Sunday, April 19, 2020

ஒரு பொண்ணை இப்படியா வர்ணிப்பாங்க?! - பாட்டு புத்தகம்

டி.ராஜேந்தர் படங்கள் ரிலீஸ்ன்னா கிராமம், நகரம்ன்ற பாகுபாடு இல்லாம  எல்லா இடத்திலும் வெற்றிகரமா ஓடும். ரஜினி, கமல் படங்களுக்கினையாக அந்த காலத்தில் இவர் படங்கள் வெற்றிப்பெற்றது. அதுக்கு காரணமா அவர் படங்களில் அம்மா தங்கை செண்டிமெண்ட், ஹீரோவின் காதல் தோல்வி, டி.ராஜேந்தர் ஹீரோயினை தொடாமல் நடிப்பது, இசை, கதை, ரைமிங்கான வசனம்ன்னு நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.  அவர் படத்தோட செட்டிங்க்காகவே படத்துக்கு போன ஆட்கள் பலர் உண்டு.

கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்ன்னு பன்முக கலைஞர். அவர் எழுதிய பாடல்கள் சொல்லும் அவரின் தமிழ் புலமையை. மற்ற இயக்குனர்கள் படத்திற்கும் இசை, பாடல்கள், திரைக்கதைன்னு செஞ்சு கொடுத்ததா கேள்விப்பட்டிருக்கேன். சாதனையாளருக்கு கொஞ்சம் தலைக்கனம் இருப்பதை நிறைய பேரிடம் பார்த்திருக்கோம். ஆனா, டி.ராஜேந்தரிடம் கொஞ்சம் அதிகம். அதன் விளைவு, இன்னிக்கு சீந்துவார் இல்லாம இருக்கார். 
எப்பேற்பட்ட கலைஞர்?! இப்படி வீணாப்போறாரேன்னு கொஞ்சம் கவலைதான். 

ஹீரோயினை தொடாம நடிப்பார், சிகரெட், தண்ணி அடிக்குற மாதிரி நடிக்க மாட்டார். இன்னொரு எம்.ஜி,ஆர்ன்னு பொம்பளைங்க மத்தியில் நல்ல பேரு. ஹீரோயினை தொடாமதான் நடிப்பார். ஆனா, தங்கையாய், வில்லியாய் வரும் இரண்டாம் கதாநாயகிகளை கவர்ச்சியாய் நடிக்க வைப்பார். இது எந்த விதத்தில் சரின்னு யோசிப்பேன்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ன்னு சொல்ற மாதிரி அவரின் திறமைக்கு இந்த பாட்டு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு பெண்ணை வெறும் மயில், குயில், மின்னல்ன்னு மொத்தமா வர்ணிச்சுட்டு போகாம, ஒவ்வொரு பாகமும் எப்படி எதனால் உருவாகி இருக்கும்ன்னும்  அத்தனை ரசணையாய் வர்ணிச்சு எழுதியிருப்பார். அந்த வர்ணனையை தன்னோட குரலில் கொண்டு வந்திருப்பார் எஸ்.பி.பி. அந்தக் கட்டுடல், மொட்டுடல் ... உதிராமல் சதிராடி.. மதிதன்னில் கவி சேர்க்குது... எந்தன் மதிதன்னில் கவி சேர்க்குது..ன்ற வரிகளிலெல்லாம் எஸ்.பி.பி விளையாடி இருப்பார்.



ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்...
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்...


சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு.
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு.
அவள் விழிகளில் ஒரு பழரசம்!!
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்!!!




தடாகத்தில் மீனிரண்டு காமத்தில் தடுமாறி
தாமரைப்பூமீது விழுந்தனவோ?!
இதைக்கண்ட வேகத்தில், பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ?!
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு
கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்..
ஜதி என்னும் மழையினிலே...
ரதியிவள் நனைந்திடவே,
அதில் பரதம்தான் துளிர்விட்டு
பூப்போலப் பூத்தாட..
மனமெங்கும் மணம் வீசுது – எந்தன்
மனமெங்கும் மணம் வீசுது


சலங்கையிட்டாள் ஒரு மாது..


சந்தனக் கிண்ணத்தில் குங்குமச் சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்!!?
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்?!
இடையில் பின்னழகில்
இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்...
கலைநிலா மேனியிலே
சுளை பலா சுவையைக் கண்டேன்.
அந்தக் கட்டுடல், மொட்டுடல்
உதிராமல் சதிராடி
மதிதன்னில் கவி சேர்க்குது..
எந்தன் மதிதன்னில் கவி சேர்க்குது..

