Thursday, January 04, 2018

நள தமயந்தி காதல் கதை - தெரிந்த கதை தெரியாத உண்மை

டிசம்பர் 19ந்தேதி சனிப்பெயர்ச்சி வந்தாலும் வந்தது. சனிபகவான் பத்தி பலகதைகள், பல அனுமாங்கள், பல பரிகாரங்கள்னு தின, வார, மாத ஏடுகள் தொடங்கி தொலைக்காட்சி வரை அல்லோகலப்பட்டது. சனிபகவானை நினைச்சாலோ, அவர் பெயரை உச்சரிச்சாலோ நம்ம வீட்டுக்கு வந்திடுவார்ன்னு எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கும். ஆனா, சனிபகவானால் ஆட்கொள்ளப்பட்டு, பின்னாளில் அவனாலே விடுவிக்கப்பட்டு இழந்த நாடும் நகரம், மனைவின்னு சந்தோசமாய் வாழ்ந்த நள மகராஜன் கதையை படிச்சாலோ இல்ல கேட்டாலோ  சனியின் ஆதிக்கம் குறையும். அப்படி கேட்பவருக்கும், படிப்பவர்களுக்கும் அவர்கள் கேட்கும் வரத்தை கொடுப்பதாய் சனிபகவான் நள மகராஜனுக்கு வாக்கு கொடுத்திருக்கார்.  சனிபகவான், நளமகராஜனுக்கு அப்படியொரு வாக்களிக்க என்ன காரணம்ங்குறதைதான்  இன்னிக்கு பதிவில் பார்க்க போறோம்.
மகாபாரத்தின் வரும்  கிளைக்கதை கதைகளில்  நளன், தமயந்தியின் காதல் கதையும் ஒன்று. வடநாட்டில் நைஷதம் என்ற பெயரில், ஸ்ரீஹர்ஷர் என்பவரால் எழுதப்பட்டது இக்கதை. இங்க நம்மூர்ல தமிழில் புகழேந்திப் புலவரின் நளவெண்பாஎன்னும் நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. அதேமாதிரி, வடமொழியிலிருந்த நைஷதம் நூலிலிருந்து அதிவீரராம பாண்டியர்நைடதம் என்ற பெயரில் மொழிப்பெயர்த்திருக்கிறார். எந்த மொழியினாலும் சரி, இந்த கதை சொல்லப்பட்டிருக்கும் விதமே அழகானது. ஒருவரையொருவர் காணாமல் காதலித்து, பல இடைஞ்சல்களுக்குப் பிறகு திருமணம் செஞ்சிக்கிட்டு, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, காலத்தின் கோலத்தால் நாட்டையும், செல்வச்செழிப்பையும் இழந்து, காட்டுக்குத் துரத்தப்பட்டு, கணவனும்மனைவியும் ஒருவரையொருவர் பிரிந்து, ஆளுக்கொரு திக்கு சென்று, தனித்தனியே அல்லல்பட்டு, ஒருவரை ஒருவர் காணாமல் வாடி, பிள்ளைகளை நினைத்து உருகி, கட்டக்கடைசியில் சேர்ந்து, நாடு நகரத்தையும் பெற்று சந்தோசமாய் வாழ்ந்தாங்க.  ஆன்மீகம், சோகம், காதல், ஏக்கம், தவிப்புன்னு எல்லாத்தையும் சரிவர சேர்ந்த கதைதான் இந்த நளதமயந்தி கதை.
இந்த கதை நகரும் விதமே அலாதியானது. மஹாபாரத கதை நடந்துக்கிட்டிருந்த நேரம். சூதில் நாடு நகரம், தம்பி, மனைவியை இழந்து, பின்னர் 12 வருட வனவாசம், 1 வருட அஞ்சாத வாசம் செய்ய ஒப்புக்கொண்டு காட்டில் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு மகிழ்ச்சியோடு ஒற்றுமையாய் பாண்டவர்கள் வாழ்ந்து வந்த காலம். அந்த நேரத்தில் அங்கு வந்த பிருஹதஸ்வர் என்ற முனிவர், தருமனிடம், மகனே!   இந்நிலையை கண்டு வருந்தாதே. இதைவிட கொடுமையான நிலையை அயோத்யா மன்னன் நளன் அடைந்திருக்கிறான்.  அவனுடைய கதையை கேட்டால் நீ பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமில்லை எனக்கூறி நளதமயந்தி கதையை சொல்ல ஆரம்பித்தார்.  

