Thursday, March 08, 2018

உடலின் கழிவுத்தொழிற்சாலை எதுன்னு தெரியுமா?! - உலக சிறுநீரக தினம்



நம்ம ஊர்ல  கெட்ட வார்த்தையைக்கூட பொதுவெளில பேசிடுவாங்க. ஆனா, சிறுநீர் கழிக்கனும், ரெஸ்ட் ரூம் எங்க இருக்குன்னு கேட்க அத்தனை கூச்சம். ஆணுக்கு இந்த பிரச்சனை இல்லை.  மரத்தடியில், கார் சந்துல, ரோட்டோரத்துல அவங்க இம்சை கழிஞ்சிடும். ஆனா பெண்ணுக்கு?! கொஞ்சம் முன்னாடி போய்க்கிட்டிருங்க. ஒன்னுக்கு அடிச்சுட்டு வந்துடுறேன்னு சொல்லி ரோட்டோரத்தில் ஒதுங்கும் நம் வீட்டு ஆண்களுக்கே பெண்களின் அவஸ்தை தெரியாத போது மத்தவனுக்கு எப்படி தெரியும்?!    ஒதுங்க இடம் கிடைக்காம அடக்கி அடக்கி நோய் தொற்றுக்கு ஆளாகுபவர்களில் பெண்கள்தான் அதிகம். அப்படியே ஒதுங்க இடம்கிடைச்சாலும் நம்மூர் பப்ளிக் டாய்லட் சுத்தம் பத்திதான் உங்களுக்கு தெரியுமே! அதனாலயும் நோய் தொற்று உண்டாகுது. என்னடா என்னிக்கும் இல்லாம இன்னிக்கு மூக்கை சுளிக்க வைக்கும் பதிவுன்னு சிந்திக்குறவங்களுக்கு இன்னிக்கு உலக சிறுநீரக தினம்ன்னு நினைவுப்படுத்த கடமைப்பட்டிருக்கேன்.


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை அன்று உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுது.  அதன்படி பார்த்தால் இந்த வருசம் மார்ச் 8 அன்னிக்குதான் இத்தினம் அனுஷ்டிக்கப்படுது. உடலிலிருந்து வெளியேறும் ஒரு கழிவுப்பொருள்தானே?! அதை சேமிக்க ஒரு பை. இதை கொண்டாட ஒரு தினமான்னு ஆச்சர்யப்படுறவங்களுக்கு சிறுநீரகத்தின் முக்கியத்துவம் தெரியலைன்னுதான் சொல்லனும்.  சிறுநீரகத்தை காப்பதும், ஆரம்பக்காலகட்டத்தில் நோயை கண்டறிவதும், அந்த நோய் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுது.  66 நாடுகளின் ஒத்துழைப்புடன் 2006ம் ஆண்டுதான் முதன்முதலா இத்தினம் உலக சிறுநீரக தினமா பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நாடுகளின் எண்ணிக்கை இரண்டே ஆண்டில் 88ஆ உயர்ந்ததிலிருந்து  சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தை புரிஞ்சுக்கலாம்.


நம்ம உடம்பிலிருக்கும் நச்சுக்களையும், அதிகப்படியான நீரினையும் வெளியேற்றி நம்   ஆரோக்கியத்தைக் காக்கும் பணியினை செய்வது இந்த   சிறுநீரகம். "இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 800 பேர் நாட்பட்ட சிறுநீரக நோய் பிரச்னையால் அவதிபடுகிறார்கள்" என்கிறது சுகாதார துறை அமைச்சகம். இதில் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், பலர் தங்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு இருக்குன்னே தெரியாம இருக்குறதுதான். நோய் முத்திப்போன  நிலையில்தான் தனக்கு இன்ன பாதிப்ப்பு இருக்குன்னு தெரிஞ்சுக்குறாங்க.   
சிறுநீரக நோய் ஆரம்பகால பாதிப்பு மற்றும் நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு என இரண்டு வகைப்படும். குறுகிய கால சிறுநீரக பாதிப்பானது ஆரம்பக்காலக்கட்டத்தில் கண்டறிந்தால் மாத்திரை, ஊசி , உணவுக்கட்டுப்பாடு மூலம் குணப்படுத்த முடியும் இல்லன்னா அறுவை சிகிச்சை, டயாலிஸ், மற்றும்  உறுப்பு மாற்றுன்னு சிகிச்சை பெரிசா இருக்கும். 
உயர் ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயுமே சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணமாகும். அதில்லாம அசுத்தமான நீர், ரசாயணப்பொருட்கள் கலந்த உணவு, போதிய நீர் அருந்தாமை,  சத்தான உணவு பழக்கம் இல்லாமை, சிறுநீர் அடக்கி அடக்கி உண்டாகும் நோய் தொற்று, மது, புகை பழக்கம். உடல் பருமன், காசநோய், அளவுக்கு அதிகமான மருந்துகள் உபயோகித்தல்.. என இப்படிப்பட்ட காரணமும் சிறுநீரகம் பாதிக்கப்பட காரணம் உண்டு. 

