Monday, July 30, 2012

எங்கே தேசப்பற்று?! - ஐஞ்சுவை அவியல்

                               
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா, இந்த ஆடி மாசம் வந்தாலே, சந்து பொந்துல இருக்குற  அம்மன் கோவில்லாம் களை கட்டுது. எல்லா கோவில்லயும் கூழ் ஊத்தி, பாட்டுக்கச்சேரின்னு அவனவன் போட்டி போட்டுக்கிட்டு செய்யுறான். இந்தாங்க மாமா  அம்மன் கூழ், பொங்கல், பிரசாதம்.

ஏம் புள்ள! ரொம்ப வேலையா?! செத்த நாழி சாஞ்சு, ரெஸ்ட் எடுத்துக்கோ. ஆமா, எல்லா மாசத்தையும் விட்டுட்டு இந்த ஆடி மாசத்துல ஏன் கூழ் ஊத்துறாங்கன்னு உனக்கு தெரியுமா புள்ள?

 தெரியாதுங்க மாமா, என் பாட்டி சொன்னாங்கன்னு அம்மா ஊத்துனாங்க, அம்மா சொன்னாங்கன்னு நான் ஊத்துறேனுங்க.

அப்படிலாம் பொத்தம் பொதுவா செய்யக்கூடாது. ஒரு செயலை செய்யும்போது அது ஏன் செய்யுறோம்? எதுக்காக செய்யுறோம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு செய்யனும். அப்போதோன் அதோட பலன் நமக்கு கிடைக்கும்.

சரிங்க மாமா சொல்லுங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்குறேன்.

ம்ம் இப்படி பக்கத்துல வந்து உக்காரு..., உன் வேலை செஞ்சு களைச்சு போன உன் கை, காலை குடு இதமா பிடிச்சு விட்டுக்கிட்டே சொல்றேன். கேட்டுக்கோ.

ஐயையோ, பொம்பளை  காலை நீங்க பிடிக்குறதா? போங்க மாமா, அதெல்லாம் தப்பு..,

 ஒரு தப்புமில்ல புள்ள, நான் உம்மேல வெச்சுருக்குற பாசத்தை உனக்கு காட்ட ஒரு சந்தர்ப்பம்ன்னு நினைச்சுக்கோ, ம்ம் குடு..., பிடிச்சு விடுறது வலிச்சா மட்டும் சொல்லு, இப்போ நான் சொல்றதை கேளு.

ம்ம்ம் சரிங்க மோமோய்...,

ஆடி மாசம்ன்னாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊத்துறதும் வழக்கம், இது ஏன்ன்னா ..  ஆடி மாசம் வீசுற  காத்துல வேகம் அதிகமா இருக்கும். அதனால  எங்க பார்த்தாலும்  தூசியாக இருக்கும். இதனால, இருமல், டஸ்ட் அலர்ஜி, சைனஸ் போல பல நோய்கள் வரலாம். இதை வராம தடுக்கவே மாரியம்மன் கோயில்ல ஆடி மாசம் முழுவதும் கூழ் ஊத்துவாங்க. 

 இதை,  ஆடிக்கஞ்சின்னு அந்த காலத்துல சொல்வாங்க. . அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் இதையெல்லாம்  லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வெச்சுக்கனும்.அரிசியைக் கஞ்சியாக வேகவெச்சு, அதுல,   துணியில இருக்குற  மருந்துகளைப் பிழியணும்;  இல்லைனா கஞ்சிக்குள்ள அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துடனும். அதைத்தான் ஆடிக் கஞ்சியைப் பரிமாறனும்.  இதையே எல்லாரும் ஃபாலோ பண்ணா நல்லது. ஆனா, இப்பலாம் இந்த மருந்தையெல்லாம் சேகரிச்சு இடிச்சு கஞ்சி பண்ண சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு கம்மங்கூழ் காய்ச்சு ஊத்திடறாங்க.

அப்படியா மாமா! இனிமே நான் அதேப்போல செய்யுறேன். ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும். 

அதுவா, போன வருசம் நம்ம கோவில்ல பிரசங்கம் பண்ண பெரியவர் சொன்னார்.

