Wednesday, September 19, 2018

கர்ணனும், அவன் வாரிசுகளும் வீழ்ந்த கதை - தெரிந்த கதை தெரியாத உண்மை


பலவித திருப்பங்களை கொண்டது மகாபாரத கதைகள் என்பதை நமது முந்தைய பதிவுகளின் மூலம் பார்த்தோம்.  அதில் அர்ஜுனன் தன் மகனால் கொல்லப்பட காரணம் என்ன என்பது பற்றி பாகம் 1 ,பாகம் 2  பதிவுகளில்  பார்த்தோம் .அதனுள்ளும் ஒரு கிளைக்கதை இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இடியாப்ப சிக்கல் என்பது மகாபாரத கதைகளில்தான் இருக்கிறது ஒன்றிலிருந்து ,ஒன்று என வரிசையாக பல திருப்பங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது மகாபாரத கதை அதில் இன்று  கர்ணன் மகனை,  அர்ஜுனன் மகன் ஏன் கொன்றான் என்பது பற்றி இன்றைய தெரிந்த கதை தெரியாத உண்மைகளில் பார்க்கலாம் 
கர்ணனை கதை எல்லோருக்குமே தெரியும். இருந்தாலும் சுருக்கமாக... குந்திதேவிக்கு முனிவர் ஒருவர் தந்த வரத்தினால், குந்திக்கும், சூரியபகவானுக்கும் பிறந்த குழந்தைதான் கர்ணன். குந்தி திருமணமாகாமலேயே குழந்தையை பெற்றதால் ஊருக்கு அஞ்சி குழந்தையை பேழையில் வைத்து  ஆற்று நீரில்  அனுப்பி வைத்தாள். அப்படி அடித்து வரப்பட்ட பேழையை திரிதராஷ்டிரனின் தேரோட்டி அதிரதனால்  கண்டெடுக்கப்பட்டார். அதிரதனும் அவரது மனைவி ராதாவும்  குழந்தை இல்லாத காரணத்தால் கர்ணனை தங்களின் சொந்த மகனாகவே வளர்த்தனர். கர்ணனுக்கு அவர்கள் வாசுசேனா என்று பெயரிட்டு அழைத்தனர். மேலும், ராதேயன் என்றும் அழைத்தனர். கர்ணன் மற்றும் அவரது வளர்ப்பு பெற்றோர்கள் இடையேயான உறவானது தூய அன்பு, மரியாதை மற்றும் பாசம் ஆகியவற்றால் நிறைந்து இருந்தது.
அதிரன், ராதாவின் சொந்த  மகனாகவே  தனது கடமைகளை விருப்பத்துடன் கர்ணன் செய்துவந்தார். இருப்பினும் அவர் அங்க தேசத்தின் அரசனானது மற்றும் முடிவில் அவரது உண்மையான பிறப்பு பற்றிய ரகசியம் வெளிவந்தது .ஆயினும் கர்ணன் தனது இறப்பு வரையில் அவரது வளர்ப்பு பெற்றோருக்கு உண்மையானவராகவும் விசுவாசமுள்ளவராகவும் இருந்தார். கர்ணனுக்கு விருஷாலி மற்றும் பொன்னுருவி என்று இரண்டு மனைவியர் இருந்தனர் பின்னர், துரியோதனனின் வேண்டுகோளுக்கிணங்க சுப்ரியா என்னும் பெண்ணை திருமணம் முடித்தார். சுப்ரியா துரியோதனன் மனைவி பானுமதியின் நெருங்கிய தோழி ஆவார். மூன்று மனைவிகள் மூலம் கர்ணனுக்கு பல மகன்கள் இருந்தனர். அதில் முக்கியமான பத்துபேர்கள் மட்டுமே உலகறியும் வண்ணம் இருந்தனர்.  அவர்களின் பெயர்கள் முறையே விரிஷேசன், சுதாமா, விரிஷகேது, சித்ரசேனா, சத்யசேனா, சுசேனா, சத்ருஞ்சய, திவிபாதா, பனசேனா மற்றும் பிரசேனா. 
மகாபாரத போரில் பாண்டவர்களின் வீரமும், கண்ணனின் சூழ்ச்சியும்  பாண்டவர்களுக்கு பெரிய வெற்றியை தேடித்தந்தது என்றாலும், முடிவில் பாண்டவர்கள் பெற்றது ராஜ்ஜியமாய் இருந்த போதிலும், அவர்கள் இழந்தது ஏராளம்.  ஐந்து புதல்வர்கள், அன்பு மகன் அபிமன்யு, மூத்த சகோதரன் கர்ணன், பிதாமகர் பீஷ்மர், சிறுவயது முதலே வழிகாட்டிய குரு துரோணர், பீமனின் மகன் கடோத்கஜன்,  அர்ஜுனனின் மகன் அரவான்,  என பாண்டவர்களின் இழப்புகள் நீண்டுக்கொண்டே செல்லும். இதில் கர்ணன் இறந்த பிறகு குந்தி வந்து அழுது புலம்பிய பிறகுதான் அவர் தங்களின் மூத்தவன்  என்பதை அறிந்து சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளாகினர் பாண்டவர்கள். துரியோதனன்கூட  தன் ஆருயிர் நண்பன் கர்ணன், தன் எதிரிகளுடைய சகோதரன்  என்பதை அறிந்ததும், முன்பே இது தெரிந்திருந்தால் போரிலேயே ஈடுபட்டிருக்க மாட்டேனே! என   தன் நண்பனின் மரணத்தை நினைத்து அழுது துடித்தான்.