 முன்னொரு காலத்தில் அயோத்தியை ஆண்ட நிஷாத மன்னனுக்கு நளன் மற்றும் குவரா என்ற இருமகன்கள் இருந்தனர்.  இதேப்போல், விதர்ப்ப நாட்டை பீமன் என்றொரு அரசன் சீரும் சிறப்புமாக ஆண்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரே ஒரு ஏக்கம் இருந்தது. அது என்னன்னா, அவனுக்கு பிள்ளை இல்லை.  இதனால், அவன் மட்டுமல்லாது, அவனோடு சேர்ந்து அவன் மனைவியும், அவன் நாட்டு மக்களும் மனம் நொந்திருந்தனர்.  இந்த சமயத்தில்தான் அவனைக்காண தமனர் என்ற பிரம்ம ரிஷி வந்தார். அவரிடம் தன் மனக்குறையை கூறினான்.  முனிவரும் அவனுக்கு அழகான ஒரு மகளும், மூன்று மகன்களும் பிறப்பார்கள் என மன்னனுக்கு வரமளித்தார். சிலகாலம் சென்றதும், பீமமன்னனுக்கு தமயந்தி, தமன், தாந்தன் மற்றும் தமனன் என நான்கு குழந்தைகள் பிறந்தனர். நால்வரும் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று சிறப்புடன் வளர்ந்து வந்தனர். 
இதே நேரத்தில்,  நளனும் பூவுலகில் இருக்கும் மன்மதனோ என்று கூறும் அளவுக்கு அழகானவனாகவும், கல்வி, கேள்வி, சண்டை பயிற்சிகள் உள்ளிட்ட சகலகலைகளிலும்  வித்தகனாக திகழ்ந்தான். தமயந்தியும், தேவலோக பெண்ணைப்போல அழகில் ஈடு இணையில்லாதவளாக வளர்ந்தாள். விதிவசத்தால், இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் என இருவரும் அறிமுகமாகி,   இருவரும் நேரில் பார்க்காமலே தங்களுக்குள் அன்பை வளர்த்துக்கொண்டனர். இந்த சமயத்தில் நளன் தன்னுடைய அந்தப்புரத்தில் இருந்த அழகான அன்னப்பறவை ஒன்றினை தமயந்தியிடம் தூதாக அனுப்பினான். அன்னமும் நளனின் காதலை சுமந்து சென்றது. தமயந்தி அன்னத்திடம் தன்னுடைய காதலையும் சொல்லி நளனுக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை சொல் அன்னமே எனத் திருப்பி தூது அனுப்பினாள். இதே நேரத்தில் பருவ வயதையடைந்த தன் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க ஆசைப்பட்டார் தமயந்தியின் தந்தை. மகளுக்குண்டான சிறந்த வரனை அவளே தேர்ந்தெடுக்க வேண்டி, சுயவரத்துக்கு நாள் குறித்து,  எல்லா  தேசத்திற்கும் தூது அனுப்பினார். எட்டு திக்குமிலிருந்து மன்னர்கள் விதர்ப்ப நாட்டிற்கு சுயம்வரத்திக்காக சென்று கொண்டிருந்த வேளையில், நாரதர், பூலோகத்தில் உள்ள தமயந்தியின் சிறப்புகளையும் அவளுக்கு நடக்கவிருக்கும் சுயம்வரத்தையும் பற்றி  தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் .
தமயந்தியின் அழகினை கேள்வியுற்றான்   இந்திரன். இந்திரன் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் வீக். எத்தனை பட்டும் அவனுக்கு புத்தி வந்ததில்லை. அதனால் தமயந்தியை அடையும் நோக்கில், அவனும்   சுயம்வரத்திற்கு புறப்பட்டான். அங்கே நளனும் சுயம்வரத்தில் கலந்துகொள்ள தேரில் ஏறி விதர்ப்ப நாட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தான். நளன்மீது தமயந்தி காதல் கொண்டிருப்பதை அறிந்த இந்திரனின் குறுக்குபுத்தி வேலை செய்ய, நளனைப்போல உருமாறி சுயம்வரம் நடக்கும் இடத்துக்கு  சென்றான். சுயம்வர ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக நடந்து கொண்டிருந்தது. எல்லா மன்னர்களும் சபைகளில் நிரம்பி வழிந்தனர்.  தமயந்தியின் அழகைக் கண்டு தேவர்களும் வியந்து பார்த்தனர். நளனும் அங்கே வருகை புரிந்திருந்தான். நளனின் உருவந்தை அன்னத்தின் துணையுடன் கேட்டறிந்த தமயந்தி சுயம்வர மாலையோடு சபைக்குள் நுழைந்தாள். நளனை அவள் கண்கள் தேடின.  அங்கே நளன்  அழகே வடிவாக மாறனோ இல்லை பூவுலகிற்கு வந்திருக்கும் கந்தர்வனோ என்று சொல்லுமளவு அழகே வடிவாக கம்பீரமாக இருந்தான். ஆனால், அவனருகே அவனைப்போல் தோற்றம் கொண்ட ஐந்துபேர் இருப்பதைக்கண்டு தமயந்தி குழம்பி போனாள். உண்மைக்காதல் என்றும் தோற்காது அல்லவா?! தன்னுடைய சமயோசித புத்தியால் சிந்திக்க தொடங்கினாள் ...