ஓ, ஏனுங்க மாமா இன்னிக்கு டிவில நியூஸ் வாசிக்குறதை பார்த்தீங்களா மாமா?

இல்ல புள்ள, வெளில வேலை இருக்கவே பார்க்கலை என்ன புள்ள?

                                        
 நம்ம ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துல,  சம்பா மாவட்டத்துல, 20 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதை ஒண்ணு  கண்டுபிடிச்சிருக்காங்களாம். அந்த ஊர் கிராமவாசி ஒருத்தங்க கொடுத்த தகவல்னால, ராணுவத்தினர், அந்த சுரங்கத்தை ஆய்வு செய்ஞ்ச போது, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில இருந்து இந்திய எல்லைக்குள் 100 மீட்டர் வரை  சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது தெரியவந்திருக்கு. அதுல, ஒயர்களும் புதைச்சிருக்காங்களாம். அந்த சுரங்கம் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள்ள  ஊடுருவதற்கு யூஸ் பண்ணாங்களான்னு   போலீஸார் விசாரணை நடத்தி வர்றாங்களாம்.  

இப்படி யாரோ ஒரு சிலர் கவனக்குறைவினாலயும், பணத்துக்கு ஆசைப்பட்டு ஹெல்ப் பண்ணதாலயும் பல்லாயிரக்கணக்கான வீரர்களின் தேசப்பற்றும், உழைப்பும் கேலிக்கு ஆளானதாலயும், தேசத்தின் பாதுகாப்பும் கேள்விக்குரியதா மாறுதே.

சில ஆயிரங்கள் சம்பளமா வாங்கியும், குடும்பத்தாரை விட்டு, கடும் குளிர், வேக வைக்கும் வெயில்லயும் வெந்து நாட்டுப்பற்றோடு நாட்டுக்காக  உயிரையும் துச்சமா நினைச்சு போராடும் மனிதர்கள் இருக்குற இதே நாட்டில்.....,  கோடி கோடியா    பணத்தையும், அதுக்கு மேல புகழையும் சம்பாதிச்சு, இப்போ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை கட்டிக்கிட்ட இந்த இந்திய பொண்ணுக்கு நம்ம நாட்டு பற்று துளிக்கூட இல்லைன்னு இந்த படத்தை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.

ஒலிம்பிக்ல எல்லா நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடக்கும்போது, நம்ம நாட்டு வீரர்கள் தங்கள் கைகளில் நம்ம நாட்டு தேசியக்கொடியை பிடிச்சுக்கிட்டு போனாங்க மாமா. ஆனா, இந்த பொண்ணு...., ம்ம்ம் யாரை குத்தம் சொல்றதுன்னே தெரியலை மாமா.                        

ம் ம் ம் நீ சொல்றதுல உண்மைதான் புள்ள. சீரியசா பேசிட்டதால, ஒரு ஜோக் சொல்றேன் ஒருத்தன் ஒரு கார் டிரைவர் தன் முதலாளிக்கிட்ட: சாரி சார் பெட்ரோல் போட மறந்திட்டேன். கார் ஒரு அடி கூட முன்னால போகாதுன்னு சொல்றான். அதுக்கு அந்த காரோட  ஓனர்  உன்னை மாதிரியே  தத்தி  போல, சரி.. சரி..விடு ரிவர்ஸ்லயே காரை வீட்டுக்கு விடுன்னு சொன்னாராம்.

ம்க்கும் நானா மாமா தத்தி? ஒரு கணக்கு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லுங்க பார்க்கலாம்?

கேளு புள்ள...,

ஒரு வியாபாரி, ஒரு கூடையில மாம்பழங்களை எடுத்துக்கிட்டு  விற்க போனார். முதல்ல Aன்றவர் கூடையில இருந்து ஒண்ணை தவிர மத்த பழங்களில் பாதியை வாங்கிக்கிட்டார். அடுத்து, Bன்றவர் மீதி இருக்குற பழங்களில் பாதியை வாங்கிக்கிட்டார். கடைசியா, Cன்றவர் மிச்சம் இருக்குற பழங்களில் பாதியை வாங்கிகிட்டார். அப்படின்னா, வியாபாரி கூடையில் மொத்தம்  எத்தனை பழம் எடுத்துக்கிட்டு போனார்?