கர்ணன் பாண்டவர்களில் மூத்தவனாக இருந்தாலும், அவனது பிறப்பின் மர்மத்தினால், தன் திறமைக்கு அங்கீகாரம் இல்லாமல் ,கடைசிவரை செஞ்சோற்று கடனுக்காக உயிரை விட்டவன். பீஷ்மர் இருக்கும்வரை போர்க்களம் புகமாட்டேன் என சபதம் புரிந்த கர்ணன் பீஷ்மரின் மறைவுக்கு பின்னரே போர்க்களம் புகுந்து தன் வீரத்தால் பாண்டவ சேனைகளை துவம்சம் செய்தான். இந்திரன் வழங்கிய சக்தி எனும் ஆயுதத்தால்  கடோத்கஜனை கொன்றான். கர்ணனுக்கு முன்னர் பாண்டவர்கள் யாரும் தாக்கு பிடிக்கமுடியவில்லை. தருமன், பீமன், நகுலன், சகாதேவன் எல்லோரும் கர்ணனிடம் தோற்று கைதிகளாக ஆனபின்னரும், தனது தாய்க்கு கொடுத்த வாக்குறுதியினால் அவர்களை கொல்லாமல் கர்ணன் விட்டுவிட்டான். அவனது ஒரே இலக்கு அர்ஜுனன் மட்டுமே!அந்த அர்ஜுனனால்கூட கர்ணனை நேருக்குநேர் நின்று கொல்ல முடியாது என்பது கிருஷ்ணருக்கும் தெரியும். அவ்வளவு ஏன்?! பாண்டவ, கவுரவ சேனைகள் உள்பட எல்லோருக்குமே தெரியும். தனது குருவான துரோணரும், கர்ணனும் பரசுராமரின் நேரடி சீடர்கள் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தெரியும். ஆகவே,  கர்ணன் தன்னை வெல்ல எவருமில்லா தன்னிகரில்லாத வீரனாக இருந்தான். பரசுராமர்கூட தன்னிடமிருந்த எல்லாக்கலைகளையும் கர்ணனுக்கு  கற்றுக் கொடுத்தார். பரசுராமர் கர்ணனை போர்க்கலை மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் தனக்கு நிகரானவராக அறிவித்தார். தன்னுடைய சிறந்த மாணவர்களில் கர்ணனும் ஒருவன் என்று அறிவித்தார் அதானல் கர்ணனின் பராக்கிரமத்தை அனைவரும் அறிவர்.
திரௌபதியின் சுயம்வரத்தில் நடந்த  கைக்கலப்பில் கர்ணனின் மகனான சுதமா இறந்தான் அதை நமது துரோகமே வடிவான குரு துரோணர் பதிவில் பார்த்தோம். குரு துரோணர் கௌரவ படைகளுக்கு தலைமை தாங்கி நடத்திய போரில் அன்று கர்ணனின் மகன்களான ஷத்ருஞ்ஜயா மற்றும் த்விபடா ஆகியோர் அர்ஜுனனால் கொல்லப்பட்டனர். பின்னர் இன்னொரு மகனான சுஷேனா குருஷேத்திர போர்க்களத்தில் பீமனால் கொல்லப்பட்டான். மற்றவர்களான சத்யசேனா, சித்ரசேனா மற்றும் சுஷர்மா நகுலனால் கொல்லப்பட்டனர். மஹாபாரத போரின் பதினாறாம் நாள், கர்ணன் அன்றைய போருக்கு தளபதியாக தலைமை பொறுப்பை ஏற்று யுத்தத்தை நடத்தினான். அந்த பதினாறாவது நாளில் கர்ணன் ஒற்றை ஆளாக அனைத்து பாண்டவர்களையும் வீழ்த்தினான். முதலில், பீமனை வீழ்த்தினான் கர்ணன்.  ஆனால் தனது தாய் குந்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தினால், பீமனை கொல்லாமல், ஏ ..பீமா! நான் உன்னை விட வயதில் பெரியவன் ,என்னை விட சிறியவயதில் இருக்கும் உன்னை கொல்வது கூடாது இது எனது குரு பரசுராமர் கற்றுக்கொடுத்தது.  ஆகையால் உன்னை கொல்லமாட்டேன் இங்கிருந்து சென்றுவிடு என்று பீமனை கொல்லாமல் விட்டுவிட்டான் கர்ணன் . 
அடுத்து தருமரையம் வீழ்த்தினான் கர்ணன், தருமனையும் கொல்லாமல் ஏ யுதிஷ்டிரா! உனது குரு உனக்கு கற்றுக்கொடுத்த வித்தை அனைத்தையும் மறந்துவிட்டாயா?! போ... முதலில் பயிற்சி எடுத்துவிட்டு பின்னர் சண்டையிட வா" என்று கூறி தருமனையும் உயிருடன் விட்டுவிட்டான் கர்ணன். அதன்பிறகு  நகுலன் மற்றும் சகாதேவன் கர்ணனின் முன்னே தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்று நின்றனர். அவர்களையும் கொல்லாமல் தனது தாய் குந்திக்கு அளித்த சத்தியத்தினால் தனது சகோதரர்கள் அனைவரையும் போரில் வீழ்த்தினாலும் கொல்லாமல் விட்டுவிட்டான். பின்னர், கர்ணன் தனது மாமனாரும்,தோரோட்டியுமான சல்லியனை அர்ஜூனனின்  தேர் இருக்கும் இடத்திற்கு எடுத்து செல்லக் கூறினான். அர்ஜுனனும், கர்ணனும் நேருக்கு நேர் சந்தித்தனர் .