Friday, February 28, 2020

அகண்ட பரிபூரண ஞானதேசிக ஸ்ரீலஸ்ரீ கம்பளி ஸ்வாமிகள் சமாதி -பாண்டிச்சேரி சித்தர்கள்.


இதுவரை நமது புண்ணியம் தேடி பகுதியில் பல கோவில்களை பற்றிதான் பார்த்திருக்கிறோம். எப்பவாவது ஒருசில  சமயத்துல, கோவிலுக்கு பக்கத்திலிருக்கும் சித்தர்கள், சாமியார்கள் ஆசிரமம் பற்றி தனிப்பதிவா பார்த்திருக்கோம். ஆனா,  இதுவரை இல்லாமல் நம் தொடரில் தொடர்ந்து சித்தர்களின் சமாதிகளை பற்றி பகிரப்படுகிறது ஏனென்றால், மானிடராய் பிறந்தவர்களின் துர்க்குணங்களையும்துன்பத்தையும்  மாற்றி, தூய்மையானவர்களாக்குவதற்காக அவதரித்தவர்கள் சித்தர்கள். இவர்கள் தனிமையை நாடுபவர்கள். பசித்திருப்பதையும் விழித்திருப்பதையும் பெரிதும் விரும்புபவர்கள். எப்பொழுதும் சிவபரம்பொருளையே தியானித்துக்கொண்டு இருப்பவர்கள். சித்தர்கள் பெரும்பாலும் சங்கேத மொழியில் பேசுபவர்கள். இவர்கள் பேசுவதை நாம் புரிந்துகொண்டால், நாம் பல ஆபத்துகளிலிருந்து தப்பிக்கலாம். மக்களுக்கு நன்மை புரியும் சித்தர்களை மக்கள் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். இவர்களின் சக்தியோ அளப்பரியது. இதற்கு உதாரணமாக எத்தனையோ சித்தர்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். அதிலும், நாங்கள் சந்தித்த கடைக்காரர் சொன்ன மாதிரி புதுச்சேரி மாநிலத்தில் மட்டுமே சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கின்றது.  அவற்றைதான் நமது பதிவுகளில் தொடர்ந்து பார்த்து, படித்து, தரிசித்து வருகிறோம்.
சரி கடந்தவாரம் நாம ஓம் ஸ்ரீமத் குரு சித்தானந்த ஸ்வாமிகளின் ஜீவசமாதியை தரிசித்தோம். இந்த வாரம் நாம தரிசிக்கப்போவது அகண்ட பரிபூரண ஞானதேசிக ஸ்ரீலஸ்ரீ கம்பளி சுவாமிகள் ஜீவசமாதியை. வேதாந்த சுவாமிகளின் ஜீவசமாதியை தரிசித்து வெளியே வரும்போது,மதியம் ஆகிவிட்டது. பெரும்பான்மையான திருக்கோவில்களில் மதியம் 12:௦௦ மணிக்குமேல் நடையடைத்து விடுவது வழக்கம். சரி இனி சாப்பிட்டு போகலாம்ன்னு பக்கத்திலிருந்த ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டு, பக்கத்துல இங்க பக்கத்தில் எதாவது பார்க்குறமாதிரி இருக்கான்னு ஹோட்டல்காரங்கக்கிட்டயே விசாரித்தோம்.  ம்ம் இருக்கு.  இங்கன பக்கத்திலயே கம்பளி சித்தரின் ஜீவசமாதி இருக்கு போய் பார்ருங்க. ரொம்ப விஷேசமானதுன்னு  சொல்லி கூடுதல் தகவலாய்  பாண்டிச்சேரி முழுக்க 51 சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கு நீங்க ஒவ்வொண்ணா பாருங்க எனக்கூறி கம்பளி சித்தர் ஜீவ சமாதிக்கு போகும் வழியை சொன்னார்.
நாங்க அங்க போனதும், சித்தர் சமாதிக்குதான் வந்துட்டோமா?! இல்ல எதாவது கார்ப்பரேட்  சாமியார்கள் ஆஸ்ரமத்திற்கு வந்துட்டோமான்னு  ஜெர்க் ஆனோம். ஏன்னா, அங்கு, வெளிநாட்டுக்காரங்க அதிகம் இருந்தனர். இதிலிருந்து ஒரு உண்மை புரிகிறது. வெளிநாட்டவர்கள் நம்முடைய சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்து இந்துமத்தை பின்பற்றி அமைதியான வாழ்வு வாழ்ந்து அமைதியை தேடுகின்றனர் போலும். ஆனா, அதேநேரத்தில்  சில தவறுதலான வழிகாட்டுதல்மூலம் சிலருக்கு சில பிரச்சனைகள் வந்துவிடுகின்றன.  வீட்டைவிட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம். அந்த நாலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டால் நல்லா இருக்கலாம்ன்ற பாடல்வரிகள் நினைவுக்கு வந்தது. சரி சரி, நமக்கெதுக்கு  ஊர்வம்பு?! நாம  வந்தவேலையை பார்ப்போன்னு  ஜீவசமாதியை நோக்கி சென்றோம்.
இந்த சித்தரை பற்றி யாருக்கும் சரியான விவரம் தெரியாதாம்.  ஆனா, இவர் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்ததாக மட்டும் செவிவழி செய்திஇவருடைய உண்மை பெயர், பெற்றோர் விவரங்கள் யாருக்கும் தெரியலை. இவர் கம்பளி போர்வையை எப்பயுமே போர்த்திக்கிட்டு இருக்குறதால, மக்கள் இவரை கம்பளி சாமியார்ன்னு கூப்பிடப்போய் அதுவே பின்னாளில் கம்பளி சித்தர்ன்னு ஆகிட்டது. புதுச்சேரியில் உள்ள பாக்குமுடையான் பட்டு, முத்தியால்பேட்டைகவுண்டன்பாளையம் போன்ற இடங்களில் அடிக்கடி நடமாடுவாராம். அதிலும் கவுண்டன்பாளயத்திலுள்ள  சாஹையார்ன்னு பேர்க்கொண்ட குடும்பத்தினரிடம் மட்டும்தான் பேசுவாராம். ஒரு இஸ்லாமிய பெரியவர்,   இவருக்கு குருவாக இருந்தார் சொல்றாங்க. வேலாயுதம் என்ற வைத்தியரும் இவரிடம் நெருக்கமாகவும், இருவரும் நல்ல நட்பு கொண்டவராக இருந்தனர் என்றும் சொல்லப்படுது.


