Friday, June 29, 2018

விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பேரூர் பட்டீஸ்வரர் -அறிவோம் ஆலயம்


கற்காலம், கணினிக்காலம், கலிகாலமென எந்த கலத்திலும் மனிதனுக்கு எல்லாவற்றையும்விட உடுக்க உடை, இருக்க இடம், உண்ண உணவு என இந்த மூன்றும் அவசியமானது.  உடை இல்லாமலும், இடம் இல்லாமலும்கூட வாழ்ந்து விடலாம். ஆனா, உண்ண உணவு இல்லாமல் உயிர்வாழவே முடியாது. உணவு மனிதனுக்கு மட்டுமல்ல ஈ, எறும்பு முதல் யானை வரை அனைத்து உயிர்களுக்கும் அத்தியாவசியம். அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவு பெரும்பாலும் விவசாயத்தின்மூலமே கிடைக்குது. அனைத்து உயிர்களுக்கும் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயி  கடவுளுக்கு ஒப்பானவர். 
அப்படிப்பட்ட விவசாயியை நாம் போற்றி பாதுகாக்குறோமான்னு பார்த்தால் இல்லன்னுதான் சொல்லனும். இப்படிலாம் நாம செய்வோம்ன்னு உணர்ந்த கடவுள்கள் தங்கள் அவதாரங்களில் இதை உணர்த்தவே செய்கின்றனர்.  அக்காலத்தில் சிவபெருமான் விவசாயியாகவும், அன்னை பார்வதிதேவி விவசாயப் பெண்ணாகவும் வந்து சேற்றில் தங்கள் திருப்பாதம் பதித்து, நாற்று நட்டு விவசாயம் புரிந்த நிகழ்வு நடந்துள்ளது. அது என்ன கதைன்னு பார்ப்போம். வாங்க!

ஒருமுறை மகாவிஷ்ணுவிடம் பிரம்மனின் படைப்புத்தொழில் ரகசியத்தை காமதேனு கேட்டது. அதற்கு விஷ்ணு, தட்சிண கயிலாயமாக விளங்கும் பேரூர் ஆலய ஈசனை வழிபட்டு வர பணித்தார். காமதேனுவும் தனது கன்று பட்டியுடன் பேரூர் வந்து அங்கே காஞ்சி நதி என்னும் நொய்யல் நதிக்கரையில் இருந்த புற்று சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. ஒருநாள் விளையாட்டாய் காமதேனுவின் கன்று பட்டி, புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தை கலைத்துவிட்டது. கன்றின் குளம்படி ஈசனின் திருமுடியில் அழுத்தமாகப் பதிந்து விட்டது. பதறிப்போன காமதேனு வருந்தியது. காமதேனுவின் வருத்தத்தைப் போக்க ஈசன் அங்கு தோன்றி, ‘பார்வதியின் வளைத்தழும்பை எம் மார்பினில் ஏற்றதுபோல, உன் கன்று பட்டியின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்' என்றார்.  மேலும், ‘பேரூர்  எனப்பெயர்கொண்ட இத்தலம், முக்தித் தலம் என்பதால், நீ வேண்டும் படைப்பு ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதனைக் கருவூர் (கரூர்) திருத்தலத்தில் அருள்கிறேன். இங்கு பேரூரில் எமது நடன தரிசனத்தை கண்டிடுக' என்றருளி மறைந்தார்.

பேரூர் தலத்தில் சுந்தரருக்கும் ஈசன் தமது ஆனந்த நடனத்தை காட்டியருளி உள்ளார். கோமுனி எனும் பசுவாக பிரம்மனும், பட்டி முனி என்னும் இடையனாக மகாவிஷ்ணுவும் பேரூரில் ஈசனை வழிபட்டு அவரது ஆனந்த திருநடனத்தை கண்டு தரிசித்து பேறுபெற்றுள்ளனர். அதற்கேற்றாற்போல் பேரூர் வெள்ளியம்பலத்தில் நடராஜரின் இரு புறமும் பிரம்மனும், விஷ்ணுவும் இருப்பது சிறப்பு. தில்லை சிதம்பரத்தில் தாம் ஆடும் ஆனந்த திருத்தாண்டவத்தை, மேற்கிலுள்ள பேரூரில் ஈசன் காட்டியருளுவதால் இத்தலத்தை ‘மேலைச் சிதம்பரம்' என அழைக்கின்றார்கள்.

