Wednesday, July 11, 2018

துரோகமே வடிவான குரு துரோணர் - தெரிந்த கதை தெரியாத உண்மை

மகாபாரத்தில் பல கிளைக்கதைகள் இருந்த போதிலும் கொஞ்ச நேரமே வந்தாலும் கிருஷ்ணன், அர்ஜூனன், கர்ணனுக்கு ஈடாக   மிகவும் புகழ் பெற்ற  கதாபாத்திரம்தான் ஏகலைவன். மிகப்பெரிய வீரர்கள்லாம் சதியில்தான் வீழ்ந்ததாய் வரலாறு. இதுக்கு ஏகலைவன் ஒன்றும் விதிவிலக்கல்ல!  வழக்கமான அரசக்குடும்பத்தின் கௌரவப்பிரச்சனை காரணமாய்  சதி செய்து அவனையும் வீழ்த்திவிட்டனர்.  மகாபாரதம் முழுக்கவே குறுக்கு வழியில் வெற்றியை தேடிக்கொண்ட பராக்கிரமசாலிகள் நிறைந்துள்ளனர். கிருஷ்ண பகவான்,  பரமாத்மாகவே இருந்தாலும் சூழ்ச்சி செய்வதில் தப்பவில்லை. அதுக்குண்டான தண்டனையை பெற்றதிலும் அவன் தவறவில்லை. பாரத போரில் தன்  சூழ்ச்சியின் மூலம்,  தந்திரங்கள் பல செய்து, தன் பக்க படைக்கு வெற்றி தேடினாலும், கௌரவர்களுக்கு ஈடாக  பல உயிர்களை அழித்த கிருஷ்ண பரமாத்வாவின் வம்சமே பூமியில் இல்லாமல் போய்விட்டது. அது பற்றிய விரிவான பதிவை நமது பழைய  பதிவு 1, பதிவு 2 பார்த்திருக்கோம். இனி இன்றைய தெரிந்த கதை தெரியாத உண்மையில் ஏகலைவனுக்கு துரோணர் செய்த குரு துரோகத்தை பற்றி பார்க்கலாம் .
துரோணர் பரம ஏழை. அவர் வீட்டில் ஒரு பசு மாடுகூட இல்லை. தன் மகனின் பசியினை போக்க மனையாளின் வேண்டுகோளுக்கிணங்க,   தன்னுடைய பால்யநண்பன் துருபதனிடம் உதவிக்கேட்டு துரோணர் சென்றபோது அவமானப்பட்டு திரும்பினார். துருபதனை  பழிவாங்கவே போர் நுணுங்கங்கள் பல கற்றார் . போர் வித்தையில் தேர்ந்த ஆசிரியரான பரசுராமனிடம் போய் போர்த் தந்திரங்களைக் கற்றார். என்னுடைய வித்தையை சத்திரியர்களுடன் பகிர்ந்துகொண்டு விடாதே என எச்சரித்த பரசுராமரின் கட்டளையை, பரசுராமர் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்ததுமே, குருவிற்கு அளித்த வாக்குறுதியை மறந்து அஸ்தினாபுரம் சென்று குரு வம்சத்திற்கு ஆசானாகி, குரு வம்ச சத்திரிய இளைஞர்களை துருபதனுக்கு எதிராகப் பயன்படுத்தத் திட்டமிட்டார். அதிலிருந்தே அவரது முதல் துரோக எண்ணம் தலை தூக்க தொடங்கிவிட்டது. 
வில்வித்தையில் ஏகலைவன், அர்ஜுனனுக்கும்,  கர்ணனுக்கும் மேலானாவன் என்பதே உண்மை. அவன் துரோணரைவிடவும் மிகச்சிறந்த வில்லாளன் . ஏன்னா,  துரோணர் மற்றும் கர்ணணுக்கு பரசுராமரே குரு. கர்ணன் துரோணரைவிட சிறந்த வில்லாளன். ஏகலைவன் கர்ணனுக்கும்மேல் என்றால் அவன் துரோணரைவிட சிறந்த வில்லலாளனாக இருந்திருக்கவேண்டும். விதி அவனை துரோணர் என்னும் துரோகத்திடம் கொண்டு சென்று சேர்த்துவிட்டது போலும்!! 

