Showing posts with label சட்னி. Show all posts
Showing posts with label சட்னி. Show all posts

Tuesday, June 26, 2018

ரெண்டே நிமிசத்துல தயாராகும் சட்னி - கிச்சன் கார்னர்

ஒருத்தருக்கு இட்லி, இன்னொருத்தருக்கு தோசை, அப்பாக்கு சப்பாத்தி, அம்மாக்கு கிச்சடின்னு வெரைட்டியா செய்யுறதுகூட ஈசி. ஆனா அதுக்கு தொட்டுக்க சட்னி, சாம்பார் என்ன செய்யலாம்ன்றதுதான் கஷ்டம். தலைய பிச்சுக்க வைக்கும் வேலையும்கூட.... காலை நேரத்துல, குறைஞ்ச பொருட்களை கொண்டு ஈசியா தயார் செய்யுற மாதிரி சில சட்னி வகைகளை இன்னிக்கு பார்க்கலாம்.

மிளகு, தக்காளி சட்னி...
பழுத்த தக்காளி
மிளகு
மிளகாய்
வெந்தயம் 
உப்பு
நல்ல எண்ணெய்
உப்பு
கடுகு
கறிவேப்பிலை



வாணலில எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்   மிளகு, வெந்தயம், மிளகாய் போட்டு சிவக்க விடனும். வெந்தயம் சும்மா பத்து போட்டால் போதும். அதிகமா போட்டா சட்னி கசந்திடும். 
வெட்டி வச்சிருக்கும் தக்காளி சேர்க்கனும்.

 உப்பு சேர்த்து நல்லா வதக்கனும்.  தக்காளி வெந்ததும், அடுப்பை அணைச்சு, தக்காளி ஆறினதும் மிக்சில நைசா அரைச்சுக்கனும்.
தாளிக்குற கரண்டில நல்ல எண்ணெய் ஊத்தி கடுகு போட்டு பொறிஞ்சதும் கறிவேப்பிலை போட்டு தாளிச்சு சட்னில கொட்டிக்கனும். காரசாரமா வித்தியாசமான மணத்துல இருக்கும் இந்த சட்னி.  வெந்தயம், நல்ல எண்ணெய்லாம் சேர்க்குறதால உடலுக்கும் குளிர்ச்சி. சட்னி காரசாரமா இருந்தாலும் மிளகு சேர்த்திருப்பதால் வயித்துக்கும் கெடுதல் இல்ல.

வேர்க்கடலை சட்னி...
வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை..
பூண்டு  சில பல்
புளி கொஞ்சூண்டு
உப்பு
காய்ந்த மிளகாய்
உப்பு
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை.

 மிக்சில  மிளகாய், புளி, பூண்டுலாம் சேர்த்து லேசா அரைச்சப்பின், அதோடு  வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையும், உப்பும், தண்ணியும் சேர்த்து கரகரப்பா அரைச்சுக்கனும்.  முதல்லியே லேசா தண்ணி ஊத்தி சட்னி அரைச்சுக்கோங்க. இல்லன்னா, பிசுபிசுன்னு மிக்சில சட்னி ஒட்டிக்கும். 
கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிச்சுக்கனும். வேர்கடலை சட்னி கெட்டியா இல்லாம தண்ணியா இருந்தால்தான் இட்லி, தோசைக்கு சேர்த்தால் நல்லா இருக்கும். வேர்க்கடலை சட்னில லேசா புளி சேர்த்துக்குறதால, வேர்க்கடலைல இருக்கும் மூக்கால உண்டாகும் பித்தத்தை தவிர்க்கலாம்.

வெங்காயம், பொட்டுக்கடலை சட்னி...
தேங்காய்
பெரிய வெங்காயம்
தக்காளி
காய்ந்த மிளகாய்
பொட்டுக்கடலை
பூண்டு
புளி
உப்பு
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை


தேங்காய், வெங்காயம், மிளகாய், பூண்டு, புளிலாம் சேர்த்து மிக்சில அரைக்கனும். கொஞ்சம் மசிஞ்சதும், தக்காளி, உப்பு சேர்த்து கரகரப்பா அரைச்சுக்கனும். 
தேங்காயும் வெங்காயமும் சரிசமமா இருக்கனும். பொட்டுக்கடலை கொஞ்சமா சேர்த்துக்கிட்டால் போதும். சட்னி கொஞ்சம் கெட்டியா இருந்தால் நல்லா இருக்கும். கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிச்சுக்கனும்.  இது சப்பாத்தி, பொங்கலுக்கும் நல்லா இருக்கும்.

