பெண் பிறந்தபோதோ இல்ல பூப்படையும்போதோ இல்ல திருமணத்தின்போதோ முழுமையடைவதில்லை. குழந்தை ஒன்றை பெத்தபின் தான் முழுமையடைகிறாள். உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலமும் பூரணத்துவம் பெறுகிறாள். எல்லா பெண்களும் இப்படி இல்லை. ஒருசில பெண்கள் தங்கள் அன்பு, கருணை, பகிர்தல் மூலம் முழுமை அடைவதோடு தெய்வத்துக்கு சமமாகவும் போற்றப்படுகிறாள்.
சக மனுசங்க முதற்கொண்டு அனைத்து உயிர்களிடத்திலும் ஆதரவு காட்டும் மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம், எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் இவை மூன்றும் எல்லா பெண்களிடத்திலும் புதைந்திருக்கும் உணார்வு. மகளாய், சகோதரியாய் தோழியாய், நலம் விரும்பியாய் காதலியாய், மனைவியாய், மருமகளாய், தாயாய், பாட்டியாய்... இப்படி அவள் ஏற்கும் வேடங்கள் எத்தனை எத்தனை?! உறவுமுறைகள் தாண்டியும் அவள் எடுக்கும் அவதாரங்கள் பலப்பல. உணர்ச்சிகளின் கலவையாய், அதேநேரத்தில் திடமானதொரு படைப்பு பெண்ணைத் தவிர வேற எதுமில்லை.
பல நூற்றாண்டுகளாய் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் பல. பெண்களுக்கு எதிரான மனப்போக்கு, அடக்குமுறைகள், சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டி இன்றைய பெண்கள் கல்வி, கலை, இலக்கியம், தொழில்ன்னு வெற்றி பெற்று வருகிறார்கள். முழுமையான சம அந்தஸ்து கிடைக்கலைன்னாலும், கிடைச்ச வாய்ப்புகளில் தங்களோட திறமைகளினால் சாதனை புரிஞ்சுக்கிட்டு வர்றாங்க. இட்லி சுட்டு விற்பது முதல் ராக்கெட் தயாரிப்பு வரை பெண் தன் பங்களிப்பை கொடுத்துக்கிட்டு வர்றாங்க..
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்ன்னு பாரதியாரின் வரிகளுக்கேற்ப வீட்டைவிட்டு வெளியில் வந்து வெளி உலகை சந்திக்க தொடங்கிட்டாங்க பெண்கள். இந்த சுதந்திரம் சும்மா கிடைச்சுடல. இதுக்காக பெண்கள் பட்டபாடு.. அப்பப்பா! அந்த போராட்டங்களின் வெற்றியை கொண்டாடவும், இனிவரும் காலங்களில் பெண்கள் தாங்கள் பட்ட பாட்டை நினைவுறுத்தவும்தான் மார்ச் 8வது நாளை உலக மகளிர் தினமா கொண்டாடப்படுது. இந்த நாள் எதுக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் மாறி, டிவில நிகழ்ச்சியாகவும், வியாபார நிறுவங்களின் தள்ளுபடி, சலுகைன்னும்,பணியிடங்களிலும், பள்ளி, கல்லூரிகளில் விழான்னும் மாறிப்போச்சு.
இப்படி கொண்டாடி மகிழக்கூடிய நாள் இல்லை இது. யோசிக்க வேண்டிய நாள். ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கான உரிமைகளை பலரின் ரத்தத்தில் பெற்ற தினமாகும். 18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியிலமர்த்த அனுமதி. பெண்கள் வீட்டு வேலை செய்யவும், குழந்தைகளை பராமரிக்கும் பொருட்டும் வீட்டிலேயே முடக்கி வைக்கப்பட்டனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்விகூட மறுக்கப்பட்டது. மருத்துவம், சுகாதாரமும் கூட என்னவென்று கூட அறியாத காலம் அது.
1857-ஆம் ஆண்டு நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை தவிர்க்க நிலக்கரிச் சுரங்கம், தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது. அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணி செய்ய முடியும் என நிரூபித்தனர். ஆண்களுக்கு சரிநிகராக பெண்களால் வேலை செய்ய முடியும் என ஆண் சமுதாயத்திற்கு அப்போதுதான் புரிய வந்தது.
