Wednesday, October 26, 2011

தீபாவளி


பிள்ளையார் பண்டிகை என்னிக்குன்னு பார்க்க காலண்டரை அம்மா கேட்கும்போதே.., தீபாவளி என்னிக்குன்னு பார்த்துடுவேன். அன்னியிலிருந்து கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிடும். இன்னும் 100  நாள் இருக்கு, இன்னிலிருந்து 45வது நாள் தீபாவளி ன்னு கணக்கு பார்ப்பேன். தோழிக்கிட்டலாம், இந்த கலர் டிரெஸ் எடுப்பேன், இவ்வளவுக்கு பட்டாசு வாங்குவேன்னு போட்டி வச்சுக்குவோம். எல்லாரும் வெவ்வேறு தெருவுல இருக்கோமே எப்படி யார் அதிக பட்டாசை கொளுத்துனதுன்னு தெரிஞ்சுக்குறதுன்னு ஒரே குழப்பம்.

அப்புறம், ரொம்ப புத்திசாலித்தனமா(?!) யோசிச்சு யார் வீட்டு வாசல்ல அதிக பேப்பர் இருக்கோ அவங்கதான் ஜெயிச்ச மாதிரினு முடிவெடுத்தோம். ராத்திரி 8மணிக்கு எல்லார் வீட்டுக்கும் விசிட்டுன்னும் முடிவு பண்ணினோம்.


தீபாவளி கிட்ட நெருங்கி,  வர வர அப்பா,  இன்னிக்கு கடைக்கு கூட்டிபோய் டிரெஸ், பட்டாசு வாங்கித் தருவார்ன்னு தினம் தினம் எதிர்பார்த்து ஏமாறுவேன். அவரும் ஜெயலலிதா கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரிச்சு குடுக்க, நாட்களை கடத்துன மாதிரி நாட்களை கடத்தி, தீபாவளிக்கு முதல் நாள்   கடைக்கு கூட்டி போவார். அங்க போனா மனசுக்கு பிடிச்ச கலர், டிசைன்லாம் தீர்ந்து போயி, அப்புறம் நாலு கடை ஏறி இறங்கி அப்பா டென்ஷனா முறைக்கும்போது, மனசுல நினைச்ச மாதிரி கலர்ல டிரெஸ் எடுத்து ஒரு மாதிரியாய் ஒப்பேத்தி...,

காலைல 4 மணிக்கு எழுந்து தலைக்கு குளிச்சு, புது டிரெஸ் போட்டுக்கிட்டு பட்டாசை கொளுத்தனும்னு கனவு கண்டுக்கிட்டே விடிகாலை 3மணிக்கு  தூங்கி..., எழுந்துப் பார்த்தால்.., மணி ஏழு ஆகியிருக்கும். சரின்னு அவசர அவசர குளிக்க ரெடியாகும்போது, அம்மா 1/2லிட்டர் எண்ணெயை தலையில கவுத்து, சீயக்காத்தூளை கொட்டின்னு தடபுடலா எண்ணெய் குளியல் போட்டு வந்து பார்த்தால்...,
பிடிச்ச மாதிரி ஆட்டுக்கறி குழம்பும், தோசையும், வடையும் நம்மளை முறைச்சு பார்க்கும். சில தோசைகள், பல வடைகளை உள்ளிறக்கி ஒரு வழியாய் பட்டாசை கொளுத்த தெருவுக்கு வந்து பார்த்தால்....,

அடைமழை வந்து உயிரை வாங்கும்.  அப்படி இப்படின்னு பட்டாசை கொளுத்திக்கிட்டு இருக்கும்போது.., அம்மா தொணதொணன்னு இந்த மாவை பிசைஞ்சு குடு, அரிசியை ஊற வை, வீட்டை கூட்டு,  பலகாரத்தை கொண்டு போய் அத்தை வீட்டில் குடு, கோடி வீட்டு மாமிக்கிட்ட குடுன்னு கடுப்பை கெளப்புவாங்க. போட்டியில பொண்ணு ஜெயிக்கனும்ன்னு எங்காவது அக்கறை இருக்கா பாருங்க அம்மாவுக்கு.
                                                   