சரி,  இனி ஏகலைவனின் கதையை பார்ப்போம் ....
மகத நாட்டைச் சேர்ந்த ஏகலைவன் பிறப்பினால் ஒரு வேடன் (நிஷாதன் என்ற கலப்பு இனத்தவன் ). அவன் இருந்த இடம் அஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்தது .ஒருநாள் அவனுடைய தந்தை வேட்டைக்கு கிளம்பினார். ஏகலைவனும் “நானும் வருகிறேன் என்றான். அவர் ஏகலைவனிடம், காடு ஒன்றும் விளையாட்டு மைதானம் இல்லை.  மகனே! சிறு கவனக்குறைவானாலும், உயிருக்கு ஆபத்தாக முடியும். உனக்கோ போதிய பயிற்சி இல்லை. நீ வித்தைகள் கற்று தேர்ந்தவுடன் நான் உன்னை அழைத்து செல்கிறேன் என்று சமாதானப்படுத்தினார். ஆனால் அந்த ஏகலைவன் கேட்பதாக இல்லை.  .தந்தையே நான் உங்களுக்கு இடையூறாக இருக்கமாட்டேன் என்று விடாப்பிடியாக கூறி சம்மதத்தையும் வாங்கிவிட்டான் . வேறுவழியில்லாமல் ஏகலைவனை அழைத்துச் சென்றார் அவனது தந்தை. காட்டில் மிகவும் கவனமாக இருந்தான் ஏகலைவன். தந்தை எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் கவனமாக உற்று கவனித்தான். விலங்குகளின் காலடி தடங்கள் மற்றும் அவற்றின் குரல் ஓசை பற்றி தந்தை கூறியவற்றை கூர்ந்து கவனித்தான்  ஏகலைவன். அவனுக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் கேட்டு தெரிந்துகொண்டான். மரத்தின் பின்னே மறைந்திருந்து, விலங்குகளின் சத்தம் வருகிற திசை நோக்கி, குறி தவறாமல் அம்பு விடும் தந்தையின் வில்வித்தைத் திறனைப் பார்த்து வியந்தான் ஏகலைவன்.
ஏகலைவனின் ஆர்வத்தை பார்த்து அவனது தந்தை வியந்து போனார். நீ சிறந்த வில்லாளனாக வருவாய் என்று பூரித்துப்போன தந்தை, ஏகலைவனை நல்ல குருவிடம் சேர்த்து வில்வித்தை பயிற்சிக்க வேண்டும் என்று எண்ணினார். அப்பொழுது ஏகலைவனின் தந்தைக்கு மனதில் தோன்றியது துரோணர்தான்.  ஆனால் ஏகலைவன் அதை முதலில் மறுத்தான். தந்தையே! உங்களைவிட சிறப்பாக  வில்வித்தையை யார் கற்று தந்துவிடமுடியும் என்று கேட்டான். ஆனாலும்,  ஏகலைவனின் தந்தை, அவனை அழைத்துக்கொண்டு துரோணரிடம் சென்று பணிவுடன் துரோணரை வணங்கி, குருவே! நான் வேடுவகுலத்தை சேர்ந்தவன். என்மகன் ஏகலைவன் வேட்டையாடுவதிலும்,  வில்வித்தை கற்பதிலும் மிக ஆர்வமாக இருக்கிறான். அவனுக்கு நீங்கள் வில்வித்தை கற்று தரமுடியுமா?! என பணிவுடன் கேட்டான். இறுமாப்புடன் அவரை பார்த்த துரோணர், அகங்காரங்கொண்டு  ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி தருகிற குலகுரு நான். வேட்டுவ குலத்தைச் சேர்ந்த உன் மகனுக்கு வித்தைகளை நான் கற்றுத்தர வேண்டுமா? "என ஏளனம் செய்தார் .  அங்கிருந்து கனத்த மனதுடன் ஏகலைவனும் அவனது தந்தையும் திரும்பினார் .
