Friday, May 15, 2020

அருள்மிகு ஸ்ரீமஞ்சனீஸ்வரர் அய்யனாரப்பன் திருக்கோவில் -கீழ்ப்புத்துப்பட்டு.

நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு, மாட்டிக்கிட்டு முழிக்குதே அய்யாக்கண்ணு..ன்னு பழைய பாட்டு ஒன்னு  இருக்கும், அதை அனுபவப்பூர்வமா உணர்ந்தேன்.  என்ன அனுபவம்ன்னு படிக்கும்போதே தெரிஞ்சுப்பீங்க!. போனவாரம் ஸ்ரீமௌலானாசாகிப் சுவாமிகள் ஜீவ சமாதியான தர்காவினை பற்றி  பார்த்தோம். அங்கிருந்து  கீழ்புத்துபட்டு  ஸ்ரீலஷ்மண சுவாமிகள் ஜீவ சமாதிகளை பார்க்கலாம்ன்னு கிளம்பினோம். வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகுதுன்னு யாருமே அறியாதது. அதுமாதிரிதான் நாங்க நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு...


இப்பலாம் வெளி ஊர்களுக்கு பயணப்படுபவர்கள்,அந்த ஊரின் விவரங்கள், அமைவிடம் என பல குறிப்புகள் கையில் இருந்தும் முடிந்தவரை அங்கிருப்பவர்களிடம் விசாரித்து சென்றாலும் பலநேரங்களில் கைகொடுப்பது கூகிள் மேப்தான்.அப்படிதான் ஸ்ரீமௌலானாசாகிப் சுவாமிகளை தரிசனம் செய்து முடித்ததும், அடுத்து இருந்தது ஸ்ரீலஷ்மண சுவாமிகள், புத்துப்பட்டு,ஐயனார் கோவில் பின்புறம் 300மீ தொலைவில் ஓடைக்கருகில் என  அமைவிடம் பற்றி இருந்தது.உடனே கூகிள் மேப்பில் லொக்கேஷன் போட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். சேருமிடம் வந்தாச்சு என்று கூகிள் மேப் சொல்ல நம்பி வண்டியை விட்டு இறங்கினோம். நாங்கள் இறங்கிய இடம் ஒரு திருக்கோவில்.சரி இந்த கோவிலில்தான் லஷ்மண சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் இடம்போல என எண்ணிக்கொண்டு, எல்லோரும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய ஆயத்தமானோம்.

உள்ள போய் பார்த்தால் கூகுள் மேப் பயப்புள்ள பொய் சொல்லிடுச்சுன்னு தெரிஞ்சது.  ஏன்னா நாங்க நினைச்சு போன இடமல்ல அது. சரி நாம எத்தனை பேருக்கு அல்வா கொடுத்திருக்கோம். நமக்கு கூகுள் மேப் அல்வா கொடுத்திருச்சுன்னு மனைசை தேத்திக்கிட்டு,அருள்மிகு ஸ்ரீமஞ்சனீஸ்வரர் அய்யனாரப்பன் திருக்கோவிலில் தரிசனம் செய்தோம்.இந்த திருக்கோவில் சென்னைக்கு செல்லும் ECR  எனப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிச்சேரியிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட்டத்தில் அமைத்திருக்கும் கீழ்ப்புத்துப்பட்டு என்னும் ஊரில் இருக்கிறது

