அனைத்து உயிர்களுக்கும் முதல் உறவாகவும் முதன்மை உறவாகவும் திகழ்பவள் அம்மா! எல்லோருக்கும் அம்மாதானே முதல் தெய்வம். ஆனால், இப்படி ஓர் உன்னதமான தெய்வமான அம்மா, ஒரே ஒருவருக்கு மட்டும் வாய்க்கவில்லை. காரணம், அவர் பிறப்பில்லாதவர். நமக்கெல்லாம் அன்பு செலுத்தி அரவணைக்க ‘அம்மா’ என்னும் புனித உறவு இருப்பதைப் பார்த்து, தனக்கும் ஓர் அம்மா வேண்டும் என்ற ஆசை அந்தப் பிறப்பிலிக்கும் ஏற்பட்டு விட்டது. இப்படி ஆசைப்பட்ட அந்தப் பிறப்பிலி யார் தெரியுமா? வேறு யார்? சாட்சாத் சர்வேஸ்வரனான அந்த சிவபெருமான்தான்! சகல லோகங்களுக்கும் நாயகனான அந்த சர்வேஸ்வரனுக்குத் தாயாக இருக்கவேண்டுமானால், அந்த ஈசனைப் போலவே மிக மிக மேன்மையும் புனிதத்துவமும் கொண்ட ஒரு பெண்ணால்தானே முடியும்?! தனக்கு ஒரு தாய் வேண்டும் என்று விருப்பம் கொண்டுவிட்ட சிவபெருமான், தனக்கான அன்னையை தோன்ற வழிவகை செய்தார்.
தேவர்களில் ஒருவரான தும்புரு வீணை வாசிப்பதில் மிகச்சிறந்தவர். அவரின் மகளான சுமதி சிவன்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சிவனை நினைத்து, தவமிருந்த நேரத்தில் அங்கு வந்த துர்வாச முனிவரை கவனிக்க தவறிவிட்டாள். துர்வாசருக்கு வந்ததே கோபம் .. உடனே, மானிடப்பெண்ணாய் பிறந்து அவதிப்பட்டு கைலாயம் வந்துசேர் என சாபமிட்டார்.
அப்போதைய காரைவனம் என்றழைக்கப்பட்ட இப்போதைய புதுச்சேரி, காரைக்காலில் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளான புனிதவதியாய் பிறந்தாள் சுமதி. சிவ வழிபாட்டிலயும், சிவனடியாருக்கு தொண்டு செய்வதிலயும் காலம் சென்றது. திருமணம் பருவம் வந்ததும், பெரும் வணிகனான பரமதத்தனுக்கு மணமுடித்தனர். சிறந்த சிவ பக்தைக்கு, இறைவழிபாட்டில் நம்பிக்கை இல்லாத மணாளன் அமைந்தாலும், புனிதவதியாரின் சிவத்தொண்டுக்கு எந்தவொரு தடையையும் பரமதத்தன் விதிக்கவில்லை. இனிமையாகவே அவர்களது இல்லறம் நடந்துக்கொண்டிருந்தது.
தனது கடையிலிருந்த வேளையில் பரமதத்தனுக்கு இரு மாங்கனிகளை பரிசளித்தான் மற்றொரு வணிகன். அதை தன் மனைவி புனிதவதியாரிடம் சேர்ப்பிக்கச்சொல்லி கடையில் சேவகனிடம் கொடுத்தனுப்பினான். அவனும் அவ்வாறே பழங்களை புனிதவதியாரிடம் சேர்ப்பித்தான். மாம்பழங்களை வாங்கி பத்திரப்படுத்திவிட்டு சமையல் வேலையில் மூழ்கிப்போனார் புனிதவதியார். அப்போது சிவனடியார் ஒருவர் வாசலில் வந்து நின்று பிட்சை கேட்டார். இன்னும் சமைக்கவில்லை. கொஞ்சம் பொறுங்கள்ன்னு புனிதவதியார் சொல்ல பசிக்கிறதம்மா. சாப்பிட்டு வெகுநேரமாச்சு சமைச்சு முடியும்வரை என்னால் தாங்க இயலாது வேற எதாவது சாப்பிட கொடு என்றார். சிவனடியாரின் பசியை போக்க கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை கொடுத்தனுப்பினார்.
