Friday, March 02, 2018

கண் திருஷ்டி நீங்க வழிப்பட வேண்டிய கோவில் - திருவலஞ்சுழிகல்லடி பட்டாலும் கண்ணடிப்படக்கூடாதுன்னு சொல்வாங்க. எப்பேற்பட்ட ராஜ்ஜியமும் கண்ணடிப்பட்டா சரிஞ்சு போகும்ன்னு பெரியவங்க சொல்வாங்க. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறுன்னும் சொல்வாங்க. நம்மை பார்த்து பொறாமைப்படும் ஒருவர் அதிக வயித்தெரிச்சலுடன் பார்க்கும்போது கண் திருஷ்டி வருவதாக சொல்லப்படுகிறது. இப்படி பொல்லாத கண் திருஷ்டி போக வழிப்பட வேண்டிய கோவில், தஞ்சை மாவட்டம் சுவாமிமலைக்கு அருகில் இருக்கும் திருவலஞ்சுழி, ஸ்ரீபரஹந்தநாயகி சமேத ஸ்ரீகபர்தீஸ்வரர்  கோவில் உடனுறை வெள்ளை வினாயகர் கோவில் ஆகும்.  அக்காலத்தில் மன்னர், அமைச்சர்ன்னு படா படா ஆளுங்கலாம் வழிப்பட்டதால் இக்கோவிலுக்கு கோட்டை கோவில்ன்னு இன்னொரு பேரும் உண்டு. 

திருவலஞ்சுழின்னு சொன்னதும் நம்ம நினைவுக்கு வருவது வெள்ளை வினாயகர் ஆகும்.  ஆனா, இக்கோவில் பெரியநாயகி உடனுறை ஜடாமுடிநாதர் என்னும் கபர்தீஸ்வரர் ஆலயமாகும். கூட்டம் அதிகமில்லாத பரப்பரப்பு இல்லாத சுத்தமான   பிரம்மாண்டமான கோவில் இது.  கோவிலில் நுழைந்து கொடிமரத்தை தாண்டியதுமே வெள்ளை விநாயகர், கோட்டை விநாயகர்ன்னு சொல்லப்படும் ஸ்வேத வினாயகர் சன்னிதி

திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும்முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையால், ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது. பல்வேறு அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து...,  பொங்கி வந்த கடல்நுரையைப் பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன் பின்னரே அமுதம் பெற்றதாக புராணங்கள் சொல்லுது. தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். 
இங்குள்ள வினாயக உற்சவ மூர்த்தமானது ஸ்ரீவாணி, கமலாம்பிகா சமேதராய் அருள்பாளிக்கிறார்.  இந்திரனும் விஷ்ணுவும் வணங்கும்வண்ணம் எழுந்தருளியிருக்கிறார். புராண காலத்துக்கு அப்பாற்பட்டவர். மகாபாரதம் எழுதும்பொருட்டு எழுத்தாணி வேண்டியும், கஜமுகாசூரனை அழித்திடும்பொருட்டும் ஆயுதம் வேண்டியும் தன் ஒரு பக்கத்து தந்தந்தை உடைத்திடும்முன் உருவானவர் என்பதால், இவருக்கு இரண்டு தந்தங்களும் உண்டு. 

ஆலயத்தின் முகப்பில் திருஞானசம்பந்தரால் போற்றி வணங்கப்பட்ட கம்பீரமான ஓங்கி உயர்ந்த ஐந்து நிலை கோபுரம். அதனையடுத்து, உட்புறத்தின் வடக்கே ஜடாபுஷ்க்கரணின்ற புண்ணிய தீர்த்தமும், தீர்த்தக்கரையில் திருக்குள வினாயகர் கோவிலும் இருக்கு. 


அபராத மண்டபத்தை அடுத்து காயத்திரி மண்டபம் இருக்கு. வேத மந்திரங்களிலேயே சிறந்ததான காயத்ரி மந்திரத்தின் 24 அட்சர எழுத்துக்கள்  இங்கு தூண்களாய் எழுந்துள்ளதால் இம்மண்டபத்துக்கு இப்பேர் உண்டாச்சு. இந்த காயத்ரி மண்டபத்தின் முன்பு செய்யப்படும் ஜபங்கள் அதீத பலன் தரும்ன்னு சாஸ்திரங்கள் சொல்லுது. மண்டபத்தில் உள்ள ஆறு கருங்கல் குத்து விளக்குகளையும் ஏற்றி வழிப்பட்டால் அனைத்து செல்வங்களும் நம் வாழ்வில் கிட்டும் எனவும் சொல்லப்படுகின்றது.

ஆகமவிதிப்படி ஒவ்வொரு கோவில் அமைப்புக்கும் ஒவ்வொரு வடிவம் உண்டு. அதன்படி இங்கிருக்கும் வினாயகர் கோவில் இந்திர ரத வடிவத்தில் அமைந்துள்ளது.  இக்கோவிலின் தென்புறத்தில் ரத சக்கரம், அச்சு, கடையாணி மற்றும் குதிரைகள் பூட்டிய வண்ணம் நேர்த்தியாக காட்சியளிக்கிறது. 