இந்த கோவிலில் எங்கு பார்த்தாலும் மூலிகைச்செடிகளும், குதிரை வாகனங்களும், அய்யனாருக்குரிய சிலைகளுமாக பார்க்கவே பரவசமாக இருக்கிறது.இப்ப இருக்கிற திண்டிவனம், முதலாம் குலோத்துங்கன் காலத்தில் திந்திணீஸ்வரம் என்று அழைக்கப்பட்டதாம். அவருடைய காலத்தில்தான் இங்கே அய்யனாரப்பனுக்கு முதன்முதலில் கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.மூலஸ்தானம்,அர்த்தமண்டபம்,அலங்கார மண்டபம்,மகா மண்டபம்,பிராகாரம் என்று அனைத்து அம்சங்களையும் கொண்ட கோயிலாக இந்த ஸ்ரீமஞ்சனீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலை முதலாம் குலோத்துங்கன் கட்டினாராம்.நடுநாட்டில் தோன்றிய முதல் கோயில் இது என்றும் சொல்லப்படுகிறது.1995ம் ஆண்டில் இந்த கோவிலில் மண்டபம் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது.அதன்பிறகு 2001ம் ஆண்டு 5 நிலை ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்த கதையாக...ன்னு நம்ம ஊரில் பழமொழி சொல்லுவாங்க .சிவபெருமானிடம் வரம்வங்கிய பத்மாசுரன் அதை சோதிப்பதற்காக சிவன் தலையிலேயே கை வைக்கப்போக,ஈசன் சாதுர்யமாக அவன் தன் தலையிலேயே கை வைத்துக்கொள்ள வைத்து அவனை அழித்த கதையிலிருந்து வந்ததுதான் அந்தப் பழமொழி.ஆனா, இதற்கு வேறு அர்த்தம் இருக்கும்.எந்தவரத்துக்கும் நிகழ்வுகளுக்கும் அப்பாற்பட்டவர் அந்த ஏகபரம்பொருள்.சரி பத்மாசுரன் வரம் வாங்கி,அந்த வரத்தாலாயே அழிந்த கதையை வேற பதிவில் பார்த்துக்கலாம்.அந்த சம்பவம் நிகழ்ந்த இடம்தான் கீழ்ப்புத்துப்பட்டு என்று சொல்லப்படுகிறது. சிவன் மற்றும் விஷ்ணுவின் சக்தி ஒன்று சேர்ந்து  உருவெடுத்தது.அந்த வடிவம் ஒரு மேகத்தைப் போலவே இருந்தது.அதைப் பார்த்த கிராமவாசிகள் அதை மஞ்சனி என்று அழைத்தனர்.இந்த சக்தி ஒரு அய்யனாராக மாறி, கீழ்ப்புத்துப்பட்டுன்ற இந்த கிராமத்தில் ஒரு காட்டில் குடியேறியது. அவர் கணேசன், சனி மற்றும் ராவணன் ஆகியோருடன் சேர்ந்து கீழ்ப்புத்துப்பட்டுவைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களையும் பாதுகாதுக்கொண்டிருக்கிறார் என்று நம்பப்படுகிறது. மஞ்சனியின் அசல் பெயர் காரணமாக அவர் மஞ்சனீஸ்வரர் என்றும் அய்யனாரப்பன் என்றும் இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறார்.

இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னன்னா சனிக்கும்,புதனுக்கும் அய்யனாரப்பன் கிரக பதவி தந்ததால் அவ்விரு கிரகங்களுக்கும் அய்யனாரப்பன் அதிபதியாகிறார்.மகாசாஸ்தா,எல்லை தேவதை என்ற பெயர்களும் அவருக்கு உண்டு.அங்கிருக்கும் பூசாரியோ இதுதான் சாஸ்தா பிறப்பதற்கு காரணமான இடம் என்று சொன்னார்.அதை நிரூபிக்கும் விதமா கூடுதல் தகவல்  அவருக்கு தெரியவில்லை.ஆனால் ஏழரைநாட்டுச்சனி, அஷ்டமச் சனி போன்ற கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் அய்யனாரப்பனுக்கு தீபமேற்றி வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம். புதன் கல்வி பயில துணை செய்யும் கிரகம்.ஆகவே புதன்கிழமைதோறும் இங்கு வந்து வழிபட்டால் கல்வியில் ஆர்வமும், மேன்மையும் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.அதைவிட மிகவும் ஆச்சர்யமான தகவல் சூரிய அஸ்தமனம்வரைதான் அய்யனாரப்பன் இங்கிருப்பதாகவும்,அதன்பிறகு மேலோகம் போய்விடுவதாகவும் ஐதீகம். அவ்வாறு மேலோகத்தில் இருக்கும்போது தேவர்கள்,ரிஷிகள் உள்ளிட்ட கந்தர்வர்கள் அவருக்கு பூஜை செய்வார்கள்.அதை ஏற்றுக்கொண்டு அர்த்தஜாமத்தில் (நடு இரவு) ஊரைக்காக்க வெள்ளைக் குதிரையில்  ஏறி பூலோகம் முழுக்க அவர் பவனி வருவதாகவும் சொல்கிறார்கள்.

இங்கே பெரிய பெரிய வெள்ளை குதிரை உருவங்கள் நிறைய உள்ளன.சிலர் தங்களின் குறைகளை அய்யனாரப்பன் தீர்த்து வைக்கவேண்டும் என்று இக்கோயிலில் இருக்கிற  குதிரை சிலையின் காலில் சீட்டு எழுதி கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.பில்லி சூனியம்,ஏவல்,திருஷ்டி,அடுத்தவரால் வஞ்சிக்கப்படுதல்,ஏமாற்றப்படுதல்,துன்பப்படுதல் போன்ற தங்களுடைய வேதனைகளை ஒரு சீட்டில் எழுதி சுருட்டி குதிரையின் காலில் கட்டி விட்டால் அய்யனாரப்பன் இந்த குதிரையில் இரவு வலம் போகும்போது நமது கோரிக்கைகளைப் படித்து அனைத்துக் குறைகளையும் தீர்ப்பார் என்ற நம்பிக்கை இன்றளவும் உள்ளது.இங்கு அய்யனாரப்பன் சிவபெருமானின் பெயரையும் தாங்கி மஞ்சனீஸ்வரர் அய்யனாரப்பன் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார்.அவருக்கு பூரணை,புஷ்கலை என்று இரு மனைவிகள். கோயிலுக்கு வருபவர்கள் முதலில் விநாயகரை வணங்கி, பின்னர் புற்று, குதிரைகளை வணங்கி அதன் பின்னர்தான் மூலஸ்தானத்தில் உள்ள அய்யனாரப்பனை வணங்க வேண்டும்.தரிசனம் முடித்து கோயிலுக்கு வெளியே அமர்ந்துள்ள மலையாளத்தாரை வணங்கிச்செல்ல வேண்டும்.

இங்கு சப்த கன்னிமார்கள்,வீரபத்திரர் உள்ளிட்ட 21 பரிவார மூர்த்திகள் உள்ளனர்.அய்யனாரப்பனுக்கு எதிரே அவரது வாகனமான யானை உள்ளது. இவர் கபாலபைரவர் என்றும்  அழைக்கப்படுகிறார்.ஊரில் குதிரையிலும், காட்டில் யானையிலும் அய்யனாரப்பன் பவனி வந்து பக்தர்கள் குறை தீர்ப்பதாக நம்பிக்கை உள்ளது.திருமணத் தடை நீக்கும் தலமாக இது விளங்குகிறது.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு குழந்தைப்பேறு பெறுகிறார்கள்.பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தோஷம் போக்கும் தலமாக இது விளங்குகிறது. ஆடி மாதம் இங்கே திருவிழா மாதமாகும்.கார்த்திகை,மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து அய்யனாரப்பனை வணங்கிய பின்னரே சபரிமலைக்கு செல்வார்கள்.பொதுவாக திங்கட்கிழமைகளில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். நடுநாட்டில் வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு அய்யனாரப்பன்தான் குலதெய்வம்.எனவே அவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தங்கள் துன்பம் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படுவதாக நம்புகிறார்கள்.இங்கிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள் தங்களை காப்பாற்றி அருள்பலிக்குமாறு வெளிநாட்டுக்கு செல்வதற்குமுன் இங்குவந்து வந்து அய்யனாரப்பனை வழிபட்டு செல்வார்களாம்.

இங்கு அய்யனாரப்பனுக்கு சைவ பூஜை மட்டுமே நடத்தப்படுகிறது.பலி பூஜை கிடையாது.ஆடு,கோழி பலியிடுபவர்கள் கோயிலுக்கு வெளியே உள்ள மலையாளத்தாருக்கு பலியிடலாம்.இங்கே நிறைய   உயரமான குதிரை சிலைகளும் மூலிகை வனங்களுமாக கண்ணுக்கெட்டிய தூரம் பசுமையாக காட்சியளிக்கிறது.இன்று அய்யனாரப்பனை தரிசனம் செய்துவிட்டோம். இனி, அடுத்தாவரம் இந்த கோவிலிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இருக்கிற ஸ்ரீ லஷ்மண சுவாமிகள் ஜீவ சமாதியிலிருந்து உங்களை சந்திக்கிறேன்.

நன்றியுடன்

 ராஜி


10 comments:

  1. எங்கள் குலதெய்வம். வணங்குகிறேன்.

    அம்மாடி... எவ்வளவு பழமையான கோவில்..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அண்ணா,குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.எல்லோருக்கும் குலதெய்வம் பெரும்பாலும் சிறுதெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.அதன் சக்தியை அளவிடமுடியாது எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.என்று சொல்வார்கள்.

      Delete
  2. கூகுள் மேப் பயப்புள்ள இப்படி பலதை செய்யும்... வியாபார சுற்றலில் இந்தப் பயப்புள்ள செய்யும் இம்சைகளில், ஏகப்பட்ட சுவாரஸ்யங்களும் உண்டு...