!கருணையே வடிவான அந்த மகேஸ்வரனை வேண்டினாள். இறைவா என்னுடைய காதலுக்கும், உண்மையான அன்பிற்கும் எந்தவித களங்கமும் வராமல் காத்தருள்க என வேண்டினாள். அப்பொழுதுதான் அந்த மகேஸ்வரன் அவளுடைய பிரார்த்தனையை எண்ணி, மனிதருக்கும் தேவருக்கும் உள்ள . துக்குணங்களை ஆராந்து பார் என தமயந்தியின் மனதில் உதிக்க செய்தார் . தமயந்தியும் சுதாரித்துக்கொண்டு மணமகனை தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் செய்து கொண்டே வந்தாள். நேரம் செல்ல செல்ல நளன் கழுத்தில் சூடியிருந்த பூமாலை வாடத்தொடங்கியது. அதேபோல் தேர் ஏறி வந்ததால் சிறிது களைப்புற்றவனாக காணப்பட்டான். ஆனால் தேவர்கள் அனைவரும் ,வாடாத மலர்மாலைகளுடன் ,மூடாத இமைகளுடன் ,சிறிதுகூட பொலிவு கலையாமல் இருந்தனர் .தமயந்தி இதைப் புரிந்துக்கொண்டு, மனிதஉருவில் இருக்கும் தேவர்களை கண்டறிந்தாள். சரியாக நளனின் கழுத்தில் மாலை அணிவித்தாள். தேவர்களும் , இந்திரனும் சபையில் நாணி நின்றனர்.
இருந்தாலும் ஒருவாறாக மனதை தேற்றிக்கொண்டு அவர்கள் நளனை பாராட்டி பல வரங்களை கொடுத்தனர். விரும்பிய நேரத்தில் தங்களை காணவும்,யமன் சமயற்கலையின் சூத்திரங்களையும் வரமாக கொடுத்து அவரவர் அவரவர் உலகங்களுக்கு திரும்பினார்கள். மற்ற மன்னர்களும் மணமக்களை வாழ்த்தி தங்கள் ராஜ்ஜியம் திரும்பினர்.  நளனும் தமயந்தியுடன் தன்னுடைய நாட்டிற்கு திரும்பினான். நாட்டுமக்களையும் பாதுகாத்து நீதிதவறாமல் அரசாண்டான். குடிமக்களும் நளனுடைய ஆட்சியில் எந்த மனக்குறையும் இன்றி சந்தோசமாக வாழ்ந்தனர். நளனும் தன்னுடைய காதல் மனைவியுடன் நந்தவனம், .அருவி , வனங்கள் என சென்று  காதல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான் . கதை இத்தோடு முடிஞ்சிருந்தா நளவெண்பா வந்திருக்காது.  சனிபகவான் வரமும் நளனுக்கு கிடைச்சிருக்காது.
இப்படி சந்தோசமா வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருந்த வேளையில், சுயம்வரத்தில் தோற்ற சனிபகவானுக்கு நளனின்மேல் தீராத பகை இருந்தது. அவனுக்கு நளனை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் அரித்துகொண்டிருந்தது.  ஆனால்  சாஸ்திரங்கள்  முழுவதும் கற்றறிந்த நளன் சிறு தவறு கூட இல்லாமல் அரசாட்சி புரிந்துவந்தான். இதனால் சனிபகவான், நளனின்  அரண்மனையிலேயே தங்கி தக்க  சந்தர்பத்திற்க்காக காத்துகொண்டு இருந்தான். ஒருமுறை நளன் மாலையில் சிறுநீர்கழித்து விட்டு கால்களை முழுமையாக அலம்பாமல் கை மற்றும் முன்கால்களை  மட்டும் நனைத்து சந்தியாவந்தனம் செய்து விட்டான். அந்த தவறுக்காகவே காத்திருந்த சனிபகவான், ஈரம்படாத கால் பகுதி வழியாக நளனை பிடித்தான். இந்த சூழ்நிலையில் நளன் புஷ்காரன் என்பவனுடன் சூதாட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தான். அவனை பீடித்திருந்த சனிபகவான், நளனை தடுமாற செய்து அவனை சூதாட்டத்தில் மூழ்க வைத்து அவனை அனைத்தையும் இழக்க செய்தான்.
நிலைமை மோசமானதைக் கண்ட தமயந்தி, தன்னுடைய பணிப்பெண் பிருகத்சேனை மற்றும் தேரோட்டி  வார்ஷ்ணேயனை  அழைத்து தன்னுடைய  மகன் இந்திரேசனையும்,   மகள் இந்திரேசைனையயும் அவர்களிடம் ஒப்புவித்து, தன் தந்தையிடம் கொண்டுவிட்டு அவர்களை பாதுகாப்பாக வளர்க்க சொல் என கூறி வழியனுப்பி, கணவனின் துயரத்தில் பங்கெடுக்க ஆயத்தமானாள். எல்லாவற்றையும் இழந்த நளன் கடைசியில் வைப்பதற்கு பொருள் ஒன்றும் இல்லாததால், உன் மனைவி தமயந்தியை வைத்து சூதாடு என புஷ்காரன் எள்ளி நகையாடினான். நிலைமை விபரீதமாவதை  உணர்ந்த நளன் தன்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் துறந்து அறையில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அரண்மனையில் இருந்து வெளியேறினான். உடனே தமயந்தியும், தன்னுடைய ஆபரணங்களையும் கழற்றி வைத்துவிட்டு நளனுடன் சேர்ந்து  அரண்மனையை விட்டு வெளியேறினாள். நாட்டு மக்களும் நளனுக்கு வேலையோ அல்லது பொருள் உதவியோ செய்ய  புஷ்காரனுக்கு அஞ்சினர்.   