ம்ம்ம்ம் அது வந்து..., அது வந்து விடை...,

இரு இரு நிதானமா யோசிச்சு சொல்லு. நேத்து உன் ஃபிரண்ட் ராஜி வீட்டுக்கு போய் பேசிக்கிட்டு இருந்தேன். அங்க, நம்ம ராஜியோட சின்ன பொண்ணு  இனியா பத்தி பேச்சு வந்துச்சு. அவளுக்கு 4 இல்ல 5 வயசிருக்கும்போது அவ காலைல அவ அப்பா ஆபீஸ் கிளம்பும்போது, அவ தன் அப்பாக்கிட்ட டெடி பியர் பொம்மை கேட்டிருக்கா. அவ, அப்பா ஆபீஸ் டென்சன்ல மறந்துட்டார். வீட்டுக்கும் வரவும் நைட் 11 மணி ஆகிடுச்சாம். இனியா தூங்காம முழிச்சுக்கிட்டு இருந்திருக்கா.

ம்ம்ம்ம் அப்புறம்...,

அவ அப்பா வந்ததும், தன் அப்பாக்கிட்ட ஏன் பொம்மை வாங்கி வரலைன்னு  கேட்டு அடம்பிடிச்சு இருக்கா. அவ அப்பா, டென்ஷன்ல  ஏய், நான் ஆபீசுல இருந்து கிளம்ப 10 மணி ஆகிட்டுது. பத்து மணிக்கு ஈ, காக்கா கூட கடைத்தெருவுல இருக்காது. அப்படி இருக்க எப்படி வாங்கி வ்ர்றது?ன்னு கோவமா கேட்டிருக்கார்.

அதுக்கு அவ, சடார்ன்னு நான் உங்களை ஈ, காக்காவா கேட்டேன், பொம்மைதானேன்னு கேட்டேன்னு ,மழலை மாறாம கேட்டதுல டென்ஷம் மறந்து எல்லாரும் சிரிச்சதுமில்லாம, மறுநாளே பொம்மையை மறக்காம வாங்கியும் குடுத்துட்டாராம்.

ஹா ஹா, பசங்க குறும்புத்தனங்களை எம்புட்டு வருசமானாலும் மறக்க முடியாதுங்க மாமோய்,  குடும்பத்துல பிள்ளைங்க பண்ற குறும்புலாம் சுகம்ன்னா, சமைக்குறது ரொம்ப கொடுமைங்க மாமா.

ஏன் புள்ள அப்படி சொல்றே. சின்ன சின்ன விசயத்துல கவனம் செலுத்தி வேலை செஞ்சா அதுவும் ஒரு அழகான கலையே. அப்புறம் நீயே சமைக்க அலுத்துக்காம சுகமா எடுத்துக்குவே.

எப்படி சொல்றீங்க மாமா?
                                       

கூடையில  வைக்குற  உருளைக்கிழங்கு முளை விடாம இருக்க, கூடவே, கூடையில ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வெச்சா சீக்கிரம் முளை விடாது. சப்பாத்தி மாவு பிசையும்போது கால் பங்கு சோயா மாவு சேர்த்துக்கிட்டா சுவையும் கூடும் குழந்தைகளுக்கு புரோட்டினும் கிடைக்கும். வாழைக்காய் வெட்டும்போது கையில இருக்குற பிசுபிசுப்பு போக தயிர் ஊத்தி கழுவலாம். உரல், அம்மி, கிரைண்டர்ன்னு புதுசா வாங்குனா அதுல எடுத்த உடனே இட்லி, தோசைக்கு மாவு அரைக்காம தவிடு போட்டு அரைச்ச பின்னாடி அரைக்கனும். அப்படி செய்யலைன்னா ஆட்டுக்குக்கல்லில் இருக்குற கண்ணுக்கு தெரியாத சின்ன கல்துகள்கள்லாம் மாவுல வந்து மாவே வேஸ்டாகிடும். இப்பலாம் தவிடு எல்லா இடத்துலயும் கிடைக்குறதுல்லை. தவிடு கிடைக்காதவங்க பெரிய வெங்காயம் போட்டு ஆட்டி எடுத்தா கல்லுலாம் வந்துடும்.