போர்க்களத்தில் இருவரும் ஆவேசமாக போரிட்டனர். போர்க்களமே இருவரின் யுத்தத்தை பார்த்து வியந்து நின்றது. அர்ஜுனனும் கர்ணனுக்கு எதிராக சளைக்காமல் போரிட்டான். ஆனால்,  அவனால்  கர்ணனின் வில் வித்தைக்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை.  அங்கிருந்து அர்ஜுனனை, பகவான் கிருஷ்னர், அப்புறப்படுத்தி காப்பாற்றினார். தங்களது குரு துரோணாச்சாரியாரும் கர்ணனும் பரசுராமரின் நேரடி சீடர்கள். அதனால் அவர்களை எப்படி வீழ்த்த முடியுமென்பதை உணர்ந்து, துரோணரை எப்படி வெல்லமுடியாமல் சதியின் மூலம் கொன்றனரோ ,அதுபோலத்தான் கர்ணனையும் வீழ்த்த முடியும் என்பதை அர்ஜுனனும் நன்கு உணர்ந்திருந்தான்.  இங்கேதான் மாயக்கண்ணன் விளையாட ஆரம்பித்தான். அர்ஜுனனின் பாணங்கள் கர்ணனை ஒன்றும் செய்யமுடியாது அப்படியானால் அவனை வெல்ல சாதகமான வழிகளை நோக்கி கண்ணன் காய் நகர்த்த தொடங்கினான்.
உடனே அர்ஜுனனை கர்ணனின் முன்னிருந்து விலகி செல்லுமாறு தேரை ஓட்டிச்சென்று, கர்ணனின் மகனான வீரஷசேனனின் முன் கொண்டு சென்றார் அங்கே, தனது சகோதரர்கள் துஹ்ஷசேனா மற்றும் சித்ரசேனா ஆகியோர் நகுலனால் கொல்லப்பட்டதால் கடுங்கோபமுற்ற வீரஷசேனா நகுலனை கடுமையாக தாக்கினான். நகுலன் மற்றும் வீரஷசேனனுக்கும் இடையே பயங்கர யுத்தம் நடந்தது. வீரஷசேனா நகுலனின் குதிரைகளைக் கொன்று, நகுலனை அம்புகளால் தாக்கினான். இதனால் நகுலன் தனது தேரிலிருந்து இறங்கி, தனது உடைவாள் மற்றும் கேடயத்தை எடுத்துக்கொண்டு, வீரஷசேனாவை நோக்கிச் பாய்ந்து சென்றான். நகுலனுக்கு முன்னர் இருந்த பாதையில்  இரண்டாயிரம் குதிரைவீரர்களின் தலையை வெட்டிச் சாய்த்தான். வீரஷசேனா, நகுலன் அருகில் வந்ததும் வீரஷசேனா தனது உடைவாளை சக்கரம் போல் சுழற்றி நகுலனை நோக்கி ஆவேசமாக பாய்கின்றான். உடனே நகுலன் நான்கு பிறைச்சந்திர வடிவிலான முனைகளைக் கொண்ட அம்புகளைக் கொண்டு வீரஷசேனாவின் வாளை உடைகின்றான். ஆனாலும், தாக்கு பிடிக்கமுடியாத நகுலன் அங்குவந்த பீமனின் தேரில் ஏறி அவ்விடம் இருந்து அகன்றான். அப்பொழுது அர்ஜுனனின் தேரும் அருகில் வர , வீரஷசேனாவை கொல்லுமாறு, அர்ஜுனனிடம் நகுலன் சொல்கிறான் .
வீரஷசேனாவின் அருகில் சென்ற அர்ஜுனன் போர்க்களத்தில் உரக்க கத்தினான் ஏ ..கர்ணா! சக்ர வியூகத்தில் நிராயுதபாணியாக நின்ற என் மகன் அபிமன்யுவை எப்படி கொன்றாயோ!? அதேப்போல் இன்று உன்மகன் வீரஷசேனாவை கொல்வேன். முடிந்தால் நீயும் உன்படைகளும் அவனை காப்பாற்றி கொள்ளுங்கள் என அறைகூவல் விடுத்தான். யாரும் அருகில் இல்லை என அறிந்ததும், தன்னை காப்பாற்றி கொள்ள தானே களத்தில் இறங்கினான் வீரஷசேனா.  அர்ஜுனனுக்கே சவால் விடும் வண்ணம் பல்வேறு வகையான அம்புகளை விட்டு அர்ஜுனனை திணறடித்தான் வீரஷசேனா. அர்ஜுனனின் தோளில்  பத்து அம்புகளை குறிபார்த்து எய்தான். அர்ஜுனனால் அதை தடுக்கமுடியாமல் பத்து அம்புகளும் அர்ஜுனனது தோளில் பாய்ந்தன. அடுத்து, கிருஷ்ணரை நோக்கி அம்புகளை வீசினான்  வீரஷசேனா.  கிருஷ்ணரும் காயமுற்றார். உடனே,  அர்ஜுனன் கடுங்கோபத்துடன், அதேமுறையில் பத்து அம்புகளை ஒருசேர பூட்டி  வீரஷசேனாவைத் தாக்கினார். அதனால் தாக்குண்ட வீரஷசேனா படுகாயமடைந்தான். உடனே அஜுனன் கூரிய முனைகளை உடைய நான்கு பெரிய அம்புகளை நாண் ஏற்றி வீரஷசேனாவின் வில் மற்றும் அவனது இரண்டுகைகளையும் தலையையும் வெட்டி சாய்த்தார் . அதேநேரத்தில் கர்ணனும் அங்கே வந்தான். வீரஷசேனா கொல்லப்படுவதை தன் கண்ணால் பார்த்ததும் கடுங்கோபம் கொண்டு அர்ஜுனனை தாக்கினான் கர்ணன்