ஏகலைவனுக்கு அங்கு நடந்த அவமானதைவிட, வில்வித்தையில் நிபுணனாக வேண்டும் என்ற எண்ணமே இருந்தது . மெதுவாக தன் தந்தையிடம் கேட்டான் தந்தையே! நீங்கள் ஆசை போட்டதுபோல் என்னால் துரோணருக்கு மாணவனாக முடியாவிட்டால் என்ன?! என்னுடைய உண்மையான குருவே நீங்கள்தான்.  உங்களைப்பார்த்துதான் நான் வில்வித்தையை கற்றுக்கொண்டேன். நீங்களே, வில்வித்தை நுணுக்கங்களை எனக்கு கற்றுத்தாருங்கள் என தந்தையின் கால்களில் வீழ்ந்தான் ஏகலைவன்.  .வில்வித்தையில் தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் ஏகலைவனுக்கு சொல்லிக்கொடுத்தார் தந்தை. எந்நேரமும் வில்வித்தையை பற்றிய சித்தனையிலேயே இருந்தான் ஏகலைவன்ஏகலைவனின் அம்புக்கு எந்த இலக்கும் தவறவில்லை. விரைவில் சிறந்த வில்வித்தைக்காரனானான் ஏகலைவன் .
நாட்கள் உருண்டோடின.  ஏகலைவன் துரோணரைப்போல் ஒரு உருவபொம்மை செய்து அவரை அரூபமான குருவாக நினைத்து அனைத்து வித்தைகளையும் கற்று தேர்ந்தான். வில்வித்தையில் உலகுக்கு அவனுக்கு நிகர் எவருமில்லை எனறு திகழ்ந்தான். அங்கே குருகுலத்தில், அரச குமாரர்களுக்கு துரோணர் வித்தைகளை கற்று கொடுத்துக்கொண்டு இருந்தார் .அர்ஜுனனின் திறமையை கண்டு  துரோணர் அர்ஜுனனை தனது மாணவர்களில் சிறந்தவன் என அறிவித்தார்.  பாணடவர்களும் கௌரவர்களும் தினம் பயிற்சி செய்து கொண்டு இருந்தனர். அதனைக்கண்டும், தனது வில்வித்தை திறமையை மெருகேற்றிக்கொண்டான்.  ஒருமுறை, ஆசிரமத்தில் இருந்தவர்கள்லாம் அவர்கள் காட்டுக்கு பயிற்சி செய்ய சென்றபோது,  அர்ஜுனன் தனது திறமையை வெளிக்காட்டினான். அங்கிருந்த ஒரு மரத்தின் இலைகள் அனைத்தையும் துளைக்குமாறு  அம்பெய்தினான். எல்லாரும் அவனை பார்த்து வியந்தனர். அடுத்தநாள்,  அங்கே பயிற்சிக்கு வரும்போது அதே மரத்தின் இலைகளில் அர்ஜுனன் போட்ட துளைகளுக்கு பக்கத்தில் இன்னும் ஒரு துளை கூடுதலாக போடப்பட்டு இருந்ததைக்கண்டு அனைவரும் வியந்தனர். யார் இதை செய்து இருப்பார்கள் என்ற அச்சத்தோடு பயிற்சியை செய்து கொண்டு இருந்தனர் .
