Wednesday, July 24, 2019

கண்ணனுக்கு மட்டுமல்ல! கர்ணனுக்கு ராதையை பிடிக்கும் - வெளிச்சத்தின் பின்னே....


குருஷேத்திரப்போரின் 17வது நாள். போர் உக்கிரமாய் நடந்துக்கொண்டிருந்தது. திடீரென யுத்தத்தை நிறுத்தும் விதமாய் இருபுறமும் சங்கு முழங்கியது. அதைக்கேட்டதும் பலரும் பலவித உணர்ச்சிக்கு ஆளாகியதோடு, அன்றைய தினம் போரும்  முடிவுக்கு வந்தது. போரில் பெரிய தலைகள் எதாவது வீழ்ந்தால் அத்தோடு அன்றைய போர் தற்காலிகமாக முடிவுக்கு வருவது போர் மரபுகளில் ஒன்று. யார் வீழ்ந்தது என ஆளாளுக்கு விவாதிக்க, வீழ்ந்தது கர்ணன் என அதிகாரப்பூர்வமாய் தகவல் வெளிவந்ததை கேட்டு அனைவரும் திக்கித்து நின்றனர்.   அர்ஜூனன் உட்பட பாண்டவர்கள் மகிழ்ச்சியோடும்,  துரியோதனன் சொல்லொனா துயரத்தோடும், தலைவிரி கோலத்தில் கர்ணன் மனைவி சுபாங்கியும், சிறந்த வில்லாளியாச்சே எப்படி வீழ்ந்தான் என போர் வீரர்களும்,   இனம்புரியா சங்கடத்தோடு சூத்திரதாரி கண்ணனும், மகனே! என்று ஓலமிட்டபடி குந்தியும்,   கர்ணனை நெருங்கினர்.தாயே! வீழ்ந்தது தங்கள் மகன்  அர்ஜுனன் அல்ல!  தேரோட்டியின் மகனும், அங்கதேசத்து அரசனும், துரியோதனனின் நண்பனுமான கர்ணன் என குந்திதேவியை வீரனொருவன் தடுத்து ஆறுதல் கூற முற்பட்டான்.  அவனை தள்ளிவிட்டு, ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் கர்ணனை அள்ளி மடியில் கிடத்தி மகனே! என ஈரேழு உலகமும் கேட்கும்படி கர்ணனின் பிறப்பின் மர்மத்தை உடைத்தெரிகிறாள் குந்தி...

தாயே! 

சொல் மகனே! 

எனக்கு என் அம்மா வேண்டுமென  யாசிப்பவர் தனது யாசகத்தை கேட்கும்முன்னே, அவரின் முகத்தின் குறிப்பைக்கொண்டே யாசிப்பவருக்கு தேவையானவற்றை கொடுத்த  கொடை வள்ளலாம் கர்ணன் குந்தியிடம்  யாசிக்கிறான்.


அதான் வந்துவிட்டேனே மகனே! உன்னை பேழையில் வைத்து ஆற்றோடு அனுப்பிய மாபாதகி, உன்னை பாராட்டி, சீராட்டி வளர்த்து உன் அருகிலிருக்கும் பாக்கியத்தை இழந்த அபாக்கியவதியான உன் தாய் உன் அருகிலே இப்பொழுது இருக்கிறேன் மகனே ! என்று பதிலுரைத்தாள் குந்தி..

அம்மா! நான் கேட்டது என் தாயை!! பாண்டவரின் தாயினை அல்ல! என்றான் கர்ணன்.

தீயினால் சுடப்பட்டதுப்போல துடித்தாள் குந்திதேவி. கர்ணன் யாரை கேட்கிறான் என கண்ணனுக்கு புரிந்தது. கர்ணன், தனது வளர்ப்பு தாயான ராதையை தேடுகிறான் என... தேரோட்டியின் மனைவியான ராதையை தேடுகிறான் என...  கர்ணா! அம்பு பட்டதில் உனக்கு புத்தி பேதலித்துவிட்டதா?! இதோ உன்னை பெற்றவளான குந்திதேவி உன் அருகில் இருக்க யாரை தேடுகிறாய்?! நீ மன்னன் மகன், தேரோட்டியின் மகன் அல்ல! உன் பிறப்பின் மர்மம் இன்றோடு அவிழ்க்கப்பட்டது  என கண்ணன்  சொல்கிறான்.

கர்ணனுக்கு சூழ்நிலை புரிந்தது. ராதை வந்தாலும், ராதை தன்னை இவர்கள் பார்க்க விடமாட்டார்கள் என உணர்ந்தான்.  தேரோட்டியின் மகன் என இதுநாள் வரை கிண்டல் செய்தவர்கள் , இன்று மன்னன் மகன் என வணங்குகின்றனர். தன் பிறப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததை எண்ணி திருப்தியுற்றான் கர்ணன்.