நகரத்தைவிட்டு வெகுதூரம் வந்த நளன், பசியின் கொடுமையால் காட்டிலிருக்கும் பழங்களையும் கிழங்குகளையும் உண்ண தொடங்கினான். இப்படி மூன்று நாட்கள் பசியும், பட்டினியுமாக நளனுடன் சேர்ந்து தமயந்தியும் கஷ்டப்பட்டாள். அவள் கஷ்டப்படுவதை கண்ட நளன், தமயந்தியை நோக்கி, நீ உன்னுடைய தந்தையின் நாட்டிற்கு சென்று தங்கி இரு. நாடு நகரத்தை மீட்டப்பிறகு திரும்பி வா. அதுவரை என்னுடன் இருந்து கஷ்டப்படாதே என கூறினான். இதைக்கேட்ட தமயந்தி, அன்பே!  உங்களை எப்படி இந்த கானகத்தில் தனியாக விட்டுச்செல்வேன்?! நீங்கள் படும் துயரத்திற்கு மருந்தாக உங்களுக்கு ஆறுதலாக உங்களுடனேயே இருப்பேன் என அவனைவிட்டு நீங்காமல் இருந்தாள். அரண்மனையில் பஞ்சு மெத்தையில் பட்டு பீதாம்பரத்தில் உறங்கியவர்கள் இன்று கல்லிலும் பாறை இடுக்குகளிலும் தங்கி  சொல்ல முடியாத துயரத்துடன் வாழ்ந்து வந்தனர். நளனின் துயரத்தைக் கண்டும் தன்னுடைய தந்தை நாட்டிற்கு செல்வோம் என நளனிடம் வேண்டினாள். எனக்கு அங்கு வருவதால் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் நாடிழந்த நிலையில் நான் அங்கு வர விரும்பவில்லை எனக்கூறினான் .
இப்படியாக அலைந்து திரிந்து, காட்டிலிருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தைக் கண்டு அங்கு சென்று தங்கினர். அழுக்கு ஆடைகளை உடுத்தியிருந்த அவர்கள் மண் தரையில் புழுதிகளுக்கிடையே படுத்து உறங்கினர். அலைந்து திரிந்தமையாலும், பசியின் கொடுமையாலும்  தமயந்தி உடனே உறங்கிவிட்டாள். ஆனால் நளனோ உறங்காமல், அரண்மனையில் பிறந்து வளர்ந்து அனைத்து நல்ல குணங்களும் கொண்ட பத்தினி பெண்ணான இவள் எனக்காக பசியும் பட்டினியுமாய், புழுதி  தரையிலும் படுத்து, அழுக்கடைந்த ஆடைகளுடனும் துயரப்படுகிறாள். நான் இவளுடன் இருக்கும்வரை என்னைவிட்டு போகமாட்டாள். நான் இவளை இங்கேயே விட்டுச்சென்றால் அவளுடைய தந்தையிடம்  செல்ல வாய்ப்பிருக்கிறது என பலவாறு எண்ணி தூங்காமல் இருந்தான். கடைசியில், அவளை பிரிவது என்ற முடிவுக்கு வந்தான். சரி, நாம் இவளை இங்கே தனியாக விட்டுச் சென்றால், எவரேனும் தீங்கு செய்துவிடுவார்கள் என்ற பயம் இல்லாமல், பத்தினி பெண்களுக்கு அந்த பரமேஸ்வரனே காப்பு. அவனை மீறி யாரும் ஒரு தீங்கும் செய்து விடமுடியாது என முடிவுக்குவந்தான். போர்த்திக்கொள்ள  ஒரு துணிகூட இல்லாமல் அழுக்கு துணியுடன் தரையில் உறங்கும் இவளை, பாம்புகளும் கொடிய மிருகங்களும் நிறைந்த இந்த கானகத்தில் இருந்து எப்படி தந்தையிடம்  செல்வாள் என மண்டபத்தை விட்டு போவதும், பிறகு வந்து பார்ப்பதுமாக இருந்தான்.  சனிபகவான்,  அவன் உடம்பில் ஏறினாலும், காதல் அவனுள்ளே வேலைசெய்ய ஆரம்பித்தது.  அவளின் அறமே அவளைக்காக்கும். தேவாதி தேவர்களே! என் மனைவியை காத்து அருளுங்கள் என தூரத்தில் இருந்து புலம்பிக்கொண்டு அவளைவிட்டு நீங்கவும் முடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் .
மனத்தால் அழுத நளன் அழுதுகொண்டே கடைசியில் அவளைவிட்டு நீங்கினான். பித்துபிடித்தவன்போல் அவளை  எண்ணியே கால்போன போக்கிலே சித்தம் கலங்கியவாறு நடந்தான். உறக்கம் விழித்த தமயந்தி அருகில் கைவைத்து தொட்டுப்பார்க்கும்போது நளனை காணவில்லை. பயத்தால் அலறினாள். என்னைவிட்டு போகமாட்டாய் . என் அன்பே ,புதருக்கு பின்னால் ஒளிந்து இருந்தால் என்  முன்னே வந்துவிடு.பசியால் இருக்கும்போது என்னைவிட்டு உன்னால் தனியாக இருக்கமுடியுமா?! அப்பொழுதும் என்னை அல்லவா நினைத்து இருப்பாய்! நீ எங்கே இருக்கிறாய் என பயத்தில் கண்ணுக்கு தெரிந்த திசையை நோக்கி ஓடி அவனை தேடினாள். என்  தலைவா! அரசே, அன்பே எங்கே இருக்கிறாய் என இறை தேடி மிருகங்கள் அலையும் அந்த காட்டுக்குள் கத்திகொண்டே நளனை தேடி ஓடினாள். அப்படி ஓடிவரும் போது, அங்கிருந்த ஒரு பெரிய மலைப்பாம்பு அவளை பிடித்து விழுங்க ஆரம்பித்தது. அப்பொழுதும் தனக்காக அழாமல், நீ பசித்திருக்கும் வேளையில் உனக்கு யார்  ஆதரவாக பேசுவார்கள்?! கள்ளமற்ற மனதை உடைய நீ எங்கு சென்று கஷ்டப்படுகிறாய் என  நளனுக்காக வருந்தினாள். பாம்பு  விழுங்க ஆரம்பித்ததும் பலவாறு கதறி நளனை அழைத்தாள் .