பெண்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர ஊதியத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பெருமளவு வித்தியாசம் காணப்பட்டது. இதனால் கிளர்ந்து எழுந்த பல பெண்கள் 1857-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். அதிர்ந்துபோன அதிகார வர்க்கம் அப்போராட்டத்தை அடக்க முயற்சித்தது. அடக்கி வைத்தால் அடங்கி போவது அடிமை இனம் என்று பெண் தொழிலாளர்கள் “சம உரிமை, சம ஊதியம், 8 மணி நேர வேலை” ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து 1907-ஆம் ஆண்டு மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் பெண் தொழிலாளிகள், பல பெண்கள் அமைப்பு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுள் ஒருவரான கிளாரே செர்கிளே மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆணாதிக்க சமூகத்தில் பல ஆண்டுகள் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து 1920-ல் சோவியத் ரஷ்யாவில் நடந்த பெண்கள் போராட்டத்தில் அலெக்ஸாண்டாரா கெலுன்ரா-தான் மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினம் என பிரகடனம் செய்தார். 1921-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக கொண்டாடி வருகின்றோம்.
19-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆரம்பித்த இந்த போராட்டங்கள் மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்த பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணர தொடங்கினர். வேத காலங்களில் கார்கி, மைத்ரேயி போன்ற பெண் அறிவாளிகள் மெத்த படித்தவர்களாகவும், கணவர்களுக்கு சரிசமமாக எல்லா விஷயத்திலும் மேன்மையானவர்களாகவும் இருந்தனர் என உபநிடதம், ரிக் வேதம் மூலம் அறிய முடிகிறது. ஆனால் பிற்காலத்தில் பெண்களின் நிலை அப்படியே தலைகீழாக சரிய தொடங்கியது. சதி எனும் உடன்கட்டை ஏறுதல், சிறு வயதில் திருமணம் என்ற பிற்போக்குத்தனங்கள் தலை தூக்கின. சில பெண்கள் வயது வரும் முன்பே கணவன் உயிர் துறக்க நேரிட்ட சந்தர்ப்பங்களில் அந்த பெண்கள் ஆயுள் முழுவதும் விதவையாக சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வாழ நேர்ந்தது. கணவனோடு சேர்த்து உடன்கட்டை ஏற்றும் கொடுமையும் நடந்தது.
கோவில்களில் நாட்டியமாடும் பெண்கள் தேவதாசி என்றழைக்கப்பட்டனர். நாட்டியக் கலையை வளர்த்த்தில் இவர்களது பங்கு மிக முக்கியமானது. கடவுளுக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். கடவுள்களுக்கு தாசிகளாக இருந்து, கோவில் வருமானத்திலேயே தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருந்தனர். பிற்காலத்தில் கோவில்களில் வருமானம் குறைய குறைய இவர்களது நிலை சிறிது சிறிதாக மாறி மனிதர்கள் குறிப்பாக பணம் படைத்த ஆண்கள் மற்றும் பண்ணையார்களின் ஆசை நாயகிகளாக மாற கட்டாயப்படுத்தப்பட்டனர்.
கல்வியே பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது என கருதிய பல பெண்கள் ரகசியமாகவே கல்வி கற்றனர். குறிப்பாக இந்தியாவில் பெண்கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் சாவித்திரி பாய் புலே பெண்களுக்கான முதல் பொதுப்பள்ளியை உருவாக்கினார். அதே போல சமஸ்கிருதத்தை பெண்கள் படிக்ககூடாது எனும் மனுநீதி கடந்து, தடைகளை மீறி சமஸ்கிருதம் கற்று பண்டிதரானார் ராமபாய். பழங்குடியினர்கள். தேவதாசிகள் பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள் கல்வி கற்க இரவு பாடசாலை தொடங்கியவர் முத்துலெட்சுமி ரெட்டி. இது போன்று வரலாற்றில் பல பெண்கள் பல்வேறு ஆபத்துக்களை கடந்து தடைகளை மீறி வீரம் செறிந்த போராட்டங்களை நட்த்தியுள்ளனர். இது எத்தனை பெண்களுக்கு தெரியும்
பெண்கள் இன்றளவும் கல்வி, சுகாதாரம், அரசியல் போன்ற அடிப்படை உரிமைகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது. பழமையான சிந்தனையிலிருந்து விடுபட்டு சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ள நினைக்கும் பெண்களை இந்த ஆணாதிக்க சமூகம் தற்சார்புடனோ அல்லது சுயமரியாதையுடனோ வாழவிடுவதில்லை. பொதுவாக, இந்தியாவில் பெண்களின் நிலை என்பது முரண்பாடுகள் நிறைந்தது. குட்டைப்பாவாடை அணிந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி உதட்டு சாயம் பூசி இரவு நேரத்தில் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாய் திரியும் அதே நேரத்தில் தாய், தந்தை, மாமன், மச்சான் சகோதரனுடனும் பக்கத்து தெருவுக்கு போய் வரவும் அனுமதி கேட்டு நிற்கும் கொடுமையும் நடக்குது. தேவதாசி முறை, பிற்போக்கான எண்ணங்கள், பெண்களை உடல்ரீதியா பார்த்தலை தவிர்த்து இந்தியாவில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை குறைவுதான். நதி, ஊர், மலை என எல்லாத்துக்கும் பெண் பெயர் வைத்து வணங்கும் அதேவேளையில் அதே பெண்ணை தவறாய் பார்க்கும் போக்கும் நம் நாட்டில் உண்டு.
குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்வதில் ஆண்களுக்கும், குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வதில் பெண்ணுக்கும் சற்று அதிகமான கடமை இருப்பது உண்மை. சம உரிமை பேசும் மேற்கத்திய நாடுகளில் பெண் எழுச்சி ஏற்பட்டதன் விளைவு கருப்பைச் சுதந்திரம் அதிகமாகி இல்லறம் என்ற முறை தகர்க்கப்படுகிறது. எல்லாத்தையும் மேற்கத்திய நாடுகளை பார்த்து காப்பியடிக்கும் நாம இதையும் காப்பி அடிக்க ஆரம்பிச்சிருக்கோம்.
குட்டைப்பாவாடை அணிந்து ஆணை எதிர்த்து பேசி, வீட்டுக்கு அடங்காம தன் இஷ்டத்துக்கு ஊர் சுத்த இந்த சுதந்திரம் பெறலை. தன் நிலை உணர்ந்து, பொறுப்போடு நடந்துக்கனும். அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி அடக்க வேண்டிய இடத்தில் அடக்கனும். இன்னிக்கு என்னதான் பெண்கள் முன்னேறிட்டாங்கன்னு சந்தோசப்பட்டாலும் இன்னிக்கும் பெண்குழந்தைகளை கருவிலோ சிசுவிலோ கொல்லும் பழக்கம் இருக்கு
பெண்களுக்கான கல்வியறிவு மற்றும் பொருளாதார சுதந்திரம் இந்த நூற்றாண்டில் பலதுறைகளிலும் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கு. தான் மட்டும் தன்னிறவு அடைஞ்சிட்டா போதாது. இன்றைய மகளிர் தினம் பெண்களுக்கான பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வெற்றிகளை அனைவரும் பெற போராடனும். வரும் ஆண்டுகளில் முழுமையாக பெற்றுத்தர வித்திடட்டும்.
பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!
நட்புடன்,
ராஜி
சிறப்பான பதிவு ராஜி க்கா...
ReplyDeleteஉரிமையை எங்கும் விட்டு கொடுக்க வேண்டியது இல்லை...அதற்கு முன் கடமையை சரிவர செய்யவேண்டும்...
உரிமை என்னும் பெயரில் நடக்கும் கலாச்சார சீரழிவு தான் ...மனதை வருத்துகிறது....
இதுவும் மாறும் என நம்புவோம்...
எனக்கென்னமோ இந்த மகளிர் தின கொண்டாட்டம் இந்தியாவுக்கு தேவை இல்லன்னு நினைக்குறேன். பொதுவெளியில் அவள் போற்றுதலுக்குரியவளாதான் இருக்கா, ஆனா, வீட்டுக்குள்தான் அவள் இம்சிக்கப்படுறா.
Deleteஆண்டவனே தாயாய்க் காட்சிதருகிறான் என்றாலும் கூட பெண்கள் தங்கள் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்களோ என்னும் சந்தேகம் எழுகிறது என்பதிவு திருமணஙள் லாட்டரியா பார்க்கவும்
ReplyDeleteநீங்க சொல்லுறதும் ஓரளவுக்கு உண்மைதான். நிறைய பெண்கள் தங்கள் சுதந்தரத்தை தப்பாதான் பயன்படுத்துறாங்க
Delete