சிவப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது சூல விரதம். தை மாத அமாவாசையன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுது. கடவுளை வணங்குமளவுக்கு, கடவுளின் எண்ணத்திற்கேற்ப செயல்படும் அவரது வாகனங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு நாம் அதிகமா முக்கியத்துவம் தருவதில்லை. சிவப்பெருமானின் கையிலிருக்கும் சூலத்தின் மனக்குறையை போக்க இப்படியொரு விரதம்.
சிவப்பெருமான் மற்றும் அம்மனின் கைகளில் இருக்கும் மூன்று கூர்முனை கொண்ட ஆயுதத்தின் பெயர் சூலாயுதம். பக்தர்களின் கர்மவினைக்கேற்ப, அழிக்கவும், காக்கவும் செய்யும் இந்த சூலாயுதம். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியவற்றை உணர்த்தும் புற அடையாளமாக திரிசூலம் விளங்குது. திரிசூலத்தின் ஒருமுனை ஆசைகளைத் தூண்டுவதும், மறுமுனை அதனை செயல்படுத்துவதும், நடுவில் இருக்கும் கூர்முனை அந்த செயலை செய்யலாமா?! கூடாதா என யோசிக்கும் ஞானத்தை தருவதாகவும் அமைந்துள்ளது.
ஒருமுறை, சிவன் கையிலிருக்கும் சூலம் மன வாட்டம் கொண்டிருந்ததாம். பக்தர்களின் மனசில் என்ன இருக்குன்னு உணரும் சக்தி கொண்ட பெருமான், சதாசர்வக் காலமும் தன் கையிலிருக்கும் சூலக்குழந்தையின் மனவாட்டத்தை உணராமலா இருப்பார்?! என்னவென சூலத்திடம் விசாரிக்க, எப்பவாவது தங்களை சுமக்கும் பாக்கியம் கொண்ட நந்திபகவானுக்கு பிரதோஷ காலங்களில் சிறப்பு செய்யப்படுது. ஆனா, சதாசர்வக்காலமும் தங்களுடனும், அன்னையுடனும் இருக்கும் எனக்கு எந்த சிறப்பும் செய்யப்படுவதில்லை, அதேப்போல, பாவிகளை அழிக்க என்னை தாங்கள் பயன்படுத்தி, பாவிகளின் ரத்தம் படிந்ததால் எனக்கு பாவம் வந்து சேருமோவென அச்சமா இருக்கு என சூலம் தன் கவலையை சிவனிடம் சொன்னது.
கோபம், காமம், பதற்றமில்லாம அதேநேரம் சோம்பியிராமல் சாந்தமும், பிரியமுமாய் நல்ல குணத்துடன் இருப்பது சத்வ குணம். மிகுந்த பதட்டம், காமம், சட்டென்று உணர்ச்சிவயப்படும் குணத்துடன் இருப்பது ரஜஸ், சோம்பல், எதையும் எளிதில் புரிந்து கொள்ளாமை, மந்தபுத்தியுடன் இருப்பது தாமஸ குணம். சத்வ, ரஜஸ், தாமச குணங்களை உந்தன் மூன்று கூர்முனை குறிக்கின்றது. சிவபெருமான் இந்த மூன்று குணங்களையும் கடந்த, நிர்குண பிரம்மம் என்பதையே இந்த மூவிதழ் சூலமாகிய நீ சுட்டிக்காட்டுகிறாய். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று தீய செயல்களையும் ஒழிக்ககை என் கையிலும், பார்வதி கையிலும் இருக்கிறாய். எங்கள் இருவர் கையிலும் மட்டுமில்லாமல் தீமையை அழிக்கும் எல்லா கடவுளின் கைகளிலும் பாச, அங்குசத்தோடு நீயும் இருப்பாய். அத்தனை சிறப்பு வாய்ந்த உன்னை பாவம் பீடிக்குமா?! உன் மனக்குறையை போக்க, தைமாத அமாவாசையன்று சூலாயுதம் தரித்த சிவசக்தி ரூபத்தை வழிபடுபவர்களுக்கு முக்தியை அளிப்போம் என அருளினார்.