சலங்கையிட்டாள் ஒரு மாது...

படம்: மைதிலி என்னை காதலி
இசை:டி.ராஜேந்தர்,
எழுதியவர்: டி. ராஜேந்தர்,
பாடியவர்: எஸ்.பி.பி
நடிகர்கள்: அமலா

இந்த பாட்டு யாருக்குலாம் பிடிக்கும்?!

நன்றியுடன்,
ராஜி

10 comments:

  1. எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  5. எனக்கு டி.ராஜேந்தரை மிகவும் பிடிக்கும். வெறும் பத்து விரல்களுடன் கோடம்பக்கம் வந்து, எம்ஜிஆர், ஏவிஎம் போன்றவர்களையே நடுங்கவைத்த கலைத்தரமுள்ள வ்எற்றிகரமான, கமர்ஷியல் படங்களை வழங்கியவர். மற்றப்படி, நீங்கள் சொன்ன பாடலை நான் ஏன் பிடிக்காது என்று சொல்லவேண்டும் என்று தெரியவில்லையே!

    ReplyDelete
  6. எனக்கு மிகவும் பிடித்த பாடல் சகோ

    //எப்பேற்பட்ட கலைஞர் ? இப்படி வீணாப்போறாரேன்னு கொஞ்சம் கவலைதான்//

    நான் பலமுறை நினைத்ததுண்டு இவர் ஏன் இப்பொழுது பிற படங்களுக்கு பாடல்கள் எழுதக்கூடாது ? இவரது கவித்தன்மை எங்கு போனது ?

    தற்சமயம் ஒண்ணாம் நம்பர் கோமாளியாகி விட்டார்

    ReplyDelete
  7. இடக்கர் அடக்கல் தமிழ் இலக்கிய கவிதை மரபு
    இடக்கர்+அடக்கல் => இடக்கர் என்பது “சொல்லத்தகாத”, இடக்கு
    அடக்கல் என்பது “அடக்கி”
    அவையில் அல்லது பிறருக்கு மத்தியில் சொல்லத்தகாத சொல்லைக் கூறாமல் அதை அடக்கி, அதற்குரிய மாற்றுச் சொல்லைப் பயன்படுத்துதல். அதாவது ‘நாசுக்காக’ கூறுவது.
    இது கவியரசர் கண்ணதாசனுக்கு கை வந்த கலை . எண்ணிரண்டு பதினாறு வயது அன்னை இல்லம் பட பாடலில் பல இடங்களில் கவியரசர் எழுதியிருப்பார் ,நான் இங்கே நாசுக்கு காரணமாக பதிவு செய்ய விரும்பவில்லை ,பாடலை முழுவதும் மீண்டும் கேளுங்கள் ,பாட்டு புத்தகத்தில் படியுங்கள் உங்களுக்குபுரியும் மற்றும் இன்று உள்ள 50 வயதிற்கு மேற்பட்ட எங்களை போன்ற பலருக்கும் புரியும் . ஆனால் இன்று உள்ள எனது பிள்ளைகளுக்கும் , இளம் தலைமுறைக்கும் புரியாது ,அதுதான் இடக்கர்+அடக்கல் ,அதுதான் கவியரசர் கண்ணதாசனின் கவிதை நேர்மை ,கற்று தேர்ந்த புலமை
    எ.கா.
    (*) கோழியும் சேவலும் ஒன்று சேர்தலை ‘சேவல் அணைந்தது’ என்று கூறுவது வழக்கம்.
    (*) மலம் கழிக்கப் போனான் என்பதை “காட்டுக்குப் போனான்”, “வெளியே போனான்” அல்லது “கால் கழுவி வந்தான்” என்று கூறுவது
    (*) அமங்கலத்தை மங்கலமாகக் கூறுதல் – இறந்துவிட்டார் என்பதை “இறைவனடி சேர்ந்தார் அல்லது “உயிர் நீத்தார்”
    (*) தீபத்தை அணை என்பதை “தீபத்தை குளிர வை” என்று கூறுவர்
    (*) வாய் கழுவி வந்தான் – வாய் பூசி வந்தான்

    ReplyDelete
  8. இரசிக்காதர் யாரோ

    ReplyDelete
  9. பிடித்த பாடல் ராஜி...பாட்டு பார்த்ததுமே தெரிஞ்சிருச்சு வீடியோ நெட் பிரச்சனையால் வேலை செய்யாது...இப்ப...

    கீதா

    ReplyDelete
  10. நல்ல பாடல்....

    திறமையானவர் - ஆனால் தன் திறமைகளை வீணடித்துக் கொண்டார்.

    ReplyDelete