இப்படி ஆளுக்கொரு திசையாகச்சென்று வேட்டையாடிக்கொண்டு இருந்த ராஜகுமார்களுக்கு துணையாக சென்ற பாதுகாப்பு படையில் இருந்த வீரனும் அவனது நாயும் திசைமாறி சென்றனர். திசைமாறிய நாயானது ஏகலைவன் பயிற்சி செய்துக்கொண்டு இருந்த இடத்திற்கு சென்றது. வித்தியாசமான சூழ்நிலை இருப்பதைக்கண்ட  நாய் குரைக்க ஆரம்பித்தது. தன்னுடைய பயிற்சிக்கு இடையூறாக இருந்தது அந்த நாயினுடைய சப்தம் .அதை கொல்லவும் மனசு வராமல் அதை தேடி கண்டு பிடித்து விரட்டும் நேரத்தில் தன்னுடைய கவனமும் சிதறிவிட கூடாது என எண்ணிய  ஏகலைவன் நாயின் சப்தம் வந்த திசையை நோக்கி ஏழு அம்புகளை செலுத்தினான். ஏழு அம்புகளும் ஒரேநேரத்தில் கிளம்பியதைப்போல்தான் இருந்தது. ஆனால் நாயின் வாய் மூடுவதற்குள் அடுத்தடுத்தது அம்புகள் ஏவப்பட்டு ஒரு பொறியை போல் பூட்டு போட்டுவிட்டான் ஏகலைவன். நாயும், பாதுக்காப்புக்காக வந்த வீரனும் பாண்டவர்களின் பக்கம் ஓடி வந்தனர் முதலில் நாயை பார்த்தது பீமன்தான். அவன் காட்டிய திசையில் அனைவரும் பார்த்தன. சிறு இரத்தம்கூட வராமல் நாயின் வாயை வெறும் ஒலிவந்த திசையைவைத்தே ஒருவன் அம்புகளால் பூட்டு போட்டு இருக்கிறான் என்று பார்த்ததும் வியந்து போயினர் .
யார் இவ்வளவு துல்லியமாக ஓசையையே வைத்து அம்பு எய்கிறான் என்று தேடி சென்றபோது, அவன் அம்புகள் இடைவெளி இல்லாமல் மழையாக பொழிந்தன. எல்லா இலக்கையும் சரமாரியாக இலக்கு தவறாமல் தாக்கி கொண்டு இருந்தான்.  பாண்டவர்களும், கௌரவர்களும் வாயடைத்து நின்றனர். அவனிடம்,  யார் நீ?! இவ்வளவு சிறப்பாக அம்பு எய்கிறாயே! என்று கேட்டனர்.  அதற்க்கு ஏகலைவன்,  மெதுவாக, நான் ஏகலைவன். நிஷாத நாட்டு வேடுவர்குல தலைவனின் மகன். துரோணரின் சீடன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அன்று, எல்லோரும் குருகுலத்திற்கு திரும்பிவிட்டனர் .அவர்கள்  காட்டில் நடந்தவைகளை துரோணரிடம்  ஒன்றுவிடாமல் ஒப்புவித்தனர் .அவர்களில்  அர்ஜுனனது மனது மட்டும் காட்டில் கண்ட ஏகலைவனையே சுற்றிக்கொண்டு இருந்தது எல்லா விதைகளையும் கற்றுக்கொடுத்த குரு,  ஏன் இந்த வித்தையை மட்டும் நமக்கு கற்றுத்தரவில்லை என்று அவன் மனது குடைந்துகொண்டு இருந்தது. அவன் துரோணரிடம் சென்றான் .குருவே உங்கள் சீடர்களில் தலை சிறந்தவன் என்னைத்தவிர வேறு யாரும் இல்லை என்று கூறினீர்கள். ஆனால்  இன்று நிஷாத நாட்டு வேடுவகுல தலைவனின் மகன் ஏகலைவனுக்கு எனக்கு கற்றுக்கொடுக்காத விதைகளையும் கற்று கொடுத்திருக்கிறீர்களே! அவன்தான் உலகின் தலைசிறந்த வீரன் என்பதில் சிறிதளவும் ஐயம்  இல்லை?! இது எப்படி சாத்தியம்?! நான் உங்கள் சீடர்களில் முதன்மையானவன் இல்லையா?! என்று கேட்டான்.