இந்த கம்பளி சித்தர் நிறைய கல்வி அறிவு பெற்றவர். சுத்த பிரம்மச்சாரி. மாயையை வென்றவர் என்றும் தன் ஆன்மீகச் சக்தியால் ஊர் மக்களுக்கு நிறைய நன்மைகளை இந்த சுவாமிகள் செய்துள்ளார். பக்தர்களுக்கு கொடிய நோய் வந்துவிட்டால்  அவர்களுக்கு பச்சிலையும் விபூதியும் தந்து குணமாக்குவாராம். மேலும், இவரைப்பற்றி  செவிவழியாக சொல்லப்படுவது என்ன்னா,  இவர் நினைத்த இடத்தில் மறைந்து, நினைத்த இடத்தில் தோன்றும் சக்தி படைத்தவராக இருந்துள்ளார். சூட்சுமத்தில் மறைந்திருக்கும் ஒன்றை ஸ்தூலத்திற்கு அழைத்து வரும் ஆற்றல் படைத்தவர் என்றும் இதை அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்தவங்க பார்த்திருக்காங்கன்னும் பார்த்தவங்க வழிவழியா வந்தவங்க சொல்லி கேட்டவங்க சொல்றாங்க.  

வீதியில் நடமாடும்போது இவரது தோற்றத்தை கண்டு வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் இவரை விரட்டினால் அன்று முழுவதும் வியாபாரமே நடக்காதாம். கடைக்காரர், கம்பளிச் சித்தரிடம் மன்னிப்பு கேட்டப்பிறகே வியாபாரம் மீண்டும் சிறப்பாக நடைபெறுமாம். இதுவும் செவிவழியா பரவி இங்கு சொல்லப்படுது.  சிலசமயம் சாலையில் நின்று .வாயில் ஒரு சுருட்டை வைத்துக்கொண்டு போவோர்வருவோரிடம் நெருப்பு கேட்பாராம். அவர்கள் கண்டும் காணாமல் சென்றால்  தன் ஆட்காட்டி விரலை சுருட்டுக்கு முன்னால் பத்த வைப்பதுபோல் நீட்டுவாராம் . சுருட்டு குப்பென்று பற்றிக் கொள்ளுமாம். அதேபோல் சுவாமிகள் ஒருமுறை கள்ளுக்கடைக்கு சென்றார். கையை நீட்டினார். கடைக்காரர்,  இன்னும் போணியாகலை போ” ன்னு கள்ளுக்கடைக்காரன் விரட்டினானாம்உடனே, சுவாமிகள் நெடுந்தூரம் சென்று ஒரு ஆலமரத்தடியில் உட்கார்ந்து விட்டார். அன்று பூராவும் வியாபாரம் ஆகவே இல்லை. கள்ளுக்கடைக்காரர், சுவாமிகளை தேடி ஓடினார். வெகு சிரமத்திற்குபின் சுவாமிகளை கண்டுப்பிடித்து கடைக்கு கூப்பிட்டார். சுவாமிகள்,”நான் வருகிறேன்  நீ முன்னால் போஎன்று சொல்லி அவரை அனுப்பினார். கடைக்காரர், ஒரு குதிரை வண்டியில் வேகமாக  கடைக்கு வந்து சேர்ந்தார். சுவாமிகள், அதற்கு முன்னரே வந்து அங்கு உட்கார்ந்திருந்தார். அதுவும் இவரது சித்துவிளையாட்டுகளில் ஒன்று என சொல்லப்படுகிறது.
மற்றுமொரு நாள் ஒரு சாராயக்கடைகாரனிடம் கையை நீட்டினார் சுவாமிகள். அவனும் இன்னும் போணியாகவில்லை என்று சுவாமிகளுக்கு சாராயம் கொடுக்கவில்லை. சுவாமிகளும் அங்கிருந்து போய் விட்டார். அன்று முழுதும் அந்த கடையில் எவ்வளவு முயன்றும் சாராய புட்டியின் மூடிகளை திறக்க முடியவில்லை. அதேபோல் பாக்குமுடையான்பட்டில் ஒரு வீட்டில், சுவாமிகள் ஊறுகாய் கேட்டார்.  வீட்டுக்காரர்,” இல்லை போ” என்று துரத்தினார். சிறிது நேரங்கழித்து வீட்டுக்காரர் ஊறுகாயை திறந்து பார்க்கும்பொழுது ஊறுகாயில் புழு பூழ்த்திருந்தது. உடனே அவர் சுவாமிகளை தேடிச் சென்று மன்னிப்புகேட்டார். பின், மறுபடி புழுக்கள் ஊறுகாயானது. ஒரு சமயம்,  சுவாமிகளும் மற்றும் சிலரும் அடர்ந்த கள்ளிக்காடு வழியே சென்று கொண்டிருந்தார்கள்.ஒரு விரியன் பாம்பு சுவாமிகளை கடித்து விட்டது. உடன் வந்தவர்கள்  சுவாமிகள் இறந்திருப்பார், என்று நினைக்க,காட்டில் அந்த  பாம்பு இறந்து கிடந்தது. இவருக்கு பாதரசத்தை தங்கமாக மாற்றும் ரசவாத வித்தையும் தெரியும். ஆனால் இவர் பொருளாசை, பொன்னாசை என்றுமே கொண்டதில்லையாம்
