Saturday, June 02, 2018

ஓடி விளையாடு பாப்பா - கிராமத்து வாழ்க்கை 2

சாதி, மத, ஆண், பெண் பேதமின்றி  நேரங்காலம் இல்லாம இடம் பொருள் ஏவல் பார்க்காம பாதுகாப்பா விளையாடினோம். ஆனா இன்னிக்கு நம்ம குழந்தைகள்?!  நாம் அனுபவித்த கிராமத்து வாழ்க்கையை ரிவைண்ட் பண்ணி பார்க்கலாம் வாங்க. 
இப்பலாம் பிளாஸ்டிக்ல வந்திட்டுது. முன்னலாம் ஈச்சம், பனை ஓலையை வெட்டி, முட்களால் குச்சியில் குத்தி இந்த காத்தாடி செய்வோம். இப்ப இருக்குற மாதிரி அம்புட்டு ஈசியா இது சுத்திடாது. இதை சுத்த வைக்க தெருத்தெருவா தூக்கிட்டு ஓடி இருக்கேன். 
இது ரெண்டு பேர் விளையாடும் விளையாட்டு, ஒருவர் நீளமா ஒரு அடிக்கு மணலை குமிச்சு,  அதில் சின்னதா ஒரு குச்சியை மறைச்சு வைக்க, எதிரில் இருப்பவர் ரெண்டு கைகளால் சரியா அந்த குச்சி இருக்கும் இடத்தை லாக் பண்ணனும். அப்படி கண்டுபிடிச்சுட்டா அடுத்து அவர் ஆட்டத்தை தொடங்குவாங்க. இல்லன்னா  தோத்தவர் கைநிறைய மணலை அள்ளிக்கிட்டு அதில் குச்சியை சொருகி, ஜெயிச்சவர் அவர் கண்ணை மூடிக்கிட்டு எதாவது ஒரு இடத்தில் அந்த மணலை கொட்டிட்டு, ஆட்டம் ஆரம்பிச்ச இடத்துக்கு வருவாங்க. அங்கிருந்து  கண்ணை மூடிக்கிட்டவர் மணலை கொட்டிய இடத்தை கண்டுபிடிக்கனும். மணலை கொட்டியதும் கூடி இருக்கவுங்க அந்த மணலை மூடும் வேலைய பார்த்துப்பாங்க. இதுக்கு கிச்சு கிச்சு தாம்பாளம். 
இது குழுவாய் விளையாடும் விளையாட்டு. ரெண்டு குழுவிலும் சரிசமமா ஆட்கள் இருக்கனும். ஒரு குழுவில் ஒருவரை தவிர மத்தவங்கலாம் எதிரெதிர் திசையில் அமர்ந்திருக்க,  இன்னொரு குழுவினர் உக்காந்திருக்கவுங்களை சுத்தி ஓடுவாங்க. அமராம இருக்கும் ஒருவர் இவங்களை பிடிக்க ஓடுவார். அவருக்கு முடியாதபோது உக்காந்திருக்கவுங்க முதுகில் தட்டுவார். அவர் எழுந்து ஓடனும். இப்படியே ஆட்டம் தொடரும். இதுக்கு கோ கோ ன்னு பேரு.
ஒவ்வொரு வீட்டிலிருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள் கொண்டு வர ஓரிடத்தில் எல்லாரும் சேர்ந்து சமைப்போம், சிலர் குச்சி பொறுக்கிட்டு வருவாங்க. சிலர் ஆலமர இலைகளை கொண்டு இலை தைப்பாங்க. அதுல பரிமாறி சாப்பிடுவோம். வெந்தும் வேகாம உப்பு உரைப்பு கூட குறைச்சலா இருந்தாலும் அத்தனை ருசி அந்த உணவில்.  இதுக்கு கூட்டாஞ்சோறு ன்னு பேரு.
வீட்டு உத்திரத்தில் அம்மா சேலை கட்டி ஆடிய ஊஞ்சல். அது கிழிஞ்சு போய், அதனால நம்ம முதுகு கிழிஞ்ச கதையெல்லாம் நடந்திருக்கும். தண்ணி இறைக்கும் தாம்பு கயிறைக்கொண்டு மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆளுக்கு இத்தனை தரம் ஆடனும்ன்னு கணக்கு வச்சி ஆடி இருக்கேன். புது தாம்பு கயிறா இருந்தால் கைய கிழிச்சுடும்.
தீம் பார்க், பார்க், அப்பார்ட்மெண்ட்களில்  பார்க்கும் சீ சா பலகையில்  நம்ம பசங்க இன்னிக்கு சர்வ சாதாரணமாய் விளையாடி அலுத்து போச்சுதுங்க. ஆனா, அன்னிக்கு நமக்கு இது கிடைக்கல. நாங்கலாம் மாட்டு வண்டில மாடுகளை இன்னைக்கும் நுகத்தடியிலதான் இந்த விளையாட்டை விளையாடுவோம். மாட்டுவண்டிக்காரங்க பத்தி விட்டாலும், அவரு தலை மறைஞ்சதும் ஆட்டம் தொடரும். அப்படியே, மாட்டு வண்டி சக்கரத்தில் ஏறி இறங்கி அச்சாணியில் காயம்பட்டு கரிப்பூசி... அப்பப்பா, இன்னிக்கு மாட்டு வண்டி பார்க்குறதே அதிசயமா இருக்கு. அப்படியே மாட்டு வண்டி இருந்தாலும் அதுல டயர்தான் இருக்கு. சக்கரம் இல்ல.
இது குழுவாய் விளையாடும் விளையாட்டு.. வட்டமா உக்காந்திருக்க, ஒருவர் மட்டும் கையில் ஒரு துணியினை வச்சிக்கிட்டு ஓடுவார். அப்படி ஓடிக்கிட்டே யார் மடியிலாவது கையிலிருக்கும் துணியை போடுவார். மடியில் துணி விழுந்தவங்க அந்த துணியை எடுத்துக்கிட்டு ஓடனும்.  ஒரு ரவுண்ட் முடியுறதுக்குள் துணியை போட்டவங்களை பிடிச்சுட்டா அவங்க உக்காந்துக்கலாம். இல்லன்னா, துணிய போட்டவங்க. காலியா இருக்கும் இடத்துல உக்காந்துப்பாங்க.இப்படி இந்த ஆட்டம் தொடரும்.