எப்படியோ ஒரு வழியா பட்டாசை கொளுத்தி, வாசலை கூட்டி, பட்டாசு கொளுத்துன பேப்பரையெல்லாம், சேர்த்து வச்சுட்டு பலகாரம் தின்னுட்டு வரலாம்ன்னு உள்ளே போயிட்டு வந்து பார்த்தால், அம்மா அந்த பேப்பரையெல்லா கொளுத்திட்டு இருக்காங்க. அதை பார்த்ததும் உசிரே போயிடுச்சு.
மணி 7.30ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல பிசாசுங்களாம் சாரி தோழிங்களாம் வந்துடுவாங்களேன்னு இல்லாத மூளையை யூஸ் பண்ணி சிந்திச்சுக்கிட்டே இருந்தேன். அப்பதான் சூப்பர் ஐடியா தோணுச்சு..., நேரா ஒரு மஞ்சப்பையை கொண்டு போனேன். அக்கம் பக்கம் வீடுகளில் சேர்த்து வச்ச பேப்பர்களை பொறுக்கி எடுத்து வந்து அம்மாவுக்கு தெரியாமல் ஒரு ஓரமா குவிச்சு வச்சேன்.
மணி 8ஐ தாண்டி போயி 10ஐ நெருங்கியும் யாரும் வரலை. என்னன்னு தெரியலையேன்னு யோசனையிலேயே தூங்கி எழுந்து, மறுநாள் ஸ்கூலில் போய் கேட்டால் சொன்னாளுங்களே ஒரு பதில்.  நான் அப்படியே ஷாக்காகி நின்னுட்டேன்.
”லூசு அந்த குப்பையெல்லாம் வந்து ஆராய்ச்சி பண்றதுதான் எங்களுக்கு முக்கியமா? கேபிள் டிவில அண்ணாமலை படம் போட்டாங்க அதை பார்த்துக்கிட்டு இருந்தோம்னு..,
கிர்ர் டமால்..., வேறென்ன? நான் மயங்கி விழுந்த சத்தம்தான்...,

இப்படிலாம் பெற்றோர், உறவினர், சுற்றத்தார், தோழிகள்ன்னும்,  பலகாரங்களை மத்தவங்களுடன்  ரொம்ப மகிழ்ச்சியாய் தீபாவளியை கொண்டாடினேன் நான்.
                                        

ஆனால், இன்று என் பிள்ளைகள், ஒரு மாதத்திற்கு முன்னே டிரெஸ் எடுத்து, தீப்பாவளியன்று முக்கி முனகி, என்னிடம் திட்டு வாங்கி எண்ணெய் குளியல்..., 1 இட்லி, 1/2 தோசைன்னு சாப்பிட்டு செல்போனிலும் மெயிலிலும் வாழ்த்துக்களை சொல்லிக்குதுங்க.  அப்புறம் பலகாரம் சுட கூப்பிட்டால்.., உன்னை யாரு இதெல்லாம் செய்ய சொல்றது? கடையில வாங்காமல் நல்ல நாளும் அதுவுமா ஏம்மா எங்க உயிரை எடுக்குறீங்கன்னு டிவிப்பொட்டியை விட்டு எழுந்துக்காமல், விடிகாலையும், சாயந்தரம் 6 மணிக்கும் ஏதோ சடங்குக்காய் சில பட்டாசுகளை கொளுத்திட்டு மீண்டும் டிவியில உக்காந்துக்குதுங்க...,
அன்று பண்டிகைகளை உண்மையான நோக்கில உற்றார் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தோம்.
இன்று? நம் பிள்ளைகள் நிஜமான அர்த்தங்களுடந்தான் கொண்டாடுகிறார்களா?!




வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.

தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்
பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.

கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.

காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்
அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.
பண்டிகைகள் Funடிகைகளாக
அந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.

11 comments:

  1. என்னாது? இன்னைக்கு தீபாவளியா? சொல்லவே இல்லை..

    ம் ம் பதிவு காமெடியா இருந்தது.. ஹி ஹி தலைக்கெல்லாம் குளிச்சீங்க பொல.. ஹய்யோ அய்யோ

    ReplyDelete
  2. 189???????????????????????????????????????????????????????


    ஆ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  3. இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் என் அன்பு உறவுகளே!......
    வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் இன்றைய உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

    ReplyDelete
  4. அருமையான பதிவு.
    காலங்கள் மாறி விட்டன.
    மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Sun டி.வியை அணைப்போம்-:)

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
    இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  8. அழகான தீபாவளி மலரும் நினைவுகள்.
    நீங்க சொல்லியிருப்பது மாதிரி இப்ப எல்லாம் குழந்தைகளுக்கு பண்டிகை எதுலையுமே ஒரு ஈடுபாடே இருப்பதில்லை.

    ReplyDelete
  9. சென்றது போலும் பொன் போலும் காலம்!
    பகிர்வு நன்று.

    ReplyDelete
  10. அந்த நாள் நெஞ்சிலே ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே
    இந்த நாள் அன்று போல் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே
    என்கிற அந்த பாடலுக்கு மிகச் சரியான பொருள்
    இப்போதுதான் விளங்கத் துவங்குகிறது
    அதை அப்படியே உணரச் செய்து போகிறது உங்கள் பதிவு
    இறுதியாகக் கொடுத்துள்ள கவிதை மிக மிக அருமை
    திரும்பத் திரும்ப படித்து மகிழ்ந்தேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete