Wednesday, August 14, 2013

கார சட்னி - கிச்சன் கார்னர்

பெண்களுக்கு மாமியார், நாத்தனார், சீரியல் பிரச்சனை ஓய்ஞ்சாலும் ஓயும்!! ஆனா, காலைல டிஃபனுக்கு தொட்டுக்க என்ன செய்யுறதுங்குற பிரச்சனை மட்டும் ஓயவே ஓயாது.

இட்லிக்கு சாம்பார்தான் நல்ல காம்பினேஷன்னு உலகமே சொல்லும். ஆனா, தூயாக்கு இட்லிக்கு சாம்பார் வச்சா பிடிக்காது. வேர்க்கடலை சட்னி, வெங்காய சட்னி வெச்சா இன்னும் ரெண்டு இட்லி கூட சேர்த்து சாப்பிடுவாங்க பசங்க. ஆனா, வீட்டுக்காரர் வேண்டா வெறுப்பா சாப்பிடுவாங்க. அவங்களுக்கு கடலை பருப்பை அரைச்சு வெச்ச குருமா பிடிக்கும்.

ஆனா, எல்லாருக்கும் பிடிச்ச சட்னின்னா அது இந்த கார சட்னிதான். இதை வெளில டூர், பிக்னிக் போகும்போது செஞ்சு கொண்டு போனா, ஆறின இட்லி கூட நிமிசத்துல காலியாகிடும். செய்யுறதும் ரொம்ப ஈசி.

நாலு பேர் கொண்ட குடும்பத்துதேவையான பொருட்கள்: 

வெங்காயம் - கால் கிலோ
தக்காளி -  100 கிராம்,
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய்- 10 (காரத்துக்கு தகுந்த மாதிரி மிளகாயை சேர்த்துக்க்கோங்க)
உப்பு - தேவையான அளவு
மஞ்சப்பொடி - சிறிது
எண்ணெய்- தேவையான அளவு
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது




வெங்காயத்தை தோல் எடுத்து கழுவி பெரிய பெரிய துண்டுகளா வெட்டிக்கோங்க.

தக்காளியையும் நல்லா கழுவி பெரிய பெரிய துண்டுகளா வெட்டிக்கோங்க.

மிளகாயை காம்பு கிள்ளி வச்சுக்கோங்க.

பூண்டையும் சுத்தம் பண்ணி, எல்லாத்தையும் மிக்சில போட்டு நைசா அரைச்சுக்கோங்க.




ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிய விடுங்க .
 கறிவேப்பிலை போட்டு லேசா பொறிஞ்சதும்...,



அரைச்சு வெச்சிருக்கும் தக்காளி, வெங்காய விழுதை கொட்டி கொஞ்சம் வதக்குங்க.

 ஒரு ரெண்டு நிமிசம் எண்ணெயில வதங்குனதும் மஞ்சப்பொடி போடுங்க.

தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமா தண்ணி விட்டு  நல்லா கொதிக்க விடுங்க.  எண்ணெய் தனியா பிரிஞ்சு வரும் நேரத்துல அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறுங்க.
காரம், புளிப்புமா இட்லிக்கு செம மேட்சிங்கா இருக்கும்  இந்த சட்னி. பெரிய பொண்ணு தூயாக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய வைம்மான்னு போகும் போதும் வரும்போது சும்மாவே டேஸ்ட் பண்ணுவா! அவ இல்லாததால, இப்போலாம் அதிகமா செய்யுறது இல்ல. பத்து நிமிசத்துல இட்லி வேகுற நேரத்துல  செஞ்சுடலாம். 

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட வரேன்.