இப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் ஒருவன்  ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்தான். பிரதான மூர்த்தியாக விளங்கும் ஸ்வேத விநாயகருக்கு ஆடை, ஆபரண, புஷ்ப, திலகங்கள் இல்லாததை பார்த்து, இதுப் போன்று சிலா ரூபங்கள் இருப்பது முரண்பாடாயிற்றே என எண்ணி விளக்கம் கேட்டான். அதற்கு அங்கிருந்தோர், இந்த விநாயகர், தேவலோகத்தில் இருந்து இத்தல விநாயகர், கடல் நுரை கொண்டு தேவாதி தேவர்களால் சிருஷ்டிக்கப்பட்டு, இந்திரனால் இங்கு கொண்டுவரப்பட்டு, ஈசனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். கடல் நுரையாலானதால் இவருக்கு பச்சை கற்பூரம் மட்டுமே சார்த்தப்படும். . வேறு எந்த அலங்காரமோ, அபிஷேகமோ இல்லை எனக் கூறினார்.  அதனை  சற்றும் மதியாத மன்னன், அபிஷேக அலங்காரங்களை செய்திடுமாறு கட்டளையிட்டான். அனைவரும் திகைத்தனர். அச்சமயம், அங்கிருந்த மன்னனின் கண்கள் இரண்டும் பார்வை இழந்தன. பின்னர் வருத்தமுற்று விநாயகரை வேண்டிக்கொள்ள பார்வையை திரும்பப் பெற்றான். தான் செய்த தவறினை வரும் காலத்தில் யாரும் செய்துவிடக்கூடாது என, அதன் நினைவாக, ஞாபகச் சின்னமாக கருங்கற்களிலான மண்டபம் ஒன்றை கட்டினான். இதுவே  இப்ப அபராத மண்டபமா இருக்குன்னு ஒரு செவி வழிச் செய்தியும் உண்டு. 

ஸ்வேத விநாயகர் சந்நிதியின் முன் உள்ள சிற்பக்கலைத் திறன் கொண்ட கருங்கல் பலகணி.  இந்தச் சன்னல் போன்ற அமைப்பு மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கியதாக உள்ளது.  இது 4 தூண்களும், 111 கண்களும், 49 மலர்களும், 24 கர்ண துவாரங்களும், 10 யாளிகளையும் கொண்டது. மூன்று பாகங்களாக குறுக்கு வாட்டில் ஒன்றன் மீது ஒன்றாக மூன்று கற்களினால் அமைக்கப்பட்டுள்ளது.  இது 9 அடி உயரமும், 7 அடி அகலமும் கொண்டது, நெடுக்கவாட்டு கற்கள் மும்மூர்த்திகளையும், 4 தூண்கள் நான்கு யுகங்களையும், 24 கர்ண துவாரங்கள் அஷ்ட மூர்த்திகள், அஷ்ட ஐஸ்வர்ய சித்திகள் மற்றும் எட்டு வசுக்களையும், 111 கண்கள் மந்திரங்களையும், 10யாளிகள், எட்டு திசைகளுடன் ஆகாயம், பாதளம் என 10 திக்கு நாயகர்களையும், 49 மலர்கள் ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எனவும் சொல்லப்படுது. அதனால், இந்த பலகணி வழியாக இறைவனை வணங்குவது  மும்மூர்த்தி உட்பட சகல மூர்த்திகளையும் ஒரே நேரத்தில் வழிப்பட்ட பலனையும் தரும்.

கூகுள்ல சுட்டது
ஸ்வேத வினாயகரை  தரிசனம் செய்துட்டு,  தனிக்கோவிலில் இருந்து அருள் புரியும் பெரிய நாயகியையும் வணங்குகிறோம். அம்மன் சந்நிதிக்கருகில் அஷ்ட புஜ துர்கைக்கென்று தனி சந்நிதி.   ராஜராஜசோழன் வணங்கிய 'நிசும்ப சூதனி' அன்னை இவங்கதான்னும், ஒவ்வொரு முறை போருக்குச் செல்லும் முன்னும்  இவளை வணங்கிச் சென்றதால்தான் போர்களில் வெற்றி பெற்றான் என்றும் அருகில் வைத்திருக்கும் அறிவிப்பு பலகை சொல்லுது.  