அடுத்தநாள் காலையில் கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் போரை காண குருஷேத்திர போர்க்களமே ஆவலுடன் காத்திருந்தது. கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ஓ!பாண்டுவின் மைந்தனே! எதிரில் நிற்கும் கர்ணன் உன்னைவிட எல்லா வித்தைகளிலும் சிறந்தவன். இந்த பயங்கரமான யுத்தத்தில் சிறந்த கவனம் மற்றும் தெளிவு ஆகியவற்றைக் கொண்டே அவனைக் கொல்ல முடியும் ஆற்றலில் அவன் நெருப்புக்கு சமமானவன். வேகத்தில், அவன் மூர்க்கத்தனமான காற்றுக்குச் சமமானவன். சீற்றத்தில், அவன் தன்னையே அழித்துக்கொள்ளக் கூடியவன். வலிமையான பண்பில், அவனது உடல் அமைப்பில் சிங்கத்திற்கு ஒப்பானவன். அவன் உயர அளவில் எட்டு ரேட்னிக்களைக் கொண்டவன். அவரது கரங்கள் பெரியவை. மார்பு அகன்றது. அவன் வெல்லமுடியாதவன். அவன் உணர்ச்சிமிக்கவன். அவன் இங்கிருக்கும் வீரர்களில்  முதலாமானவன். அவன் மிகவும் நேர்த்தியானவன். போர்க்கலையின் ஒவ்வொரு செயல்பாட்டின்மீதும் வெறிபிடித்தவன், அவனை எதிர்த்தவர்களை  சிதறடிப்பவன்.அவனுக்கு நீ ஒரு சவாலாக இருக்கவேண்டும்.  அதை நீ கவனத்தில் கொள். வேறு யாராலும் அவனை வீழ்த்த முடியாது. கடவுளர்கள்கூட கவனத்துடன் போரிடவில்லையென்றால் அவன்முன் தோற்றுத்தான் போகவேண்டும். மூன்று உலகத்தின் அனைத்து வீரர்களும் ஒன்றிணைந்து சண்டை செய்தால் அந்த மாவீரனை வெற்றியடையலாம். ஆகையால் இந்த சண்டையில் மிகவும் கவனம் என்று அர்ஜுனனுக்கு கிருஷ்னன் அறிவுரை கூறினார். 
அன்று சூரியன்கூட காலையிலையே சீக்கிரமாக எழுந்து தனது மகன் கர்ணனின் யுத்தத்தை பார்க்க ஆவலுடன் காத்து இருப்பது போன்று இருந்தது . பதினேழாம் நாள் ,குருஷேத்திர போர்க்களமே ஆவலுடன் இருந்தது. இருவரின் யுத்தத்தை காண்பதற்கு, கர்ணன் எய்த அம்புகளின் வேகத்தை தாளாமல் அர்ஜுனனின் தேர் பல நூறு அடி பின்னுக்கு தள்ளப்பட்டது. கர்ணனின் வித்தையை பகவான் கிருஷ்ணர் வெகுவாக பாராட்டினார். இதைக்கண்ட அர்ஜுனன், ஏ... கிருஷ்ணா! எதிரியின் திறமையை பாராட்டுகிறாயே என்று அதிர்ச்சியடைந்தான். உடனே கிருஷ்ணர்,  .ஏ அர்ஜுனா!  கர்ணனின் தேர், கர்ணன் மற்றும் சல்லியன் ஆகியோரின் எடையை மட்டுமே தாங்குகின்றது.ஆனால் அண்டத்தின் மொத்த எடையையும் என்னுள் வைத்திருக்கும் நான் உன்தேரில் அமர்ந்துள்ளேன் மற்றும் தேர் கொடிமரத்தில் அனுமன் அமர்ந்துள்ளான். ஆனாலும் கர்ணனால் அதை எளியதாக நகர்த்த முடிகிறதே என்றார். இந்த இருகாரணங்களும் இல்லையென்றால், கர்ணன் அம்புகள் உனது ரதத்தை பூமிக்கு அப்பால் வீசியிருக்கும்" என்று கூறினார். போரில் கர்ணன் அர்ஜூனனின் வில்லின் நாணை பலமுறை அறுத்தான். ஆனால் அர்ஜுனனோ மிக குறுகிய நேரத்தில் வில்லின் நாணை திரும்ப கட்டுவதை கண்டு கர்ணன் அர்ஜூனனைப் பாராட்டினான். இருவரும் ஒருவரை ஒருவர் வியந்தபோதும் போர் அதி உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் தான் கர்ணனின் சாபம் வேலை செய்ய ஆரம்பித்தது.  முதல் சாபம். தனது குரு பரசுராமர் கொடுத்தது. கர்ணன் பரசுராமரிடம் வித்தையை கற்று கொள்வதற்காக பிராமணன் என்று பொய்யுரைத்ததற்கு, அவர்  கர்ணனுக்கு அதிகம் தேவைப்பட்ட பிரம்மாஸ்திரப் பயன்பாடு உள்ளிட்ட போர்த்திறன்கள் இக்கட்டான சூழ்நிலையில் அவரைவிட்டு நீங்க சாபமிட்டார். இருந்தாலும் கர்ணனின் திறமையைக்கண்டு, கோபத்தில் கர்ணனுக்கு தான் அளித்த சாபத்தை நினைத்து பரசுராமர் வருந்தினார். இருந்தாலும்  கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற முடியாது.  அவர் கர்ணனுக்கு பார்கவாஸ்திரம் என்ற தெய்வீக ஆயுதத்தை விஜயா என்றழைக்கப்பட்ட அவரின் தனிப்பட்ட வில்லுடன் பரிசளித்து கர்ணனை எக்காலத்திற்கும் அழியாத பெருமை மற்றும் அழியாத புகழைப் பெறவேண்டும் என்று ஆசிர்வதித்தார். இருந்தாலும் அதி உக்கிரமான இந்த வேளையில் கர்ணனின் வித்தைகள் அவனுக்கு சரியாக நினைவுக்கு வராமல் ,கர்ணனை தடுமாற வைத்தன.