தை அமாவசை அன்று காலையில் எழுந்து நீராடி பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தபடி திருநீறு அணிந்து, பின்னர் மனத் தூய்மையுடன் திரிசூலத்தை ஏந்தியிருக்கும் சிவனை மனதில் நிறுத்தி, பார்வதியுடன் இருக்கும் ஈசனின் மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்து, நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். பின்னர் சிவாலயத்திற்குச் சென்று சிவலிங்கத்தை தரிசிப்பதுடன், ஈசனின் அடியவர்களுக்கு தட்சணை அளித்து, அவர்களுடன் இணைந்து ஒருவேளை உணவு உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும். இவ்விரதத்தை முறையாக பின்பற்றினால் செல்வம் சேரும். இம்மையில் மட்டுமல்லாது, மறுமையிலும் சுகமான இறைவனின் திருப்பாதங்களை அடையும் வாய்ப்பு கிடைக்கும்.
மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு இந்த விரதமிருந்து காலநேமின்ற கொடிய அரக்கனை அழித்தார் என்கிறது புராணங்கள். ஒருமுறை மகா விஷ்ணுவுக்கு ஏற்பட்ட தலைவலியும் இந்த விரதத்தை அனுஷ்டித்த காரணத்தால் விலகியது. பிரம்மதேவரும் இந்த விரதத்தை மேற்கொண்டு, தனக்கு ஏற்பட்ட வயிற்றுவலியை தீர்த்துக் கொண்டார். பரசுராமர், இந்த விரதத்தை மேற்கொண்டுதான், ஆயிரம் கரங்களைக் கொண்ட கார்த்தவீரியார்ஜூனனை வெற்றி கொண்டார் என நம் புராணங்கள் சொல்லுது.
திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் சூல விரதம் கொண்டாடப்படுது. அன்றைய தினம் நெல்லையப்பர் ஆலயத்தில் லட்ச தீபம் ஏற்றப்படும். கோவில் தீபவெளிச்சத்தில் மிதக்கும்.
தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலத்தில் இருக்கிறது அலங்காரவல்லி உடனுறை கிருத்திவாசேஸ்வரர் கோவில். இங்கு தை அமாவாசை அன்று சூல விரத வழிபாடு விமரிசையாக நடைபெறும். இந்த ஆலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றுக்கும் சிறப்பு மிக்க ஆலயமாகும். அஸ்திரதேவர் எனப்படும் திரிசூல தேவர், திருவிழா காலங்களிலும், தீர்த்த வாரியிலும், தான் முதன்மையாக விளங்க வேண்டும் என்ற வரத்தை இறைவனிடம் பெற்ற தலம் இது.. சப்த மங்கையரில் சூலமங்கை வழிபட்ட ஆலயம் இது. ஆலயத்தின் வெளிவாசலில் சூலம் தலை மீது ஏந்தியவாறு சூல தேவர் உள்ளார். அஸ்திர தேவரால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்பு மிக்க இத்தலத்தில் தை அமாவாசையன்று, அதாவது சூல விரதத்தன்று விரதம் அனுஷ்டித்தல், வழிபாடு செய்தல், திருக்கோவிலை சுத்தம் செய்து கோலமிடுதல், உழவார திருப்பணிகள் செய்தல், திருமுறைகள் பாடுதல், அன்னதானம் வழங்குதல், தான தர்மங்கள் செய்தல், திருக்கோவில் நித்திய பூஜைகள் தடைபடாமல் இருக்க உதவுதல், திருக்கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்களுக்கு தங்களால் இயன்ற உதவி போன்றவற்றை செய்து வந்தால், உலகத்தில் யாரும் செய்திராத தவப்பயனும், ஒப்பற்றயாகங்கள் செய்த பலனும் இந்த பிறவியிலே கிடைக்கும் என்று சொல்லப்படுது.
இன்றைய தினம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது முக்கியம். இந்த விரதத்தை அனுஷ்டித்தால் எதிரிகளின் தொல்லை அகலும், விளையாட்டில் சிறந்து விளங்கலாம். முக்தி கிடைக்கும்.
நன்றியுடன்,
ராஜி.
.
நன்றி சகோதரியாரே
ReplyDeleteஇன்றைய தினத்துக்கான பதிவு. நல்ல விவரங்கள்.
ReplyDeleteதஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகேயுள்ள சூலமங்கலம் சென்றுள்ளேன். இவ்விழாவினைப் பற்றி அறிந்துள்ளேன். இப்பதிவு மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன். நன்றி.
ReplyDeleteஇதுவரை அறிந்திராத தகவல்கள் பல அறிந்தோம் சகோ/////ராஜி
ReplyDelete