இதயம், மூளை, கண் மாதிரியான உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சிறுநீரகத்துக்கு நாம கொடுக்குறதில்லை. நம்ம உடம்பிலிருக்கும் கழிவுகளையும், குடிச்ச தண்ணியையும் வெளியேற்றும் ஒரு உறுப்புதானேன்ற அலட்சியம் நம்மில் பலருக்கு, ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை பிரித்தெடுப்பது அத்தனை சுலபமில்லை.  ரத்தத்தில் இருந்து பிரிப்பதும் பின்னர் மீண்டும் கிரகிப்பது என இதன் செயல்பாடு  கிட்டத்தட்ட ஒரு ரசாயன பேக்டரிக்கு ஒப்பானது. 
மனிதனின் அடிமுதுகுப்பகுதியில்  பீன்ஸ் விதை வடிவில் உக்காந்திருக்கும்  இரண்டு சிறுநீரகங்கள். ஒவ்வொன்றும் 10-15 செ.மீ உயரமும் 160 கிராம் எடையும் கொண்டதா இருக்கும். சிறுநீரகம் என்றதும் ஒரு மிகப்பெரிய வடிகட்டி என நாம நினைச்சுப்போம். ஒவ்வொரு சிறுநீரகத்திலும், ரத்தத்தை சுத்தம் செய்யும் அமைப்பான நெஃப்ரான்கள் தலா 10 லட்சம் இருக்கும். இந்த நெஃப்ரான்களில்தான், ரத்தக் குழாய் போன்ற வடிகட்டி இருக்கும். சிறுநீரகத்தினுள் ரத்தம் நுழைந்ததும் நெஃப்ரான்கள் இரண்டு கட்ட செயல்பாட்டின் மூலம் ரத்தத்தில் உள்ள தாதுஉப்புக்கள் உள்ளிட்டவற்றைப் பிரிக்கும்.  பிரிக்கப்பட்ட கழிவுகள் மீண்டும் மற்றொரு குழாய் வழியே பயணிக்கும்.  அங்கே, உடலுக்குத் தேவையான தாதுஉப்புகள் மீண்டும் கிரகிக்கப்பட்டு, மிச்சமிருக்கும் கழிவுகள் அனைத்தும்  சிறுநீராய் வெளியேற்றப்படும். 
இரு சிறுநீரகங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு  தோராயமா 190 – 200 லிட்டர் ரத்தத்தைச் சுத்தம் செய்யும்.  இதில், கிட்டத்தட்ட 1.8 லிட்டர் சிறுநீராக வெளியேறுகிறது. மீதம் உள்ளவை மீண்டும் உடலுக்குள் செலுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பிரிக்கப்படும் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது.
கழிவுகள், நச்சுகளை பிரிச்சு ரத்தத்தை சுத்தம் பண்ணுவதும்,  ரத்தத்தில் இருக்கும்  சோடியம், பொட்டாசியம் போன்ற எலெக்ட்ரோலைட் அளவைப் பராமரிக்குது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. எரித்ரோபோய்டின் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்யுது. இந்த எரித்ரோபோய்டின்தான் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியைத் தூண்டுபவை. வைட்டமின் டி-யைச் செரிவானதாக்கி, எலும்புகள் பயன்படுத்துமாறு பக்குவப்படுத்தி வைக்கின்றது. உடலின் நீரின் அளவை சமநிலையில் வைப்பதும் சிறுநீரகத்தின் வேலை. 