அவளுடைய சப்தத்தை கேட்டு, அங்கே வந்த வேடனொருவன் பாம்பை கொன்று அவளைமீட்டான். தமயந்தியின் அழகும், அவளுடைய கண்களும் உடல் வனப்பையும் கண்ட வேடன் அவள்மேல் காமமுற்றான்.  அவளை நெருங்கி தீண்டினான். இதைக்கண்டு கோபமுற்ற தமயந்தி, ஒ ..இறைவனே என் மன்னனைத்தவிர வேறு யாரையும் மனத்தால் கூட நினைத்தது இல்லை என்னை தீண்டுவது என்றால் அது என் கணவனாக மட்டுமே இருக்கவேண்டும். அவரை அல்லாது கெட்ட நோக்குடன் காமத்தீ கொண்டு நெருங்கும் இவனை, என்னுடைய பவித்திரம் என்றும் தீ இவனை சுட்டெரித்து இவனுடைய உயிரை எடுக்கட்டும் என்றாள், மறுகணமே வேடன், பத்தினி பெண்ணின் வார்த்தைகளுக்கு இருந்த வன்மையால் உயிரற்று நிலத்தில் வீழ்ந்தான். அந்த காட்டிற்குள் இருந்த மிருகங்களை கண்டு அஞ்சாமல் நளனை மட்டும் தேடிக்கொண்டே இருந்தாள். அப்பொழுது அங்கே சில குடில்களை இருப்பதைக்கண்டாள். பின்னர் அங்கிருந்த ஒரு அசோக மரத்தினடியில் அமர்ந்திருந்தாள் . பின் அங்கு வந்த வணிகர் கூட்டத்துடன் பக்கத்து நாட்டிற்கு சென்று அங்குள்ள ஒரு பெண்ணின் ஆதரவுடன் அங்கே வசிக்கலானாள்  .
நளன் குமுறிய மனதோடு காட்டில் கால்போன போக்கில் சென்று கொண்டு இருந்தான். அப்பொழுது அங்கே ஒரு இடத்தில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டு இருந்தது. அப்பொழுது, அந்த தீயின் நடுவே இருந்து ஒரு அபயக்குரல் கேட்டது. நீதிதவறாத நள மன்னா! ,என்னை இந்த தீயில் இருந்து காப்பாற்று என குரல் கேட்டது. நளனும்  குரல்வந்த திசையை நோக்கி சென்றான். அங்கே கொடியவிஷம் .கொண்ட பாம்பு ஒன்று கதறியது. ஏ அரசனே! ,தவத்தில் சிறந்த நாரத முனிவரை, நான் அவமதித்ததால் அவர் என்னை இந்த தீயில் எரிந்து கொண்டிருக்குமாறு சாபம் கொடுத்துவிட்டார் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு சாபவிமோசனம் கேட்டபோது, இப்பூலகில் நீதிதவறாத நளமன்னன் வந்து உன்னை தீண்டும்போதுதான் உனக்கு விமோசனம் என்றார். ஆகையால் உன்னை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து என்னை இந்த தீயில் இருந்து காப்பாற்றி வெளியில் கொண்டுவிடு என கதறியது அந்த கொடிய நாகம். எல்லோரிடமும் இரக்கம் கொண்ட நளன், அந்த நாகத்தை தீயிலிருந்து எடுத்து தரையில் விட்டான் அப்பொழுது ,பாம்புக்கு பால் வார்த்தால், பால் விட்டவனையே அது கடிக்கும் என்பது போல அந்த நாகம் நளனை தீண்டியது .
உன் பேச்சை கேட்டு உனக்கு உதவியது என் தவறுதான். இருந்தாலும் ஆபத்திலிருப்பவரை காப்பது ஒரு மன்னனின் கடமை. அது நிறைவேற்றுவதில் என் உயிர் போவதில் எனக்கு மகிழ்ச்சியே! என நளன் கூறினான். அதற்கு  அந்த நாகம்,   மன்னா! எனது கொடிய விஷத்தால் உன்னுள் வாசம் செய்யும் சனிபகவான் பலவித தொல்லைகளை அனுபவிப்பான். அந்த தொல்லைகளை அனுபவிக்கவே அவனுக்கு சரியாய் இருக்கும். அவனால் உனக்கு எந்த தொல்லையும் இருக்காது எனக்கூறி.. மேலும் மக்கள் யாரும் உன்னை அடையாளம் காணாதவாறு உன் உடல் கொடூரமான .தோற்றத்தை அடையும் என்றும், மேலும் நீ அயோத்யா ராஜ்யத்தை அடைந்து, இஷ்வாகு வம்சத்தை சேர்ந்த அரசனான சூதாட்டத்தில் நிபுணன் ரிதுபர்ணனிடம் செல். நீ ஒரு தேரோட்டி உனது பெயர் பாஹூக்கா  என்று சொல்லி அறிமுகப்படுத்து. குதிரைகளை பற்றிய அபார ஞானம் கொண்ட நீ அவனிடம் தேரோட்டியாக சேர்ந்துவிடு. அவனுக்கு அஷ்வா ஹிரித்யாவின் நுட்பங்களை அவருக்கு கற்றுக் கொடு. சூதாடவும் செய். உன் சூதாட்ட திறமையைக் கண்டு அவன் உனக்கு நண்பனாவான்.அந்த பகடைமூலமாகவே உன் புகழ் உயர்ந்து, நீ இழந்த வாழ்க்கையையும், உன் மனைவி மக்களையும் திரும்ப அடைவாய் என்றுக்கூறி, உன்னை சார்ந்தவர்கள் உன்னை அடையாளம் காணவேண்டும் எனில் இந்த ஆடையை அணிந்து கொண்டால் உன் சுய உருவத்தை அடைவாய் என கூறி இரண்டு ஆடைகளை கொடுத்து மறைந்தது .

