Showing posts with label கிச்சன்கார்னர். Show all posts
Showing posts with label கிச்சன்கார்னர். Show all posts

Tuesday, July 18, 2017

பீர்க்கங்காய் தோல் துவையல் - கிச்சன் கார்னர்

பீர்க்கங்காயில் கூட்டு, பொரியல், சாம்பார், மசியல்ன்னு செய்வோம். அப்படி செய்யும்போது பீர்க்கங்காயின் தோல் சீவி எறிஞ்சுடுவோம். அப்படி அந்த தோலை தூக்கிப்போடாம முன்னலாம் துவையல் செஞ்சு சாப்பிடுவோம். இப்பலாம் அப்படி செய்யுறதில்ல.... பீர்க்கங்காயின் நன்மைகளை ஏற்கனவே போட்ட இந்த பதிவுல போய் பார்த்துட்டு வாங்க. 

தேவையான பொருட்கள்..
பீர்க்கங்காய் தோல்
காய்ந்த மிளகாய்,
உ.பருப்பு
கடலைப்பருப்பு
தனியா
உப்பு,
புளி
தேங்காய்

பீர்க்கங்காய் தோல் சீவி எடுத்துக்கோங்க..




வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும்  உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா  சேர்த்து சிவக்க விடுங்க. 


சீவி வச்சிருக்கும் பீர்க்கங்காய் தோலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்க..

தேங்காய், உப்பு சேர்த்து வதக்குங்க...

புளி சேர்த்து வதக்குங்க

மிக்சில இல்ல ஆட்டுக்கல்லுல கொரகொரப்பா அரைச்சு எடுத்தா சூப்பர் துவையல் ரெடி. தயிர்சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கு ஏத்த டிஷ்.

அம்மில வச்சு அரைச்சு முடிச்சதும், அம்மியில ஒட்டியிருக்கும் துவையலில் சாதம்போட்டு பிசைஞ்சு உருட்டி அம்மா கொடுப்பாங்க.... ம்ம்ம்ம்ம்ம் யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மி.... துவையல் ருசிச்சது அம்மா கைமணமா?! இல்ல அம்மிக்கல்லா? இல்ல அம்மாவின் பாசமான்னு இன்னும் தெரில.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466799

நன்றியுடன்,
ராஜி.


Tuesday, July 11, 2017

பூமியின் கற்பக விருட்சம் எது தெரியுமா?! கிச்சன் கார்னர்



 முருங்கைமரம் வைத்தவன் பசியோடு தூங்கமாட்டான்னு எங்க ஊர் பக்கம் சொல்வாங்க. ஏன்னா, சீசனில்லாத போதும் ஒன்னிரண்டு காய் காய்க்கும். காய் இல்லாதபோது முருங்கைகீரையை சமைச்சு சாப்பிடலாம். முருங்கை மரத்துக்கு கற்பகத்தருன்ற பேருமுண்டு.   முரின்னா ஒடிதல்ன்னு அர்த்தம். சீக்கிரம் ஒடியக்கூடிய கிளைகளை கொண்டதுன்னு பொருள்படத்தான் முருங்கமரம்ன்னு சொல்றோம்.  அனைத்து நிலத்திலும் இந்த முருங்கை வளரும் தன்மைக்கொண்டது. தண்ணியில்லாத காட்டிலும், வெப்பம் அதிகமுள்ள இடத்திலும் இம்மரம் செழித்து வளரும்.  முருங்கையின் பூர்வீகம் இமயமலை அடிவாரத்து பின்னிருக்கும் பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்காவுக்கு போய் கடைசியா இந்தியாவுக்கு வந்தது.  ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவில்தான் அதிகளவு பயிரிடப்படுது. இலங்கையிலும், தாய்லாந்து, தைவானிலும் பயிரிடப்படுது. 