நன்றியுடன்,
ராஜி

Tuesday, February 04, 2014

தக்காளி சட்னி - கிச்சன் கார்னர்

என் பசங்களுக்கு தக்காளிச் சட்னின்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, என் வீட்டுக்காரர் செக்கச்செவேல்ன்னு இருக்குறதால கொஞ்சம் இதுக்கிட்ட இருந்து தள்ளியே இருப்பார். வெளிய எங்காவது பிக்னிக் டூர் போகும்போது இதைத்தான் செஞ்சு எடுத்திக்கிடு போவோம். சாம்பார், குருமாப் போல இது சீக்கிரம் கெட்டுப் போகாது. இட்லி, சப்பாத்தி, சாதம், பொங்கல், பூரின்னு எல்லாத்துக்கும் ஜோடி இந்த சட்னிச் சேரும்.

இப்ப தக்காளி விலை குறைஞ்சிருக்குறதால இனி அடிக்கடி பசங்களுக்கு செஞ்சுகொடுக்கலாம்...,

தேவையானப் பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
நல்லா பழுத்த தக்காளி - 6
ப. மிளகாய் - 1
கறிவேப்பிலை கொத்தமல்லி - கொஞ்சம்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கொஞ்சம்
மிளகாய் தூள்- தேவைக்கேற்ப
மஞ்சப்பொடி - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

வெங்காயம், தக்காளி, ப. மிளகாயை நல்லா கழுவி பொடிப் பொடியா வெட்டிக்கோங்க.
அடுப்பில வாணலி வச்சு எண்ணெய் காய்ஞ்சதும் கடுகுப் போட்டு பொறிய விடுங்க. கடுகு பொறிஞ்சதும் வெங்காயம் போட்டு வதக்குங்க.

வெட்டிய ப.மிளகாயைச் சேர்த்து வதக்குங்க...,

உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதங்குங்க.

அடுத்து வெட்டி வச்ச தக்காளியைச் சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்குங்க.

தக்காளி வெந்ததும் தேவைக்கேற்ப மிளகாய் தூள் சேர்த்துக்கோங்க.


அடுத்து மஞ்சப்பொடி கொஞ்சம் சேர்த்து எண்ணெயில் வதக்குங்க.

தேவையான அளவு தண்ணி, உப்பு சேர்த்து மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்க விடுங்க. தண்ணிலாம் சுண்டி, எண்ணெய் தனியா பிரிஞ்சு வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிடுங்க.

இட்லி, சப்பாத்தி, தோசை, பூரி, பொங்கல், உப்புமான்னு எதுக்கும் ஜோடி சேரும். சாதத்துக்குச் செய்யும்போது துளியூண்டு புளிச் சேர்த்தா போதும். வெளியப் போகும்போது செஞ்சுக் கொண்டுபோறதா இருந்தா உப்பு ஒரு கல்லும், எண்ணெய் ஒரு ஸ்பூனும் அதிகமா சேர்த்துக்கோங்க. சீக்கிரம் கெட்டுப் போகாது.

அடுத்த வாரம் பழையக் காலத்து நொறுக்குத் தீனியான உடலுக்கு வலு சேர்க்கும் கேழ்வரகு அடை செய்யுறது எப்படின்னு பார்க்கலாம். இப்ப..., 

டாட்டா, பை பை, சீ யூ....,

Tuesday, December 03, 2013

கதம்பச் சட்னி - கிச்சன் கார்னர்

ஒரு பொண்ணுக்கு மாமியார், நாத்தனார், சீரியல் பிரச்சனையை விட பெரிய பிரச்சனை, காலை டிஃபனுக்கு சைட் டிஷ் தேடுறதுதான். தேங்காய் சட்னியும், வேர்கடலை சட்னியும் கொலஸ்ட்ரால், சாம்பார் வச்சா எப்பப் பாரு சாம்பாரா!? குருமா வச்சா அது பூரிக்குதான் சரியா இருக்கும்ன்னு எதை செஞ்சாலும் நொள்ளை நொட்டை சொல்லுவாங்க. 

