விசேச நாட்களில் நிலைவாசல் தொடங்கி எல்லா வாசலுக்கும் மஞ்சள் பூசி குங்குமம் வைப்பாங்க. அது எதுக்குன்னா, கரையான் மாதிரியான பூச்சிகளால் வாசக்கால், கதவுலாம் அரிச்சுடக்கூடாதுன்னு. பெரியம்மை, சின்னம்மை மாதிரியான அம்மை கண்டவங்களை வேப்பிலை படுக்கையில் படுக்க வைப்பாங்க. இது எதுக்குன்னா, வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. அம்மை நோய் கண்டபோது கூழ் காய்ச்சு ஊத்துவாங்க. அம்மை நோய் வர முதல் காரணம் உடல் சூடு. அதை தணிக்கதான் கூழ், மோர், சின்ன வெங்காயம்ன்னு சாமிக்கு படைச்சு குடிக்க கொடுப்பாங்க. அதுமாதிரி, நம் முன்னோர்கள் அன்றாடம் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிச்ச ஒவ்வொரு விசயத்துக்கு பின்னும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு. சில பழக்க வழக்கங்களின் பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மற(றை)ந்துப் போயின. மூடநம்பிக்கைன்னு நிறைய விசயங்களை ஒதுக்கினாலும் கோலம் போடுறதை மட்டும் நம்ம பொண்ணுங்க இன்னும் ஒதுக்கல. அறிவியல் காரணம் புரிஞ்சு செய்யுறாங்களோ இல்லியோ! ஆனா, வீடு அழகா இருக்கவாவது விதம் விதமா போடுதுங்க. ஆனா புள்ளி வச்சு கோலம் போடாம ரங்கோலின்னு கிறுக்கி வைக்குதுங்க. எது எப்பையோ கோலம் போடுதுங்களா?! அதுவரைக்கும் சந்தோசம். கோலம் போடுறதால பலவித நன்மைகள் உண்டாகும். அதேநேரத்தில் கோலம் சிலரது வாழ்க்கையையே புரட்டிப்போடும். கோலத்தால் தீமையா?! எப்படின்னு யோசிச்சுக்கிட்டே இருங்க. கடைசில சொல்றேன்.
எல்லா நாட்களிலும் எல்லா கோலத்தையும் போட்டுடக்கூடாது. பிறந்த குழந்தையை தொட்டில்ல போடுற அன்னிக்கும், முதன்முதல்ல வீட்டுக்கு கூப்பிட்டு வரும்போதும் தொட்டில் கோலம் போடனும். சுபிட்சத்தை வரவைக்க ஹிர்தய கோலம், கல்யாணம் செய்து வரும் புத்தம்புது தம்பதிகளை வரவேற்க மனைக்கோலம்ன்னு.. வட்டக்கோலம், கம்பிக்கோலம், புள்ளிக்கோலம், தந்திரிக் கோலம், ரங்கோலி கோலம்ன்னு விதம் விதமா இருக்கு. ஆனா, இறப்பு நடந்த வீடு, திவசம், அமாவாசை தினங்களில் வாசலில் கோலம் இடக்கூடாது.
கோலமென்பது வெறும் அழகுக்காக மட்டுமில்லை. தெய்வீக சக்தியை வரவைக்கும் யந்திரமுமாகும். யந்திரத்துக்கு அடிப்படை உருவம் முக்கோணம். சரியான முறையில் உருவங்கள் ஒன்றிணைந்தால் அதுதான் யந்திரமாகும். அதுமாதிரி சரியான அளவில் உருவங்கள் ஒன்றிணையும் கோலமும் யந்திரத்துக்கு ஒப்பானது. அதனாலேதான், கோலங்கள் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் வரையப்படுகின்றது. மேலும் மார்கழியில் அதிகாலையில் கோலமிடுவதும் அவசியம்ன்னு நம் முன்னோர்கள் சொல்வர். அதற்கு காரணம் மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழுமாம். மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது. இந்த மாற்றத்தின்போது பூமினுடைய சக்திநிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின்போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதுலாம் கோலம் கலையாமல் இருக்க உதவுது. அதேநேரம், சாணம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.
சூரிய உதயத்திற்குமுன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்கு தேவையான முழுமையான பிராணவாயுவை நம் உடல் முழுக்க பரவச் செய்யுது. இதனால், உடலில் ரத்த ஓட்டம் சீராகுது. மேலும் அந்நேரத்தில் வாகன போக்குவரத்து இல்லாம ஓரளவுக்கு சுத்தமான காத்து சுவாசிக்க கிடைக்கின்றது. இது நாள் முழுக்க நம்மை சுறுசுறுப்பா வச்சிருக்க உதவுது. குனிஞ்சு நிமிர்ந்து கோலம் போடும்போது இடுப்பெலும்பு வலுப்பெறுது.