பயிரிடப்பட்டதிலிருந்து ஆறு மாசத்திலிருந்து ஒரு வருசத்துக்குள் காய் காய்க்கும் தன்மைக்கொண்ட முருங்கை யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கைnனு பேர்ல காய்க்குது. முன்னலாம் அரை அடி நீளத்துல இருந்த முருங்கை இப்பலாம் ஒன்னரை அடி நீளத்துலயும் கிடைக்குது. இலை, பூ, காய், பட்டை, வேர்ன்னு அத்தனையும் மருத்துவ குணம் வாய்ந்தது. 



,முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள்,   தாது உப்புக்கள் இருக்கு. காய் மற்றும் இலைகளில் வைட்டமின் சி அதிகளவு இருக்கு. மொரிங்கஜின், மொரிங்ஜின்னைன், பேரேனால், இண்டோல் அசிடிக்அமிலம், டெர்கோஸ், பெர்மைன், கரோட்டின், குர்சிடின், இரும்புசத்து, பொட்டாசியம் இருக்கு. கொழுப்பு சத்து துளியும் இல்லாதது இதன் சிறப்பு/ பொரியல், காரக்குழம்பு, சாம்பார்,பிரட்டல், சூப், கூட்டுன்னு அத்தனை விதமாய் இதை சமைக்கலாம். 

மருத்துவ பயன்பாடு....

முந்தானை முடிச்சு படத்துக்குப்பின் முருங்கையின் பயன்பாடு ’அது’ ஒன்னு மட்டும்தான் எல்லாருக்கும் தெரியும். அது ஓரளவுக்கு உண்மையாயிருந்தாலும் இன்னும் ஏகப்பட்ட மருத்துவ பலன் உண்டு. முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். அதுபோல் முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.  முருங்கைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் இதிலிருக்கும் கால்சியம், இரும்புசத்துலாம் பெண்ணின் கருப்பையை வலுப்படுத்தி குழந்தைப்பிறப்பை  துரிதப்படுத்தும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும். இலையின் சாறு விக்கல் போக்கும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும். கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவ நல்ல பலன் கிடைக்கும். மஞ்சள், உப்பு சேர்த்து வதக்கி கட்டி உள்ள இடத்தில் இளஞ்சூட்டில் வைத்து கட்டினால் கட்டி பழுத்து உடையும்.  கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாக கட்டப்படுகிறது. பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்கும்.தாய்ப்பாலை ஊறவைக்கும்.



முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாத்திரத்தில் இரவு முழுதும் வைத்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும்.  ஆஸ்துமா, மார்ச்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

இத்தனை மருத்துவ குணம் கொண்ட முருங்கக்கீரையில செஞ்ச பொரியல் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்...
முருங்கைக்கீரை, 
வெங்காயம்,
பூண்டு,
காய்ந்த மிளகாய்,
கடுகு, 
உளுத்தம்பருப்பு,
கடலை பருப்பு
எண்ணெய்
துவரம்பருப்பு

முருங்கைக்கீரையை பழுத்தது, பூச்சிலாம் இல்லாம ஆய்ஞ்சுக்கோங்க.. துவரம்பருப்பை வேகவச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும்,. ஆனா குழையக்கூடாது. 

வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிஞ்சதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவக்க விடுங்க. 


நசுக்கின பூண்டு, காய்ஞ்ச மிளகாய் சேர்த்து சிவக்க விடுங்க.

வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க..


தண்ணி கொதிச்சதும் முருங்கைக்கீரை சேர்த்து கிளறி விடுங்க. 


கீரை கொஞ்சம் வதங்கினதும் உப்பு சேருங்க. முதல்லியே உப்பு சேர்த்தா கீரைல உப்பு இறங்கி உப்பு கரிக்கும். 



கீரை வெந்ததும் வேக வெச்ச துவரம்பருப்பை சேருங்க.  தேங்காய் துருவல் சேர்த்தா சத்து கூடும். சுவையும் நல்லா இருக்கும். இதேமாதிரி பக்குவத்துல கீரைல துவரம்பருப்புக்கு பதிலா வறுத்த வேர்க்கடலை, எண்ணெயில் வதக்கிய மிளகாயோடு பூண்டு சேர்த்து கொரகொரப்பா அரைச்சு சேர்த்தா வாசனையாவும் ருசியாவும் இருக்கும்.