வீட்டுக்காரருக்கு முள்ளங்கி பிடிக்காது, சின்னவளுக்கு கத்திரிக்கா பிடிக்காது. அப்புக்கு கேரட் பிடிக்காது. இந்த காய்கறில இருக்கும் சத்துலாம் எப்படி கிடைக்கும்!? அதனால எல்லா காய்கறியும் போட்டு ஒரு சைட் டிஷ் ரெடி பண்ணிட்டா, எல்லோரையும் எல்லா காய்களையும் சாப்பிட வச்ச மாதிரி ஆச்சுன்னு அம்மா செய்வாங்க.

4 பேர் சாப்பிடும் அளவுக்கு தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
ப.மிளகாய் - 1
பூண்டு - 4 பல்
கத்திரிக்காய் - 1
கேரட் - 1
முள்ளங்கி -1
உருளைக்கிழங்கு - 1
மிளகாய் தூள் - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு -சிறிது
கடலை பருப்பும், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 இணுக்கு.

கத்திரிக்காய் தவிர மத்த காய்கறிலாம் தண்ணில நல்லாக் கழுவிட்டு பொடியா நறுக்கி வச்சுக்கோங்க.  கத்திரிக்காயை பொடியா நறுக்கி தண்ணில போட்டு வைங்க. அப்படி இல்லாட்டி, கத்திரிக்காய் கறுத்து போகும்.

வாணலியை அடுப்புல வச்சு ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய வைங்க.

அடுத்து பச்சை மிளகாயை போட்டுக்கோங்க.


அடுத்து பூண்டு போட்டுக்கோங்க. 

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்குங்க. பொன்னிறமா வதங்கனும்ன்னு அவசியமில்ல. வெங்காய வாசனை போனால் போதும்.

வெங்காய வாசனை போனதும் தக்காளி சேர்த்து லேசா வதக்கிங்கோங்க.

அடுத்து பொடியா வெட்டி வச்ச காய்கறிகளை சேர்த்து நல்லா வதக்கிங்கோங்க.

தேவையான அளவு உப்பு சேருங்க... பொறியல், காரக்குழம்புக்கு வெங்காயம், காய்கறிகள் வதக்கும்போது உப்பு சேர்த்துக்கிட்டா காய்கறிகள் சீக்கிரம் வேகும். பாத்திரத்துல ஒட்டவும் ஒட்டாது.


மிளகாய்ப் பொடி சேர்த்து வதக்குங்க. மிளகாய்தூள் வாசனை போனதும் தேவையான அளவு தண்ணி ஊத்தி கொதிக்க விடுங்க.

அப்படி கொதிக்கும்போதே மஞ்சப்பொடி சேர்த்துக்கோங்க. மஞ்சப்பொடி சிறந்த கிருமி நாசினி. நம்ம கவனத்தையும் மீறி சாப்பாட்டுல சேரும் கிருமிகளை கொல்ல மஞ்சப்பொடி சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. காய்லாம் நல்லா வெந்ததும் கல்சட்டில போட்டு காய்கறிலாம் உருத்தெரியாம  கடைஞ்சிக்கோங்க. 

அடுப்புல வாணலி வச்சு சூடானதும், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ஞ்சதும் கடுகு சேர்த்து பொரிய விடுங்க. 

கடுகு பொரிஞ்சதும் கடலைப்பருப்பும், உளுத்தம்பருப்பும் சேர்த்து, அது சிவந்ததும் கறிவேப்பிலை போடுங்க.
கறிவேப்பிலை பொரிஞ்சதும் கடைந்த குழம்பை ஊத்தி சூடு பண்ணி இறக்கிக்கோங்க. கொதிக்கனும்ன்னு அவசியமில்ல. சூடேறினால் போதும்.

சூடான சுவையான கதம்ப சட்னி தயார். இது இட்லி, தோசைக்கு தொட்டுக்கலாம். சமயத்துல சாதத்துக்கும் நல்லா இருக்கும். 

