Tuesday, April 28, 2020

குட்டி குட்டி உருளைக்கிழங்கு வறுவல் - கிச்சன் கார்னர்

உருளைக்கிழங்கு.... இது எல்லாருக்கும் பிடித்தமானது. இந்த உருளையை பிடிக்காதுன்னு யாரும் சொல்லி  நான் கேட்டதில்லை. உடலுக்கு ஆகாது ஆனாலும், கொஞ்சமா வைன்னு சொல்றவங்களைதான் பார்த்திருக்கேன். உருளைக்கிழங்கில் வறுவல், பொரியல், சிப்ஸ், பொடிமாஸ்,குருமான்னு சமைச்சு அசத்தலாம்.



என் அம்மாவோ இல்ல நானோ மார்க்கெட்டுக்கு போனால் சின்ன சைஸ் உருளைக்கிழங்கை  அதாங்க baby potato  வாங்க மறக்க மாட்டோம்.  மாமாக்கு வெங்காயம் அதிகமா போட்டு உருளைக்கிழங்கு பொரியல் செய்யனும்.  கூடவே உளுந்து வடை இருந்தால் உருளைக்கிழங்கை தொட்டுக்கிட்டு சில பல வடைகள் காலியாகும்.  சின்ன சைஸ் உருளைக்கிழங்கை மாமா சீண்டவே மாட்டாரு. அது முழு விளைச்சல் இல்லாதது, கூடவே அது சுத்தம் பண்ணுறது கஷ்டம்ன்னு வாங்கி வரமாட்டாரு. 

அதனால் மாமா இல்லாதபோது சமைச்சு சாப்பிடுவோம். சமீபத்துல ஒருநாள் மாமா வீட்டுக்கு வரலைன்னு சொன்னதால் இந்த குட்டி உருளைகிழங்கை ஃப்ரை பண்ணி வச்சிருந்தேன்,  மதியமா சாப்பாட்டிற்கு வந்தவர் வேண்டா வெறுப்பா ஒரு உருளை வறுவலை சாப்பிட்டவர் சூப்பரா இருக்கே! இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டேனேன்னு சொல்லி சாப்பிட்டார். 

குட்டி உருளை வறுவல் எப்படின்னு பார்க்கலாமா?!

தேவையான பொருட்கள்:
baby potato எனப்படும் குட்டி உருளைக்கிழங்கு
மிளகாய் தூள், 
இஞ்சி பூண்டு பேஸ்ட்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு
உப்பு

வறுத்து அரைக்க..
சோம்பு - 1 டீஸ்பூன்,
சீரகம்-1 டீஸ்பூன்,
தனியா-1 டீஸ்பூன்,
உ.பருப்பு-1 டீஸ்பூன்,
மிளகு- காரத்திற்கேற்ப
கறிவேப்பிலை ஒரு கொத்து


தனியா, சீரகம், சோம்பு, தனியா, மிளகு, உ.பருப்பினை சிவக்க வறுத்து கடைசியா கருவேப்பிலையையும் அதே சூட்டில் லேசா வறுத்து  ஆற வச்சுக்கனும்.

வறுத்ததை ஆற விடுங்க. உருளைக்கிழங்கை நல்லா கழுவி முழுசா வேக வச்சு தோல் உரிச்சு வைங்க.
கொரகொரப்பா அரைச்சுக்கனும்...
 பெருங்காயப்பொடி, மஞ்சள் தூள், மிளகாய்தூள், உப்பை எடுத்து வச்சுக்கோங்க.
வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிய விடுங்க. உ.பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை போட்டு சிவக்க விடுங்க. எடுத்து வச்சிருக்கும் மிளகாய் தூள், உப்பு, பெருங்காயப்பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி விடுங்க. இஞ்சி பூண்டு பேஸ்ட் கொஞ்சம் சேர்த்து கிளறி விடனும்..
வேக வச்சு தோல் உரிச்ச குட்டி உருளைக்கிழங்கை கத்தி இல்ல முள் கரண்டி வச்சி அங்கங்க குத்தி மிளகாய் தூள் கலவையில் போட்டு பிரட்டுங்க.
வறுத்து பொடிச்சு வச்சிருக்கும் மசாலாவை சேருங்க.

நல்லா கிளறி, பொடியின் பச்சை வாசனை போகும்வரை பிரட்டி அடுப்பிலிருந்து இறக்கிடுங்க. 


குட்டி, குட்டி உருளைக்கிழங்கு வறுவல் ரெடி., சாம்பார் சாதம், ரசம் சாதம், புளிசாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதத்திற்குலாம் ஏத்த சைட் டிஷ் இது. என் பிள்ளைங்க போக, வர.... வாய்ல ஒன்னு எடுத்து போட்டுக்கிட்டு போகும்.

செஞ்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!!

நன்றியுடன்,
ராஜி



9 comments:

  1. குட்டி உருளைக்கிழங்கு கிடைத்தால், செய்து பார்த்துவிட வேண்டியது தான்...