ஆனா, நிசும்பசூதனி கோவில் தஞ்சாவூரில்தான் இருக்கிறது என்றும் இங்கிருப்பவள் அஷ்டபுஜ துர்கை எனவும், இவளைதான் ராஜராஜசோழன் வணங்கினான் என்பதற்கு ஆதாரம் இல்லையென்றும் எழுத்தாளர்  பாலகுமாரன் சொல்றார். எப்படி இருந்தாலும் கண்களில் கருணை வழியும் இவளை யாராய் இருந்தாலும் வணங்கலாம் வாங்க!
ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமில்லை. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கும் இக்கோவில் ஒரு பொக்கிஷம். மார்க்கேண்டயனுக்கு போட்டி போடும் விதமாக லிங்கத்திருமேனியை அணைத்தபடி இருக்கும் உமாமகேஸ்வரி சிலாரூபம் சில அங்குல அடி உயரமே! மூர்த்தம் சிறிதானாலும் அழகு அளவில்லாதது. அதேமாதிரி, இக்கோவிலில் இருக்கும் பாவை விளக்கொன்றின் அழகும் பாராட்ட வார்த்தை இல்லை.   கையிலிருக்கும் விளக்கின் ஒளி, பாவையின் முகத்தில் பட்டு அவள் முகம் பளப்பளப்பது வரை நேர்த்தியாய் செதுக்கி இருப்பாங்க.  சுவாமிமலையிலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் பாதையில் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது இத்திருத்தலம். காடு, மலை, ஊர்ன்னு எங்கும் நில்லாது தான் சென்ற இடமெல்லாம் செல்வம் கொழிக்கச் செய்த காவிரித்தாய் திருவலஞ்சுழி வந்ததும், இறைவனை வலமாய் சுற்றி, மேற்கொண்டு செல்லாமல் ஆதிசேஷன் வெளிப்பட்ட பாதாளம் ஒன்றினுள் புகுந்துக் கொண்டாள். இதையறிந்த அந்நாட்டு மன்னனான கனக மன்னன் திகைத்து,  இத்தலத்து இறவனை வேண்டி நிற்க.., நீயோ, உன் மனைவியோ இப்பள்ளத்தில் புந்தாலோ அல்லது முற்றும் துறந்த முனிவரொருவர் அப்பாதாளத்துள் புகுந்தால்  மீண்டும் காவிரி அன்னை வெளிவருவாள் என அசிரீரி மூலமாய் இறைவன் தெரிவித்தார்.

நாட்டு  மக்களுக்காக, கனக மன்னனும் அவன் மனைவி செண்பகாங்கியும் இப்பள்ளத்தில் புகுந்து உயிர் தியாகம் செய்ய முயன்றதைக் கண்டு  ஏரண்ட முனிவர் தம்மையே தியாகம் செய்து பாதாளத்தினுள் பாய்ந்து காவிரியை வெளி வரச் செய்தார். ஏரண்ட முனிவர் வேண்டுகோளின்படி இரண்டு லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்த கனகசோழன் 70 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்து தன் மகன் சுந்தர சோழனுக்குப் பட்டாபிஷேகம் செய்தபின் சிவபதம் அடைந்தார்.  

சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும் இத்தலம் விளங்குது.   கோவில் கோபுர சிற்பத்துலயே  இடதுப்புறம் விஷ்ணுவும், வலப்புறம் சங்கரனும் சேர்ந்து சங்கரநாராயணனாகிய நமக்கு அருளும் காட்சியே இதற்குச் சான்று.  தமிழக அரசின் மதிய உணவு திட்டத்துக்கான காய்கறிகள் மற்றும் வாழை இலைகளை இக்கோவில் வளாகத்தில் உள்ளயே பயிரிடப்படுவது மற்றொரு சிறப்பு.   இத்தலத்து ஸ்வேத பெருமாளை வழிப்பட்டப் பின்னரே சுவாமிமலை முருகனை தரிசிக்கனுமாம். ஸ்வேத வினாயகர் என்ற பேருக்கு வெள்ளை வாரணப் பிள்ளையார்ன்னு அர்த்தமாம்.  இது ஒரு பரிகார தலம். திருமணத்தடை நீக்கும் தலமாவும் இருக்கு. 

வேழமுகத்தோனை வணங்குவோம்! 

நன்றியுடன்,
ராஜி.  

10 comments:

 1. அருமையான படங்களுடன் கூடிய விளக்கம். நன்றி பதிவுக்கு,தங்கச்சி!!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 3. இப்பகுதியில் பார்க்கவேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று. கூடுதல் செய்திகள் தகவலுக்காக : 1) இக்கோயிலின் அம்மன் சன்னதி திருச்சுற்றில் விதானத்தில் அழகான ஓவியங்கள் காணப்படுகின்றன. 2) கோயிலின் உள்ளே நுழையும்போது கோயிலின் வலது புறம் பைரவர் சன்னதி உள்ளது. 3) பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கிடைக்கப்பட்ட நின்ற நிலையிலான புத்தர் சிலை இங்கு சில நாள்கள் வைக்கப்பட்டு, பின்னர் சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆகஸ்டு 2015இல் இக்கோயிலைப் பற்றி என் தளத்தில் எழுதியுள்ளேன். (http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post.html)

  ReplyDelete
  Replies
  1. இதோ வந்து படிக்குறேன்ப்பா.

   Delete
 4. இந்தக் கோவில் பற்றி திரு பாலகுமாரன் எழுதிய கட்டுரை ஒன்றில் படித்திருக்கிறேன். மேலும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவின் பதிவும் அவரே குறிப்பிட்டு இருக்கிறார்.

  முடிந்தால் சென்று பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அவசியம் சென்று பாருங்கண்ணா. பெரிய கோவில். ஆனா, கூட்டம், பரப்பரப்பு இல்லாம அமைதியா அழகா இருக்கு. கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு இக்கோவில்ண்ணே.

   Delete