தக்காளி விலை அதிகமா இருக்கும் நேரங்களில் தக்காளி குறைச்சுக்கிட்டு கொஞ்சம் புளி சேர்த்து கடைஞ்சாலும் டேஸ்ட் மாறாது. கடையும்போதே டேஸ்ட் பார்த்தால் ஒருவேளை காரம் கம்மியா இருந்தா காய்ந்த மிளகாய் சேர்த்தால் காரமும் சரியாகும். ருசியும் கூடும். பிள்ளைகளும் காய்கறிகளை எடுத்து வச்சுடாம சாப்பிட்டுடும்.

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட கிச்சன் கார்னர்ல சந்திக்குறேன். அதுவரை, டாட்டா, பை பை, ஸீ யூ.

Wednesday, August 14, 2013

கார சட்னி - கிச்சன் கார்னர்

பெண்களுக்கு மாமியார், நாத்தனார், சீரியல் பிரச்சனை ஓய்ஞ்சாலும் ஓயும்!! ஆனா, காலைல டிஃபனுக்கு தொட்டுக்க என்ன செய்யுறதுங்குற பிரச்சனை மட்டும் ஓயவே ஓயாது.

இட்லிக்கு சாம்பார்தான் நல்ல காம்பினேஷன்னு உலகமே சொல்லும். ஆனா, தூயாக்கு இட்லிக்கு சாம்பார் வச்சா பிடிக்காது. வேர்க்கடலை சட்னி, வெங்காய சட்னி வெச்சா இன்னும் ரெண்டு இட்லி கூட சேர்த்து சாப்பிடுவாங்க பசங்க. ஆனா, வீட்டுக்காரர் வேண்டா வெறுப்பா சாப்பிடுவாங்க. அவங்களுக்கு கடலை பருப்பை அரைச்சு வெச்ச குருமா பிடிக்கும்.

ஆனா, எல்லாருக்கும் பிடிச்ச சட்னின்னா அது இந்த கார சட்னிதான். இதை வெளில டூர், பிக்னிக் போகும்போது செஞ்சு கொண்டு போனா, ஆறின இட்லி கூட நிமிசத்துல காலியாகிடும். செய்யுறதும் ரொம்ப ஈசி.

நாலு பேர் கொண்ட குடும்பத்துதேவையான பொருட்கள்: 

வெங்காயம் - கால் கிலோ
தக்காளி -  100 கிராம்,
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய்- 10 (காரத்துக்கு தகுந்த மாதிரி மிளகாயை சேர்த்துக்க்கோங்க)
உப்பு - தேவையான அளவு
மஞ்சப்பொடி - சிறிது
எண்ணெய்- தேவையான அளவு
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது




வெங்காயத்தை தோல் எடுத்து கழுவி பெரிய பெரிய துண்டுகளா வெட்டிக்கோங்க.

தக்காளியையும் நல்லா கழுவி பெரிய பெரிய துண்டுகளா வெட்டிக்கோங்க.

மிளகாயை காம்பு கிள்ளி வச்சுக்கோங்க.

பூண்டையும் சுத்தம் பண்ணி, எல்லாத்தையும் மிக்சில போட்டு நைசா அரைச்சுக்கோங்க.




ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிய விடுங்க .
 கறிவேப்பிலை போட்டு லேசா பொறிஞ்சதும்...,



அரைச்சு வெச்சிருக்கும் தக்காளி, வெங்காய விழுதை கொட்டி கொஞ்சம் வதக்குங்க.

 ஒரு ரெண்டு நிமிசம் எண்ணெயில வதங்குனதும் மஞ்சப்பொடி போடுங்க.

தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமா தண்ணி விட்டு  நல்லா கொதிக்க விடுங்க.  எண்ணெய் தனியா பிரிஞ்சு வரும் நேரத்துல அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறுங்க.
காரம், புளிப்புமா இட்லிக்கு செம மேட்சிங்கா இருக்கும்  இந்த சட்னி. பெரிய பொண்ணு தூயாக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய வைம்மான்னு போகும் போதும் வரும்போது சும்மாவே டேஸ்ட் பண்ணுவா! அவ இல்லாததால, இப்போலாம் அதிகமா செய்யுறது இல்ல. பத்து நிமிசத்துல இட்லி வேகுற நேரத்துல  செஞ்சுடலாம். 

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட வரேன்.