நளனும் அந்த நாகம் கூறியபடி,  அயோத்யா சென்று ரிதுபர்னாவிடம் நட்பு கொண்டு அங்கு வாசிக்கலானான். இந்த நிலையில் தமயந்தி என்ன ஆனாள்  என பார்க்கலாம்.  தமயந்தியின் தந்தை பீம அரசன் நாலா புறமும் ஆட்களை அனுப்பி தேடினான். கடைசியில் அவள் அச்சல்புரா ராஜ்யத்தில் இருப்பதைக்கண்ட வீரர்கள், அவளை தங்கள் நாட்டுக்கு கூட்டி சென்றனர் அங்கே தந்ததையை கண்ட தமயந்தி அழுது அவருடன் வசிக்கலானாள்.   நளனை குறித்த சிந்தனையில் எப்பொழுதும் இருந்தாள். மன்னனும் மிகவும் கவலை கொண்டவனாக, நளனைத் தேட , எல்லா ராஜ்யத்திற்கும் ஆட்களை அனுப்பினான். ஆனால், தமயந்தி நளனைக் காண ஒரு உபாயம் சொன்னாள். எல்லா ராஜ்யத்திற்கும் சென்று, மனைவியை, பாதி ஆடையுடனும்,  பசிபட்டினியாக தனிமையில் அலையவிட்டவனே! அவளுக்கு எவ்வளவு தீங்கு வந்திருக்கும்?! அவளைக் காக்கும் கடமையில் இருந்து தவறியது ஏனோ?!  தனிமையால் விட்டு சென்றது முறையாகுமா?! என செல்லுமிடமெல்லாம் கேளுங்கள். இதற்கு சரியான பதில் யார்  சொல்கிறார்கள் எனக் கேட்டு என்னிடம் சொல்லுங்கள் எனக்கூறி வீரர்களை அனுப்பினாள். அனைவரும் எட்டு திக்கு சென்றும், எதிர்படுபவர்களிடமெல்லாம் இக்கேள்வியை கேட்டும் யாரும் சரியான பதிலை சொல்லவில்லை .
அதேசமயம்  பர்ணாதன் என்ற அந்தணன் தமயந்திக்கு ஒரு சேதி அனுப்பினான். பெண்கள் குல தேவியே! அயோத்தி நகரை ஆண்டுவரும் பங்காசூரனின் மகன் ரிதுபர்ணா ஆட்சி செய்துவரும் நாட்டில் எல்லோர் முன்னும் சென்று நீங்கள் கூறியதை கூறினேன். யாரும் இதற்கு பதில் சொல்லவில்லை. அதேசமயம், அவனிடம் தேரோட்டியாக இருக்கும் குதிரையை பராமரிக்கும் பாஹூக்கா என்பவன் மட்டும் இதற்கு பதில் கூறினான். குட்டைகைகளுடன், கூன்விழுந்து காண சகியாத அவன்,, "எவ்வுளவு துன்பம் வந்தாலும்,  ,கற்புக்கரசிகளை அந்த மகேஸ்வரன் காப்பதோடு, அவர்களின் கற்பு தீ அவர்களையே பாதுகாக்கும். பசியால் வாடி வதங்கி, மண்தரையில், அழுக்கு ஆடைகளுடன் உறங்கும் தன்  மனைவியை காண சகியாத தலைவன் இறுதி முடிவாகவே அவளைவிட்டு விலகி செல்லும் முடிவினை எடுத்தான். இல்லையெனில் அவளும் அவனைவிட்டு நீங்கி இருக்க மாட்டான். அறம் சார்ந்த பெண்டிரை அரவம் கூட தீண்ட முடியாது. அது அவர்களை பாதுகாக்கும் அவளும் தன் இடம் சேர்வாள் என்றுதான், அந்த தலைவன் விட்டு சென்றான்.  அவன் எவ்வளவு கனத்த இதயத்துடன் இன்றும் வருத்தத்தோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்.  தன் காதல் மனைவியை எண்ணி...என அவன் பதிலுரைத்தான்  என தமயந்தியிடம் கூறினார் 