சுவாமிகள், தன் ஆத்ம சாதனைகளை பெரும்பாலும் தண்ணீரில்தான் செய்து வந்தாராம். ஜலஸ்தம்பனம் செய்வது இவரது பழக்கம். நீரின் மேலேயே படுத்துக் கிடப்பார். சுவாமிகள்  ஏதோ ஒரு காரணத்தால்தான் எப்பொழுதும் ஜலத்தில் ஸ்தம்பனம் செய்து கொண்டிருந்தார்.அப்படியே சில நாட்களில் ஜல சமாதியடைந்தார். அந்தநாள் சரியாக 1874 -ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தட்டாஞ்சாவடி அருகில் உள்ள ருத்திர பூமிக்குச் சமீபத்தில் உள்ள குளத்திலேயே அவர் உடல் கிடந்தது. அவ்வழியே சென்றவர் இதை கவனிக்கவில்லை. மறுநாள் காலை ஒரு குரல் கேட்டது “கம்பளி தண்ணியிலே கம்பளி தண்ணியிலே“. இக்குரல் தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருந்தது. மக்கள் ஒன்றுகூடி அவரது  திருவுடலை, நீரிலிருந்து வெளிக்கொணர்ந்து அங்கயே சமாதி எழுப்பி ஊர்மக்கள் அந்த சமாதியின்மேல் ஒரு லிங்கமும் பிரதிஷ்டை செய்தனர். சமாதியை சுற்றிலும் சுவாமியின் அனுக்கிரகம் பெற்றவர்கள் ஏழு பேர் சமாதியடைந்துள்ளனர். கம்பளி தேசிக சுவாமிகளின் சமாதியின் பின்புறம்-பெரியவர்க்கு பெரியவர் என்னும் மகானின் சமாதியும் இருக்கிறது.
இப்பழுது இந்த சித்தர் சமாதிக்கோவில், வெளிநாட்டிலிருந்து வந்து புதுச்சேரியில் நிரந்தரமாகக் குடியேறியுள்ள ஒரு மேல்நாட்டுக் குடும்பத்தினர் பராமரிப்பில் உள்ளது.அவர் மேல்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், இவரது மனைவியும், மருமகளும் தமிழ்ப்பெண்மணிகளாவர். இவரது மகன் ஒரு தமிழ் மகனாகவே வளர்க்கப்பட்டவர். அவர்கள்தான் இங்கு பூஜைகள் செய்கின்றனர். இந்த கம்பளிச் சித்தர் சமாதி கோவில் விசாலமான நிலப்பரப்பைக் கொண்டதாக உள்ளது. அடர்ந்த மரங்கள், பூஞ்செடிகள் நிரம்பிய இக்கோவிலை தரிசிப்பது மிகவும் சிறப்பான விஷயம். சித்தரின் சமாதிக்குப் பின்னால் சிவபெருமானது மிக அழகிய வெண்கல உருவம் உள்ளது. இது நம் கண்களையும் சிந்தையையும் கவர்ந்திழுக்கிறது. முன்புறம் இருக்கும் நந்தியின் கீழே கம்பளிச் சித்தரின் சிஷ்யர் அம்பலவாண சுவாமிகளின் சமாதியும் உள்ளது. கம்பளிச் சித்தரின் ஜீவசமாதிக்கு நேர் வெளியிலும் ஒரு பெரிய நந்தி உள்ளது. பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது தனிச்சந்நிதிகளில் விநாயகர் முருகப் பெருமானும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிலைகள் எல்லாம் கலைநயமும், புதுமையும்  மிக்கவை. இங்கிருக்கும் முருகன் சந்நிதிக்கு  எதிரிலுள்ள மயில் வாகனமும் வித்தியாசமாக வடிக்கப்பட்டுள்ளது.
படம் உதவி: முகநூல் 