 .
நடந்தவை எல்லாவற்றையும் துரோணர் கேட்டார். அவர் முகம் வெளிறிப்போனது.  உண்மையில் இப்படி ஒரு வித்தை இருக்கிறதா?! நமக்குகூட தெரியாதே! என்று ஆச்சர்யங்கொண்டாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் யாரவன்?! உடனே நான் அவனை பார்க்கவேண்டும் என்று கூறினார்.  அடுத்தநாள் பொழுது புலர்ந்தது. சீடருடன் துரோணரும் காட்டுக்கு சென்றார். காட்டில் ஆஜானுபாகுவாக, அநாசாயமாக பயிற்சி செய்துக்கொண்டு இருந்த ஏகலைவனை கண்டார். யாரடா நீ!உனக்கு யார் வில்வித்தையை கற்று கொடுத்தது என அதிகார தோரணையில் கேட்டார்.  அதற்கு மிகவும் பணிவுடன், ஏகலைவன் குருவே! நான் உங்களிடம் வில்வித்தை கற்பதற்காக வேடுவர் தலைவரான என் தந்தையுடன் உங்களை காண வந்திருந்தேன். என்னை, என் குலத்தின் தாழ்வு பற்றி பேசி அவமதித்தது அனுப்பினீர்களே!  ஞாபகம் இருக்கிறதா எனக்கேட்டான். ஆனாலும் நீங்கள்தான் எனக்கு குரு. உங்களுடைய உருவச்சிலையை வைத்தே மானசீகமாக நான் வித்தையை கற்று கொண்டேன் என பணிவுடன் கூறினான். விஷயத்தை கேள்விப்பட்டு ஏகலைவனின் தந்தையும் அங்கு வந்தார்.
குலத்தை காரணம் காட்டி எனக்கு விதைகளை சொல்லிக்கொடுக்க மறுத்தபோது, என் தந்தைதான் எனக்கு குருவாக இருந்து எனக்கு எல்லா வித்தைகளையும் கற்று கொடுத்தார்.  ஆனால் எனது மானசீக குரு நீங்கள்தான் என்று கூறினான்.  இதை கேட்டதும் அர்ஜுனனின் முகம் தொங்கிப்போனது உடனே அர்ஜூனனைவிட சிறந்த வீரர் எவரும் இருக்கக்கூடாது என்பதற்காக ,துரோணரின் மனதில் துரோக சிந்தனை ஓடியது. சரி,   நீ என்னைத்தானே மானசீக குருவாக நினைத்து வித்தைகள் கற்றுக்கொண்டாய்!! அப்படின்னா,  நீயும் என் சீடன்தான்! என மனதில் வஞ்சக எண்ணத்தோடு துரோணர் சொன்னதைக்கூட,  நல்லவிதமாகவே எடுத்துக்கொண்ட ஏகலைவன் அடுத்து  என்ன நடக்கப்போகிறது என்று  தெரியாமல், துரோணரின் குரூர எண்ணத்தை  புரிந்துக்கொள்ளாமல், துரோணர் தன்னை சீடனாக ஏற்றுக்கொண்டுவிட்டார் என அகமகிழ்ந்தான். சரி,  நீ என்னுடைய சீடன் என்பது உண்மையானால் உன் குருவுக்கு உரிய தட்சணையை கொடு என கேட்டார் துரோணர். ஏகலைவனுக்கும் அவன் தந்தைக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தங்களின் பெருந்தன்மைக்கு நன்றி குருவே! தங்களுக்கான குருதட்சணையாக என்னவேண்டும் என்று  ஏகலைவன் பணிந்து நின்றான் .