ஆதிசங்கரர் எழுதிய சங்கர பாஷ்யத்தில் இக்கோவில் பற்றி கூறப்பட்டிருக்கு. வெள்ளியங்கிரி மலையை ஈசனின் சிரசாகவும், பேரூர் திருத்தலத்தை திருப்பாதமாகவும் குறிப்பிடுகிறார்கள். இங்கு ஆலயத்தில் வட கயிலாயம், தென் கயிலாயம் என இரு சன்னிதிகள் இருக்கு.  பரசுராமர், பஞ்சபாண்டவர்களும் இத்தலம் வந்து ஈசனைப் பணிந்து அருள்பெற்றதாக தலவரலாறு சொல்லுது. 

ஒருமுறை சமக்குறவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஈசனிடம் திருப்பணிக்காக பொருள் வேண்டி, பேரூர் திருத்தலம் வந்தார். அப்போது சுந்தரரிடம் விளையாட விரும்பிய ஈசன், அம்பிகையுடன் விவசாயி வேடம் பூண்டு அருகிலுள்ள வயலுக்குச் சென்று நாற்று நட்டுக் கொண்டிருந்தார். பேரூர் ஆலயத்திற்கு சென்ற சுந்தரர், அங்கு சுவாமியையும், அம்பாளையும் காணாது திகைத்தார். அவரது திகைப்பைக் கண்ட நந்தி, ஈசன் வயலில் நாற்று நடும் இடத்தைக் காட்டிக்கொடுத்தார். சுந்தரர் வயலுக்குச் சென்று அங்கு ஈசனும், அம்பாளும் விவசாயி கோலத்தில் சேற்றில் தங்கள் திருப்பாதம் பதித்து நாற்று நட்டுக் கொண்டிருப்பதையும், கூடவே இந்திரன், பிரம்மன், விஷ்ணுவும் வயலில் நீர் பாய்ச்சி, வரப்புகளை சீர்செய்வதையும் கண்டார்.
அப்போது பார்வதிதேவி பச்சை ஆடை உடுத்தி இந்திராணி, சரஸ்வதி, லட்சுமியுடன் சேர்ந்து கும்மியடித்து நாற்று நடவுப்பாடல்களை  பாடியபடி நாற்று நட்டுக்கொண்டிருப்பதையும் கண்டு துதித்து நின்றார். விநாயகரும், முருகரும் விவசாயக் குழந்தைகளாய் வந்து அங்கே வயலில் உள்ள ஆமைகளையும், மீன்களையும் எடுத்து வயல்வெளியில் வீசி குறும்பாக விளையாடிக்கொண்டிருப்பதையும் கண்டார். 