புள்ளியிட்டு கோலம் போடும்போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுது. நம்முடையை சிந்தனை சிதறலையும் தடுக்கும் ஒருவித பயிற்சியாகும். மேலும் புள்ளிக்கோலம் போடும்போது புள்ளிகளை உற்று நோக்கும்போது கண்பார்வை அதிகரிக்குது. இதனாலதான் சாகும்வரைகூட சில அந்தக் காலத்து பாட்டிங்க கன்ணாடி போட்டதில்ல.
அரிசிமாவுக்கொண்டு கோலம் போடுவது எறும்பு மாதிரியான சிறு பூச்சிகளுக்கும், குருவி மாதிரியான சிறு பறவைகளுக்கும் உணவாகுது. கோலம் என்பது மனிதனின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் எனற தத்துவம் இந்தியர்களின் பழக்க வழக்கங்களில் மட்டுமே காணப்படும் உயரிய பண்பாகும்.
நேர மேலாண்மை..
என்னதான் திட்டமிட்டிருந்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பலருக்கு குதிரை கொம்புதான். ஆனா, ஏதோ ஒரு காரணம் இருந்தால் நிச்சயம் எழுந்திருக்க தவறமாட்டோம். அந்தக் காரணம் கோலமாக அமைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு கோலத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் எனத் திட்டமிடும் வழக்கம் நம் அன்றாட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு உதவும்.
2. படைப்பாற்றல்
கோலம் போடுறது என்ன கவிதையா இல்ல கதை எழுதுறதா இதுல படைப்பாற்றல் வெளிப்படன்னு நினைக்கலாம். உண்மையில் அவற்றைப் போலவே ஒரு கலைதான் கோலம் போடுவதும். கோலப் புத்தகம் பார்த்து போடுவது, இணையதளங்கள் உதவியோடு சில நாட்களையே தள்ள முடியும். ஒரு கட்டத்தில் நாமே புதிதான கோலம் போட்டால் என்ன யோசனை வரும். அப்போது இதுவரை நாம் போட்டிருக்காத கோலம் என யோசிக்க தொடங்கும்போது, உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளியையும் எழுப்பி விடுகிறீர்கள்.
3. சிக்கலைத் தீர்க்கும் பொறுமை ....
32 புள்ளிகள் வைத்து, அதனையொட்டி நேர்புள்ளி, ஊடு புள்ளிகள் வைத்து முடிப்பதற்குள்ளேயே முக்கால் மணி நேரமாகியிருக்கும். அதற்கு அடுத்து, கவனமாக பூக்கோலம் அல்லது சிக்கு கோலமாக போடுவோம். அதற்கு முக்கால் மணிநேரம். இந்த ஒன்றரை மணிநேரத்தில் கவனமும் நிதானமும் இருந்தால் மட்டுமே உங்கள் மனதில் இருக்கும் கோலம் வாசலுக்கு வரும். இதுவே தினசரி செய்யும்போது அந்த கவனமும் நிதானமும் உங்களின் இயல்பு குணமாக மாறிவிடும். இது இரண்டும் இருந்தாலே எவ்வளவு பெரிய சிக்கலையும் தீர்த்து விடலாம்.
முடிவெடுக்கும் திறன்...
இன்று இந்த பூக்கோலமா?! சிக்கு கோலமா என்ற முடிவு எடுக்கிற திறனைச் சொல்லலை. சிறப்புத் தினங்களுக்கு ரங்கோலி ஸ்டைலில் புதிதாக ஏதேனும் முடிவு செய்வோம். அதற்கு எந்த டிஸைன் எல்லோருக்கும் பிடிக்கனும், என்ன கலர் கொடுக்கலாம்.. அது பொருத்தமா இருக்குமான்னு முடிவு செய்யுறோமில்லையா அதைதான் சொல்றேன். இது உங்களுக்கு ரசனையை மட்டும் கொடுக்கலை. சரியான இடத்தில் பொருத்தமான முடிவெடுக்கும் திறனையும் கொடுக்கும். அது நீங்கள் ஜவுளி கடையில் புடவை தேர்வு செய்வதிலிருந்து அலுவலகத்தில் எடுக்கும் முடிவு வரை நீளும்.