மதிய உணவிற்கு வந்த கணவர் பரமதத்தனுக்கு உணவு பரிமாறி, கணவர் கொடுத்தனுப்பிய மாம்பழத்தையும் வைத்தார். மாம்பழத்தை ருசித்த பரமதத்தன், மாம்பழத்தின் ருசியில் மயங்கி, மற்றொரு மாம்பழத்தையும் எடுத்து வர சொன்னான். மாம்பழத்தை சிவனடியாருக்கு கொடுத்துவிட்டேன் எனச் சொன்னால், எங்கே கணவர் கோவித்துக்கொள்வாரோ என எண்ணி, தயங்கிய புனிதவதி, உள்ளே சென்று இறைவனிடம் அழுது முறையிட்டார். புனிதவதியார் கைகளில் மாம்பழம் தோன்றியது. அதை கொண்டு போய் கணவனின் இலையில் வைத்தாள். அதை சாப்பிட்ட பரமதத்தன் அந்த பழத்தைவிட இந்த பழம் மிகுந்த ருசியுடையதாய் உள்ளது. ஒரு மரத்தில் காய்த்த இருவேறு பழங்கள் எப்படி ருசியில் மாறுபடுமென வியந்தான். கணவனிடம் உண்மையை சொன்னார் புனிதவதியார்.
அதை நம்ப மறுத்தான் பரமதத்தன். வாதங்கள் வலுத்தது. எங்கே இன்னொரு கனியை வரவை பார்க்கலாமென்றான். இறைவனை வேண்ட, அதேப்போன்ற இன்னொரு மாம்பழம் புனிதவதி கைகளில் தோன்றியது. பரமதத்தன் வியந்தான். தன் மனைவி தெய்வப்பெண் என்று எண்ணி புனிதவதியாரிடமிருந்து விலகியதோடு.. கப்பல் நிறைய பொருளோடு வாணிப செய்ய புறப்பட்டான்...
நாட்கள் நகர்ந்து வருடங்களானது. பரமதத்தன் திரும்பவே இல்லை. பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி புனிதவதியாருக்கு தெரியவந்தது. கணவனை தேடி பாண்டிய நாட்டிற்கு சென்றார். ஊருக்கு வெளியே ஒரு மண்டபத்திலிருந்துக்கொண்டு ஆட்களிடம் தன் வரவை சொல்லி அனுப்பினாள். பரமதத்தனோடு அவன் இரண்டாவது மனைவியும், அவன் மகள் புனிதவதியும் வந்தனர். அதைக்கண்டு அதிர்ச்சியுற்றார் புனிதவதியார். இந்த அதிர்ச்சி போதாதென புனிதவதியார் கால்களில் பரமதத்தனும், அவன் குடும்பத்தாரும் விழுந்து வணங்கினர். இவர் தெய்வத்தன்மை வாய்ந்தவர். இவரை வணங்குங்கள் என ஊராரிடமும் சொன்னான் பரமதத்தன். நொறுங்கிய இதயத்தோடு திரும்பிய புனிதவதியார், இறைவனிடம் கணவனே வெறுத்தப்பின் எனக்கு இந்த இளமை வேண்டாமென வேண்டி பேய்க்கோலம் பூண்டு சிவயாத்திரை மேற்கொண்டார். அன்றிலிருந்து புனிதவதி காரைக்கால் அம்மையானார்.
முக்தியடையும் நேரம் வந்ததும் இறைவனை சந்திக்க கயிலாயம் சென்றார். இறைவனின் அருள் நிறைந்த இவ்விடத்தில் தன் கால்படலாகாது என எண்ணி தலைக்கீழாய் கைகளால் நடந்தே கைலாயம் மலையை ஏறினார். தலைக்கீழாய் ஏறிவரும் காரைக்கால் அம்மையாரை கண்ட பார்வதி சிவனிடம், யாரிவர் என வினவினார். நம்மை பேணும் அம்மை இவர் எனக்கூறியதோடு, சிவப்பெருமான் காரைக்கால் அம்மையாரை நோக்கி, அம்மா! நலமோடு வந்தனையோ எனக்கேட்டு தாயில்லாத தனக்கு தாயாய் அவரை ஏற்றுக்கொண்டு, தாங்கள் வேண்டுவது என்னவென வினவினார்.
