Wednesday, March 07, 2018

ஏழு உலக அதிசயங்கள் தெரியும்... வேலூரின் ஏழு அதிசயங்களை தெரியுமா?! - மௌனச்சாட்சிகள்


நீண்டு நெடிதுயர்ந்த முழுக்க முழுக்க கருங்கற்களால் ஆன மதில்சுவர்கள். அம்ம்மாடி என மலைக்க வைக்கும் சுற்றளவு. கோட்டைக்குள் கோட்டை மாதிரி மூன்று கொத்தளங்கள், எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா.. இவன் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லவன்ன்னு வடிவேலு காமெடிக்கு தகுந்த மாதிரி பல போர்களை பார்த்து, சமாளிச்சு சளைச்சு போனாலும் புத்தம் புதுசாய் கலைப்பொக்கிஷமாய் இருக்கு வேலூர் கோட்டை.

திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி என்ற சகோதரர்களால் 15ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது இந்த கோட்டை. தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த போர் அரண்களுடன் கட்டப்பட்ட கோட்டை இது. அகழியுடன் கூடிய ஒரே கோட்டை இதுதான். விஜயநகரப் பேரரசின் வேலூர் மண்டலப் பகுதிகளுக்கான பாதுகாப்பு அரணாக  இது வேலூரில் கட்டப்பட்டது. அது மட்டுமல்ல. ராட்சசி - தங்கடிப் போரில் அதாவது தலைக்கோட்டைப் போரில் விஜயநகரம் வீழ்ந்த பின் அப்பேரரசின் அரசர்கள் முறையே தங்கள் தலைநகர்களை பெனுகொண்டா, சந்திரகிரி மற்றும் வேலூரில் அமைத்துக் கொண்டனர். 

இக்கோட்டை சுமார் நூறாண்டு காலம், பேரரசின் இறுதி அரசரான மூன்றாம் அரங்கனின் காலம் வரை தலைநகரக் கோட்டையாக இருந்தது. சுற்றிலும் பாதுகாப்பு அரணாக சுமார் 64 அடி ஆழம் கொண்ட அகழியும், மரப்பாலமும் உயிரைக் கொல்லும் முதலைகளும் கொண்டு விளங்கியது இக்கோட்டை. ஆனால் பற்பல போர்களைக் கண்ட கோட்டையின் அகழி தற்போது ஒரு புறத்தில் தூர்ந்து விட்டது. ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் நிரம்பி உள்ளது. அதுலயும் குப்பை கூளம்ன்னு மனசு வருந்தத்தக்கதா இருக்கு. இப்ப கொஞ்சம் பரவாயில்ல. கொஞ்சம் சுத்தம் செஞ்சு படகு சவாரிக்குண்டான ஏற்பாடுலாம் செஞ்சிருக்காங்க. 
நம்ம ஊரில் கோவில், குளம்ன்னு எல்லாத்துக்கும் பேர் உண்டு, ஆனா, கோட்டைகளுக்குன்னு தனியா பேர் இல்ல. மலையில் இருந்தா மலைக்கோட்டை. புதுசா கட்டி இருந்தா அது புதுக்கோட்டை. இதுமாதிரி அந்தந்த ஊர் பேர் சேர்த்துதான் அந்த கோட்டையை அடையாளப்படுத்துவாங்க. ஆனா, இந்த கோட்டைக்கு பேர் இருக்கு. இந்த கோட்டையோட பேரு   மீசுரகண்டக் கொத்தளம்.  இதை நான் சொல்லலீங்கோ. கோட்டையின் மேற்குப்பகுதியில் நீருக்கடியில் தமிழிலும், கன்னடத்திலும் பொறிக்கப்பட்டிருக்கு. இதை எல்லா நேரத்திலும்  பார்க்க முடியாது. கோடைகாலத்தில் நீர் வத்தி போய் இருக்கும்போதுதான் பார்க்க முடியும்.  விஸ்வகர்மாவின் இலக்கியங்களின்படி, 12 வெவ்வேறு கோட்டைகளில், வேலூர் கோட்டை 'எகாமுக துர்க்கம்' என அழைக்கப்படுது. அதாவது கோட்டையானது எல்லா பக்கங்களிலும் நீரில் சூழப்பட்டு ஒரே ஒரு வழியாக மட்டுமே அணுக முடியும் என்ற அடிப்படையில் கட்டப்பட்டதுன்னு இதுக்கு அர்த்தம். 
எதிரிகளிடமிருந்து பாதுகாக்க கோட்டையை சுத்தி அகழி ஒன்னு இருக்கு, இதுல அந்த காலத்துல கிட்டத்தட்ட 10000 முதலைகளை விட்டிருந்தாங்களாம்.  கோட்டைக்குள் நுழைய கோட்டையின் கிழக்கு பக்கம் ஒரு சிறு நுழைவு வாயில் இருக்கு. அதுக்குள் போக ஒரு மரப்பாலம் இருந்தது. அது வழியாதான் எல்லாரும் போகனும் வரனும். இப்ப அந்த மரப்பாலம் தூர்ந்து போனதால தார்சாலை போட்டு பயன்பாட்டுக்கு இருக்கு. 