இந்த பதிலை கேட்ட தமயந்தி, மிகவும் சந்தோஷமுற்றாள். நளனை கண்டுப்பிடித்த ஆனந்தத்தில் இறைவனுக்கு நன்றி கூறினாள் . அவர்கள் கூறிய தோற்றத்தை, குறித்து எண்ணியவள்  , இதில் ஏதோ சூது இருக்கிறது என எண்ணி ,ஒரு திட்டம் வகுக்கலானாள். உடனே தனது தூதுவனை அயோத்தி ராஜ்யத்திற்கு அனுப்பினாள். பீமமன்னனின் மகளான தமயந்திக்கு இரண்டாவதாக சுயம்வரம் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். நளன் ,இருக்கிறானா?! இல்லையா?! என தெரியாததால் அவளுக்கு இந்த திருமண எற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை சுயம்வரம் என்ற செய்தியை அயோத்யஅ நாட்டிற்கு கொண்டு செல்லுங்கள் என பணித்தாள். காலம் குறைவாக இருப்பதாலும், ஏற்கனவே தமயந்தியின் அழகை பற்றி கேள்விப்பட்ட மன்னன்  ரிதுபர்ணன் விரைந்து செல்வதற்காக தன்னுடைய தேரோட்டி  பாஹூக்கா என்னும் பெயரில் இருக்கும் நளனை  கூட்டிக்கொண்டு சுயம்வரத்திற்கு விரைந்தான் .
நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், காற்றைவிட வேகமாக சென்றான் அவனது வேகத்தைப்பார்த்த அயயோத்யா மன்னன் அந்த குதிரை செலுத்தும் கலையை முழுவதுமாக உபதேசிக்க கேட்டான். அதற்கு பதிலாக தான் சிறந்து விளங்கு, ம் சூதாட்ட கலையை உனக்கு உபதேசிக்கிறேன் என கூறினான் . இப்படி பேசியவாறு வேகமாக தேரை செலுத்தி தமயந்தியின் நாட்டிற்கு சென்றனர் . அந்த தேரின் ஒலி நளன் ஓட்டும் போது வரும் ஒலியை போன்று இருந்தது. ஆனால் நளனை காணவில்லை என்பதால் தனது தோழியான கேசினி என்பவளை அனுப்பி விசாரித்து வரச்சொன்னாள். நளனின் நடத்தைகள் அனைத்தும் மனித சக்திக்கு அப்பாற்பட்டு தேவ சக்திகளை போல் இருப்பதையும், அவன் செயல்களையும் விளக்கிய கேசினி அவனுடைய மக்களை அவனிடம் கேசினி மூலம் அனுப்பிவைத்தாள் . அவர்களை கண்டதும் வாரி உச்சிமுகந்த நளன், கண்ணீர்மல்க நின்றதையும் தமயந்தியிடம் கூறினாள் பணிப்பெண் கேசினி. 
வந்திருப்பது நளனே  என்று அறிந்துக்கொண்ட தமயந்தி, கடைசி ஆயுதமாக ,ஓ பாஹூக்கா என்னும் நாமம் கொண்டவரே! கடமையை உணர்ந்த ஒருவர் கானகத்தில் ,தனியே உறங்கி கொண்டிருந்த மனைவியை, துன்பத்திலும் துயரத்திலும் சிக்கவைத்து தனியே சென்றதை கேள்விப்பட்டு இருக்கிறீரா?! என்று கேட்டு ..மள .மள வென கண்ணீர் சிந்தினாள்  தமயந்தி.  இவையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நளன் அந்த நாகம் கொடுத்த ஆடையை  எடுத்து உடுத்தினதும் தன் சுயரூபத்திற்கு வந்தான். அவனைக்கண்ட தமயந்தி ஓடிச்சென்று கட்டியணைத்து அவன் மார்பில் சாய்ந்து அழுதாள். பிரிந்தவர் கூடினால் அங்கே பேச்சுக்கு இடமேது?! ஆனாலும், இவையனைத்தும் சனிபகவானலாயே  வந்தது என நடந்த அனைத்தும் கூறினான் .
12 வருஷகாலம் சனியின் பிடி முடிந்ததும் , நளனும் -தயமயந்தியும் ஒன்றாக சேர்ந்தனர். பீம அரசனின் படை கொண்டு தன்னுடைய நாட்டையும் பிடித்து நல்லாட்சி மீண்டும் செய்ய துவங்கினான்.  அப்பொழுது அங்கு வந்த ஒரு துறவி, நீதித்தவறாத உத்தமனான நீ  ஏன் இப்படி கொடுமைக்கு ஆளானாய் என்றால், போனப்பிறவியில், நீங்கள் இருவரும் இணைபிரியாத ஜோடிகளாக ராஜா ,ராணியாகத்தான் இருந்திருக்கிறீர்கள். அப்பொழுது அப்பாவியான ஒரு துறவியை 12 ஆண்டுகாலம் சிறையில் அடைத்தற்கான தண்டனை இது. ஒரு நிரபராதியை தண்டிப்பதும், குற்றம் செய்பவனை தப்பிக்கவிடுபவர்களும் அடுத்தபிறவில் இதே தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதி . ஆகையால்தான் இத்துன்பத்தை  அனுபவிக்க நேர்ந்தது என விளக்கினார் .இறை சக்தியின் முன்னே எதுவும் நிலை இல்லாதது என உணர்ந்துக்கொண்ட நளன், சிறிது காலம் நல்லாட்சி புரிந்து தன்மகனுக்கு முடிசூடி, பின்பு இறைவனை தேடி தமயந்தியுடன் நாடுவிட்டு ஆன்மீக ஞானத்தை தேடி சென்று ,சுகமாக வாழ்ந்தனர்.
 எல்லாம் சரி ராஜி, நளன் கதையை படிச்சாலோ இல்ல கேட்டாலோ சனிபகவானின் ஆதிக்கம் குறையும்ன்னு சனிபகவான் வாக்கு கொடுத்ததா சொன்னியே! அந்த பகுதி எங்க மறந்துட்டியான்னு என்னை குறை சொல்ல சனிபகவான் நளனின் சிறு தவறுக்கு காத்திருந்த மாதிரி இருப்பவங்களுக்கு பதில் இதோ..
ரிதுபர்ணா மன்னனும், நளனும் விரைந்து வந்துக்கொண்டிருந்தபோது திருநள்ளாற்றை கிராஸ் செஞ்சாங்க. போற வழிதானே! சனிபகவானுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு போகலாம்ன்னு கோவிலுக்குள் நுழைந்து, அங்கிருந்த குளத்தில் மூழ்கி எழுந்த வேளையில் அவனை பிடித்திருந்த சனி முற்றிலும் நீங்கியது. அங்கிருந்து ஆலயத்துக்கு வந்த நளனிடம், உன்னிடம் யாம் சற்று விளையாடினோம்ன்னு கூலா சனிபகவான் சொல்லி, உனக்கு என்ன வரம் வேணும்ன்னு நளனை தாஜா பண்ண கேட்டார். நளனும், சுவாமி! இந்த நள தீர்த்தத்தில் நீராடினாலும், என் கதையை கேட்டாலும், படிச்சாலும், என்னை பற்றி, இக்குளத்தை பற்றி நினைச்சாலும் அவர்களை நீங்க வச்சு செய்யக்கூடாதுன்னு நளன் வேண்டிக்கிட்டான். அதுப்படியே சனிபகவானும் வரம் கொடுத்தார்.
இதானுங்க. நள தமயந்தி வரலாறு.  லைலா மஜ்னு, ரோமியோ ஜுலியட்,  அனார்க்கலி சலீம்ன்னு பிற நாட்டு காதல் கதைகளை கொண்டாடும் நம்ப பசங்க நள தமயந்தியை அந்தளவுக்கு கண்டுக்குறதில்லை. அது ஏன்னுதான் எனக்கு புரியல. உங்களுக்கு புரிஞ்சா எனக்கு பதில் சொல்லுங்க.