இறைவா! இப்பிறவி போதும்.... அதனால், பிறவாமை வரம் வேன்டும். ஒருவேளை அவ்வாறு பிறந்தால் உன்னை மறவாத மனம் வேண்டுமென அறுள்வாய்! இறைவா! நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்கவும் அருளவேண்டுமென " என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்ட திருவாலங்காட்டிற்கு வரப்பணித்தார். சிவனின் சொல்படி திருவாலங்காட்டிற்கு செல்ல சுடுகாட்டை கடக்கையில் அம்மையினை பரிசோதிக்க பேய்களை அனுப்பி பயமுறுத்தினார் சிவன். இறைவனின் மீதுகொண்ட பக்தியால் அப்பேய்களுக்கு முக்தியளித்து ஆலங்காட்டு கோவிலுக்கு சென்று சேர்ந்தார். அங்கு, தன் தேவியோடு ஆனந்த தாண்டவமாடி அம்மையை தன் திருவடிக்கீழ் என்றும் இருக்க அருளினார் இறைவன். அம்மையார் முக்தியடைந்த நாள் பங்குனி மாத சுவாதி நட்சத்திரம்.
காரைக்காலில் வாழ்ந்து சிவத்தொண்டாற்றியவருக்கு காரைக்காலில் இவருக்கொரு கோவில் உண்டானது. இங்கு அமர்ந்த கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனிமாதம் பௌர்ணமி தினத்தில் மாங்கனி திருவிழா நடத்துவது வாடிக்கையானது. இவ்விழா 5 நாட்கள் நடைப்பெறும். முகூர்த்தக்கால் நடப்பட்டு மாப்பிள்ளை அழைப்புடன் இவ்விழா ஆரம்பமாகும்.
பிட்ஷாடண மூர்த்தி ரூபத்தில் வெள்ளை அங்கி சார்த்தி, பவழக்கால் சப்பரத்தில் வலம் வருவார். அப்போது புனிதவதியார் சிவனுக்கு மாங்கனி கொடுத்ததை நினைவுக்கூறும் விதமாக நேர்த்திகடனுக்காக தங்கள் வீட்டின் மாடியிலிருந்து கூடைக்கூடையாய் மாங்கனிகளை வீசுவதோடு இத்திருவிழா முடிவுறும்.
(மாங்கனி திருவிழா
பிட்சாடனாருக்கு அமுது படையல் தீபாராதனை இன்று நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டது )
பிட்சாடனாருக்கு அமுது படையல் தீபாராதனை இன்று நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டது )
அப்படி வீசப்படும் மாங்கனிகள் இறைவனின் பிரசாதம் எனவும், அந்த மாங்கனிகளை சாப்பிட்டால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும். இதற்கு மறுநாள் அம்மையார் பேயுரு கொண்டு திருவந்தாதி இரட்டை மணிமாலை பாடியபடி கைலாயம் செல்லும் நிகழ்ச்சி நடைப்பெறும். அன்றைய தினம் வீதிகளில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு தீவட்டி வெளிச்சத்துடன் பேயுருவாக அம்மை வீதியுலா வருவது கண்ணீர் வரவைக்கும். அதேசமயம் சிவனும், பார்வதியும் அம்மையாரை எதிர்கொண்டு காட்சி தருவர்.
காரைக்கால் மட்டுமல்லாமல் மற்ற சில கோவில்களிலும் இவ்விழா கொண்டாடப்படுது. கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், குலசேகரன்பட்டி காரைக்கால் அம்மையார் கோவிலிலும், கோவில்பட்டி சென்பகவள்ளி கோவிலிலும் இவ்விழா நடைப்பெறும். இவ்வாறு மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் மாங்கனி விழா இன்று நடைப்பெறுகிறது .
காரைக்கால் அம்மையார், சமயக்குரவர்கள் என்றழைக்கப்படும் நால்வரான அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகருக்கெல்லாம் மூத்தவர். மூன்று பெண் நாயன்மார்களில் முதன்மையானவர், நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பவர் இவர் மட்டுமே. சிவனாலேயே அம்மா என அழைக்கப்பட்டவர். அம்மையாரின் பாடல்கள் மட்டுமே மூத்த திருப்பதிகமென அழைக்கப்படுது. திருவாலங்காட்டில் அம்மை முக்தியளித்ததால் திருஞானசம்பந்தர் அவ்வூரில் கால்பதிக்க தயங்கினார். நாயன்மார்களில் தனிக்கோவில் கொண்டவர் இவர் மட்டுமே.