கோட்டையின் முதல் சுவர் அழகிய கருங்கல் வேலைப்பாடுகள் மற்றும் சிற்பங்களுடன் அம்பெய்யும் மாடம் கூர்மையான தாமரைப்பூ வடிவம் கொண்ட கொத்தளங்களுடன் அமையப்பட்டுள்ளது.  அதன் உட்சுவர் தஞ்சைப் பெரிய கோவிலின் மதில் பாணியில் அமைந்துள்ளது. முதல் சுவருக்கு உட்பகுதியில் யானை அல்லது ஒரு  தேர் செல்லக்கூடிய அளவில் சுமார் 12 அடி அகலம் கொண்ட உயர்ந்த மண் பாதை போன்ற சுவர் அமைந்துள்ளது.


உலகின் அதிசயங்கள் ஏழினை தெரியும். அதேமாதிரி வேலூருக்கென ஏழு அதிசயங்கள் உண்டு. அது என்னன்னா, 1.நீரில்லாத ஆறு (பரந்து விரிந்த பாலாற்றின் கதை ஊருக்கே தெரியும்) 

2. மரமில்லாத மலை,(இந்த ஊரின் மையத்தில் இருக்கும் மலையில் மரங்களே கிடையாது. புதர்களும் செடி, நாணல்கள்தான் மண்டி இருக்கும்.)

3. அதிகாரமில்லாத காவலர்(இங்கு காவலர் பயிற்சி பள்ளி இருக்கு.),
4.அழகில்லாத பெண்கள்(வெயில் அதிகம்ங்குறதால் பெண்களிடம் கொஞ்சம் வறட்சி காணப்படும்),

5. சுவாமியில்லாத கோயில் (எதிரிகளின் படையெடுப்பால் கோட்டைக்குள்ளிருக்கும் லிங்கத்திருமேனியை காப்பாத்த வேற இடத்தில் கொண்டு போய் வச்சுட்டாங்க. அந்த காலக்கட்டத்தில் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் கடவுள் திருமேனி இல்ல)

6. பணமில்லாத கஜானா(அடிக்கடி படையெடுப்பு நடக்கும் இடம்ங்குறதால அரசாங்க கஜானா இங்க வச்சிருக்க மாட்டாங்க. அதும் வேற இடத்துலதான் இருக்கு,

7. அரசனில்லாத கோட்டை (எதிரிகளிடமிருந்து அரச குடும்பத்தை காப்பாத்த அரச வாரிசுகளை இங்கிருந்து கொண்டு போய் மறைச்சு வைப்பாங்க.  )
இக்கோட்டைக்குள்  14ம்  நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேசுவரர் அல்லது ஜக்ஷரகரேசுவரர் கோவில் இருக்கு. இக்கோவில் பத்தி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.. இந்து அரசர்களின் ஆட்சி முடிந்து இசுலாமிய நவாபுகளின் ஆட்சி தொடங்கிய பின்பு 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியும் இருக்கு. பின் வெள்ளையர்களின் ஆட்சியில் 1806-ல் கட்டப்பட்ட கிறிஸ்த்தவ தேவாலயமும் இருக்கு. அதனாலதான், இந்த கோட்டை மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டா இன்னிக்கும் விளங்குது.  சில அரசியல் காரணங்களுக்காக மசூதியில் தொழுகை செய்வது நிறுத்தி வச்சிருக்காங்க.  தொழுகை நடக்க அனுமதிக்கனும் அப்பப்போ முஸ்லீம் சகோதரர்கள் போராட்டம் செஞ்சுக்கிட்டுதான் இருக்காங்க.  பொதுமக்கள் மசூதியை சென்று பார்க்கவும் அனுமதி இல்ல. 