முருகப்பெருமான் சந்நிதியை அடுத்து கஜலட்சுமி தனிச்சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இந்த சந்நிதியில் கஜலட்சுமியின் இருபுறங்களிலும் இரண்டு யானைகளுக்கு பதிலாக எதிரில் ஒரேயொரு யானை மட்டுமென இதிலும் வித்தியாசம் காணப்படுகிறது. அதுவும் புதுமையாக- அழகாக வடிக்கப்பட்டுள்ளது. கஜலட்சுமி சந்நிதியை அடுத்து ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், சக்தியும் அருள்பாலிக்கின்றனர். வெண்கலத்தினாலான திருஉருவங்கள் பார்ப்பதற்கு பரவசமாக இருக்கிறது. கோவிலின் வெளிப்புறம் அம்மன் சிலையும், அதற்கு நேராக சிம்ம வாகனமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும்  விநாயகர், ஆஞ்சனேயர், சரஸ்வதி உருவங்கள் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன.
கூடவே கம்பளிச் சித்தரின் அருளாசி பெற்ற மேலும் ஏழு சித்தர்களின் சமாதிகளும் இங்குள்ளது. அகத்திய முனிவருக்கும் ஒரு சிலை இருக்கு. இந்த சித்தர் சமாதியில் குழந்தை பிறந்தவர்கள் பால் வாங்கி கொடுத்து அதை கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். சித்தரை தரிசித்துவிட்டு வெளியே வரும்போதும், சமாதிக்கோவிலின் முகப்பில் உள்ள சிவசக்தி ரூபம் நம்மை பரவசமடைய செய்கிறது. ஒரு அக்கினி வளையத்தின் நடுவே சிவனும் சக்தியும் ஆனந்தத் தாண்டவமாடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. சிவபெருமானின் ஆட்காட்டி விரல் நுனிபூமியைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. கீழ்ப்பக்கம் தலை, உயரத்தூக்கிய கால்கள். சக்தியின் முகமும் கீழ்ப்பக்கம், கால்கள் சிவனுடைய கால்களோடு பின்னிப் பிணைந்த திருக்கோலம் என சிலாரூபம் மிக அழகு. மலர்ந்த செந்தாமரைப் பூவின் இதழ்களுக்கு நடுவே மேற்கூறிய சிவன்- சக்தி உருவங்கள் சுமார் முப்பது அடிஉயரம் கொண்டதாய் இருப்பது மிக அழகு.
இந்த ஆனந்தத் தாண்டவ சிலையின் கீழ்ப்பக்கம் ஒரு சிறிய கதவு உள்ளது. அந்த கதவை வருடத்திற்கு ஒருமுறை வரும் மகாசிவராத்திரி அன்று மட்டுமே திறப்பார்களாம். அதற்கு முப்பது அடிக்குக் கீழே ஒரு பாதாள லிங்கம் இருக்கிறது. அந்த லிங்கத்திற்கு மகாசிவராத்திரி அன்று மட்டுமே பூஜை செய்கிறார்கள். சிவராத்திரி அன்று இரவு பதினோரு மணிக்குமேல் கதவு திறக்கப்பட்டு, மேல்நாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரேஒருவர் மட்டுமே கீழே இறங்கிச் சென்று சிவபூஜை செய்வாராம். பாதாள லிங்கத்திற்கு சுமார் அரை மணிநேரம் பூஜை நடக்குமாம். பூஜை செய்தவர் திரும்பி வந்து அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்குவாராம். சிவன்- சக்தி ஆனந்தத் தாண்டவச் சிலையைச் சுற்றிலும் பெரிய வட்டவடிவமான பள்ளம் உள்ளது. கடந்த சிவராத்திரியில் பக்தர்கள் இவ்வட்டத்தைச் சுற்றி நின்று தங்கள் கையில் விளக்குகளை ஏந்தியபடி சிவநாமத்தைச் சொல்லியபடி சுமார் ஆயிரம் பேர், கைகளில் விளக்குகளை ஏந்தி சிவபெருமானைப் பிரார்த்தனை செய்வது பார்ப்பதற்க்கே கண்கொள்ளாக்காட்சியாக இருக்குமாம்.