பின்னர் சுந்தரர் வயலினுள் இறங்கி நாற்று நட்டுக்கொண்டிருந்த பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனை  வணங்கி மீண்டும் ஆலயத்திற்குள் வருமாறு அழைத்து நின்றார். அம்மையும், அப்பனும் சுந்தரருடன் வரமறுக்க, ஈசனின் ஜடாமுடியை பிடித்திழுத்து வந்து ஆலயத்தினுள் சேர்ப்பித்தார். பின்பு ஈசனை துதித்து பதிகம் பாடி பொன், பொருள் வேண்டி நின்றார். அப்போது ஈசன், ‘சுந்தரா! இத்தலத்தில் உனக்கு எமது ஆனந்த திருநடனம் காட்டுகிறேன். சேரமான்பெருமான் உனது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறான். நீ வேண்டும் பொன், பொருளை அங்கு அவன் உனக்கு அளித்திடுவான்' என்று அருளி மறைந்தார். இந்த நிகழ்வு பேரூர்ப் புராணத்தின் 19-வது படலமான பள்ளுப்படலம் பகுதியில் விரிவாக கூறப்பட்டு உள்ளது. விவசாயியாகச் சென்ற சிவனுடன் வயலில் வேலை செய்ததால், இத்தல அம்பிகைக்கு ‘பச்சை நாயகி’ன்னு பெயர். நல்ல மகசூல் பெறவும், பயிர்கள் செழிப்பாக வளரவும் இவளது சன்னிதியில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் விதை நெல், தானியத்துடன் பூஜிக்கிறார்கள். இங்கு சுந்தரருக்கும், சேரமான் பெருமாளுக்கும் தனி சன்னிதிகள் இருக்கு. அன்று சுந்தரர் பொருட்டு ஈசன் வயலில் இறங்கி நாற்று நட்ட நிகழ்வு அதன் தொடர்ச்சியாய் இன்றும் பேரூர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம் நாளின் முந்தைய தினம் நடைபெற்று வருகிறது.  இந்த வருடத்தைய நாற்று நடவு திருவிழா கடந்த 10/6/2018 அன்று கோலாகலமாக நடைப்பெற்றது..

அன்றையதினம் ஆலயத்தின் அருகில் உள்ள வயலில் ‘நாற்று நடும் விழா' எனும் பெயரில் பத்துநாள் திருவிழாவாக நடைபெறுகிறது. மறுநாள் காலையில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. ஈசனும், அம்பாளும் நாற்றுநடும் வயலில் உள்ள மண்ணெடுத்து வந்து வயலிலோ, தோட்டத்திலோ சிறிது தூவினால் மகசூல் நிறையக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மண்ணில் சிறிது எடுத்துவந்து வீட்டின் முகப்பில் ஒரு பச்சை நிறத் துணியில் கட்டித் தொங்கவிட்டால் தீய சக்திகள், வாஸ்து கோளாறுகள்லாம்  நீங்கும் என்பது ஐதீகம் .  இங்கு தல விருட்சமாக சித்தேச மரம் எனும் அரச மரம் இருக்கு .

விவசாயம், விவசாயிகளின் பெருமை பேசும் தலம் மட்டுமல்ல. இன்னும் ஐந்து அதிசயங்களை தன்னகத்தே  கொண்டது இத்தலம். அது என்னன்னு பார்க்கலாமா?!
பிறவாப்புளி
பேரூரில் தல விருட்சமாக அரச மரமாக இருந்தாலும், பனையும், புளியமரமும்கூட தலவிருட்சமாக கருதப்படுது.   தலவிருட்சமாக உள்ள புளியமரத்தின் விதைகளை உலகத்தின் எந்த மூலைக்கு கொண்டு சென்று விதைத்தாலும் முளைப்பதில்லை.  அதனால் இம்மரத்துக்கு ‘பிறவாப் புளி’ன்னு பேரு. இந்த ஒரு பிறவி மட்டுமே போதுமென, இந்த புளியமரம் ஈசனிடம் வரம் வாங்கி வந்ததாக சொல்கிறார்கள். இதன் மூலமாக, இத்தல ஈசனை பணிந்தால் மறுபிறப்பில்லை என்பதை ஈசன் உணர்த்துவதாக சொல்கிறார்கள். இங்கு இறப்பவர்கள் காதுகளில், ஈசனே ‘நமசிவாய’ மந்திரம் சொல்லி சிவலோகம் அழைத்துச் செல்வதாக ஐதீகம்.  பல அறிவியலாளர்கள் பலமுறை பல இடத்தில் முயற்சி செஞ்சும் இம்மரத்தின் விதைகள் முளைக்கலியாம். 