5. போட்டி மனப்பான்மை
'நான் யாருக்கும் போட்டி இல்லை.. எனக்கு யாரும் போட்டி இல்லன்னு சினிமா டயலாக்குலாம் சொல்லாம நான் எந்த போட்டியை சொல்றேன்னு புரிஞ்சுக்கனும். ஆரோக்கியமான போட்டி சொல்றேன்.
'நான் யாருக்கும் போட்டி இல்லை.. எனக்கு யாரும் போட்டி இல்லன்னு சினிமா டயலாக்குலாம் சொல்லாம நான் எந்த போட்டியை சொல்றேன்னு புரிஞ்சுக்கனும். ஆரோக்கியமான போட்டி சொல்றேன்.
நாம தினமும் கோலம் போடுவதைப் பார்த்து அக்கம் பக்கத்து வீடுகளிலும் கோலம் போட ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு நல்ல பழக்கத்தை அவர்களும் தொடங்குவது நல்லதுதான். அவர்களைவிட சிறப்பான கோலம் போடும் மனநிலையை உங்களுக்கு தரும். இது, வேலை செய்யும் இடங்களிலும் பிரதிபலிக்கும். உங்களுக்கு பதவி உயர்வையும் பெற்றுத் தரும்
கோலம் தமிழ்நாட்டில்தான் கோலம் ஃபேமஸ், ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், இலங்கைலலாம் கோலமாவு கொண்டு கோலம் போடுவாங்க. கேரளாவில் பூக்களாலும், வட இந்தியாவில் கலர்பொடியைக் கொண்டும் கோலம் போடுவாங்க. இப்ப காலமாற்றத்தில் எல்லா இடத்திலும் எல்லா கோலமும் போடுறாங்க. முதன் முதலில் கோலப்புத்தகம் 1884ஆம் ஆண்டில் வெளிவந்தது.
கோலமிடுவது தெய்வீக சக்தியையும், மங்கலத்தையும் நம் வீட்டுக்கு வரவைக்கும். அதனால, அந்த கோலத்தை போடுறதுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கு. அதிகாலை பிரம்மமுகூர்த்த வேளையில் போடனும். புது தண்ணி கொண்டு வாசல் தெளிக்கனும். முன்வாசலில் தெளித்த நீரில் மிச்சம் கொண்டு பின்வாசலிலும் தெளிக்கனும். கோலம் போட்டு முடிக்கும்போது தெற்கு பார்த்த மாதிரி முடியக்கூடாது. கோலம் போட்டு முடியும் திசையை வைத்து கூட அன்றைய பொழுது எப்படி போகும்ன்னு சொல்வாங்க. கோலத்தில் செம்மண் காவி இழுப்பது மும்மூர்த்திகளை குறிக்குது. கோலத்தில் பூசணி, செம்பருத்தி பூ வைப்பது செல்வச்செழிப்பை உண்டாக்கும். செருப்பணிந்துக்கொண்டு கோலமிடக்கூடாது. ஆட்காட்டி விரலை நீக்கி பெருவிரல் நடுவிரல், மோதிரவிரல் கொண்டே கோலமிடனும்.
ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை அல்லது சூரியன் கோலம், திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம், செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் , வியாழக்கிழமை துளசி மாட கோலம், வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம், சனிக்கிழமை பவளமல்லி கோலம், பவுர்ணமி அன்னிக்கு தாமரைப்பூ கோலம், வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை வீட்டுக்குள் விடாது. அமாவாசை மற்றும் இறந்தவர்களுக்கு திதி தரும் நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது. அந்த ஆத்மாக்களை வீட்டினுள் அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும். அதனால் நம் முன்னோர்கள் நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில் வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து, அவர்களை வீட்டினுள் அனுமதித்து ஆசி பெறுவது நல்லது. இடது கையால் கோலம் போடக்கூடாது. பெண்கள் குனிந்து நின்னுதான் கோலம் போடனும். உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும். கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போடனும். கோலம் போட்ட பிறகே அடுப்பு பத்த வைக்கனும். ஒருவேளை சமைக்குறது கணவனா இருந்தா என்ன பண்ணுறதுன்னு கேட்டா எங்கிட்ட நோ ஆன்சர்.