இரண்டாவது சாபம் பரசுராமரின் ஆசிரமத்திலிருந்து கர்ணன் புறப்பட்டதும், குருவின் சாபத்தினால் கர்ணன் சில காலம் குழப்பமடைந்து காணப்பட்டார். இருந்தாலும் பயிற்சியை கவனமாக தினமும் செய்தார். அப்பொழுது காடுவழியாக சென்றபோது  ஷப்தவேதி வித்யா (சத்தத்தை கவனிப்பதன் மூலம் இலக்கைத் தாக்கும் திறன்) பயிற்சி செய்தபோது, அவர் தவறுதலாக காட்டு விலங்கு என்று எண்ணி ஒரு பசுவை அம்பால் எய்து அதனைக் கொன்று விட்டார். இந்த நிகழ்வு அந்தப் பசுவை வளர்த்த பிராமணருக்கு கோபத்தை ஏற்படுத்தி அவரும் கர்ணனுக்கு  சாபமிட்டார். அவர் ஒரு உதவியற்ற விலங்கைக் கொன்றதால், கர்ணனும் அதே போல் உதவியற்ற நிலையில் பகைவர் முன்பு கொல்லப்படுவாய் என்று சாபமிட்டார். மூன்றாவது பூமாதேவியின் சாபம், ஒருமுறை கர்ணன் அவரது தேரில் தனது அங்க தேசத்தில் சென்றுகொண்டிருக்கையில்,  ஒரு குழந்தை தனது பானையிலிருந்த நெய்யை   பூமியில் சிந்திவிட்டது.  தனது கவனமின்மையால் தனது சித்தி என்னை அடிப்பாள் என   பயந்து அழுதது. கர்ணனும் அந்த சிறுமியிடம்,  தான் புதிய நெய்யை அளிப்பதாகக் கூறினார். ஆனால், அந்தக் குழந்தை மண்ணில் கலந்த அதே நெய்தான் வேண்டும் என்றும் புதிய நெய்வேண்டாம் என்று கூறியது.   கர்ணன் அந்த சிறுமியின்மீது இரக்கம் கொண்டு ,மண்ணுடன் கலந்த நெய்யை தனது உள்ளங்கையில் எடுத்து பிழிந்து நெய்யைப் பிரித்து பானையில் திருப்பி ஊற்றினார். இந்தச் செயலின்போது, கர்ணன் வலியால் துடிக்கும் பெண்ணின் குரலைக் கேட்டார். அவர் தனது உள்ளங்கையைத் திறந்தபோது, அந்தக்குரல் பூமிதேவியின் குரல் என்பதை உணர்ந்தார். கோபம் மிகுந்த பூமாதேவி, கர்ணனை ஒரு சிறிய குழந்தைக்காக பூமித்தாய்க்கு மிகப்பெரிய வலியை அளித்ததற்காக தண்டித்தாள். எனவே, பூமாதேவி அவருக்கு, அவரது வாழ்வில் மிகவும் முக்கியமான் போரில், அதே வழியில் அவர் தனது தேரின் சக்கரம் மண்ணில் சிக்கி, அப்பொழுது உனது கரங்கள் பயனற்று போய், உனது எதிரிகளுக்கு பலம் சேர்ந்து நீயும் இதே வலியினால் எதிரிகளால் கொல்லப்படுவாய் என்று  சாபமிட்டார். ஆகவே, கர்ணன் மூன்று வேறுபட்ட மற்றும் தனித்தனி சூழ்நிலைகளில் சாபத்தைப் பெற்றுள்ளார். எதிர்பாராத விதமாக, இந்த சாபங்கள் அனைத்தும் குருச்சேத்திரப் போரில் முக்கியமான கட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது 
கர்ணனின் தேர்ச்சக்கரம் தரையில் சேற்றில் மூழ்கியபோது (பூமாதேவியின் சாபம் செயல்படத் தொடங்கியதன் விளைவு) அவர் தடுமாற்றமடைந்தார். அவரது குரு பரசுராமர் முன்னறிந்து கூறியது போலவே, அவரால் தெய்வீக ஆயுதங்களுக்கான மந்திரங்களை அவரால் நினைவுபடுத்திக் கண்டறியவும் முடியவில்லை. அவர் தேரிலிருந்து இறங்கி சக்கரத்தை அகற்றினார், அவர் அர்ஜூனனிடம் போர் விதிமுறைகளின்படி, தான் சரிசெய்துவிட்டு வரும்வரையில் கார்த்திருக்கக் கோரினார். கிருஷ்ணர் அர்ஜூனனிடன் அபிமன்யூவைக் கொல்லும்போது அதையேஅவன் மீறிய பின்னர், இந்த நேரத்தில் விதிமுறைகளைப் பற்றிக் குறிப்பிட கர்ணனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார். கர்ணன் உதவியின்றி உள்ளபோதே கொல்லும்படி (பிராமணரின் சாபம் நடைமுறைக்கு வந்தது) அர்ஜூனனை கிருஷ்ணர் நிர்ப்பந்தித்தார். பகவான் கிருஷ்ணர் அர்ஜூனனிடம், போரின் இந்த சிக்கலான தறுவாயில் கர்ணனைக் கொல்லாவிட்டால், அவர் வேறு எப்போதும் அவரைக் கொல்லவும் முடியாது மற்றும் பாண்டவர்கள் போரில் வெல்லவும் முடியாது என்று கூறினார். எனவே, அர்ஜூனன் ஊழ்வினையின் படி தெய்வீக அம்பைப் பயன்படுத்தி கர்ணனைக் காயப்படுத்தினார்.ஏனெனில் அவர் அந்த முறையில் சாகவேண்டும் என்று பரசுராமரால் சபிக்கப்பட்டிருந்தார். அர்ஜுனன் அம்பு மாரி பொழிந்து கர்ணனை வீழ்த்தினான் .