39 comments:

  1. இட்லிக்கு சாம்பார்தான் நல்ல காம்பினேஷன்னு உலகமே சொல்லும். ஆனா, தூயாக்கு இட்லிக்கு சாம்பார் வச்சா பிடிக்காது//

    குழந்தையை குறை சொல்லாதீர்கள் குறை நீங்கள் வைக்கும் சாம்பாரில் இருக்கும் , நல்லா எப்படி சாம்பார் வைப்பது என்பதை அறிய உங்கள் செலவில் டிக்கெட் எடுத்து இங்கே வரவும் நான் சொல்லிதருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நான் வைக்கும் சாம்பார்தான் சரி இல்லேன்னா, நான் 20 ரூபா இல்லாட்டி 100 ரூபா குடுத்து ஹோட்டல்ல நல்ல சாம்பார் வாங்கி குடுத்துக்குறேன். இந்த சின்ன விசயத்துக்குலாமா நீங்க வரனும்?! மன்மோகன் சிங், சோனியாலாம் உங்களுக்காக வெயிட்டிங்க். போய் அந்த பஞ்சாயத்தை முடிங்க.

      Delete
  2. நிஜமாவே இது ஈசியான ரெசிப்பி தான் புள்ள... அது மட்டுமில்ல சுவையானதும் கூட.. படங்களின் நேர்த்தி அழகுப்பா....

    எங்கவீட்லயும் இதே காரசட்னி பிசாசுகள் இருக்காங்க.. வேறாரு அஞ்சான் இபான் தான்.. :)

    அடுத்த ரெசிப்பிக்காக இப்பவே காத்திருக்க தொடங்கிட்டேன்பா...

    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....

    ReplyDelete
    Replies
    1. காத்திருப்புக்கு நன்றி மஞ்சு!! உங்க காத்திருப்பு பொய்யாகத மாதிரி சமைச்சு பதிவிடுறேன்

      Delete
  3. கேசரி எப்படி செய்றதுன்னு டிப்ஸ் சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. அதுதான் ரொம்ப ஈசியான ரெசிபின்னு சொல்லிட்டீங்களே! அந்த ஈசியான ரெசிபியை செஞ்சு நீங்களே பதிவா போடுங்க!!

      Delete
  4. பகிர்வும் படங்களும் பிரமாதம் .
    இனி என்ன நாங்கள் செய்து
    ஜமாய்க்க வேண்டியது தான் !

    ReplyDelete
    Replies
    1. ஜமாய்ங்க. வருகைக்கும் பகிர்வுக்குன் நன்றி ஸ்ரவாணி!!

      Delete
  5. தக்காளிச் சட்னின்னு ஒரு சமாச்சாரம் செய்வேன். இது சாதத்துக்கும் பிசைஞ்சு சாப்பிடலாம்.

    அதையே கொஞ்சம் எடுத்து மிக்ஸியில் போட்டு 15 விநாடி அரைச்சதும் ரெட் சட்னி தயார் நம்மூட்டில்.

    வற்றல் மிளகாய் போடாமல் பச்சை மிளகாய் சேர்ப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா?! நானும் முயற்சி செஞ்சு பார்க்குறேன்.

      Delete
  6. சாம்பாறு வாசனை மூக்கைத் துளைக்குதே ஒரு கட்டுக் கட்டிட வேண்டியது தான் :)
    தூயாவின் நினைப்பிலே தினமும் மனம் தவிக்கிறது போல் உணர முடிகிறது சகோதரி .கவலையை விடுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் .இதுவே உங்கள் மகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் .

    ReplyDelete
    Replies
    1. அவள் நினைவில்லாமல் ஒரு நொடி இல்லை. அவள் நன்மைக்குதான் பிரிஞ்சிருக்கோம்ன்னு அறிவு நம்பினாலும் மனசு கேக்கலை அக்கா!!

      Delete
  7. கலர் சூப்பரா இருக்கு. நான் மிளகாய் பொடியும்,நிறைய கொத்தமல்லி இலையும், சோம்பும் தக்காளியுடன் சேர்த்து வதக்கி அரைப்பேன்.அது வேற டேஸ்ட் முட்டை தோசைக்கு நல்லாயிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அது குருமா மாதிரி இருக்குமே!!

      Delete
    2. இல்லை எல்லாவற்றையும் வதக்கி கெட்டியாக தானே அரைப்போம்.தேங்காய் கிடையாது.

      Delete
  8. நல்லா இருக்கு. நான் பூண்டுக்கு பதில் இஞ்சி ஒரு துண்டும், கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கி அரைப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் செய்வேன். அப்படி செய்யும்போது கொன்ஞ்சம் உளுத்தம்பருப்பு சேர்த்துக்குவேன்.