தமிழ் எழுத்துகள் தோன்றுவதற்கு முன்பே கோலமிடும் பழக்கம் உண்டாகிட்டுதாம். ஆரம்பத்தில் வெறும் கோடுகளைக்கொண்டுதான் கோலம் இருந்ததாம். கோலமிடப் பழகியபின் பூ, காய், கனி, பறவைன்னு உருவங்கள் வர ஆரம்பிச்சதாம். போருக்கு சென்று வந்த அரசர்களை ஆரத்தி கொண்டு வரவேற்று, அந்த ஆரத்தியை கோலத்தின் நடுவில் கொட்டியதாக சான்றுகள் உண்டு. இனியும் நம்ம வீட்டு வாசல்ல ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போடலாம். இரும்மா ராஜி! பொசுக்குன்னு ஓடாத. கோலம் வாழ்க்கையை புரட்டிப்போடனும்ன்னு சொன்னியே! அது எப்படின்னு சொல்லிட்டு போ, எங்க மண்டைய காய வைக்காதன்னு கேக்குறவங்களுக்கு...
அதிகாலையில் குளிச்சு முடிச்சு ஃப்ரெஷ்சா அழகா வரும் பெண்களை சைட்டடிக்க ஆண்கள் வருவாங்க. அவங்க அழகுல, சேட்டைல பொண்ணுங்க மயங்கி லவ்வாகி, வீட்டுக்கு தெரிஞ்சு வெட்டுக்குத்துன்னு போகுதுல்ல! அதைதான் சொன்னேன். அதனால, வெளில போனோமா! கோலம் போட்டமான்னு குனிஞ்ச தலை நிமிராம வீட்டுக்குள் வந்திடனும்..
நன்றியுடன்,
ராஜி.
கோலம் போடுவதில் இவ்வளவு நன்மையா? அப்படின்னா ஏன் எந்த ஆண்களும் கோலம்போடுவதில்லை.... இந்த கோலம் போடுவதால பல நன்மைகள் என்று சொல்லி அதை பெண்களின் தலையில் கட்டி இருக்கிறதோ இந்த ஆண் சமுகம் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது இப்படி அதிகாலையில் பெண்களை கோலம் போடஸ் சொல்வதன் மூலம் அவர்களை சிக்கிரம் எழுந்திருக்க செய்து வேலைகளை வாங்கி கொண்டிருக்கிறது.... பாவம் பெண்கள்
ReplyDeleteகோலம் போடுறது அம்புட்டு ஈசி இல்ல. அதுக்கு மிக பொறுமையும், கவனமும் தேவை. அது ஆண்கள்கிட்ட இல்லாத குணம். அதான் கோலம் போடுறது பெண்கள்கிட்ட தள்ளிட்டாங்க. அதேப்போலதான் குழந்தை வளர்ப்பும்.. கால ஓட்டத்தில் இப்ப ஆண்கள்ல சிலர் நல்லாவே கோலம் போடுறாங்க. என்னோட மூத்தாரும், மச்சினரும் நல்லா கோலம் போடுவாங்க. என் பையன் நல்லா கலர் கொடுப்பான்.
Deleteதுளசி: கோலம் என்பதெல்லாம் கேரளத்தில் ஓணத்தின் போதுதான்....அதுவும் பூக்களால் அல்லது சில் பூசைகள் செய்யும் போது பாம்புக் கோலம் என்று மற்றபடி இல்லை. தமிழ்நாட்டில்தான் நான் இவை கண்டது...நல்ல பதிவு
ReplyDeleteகீதா: பதிவு அருமை ராஜி..நான் எம் ஏ படித்துக் கொண்டிருந்த் போது தமிழில் எம்ஃபில் செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவர் தமிழ்நாட்டுக் கல்யாணங்கள் குறித்த ஆய்வைத் தனது ஆய்வுக் கட்டுரையாக எம்ஃபில் டிகிரிக்குச் செய்து கொண்டிருந்தார். அப்போது என்னிடம் தான் கோலங்கள் வரைந்து கேட்டிருந்தார் அதாவது கல்யாணக் கோலங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கோலங்கள். நான் வரைந்து கொடுத்துவிட்டு சில ஆய்வுகளும் செய்தேன். அப்போது அறிந்தது. பண்டைய காலத்தில் கோலம் இடுதலில் குறியீடுகளும் இருந்தன. அப்போதெல்ல்லாம் மக்கள் நடைப்பயணம்தானே...ஊர் ஊராகச்செல்லும் போது வீடுகளின் திண்ணையில் படுப்பது வழக்கம் இல்லையா. அவர்களுக்கு நீர் மோர் அல்லது தண்ணீர், அல்லது சாப்பாடு கூடக் கொடுத்து வருவது வழக்கமாக இருந்ததாம். அப்போது வீடுகளில் இப்படி பயணிப்பவர்கள் தங்குவதற்கு அவ்வீட்டில் துக்கம் எதுவும் நிகழ்ந்திருந்தால் அதில் ஓலை வேயப்பட்டும், கோலம் இடப்படாமலும் இருந்தால் அவர்கள் தங்கமாட்டார்கள். கோலம் இட்டிருந்தாலோ, வாழை கட்டியிருந்தாலோ அத்திண்ணைகளில் தங்குவார்கள்...மங்கலம் தான் என்று ....ஆய்வுகளில் இதை நேரடியாகச் சொல்லவில்லை என்றலும் எனக்குத் தோன்றியது...இவை குறியீடுகளாகவும் இருந்தன என்று. இப்போதும் கூட எங்கள் வீடுகளில் துக்கம் நிகழ்ந்தால் கோலம் இட மாட்டார்கள்..கிராமங்களில் என்றால் ஒருவருடம் வரை...மட்டுமல்ல அமாவாசை என்றால் காலையில் கோலம் இட மாட்டார்கள் அமாவாசை பூசை எல்லாம் செய்து முடித்த பின் தான் கோலமிடுவர்கள். அந்தக் காலத்தில் இவை எல்லாம் குறியீடுகளாக இருந்தன என்றும் அறிய நேரிடுகிறது...