அம்மா துணி துவைக்க  ஏரி, ஆத்துக்கு போகும்போது அவங்களோடு போவோம். அம்மாக்கு ஹெல்ப் பண்ண இல்ல.   சின்ன சின்னதாய் கற்களை பொறுக்கி வர. அப்படி பொறுக்கி வரும் கல்லை கொண்டு குழுவாய் இல்லன்னா தனித்தனியாய் விளையாடுவோம். மொத்தமா கல்லை கொட்டி ஒத்தை கல்லை மேல சுண்டி கீழ இருக்கும் கற்குவியலில் இன்னொரு கல்லை அசைக்காம கல்லை ஒன்னொன்னா, ரெண்டா, கும்பலான்னு எப்படி வேணும்ன்னாலும் எடுக்கலாம். ஆனா, கையிலிருக்கும் கல்லோ சுண்டி விட்ட கல்லோ கீழ விழக்கூடாது. அதேமாதிரி  கல்லை எடுக்கும்போது பக்கத்திலிருக்கும் கல்லை அசைக்கக்கூடாது. அப்படி அசைஞ்சா அவுட். இப்படி பந்தயம் கட்டி விளையாடுவோம். கல்லுக்காய் இல்லன்னா கல்லாங்காய்ன்னு சொல்வாங்க. வெறும் அஞ்சுக்கல்லை கொண்டும் விளையாடலாம். ஒரு கல்லை சுண்டி விட்டு ஒவ்வொரு கல்லா எடுக்கனும். அடுத்து 2, அடுத்து 3, அடுத்து 4ன்னு இந்த விளையாட்டு போகும்.
தாயம், பரமபதம்ன்னு சொல்லி விளையாடும் விளையாட்டு இது. இதை வீட்டில் விளையாடினா திட்டுவாங்க. மகாபாரத கதையால் இந்த ஆட்டத்தின்மேல் ஒரு பயம்.  
தீப்பெட்டியில் கயிறை நுழைச்சு விளையாடின டெலிபோன் விளையாட்டு, இன்னிக்கு ஸ்மார்ட் போனை அசால்டா கையாண்டாலும் டெலிபோன் விளையாட்டை மறக்க முடியாதே!