சரி, உன் குருதட்சணையாக, உன் கட்டைவிரலை வெட்டிக்கொடு என துரோகமே வடிவான துரோணர் கேட்டார். துரோணரின் வார்த்தைகளை கேட்டதும் நொறுங்கி போனார் ஏகலைவனின் தந்தை. அங்கு கூடி இருந்த சபையினர்,  இது அநீதி.  குலத்தைக் காரணம் காட்டி வில்வித்தையை கற்றுத்தர மறுத்தவருக்கு எதற்காக தட்சணை கொடுக்கவேண்டும்?! வித்தையே சொல்லிக்கொடுக்காமல் அதற்கான தட்சிணை பெற்று கொள்பவர் எப்படி ஒரு நீதிமான் ஆகமுடியும்?! நீதி தவறியவர் எபபடி ஒரு குருவாக இருக்கமுடியும்?!  எனக் குரல் எழுப்பினர். ஆனால் ஏழையின் நீதி அம்பலத்தில் ஏறாதே!! துரோணருக்கு பக்கபலமாக பாண்டவ வீரர்கள் நின்றனர். நியாயப்படி நீ குருதட்சிணை கொடுப்பதாக வாக்கு கொடுத்துவிட்டாய். அதை நிறைவேற்றுவது உன் கடமை என்று ஏகலைவனை சூழ்ந்தனர். பிரிவினை எண்ணத்தோடு வித்தையை கற்றுக்கொடுக்காமல் அதற்கான ஊதியத்தை பெற வந்திருக்கும் இவரா குரு என கூட்டத்தினர் குரல் எழுப்பினர். இவற்றையெல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான் ஏகலைவன். பிறகு சிரித்த முகத்துடன் தன்னுடைய கட்டை விரலை வெட்டி தட்சணையாக துரோணருக்கு கொடுத்துவிட்டு குருவே என் தட்சிணையை ஏற்று கொள்ளுங்கள் என்று முக மலர்ச்சியோடு நின்றுகொண்டிருந்தான். அங்கேயே தொடங்கிவிட்டது பாண்டவர்களின் சதி.  அர்ஜுனனை சிறந்த வீரனாக காட்ட அவனைவிட சிறந்த வீரர்களான கர்ணன், ஏகலைவன் முதலானோர்களை துரோக எண்ணத்தால் வீழ்த்தித்தான் அர்ஜுனனை வில்வித்தைக்கு சிறந்தவன் என்ற இடத்திற்கு துரோணர் கொண்டுவந்தார் .
பின்னாளில் ஏகலைவன் தன்னுடைய எஞ்சிய விரல்களாலும் இருகைகளாலும், கால்களாலும் அம்பு எய்ய கற்றுக்கொண்டான். ஆனாலும்,  அவனால் முந்தைய வேகத்திற்கு இணையாக வரமுடியவில்லை. ஆகையால் அர்ஜுனன் சிறந்த வீரனாகினான். உண்மையில் இங்கு, துணோனரின் துரோகம் வெளிப்பட்டாலும், ஏகலைவன் கொடுத்த வாக்கினை நிறைவேற்ற அது தனது கட்டைவிரனாலும் சரி, அதைவைத்துதான் அம்பு எய்ய முடியும் என்று தெரிந்தும்  கொடுத்த வாக்கின்  தர்மத்தை நிலைநாட்டும் விதமாகவும், குருவுக்கு தட்சணை, அவர் விரும்பும் வண்ணம் இருக்கவேண்டும் என்பதிலும் சிறிதும் அவன் தயக்கமில்லாமல் கட்டைவிரலை கொடுத்தது பாராட்டுதற்குரியது. 