இக்கோட்டைக்குள்  கோவில் மசூதி மட்டுமில்லாம  திப்பு மகால், ஐதர் மகால் என்றழைக்கப்படும் அரண்மனைகளும், பாத்தி மகால், பேகம் மகால்ன்னு சொல்லப்படும் திருமலை நாயக்கர் அரண்மனை மாதிரி பெரிய பெரிய தூண்களைக் கொண்ட இரு அரசவை மண்டபங்களும் இங்க இருக்கு. ஆனா, கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைங்குற பழமொழிக்கேற்ப பண்டைய மன்னர் ஆட்சியின் சுவடுகள் ஏதும் தெரியா வண்ணம் இந்த மகால்களின் அனைத்துப் பகுதிகளும் அரசு அலுவலகங்களா மாற்றப்பட்டிருக்கு. கோவிலுக்குரிய தெப்பக்குளம் காவலர் பயிற்சிப் பள்ளியின் மைதானமாக மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாம, பள்ளிக்கல்வித்துறை, அரசு வருவாய்துறை, சத்துணவு துறை, தொல்பொருள் அருங்காட்சியகம், மத்தியத் தொல்பொருள் துறையின் அருங்காட்சியகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் ஒருபிரிவுன்னு உட்பட   பல்துறை அரசு அலுவலகங்கள் இங்கு இயங்கி வருது. 

ஆற்காடு மற்றும் இன்றைய ஆந்திர மாவட்டமான சித்தூர் பகுதிகளில் உள்ள குவாரிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களால் கட்டப்பட்டது. இக்கோட்டை 133 ஏக்கர் (0.54 கிமீ 2) பரப்பளவில் பரவியுள்ளது. இந்த கோட்டை கடல் மட்டத்திலிருந்து 220 மீ (720 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. கோட்டை சூழப்பட்டால், அது ஒரு படையெடுப்பு வழக்கில் ஒரு முறை கூடுதல் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டது. போர்க்க்காலத்தில் உபயோகப்படுத்தவென 12 கிமீ தூரத்திற்கு சுரங்கபாதையும் இருக்கு.  



வேலூர் வெயிலுக்கு மட்டுமில்ல வீரத்துக்கும் பேர் போனது... ஆங்கிலேயருக்கு எதிரான சிப்பாய் கலகம் தோன்றிய இடம் இதுதான். அது என்ன கதை?!ன்னும் கோட்டையை பத்திய இன்னும் அதிக விவரங்களை அடுத்த வார மௌனச்சாட்சிகளில் பார்க்கலாம்.....

நன்றியுடன்,
ராஜி

13 comments:

  1. விரிவான, வியப்பான விடயங்கள் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இது சும்மா சாம்பிள்தான்ண்ணா. விரிவான பதிவு இன்னும் வரும்...

      Delete
    2. அய்யா. வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர் சின்னபொம்ம நாயக்கரால் கட்டப்பட்டது. திம்மி ரெட்டி பொம்மி ரெட்டி ஆகியோர் கோவிலில் திருப்பணி செய்தவர்கள். தவறான பதிவை நீக்குமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி.