    ReplyDelete
  2. குட்டி உருளை ஃப்ரை நன்றாகவே இருக்கிறது. இங்கே கிடைப்பது குறைவே. பெரிய பெரிய உருளை தான் கிடைக்கும். கிடைத்தால் உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா வந்திருக்கு ராஜி. குட்டி உகி கிடைச்சா போதும் நம்ம வீட்டுல கண்டிப்பா ஃப்ரை உண்டு...

    ராஜி நீங்க தட்டுல போட்டு வைச்சிருக்கற சோம்பு பச்சை கலர் கலந்து வர சோம்பு. ஃப்ரெஷ் சோம்புன்னு காட்ட இப்படிப் பச்சைக் கலப்பது கலப்படம். நீங்க அந்தப் பச்சை சோம்பை கொஞ்சம் எடுத்து ஒரு பாட்டில்ல போட்டு தண்ணீர் ஊத்தி வைங்க ஒரு ஒரு மணி நேரம் கழிச்சுப் பாருங்க சோம்பு இயற்கை நிறத்திலும் தண்ணீர் பச்சை நிறத்திலும் இருக்கும். இனி இப்ப்டியான சோம்பு வாங்காதீங்க. இல்லைனா நல்லா கழுவி காய வைச்சு யூஸ் செய்யுங்க. இப்ப வாங்கினத வேஸ்ட் பண்ண வேண்டாம் கழுவி நல்லா காய வைச்சுருங்க.

    இதே போல தனியாவும். பாம்பே தனியா கொஞ்சம் பச்சைக் கலர்ல இருக்கும் அது இயற்கையாவே அது நல்ல மணமா இருக்க்கும். பாம்பே தனியா என்பது ஸ்பெஷல். நம்ம ஊர் தனியாவை அப்படிக் காட்ட பச்சைக் கலர் கலந்து விக்கறாங்க. சென்னை பாரீஸ் கார்னரில் அப்படி சாயம் கலந்து வெயிலியில் காய வைப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் வழ்கம்மா வாங்கற கடைல தனியா வீட்டுக்கு வந்தபிறகுதான் பார்த்தேன் அவங்க கிட்ட ப்ரூவ் பண்ன பாட்டில்ல போட்டு சாயம் இறங்கிய தனியாவியக் பாட்டிலோடு கொண்டு சென்று கடையில் காட்டி அவர் ஒத்துக் கொண்டார். இனி வாங்க மாட்டேன் இப்படியான தனியாவை நோட் செஞ்சுக்கறேன்னு சொன்னவர் அடுத்த மாதம் கடையில் நார்மல் தனியா பேக்கட் கிடைத்தது. இதேதான் சோம்புக்கும்...சோம்ம்பு இயற்கையாவே ஃப்ரெஶ் நா கொஞ்சம் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். நல்ல மணமா இருக்கும்..படத்தில உள்ளது கலர் கலந்த சோம்பு.

    அதான் சொன்னேன் ராஜி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உபயோகமான குறிப்புகள் கீதா.

      Delete
    2. சுத்தமான சோம்பு கிடைப்பது கஷ்டம்,. கிடைக்கும் பச்சை கலர் கலந்த சோம்பை கழுவி இனி உபயோகப்படுத்துறேன் கீதாக்கா

      Delete
    3. நன்றி ஸ்ரீராம் அண்ட் ராஜி.

      என் அனுபவத்தில் சொன்னதுதான். ராஜி நல்ல சோம்பு கிடைப்பதில்லையா? சென்னையில் சில கடைகளில் கிடைக்கிறது பார்த்துதான் வாங்குவேன். தனியா குறித்து நான் எடுத்த புகைப்படத்தை வைத்து பதிவு போட எழுதி வைச்சேன் போட்ட்னேனா என்று நினைவில்லை. பார்க்கிறேன் இது நடந்து இரு வருடங்கள் மெல் ஆகிறது பதிவு போட்டேனா என்று பார்க்கிறேன்.

      இங்கு பங்களூரில் சாயம் கலக்காத தனியா, சோம்பு எல்லாம் கிடைக்கிறது எல்லா கடைகளிலும் வீட்டருகில்..

      கீதா

      Delete
  4. உருளைக் கிழங்கின்மேல் பெரிய விருப்பம் கிடையாது. கொஞ்சப் போட்டுக் கொள்வேன். நீங்கள் செய்திருக்கும் முறையிலும் ஒருமுறை செய்து பார்க்கிறேன். நாங்கள் சோம்பு சேர்த்ததில்லை.

    ReplyDelete
  5. எங்கள் சமையலில் இடையிடையே இதற்கும் இடமுண்டு.
    நாங்கள் கார விரும்பிகள் என்பதால் சில்லி ப்ளாக்ஸ் போட்டும் பிரட்டி செய்வதுண்டு.

    ReplyDelete