இங்கயும் அப்படிதான் கீதாக்கா. துக்க வீட்டில் கோலம் போட மாட்டாங்க. காரியம் முடியும் வரை... அப்படிதான் இருப்பாங்க. அதேமாதிரி, அமாவாசை அன்று காலையில் கோலம் போடமாட்டாங்க. இப்பலாம் செம்மண்ல கோலம் போடுறாங்க.
Deleteஇரண்டு பக்கங்களுக்கு மிகாமல் கோலம்பற்றிய ஒரு கட்டுரை வரைக
ReplyDeleteமுயற்சி செய்றேன்பா
Deleteகோலம் போடுதலும்
ReplyDeleteகோட்பாடுகளும் அருமை!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
வருகைக்கும், கருத்துக்கும் , வாழ்த்துக்கும் நன்றிண்ணே
Deleteகோலத்தைப் பற்றி நுட்பமான செய்திகள். காரணங்கள், பயன்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்த விதம் ஓர் ஆய்வுக்கட்டுரையினைப் படித்ததுபோல இருந்தது. கோலமிடுதலை அதிக ரசனையோடு இன்றும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் ரசிப்பனவற்றில் ஒன்று கோலம். அழகான கோலமாக இருந்தால் சிறு குழந்தையைப் போல நின்று பார்த்துவிட்டுதான் நகர்வேன். கடந்த வாரம்கூட அவ்வாறான ஒரு நிகழ்வினை எதிர்கொண்டேன். அதிலுள்ள அழகு, நளினம். இவற்றுக்கெல்லாம் நாம் சொந்தக்காரர்கள் என்று பெருமைபட்டுக்கொள்ளலாம்.
ReplyDeleteஆமாம்ப்பா. என்னதான் மத்த இடத்துலலாம் கோலம் போட்டாலும் தமிழ்நாட்டு கோலத்தின் அழகும், நேர்த்தியும் வருவதில்லை. கோலம் போட பயன்படுத்தும் மாவு, அதில் கலக்கப்படும் பச்சரிசி மாவு, அதை இழுக்கும் விதம்ன்னு நம்ம ஊரு கோலத்தை அடிச்சுக்க ஆளில்லைப்பா.
Deleteஅருமை
ReplyDeleteகோம் போடுவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. நல்லதொரு உடற்பயிற்சி கூட.
ReplyDeleteபகிர்ந்து கொண்ட கோலங்கள் அருமை.
சிலது கூகுள்ல சுட்டது. மிச்சம்லாம் நான் போட்டதுண்ணே
Deleteஓலைச் சுவடி என்னும்நூலை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன் நிறைய காரண காரியங்கள் கூறப்பட்டிருக்கும் உங்களுக்கு உதவலாம்
ReplyDeleteஅவசியம் படிக்குறேன்ப்பா. வருகைக்கும் புத்தகம் பரிந்துரைக்கும் நன்றிப்பா, உங்க அக்கறைக்கு கூடுதல் நன்றி
Deleteஇறப்பு நடந்தால் ஒருவருடம் கோலம் போடக்கூடாதா? என் மாமியார் இறந்து எட்டுமாதங்கள் ஆகிது. மார்கழிகோமிடுவது எனக்கு பிடிக்கும் அதைசெய்யலாமா?
ReplyDelete