சரிங்க மாமா! இனி சின்ன சின்ன விசயத்துலலாம் அக்கறை எடுத்து  பார்த்துக்குறேன். உடம்பு வலிலாம் போன இடமே தெரியலை மாமா. நீங்க கால் பிடிச்சு விட்டதுல மனசும் தெம்பாகிடுச்சு. நான் போய் வீட்டு வேலை பார்க்குறேன்.

சரி புள்ள! எனக்கும் கொஞ்சம் கடைத்தெருக்கு போற வேலை இருக்கு. அப்புறம் பேசலாம்.                                  

21 comments:

  1. (ரொம்ப நாள் கழித்து) ஐஞ்சுவை அவியல்...

    ஆடிக் கஞ்சி தயாரிப்பு, தேசத்தின் பாதுகாப்பு, கணக்கு (8 மாம்பழமா ?) டிப்ஸ் என கலக்கல் ...
    நன்றி சகோதரி !

    வியாபாரி கூடையில் மிச்சம் எத்தனை பழம் இருக்கும்?

    கேள்வி இதுவா ? இல்லை...

    வியாபாரி கூடையில் எத்தனை பழங்கள் கொண்டு வந்தார் ? என்பதா...? குழப்புதே...

    ReplyDelete
    Replies
    1. குழப்பியதற்கு மன்னிக்க சகோ. வியாபாரி தன் கூடையில் மொத்தம் எத்தனை பழங்கள் கொண்டு வந்தார் எனபதே சரி. உடன் வருகைக்கும், தவறை சுட்டி காட்டியதற்கும் நன்றி சகோ

      Delete
  2. தேசத்தின் பாதுகாப்பு தகவல் திகீர்னு இருக்கு, அடப்பாவிகளா.....நம்மாளுங்க பார்லிமேன்ட்ல தூங்குறதொடே சரின்னு நினைச்சா கொய்யால இங்கேயுமா..????!!!

    ReplyDelete
    Replies
    1. கடமையை மறாந்து நடக்குறவங்க எல்லா இடத்துலயும் இருக்காங்க அண்ணா.

      Delete
  3. ஐஞ்சுவை படித்து மனதில் கோபம், பாசம், இயலாமை, மருத்துவம், வேதனை, சிரிப்புகள் வந்து போகிறது....சூப்பர் கலவை...!!!

    ReplyDelete
  4. ஐஞ்சுவை அவியல்., இன்சுவை விருந்து!

    ReplyDelete
  5. தேசப்பாதுகாப்பு இப்படி இருக்கு!ம்ம்

    ReplyDelete
  6. அவியல் சத்தானதாக்வும் சுவையானதாக்வும் இருந்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மனோ சொன்னதுதான் நான் சொல்வதும்

    ReplyDelete
  8. ஐஞ்சுவை அவியல் அருமை.... நல்ல உரைநடையில் சொல்லிக்கொண்டு போகும் உங்கள் உத்தி நன்று.... தொடரட்டும்

    ReplyDelete
  9. நல்லா இருக்கு..

    ReplyDelete
  10. ஐஞ்சுவை அவியல் அருமை...அக்கா நீங்கள் சொல்லும் விதம் அடுத்து என்ன என்று பார்க்க தோன்றுகிறது... எல்லாம் அருமை.... சமையல் டிப்ஸ் சூப்பர்...

    ReplyDelete
  11. அது இது என்று குறிப்பிட்டுப் பாராட்ட இயலாதபடி இந்த ஐஞ்சுவை அவியலின் ஒவ்வொரு வரியும் அருமைதாம்மா. இதே மாதிரி தொடரட்டும் அவியல்களின் அணிவரிசை.

    ReplyDelete
  12. அன்புநிறை சகோதரி..
    நீண்டநாட்கள் கழித்து வரும்
    ஐஞ்சுவை சமையல்...

    அத்தனை சுவைகளையும் உள்ளடக்கி ஒரு பதிவு..

    மொத்தம் 25 பழங்கள் கொண்டுவந்தாரா சகோதரி..

    ReplyDelete
  13. அவியல் வாசனையு,ருசியும் ராஜி.கணக்குப் போடல !

    ReplyDelete
  14. அருமையான சுவையான அவியல்.

    ReplyDelete