இந்த சிறுநீரகம் பாதிக்கப்பட்டா  நச்சுக்கள் உடலிலேயே தங்கிவிடும். இதனால், கால் வீக்கம், வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, சுவாசித்தலில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஆரம்பக்காலத்திலேயே பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை பார்க்கலைன்னா  சிறுநீரகங்கள் முற்றிலுமாகச் செயலிழந்துடும். இதனால், உயிரிழப்புகூட ஏற்படலாம்.   ஒரு வீட்டுக்கு கழிவுநீர் வடிகால் இல்லன்னா வீடு எப்படி நாறிப்போகுமோ அதுமாதிரி சிறுநீரகம் இல்லன்னா உடல் ஆரோக்கியம் நாறிப்போகும். 
சிறுநீரகம் பாதிக்கப்பட்டா சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். பசி எடுப்பது குறையும். தூக்கம் வராது. வாந்தி வரும். கடுமையான உடல் சோர்வு, உடல் அரிப்பு, கை கால், முகத்தில் வீக்கம், மூச்சிளைப்பு , வாய் துர்நாற்றம், முதுகு வலி என அறிகுறிகள் தோன்றும். அப்பவே கவனிச்சா சிறுநீரக பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். 
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. அதனால முறையான உணவுக்கட்டுபாடு, மற்றும் உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்களால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரனும்.  உணவில் உப்பை குறைத்து சாப்பிடுங்க. கருவாடு, ஊறுகாய், அப்பளம், சிப்ஸ் மாதிரியான உப்பு அதிகமா இருக்கும் பொருட்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு இதுலாமும் சிறுநீரகத்துக்கு எதிரி. அதனால அதையெல்லாம் எப்பவாவது எடுத்துக்கலாம்.  எப்பயுமே எடுத்துக்க கூடாது.  சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கனும். சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது. அப்படி ஒரு உணர்வு வரும்போதே ரெஸ்ட் ரூம் போய் வந்திரனும். ஒவ்வொரு முறையும் ரெஸ்ட் ரூம் போகும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப்படுத்திக்கனும். அதுக்காக பெண்கள் சோப், அந்த உறுப்புகளுக்கான லிக்விட் பயன்படுத்தக்கூடாது, ஏன்னா, நன்மை செய்யும் பாக்டீரியாக்களை இவை அழிச்சுடும். மது, புகை உபயோகிக்கக்கூடாது.  2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கனும்.  மருத்துவர் சொல்லாம நாமளா எந்த மாத்திரை மருந்துகளும் எடுத்துக்க கூடாது.  இப்படிலாம் செஞ்சா சிறுநீரகத்தை நோய் பாதிப்புல இருந்து காப்பாத்தலாம்....


சிறுநீரகத்தையும் கவனிப்போம்..... நோயில்லாமல் வாழ்வோம்...

நன்றியுடன்,
ராஜி. 

10 comments:

  1. நல்ல தகவல் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  2. வரும்வரை தெரியாது. இது போன்ற பாதிப்புகள் வந்தால் தெரியும் கஷ்டம். வாழ்நாளை எண்ணத் தொடங்க வேண்டியதுதான். சிறப்பான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் வாழ்க்கையின் மத்திம வயசு வந்தாச்சு. இனி கவனமா இருக்கனும் சகோ

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. அருமையான விழிப்புணர்வுப் பதிவு
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. சும்ம்மா சாமி பதிவே போட்டுக்கிட்டு இருந்தால் போரடிக்குமே! அதான் இப்படி...

      Delete
  5. அருமையான உளநல வழிகாட்டல்

    ReplyDelete
    Replies
    1. ஏதோ படிச்சது, காதுல வாங்குனது... இதுலாம் வச்சு ஒப்பேத்தியாச்சு...

      Delete