இறவாப்பனை...
பல ஆண்டுகள் கடந்தபின்னும் இன்னமும் பசுமை மாறாம இளமையாகவே இருக்கிறது தலவிருட்சமான  பனைமரம், இந்த மரத்திற்கு இறப்பென்பது எப்போதுமே கிடையாதாம். இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால் தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள்.  வியாதிகளை தீர்த்து நீண்டகாலம் நம்மை வாழ வைப்பதால் இந்த மரத்திற்கு "இறவாத பனை"ன்னு பேர். 

புழுக்காத சாணம்.
பொதுவா ஓரிரு தினங்களில் மாடு, ஆடு இடும் சாணத்தில் புழு வைத்து, மக்கி மண்ணோடு மண்ணாகும். ஆனா, இந்த ஊர் எல்லைக்குள் ஆடு மாடு இடும் சாணத்தில் புழு வைப்பதில்லை. நாளடைவில் மண்ணோடு மண்ணாய் மக்கிவிடுது. 
மனித   எலும்புகள் கல்லாகும் அதிசயம்... 
இந்த   பகுதிகளில் இறந்து விட்டவர்களின்  உடலை எரித்த‍ப்பின்  மிச்ச‍மாகும் எலும்புகளை,  இறந்தவர்களின்  ஆத்மா புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக இங்குள்ள‍ நொய்யல் ஆற்றில் விடுவார்களாம். அப்ப‍டி ஆற்றில் விடப்படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறிடும். 
வலது காது மேல் நோக்கி இருக்கும் அதிசயம்..

பேரூர்  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் யாரேனும் இறந்துவிட்டால் அவரின் வலதுகாது மேல்நோக்கியே இருக்கும். அதுக்கு காரணம், இறந்தவரின் காதுகளில், சிவனே பிரணவ மந்திரம் சொல்லி,  முக்தி அளித்து கைலாயத்துக்கு அழைத்து செல்வதாகவும் நம்பிக்கை. 
கோயம்புத்தூரில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் 8 கிமீ தூரத்தில் இருக்கு பேரூர்.   இத்தனை அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் பட்டீஸ்வரர் அமைதியாய் இத்தலத்தில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கிறார். இப்போது கோவில் இருக்கும் இப்பகுதியானது அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.  அப்போது அங்கு பல பசுமாடுகள் இங்கு மேய்ச்சலுக்கு வருமாம். அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம். இதைப்பார்த்த‍ ஒருவன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்த‍வர்தான் நமது "பட்டீஸ்வரர்."  அப்படி கிடைக்கும்போதே  பல அதிசயத்துடன் கிடைத்தார். 

இவரின் திருமேனியில் தலையில், படமெடுத்தாடும்  ஐந்து தலைப்பாம்பு, மார்பில் பாம்பின் பூணூல்,  தலையில் அழகழகாய் சடைக்கொத்துக்கள், சடைகளுக்கு அரணாய் இருப்ப‍துபோல் கங்கை, அன்ன‍மும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள், இவைகளோடு " பட்டீஸ்ரர்" தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன. இதையெல்லாம் பார்த்த‍ மக்க‍ள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித்தார்கள். இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்க‍ளைச் சொறிந்து கொண்டிருக்கின்றன.

ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றார் மன்ன‍ன் திப்பு சுல்தான்.  இந்தக் கோயிலின் அதிசயத்தை எல்லாம் இங்குள்ளவர்கள் சொல்லக்கேட்டுக்கொண்டு வந்தவன், இங்கிருக்கும் சிவலிங்கம் அடிக்கடி அசையுமென சொல்வதை கேட்டு நம்பாமல் சிவலிங்கத்தின்மீது கைவைத்து, அசைத்து பார்த்திருக்கிறார்.  நெருப்பின்மீது கைகள் வைப்ப‍துபோல் உணர்ந்து துடித்திருக்கிறான். கண்கள் இருண்டு கீழே விழுந்தவன்,  சிறிது நேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது "பட்டீஸ்வரரிடம்" தன்னை மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான். பின்னர்  பட்டீஸ்வரனின் மகிமையை உணர்ந்து கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான். இவனைப்போன்றே "ஹதர் அலியும் " நிலங்களை மானியங்களாக தந்திருப்ப‍தாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன. 
இறைவனின் ஐந்து அதிசயங்களோடு, சிற்பக்கலை அதிசயத்தையும் இக்கோவிலில் பார்க்கலாம், இந்த ஆலயத்தின் முன், சிங்கத்தின் வாயினுள்  அத‌ன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. எத்தனை உருட்டினாலும் கல் வெளியில் வருவதில்லை. ஒரே கல்லில் செதுக்க‍ப்பட்ட‍ சுழலும் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள் என கல்லால் ஆன அதிசயங்கள் எத்தனையோ!!  இந்த ஆலயத்தைப் பஞ்சபாண்டவர்களும், பரசுராமரும் காமதேனு, வியாக்யபாதர், பதஞ்சலி, காலவரிஷி, கோமுனி, பட்டிமுனி , போன்றவர்கள்  வணங்கி உள்ளனர்.  அருணகிரிநாதரால் பாடல் பெற்றுள்ள‍ முருகன் பழனியில் உள்ள‍தை போன்றே மேற்கு நோக்கி தண்டபானித் தெய்வமாய் பக்தர்களுக்கு காட்சி தருகின்றான். 

காமதேனுவின் கன்றான பட்டி மிதித்து, பட்டியின் குளம்பின் தடயத்தை தாங்கியதால் இத்தல இறைவனுக்கு பட்டீஸ்வரர்ன்னு பேர் வந்தது... இந்த நாற்று நடும் திருவிழா போன வாரம் நடந்துச்சு.

திருச்சிற்றம்பலம்..

நன்றியுடன்,
ராஜி

10 comments:

  1. அதிசய தகவல்களாக இருக்கிறது சகோ
    கோவை போகும்போது ஒருநாள் போய் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் போனதில்லைண்ணே. வாய்ப்பு கிடைக்குதான்னு பார்க்கலாம்...

      Delete
  2. அருமையான வரலாறு......விவசாயிகளுக்கும்,விவசாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காத இக்காலத்தில் இப்பதிவு வேண்டியதே!இறைவனின் திரு விளையாடல்கள் எத்தனை,எத்தனை... நன்றி தங்கச்சி,பதிவுக்கு......பல தெரியாத,தெரிந்திராத தகவல்கள் பட்டீஸ்வரம்/பட்டீஸ்வரர் பற்றி.....அழகான பிரதிமைகள்....

    ReplyDelete
    Replies
    1. ஊரின் பெயர் பேரூர். கடவுளின் பெயர் பட்டீஸ்வரர். காமதேனுவின் குட்டியான பட்டியின் கால் குளம்பு பட்டு அந்த தழும்பு இறைவனின் திருமேனியில் இருப்பதால் இந்த பெயர்ண்ணே.

      Delete
  3. புளியமர விஷயம் ஒரு ஆச்சர்யம். விவரங்கள் தெரிந்துகொண்டேன். சமீபத்தில்தான் கும்பகோணம் பட்டீஸ்வரர் ஆலயம் சென்று வந்தேன். இறந்தவர்களின் காதுகள் மேல்நோக்கி - நம்பமுடியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. மேல்நோக்கின்னா காது தூக்கிட்டு இல்ல சகோ. முகத்தின் இடது பக்கம் தரையிலும், வலது பக்க முகம் மேல்நோக்கியும் இருக்குற மாதிரியும் இருக்குமாம்.

      Delete
  4. எட்டு வழிச்சாலை விவசாயிகளை கொஞ்சம் காப்பாற்ற சொல்லுங்கம்மா...

    ReplyDelete
    Replies
    1. இப்பயும் சாமி மனசு வச்சால் எல்லாம் சுமூகமா முடியும். அவரு பேரு எடப்பாடி சாமி

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையிலுள்ளச் சில படங்களை உபயோகித்துக் கொள்ளத் தங்கள் அனுமதியைக் கோருகிறேன்.நன்றி.

      Delete