    "ஸ்ரீமஞ்சனீஸ்வரர் அய்யனாரப்பன் தான் கூகுள் மேப் மூலம் எங்களை தரிசனம் செய்ய வைத்தார்..." என்று பதிவை முடிக்க வேண்டாமோ...? என்னமோ போங்க சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. கூகுள் மேப்,அவன் சாதா பயபுள்ள இல்லண்ணே,போக்குவரத்துக்கு நம்ம அங்காளி, பங்காளியை விட நமக்கு அதிகம் ஹெல்ப் பண்ணுவது இந்த கூகுள் பயபுள்ளைதான்,ஆனா அந்த ஆப் மூலம் நம்ம செல்லுற இடம் ,நம்ம போன்ல உள்ள போட்டோக்கள்,ஏன் சில சமயம் நம்ம கேமராவை கூட நமக்கு தெரியமலையே பயன்படுத்திக்கொள்ளும் இந்த கூகுள் மேப் பயபுள்ள,கவனமா இருக்கனும்ணே..

      Delete
  3. கூகுள் மேப் செய்த சதியால் நல்லது தானே நடந்திருக்கிறது! பரவாயில்லை. ஒரு முறை நண்பர் பஞ்சாப் மாநிலத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது கூகுள் காட்டிய வழியில் சென்று நின்ற இடம் ஒரு வயல்காடு! நல்ல வேளை பகல் நேரம் என்பதால் வண்டியைத் திருப்பி, கிராமத்து மக்களிடம் கேட்டு நல்லபடியாக ஊர் திரும்பினார்.

    ReplyDelete
    Replies
    1. நாம நினைக்கிறோம் கூகிள் மேப்,உலகெங்கிலும் ஒரு மாதிரியா இருக்கும்ன்னு ,ஆனா ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சர்வர், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மேப் என கூகுள் சில தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறது.இந்தியாவில் இருந்து பார்த்தால் காஷ்மீர் ஒருங்கிணைந்த பகுதியாகவும், பாகிஸ்தான், அமெரிக்க உள்பட மற்ற ஏனைய வெளிநாடுகளில் பார்த்தால் சர்ச்சையான பகுதியாகவும் அமைச்சு இருக்கிறாங்களாம்,இந்த தில்லாலங்கடி வேலையை அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை புட்டு புட்டு வைத்து விட்டது .

      Delete
  4. இது போன்ற கோவில்கள் நிறைய கிராமங்களில் இருக்கிறது சகோ.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அண்ணே,கிராமங்களுக்கு போனா,இதுமாதிரி நிறைய அய்யனார் சிலைகள்,பெரியாண்டவர் சிலை ரூபங்கள் எல்லாம் பார்க்கலாம்,இன்றும் ஒவ்வொரு விஷேச தினங்களுக்கு பூஜை,படையல்கள் எல்லாம் குடும்ப சகிதம் கொண்டாடுகின்றனர்.

      Delete
  5. அன்று உங்களுக்கு அய்யனாரப்பன் தரிசனம் என எழுதிவிட்டார்கள் அதனால் நாங்களும் கண்டு கொண்டோம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மாதேவி,எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலைகள்.ஆனாலும் இதுதான் நடக்கும்,இதுதான் முடிவு என்று யாருக்கும் தெரியாது,யாரும் சொல்லிவிட முடியாது.வாழ்வதற்காக மருந்தை சாப்பிடுபவன் சிலசமயம் இறந்துபோகிறான்.சாவதற்காக விஷத்தை குடித்தவன் சிலசமயம் பிழைத்து கொள்கிறான்.எல்லாமே ஏதோ ஒரு கோட்டபாட்டில் இயங்குகின்றன.ஆனால் இயக்கம் நமக்கு தெரிகிறது.இயக்குபவன் யார் என்பதை தேடி அலைவதால் பல பிறவிகள் வீணாகி விடுகின்றன .சில இடங்களில் கண்ணுக்கு நேர் தெரிந்துதாலும் பின் அவை கண்மூடி மறைந்துவிடுவதுபோல் .எதுவுமே தெரியவிட்டாலும் ஒன்றும் செய்ய வழியில்லை.முன்கூட்டித் தெரிந்தால்,அதற்கு தகுந்தாற்போல் நம்மை மாறிக்கொள்ளலாம்.மாற்று வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.இதையும் தாண்டி இருக்கும் நிகழ்வுகளில் எதையுமே நம்மால் மாற்ற முடியாது.இறைவனின் தீர்மானம் எதுவோ அதுபடி காற்றில் அடித்துச்செல்லும் துரும்பாக பயணிப்பதுதான் வாழ்க்கை,நம்மின்னல் அவன் நம்மை கோபுரத்தின் உச்சியில்வைப்பான் என்பது மட்டுமே அனுபவபூர்வ உண்மை...

      Delete