உடனே அர்ஜுனன் அஞ்சலிகம் என்னும்  ஆயுதத்தைக் கொண்டு, கர்ணனின் தலையை நோக்கி ஏவினான். அஞ்சலிகத்தால்  வெட்டப்பட்ட கர்ணனின் உடல் பூமியில் விழுந்தது. அப்போது வீழ்ந்துவிட்ட கர்ணனின் உடலில் இருந்து ஓர் ஒளியானது ஆகாயத்தினூடாகக் கடந்து சென்று சூரியனுக்குள் நுழைந்தது. இதை அங்கிருக்கும் போர் வீரர்கள் அனைவரும் கண்டனர். போரினைத் தொடர்ந்து, வீழ்ந்தவர்கள் அனைவருக்கும் ஈமச்சடங்குகள் நிகழ்த்தப்பட்டது. குந்திதேவி கர்ணனுடைய  பிறப்பைப் பற்றி பாண்டவர்கள் ஐவரிடமும் கூறினாள். தாங்கள் கொன்றது  தங்கள் உடன்பிறப்பு என்று அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தருமர் தனது தாயின்மீது கடுங்கோபம் கொண்டு, இனிமேல் எந்தப் பெண்ணாலும் எந்த ரகசியத்தையும் காப்பற்ற முடியாது என்று பெண்களுக்கே சாபம் கொடுக்கிறார். கர்ணனின் சாவிற்கு முதல் காரணம் முனிவர் துர்வாசர் இரண்டாவது சூழ்ச்சிக்காரன் இந்திரன், கவச குண்டங்களையும் வாங்கிவிட்டு வண்டாக வந்து உடலையும் துளைத்து பரசுராமரிடம் கட்டிக்கொடுத்தவன். மூன்றாவது கர்ணனது குரு பரசுராமர். பொய்யுரைத்தமைய்க்காக சாபமிட்டார். நான்காவது பசுவை கொன்றதற்காக பிராமணனின் சாபம். ஐந்தாவது பூமாதேவியின் சாபம். ஆறாவது அவனது தாய் குந்தி.  அவள்தான் அர்ஜுனன் மேல் ஒருமுறைக்கு மேல் நாகாஸ்திரம் மாதிரியான சக்தியான ஆயுதங்களை பயன்படுத்தமாட்டேன். அர்ஜுனன் தவிர்த்த ஏனைய சகோதர்களை கொல்லமாட்டேன் என்று உறுதிமொழியை வாங்கினாள். ஏழாவது சல்லியன், போர் மிகமுக்கியமான கட்டத்தில் இருந்தபோது நடுவழியில் கர்ணனின் தேரை விட்டுச்சென்றது. எட்டாவது அர்ஜூனனை கர்ணனின் நாகாஸ்திரத்திலிருந்து காக்க கிருஷ்ணன் தேரை அழுத்தியது. உடனே, பகவான் கிருஷ்ணர், கர்ணன் தனது தேரை சேற்றிலிருந்து வெளியே கொண்டுவரும்போது அவரைக் கொல்லும்படி அர்ஜூனனை வற்புறுத்தியது.  இவையெல்லாம் சேர்ந்து கர்ணனின் உயிரை வாங்கியது .
அதேப்போல் போரின்போது, கர்ணனின் அம்பின் பலத்த அடியால் மயங்கி விழுந்த அர்ஜுனனை  கர்ணனால் பாதுகாக்கப்பட்ட நாக அரசன் ஆஷ்வசேன், தன்னுடைய இனத்தை அழித்த அர்ஜுனனுக்கு எதிராக கர்ணனிடம் தனது விஷத்தை அர்ஜூனனுக்கு எதிராகப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டது. கர்ணன் அதை மறுத்து எந்த மனிதன்மீதும் பாம்பைப் பயன்படுத்துவது மனித இனத்திற்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம் என்று கூறி மறுத்தான் .இப்படியாக கர்ணனின் இறப்பு நிகழ்ந்தது கர்ணனது தியாகத்தால் என்பதை நன்கு உணர்ந்திருந்த அகமகிழ்ந்து, கிருஷ்ணர் கர்ணனுக்கு தனது கருட வாகனத்தில் தனது மனைவியர் ராதா மற்றும் ருக்மணி ஆகியோருடன் இணைந்து காட்சியளித்தார். பகவான் கிருஷ்ணர் அவர் விரும்பிய வரத்தை கேள். தருகிறேன் என்று கர்ணனுக்கு உறுதியளித்தார். ஆனால் கர்ணன், துரியோதனனுக்கு வெற்றியை அளிக்கும்படியும் அவரது படைகளுக்கு மீண்டும் வாழ்வு அளிக்கவும் கேட்கமுடியும்.  ஆனால், கர்ணன் அப்படி செய்யவில்லை. தன் இறப்புக்கு முன்னே தன் தாயை பார்க்கவேண்டுமெனவும்,  நான் அவள் மகன் என்று ஊரறிய அவள் உரைக்க வேண்டுமெனவும் நான் பல்வேறு பிறவிச்சுழலில் மீண்டும் மீண்டும் பிறக்காமல் பகவானின் பாதத்தை அடையவேண்டுமென  கோருகிறான்.