பேப்பர்ல கேமரா, கப்பல் செய்வாங்க. கூடவே நாலு கிண்ணம் இருக்குற மாதிரி செய்து நாலு விரலை நுழைச்சுக்கிட்டு விளையாடுவாங்க. இன்னியவரைக்கும் பேப்பர்ல கப்பலும், கேமராவும் செய்ய துப்பில்ல எனக்கு. 

கழுத்திலிருக்கும் சாமி கயிறை கொண்டு விளையாடிய விளையாட்டு இது. ஒரு மிட்டாயில் இரு துளைகளில் கயிறு நுழைச்சு இருக்கும் அந்த மிடாய் அப்ப பத்து பைசா. அதை வாங்கி  மிட்டாயை தின்னுப்பிட்டு அந்த கயிறில் இதை விளையாடி இருக்கோம். 
பாவாடை சுழல அக்காக்கள் சுத்துவாங்க. அப்ப சிலசமயம், நம்ம கையை பிடிச்சுக்கிட்டும் நம்மையும் அவங்களோடு சுத்த வைப்பாங்க. அதுக்கு பேரு தட்டாமலை... 
ஆண்பிள்ளைகள் விளையாடிய விளையாட்டு. பார்க்கலைன்னுலாம் பொய் சொல்ல மாட்டேன். பார்த்தும் பார்க்காத மாதிரி கடந்து போயிருப்போம்.  சுவத்துல படம்லாம் வரைவானுங்க. பேட் பாய்ஸ். இன்னிக்கு எல்.கே.ஜி பையன்கூட, பாத்ரூம் கதவை மூடிக்கிட்டு போகுது. தவறி திறந்துட்டா கத்துதுங்க. பெரிம்மாதானே, அத்தைதானேன்னு சொன்னா முறைக்குதுங்க...

ஆயிரம் சொன்னாலும் ஆயிரம் அடைந்திருந்தாலும் பொன்னான பொன்னான ஒரு காலக்கட்டத்தில்தான் பிறந்திருக்கோம்ன்ற கர்வம் எனக்குண்டு. 
கிராமத்து வாழ்க்கை தொடரும்..
நன்றியுடன்,
ராஜி

26 comments:

 1. ராஜி இது உங்களுக்கே ஓவரா தெரியலையா ஹா ஹா ஹஅ பின்ன என்ன சின்ன பிள்ளைல வெளாண்டதெல்லாம் இப்படிப் போட்டுக் ஃபீலிங்க் கிளப்புறீங்க...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்த லீவுக்கு எங்க தெரு பிள்ளைகளை கூப்பிட்டு வச்சு இதுலாம் சொல்லி கொடுத்தேன் கீதாக்கா, எல்லாம் செல்போன்ல விளையாடிக்கிட்டு டிவி பார்த்துட்டு இருந்ததுங்க. எல்லா விளையாட்டுக்கும் ஒரு பாடல் இருக்கும். அதுலாம்தான் மறந்துட்டுது.

   Delete
 2. ம்... இனிய நினைவுகள்...

  ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...

  ReplyDelete
  Replies
  1. கூடவே ஏக்கமும்...

   Delete
 3. செம்ம ராஜிக்கா...

  ReplyDelete
 4. சென்றதை எல்லாம் நினைத்திருந்தால் மிஞ்சுவது பெருமூச்சுமட்டும்தான்

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்கப்பா

   Delete
 5. இன்றைய இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது வருத்தமே

  ReplyDelete
 6. //ஆயிரம் சொன்னாலும் ஆயிரம் அடைந்திருந்தாலும் பொன்னான பொன்னான ஒரு காலக்கட்டத்தில்தான் பிறந்திருக்கோம்ன்ற கர்வம் எனக்குண்டு// உண்மையான வரிகள்... கிராமத்தில் இப்போதுள்ள பதின்ம வயதுகளில் இருப்பவர்கள் வரலாறுகளில் கூட படிக்க முடியாத நிலை இப்போது.