காரைக்கால் அம்மையாரின் ஜீவ சமாதி ,பண்டுருட்டியிலுள்ள திரு அதிகை வீடானேஸ்வரர் திருகோயிலில் இருக்கிறது .என்பது கூடுதல் தகவல் .
காரைக்காலில் இன்று காலை 7 மணி முதல் மாங்கனி திருவிழா கோலாகலமாய் தொடங்கி சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.
காரைக்கால் அம்மையாரின் ஜீவ சமாதி ,பண்டுருட்டியிலுள்ள திரு அதிகை வீடானேஸ்வரர் திருகோயிலில் இருக்கிறது .என்பது கூடுதல் தகவல் .
ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனின் அன்னை ஸ்தானத்தில் இருப்பவரை வணங்கி சிவன் அருள் பெறுவோம்
ராஜி.
அருமையான மாங்கனித் திருவிழாப் பதிவு.சிறு வயதில் படித்தது..மீள் நினைவுக்கு நன்றி,தங்கச்சி.....அழகான படங்கள்....... நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteகேள்விகள் கேட்காமல் எதையும் மனம் ஏற்றுக் கொள்வதிலை பார்க்கவும் என் புதிய பதிவை ஸ்ப்பெயின் நாட்டிலோ எங்கோ தக்காளிகளை வீசி விளையாடுவார்களாம் எனக்கும் பெண்கள் எல்லோரையும் தாயாகவே நினைக்கும் எண்ணமுண்டு ஒரு வேளை நானும்சிறுவயதிலேயே தாயை இழந்ததாலோ என்னவோ
ReplyDeleteகண்டிப்பா உங்க பதிவை வந்து பார்க்கிறேன்ப்பா. ஓ! உங்க அம்மா சிறு வயசிலேயே இறைவனடி போயிட்டாங்களா?! மகள், பேத்தி உருவில் அம்மாவை பார்க்கும் பாக்கியமாவது கிடைச்சுதாப்பா?!
Deleteவிளக்கம் அருமை...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteதெரிந்த விவரங்களும் தெரியாத விவரங்களும். ஆகமொத்தம் சுவாரஸ்யமான பதிவு.
ReplyDeleteகாரைக்காலம்மையார் என்றால் எனக்கு கே பி சுந்தராம்பாள்தான் நினைவுக்கு வருகிறார்!
நன்றி சகோ ,எல்லோருக்கும் அவர்தான் ஞாபகம் வருகிறார் போல ,அந்த படத்தில் அவ்வுளவு உயிரோட்டமாக நடித்துள்ளார் அவர் ..
Deleteநிறைய விவரங்கள் தெரிந்தவை.....தெரியாதவை அறிந்தோம் சகோ/ ராஜி
ReplyDeleteவருகைக்கும் ..கருத்துக்களுக்கும் நன்றி....
Deleteஅறியாத செய்திகள்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
நன்றி சகோ
Deleteமிக நல்ல பதிவு. காரைக்கால் அம்மையாரின் சமாதி ,பண்டுருட்டியிலுள்ள திரு அதிகை வீடானேஸ்வரர் திருகோயிலில் உள்ளதாக உங்களுடைய பதிவில் குறிப்பிட்டு ள்ளீர்கள்.இதுவரை அப்படி ஒரு குறிப்பு எங்கேயும் இல்லை.கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்
ReplyDeleteகோவிலின் உள்பக்க பிரகாரத்தில் ,வலப்பக்கமாக ஒரு மண்டபம் இருக்கு ,அது பூட்டியே இருக்கும் .அங்கிருக்கும் அர்ச்சகரிடம் சொன்னால் திறந்து காட்டுவார்கள் .அந்த ஜீவ சமாதியின் மேல் இரண்டு கால்கள் சிற்பம் இருக்கிறது .எனக்கும் முதலில் தெரியாது ,ஏன் நம்மில் அநேகருக்கு அது தெரியாது .கோவிலில் இருப்பவர்களை கேட்டால் சொல்லுவார்கள் .அடுத்தமுறை போகும் போது விசாரித்து வாருங்கள் ...சகோ
Deleteஅனைவருக்கும் தந்தையானவர் அம்மா என்றழைத்த பெருமை கொண்ட காரைக்காலம்மையாரை நினைவுகூறும் விதமாக நடத்தப்பெறும் மாங்கனித் திருவிழாவிற்குக் குடும்பத்துடன் சென்றுள்ளேன். இப்பதிவு மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு.
ReplyDeleteமிக்க நன்றிப்பா ..
Delete