      Delete
  2. ஒரு முறை வேலூர் மருத்துவ மனைக்குச் சென்ற போதுஇக்கோட்டைக்குச் சென்றிருக்கிறேன்கோட்டைக்குள் இருக்கும் கோவிலுக்கும் சென்ற நினைவு உங்களுக்குத் தெரியுமா நம்முர் தமிழரில் பட்டாளத்தில் அதிகம் பேர் இருப்பது வேலூரிலிருந்துதான்

    ReplyDelete
    Replies
    1. தெரியும்பா. வேலூர் மாவட்டம் முழுக்கவே ராணுவத்தில் வேலை செய்யுறவங்க அதிகம்,. அதிலும் கண்ணமங்கலம் பகுதியில் அதிகம் இருக்காங்க. அங்க ராணுவப்பேட்டைன்னு ஒரு ஊரே இருக்கு. அங்க வீட்டுக்கு ஒருத்தர் ராணுவத்தில் இருக்காங்க. அந்த ஊருக்கு நான் போய் இருக்கேன்.

      Delete
  3. பேர் சொல்லும் பதிவு..........இப்பொழுது எல்லா நாடுகளிலும் கோட்டை யை அருங் காட்சியகமாக மாற்றி,பழமையைப் பேணி காசு பார்க்கிறார்கள்...... நாம் என்னவென்றால் அரசு அலுவகங்களை அமைத்து பாழடிக்கிறோம்.......

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணா. எனக்கு வேலூர் ரொம்ப பிடிக்கும். எத்தனை மனக்கஷ்டம்ன்னாலும் இந்த கோட்டையில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு போய் வந்தால் மனசு அமைதியாகும். சிறு குழந்தையின் குதூகலத்தோடு போய் வருவேன். எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு தட்டாது.

      Delete
  4. வேலூரைத் தாண்டிச் செல்லும்போதெல்லாம் இந்தக் கோட்டையைப் பார்த்திருக்கிறேன். பார்க்கவேண்டும் என்று எனக்கும் தோன்றும். சுவாரஸ்யமான விவரங்கள், சுவாரஸ்யமான படங்கள்... ரொம்பவே இடைவெளி விட்டுட்டீங்க... தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனி இடைவெளி விழாது சகோ. 133 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த கோட்டை. சுத்தி பார்க்க நேரமெடுக்கும். அதனால், ஒருநாள் செலவிடுற மாதிரி வாங்க.

      Delete
  5. தொல்லியல் துறை இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து இவற்றைப் பாதுகாக்கலாம். அரசு அலுவலகங்கள் அங்கு அமைந்திருப்பது துரதிருஷ்டம். சுவரெல்லாம் வெற்றிலை புகையிலைச் சாறாய் ஆக்கி வைத்திருப்பார்களே... அகழியில் நீர் நிறையும்படி செய்தால் ஊரின் நிலத்தடி நீர் மட்டம் உயருமே...

    இன்றைய எங்கள் பதிவிலும் வேலூர் பற்றிய செய்தி ஒன்று உண்டு.​

    ReplyDelete
    Replies
    1. நிலத்தடி நீர் உயரனும்ன்னுதான் சாக்கடை தண்ணிலாம் அகழில சேர்க்குறாங்க. இப்பலாம் எம்புட்டோ பரவாயில்லை சகோ. ஒரு அஞ்சாறு வருசத்துக்கு முந்திலாம் இந்த அகழி பக்கத்துல போனாலும் நாறும். அரசாங்கத்துக்கு அக்கறை இல்ல., நமக்கு பொறுப்பில்லை.

      இக்கோட்டை எத்தனை சிறந்த கலைப்பொக்கிசம் தெரியுமா சகோ?! பார்க்க பார்க்க சலிக்காது. ஒவ்வொரு முறையும் புதுப்புது கலை நுணுக்கம் கண்ணுக்கு தெரியும். மிஸ் பண்ணாம அவசியம் பாருங்க.

      உங்க பதிவுக்கு இந்தா வரேன்

      Delete
  6. வேலூருக்கு வந்திருந்தும் இக்கோட்டையை பார்த்தது இல்லை! அடுத்த முறை வருகையில் கட்டாயம் பார்த்து விட்டுத்தான் மறு வேலை! சுவாரஸ்யமாக விவரித்த விதம் அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பொறுமையா நிதானமா நின்னு ரசிச்சு பாருங்க சகோ. ஆன்மீகம், கலை, வீரம்ன்னு அத்தனையும் ஒருங்கே அமையப்பட்ட இடம்.

      Delete