  ReplyDelete
  Replies
  1. பிள்ளைகளுக்கு இப்ப நேரமில்ல. அவங்க கவனம்லாம் படிப்பு, போன், டிவின்னு போயிட்டுது

   Delete
 7. //ஒருவர் மட்டும் கையில் ஒரு துணியினை வச்சிக்கிட்டு ஓடுவார். அப்படி ஓடிக்கிட்டே யார் மடியிலாவது கையிலிருக்கும் துணியை போடுவார். மடியில் துணி விழுந்தவங்க அந்த துணியை//

  தூணியை வைத்து சுத்தி யார் பின்னாலே போடும் விளையாட்டு குலை குலையாம் முந்திரிக்கா, நரியை நரியை சுத்திவா விளையாட்டு தானே?

  நிறைய விளையாட்டுக்கு பாடல்கள் உண்டு.
  நான் முன்பு பாடல்களுடன் பகிர்ந்து இருக்கிறேன்.
  நினைவுகளை மீட்ட பதிவு.

  சேலையில் ஊஞ்சல் விளையாடும் படம் கிடைக்க வில்லையா? உத்திரத்தில் தொங்கி விளையாடும் படம் போட்டு இருக்கிறீர்கள்?
  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. படம் கிடைக்கலைம்மா. பாடலை நினைவுப்படுத்தியமைக்கு நன்றி

   Delete
 8. உண்மையில் அது ஒரு பொன்னான காலகட்டம் தான்...
  வாழ்த்துக்கள் from "Local Paper"
  https://localpaperindia.blogspot.com/

  ReplyDelete
 9. நீங்கள் சொன்னதில் பல விளையாட்டுக்களை விளையாடியிருக்கிறேன் அல்லது நேரில் பார்த்திருக்கிறேன், ஒன்றே ஒன்றைத் தவிர. (Hint:'சுவத்துல படம்லாம் வரைவானுங்க. பேட் பாய்ஸ்.') உங்கள் மெமரி கார்டு 500 gb க்கு மேல் இருக்குமோ?

  -இராய செல்லப்பா சென்னை

  ReplyDelete
  Replies
  1. லாப்டாப்ல ஸ்டோர் பண்ணிக்குறதோடு சரி. ஆனா, பதிவு போட்டதும் டெலிட் செஞ்சிடுவேன்.

   Delete
 10. இவற்றில் பல விளையாட்டுகளை விளையாடியுள்ளேன். அந்த நாள்கள் என்றுமே மறக்கமுடியாதவை.

  ReplyDelete
 11. அருமை.....இதெல்லாம் நாங்க கூட வெளாடிருக்கோம்...........///ஒரு கத சொல்லட்டா.....போன வருஷம் ஊருக்குப் போயிருந்தப்போ, நாங்க விளையாடின இடங்களைல்லாம் போய்ப் பார்த்தேன்.அதுல குளக் கரையும் ஒண்ணு.போயி பழைய நினைவுகள மீட்டிட்டு வூட்டுக்கு வந்தா,அக்காமாருங்க எங்க போயிட்டு வரேன்னு கேட்டாங்க...சொன்னேன்........அதிசயமா பாத்தாங்க........34 வருஷத்துக்கப்புறம் பொறந்து வளந்த இடத்தப் பாத்தேன்.......///ஆர்மிக்காரங்க காம்ப் போட்டு நம்ம இடத்தில இருந்தாங்க.

  ReplyDelete
  Replies
  1. சிறு வயதில் விளையாடிய இடங்களுக்கு நான் நாலு வருசத்துக்கு முந்தி போனேன். அடையாளம் தெரியாதளவுக்கு இடம் மாறிட்டுது.

   Delete
 12. உண்மை. அன்றைய குழந்தைகள் சிறுவர் சிறுமியர் கூடி விளையாடி பெற்ற இன்பம் இன்றைய தலைமுறைக்கு கிட்டாதது அவர்களுக்கு நஷ்டமே.

  ஆனாலும், நீங்கள் சொன்னதுபோல் பொன்னான காலகட்டத்தில் பிறந்ததும் சமூகத்தை புரட்டபோட்ட பல மாறுதல்களை பார்த்திருக்கிறேன் கடந்திருக்கிறேன் என்பதும் பெருமையும் மகிழ்ச்சியும் தருகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமா, சொர்க்கத்தையும், நரகத்தையும் ஒருசேர பார்த்தவர்கள் நாம்..

   Delete
 13. இ(ள)னிமையான நினைவுகள்.

  ReplyDelete
  Replies
  1. அது ஒரு கனாக்காலம்

   Delete