ஏய்! தள்ளிப்போ! இங்கெல்லாம் போர்வீரர்கள் தவிர வேறு யாரும் வரக்கூடாது. அதிலும், நீ பெண்... இங்கிருந்து அப்பால் போ என தள்ளுமுள்ளு குரல் கேட்டது. மகனே! ராதையா! கர்ணா! என அபலை ஒருத்தியின் குரல் கர்ணனின் செவிகளில் வீழ்ந்தது.


ஆற்றில் மிதந்து வந்த பேழையை கண்டெடுத்தவள், குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்த குழந்தையை சுவீகரித்து கண்ணின் மணியாய் பேணி காத்து வந்தவளான தேரோட்டியின் மனைவியும், கர்ணனின் வளர்ப்பு தாயுமான ராதை, கர்ணனை பார்த்தே தீருவது என்ற வைராக்கியத்தோடு காவலர்களுடன் போராடிக்கொண்டிருந்தாள். போர்களத்திலிருந்து கர்ணன் நலமோடு வீடு திரும்ப வேண்டுமென  விரதமிருந்தவள், இப்போது போரில் அவன் வீழ்ந்தான் என தகவல் கேட்டு உயிருள்ள பிணமாய் போர்க்கலத்திற்கு ஓடோடி வந்தாள். காவலர்களுடன் போராட அவள் உடம்பிலும் மனதிலும் தெம்பில்லை..

வேரற்ற மரம்போல் தரையில் வீழ்ந்தாள். அவள் எண்ணங்கள் கர்ணன் போர்க்களத்திற்கு கிளம்பும்போது அளித்த வாக்கினை நினைவுப்படுத்தியது..

நம்பினோரை கைவிடாத கண்ணனை, அர்ஜுனன் பக்கம் அவன் நிற்கிறான் என தெரிந்தும், தனது மகன் கர்ணன், போர்க்களத்திலிருந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டி விரதமிருந்து கண்ணனை பூஜித்துக்கொண்டிருந்தாள். சரியாய் அந்நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்தான் கர்ணன்.

தாயே! போர்க்களம் போகிறேன் என்று ராதையை வணங்கி நின்றான் கர்ணன்...

பதறித்துடித்த ராதை! ராதையா! நீ என்ன இன்னும் சிறுப்பிள்ளையா?! போய் வருகிறேன் என சொல் என மகனை கடிந்துக்கொண்டாள்.

எதையோ உணர்ந்திருந்த கர்ணன் சிரித்தபடியே, அன்னையே! இன்னொருமுறை என்னை ராதையா என்று அழையுங்களேன் என செல்லம் கொஞ்சினான்.

 ராதையா என்று அன்பொழுக அழைத்தாள் ராதை..


தாயே! எனக்கு என்றும் நீயே அன்னை.  என் தாய் நீயே.. இதில் எந்த மாற்றமும் இல்லை.  நான் போகிறேன் என்று கிளம்பினான் கர்ணன்.

 நீ சொன்னாலும், சொல்லாவிடினும் எனது மகன் நீதான். உன் அன்னை நாந்தான் என்றாள். ஏன் இப்படி பேசுகிறாய் ராதையா!

இதற்கு விடை மாலையில் தெரியும் அம்மா! நான் போகிறேன் என்று பதிலுரைத்து அவ்விடம் அகன்றான் கர்ணன்.

போர்க்களம் புகுந்த கர்ணனின் வில் பல அதிசயங்களை நிகழ்த்தியது.. சூரியன் உச்சிப்பொழுது வரும்முன்னே கௌரவர்கள் கை ஓங்கியது.  வெற்றி பெற்றதாகவே துரியோதனன் மனம் மகிழ்ந்தான்.

மாலை நெருங்கியது.. போரின் போக்கே மாறியது.. கர்ணன் தான் ஒரு பிராமணன் என பொய் உரைத்து, பரசுராமரிடம் வில் வித்தை பயின்று, சிறந்த சீடன் என்று பெயர் வாங்கி, பரசுராமரிடமிருந்து வாங்கிய பிரம்மாஸ்திரமும், பார்க்கவஸ்திரமும்  பரிசாய் கர்ணன் பெற்றான். அவன் பிராமணன் அல்ல! சத்திரியன் என்ற உண்மையினை தெரிந்துக்கொண்ட பரசுராமர்,  தக்க சமயத்தில் கற்ற வித்தையெல்லாம் மறக்கும் என விட்ட  சாபம் பலிக்கும் நேரம் வந்தது.  கர்ணனுக்கு தான் கற்ற போர்க்கலையெல்லாம் மறந்து போனது.


