ?

    ReplyDelete