அதைவிட முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் பூஜை முடிந்தவுடன் அன்றுமட்டும் பக்தர்கள் பாதாளலிங்கத்தை சென்று தரிசிக்கலாம். வருடத்திர்ற்கு ஒருமுறை மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும். இதேபோல், குப்பம்மாள் என்பவர் மகோதர நோயால் கடும் அவதிப்பட்டு  கொண்டிருந்தார். வேதனை தாங்காது ஒருநாள் சித்தரின் சமாதியில் விழுந்து அழுதாராம். சிலநாட்களில் எந்த மருந்துமில்லாமல்  அந்த நோய் குணமாகியது. என்றும் செல்லப்படுகிறது.
இந்த ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகளின் சமாதிக் கோவிலுக்கு சென்னையில் இருந்து ECR வழியாக புதுச்சேரி சென்று அங்கிருந்து , தட்டாஞ்சாவடி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் சென்று, அங்கிருக்கும் ருத்திரபூமி பகுதியில் உள்ள இந்த சித்தரின் சமாதிக்கு செல்லலாம். அல்லது ஆட்டோக்காரர்களிடம் சொன்னால் சரியாக சித்தர் சமாதியில் கொண்டு இறக்கி விடுவார்கள். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறையேனும் இந்த சித்தரை வழிபட்டால் மனதில் ஆனந்தமும் நிம்மதியும் கிடைப்பதை அனுபவபூர்வமாக உணரலாம் .இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு இறைவனின் அருளும் சித்தரின் ஆசியும் கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்து அடுத்தவாரம் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து உங்களை தரிசிக்கிறேன்
நன்றியுடன்,
ராஜி 

7 comments:

 1. சுவாரஸ்யமான விவரங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அண்ணே....

   Delete
 2. விவரங்கள் சிறப்பு.

  எத்தனை சித்தபுருஷர்கள் இங்கே...

  ReplyDelete
  Replies
  1. முப்பதிற்கும் மேற்பட்ட சித்தர்கள் சமாதிகள் உள்ளன என்று நினைக்கிறேங்க அண்ணே....

   Delete
 3. தகவல்கள் அனைத்தும் அருமை...

  அனைத்து படங்களும் நன்றாக உள்ளன...? நீங்கள் எடுத்ததா...?!

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் சென்றிருந்த நேரம்,சிறப்பு பூஜை நடந்துகொண்டிருந்தது,ஆகையால் போட்டோ எடுக்கமுடியலைங்க அண்ணா,சிலவற்றை முகநூலில் இருந்து எடுக்கவேண்டியதாயிற்று

   Delete
 4. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் பற்றி அறிந்துகொண்டேன்.

  ReplyDelete