அகத்தி வேகாம கெடுத்தது, முருங்கை வெந்து கெடுத்ததுன்னு ஒரு பழமொழி உண்டு. அதனால, முருங்கைக்கீரையை அதிகம் வேகவிடாதீங்க. குக்கர்ல வேகவைக்காதீங்க.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465975

நன்றியுடன்,
ராஜி.

Tuesday, November 12, 2013

சோமாஸ் - கிச்சன் கார்னர்


தீபாவளி பண்டிகைக்கு என் நாத்தனார் வீட்டுக்கு பலகாரம் கொடுத்தனுப்ப, என்ன கொடுக்கலாம்ன்னு மண்டையை உடைச்சுக்க வேண்டியதில்ல. நாத்தனார் வீட்டுக்காரருக்கும், அவங்க பசங்களுக்கும் சோமாஸும், ஓமப்பொடியும், குளோப் ஜாமூனும் ரொம்ப பிடிக்கும். அதையே செஞ்சு கொடுத்தா போதும். 

சோமாஸ் உள்ள வைக்கும் பூரணத்துக்கு எல்லாரும் ரவை, முந்திரி, திராட்சை, தேங்காய்ப்பூ, சர்க்கரைலாம் வச்சு செய்வாங்க. ஆனா, எங்க வீட்டுல வேற மாதிரி ரொம்ப ஈசியாவும் அதே நேரத்துல சுவையாவும் செய்வோம்.

தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
உடைத்த கடலை - 1 கப்
சர்க்கரை - 1கப்
ஏலக்காய் - 3
முந்திரி, திராட்சை - தேவைப்பட்டால் சேர்த்துக்கலாம்.
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் தேவையான அளவு

மைதா மாவை சலிச்சு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், கொஞ்சம் உப்பு சேர்த்து  தண்ணி விட்டு சப்பாத்திக்கு பிசையுற மாதிரி பிசைஞ்சு ஒரு மணி நேரம் ஊற விடுங்க.


உடைச்ச கடலையோட சர்க்கரை சேர்த்துக்கோங்க.

ஏலக்காயையும் சேர்த்து மிக்சில நல்லா நைசா அரைச்சுக்கோங்க.

பூரணத்துக்கு பொடி ரெடி.

பிசைஞ்சு வச்ச மைதாமாவை வட்ட வடிவமா தேச்சுக்கோங்க...,

அதுக்கு நடுவுல, பொடிச்சு வச்ச கடலை மாவை வச்சு, மடிச்சு சோமாஸ் வடிவத்துல கத்தியால கட் பண்ணிக்கோங்க, அதுப்போல கட் பண்ண பழக்கமில்லாதவங்க, இதுக்குன்னு இருக்கும் அச்சை கடைல வாங்கி செய்ங்க. 

இதுப்போல கொஞ்சம் சோமாஸ்களை செஞ்சு எடுத்து வச்சுக்கோங்க.


ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி, அதுல ஒண்ணு இல்ல ரெண்டு போட்டு , ரெண்டுப் பக்கமும் பொன்னிறமா சிவக்க விட்டு எடுங்க.

மேல, மொறு மொறுன்னும், உப்புச்சுவையோடும், உள்ள மிருதுவா இனிப்போடும் சேர்ந்து நல்லா இருக்கும். குட்டி குட்டியா செஞ்சு வச்சுக்கிட்டா பசங்க ஸ்கூல் விட்டு வந்ததும் கொடுத்தா ஆசையா சாப்பிடுவாங்க. ரொம்ப ஈசியானது. அதனால, கொஞ்சம் கொஞ்சமா செஞ்சு டப்பாவுல வச்சு பிள்ளைகளுக்கு கொடுக்கலாம், வயிற்றை பதம் பார்க்காதது.

மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட கிச்சன் காரனர்ல சந்திக்கலாம்!