      Delete
  9. ரொம்ப ஈஸியான ருசியான சட்னியா இருக்கும் போலிருக்கே.
    கலரே கண்ணைப் பறிக்குது. அருமை.!
    அவசியம் செய்து பார்த்திடுறேன்.

    பகிர்விற்கு நன்றி தோழி!
    வாழ்த்துக்கள்!

    த ம.6

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து சொல்லுங்க இளமதி!!

      Delete
  10. Thank you for your Easy recipe of Kaara chatni with attractive photos. Surely I will try it out

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  11. காலைல டிஃபனுக்கு தொட்டுக்க என்ன செய்யுறதுங்குற பிரச்சனை மட்டும் ஓயவே ஓயாது.//

    அதே மாதிரிதான் இன்னைக்கி என்ன குழம்புங்கறதும். ஒருநாளைப் போல எங்க வீட்டம்மா புலம்புவாங்க. ஆனா நா தனியா எட்டு வருசம் வெவ்வேற ஊர்ல தங்கியிருப்போ இன்னைக்கி இன்ன குழம்புன்னு ஒரு டைம் டேபிளே போட்டு கிச்சன் சுவத்துல ஒட்டி வச்சிருவேன். அப்படி செய்மான்னு எத்தன தரம் சொன்னாலும் கேக்காம டெய்லி இதே புலம்பல்தான். அதுவும் ரிட்டையர் ஆயி வீட்லயே இருக்கேனா கேக்கவே வேணாம். அதனாலயே காலையில ஒம்போது ஆனாப் போறும் ஆஃபீஸ் போறா மாதிரி மாடியில இருக்கற என் பெட்ரூம்-கம்-கம்ப்யூட்டர் ரூமுக்கு ஓடிருவேன். மதியான ஒரு மணி அடிச்சாத்தான் கீழ வருவேன்.

    ReplyDelete
  12. 2 இட்லி என்ன 4 இட்லி சும்மாவே உள்ளே போகும்..

    ReplyDelete
    Replies
    1. சூடா சாப்பிட்டா இன்னும் கொஞ்சம் அதிகமாவே போகும்

      Delete
  13. மிக எளிதான ஒன்று... இத நான் கொஞ்சம் மாற்றி செய்வேன்.. அத இங்க சொல்ல நானும் ஒரு சட்னி பதிவ போட்டுட்டு சொல்றேன்...

    சரி மெது மெது இட்லி சுடுவது எப்படின்னு சொல்லுங்க ( அதுதாங்க குஷ்பு இட்லி)

    ReplyDelete
    Replies
    1. எந்த காலத்துல இருக்கீங்க சங்கவி?! குஷ்பூ இட்லிலாம் கேட்டுக்கிட்டு!!

      Delete
  14. //ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிய விடுங்க// படம் 6, 7.

    இந்தப் படம் மேலிருந்து எடுக்கப்பட்ட படம். இது மாதிரி குனிஞ்சு படம் எடுக்கும் போது கொஞ்சம் கவனம் சிதறினாலும்...புடவை தீ பிடித்துக் கொள்ளும். தமிழ் நாட்டில் சமையல் செய்யம் பெண்களுக்கு வயிற்றில் நெருப்பு காயம் அதிகம் ஏற்படுவது...பறக்கும் முந்தானையால். கவனம் தேவை.

    இப்படி மேலே இருந்து படம் எடுக்கணுமா? தேவையா?
    ---------------------
    கார சட்டினி டிப்ஸ்:
    கார சட்டினியை அரைத்து விட்டு இரு பகுதிகளாப் பிரிக்கலாம். கூடுதலாக 5 அல்லது 6 மிளகாய் வைத்து ஒரு பகுதியை அரைக்கலாம்; இது நல்லா காரமா இருக்கும். யார் அவ்வளவு காரம் சாப்பிடுவா? இருக்கிறார்கள் நாட்டில்...

    கூட்டுக் குடும்பமாக இருந்தால் அதிகமான கார சட்னியை யாருக்கு கொடுக்கணும் என்று மருமகள்களுக்கு தெரியும்...!