போரில் கொல்லப்பட்டது தங்களுடைய மூத்த சகோதரன் என அறிந்ததும் பாண்டவர்கள் அனைவரும் சொல்லவொண்ணா துயரத்தை அடைந்தனர். கர்ணனின் பிறப்பு இரகசியத்தை முன்னரே கூறாத தங்கள் தாய் குந்தியின்மீது கோபம் கொண்டனர், கர்ணனின் எல்லா புதல்வர்களும் போரில் கொல்லப்பட மீதம் இருந்தது விரிஷகேது மட்டுமே. போருக்குப்பின் தன் சிறிய தந்தைகளான பாண்டவர்களின் அரவணைப்பில் வளர தொடங்கினான். கர்ணனை தன் கையால் கொன்றதால் என்னவோ அர்ஜுனன் விரிஷகேது மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தான். சொல்லப்போனால் அபிமன்யுவின் இடத்தை விரிஷகேது நிரப்பினான். அர்ஜுனனே தன் தமையனின் மகனுக்கு ஆசானாய் இருந்து வில்வித்தையை கற்றுக்கொடுத்தான். விரிஷகேதுவும் தன் தந்தை கர்ணனை போலவே வில்வித்தையில் சிறந்து விளங்கினான். மேலும் கிருஷ்ணர் விரிஷகேது மீது அதிக அன்பு பாராட்டினார். விரிஷகேது அர்ஜுனனுடன் சேர்ந்து விரிஷகேது பல போர்களில் பங்குக்கொண்டு தன் வீரத்தை சிறப்பாய் வெளிப்படுத்தினான். மேலும் போரில் வெற்றிக்கொண்டு யவன தேசத்தின் இளவரசியை விரிஷகேதுவிற்கு மணம் முடித்தான். பல நாடுகளை வெற்றிகொண்ட அர்ஜுனனும் விரிஷகேதுவும் இறுதியில் நாக உலகத்திற்கு சென்றனர்.
அர்ஜுனனும், விரிஷகேதுவும் நாக உலகத்துக்கு சென்று போர் புரிந்தனர். அங்கு பப்புருவாகனன் என்ற வீரனிடம் போர்புரிந்தனர்.  தன் எதிரே இருப்பது தன் மகன் என்பதை அறியாத அர்ஜுனன் விரிஷகேதுவுடன் இணைந்து போர்புரிந்தான். போரில் பப்புருவாகனன் வில்லாற்றல் அர்ஜுனனையும்  விட மிஞ்சியவனாக இருந்தான். போரின் இறுதியில் அர்ஜுனனும், விரிஷகேதுவும் பாப்புருவாகனனால் கொல்லப்பட்டனர். இந்த கதையை நமது அர்ஜுனன் தன் மகனால் கொல்லப்பட காரணம் - தெரிந்த கதை தெரியாத உண்மை பாகம் 2 பதிவின் மூலம் பார்த்துவிட்டோம் ,அதுபற்றி விரிவாக எழுதவேண்டாம் தன் மகன் புரிந்த செயல் கண்டு அதிர்ச்சியடைந்த உலூபி தன் சக்தி மூலம் அதிசய நாகமணியை கொண்டுவந்தார். ஆனால் அதனை வைத்து ஒருவரைத்தான் உயிருடன் கொண்டு வரமுடியும் என்பதால் கிருஷ்ணருடைய ஆலோசனை பேரில் அர்ஜுனனை மீண்டும் உயிருடன் கொண்டுவந்தார். விரிஷகேது வீரமரணம் அடைந்து வீரசொர்க்கம் சென்றடைந்தான். தன் மரணத்திற்கு பிறகு விரிஷகேதுவிற்கு முடிசூட்ட நினைத்திருந்தார் யுதிஷ்டிரன் ஆனால் காலம் அர்ஜுனனுடைய மகன் கையாலேயே கர்ணனின் மிச்சமிருந்த ஒரே மகனின் உயிரையும் பறித்துவிட்டது. விதி வலியதுன்னு சும்மாவா சொல்றாங்க?!
நன்றியுடன்,
ராஜி