அதேசமயம் துரோணர் ஏகலைவனை சீடனாகவே ஏற்றுக்கொள்ளாதபோது குருதட்சணை மட்டும் கேட்டதும் அவருடைய தவறு. இவர் குருவாகவே இல்லை. பின் எப்படி தட்சணையை கேட்கலாம். ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் கிருஷ்ணர் உட்பட மகாபாரதத்தில் எதிர்மறையான கதாபாத்திரங்களே அதிகம். 30 வினாடிகளில் போரை முடிக்கும் தன்மை உடைய பார்பரிகாவையும் கிருஷ்ணர் தந்திரமாக கொன்று விட்டார். ஏகலைவனின் விஷயத்தில் கிருஷ்ணரின் சூழ்ச்சியே பிரதானமாக இருந்தது. அர்ஜுனனை தகுதியானவனாக காட்ட, அர்ஜுனனைவிட தகுதியான பல வீரர்கள் சூழ்ச்சியால் அழித்து, அவனை வில்லுக்கு விஜயன் என்று காட்டுவது .இன்றைய காலகட்டத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றியடைந்து, நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்று சொல்லும் அரசியல் சூழ்ச்சியைபோல் இருக்கிறது .
பின்னாளில் ஏகலைவன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான் என்றும் அறியப்படுகிறது. ஏகலைவனின் கட்டைவிரலை காவு வாங்கியதில் கிருஷ்ணனுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் சொல்லப்படுகிறது துரோணரின் மனதில் இந்த விதையை விதைத்ததே கிருஷ்ணன்தான் என்றும் செவிவழி கதையாக சொல்லப்படுகிறது. ஒருவகையில் ஏகலைவன் கிருஷ்ணனுக்கு சகோதரன் முறையாவான். கிருஷ்ணருடைய தந்தை வசுதேவரும், ஏகலைவனின் தந்தை தேவஷரவாவும்  சகோதரர்கள் என்றும் சொல்லப்படுகிறது. சிறுவயதில் தேவஷரவா காட்டில் தொலைந்து போனபோது , அவரை நிஷாத வியாத்ராஜா ஹிரன்யதனுஸ்தான் தத்தெடுத்து வளர்த்துவந்தார் என்பதும் பின்னாளில்தான் தெரியவருகிறது. ஆனால் சகோதரனாக இருந்தாலும் ஏகலைவனும் அவனது குடும்பமும் , நிஷாத வியாத்ராஜா ஹிரன்யதனுஸ் காலம் முதல் ஜராசந்தனின் குடும்பத்திற்கு ஆதரவாகத்தான் இருந்து வந்துள்ளனர். ஜராசந்தன் கிருஷ்ணனின் பரம எதிரி ஆகையால் ஏகலைவனையும் கிருஷ்ணர் எதிரியாகத்தான் பார்த்தார் . 
கிருஷ்ணரும், ருக்மணியும் காதலித்து ஓடிப்போன சமயத்தில் ஜராசந்தனுடன் சேர்ந்து சிஷ்புலா மற்றும் ஏகலைவன் கிருஷ்ணரை எதிர்த்து சண்டையிட்டனர். அதில் சிஷ்புலாவும், ஏகலைவனும் கொல்லப்பட்டனர் இவர்கள் பின்னாளில் கௌரவப்படைகளுடன் சேர்ந்து பாண்டவர்களுக்கு எதிராக சண்டையிடுவார்கள் என்று தெரிந்துகொண்டதால், கிருஷ்ணர் அவர்களை கொன்றதாக துரோண பர்வத்தில் கூறப்பட்டிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் ஏகலைவன் சிறந்த வில்வித்தை வீரனாகவும், அதேசமயம் குருபக்தி, மற்றும் அவனுடைய நேர்மையாலும் அவனுக்கு கிருஷ்ணர் உனக்கு துரோணர் செய்த துரோகத்திற்கு பலனாக நீ மறுபிறப்பெடுத்து திரிஷ்டத்யும்னனாக பிறப்பெடுப்பாய் உன் கையாலே துரோணர் கொல்லப்படுவார் என்ற வரத்தையும் கொடுத்ததாக சொல்லப்படுகிறது .
குருஷேத்திர போரின் ஐந்தாம் நாளில் குரு துரோணர் பாண்டவ படைகளை நிர்மூலம் செய்துகொண்டிருந்தபோது ,அசுவத்தாமா எனும் இவரது மகன் உயிரோடிருந்தபோதே இறந்ததாக பொருள்படும்படி  "அசுவத்தாமா ஹத:" என்று சொல்லி பின்னர் கடைசியில் "குஞ்ஜர" எனும் வார்த்தையைச் சேர்த்தார் தர்மர்.  கடைசி வார்த்தை காதில் விழாதபடி கிருஷ்ணர் பாஞ்சசன்யத்தை முழக்க,  மகன் இறந்ததாக நினைத்து மனமொடிந்த துரோணர் வில்லை கீழே போட்டுவிட்டார். இதனால் தர்மனும் சத்தியத்திலிருந்து தவறினான். அந்த சமயத்தில்  பீமன்,  துரோணரை பார்த்து  "பிராமணராகிய நீங்கள் குலத்தொழிலை விட்டு போர் புரிய வந்ததால் அரசர்களின் அழிவுக்குக் காரணமாகிவிட்டீர்கள்.  நீங்கள் இந்தப் பாப வாழ்க்கையில் ஈடுபட நேர்ந்தது சாபக்கேடு" என்று துரோணரைக் குற்றம் சாட்டினான்.  ஆயுதங்கள் இல்லாத துரோணரை திரௌபதியின் சகோதரர் திரிஷ்டத்யும்னனாக பிறப்பெடுத்த ஏகலைவனால் கொல்லப்பட்டார் .அதன் பிறகு, போருக்குப் பின்னர், துரோணர் மகன் அசுவத்தாமாவால், திரிஷ்டத்யும்னன் கொல்லப்பட்டார். இப்படி மஹாபாரத பருவம் எல்லாமே பழிவாங்குதலிலே பல ராஜ்ஜியங்கள் அழிந்து போயின. அவைகளை பற்றிய சுவாரசிய கதைகளையும் இனி அடுத்துவரும் பதிவுகளில் பார்க்கலாம் . 
நன்றியுடன்,
ராஜி