    அப்படியும் அடங்கலே என்றால் இருக்கவே இருக்கு...உப்புமா!

    ReplyDelete
    Replies
    1. ஹலோ! ஹலோ! எந்த காலத்துல சகோ நீங்க இருக்கீங்க. தரையில அடுப்பு இருந்த காலம் மலையேறிட்டது. இப்போலாம் மேடை கட்டி கேஸ் அடுப்பு வச்சு சமைக்குற காலம். அதனால நின்னுட்டே போட்டோ எடுப்போமில்ல!!

      Delete
    2. நான் சொன்னதை நீங்க புரிந்து கொள்ளவில்லை. நான் இங்கே வந்தது 80-க்கு ப்புபுறம். நாங்க படிக்கும் போதே எங்கே வீட்டில் மேடை போட்டு gas stove - ல் தான் எங்க அம்மா சமைப்பார்கள்.

      மேடையில் தான் விபத்து அதிகம்...! முக்கியாம பின் பக்கம் இருக்கும் பர்னரில் இருந்து சமைத்த பாத்திரங்களை இறக்கும் போது...விபத்து அதிகம். அதுவும் பெண்கள் புடவைத் தலைப்பை வைத்து வேற இறக்குவார்கள். பெண்களுக்கு மேடையில் சாய்ந்து மேடைக்கு மேல் இருக்கும் அலம்மரியில் பாத்திரம் எடுக்கும் போதும் விபத்து..

      தரையில் எங்க அம்மா சமைத்து நான் பாத்தது இல்லை.

      கிராமத்தில் பார்த்து இருக்கேன். தரையில்சமைக்கும் போது தீ விபத்து நடந்தாலும்....கால் பகுதியில் தான் காயங்கள் அதிகம்.

      மேடை வந்த பிறகு...இப்போ வயிற்று பகுதியில்.பயிற்சி மருத்துவராக இருக்கும் போது எத்தனை இளம் பெண்கள்...தீ காயங்களுடன்...பாத்திரம் அலமாரியில் எடுத்தேன்; பின் பக்கம் பர்னரில் இருந்து பாத்ரிரம் இறக்கினேன்; இறக்க தலைப்பை உபயோகப்படுதினேன்...இப்படி

      தயவு செய்து கவனம்.

      Delete
  15. கடைசிப்படம் பாத்ததும் நாக்கில் எச்சில் ஊறுது!பசி வேற!

    ReplyDelete
    Replies
    1. ம்ம் செஞ்சு பார்த்து சொல்லுங்க!

      Delete
  16. மிக அருமை தக்காளி சட்னி உடனே சாப்பிடனும் போல் இருக்கு ராஜி

    ReplyDelete
    Replies
    1. செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அடிக்கடி செய்வீங்க!!

      Delete
  17. மஞ்சள் பொடி போட்டதில்லை மற்றபடி உங்கள் பக்குவப்படி செய்து இருக்கிறேன் காரசட்னி.
    துள்சி சொன்னது போல் பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி செய்வேன்.
    காரசட்னி பயணத்திற்கு நன்றக இருக்கும் நீங்கள் சொல்வது போல்.

    ReplyDelete
  18. அக்காவின் சமையல் குறிப்புகளைக் கண்டு, ஒரு மிகப் பெரிய சமையல் சக்தியாக நான் மாறிக்கொண்டிருக்கிறேன்.... ( எங்க வீட்டுல உங்களத்தான் தேடுறாங்க...)

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு?! கல்லெறியவா?!

      Delete
  19. ஓகே.... பார்க்க நல்லா இருக்கு! :)

    டேஸ்டும் நல்லாத்தான் இருக்கும்.... ஏன்னா உங்க வீட்டுல எல்லோருக்கும் பிடிச்சுருக்கே!

    ReplyDelete
  20. சட்னி தகவலுக்கு நன்றிங்க.
    அரைச்சு வைச்சிருக்கும் தக்காளிக்கு பதிலா கானில் இருக்கும் அரைத்த மாதிரி நிலையிலிருக்கும் தக்காளி போட அனுமதியுண்டா?

    ReplyDelete