18 comments:

  1. Replies
    1. கர்ணன் மட்டுமல்ல அண்ணா ஒவ்வரு பாத்திரங்களும் மிக சிறப்பு வாய்ந்தவை மஹாபாரதத்தில் ...

      Delete
  2. கர்ணனின் மகனை அர்ஜுனன் வளர்த்த கதை புதிது. மறுபடியும் சுவாரஸ்யமாகப் படித்தேன். மகாபாரதம் அலுக்கவே அலுக்காது.

    ReplyDelete
    Replies
    1. புதியது இல்லை சகோ ...கர்ணனுக்கும் ,அர்ஜுனனனுக்கும் நடந்த யுத்தத்தின் நேரடி காட்சி ,அஸ்திரம் பை அஸ்திரமாக கர்ணபர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது .நேரமிருந்தால் அதையும் இங்கு பதிகிறேன் .அதை எத்தனை முறை படித்தாலும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் .

      Delete
  3. தகவல்கள் சிறப்பு. மஹாபாரதத்தில் எத்தனை எத்தனை கிளைக்கதைகள்..... அலுக்காத விஷயம் இந்தக் கதைகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா ..நாம் மேலோட்டமாக மட்டுமே படித்துவிடுகிறோம் .அதன் கிளைக்கதைகள் இன்னும் ஆயிரமாயிரம் உள்ளன.இறைவனின் சித்தமும் நேரமும் கிடைத்தால் இனியும் நிறைய எழுதலாம்.

      Delete
  4. Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிண்ணே ..

      Delete
  5. அம்மா தாயீ
    மண்டையில் ஏற்கெனவே இருக்கின்ற குழப்பங்கள் போதாதா ?
    இன்னும் மகாபாரத சண்டைகளை வேறு அலச வேண்டுமா !போதுமடா சாமி. மண்டை குழம்புகிறது.

    ReplyDelete
    Replies
    1. இடியாப்ப சிக்கலை விடுவிக்கமுடியுமா ...நாம் புழியும் போது நேராகத்தானே போய் தட்டில் விழுகிறது .பிறகு எப்படி சிக்கலாகியது .சிக்கலை விடுவிக்கும் போது,பக்கத்தில் ஒட்டியிருக்கும் கிளையும் சேர்ந்தே வரும் ,அது இந்த அச்சில் இருந்து வந்ததுதானா என்று அலசிப்பார்ப்பதில் ஒரு அலாதி பிரியம் ...இனியும் நிறைய கிளைக்கதைகள் இருக்கிறது .இதற்கே தலை சுற்றினால் எப்படி ...

      Delete
    2. கடந்த காலம் கடந்த காலமே .அவற்றை மீண்டும் நினைவு படுத்திக்கொள்வதால் எந்த பயனும் இல்லை. நிகழ்காலத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வதுதான் நல்லது என்பது என் கருத்து .

      Delete
    3. நிகழ்காலத்தை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள கடந்தகால தவறுகள் பாடமாக அமையும் .கடந்த காலம் கடந்தகாலமே என நம் முன்னோர்கள் நினைத்து இருந்தால் இன்று ஒரு சமூகம் இருக்காது .கடந்த காலம் கடந்த காலமே என நம் அப்பன் ,பாட்டன் ,பூட்டன் நினைத்து இருந்தால் இன்று குடும்ப வரலாறுகள் இருக்காது .வாழ்க்கையின் ஒவ்வரு காலகட்டங்களில் இந்த பாடங்களை படித்து பார்க்கும் பொழுது ,ஒரு பிரச்சனையிலிருந்து எப்படி விடுபட்டு வரமுடியும் என்ற விடைகிடைக்கும் .இன்று கணினி கண்டுபிடித்தலுக்கும் ,தமிழில் இங்கே தட்டச்சு செய்வதற்கும் ,என்றோ கடந்தகாலத்தில் ஒருவன் செய்த வழிமுறைகளாகும் .கடந்த காலம் என்பது,நாம் கவனமாக கடந்து செல்லப்பட்ட பாதையின் வழிமுறைகளே அன்றி வேறொன்ற்றுமில்லை

      Delete
    4. வளரும் தலைமுறையினருக்கு ,ராமாயணம் ,மஹாபாரதம் போன்ற இதிகாசங்களை கொண்டு செல்வதால் ,அவர்கள் வாழ்வில் சிக்கலான சமயங்களில் சமயோஜிதமாக செயல்பட ,இந்த கடந்த கால அனுபவங்கள்உதவும் இது எனது கருத்து...இதில் தவறுகள் ஏதுமிருந்தால் மன்னித்து கொள்ளவும் ...

      Delete
    5. யாரை யார் மன்னிப்பது.?
      உங்கள் கருத்தை நீங்கள்சொல்லுகிறீர்கள்.
      என் கருத்தை நான் சொல்லுகிறேன் அவ்வளவுதான்.

      Delete
  6. மஹாபாரதக்கதை எனக்கு மிகவும் பிடிக்கும் சூழ்ச்சியும் வஞ்சகமும் கதையாக்கப்பட்டுள்ளன உண்மையிலேயே இடியாப்பச் சிக்கல்தான் கதைகளைப்ப்சற்றி கருத்து சொல்லமுய்லும் போதுஒரு ஆங்கில சொலவடை நினைவுக்கு வருகிறது all is fair in love and war

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பா ..இதில் நிறைய காதல் அத்தியாயங்களும் உண்டு ...நேரமிருந்தால் அவைகளையும் பார்க்கலாம் ..

      Delete
  7. கர்ணனுக்கு எவ்வாறு நாகஸ்திரம் கிடைத்தது

    ReplyDelete
  8. கண்ணன் கர்ணக்கு மட்டும் அல்லாமல் அவர் மகனிற்கும் துரோகம் பன்னி அர்ச்சனாவை பிழைக்க வைத்ததில் ஞாயம் இல்லை

    ReplyDelete