11 comments:

 1. மாறுபட்ட குணங்கள் மூலமாகவும், எதிர்மறை குணங்கள் மூலமாகவும்கூட நம்மவர்கள் நமக்கு பல வழிகளில் அறவுரைகளையும், அறிவுரைகளையும் பற்பல வழிகளில் உணர்த்தியுள்ளார்கள் என்பதற்கு இவை போன்றவையே சான்று.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்ப்பா.. எப்படிலாம் இருக்கக்கூடாதுன்னு நமக்கு எடுத்து சொல்லவும் ஆள் வேணும்ல!!

   Delete
 2. அக்கா கனவு அருமை - உங்கள் மின்னஞ்சல் தாருங்கள் (hishalee@gmail.com)

  நான் என் கதையை திருத்தும் செய்துள்ளேன் இப்போது பாருங்கள் எதாவது பிழை இருப்பின் கூறுங்கள் திருத்தம் செய்கிறேன்
  மிக்க நன்றிகள் அக்கா

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா வந்து பார்க்கிறேன் சகோ..

   மெயில் பக்கம்லாம் யார் இப்ப வர்றாங்க?!

   Delete
 3. நல்ல பதிவு . நன்றி .

  ReplyDelete
 4. super but helpful for real life

  ReplyDelete
 5. கட்டை விரலோ தலையோ
  காணிக்கையாக யாரும் கேட்டால்
  அவன் பட்டை உறியும்
  சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்

  ReplyDelete
 6. துரேணாச்சாரியார் ஸ்மார்த்த பிரமணன் கிடையாதுஅவர் அவர் தமிழ் விஸ்வபிரமணன் கொல்லர் வில் கொல்லர் மரபை சார்ந்தவர் பரசுராமர் கேரளா வை சார்ந்தவர் அத்திரி குமரி மாவட்டத்தை சார்ந்தவர் கர்ணன் பொய்சொல்லிவில்வித்தை கற்றவன் துரோணாச்சாரியார்

  ReplyDelete
 7. அர்சுனன் தவிர மற்வர்கழுக்கு ஒலி வரும் திசை நோக்கி வில் இன்றி அம்பு எய்யும் அஸ்திரவித்தை கற்று தருவதில்லை என்று சபதம் சொய்தவர் அக நன்பன் சொய்ததுரேகம்அர்சுனன் தவிர வேறு யாருக்கும் கற்று தருவதில்லை என அர்சுனனுக்கு வாக்கு கொடுத்தவர் தர்மர் குரு துரோகி கிருஷ்னன் சாபம் மதுரா அழிந்தது஦

  ReplyDelete