முன்னொரு சமயம், கர்ணனின் தேர்க்காலில் தனது  மகனை பலிக்கொடுத்த பிராமணர், தக்க நேரத்தில் உனது தேர் ஓடாது என விட்ட சாபம் பலித்தது. அந்த சாபமும் அந்த நேரத்தில் பலித்தது, தேர் சேற்றில் புதைந்தது. தேரோட்டி மகன் என மருமகனாய் ஏற்க மறுத்த சல்லியனை தனது தேர் சாரதியாய் நியமித்தான் கர்ணன். அந்த கடுப்பில் இருந்த சல்லியன். தேர் ஓட்டுவது மட்டுமே என் வேலை. சேற்றிலிருந்து மீட்பது இல்லை என தேரிலிருந்து இறங்கி சென்றுவிட்டான்.


பெரும்போராட்டத்திற்கு சேற்றிலிருந்து தேரை மீட்டெடுத்த கர்ணனுக்கு சாரதி இல்லாமல் குதிரை ஓட என்ன சமிக்ஞை தரவேண்டும்?! தேர்ச்சக்கரத்தினை சரிசெய்வது எப்படி என எல்லாம் மறந்துபோய் திக்கித்து நின்றான். அர்ஜுனன் எய்த அம்பு கர்ணனனை வீழ்த்தியது.

குந்தி தனது மடியில் கர்ணனை கிடத்தி, மகனே! என்று அழுது கர்ணன் தனது மகன் என ஊரறிய செய்துவிட்டாள். கர்ணனின் ஒவ்வொரு செயலுக்கும், ராதையே! உனது மகன்.. என பாராட்டியவர்கள், இன்று குந்தியின் மைந்தன் கர்ணன் என சொல்வதை கேட்க நேர்ந்ததே ராதையின் துர்பாக்கியம்.  மகனின் மரணமே கொடூரணமானது. இதில் மரணிக்க இருக்கும் மகனை அள்ளி அணைத்து அழுது புலம்பும் உரிமையை இழந்த தாயின் நிலை இன்னும் கொடூரமானது.

காயப்பட்ட மகனின் உடலை தடவி அவனது வலியை போக்க அவன் அருகில் இல்லையே என அழுகின்றாள் ராதை. ஆற்றில் விட்ட குந்தி, தேரோட்டியின் மகன் என உதாசீனப்படுத்திய சல்லியன், எதிரியாய் பார்த்த பாண்டவர்கள், சதிகாரனான கிருஷ்ணன், வில்லெடுத்தாலே இளக்காரமாய் பார்த்த உற்றார், ஊரார்.. இப்படி தன் மகனை சுற்றி பாவிகள் சூழ்ந்திருப்பதை கண்டாள். வீரம் வாய்த்தது, பதவி வந்தது, புகழ் வந்தது, செல்வம் சேர்ந்தது, ஆனால், அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று கர்ணன் புலம்பும்போதெல்லாம்,  எல்லாம் கண்ணன் பார்த்துக்கொள்வான் என்று ஆறுதல் சொல்வாள் ராதை. இதோ இன்று, அந்த கண்ணனே கர்ணனின் ஆயுளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டானே என கண்ணனை அனல் கக்கும் விழிகளால் சுட்டெரிக்க முற்பட்டாள் ராதை..

 ராதை என  கணவர் அதீரதனைப்போலவே கர்ணன் அதட்டி, கால்மேல் கால் போட்டுக்கொண்டு வேலை வாங்கும் கோலத்தை எண்ணி மாய்கிறாள். ராதையையும், அதிரதனையும் கர்ணனின் கண்கள் தேடுகின்றது. இதை உணர்ந்த சதிகார கண்ணன், விட்டால் அதிரதனை ஈமச்சடங்கு செய்ய சொல்வான், குந்திக்கு இணையாக ராதை தாய் என்ற அந்தஸ்தை பெறுவாள் என்று எண்ணி, அந்தணர் வேடமணிந்து கர்ணன்முன் நின்றான்.


கர்ணா!!

அந்தணர் வேடம்பூண்டு வந்தவர் யார் என தெரியும், வந்த நோக்கமும் புரியும். என் தானதர்மத்தின் பலனை தானமாய் அளிக்கிறேன் என தாரை வார்த்து கொடுத்தான். அதுவரை தர்மத்திற்கு கட்டுப்பட்டிருந்த விதி, கர்ணன் உயிரை பறித்துக்கொண்டு சென்றது. கர்ணனின் உடலை சகல மரியாதையோடு அரண்மனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்தது.

விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த அதிரதனை கட்டிக்கொண்டு, ராதையனை வரச்சொல்லுங்கள். அல்லது அவனிடம் என்னை கூட்டி செல்லுங்கள் என வேண்டினாள் ராதை. அது முடியாது ராதை. நாம் தேரோட்டிகள். அவன் மன்னன் மகன். அவன் பாதம் தொழ, தூரத்திலிருந்து பார்க்கத்தான் முடியுமே தவிர, சொந்தம் கொண்டாடமுடியாது என்று மனைவியை தேற்றினான்.


மன்னன் மகன் என்றால் தாய்க்கு மகனில்லை என்றாகிவிடுமா?! இத்தனை நாள் எங்கே சென்றாள் இந்த குந்தி?! ஆற்றில் மகனை போட்டுவிட்டு இப்போது எந்த முகத்தோடு மகனே என்கிறாள். எங்கிருந்து வந்தது சொந்தம்?! எள்ளி நகையாடி உயிரை குடித்து இன்று அண்ணா! தம்பி! என சொல்வது எதற்காக?! என பலவாறாய் ராதை வெடித்தாள். இறுதியாக அரண்மனையில் தர்மத்துக்கு கட்டுப்பட்ட  தர்மனும், சகல நூல்களையும் கற்றுத்தேர்ந்த சகாதேவனும் இருப்பர். இருவரும்  எனக்கு நீதி வழங்குவர் என அதிரதனை அழைத்துக்கொண்டு அரணமனிக்கு சென்றாள்.

அரண்மனை நடைமுறைகள் அறிந்திருந்தபோதும் ராதைக்காகவும், மகனின் முகத்தை கடைசியாய் பார்க்கவும் அதிரதன் அவளோடு சேர்ந்து அரண்மனை நோக்கி நடந்தான்.  அரண்மனைக்குள் இருவரையும் விடவே இல்லை. கர்ணனின் இறுதி ஊரவலம் நடந்ந்தது. உடல் எப்படியும் சுடுகாட்டுக்கு வந்துதானே தீரவேண்டும் என ராதையும், அதிரதனும் கர்ணன் முகம் காண சுடுகாட்டுக்கு விரைந்தனர்.  . வழியெங்கும் கர்ணனின் தாய் குந்தி, தந்தை சூரியபகவான் என்றும் ஊரார் பேசுவது காதில் ஈயத்தை காய்ச்சுவது போல் இருந்தது இருவருக்கும்...

இருவரும் சுடுகாட்டை நெருங்கும்போது, உடல் எரியூட்டப்பட்டு அனைவரும் அங்கிருந்து விலகி சென்றனர். ராதையும், அதிரதனும் ஓடிச்சென்று எரிந்துக்கொண்டிருந்த சிதையை பார்த்தனர்.  அதுவரை வேகாமல் இருந்த கர்ணனின் நெஞ்சுப்பகுதி, ராதையின் கண்ணீர் பட்டு வெந்து சாம்பலாகியது.....

கர்ணன் யாருக்கு சொந்தம்?! பெற்றதாலேயே குந்திக்கு சொந்தமா?! கண்ணின் மணியாய் காத்து வளர்த்து தனது உரிமையை விட்டுக்கொடுத்த ராதைக்கு சொந்தமா?! விடைத்தெரியாமலே அந்த ஏழை தம்பதிகள் அவ்விடம் அகன்றனர். குந்தி தன்னை தேற்றிக்கொள்ள  அரண்மனை சுகபோகம்,  பாண்டவர்கள், சூத்திரதாரி கண்ணன், மருமகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் உண்டு.
ஆனால் ராதைக்கு கர்ணன் வாழ்ந்த வீடும், அவன் நினைவுகளும்தான்....

வெளிச்சத்தின் பின்னே தொடரும்...

நன்றியுடன்,
ராஜி5 comments:

 1. பாவம் ஆக்கப்பட்ட ஜென்மம்...

  ReplyDelete
 2. ராதையா ..கர்ணனின் அன்பு முகம் ..

  ReplyDelete
 3. சூப்பர் தங்கச்சி
  வீழ்த்தப் பட்டவர்கள் வரலாறு கண்களை குளமாக்கி தான் நினைவாய் பதிகிறது

  ReplyDelete
 4. கன்னட எழுத்தாளர் எஸ் எல் பைரப்பா எழுதிய பர்வா (தமிழில் பருவம் என்று வெளிவந்தது) இதே பார்வையை கர்ணன் கொண்டிருந்தது போல அழகாக எழுதியிருந்தார். மிக சிறந்த புத்தகம்.

  ReplyDelete
 5. நல்ல பகிர்வு. வரலாற்றுப் பக்கங்களில் இப்படி வீழ்த்தப்பட்டவர்கள் எத்தனை எத்தனை பேர்.

  ReplyDelete