நன்றியுடன்
ராஜி.

18 comments:

  1. நன்றி சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே!

      Delete
  2. நம் பெருமையை நாம் உணர நம்மில் பலருக்கு கொடுத்துவைக்கவில்லை என்றே கொள்வோம். அருமையான புகைப்படங்களுடன் நிகழ்வுகள் மனதில் பதிந்தன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  3. சிறிது தான் தெரியும் ராஜிக்கா...

    இன்று நள தமயந்தி காதல் கதையை முழுதும் அறிந்து கொண்டேன்...

    அற்புதம்...படங்களும் வெகு அழகு..

    ReplyDelete
    Replies
    1. நளன் சிறந்த சமையல் கலைஞன். அதனாலதான் சமையல் நல்லா செஞ்சா நளபாகம்ன்னு சொல்வாங்க.

      Delete
  4. வணக்கம் சகோதரி

    அருமையான கதை. ஏற்கனவே நள தமயந்தி கதையை அறிந்திருந்த போதிலும்.தங்கள் எழுத்தில் புது கதையை படிக்கும் ஆர்வத்தில் படித்தேன். எழுத்து நடை அருமை! பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கமலா.

      Delete
  5. கானகத்தே காதலியை காரிருளில் கைவிட்டுப் போனதுவும் வேந்தருக்கு போதுமோ

    ReplyDelete
    Replies
    1. தப்புன்னு அந்த மக்குக்கு புரில. கேட்டா என்னோடு இருந்தா உனக்கு பாதிப்பு அதனாலதான் பிரிஞ்சேன். இது விதி, கடவுள் காப்பாத்துவார். சாமி கும்பிடுன்னு சொல்வாப்ல. பிரிஞ்சிருந்து பிரியம் காட்டவேணாம், சேர்ந்திருந்து செத்து போகலாம்ன்னு அந்த லூசு நளனுக்கு புரில

      Delete
  6. நளன் தமயந்தி என்றால் முதலில் நினைவுக்கு வருவது வர்மாவின் ஓவியம் தான் நன்றாகவே கதை சொல்கிறீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. கதை சொல்றேனா?! இல்ல கதையை கதை விடுறேனா?!

      Delete
  7. தெரிந்த கதை. மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி. படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நள தமயந்தி கதை தெரியாதவரும் உண்டோ?! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  8. அற்புதம் இன்னும் விளக்கமாகக் கூறினால் நன்றாக இருக்கும்ன்னு தோனுது...

    எழுத்து நடை அற்புதம்.... வாழ்த்துகள்....

    ReplyDelete
  9. அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. மகாராஷ்டிராவுக்கும் (விதர்ப நாடு அதாவது தமயந்தி நாடு) உபி அயோத்திக்கு(நளன் தேரோட்டியாக இருந்தது) நடுவுல திருநள்ளாறு (தமிழ் நாடு) வழியாக போனது எப்படி சாத்தியம் ஆகும்... இதிகாசம் புராணம் அப்படித்தானாலும் ஒரு நியாயம் வேணாமா

    ReplyDelete